அந்திமத்தின் ஐந்தொகை-பத்தி-சஞ்சயன்

சஞ்சயன்“நாளை இத்தாலியின் மிலானோ நகரத்திற்குச் செல்லவேண்டும். பயணப்பை எங்கே? எனது வெள்ளை சப்பாத்தை எடுத்துவைக்கச்சொல். இளைய மகன் பேத்தர் பணப்பையை எடுப்பதைக் கண்டேன். அதில் ஒரு சதம் குறையக்கூடாது என்று பேத்தரிடம் சொல். அவனை இவள் கட்டுப்பாட்டுடன் வளர்க்கவில்லை” என்று ஒரு பேரரசனைப்போன்று கட்டளையிட்டுக்கொண்டிருந்தார்.

நான், அவரது மனம் அமைதியடையக்கூடிய பதில்களைச் சொல்லிக்கொண்டிருந்தேன்.

நோர்வேயின் பழைய விமான நிலையத்தின் பெயரைக்குறிப்பிட்டு, அங்கு ”காலை 08.00 மணி விமானத்தைப் பிடிக்கவேண்டும். வாடகை வண்டி ஒன்று ஒழுங்குசெய். நான் வரும்வரையில் நாயைப் பார்த்துக்கொள்” என்று தனது அறைக்கு வெளியே உள்ள பொதுவிடத்தில் நின்று  கட்டளையிட்ட அவரைத் தோளணைத்து ”Boss!” என்றேன்.

“என்ன?” என்று கேட்டார்.

நீங்கள் நிர்வாணமாக நிற்கிறீர்கள். வாருங்கள் உங்கள் அறைக்குள் சென்று உடையணிந்து வருவோம்”. என்று காதுக்குள் குசுகுசுத்தேன்.

குனிந்து பார்த்தார். நிர்வாணம் அவரை எதுவுமே செய்யவில்லை. சில கணங்கள் நின்றிருப்பார், சலம் கழிந்தது. அது கழிந்த உணர்வும் அவரிடமில்லை.

அவரை அழைத்துச்சென்று சுத்தப்படுத்தியபின் உடைமாற்றுவதற்காக உடைகளைத் தேடினேன். ஒரு மேலங்கி இருந்தது. காற்சட்டை இருக்கவில்லை. மலசலத்தை உறிஞ்சி வைத்திருக்கக் கூடிய உள்ளாடையை அணிவித்துவிட்டு மேலதிகாரியிடம் இவரிடம்  ”காற்சட்டை ஒன்றும் இல்லை” என்றேன்.

“அவரின் குறிப்பேட்டில் குடும்பத்தவர்களின் பெயர் இருக்கும் அவர்களுக்கு தொலைபேசியில் அறிவி” என்றார்.

அவரது குறிப்பேட்டில் குழந்தைகள் என்று நான்கு பெயர்கள் இருந்தன. முதலிலிருந்த இரண்டு பெயர்களுக்கும் தொலைபேசினேன். பதில் இல்லை. மூன்றாவது பெயரில் உள்ளவர் எடுத்தார்.

நான் யார், எங்கிருந்து என்ன விடயமாக எடுக்கிறேன் என்று கூறினேன். முதலாவதாக எடுத்தவரின் பெயரைக்கூறி அவருடன் உரையாடுமாறு கூறி தொலைபேசியை அடித்து வைத்தார். என்னுடன் பேச விரும்பவில்லை என்பது புரிந்தது.

இதற்கிடையில் நான் நாளை மிலானோ செல்லவேண்டும் என்றபடி அவர் வெளியே வந்தார். அவரை அழைத்துச்சென்று அறையினுள் உட்கார்த்தினேன். தொலைக்காட்சியை இயக்கியபோது அதில் ஆழ்ந்து போனார்.

மீண்டும் முதலாவது பெயரைத் தொடர்பு கொண்டேன். பதில் இல்லை. இரண்டாமவரும் பதிலளிக்கவில்லை. மூன்றாமவரை அழைக்க மனம் சம்மதிக்கவில்லை. நான்காமவரை அழைத்தேன். எடுத்தார்.

“உங்கள் தந்தையின் பராமரிப்பாளன் நான். அவருக்கு உடைகள் தேவையாக இருக்கிறது”

“அவரையே வாங்கிக்கொள்ளச்சொல்” என்று ஒரு பெண் முகத்திலடித்துப் பதிலளித்தார். நான் அதிர்ச்சியிலிருந்து மீள முன் தொலைபேசியை வைத்துவிட்ருந்தார்

அப்போது முதலாமவர் தொலைபேசி எடுத்து ”என் இலக்கத்திற்கு எடுத்தீர்களா?” என்றபோது…

விபரத்தைக் கூறினேன். ”என்னால் அவரது வீட்டுக்குப் போக முடியாது. அது ஒரு குப்பைக் கிடங்கு. மதுபானப் போத்தல்களும், புகையிலை எச்சிலும், சிகரட் துண்டுகளும் நிரம்பிக் கிடக்கும். அவர் வீட்டைக் கழுவுவதே இல்லை.”

நான் ”அவர் அவசியமான உடைகளின்றி இருக்கிறார். அவருக்கு உடைவேண்டும்” என்றேன்.

“இப்போது கொரோணாக் காலம். பல்பொருள் அங்காடிகள் அனைத்தும் பூட்டியிருக்கின்றன”என்று பொறுப்பிலிருந்து விலகிக்கொள்ள முயற்சித்துக்கொண்டிருந்தார்.

திறந்திருக்கும், உடைகள் விற்கும் கடை ஒன்றைக்குறிப்பிட்டு, அங்கு முயற்சி செய்து பாருங்கள் என்றேன். தொலைபேசியை வைத்தார்.

மீளவும் அவரது அறைக்குள் வந்தேன். உள்ளாடையும், கட்டிலும், நிலமும் மலசலத்தால் நனைந்து கிடந்தது. இருவர் இணைந்து அவரைச் சுத்தப்படுத்தினோம்.

தாதி மருந்து கொடுத்தார். சற்று நேரத்தில் ஆழ்ந்து உறங்கிப்போனார்.

மாலை 8 மணிபோல் வரவேற்பறையிலிருந்து தொலைபேசி வந்தது. ஒருவர் சில உடைகளுடன் வந்திருப்பதாக.

வரவேற்பறையில் நின்றிருந்தவர் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார். ஏறத்தாள 60 – 65 வயதிருக்கும். தொலைபேசியில் உரையாடிய நபர்.

என்னை நோக்கி ஒரு பையை நீட்டினார். அதில் புதிய உடைகள் இருந்தன.

“நன்றி” என்ற என் கண்களை அவர் சந்திக்க விரும்பவில்லை என்பதை அறிய முடிந்தது.

மெதுவாக ”எப்படி இருக்கிறார்?” என்று கேட்டார்.

வாருங்கள் தேநீர் அருந்தியபடி உரையாடுவோம் என்று அவரது பதிலை எதிர்பார்க்காமல் தேநீர் தயாரிக்கும் இடத்திற்கு நகர்ந்தேன்.

தேநீருடன் உட்கார்ந்துகொண்டோம்.

“அவருக்குச் சுயநினைவு இல்லை. நாளை மிலானோ நகருக்குச் செல்லவேண்டுமாம்”

“எவ்வளவு நாட்களாக இங்கு இருக்கிறார்?”

“மூன்று மாதத்திற்கும் அதிகமாக”

குற்ற உணர்வு அவரது தலையைக் குனியவைத்தது.

“அவருக்கு ஒன்றும் நினைவில்லை. நினைவுகள் அறுந்தறுந்து வந்துபோகின்றன. பேத்தர் என்று ஒருவரைப்பற்றிக் குறிப்பிட்டார்”

“நான்தான் பேத்தர். அவரது கடைசி மகன்” என்றுவிட்டு அமைதியானார்.

தேநீருக்குச் சீனி சேர்த்துக்கொள்ளுங்கள் என்றேன். இரண்டு கரண்டி சீனி போட்டுக்கொண்டார்.

“அப்பாவுக்கும் எங்களுக்கும் உறவில்லை. ஏன் அம்மாவுடனும் உறவுகள் நன்றாக இருக்கவில்லை. அவர்கள் இருவரும் மது மற்றும் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்கள். நாம் சிறுவர்களாக இருந்தபோதே எம்மை அரசாங்கத்தின் சிறுவர் நலக்காப்பகத்தில் வாழ்வதற்கு ஒழுங்கு செய்திருந்தனர். தங்கைகள் இருவரையும், என்னையும் சிறுவர் நலக்காப்பகத்திலிருந்து இரண்டு குடும்பங்கள் பொறுப்பெடுத்துக்கொண்டன. எனது அண்ணா சிறுவர் காப்பகத்திலேயே வளர்ந்தவர்”

அதிர்ச்சியில் என்னால் எதையும் பேச முடியவில்லை.

“அப்பாவுக்கு கோபம் வரும். அடிப்பார். வன்முறையும், ஒழுங்கான பரிமாரிப்பும், அன்பும் ஆதரவும் இல்லை என்பதை அவதானித்த அரசு, எம்மைப் பெற்றோரிடம் இருந்து பிரித்து, சிறுவர் நலக்காப்பகத்தில் சேர்த்தது.  சில வருடங்களுக்கு முன் அம்மாவின் இறுதிச்சடங்கில் அப்பாவைக் கண்டேன். அவரது பெண்குழந்தைகள் அவரைச் சந்திக்கவே மறுத்தார்கள். நான் ஒருவன்தான் அவரிடம் பேசினேன். அன்றும் அவர் போதையிலிருந்தார்”

கண்கள் கலங்கி வழிந்தன. அவரது கையைப் பற்றிக்கொண்டேன்.

எனக்கு மூன்று குழந்தைகள். அவர்கள் வளர்ந்துவிட்டார்கள். அவர்களும் இவரை அறியமாட்டார்கள். அப்பாவுக்கு இத்தாலியில் ஒரு காதலியும் இரண்டு குழந்தைகளும் இருப்பதாகப் பேச்சுண்டு. அவரது சகோதரர்கள் எவரும் அவருடன் பழகுவதில்லை. உறவினர்களும் அப்படித்தான். ஒரே ஒரு பால்யத்து நண்பர் மட்டும் இவருடன் தொடர்பில் இருக்கிறார்.

ஆம், அவர் அவ்வப்போது வந்துபோவார்.

இங்கு வருகிறாரா? என்று ஆச்சயப்பட்டார்.

“நீங்கள் அப்பாவைச் சந்திக்க விரும்பினால் நான் எனது மேலதிகாரியிடம் கேட்டு அழைத்துவருகிறேன்” என்றபோது, ”இல்லை, வேண்டாம்” என்றுவிட்டு எழும்பினார். நான் அவர் வாங்கிவந்த உடைகளைப் பெற்றுக்கொண்டு வாசல்வரை சென்றேன்.  தேவைக்கு அதிகமாகவே உடைகள் வாங்கிவந்திருந்தார்.

விடைபெற்ற பின், வாசலைக் கடந்து சென்றார். கண்ணாடிக் கதவுகள் தானாகவே மூடிக்கொண்டன.

நான் திரும்பி நடந்தபோது, யாரோ கதவில் தட்டுவது கேட்டது. திரும்பிப்பார்த்தேன். எதோ சொல்ல முயற்சிப்பது தெரிந்தது.

கதவைத் திறந்தேன்.

“அவருக்கு ஏதும் தேவையெனின் எனது இலக்கத்திற்குத் தொடர்பு கொள்ளுங்கள். மறையவர்களைச் சிரமப்படுத்தாதீர்கள். அவர்கள் இவரது தொடர்பை விரும்புவதில்லை. அவருக்கும் நான் வந்துபோனதை அறியத்தராதீர்கள் என்றுவிட்டு நடந்தார். வாசலைக் கடந்தபோது திரும்பி, ”அவருக்கு நேற்று முன்தினம்தான் முதலாவது கொள்ளுப்பேத்தி பிறந்தாள் என்று சொல்லுங்கள்” என்றுவிட்டுத் திரும்பிப் பார்க்காமலே நடந்தார்.

மேலே வந்து உடைகளை அடுக்கிவைத்தேன்.

மறுநாள் பின் மதியம் அவர் தனது நாயைத் தேடிக்கொண்டிருந்தார்.” நாயை உங்கள் மகன் வளர்க்கிறார்” என்றேன்.

“எந்த மகன்”

“பேத்தர்”

“பேத்தருக்கு இப்போதுதான் பத்து வயது. அவன் எப்படி நாயைப் பார்த்துக்கொள்வான்? அவள் என்ன செய்கிறாள். புத்தியில்லையா அவளுக்கு”என்று கத்தினார்.

“பேத்தர் இப்போது பெரிய மனிதர். அவருக்கு மூன்று குழந்தைகள் இருக்கிறார்கள். உங்களுக்கு மூன்று நாட்களுக்கு முன்தான் கொள்ளுப்பேத்தி பிறந்திருக்கிறாள்” என்றேன்.

“உனக்குப் பைத்தியம் முற்றிவிட்டது” என்றார்.

சஞ்சயன்-நோர்வே

சஞ்சயன்

(Visited 173 times, 1 visits today)