கர்மா-சிறுகதை-ஸர்மிளா ஸெய்யத்

 

ஸர்மிளா ஸெய்யத் ஸர்மிளா ஸெய்யத்

பறவைகளினுடையது போலவொரு திட்டமிடல் இல்லாத பயணம். இடைவெளியெற்ற பணிச்சுமைக் களைப்பைச் சிறுதளவேனும் இறக்கிவைத்து உடலையும் மனத்தையும் இலேசாக்க இப்படியொரு பயணம் தேவையாகவும் இருந்தது. அதிகாலை ஐந்து ஐம்பத்தைந்துக்கு கொழும்பு புறக்கோட்டையிலிருந்து கண்டிக்குப் புறப்படும் இரயிலில் ஏறியாயிற்று. இருக்கைகள் அனைத்தும் நிரம்பி ரயில் பெட்டிகள் பிதுங்கி வழிந்து கொண்டிருந்தன. சனநெரிசலில் பயணிப்பது பத்ரிக்குப் புது அனுபவம். விரும்பாதவன்போல முகத்தை ஊதவைத்தபடியிருந்தான். ஜன்னலோர இருக்கையில் அமர்ந்து கதைகள் பேசிக்கொண்டே, கண்ணில்படும் காட்சிகள் கற்பனைகளினூடே பயணிக்க எண்ணியிருந்திருப்பான். ”இன்னும் எவ்வளவு தூரம்” ரயில் புறப்பட்ட பதினைந்தாவது நிமிடத்திலேயே கேட்க ஆரம்பித்துவிட்டிருந்தான். காலநிலைச் சூடு சனக்கூட்டத்தின் வியர்வை, மூச்சுக்காற்றை வேதியல்படுத்தி ரயில் பெட்டியில் அனல் நிரப்பிக்கொண்டிருந்தது. நேரம் செல்லச் செல்ல முகங்கள் பழக்கமாகிவிட்டிருந்தன. பார்த்ததும் புன்னகை. ”என்னே வெக்கை”, ”ஊர் எது” , ”எங்க போறிங்கள்” உரையாடல்கள். பத்ரியும்கூட சற்றே சூழல் இயைபாக்கமடைந்து, எதிர் இருக்கையில் அமர்ந்திருந்த அவன் வயதையொத்தை பிள்ளைகளோடு பார்வையிலும் புன்னகையிலும் உரையாடத் துவங்கியிருந்தான்.

சிங்கள இந்துப் புதுவருடத்திற்கான புத்தாடைகள், பரிசுப்பொருள்கள் இத்தியாதிகளால் வீங்கிப் பெருத்த பயணப்பொதிகளுடன் எப்படியாவது ஊர் போய்ச் சேர்ந்துவிடுவதென்ற ஒரே முடிவோடு ஒவ்வொரு தரிப்பிடத்திலும் கொத்துக் கொத்தாக மனிதர்கள் ஏறி ரயில் பெட்டிகளை அடைத்ததில் மூச்செடுக்கவும் முடியாதிருந்தது. ஒரு இடைவெளியில் ”மன்னிச்சிடுடா செல்லம் முன்னாடியே டிக்கட் புக் பண்ணியிருந்தா இவ்வளவு சிரமம் இருந்திருக்காது” என்றேன். ”என்னுடைய ஆமைக் குஞ்சைக் கண்டுபிடிக்கிறதுக்காக எவ்வளவு வேணும்னாலும் கஸ்ட்டப்படுவேன் மம்மீ” என்றான் உறுதிப்பாட்டுடன்.

நடுவே எப்படி இந்த ஆமைக் குஞ்சு விவகாரத்தை மறந்துபோனேனோ?. ”உங்க செல்லப்பிராணி எது” இப்படித்தான் அந்த உரையாடல் துவங்கியது. ”நாய்க்குட்டி” என்றேன் எதையும் யோசிக்காமலே. ”நிஜம்மாவா, உங்களுக்கு நாய்க்குட்டின்னா அவ்ளோ பிடிக்குமா?”. ”ஆமாம், நிறையவே பிடிக்கும்” ”இப்ப உங்க நாய்க்குட்டி எங்க?” ”இதோ இங்கதான் என் பக்கத்தில இருக்கு” குறும்பு வழியும் பெருத்த விழிகளோடு பொய்யாக முறைத்தபடி என்னை அடித்தான்.

தம்பி பைறூஸூடன் சேர்ந்து நாய்க்குட்டி வளர்த்த கதையைச் சொன்னபோது அத்தனை லயிப்போடு கேட்டுக் கொண்டிருந்தான். நாய் முன்வாசலில் படுத்துக் கிடந்தால் மலக்குகள் வீட்டுக்கு வரமாட்டார்கள் என்று எல்லாரும் நச்சரித்தபடியே இருப்பார்கள். அவர்களது நம்பிக்கைகளை இடைஞ்சல் செய்யாத விதமாக கறுத்த வட்டப் புள்ளிகள் விழுந்த வெள்ளை நாய்க்குட்டியை வளர்த்த கதையை அங்குலம் அங்குலமாக ரசித்தான். நாய்க்குட்டிக்கு நாங்கள் கட்டிய சின்ன வீடு, அதற்குப் பிடித்த உணவு, அது எப்படி ஓடும், எப்போது தூங்கும், பசித்தால் என்ன செய்யும் இப்படி அவனுக்கு எத்தனையோ கேள்விகள்.

நாங்கள் ஆசை ஆசையாக வளர்த்த அந்த நாய்க்குட்டி துப்பாக்கி விசைக்கு அகப்பட்டுத் துடிதுடித்து இறந்துபோனதைச் சொல்லிக்கொண்டிருந்தபோது அழுதேவிட்டான். ”நாய் இருந்தால் வீட்டுக்கு *** “மலக்குகள் வரமாட்டார்கள்” என்று சொல்லுகிற உம்மாதான் நாங்கள் பள்ளிக்குப் போனபிறகு தயிர் சோறு பிசைந்து வைப்பதும், காலில் தோலில் வரும் சீக்குகளைத் துப்புரவாக்கிக் குளிக்கச் செய்வதுமெல்லாம். ஒரு நிலைக்குப் பிறகு ”டைகர்” எங்கள் வீட்டில் எல்லாருக்கும் பிடித்த செல்லம். அதற்கு எல்லாருடைய குரலும் வாசனையும் பரிச்சயம். பள்ளி முடியும் நேரத்திற்கு ஒழுங்கைக்கு வந்து எங்களுக்காகக் காத்திருக்கும். கண்டதும் துள்ளிப் பாய்ந்து ஓடி வரும். எனக்கோ தம்பிக்கோ ஏதும் சுகக்குறைவென்றால் சோர்ந்துபோய் படுக்கும். எங்களோடு உயிராயும் சதையாயுமிருந்த டைகர் ஒருநாள் இந்திய இராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டில் உயிர் துறந்தது.

விடுதலைப்புலிகள் பதுங்க இடம்தருகிறவர்களாக எங்களைச் சந்தேகித்து நள்ளிரவில் இந்திய இராணுவம் வீட்டை முற்றுகையிட்டது. அன்றைய தினம் வாப்பாவும் வீட்டில் இல்லை, கொழும்பு சென்றிருந்தார். சீருடையும் துப்பாக்கியுமாக ஒருபோதும் பார்த்தறியாத மனிதர்களைக் கண்டதும் டைகர் இடைவெளியின்றிக் குரைத்துக் கொண்டேயிருந்தான். கதவை உடைத்துப் பிளந்துகொண்டு இராணுவம் வீட்டுக்குள் நுழைந்ததில் உம்மாவின் வலது கால் பெருவிரல் சதைகிழிந்து இரத்தம் வழியத் தொடங்கியதும் நாங்கள் பதட்டத்தில் விழிபிதுங்க இறுகிப்போய் நின்றோம். கால் பெருவிரலிலிருந்து கட்டுப்படுத்த ஒண்ணாமல் வழிந்த இரத்தத்தை உம்மா பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை. டைகர் துடிதுடித்து இறப்பதைப் பார்த்துப் பதறிய தம்பியின் வாயைப் பொத்திப் பிடித்தபடி ஐந்து சின்னஞ்சிறுசுகளான எங்களை இடுப்புச் சல்லையோடு அணைத்தபடி நின்றார்.

டைகரைப் பின்வளவில் குழிதோண்டிப் புதைத்தபோது எங்களுக்கிருந்த வேதனையும் ஆற்றாமையும் சொல்லி மாளாது. அப்போது எனக்குப் பத்து வயது. தம்பிக்கு எட்டு. பல நாட்களாக நானும் அவனும் காய்ச்சலில் படுத்துக் கிடந்தோம். எங்கு நாய் குரைக்கிற சத்தம் கேட்டாலும் எங்கள் கண்கள் ஊறும். நெஞ்சு புடைக்க விம்முவோம்.

முற்றத்தில் நிலாப்பால் குடித்துக் கதைபேசிக்கொண்டிருந்த ஓர் இரவு அது நிகழ்ந்தது. வாசல் தென்னை மரத்திலிருந்து ஏதோ விழுந்து கீச்சிட்டது. ஓடிச்சென்று பார்த்ததில் சின்ன மைனாக்குஞ்சொன்று சிறகுகளை அடித்தபடி கிடந்தது.

டைகர் இழந்த துயரத்தைப் போக்க இயற்கைதான் மைனாவை அனுப்பித் தந்திருக்கவேண்டும். தவறித் தற்செயலாக சிறகு பிய்ந்து விழுந்த மைனா பின்னாட்களில் டைகரின் இடைவெளியை நிரப்பவும் செய்தது. டைகரின் துள்ளலும், விளையாட்டுகளும் மைனாவுக்குச் சாத்தியமில்லை என்றாலும் அது எங்களுக்குப் புதுவித அனுபவமாயும் ஆனந்தமாயுமிருந்தது. மைனாவுக்குப் பிரத்தியேகச் சிறைக்கூடுகளைத் தயாரிக்கவில்லை. வீடு முழுவதும் பறந்து திரிந்தது. ”உம்மா” என்று முதன்முதலில் அது பேச ஆரம்பித்தபோது சொல்லொண்ணாத ஆனந்தமடைந்தோம். மேலும் சில அர்த்தமற்ற வார்த்தைகளைக்கூட அது உச்சரித்தது. பறவையோடு உரையாடுவதைக் கற்பனை செய்யவும் அறியாத எங்களுக்கு இந்த அனுபவம் வரமாகத் தெரிந்தது. பூமியில் எங்களுக்கு மட்டுமே வாய்த்த அரிய பொக்கிசமாகக் கொண்டாடினோம்.  நாங்கள் சொல்கிற வார்த்தைகள், பெயர்களை உச்சரித்துக் காண்பித்தது. வீட்டுக்கு வருகின்றவர்கள் தங்கள் பெயர்களை மைனா உச்சரிப்பதைக் கேட்டு மகிழ்ந்தனர். ”மோசம்” ”மோசம்” என்று வாப்பாவை ஏசி, உம்மாவுக்கும் வாப்பாவுக்குமிடையே சண்டை மூட்டியது.

மைனாக் கதையைச் சொல்லிமுடித்தபோது ”பசிக்கலை” என்று சொல்லிவிட்டு உறங்கப் போனான் பத்ரி. மனிதனோ, விலங்கோ, பறவையோ எதொன்றாயினும் மரணமும் பிரிவும் ஆறாத் துயரத்தில் மூழ்கடிப்பதுதான். எங்கள் மைனா இனந்தெரியாத நோயினால் பாதிக்கப்பட்டு உண்ணாமலும் வாய் திறந்து பேசாலும் நாட்கணக்கில் சோர்ந்து கிடந்தது. அந்த நாட்களின் நீட்சியும் இயலாமையும் இன்றளவும் ஜீரணிக்க முடியாதவை.

சில நாட்களின் பின்னர் பத்ரி திடீரெனக் கேட்டான். ”ஏன் மம்மீ, ஆமைக் குஞ்சை செல்லப்பிராணியாக வளர்க்க முடியாதா என்ன”

நாய்க்குட்டி, ஆட்டுக்குட்டி, பசு, முயல், பூனை, கிளி, மைனா, புறா, வாத்து, கோழி, மீன் – இப்படிப் பல செல்லப்பிராணிகளைத் தெரிந்தவளுக்கு ஆமை ஆச்சரியமாகத்தான் இருந்தது.

மேலே சொல்லப்பட்ட அனைத்துச் செல்லப்பிராணிகளையும் வரிசைப்படுத்திவிட்டு, ”இவ்ளோ இருக்கே, அது ஏன் ஆமை”

”எனக்கு ஆமைதான் பிடிச்சிருக்கு மம்மீ, அது நீண்ட காலம் வாழும், தெரியுமா?”

அன்று துவங்கியதுதான், ஆமை தேடும் படலம். குட்டியாக ஒரு ஆமை வேண்டும். அதன் ஓடு பச்சை நிறத்தில் இருக்கவேண்டும். ஏனென்றால் அதற்குப் பெயர் வைத்தாயிற்று. கிரீன். வீட்டில் எங்கே, எப்படியெல்லாம் அதை வைத்துக் கொள்வதென்ற எல்லாத் திட்டமிடலும் செய்தாயிற்று. ஆமைக்கு பச்சை இலைகள், சில காய்கள் பிடித்த உணவாம். இலைகள் காய்களைக் கொண்டு ஆமைக்குப் பிடித்த சாலட் செய்வது எப்படி என்றும் செய்து பார்த்தாயிற்று. ஆமைதான் செல்லப்பிராணி என்று முடிவு செய்தபிறகு, ஆமையைப் பற்றிய தேடல்களுக்கு கூகுளில் பதில்கள் தேடினான். நாள்தோறும் புதிய கேள்விகளை கூகுளின் தேடல் சுட்டியில் தட்டினான். இவளே ஒருபோதும் அறிந்திராத தகவல்களாகச் சொல்ல ஆரம்பித்தான். ஆமையை வினிகர் கலந்த குளிர்ந்த நீரில் குளிக்கவைத்தால் மேல் ஓடு பளிச்சென்று அழகாக இருக்குமாம். தினமும் வீட்டில் ஆமை பற்றிய உரையாடல்கள். விலங்குகள் காட்சிக் கூடத்தில் பார்த்துவிட்டு, தான் தேடுகின்ற ஆமை இதுபோல இருக்காதென்றும் சொல்லியிருந்தான்.

ஆமையை வீட்டுக்குள் கொண்டுவருவது குறித்த உறுதியான தீர்மானத்திற்கு வந்துவிடவில்லை, ஆனாலும் அவனது உரையாடல்கள் ரசிக்கும்படியாக இருந்தன. அவனது தேடல் பிடித்திருந்தது. ஆமை வீட்டுக்குள் இல்லையே தவிர அவனை அது முழுவதும் ஆக்கிரமிக்கவும், துவங்கியிருந்தது. விடுமுறையைக் கழிப்பதற்கு கண்டிக்குச் செல்கின்ற பயணத்தை ஆமை தேடிப் புறப்பட்ட பயணமாக மாற்றுவதுவரை.

கண்டி நகரை அடைந்தபோது மதியம் பதினொரு மணி. குட்செட் அருகே இருந்து மீக்கனுவ பஸ்ஸில் ஏறினோம். ஏற்ற இறக்கமான  தார்ச்சாலைகளின் கண்டி நகரை பத்ரி முதன் முறையாகக் காணுகின்றான். மர்மமான உற்சாகமும் குதூகலமும் அவனை ஆட்கொண்டிருந்தது. வானைத்தொட்டபடி  நீண்டு படுத்திருந்த மலைத்தொடர்களை அண்ணார்ந்து பார்த்தான். ஓவியர்கள் பலர்கூடி வரைந்த மகா  நவீன வெண் ஓவியங்கள் மேகங்களாகி நகர்ந்தபடியிருந்தன. வெயிலும் மழையுமில்லாத அரை இருட்டில் தூங்கி வழிந்தது நகரம். ஒரே கிளையிலிருந்து சொல்லிவைத்தாற்போன்று மேலெழுந்து பறக்கும் பறவைகளாக நாலாபுறமிருந்தும் பேருந்துகள் புறப்பட்டபடியிருந்தன. வாழ்வின் இறுதி நாளை நெருங்கிவிட்டவர்களைப் போன்று மனிதர்கள் இயற்கை பற்றிய எந்தக் கரிசனமுமின்றி சிந்தனை வயப்பட்டவர்களாகத் தெரிந்தார்கள். இருபதே நிமிடங்களில் மீக்கனுவவை அடைந்தோம். தோழி அம்ரிதாவின் வீட்டுக் கதவைத் தட்டியதும் நாய்கள் பல குரைப்பதைக் கேட்டோம். நூற்றாண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து சலித்த மூதாட்டியாகத் தெரிந்தது வீட்டின் அமைப்பு. சுவர்களின் வெடிப்புகளே உள்ளே நுழைந்துவிடப் போதும் போலவிருந்தன. வீட்டை அடைத்துக்கொண்டு வானை நோக்கி நீண்டு வளர்ந்திருந்த மரங்களில் மந்திகள் பாய்ந்து விளையாடியதில் சிவந்து கனிந்த ஜம்புப் பழங்கள் சொரிந்து கிடந்தன. அம்ரிதாவின் அம்மா கதவைத் திறந்ததும் ஒன்றுக்குப் பின் ஒன்றாக நான்கு நாய்கள் ஓடிவந்து, ஒவ்வொன்றும் வெவ்வேறு தாழ லயத்தில் புதிய மனிதர்கள் எங்களைப் பார்த்துக் குரைத்தன அல்லது வரவேற்றன. அவர் ஆங்கிலத்தில் அதட்டியதும் வாயை மூடிக்கொண்டு திரும்பி உள்ளே சென்றன.

”நாய்ங்களுக்கு இங்லீஷ் தெரியுமா மம்மீ”

”இங்லீஷ் என்ன உலகில் உள்ள எல்லாப் பாஷையும் புரியும்”

”ஆச்சரியமா இருக்கே, பேசவே முடியாத நாய்கள் எப்படி இத்தனை பாஷைகளைப் புரிஞ்சிக்கிது….”

”பேசாதபடியால புரிஞ்சிக்கிறது ஈசியாயிடுதோ”

மேட்டுப் பகுதியில் அமைந்திருந்த அந்த வீடும் அடர்ந்த மரங்களும் புதர்களும் பத்ரியின் தேடுகின்ற உணர்திறன் கொம்புகளை முடுக்கிவிட்டிருக்க வேண்டும். நில்லாது அலைந்தான். இரக்கமேயில்லாது கேள்விக் கணைகளைத் தொடுத்தான்.

”இதுக்கு சரியான பதிலை நாளைக்குச் சொல்லட்டா”  அவனது பல கேள்விகளுக்குப் பதில்கள் நிலுவையில் கிடக்கின்றன. ஆனால் அவன் மீண்டும் மீண்டும் கேட்பான், பதில் கிடைக்கின்றவரை, திருப்தியான பதில் கிடைக்கின்றவரை. அவனது கேள்விகளுக்குப் பதில் சொல்வதற்கென சம்பந்தமேயில்லாத புத்தகங்களை வாங்குவதும் படிப்பதும், தேடுவதும் என்று எனது உலகின் நேர்கோட்டில் நிகழ்கின்ற அவலங்கள் வேறு கதை.

அம்ரிதாவின் அம்மா நாய்களைப் பராமரிப்பதில் பி. எச். டி. முடித்திருப்பார் போல. வாய் ஓயாது அவற்றோடு உரையாடிக் கொண்டேயிருந்தார். ஆங்கிலம், சிங்களம், தமிழ் என்று மும்மொழித் தேர்ச்சி பெற்ற நாய்களை இங்குதான் முதன் முறையாகப் பார்த்தேன். மூன்றில் எந்த மொழியில் சொன்னாலும் புரிந்துகொள்ளும் திறன் பெற்றிருந்தன. மனக் களைப்பேயில்லாது ஒவ்வொரு நாய்க்கும் அது பிடிக்கும், இவனுக்கு இது பிடிக்காதென்று வெவ்வேறு உணவுகளைத் தயாரித்துப் பரிமாறினார். ”இவன் ஓட்சும் பாலும் மட்டும்தான் காலையில் சாப்பிடுவான்” என்று பிரௌனியைக் காண்பித்தார். முயலும் மானும் உண்டு பழகிய காட்டு நாயின் உயரத்திலிருந்தான் பிரௌனி. ”இவனுக்கு எந்நேரமும் இறைச்சியும் சோறும்தான் வேணும்”. அவன் பிளக்கி. சோமாலியாவிலிருந்து தப்பித்துவந்திருக்கும்போல தோலொட்டிய வயிறும் நெடிய கால்களும் அதற்கு.  ”தயிரும் சோறும்தான் இவன் ஃபேவர்”, ”இவன் எதைக் குடுத்தாலும் சாப்பிடுவான்” என்று ரண்டியையும், பூஸ்ஸியையும் காண்பித்தார்.

நாய்களோடு நட்புக் கொள்ள பத்ரி என்னென்னவோ முயற்சிகள் செய்து கொண்டிருந்தான். கண்டி நகரத்தின் வனப்பையும், வரலாற்றுத் தளங்களையும் பார்வையிடுவதைவிடவும் நாய்களோடு உறவாடுவது பிடித்திருந்தது அவனுக்கு. நாய்களோடு வெறுப்பொன்றும் இல்லாதவள் ஆயினும் இத்தனை நாய்களோடு வாழ்வது அயர்ச்சியாயிருந்தது. அந்த வீட்டில் எதைத் தொட்டாலும் நாய்கள் எச்சரிக்கை செய்தன. எந்நேரமும் எச்சரிக்கை உணர்வுடனே வாழ்வதென்பது அயர்வு உண்டாக்குவது. இராணுவக் கண்காணிப்பில் வாழும் அகதி நிலைதான் அந்த வீட்டில் எங்களதும். பத்ரிக்கோ அவனது செல்லப்பிராணி மோகம் பெருகி, ஆமை வளர்க்கின்ற ஆசை வலுப்பெற்றுக் கொண்டேயிருந்தது. இரவில் சிலபோது இந்த வழியாக ஆமைகள் ஊர்ந்து வரும் என்று அம்ரிதாவின் அம்மா சொன்னதிலிருந்து இரவு முழுவதும் சில்லூறுகளின் சத்தம் நிரம்பிய புதர்களைப் பார்த்தபடி அங்கேயே நிற்க விரும்பினான்.

ஒரு வழியாக ஆமை தேடிக்கொண்டே கண்டி நகரைச் சுற்றிப் பார்த்து அங்கிருந்து கிளம்பும்போது அவன் முகத்தில் அப்படியொரு ஏமாற்றம். அவன் தேடி வந்த ஆமையை கண்டியில் எங்குமே காணமுடியவில்லை. பேராதெனிய தாவரவியல் பூங்காவில் மூன்றடி நீளத்தில் பாம்பைப் பார்த்தபோது, இங்கு கட்டாயம் ஆமைகளும் இருக்கும் என்றான். பாம்பும் ஊர்வன, ஆமையும் ஊர்வன, பாம்பு இருக்கிற பகுதிகளில் ஆமையும் இருக்கும் என்று கூகுளில் படித்திருப்பதாக அடித்துச் சொன்னான். நூற்றி நாற்பத்தியிரண்டு ஏக்கரிலும் ஒரு அங்குலம் விடாது என்னையும் அலையவைத்தான். காலை பத்து மணியிலிருந்து மாலை ஐந்து மணி வரையும். தேடியும் ஆமை கிடைக்கவில்லை. இங்கெல்லாம் ஆமை இருந்தாலும் நாம் வெளியே எடுத்துப் போக முடியாது என்று தத்ரூபமாகப் புரியவைக்க எடுத்த முயற்சிகள் எதுவும் அவன் காதில் ஏறவில்லை.

கண்டியில் இருந்து நேராக மாவனல்லைக்குப் பயணம். ஜன்னலோர இருக்கையில் வேடிக்கை பார்த்துக் கொண்டே வந்தான். மலைமுகடுகளில் உட்கார்ந்திருக்கும் வீடுகளைக் குறித்த அவனது கவலைகளைக் கேள்விகளாக வெளிக்கொணர்ந்தான்.   மாவனல்லை உதுவங்கடவில் தோழி கமலாவதி புதுமனை குடிபுகும் நிகழ்வை புதுவருடத்தோடு ஒட்டி ஏற்பாடு செய்திருந்தார். சரதியல் கம்மானவுக்குச் செல்கின்ற வழியில் வயலும் மலையும் சார்ந்த மேட்டிலிருந்தது புதுவீடு. ஈரலிப்பும் பசுமை வனப்பையும் பார்த்ததும் சொன்னான் ”மம்மீ, நான் தேடுற ஆமை இங்க கண்டிப்பா இருக்கும்”.

இங்கு எல்லாரும் சிங்கள மொழி பேசுகிறவர்கள். பத்ரிக்கு சிங்களம் சுத்தம். அவன் சுதந்திரமாக உரையாட முடியாத இடத்தில் நீண்டநாள் தங்கியிருப்பது சரியாயிராது. ”நாளைக்குக் காலையிலேயே நாம இங்க இருந்து கிளம்பறோம்” என்றேன். அவன் பதில் சொல்லவில்லை. கமலாவதி திருமணமாகாத மாற்றுத்திறனாளி. தாயாருடன் வாழ்கிறார். பத்ரியில் அவருக்குப் கொள்ளைப் பிரியம். பத்ரிக்கும். சென்றதும் ஆங்கிலத்தில் கேட்டான். ”ஆன்டி இங்கே ஆமைகள் வருமா?” ”நிறைய வருமே?”.

ஒவ்வொரு நிமிடமும் அவன் ஆமை பற்றியே சிந்திக்கலானான். தண்ணீர் தேங்கி நிற்கும் இடங்கள், வயல் கிணற்றடிகள், வாய்க்கால், வரம்புகள் என்று ஆமை தேடும் படலம் துவங்கியிருந்தது. கொழும்பில் அடித்த ஏப்ரல் வெயிலிலிருந்து தப்பித்தவளாக சதாவும் வீட்டு முற்றத்திலேயே கிடந்தேன். அவ்வப்போது சாரல் மழை. குளிர்ந்த காற்று. கண்ணுக்கெட்டும் தூரம் வரையிலும் வயல் வெளி. பச்சைக் கம்பளி போர்த்திய வானைத் தொடும் மலைமுகடுகள். எங்கு திரும்பினும் காய்த்துச் செழித்த மரங்கள். கவனிப்பாரற்ற முற்றிப் பழுத்த கொய்யா, மா, பலாக்களின் பழுப்பு மணம்.

”வீட்டில் இவர் மட்டுந்தானா?” என்று ஆச்சி கேட்டபோது ”இவரு மட்டுந்தான்” என்றேன். ”அதுதான் பிள்ளை செல்லப்பிராணி தேடுது” என்றார் சர்வசாதாரணமாக. சர்வநிச்சயமாக. செல்லப்பிராணி ஆசை எப்படித் தனிமையோடு தொடர்புபடுகின்றதென்று அறிவியில்பூர்வமான சிந்தனைகள் ஒன்றும் உடனடியாகத் தோன்றவில்லை. ஆமை தேடும் படலத்தை ரசிக்கும் மனம் மெல்லச் சோர்வடைவதுபோல் உணர்ந்தேன்.

”ஆமையெல்லாம் இங்க கிடைக்காது” அதட்டுகிற தொனியில் சொன்னேன். ”ஏன் கிடைக்காது, எனக்கு ஆமை வேணும்” பிள்ளையின் முகத்தில் தெரிந்த களைப்பும் கோபமும் பரிதாப உணர்வை உண்டுபண்ணியது. அவனது விருப்பங்களுக்கு குறுக்காக நிற்பது நோக்கில்லை. ஆமையை வீட்டில் வளர்ப்பது நடைமுறையில் சாத்தியமில்லை என்று எடுத்துக் கூறப் போய்த்தான் கூகுள் தேடல் துவங்கியது. ஆமையை வீட்டில் வளர்க்கலாம் என்பதற்கான சாத்தியங்களையும் அது ஓர் அரிய செல்லப்பிராணி என்பதையும் தினமும் கதைகளைாகச் சொன்னான். எதைத் தருவதாகச் சொன்னால், எதை நிகராகக் காண்பித்தால் ஆமை தேடுகின்ற படலத்தை நிறுத்துவான் என்று நிச்சயமான எந்த முடிவுகளுக்கும் வரமுடியவில்லை. அதைக் குறித்து அவனோடு உரையாடுவதைத் தவிர்க்கவும் விரும்பினேன். ”எவ்ளோ நாளைக்குத்தான் உங்களோடவே விளையாடிட்டும் பேசிட்டும் இருக்கிறது” ”ஐ பீல் அலோன்” என்றெல்லாம் சொல்லிவிட்டான் என்றால் நெஞ்சு வெடித்திடாதா? இத்தனை வருடங்களில் இவளுக்குத் தோன்றாத இடைவெளிகள் இவனுக்குத் தோன்றுவது நியாயமா? தோலை இறுக்கிப் பிடிக்கும் குளிரிலும் முதுகு வியர்த்தது. அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தவன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன். எதையும் நேர்படப் பேசுகிறவன்தான். தனிமையாக உணர்ந்தால் சொல்லியிருக்க மாட்டானா? பிசுபிசுத்த உணர்வுகளோடே உறங்கிப் போனேன்.  காலையில் கண் திறந்தபோது அவன் அருகே இல்லை.

எங்கு தேடியும் அவன் இல்லை. அங்கிருந்தவர்கள் யாருக்கும் அவன் எங்கே சென்றான் என்றும் தெரியவில்லை. அதிகாலை ஐந்து மணியளவில் அவன் பாத்ரூமிலிருந்து வெளியே வருவதைப் பார்த்தேன் என்று கமலாவதி கூறினார். மீண்டும் அறைக்குத் திரும்பியிருப்பான் என்றே அவர் எண்ணியிருந்தார். எனக்குப் பேச்சு வரவில்லை. வீட்டில் இருந்தவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு திசையாய் தேடச் சென்றனர். கால்கள் நடுங்க வாசற்படிக் கட்டில் கிடந்த செருப்புகளை மாட்டிக் கொண்டு நடந்தேன். எந்தத் திசையில் சென்று தேடுவதென்றே தெரியவில்லை.

ஆமையைத் தேடித்தான் போயிருப்பான் என்று உறுதியாகத் தெரியும். பரிச்சயமற்ற சூழலில் இருக்கத்தக்க ஆபத்துக்களை அறியாதவன் அவன். சேறும் சகதியுமாகக் கிடக்கின்ற அந்த நிலத்தில் அங்கங்கே கால்வாய்கள், வயிலுக்குத் தண்ணீர் இறைக்கும் கிணறுகள், பள்ளத்தாக்குகள். அவற்றின் ஆழம் அகலம் தெரியாமல் ஆமை பிடிக்கலாம் என்று இறங்கினால்…. பாம்புகள் பூச்சிகள் அவனது கால்களின் பிஞ்சுத் தோல்களைப் பதம் பார்த்தால்….

இரண்டு மணி நேரங்களாக கால்போன திசையில் நடந்தேன். அவன் பெயரைக் கூவிக் கூப்பிடுவதற்கும் உரமற்று, வாயிலிருந்து காற்றுக்கூட வராதபடி உலர்ந்து கிடந்தது நா.

வயலின் வரப்பொன்றில் நடக்கையில் எங்கோ அவன் குரல் கேட்பதுபோலிருந்தது. நிச்சயமாக அது அவன் குரல்தான். வயல்களால் நிரம்பிய பரந்த அந்த நிலப்பரப்பில் அவன் குரல் கேட்ட திசை நோக்கி வேகமாக நடந்தேன். நெருங்க நெருங்க அவன் சிரிப்பும் கொண்டாட்டமும் நெருங்கி வருவதைப் போலிருந்தது. வயலை ஊடறுத்து ஓடிக்கொண்டிருந்த சிற்றாற்றின் கரையில் நின்றுகொண்டிருந்தான்.  அவனுடன் பிரேமாவந்தினியும். பத்ரியின் ஒரு கரத்தை இறுகப்பற்றியிருந்தது பிரேமாவந்தினியின் கரம். பத்ரியைக் காணவில்லை என்றுதான் தேடினோம், இந்த மூதாட்டியை யாரும் கவனிக்கக்கூட இல்லை. பிரேமாவந்தினிக்கு எண்பத்தி ஐந்து வயது. காய்ந்து வரண்ட பொன்னிறத் தோல். கணக்கெடுக்க முடியாத சுருக்கங்கள். உறுதியான மெலிந்த கால்கள், கைகள். தெளிவான பார்வை. தனது வயதையொத்தவர்களோடு விடவும் வயதானவர்களோடு விரைவாக நெருங்கிப் போகிறவன்தான் பத்ரி. முதல் சந்திப்பிலேயே, பாஷைகூடத் தெரியாத இந்த மூதாட்டியுடன் பயணப்படத் துணிந்த அவன் சாகசத்தில் வெறுப்படைந்தவளாக, இத்தனை நேரம் அவனைத் தேடி அலைந்த களைப்பும் பொருட்படுத்தாத அவனது செய்கையும் எரிச்சலை உண்டாக்க சற்றுத் தள்ளி நின்று ”பத்ரி” என்று கத்தினேன். திரும்பிப் பார்த்தான். எதிர்பார்த்தபடி ”மம்மீ” என்று குழறிக்கொண்டு ஓடிவரவில்லை அவன். ”இங்கப் பாருங்களேன் எவ்வளவு ஆமை” என்றான். அவனது செய்கை ஆச்சரியமாக எரிச்சலைத் தூண்டுவதாக இருந்தது. ஏமாற்றம் தலைக்கேற பிரேமாவந்தினியை நிந்திக்கத் தூண்டியது மூளை. ”அறிவுகெட்டத்தனமாக இப்படியா ஒரு குழந்தையை அழைத்துக் கொண்டு வருவது” சிங்களத்தில் கிட்டத்தட்டப் பாய்ந்தேன். பிரேமாவந்தினியிடமும் எந்த ரியாக்ஷனும் இல்லை. ”அங்கே பார், ஓடுது… ஓடுது” என்று நீருக்கு அடியில் ஓடி மறையும் ஆமைகளைக் காண்பித்துக் கொண்டிருந்தார்.

”மம்மீ டோன்ட் ஸ்கோல்ட் ஆன்டி…”. இவனுக்கு எப்போதிருந்து சிங்களம் புரிய ஆரம்பித்ததென்று திடுக்கிட்டுப் பார்த்தேன். சிங்களத்தில் ஒரு வார்த்தையைத்தானும் உச்சரிக்கத் தெரியாதிருந்தவன் எப்படி இந்தக் கிழவியோடு தோழமையானான், கிட்டத்தட்ட இரண்டு கிலோமீற்றர் தூரம் வீட்டிலிருந்து நடந்திருக்கிறான். நிச்சயமாக வாயை மூடிக்கொண்டு சும்மா இருந்திருக்க மாட்டான். என்னவெல்லாம் பேசியிருப்பான்? மயங்கிவிழாத குறையாக அவனும் கிழவியுமாக வீடு வந்து சேர்ந்தோம்.

அந்தக்  குளத்திலும் ஆமை பிடித்தபாடில்லை. அவை பெரிய ஆமைகள் என்றான்.

உதுவங்கடவில் உள்ள அறுபது வீடுகளில் கிட்டத்தட்ட அனைத்து வீடுகளுக்கும் தெரிந்துவிட்டிருந்தது, கொழும்பிலிருந்து வந்த ஒரு பையன்  ஆமைக் குஞ்சொன்றைத் தேடிக் கொண்டிருக்கிறான் என்று. பெரும்பாலும் எல்லா வீடுகளிலும் இருந்து அறிமுகமற்ற யார் யாரோ கமலாவதியின் வீட்டை நோக்கி நடந்தனர். இவன் விரும்புவது போன்ற ஆமைக் குஞ்சை எங்கு எப்படிப் பிடிக்கலாம் என்று அவரவர் ஆயிரம் கதைகள் சொல்லலாயினர். மழையில் வயல் கிணறுகள், வாய்க்கால்கள், குளங்கள் அனைத்தும் நிரம்பி வழிவதால் சில வாரங்களின் பின்னர் ஆமைக் குஞ்சு பிடிப்பது இலகுவாக இருக்கும் என்று சிலர் கூறினர். எல்லார் உரையாடலையும் பத்ரி லயித்துக் கேட்டுக் கொண்டிருந்தான். ”இவங்க என்ன சொல்றாங்க” என்று மொழிபெயர்க்கிற வேலை இரண்டு நாட்களானதுமே நின்றுபோனது. சிங்கள மொழி புரியுதோ இல்லையோ ஆமையைப் பற்றி உரையாடும் எல்லா மொழியும் புரியும் நிலையை எட்டியிருந்தான். நாய்களுக்கு உலக மொழிகள் அத்தனையும் புரிவது போலத்தான்.

இந்தப் பயணமே துவங்கியிருக்கக் கூடாதென்ற வெறுப்பின் உச்சத்தை அடைந்திருந்தேன். எரிச்சலில் தலை கனத்தது. அங்கிருந்து ஆமைக் குஞ்சோடுதான் கொழும்புக்குப் புறப்படுவதென்று பிடிவாதமாக இருந்தான் பத்ரி. அவனது ஆமை ஆசைக்கு முற்றிலும் இசைபான சூழலாக கமலாவதியின் வீடும் அண்டையும் மாறிவிட்டிருந்தது.  குவைட்டிலிருந்து தம்பி இரண்டு முறைகள் தொலைபேசியும் பதில் பேசாதிருந்தேன். மூன்றாம் முறை அழைத்தபோது கைப்பேசியைக் கையில் எடுத்துக்கொண்டு வயல் பக்கமாக நடந்தேன். பசும் வயலிலிருந்து வந்து கொண்டிருந்த தெளிந்த மாசற்ற காற்று மனத்தை இதப்படுத்த பத்ரியின் ஆமை ஆசையை முறைப்பாடுகளாக அவனிடம் கொட்ட ஆரம்பித்தேன்.

அவன் ”ஹா” எனச் சிரித்துக் கொண்டிருந்தான். குவைட்டிலிருந்தபடி சிரித்தாலும் காதினுள் இடியாக இறங்கியது அவன் சிரிப்பு.

”நீ சாகடித்த ஆமைதான் ஆவியாக வந்து உன்னை இப்படித் தொல்லைப்படுத்துது”

”என்ன உளர்றாய், ஆமையாவது ஆவியாக வருவதாவது”

”மறந்திட்டா, சின்னப் புள்ளயிலே நம்மட வாசலுக்கு வந்த ஆமைக்கு நாம செஞ்சது”

ஞாபகங்களின் அடியாழத்தை தூசுத்தட்டிப் பார்க்கத் தூண்டியது அவனது குற்றஞ்சாட்டல்.

ஆமைகள் வீட்டு வாசல் வரைக்கும் நீந்தி வருகின்ற மழைக்காலமொன்றில் நாங்கள் நிகழ்த்திப்பார்த்த அந்த பலப் பரிசோதனையை நினைத்துப் பார்ப்பதொன்றும் அத்தனை இனிய நினைவாக இல்லை. குரூரச் செயலென்று அறிவுக்கும், உணர்வுக்கும் எட்டாத பதின்மத்தில் நிகழ்த்திய விளையாட்டுகளில் ஒன்று. ஆமை ஓட்டின் பலத்தைப் பரீட்சித்துப் பார்க்க விரும்பி, குச்சியினால் முதுகில் அடித்தேன். தம்பி கல்லொன்றைத் தூக்கிப்போட்டான். ஆமையின் ஒடுகள் கொஞ்சமும் தகரவில்லை. முழு உடலையும் உள்ளிழுத்துக்கொண்டு ஆமை அமைதியாகக் கிடக்க  உற்சாகம் மின்சார கதியில் இரத்தக் குழாய்களில் பாய்ந்தது எங்களுக்கு. மீண்டும் மீண்டுமாக ஆமையின் ஓட்டை தகர்க்கும் எங்கள் முயற்சி தொடர்ந்தது. சிறிய கற்கள், பெரிய கற்கள், குச்சிகள், பெரிய மரக் கட்டைகள் என்று வெவ்வேறு ஆயுதங்களால் மாறி மாறித் தாக்குதல் நிகழ்த்தினோம். தம்பி களைத்துப்போனான், தகர்க்கவே முடியாத சேர்மானங்கள் கொண்டு ஆமை ஓட்டை இயற்கை தயாரித்திருப்பதாகச் சொன்னான். எனக்குத் திருப்தியில்லை. எமது ஆயுதங்கள் போதாதென்று நம்பினேன். ஆமையின் ஓடுகளைத் தகர்க்கக்கூடிய ஆயுதமொன்று இருந்தே ஆகணும். பாரங்கல்லொன்றை – ஆமை ஓட்டின் உறுதியைப் பரீட்சிக்கும் ஒரே நோக்கோடு சுமக்கவே முடியாத சக்திக்கு மீறிய பாரங்கல்லொன்றை கடின முயற்சியுடன் தூக்கிப் போட்டேன். டமார்!

”மம்மீ” ஓடிவந்தான் பத்ரி. முகத்தின் பிரகாசம் ஆமையைப் பிடித்துவிட்டவன்போல் மினுங்கியது.

*** : மலக்குகள் – இறைத் தூதுவர்கள்.

ஸர்மிளா ஸெய்யத்-இலங்கை

ஸர்மிளா ஸெய்யத்

(Visited 241 times, 1 visits today)
 
ஸர்மிளா ஸெய்யித்

பத்ரகாளி அருட்காப்பு-சிறுகதை-ஸர்மிளா ஸெய்யித்

வீடு முழுக்க மஞ்சள் சோற்றின் வாசம் நிரம்பியிருந்த ஒரு வெள்ளிக் கிழமை நாள் பள்ளிக்குச் சென்ற தங்கை பர்சானா அழுதுகொண்டே வீட்டுக்குத் திரும்பினாள். தலையில் பின்னால் கட்டியிருந்த நாடாக்களை இழுத்து […]