பத்ரகாளி அருட்காப்பு-சிறுகதை-ஸர்மிளா ஸெய்யித்

ஸர்மிளா ஸெய்யித்
பிருந்தாஜினி பிரபாகரன்

வீடு முழுக்க மஞ்சள் சோற்றின் வாசம் நிரம்பியிருந்த ஒரு வெள்ளிக் கிழமை நாள் பள்ளிக்குச் சென்ற தங்கை பர்சானா அழுதுகொண்டே வீட்டுக்குத் திரும்பினாள். தலையில் பின்னால் கட்டியிருந்த நாடாக்களை இழுத்து முகத்தை மூடிக் கொண்டிருந்த வெள்ளைத் திரையை அவிழ்த்து வீசியெறிந்துவிட்டு,

“இனி நான் பள்ளிக்குப் போகமாட்டேன்” என அறிவித்தாள்.

புடைத்துச் சிவந்துபோயிருந்த சின்ன நாகத்தின் முகவடிவ அவளது நெற்றியைப் பார்த்துவிட்டு,

“நெற்றியில் என்ன காயம்” உம்மா விசாரித்தாள். அவள் பதில் சொல்லாமல் அழுது கொண்டிருந்தாள். அவள் பள்ளிக்குப் போகமாட்டேன் என்று அறிவிக்கின்றாள் என்றால் ஏதோ பெரிய சம்பவம் நடந்திருக்க வேண்டும் என்று ஊகிப்பது கஸ்ட்டமில்லை. அவளொரு சுதந்திரப் பறவை. யாருமே அவளைக் கட்டுப்படுத்தி வைக்க முடியாது. பாதியில் படிப்பை விட்டு இடைவிலகி வீடே கதியென்று கிடக்கும் ஊர்ப்பெண்கள் பலரைப்போல் கிடக்கமாட்டேன் என்று பிடிவாதமாகப் படிப்பைத் தொடர்கிறவள் இப்படித் திடீரென ஒரு அறிவிப்பைச் செய்வதென்றால் ஒரு வலிய காரணம் இருக்கவேண்டும்.

“எல்லாம் இந்த சனியன் புடிச்ச முகமூடியால் தான்” அவள் வீசியெறிந்த முகத்திரை கயிற்றில் சாயம்பூசி அலங்கரித்த வண்ண வடிவ டோர்மேட்டில் கிடந்தது. அவள் முகமூடி அணிந்து கொண்டு பள்ளிக்குப்போன முதல் நாள் இன்று. முகத்தை மூடியதும் அப்படியே எல்லாம் இருண்டுபோனாற்போல திடீரெனக் கண்கள் மங்கத் தொடங்கிவிட்டதென்றாள். கொஞ்ச நேரம் நடக்கையில் முகமூடி அணிந்திருப்பது மறந்துபோக பழக்கத்தில் தரையைப் பார்த்துக் கொண்டு நடந்து ரோட்டோரமாக இருந்த காங்ரீட் மின் கம்பத்தில் முட்டியிருக்கிறாள். நெற்றி புடைப்புக்கு இது தான் காரணம். சம்பவம் பெரிதுதான். நெற்றியில் அடிப்பட்ட வருத்தம் அவளுக்கிருப்பதாகத் தெரியவில்லை. அவமான உணர்வே மேலோங்கியிருந்தது.  திடீரென்று முகத்தை மூடிக்கொண்டு தெருவில் இறங்கி நடந்த எத்தனை பேர் இப்படி நெற்றி மூக்குப் புடைக்க வீட்டுக்குத் திரும்பியிருப்பார்களோ.

2001 இல் நான் பள்ளிப் படிப்பை முடிக்கிற வரைக்கும் ஊரில் முகமூடி அணிகின்ற வழக்கம் இருக்கவில்லை. என் உடலில் அந்தக் கறுப்புக் குல்லா ஏறியதுமில்லை.  இப்போது வீட்டைவிட்டுக் கிளம்பிச் செல்லும் பெண்கள் எல்லாரும் இதை மட்டுந்தான் அணியவேண்டும். அபாயா எனப்படும் நீண்ட அங்கிகளால் ஊரின் அடையாளமே மாறியிருப்பது மலைப்பாக இருந்தது. இந்த மாற்றத்தை எப்படி எல்லாருமே சாதாரணமாக எடுத்துக் கொண்டார்கள் என்பது அதிலும் புதிராக இருந்தது.

“இந்த ஊரே நரமாகியிட்டுது” அழாத குறையாக இன்னும் களையாத பள்ளிச் சீருடையில் இருந்தபடியே புலம்பிக் கொண்டிருந்தாள். அவள் உண்மையில் எரிச்சலில் இருந்தாள். அவளது பெரிய உருண்டைக் கண்கள் சகிக்கமுடியாதளவு அங்குமிங்கும் அலைந்தன.

“இதெல்லாம் யார் செய்கிறார்கள்”

இரண்டோ மூன்று தடவைகள் கேட்டுவிட்டேன். பர்சானா அவள் பாட்டில் புலம்பினாளே தவிரப் பதில் தரவில்லை. நான் வெளிநாட்டில் வாழக்கிடைத்ததால் இந்தக் குல்லாவும் முகமூடியும் என்னில் சுமத்தப்படவில்லை என்பதையும் எனக்கிருக்கும் தெரிவுச் சுதந்திரத்தை எண்ணியும் ஆறுதல்படுவதா சொந்தத் தங்கையும் இவள்போல இன்னும் பல பெண்களும் இந்த ஊரில் இப்படி அகப்பட்டுக் கிடப்பதற்காகத் துயரப்படுவதா என்ற குழப்பத்துடன் அவள் சொல்வதை எல்லாம் கேட்டபடியே இருந்தேன்.

“முஹம்மத் நபி வாழ்ந்த மண்ணில் பெண்கள் எல்லாம் இதைத்தான் உடுத்தினாங்களாம். இது எங்கட கலாசாரமாம். பெண்களுக்குப் பாதுகாப்பான கௌரவமான உடுப்பாம். ஒவ்வொரு ஜூம்ஆ மிம்பரிலயும் இதைச் சொல்லி சனங்கள்ட மூளையச் சலவை பண்ணிட்டாங்க. பள்ளி பல்கலைக்கழகம் எல்லா இடத்திலயும் இந்த மாயாவிக் குல்லாதான்”

வெறும் இரண்டு ஆண்டுகள் தான் நான் ஊரில் இல்லை. இவ்வளவு விரைவாக ஊரைப் போர்த்திய இந்த மாற்றங்களால் இந்த ஊர் என்னுடையதைப் போலவே இல்லை. தாவணியைக் கழுத்தில் சுத்தி முக்காட்டோடு நடக்கும் யாரையும் தெருவில் காணமுடியவில்லை. வண்ணமிழந்த தெருக்களின் தார் நிற திரட்சி அச்சத்தின் அசாதாரணத்தின் பிரபதிலிப்பு. வெளியே எங்கேயும் போவதற்குப் பிடிக்கவில்லை. கறுப்புக் குல்லா அணியாமல் தெருவில் இறங்கி நடக்கும்போது ஊரின் மொத்தக் கண்களுமே என்னில் அப்பிக்கொள்வதுபோல உணர்கிறேன். அருவருப்பா, குற்றவுணர்ச்சியா, குறைபாடா – புரியாத உணர்வுகளின் கலவைகள் என்னை வீட்டுக்குள் கட்டிப்போட்டிருந்தன. நண்பர்கள் யாரையும் சந்திக்கவும் பிடிக்கவில்லை.

வாப்பாவின் ஒரே தங்கை – எங்கள் பாசத்துக்குரிய மாமி உடல்நலம் குன்றிப் படுத்த படுக்கையாக இருப்பதாகச் சொல்லப்பட்டதும், உம்மாவுடன் அவரைப் பார்ப்பதற்குப் போனேன். பேரப்பிள்ளைகள் பார்த்துவிட்ட வயதான மனுசி அவரும் இந்தக் கறுப்புக் குல்லாவுக்கு மாறிவிட்டிருந்தது எனக்குப் பேரதிர்ச்சியாக இருந்தது. அவரிடம் இருந்த வண்ணச் சேலைகள் எல்லாம் என்ன செய்திருப்பார் என்றே அங்கிருந்த அவ்வளவு நேரமும் யோசித்துக் கொண்டிருந்தேன். கரையில் மட்டும் கறுப்பு வளையங்கள் பதித்த மஞ்சள் சேலை ஒன்று மாமியிடமிருந்தது. அவரை அந்தச் சேலையில் பார்த்த அந்தச் சந்தர்ப்பத்தை அசைபோட்டபடியே அவர் ஊற்றித் தந்த இஞ்சித் தேநீரை பருகினேன். முன்புபோல மாமியுடன் அதிகம் பேசவில்லை. அதிக நேரம் அங்கே இருக்கவும் இல்லை.

இப்படித் தெருவில் இறங்கி நடந்ததிலும் உறவினர்களைப் பார்த்ததிலும் ஒரு ஆறுதல் இருந்ததென்றால், அது எனது உம்மா அந்த மாயாவி உடைக்கு மாறிவிடவில்லை என்பதுதான். பாவாடைக்கும் மேற்சட்டைக்கும் குறுக்காக தாவணி, துப்பட்டா, புருஷனின் பழைய ஓட்டை விழுந்த சாறன் என்று அகப்பட்ட துணியையெல்லாம் கொழுவித் திரிந்த, நான் பார்த்த பெண்கள் யாருமே இப்போது அப்படியாக இல்லை. ஆனால் உம்மா மட்டும் அப்படியே இருந்தாள். நான் சிறுமியாகப் பார்த்ததுபோலவே சேலை முந்தாணையால் முக்காடுபோடும் உம்மாவில் என்றைக்கும் இல்லாதளவு அனுக்கம் உண்டானது. அவர் அலுமாரியில் இன்னமும் புடவைகள் அதே விதமாக அடுக்கப்பட்டு இருந்தன. எங்களுரைப் பிடித்தாட்டும் சூனியத்தின் நிழல்கூட உம்மாவில் விழுந்ததாகத் தெரியவில்லை.

மாமியின் வீட்டிலிருந்து விடைபெற்றுக் கொண்டு திரும்பி வரும் வழியில் ஆலையடி ரோடிலிருந்து மிச்நகருக்குத் திரும்பும் சந்தியில், ஒரு குல்லா உருவம் முகமூடியுடன் என்னருகே வந்தது.

“ஹே…. என்னைத் தெரியலையா” என்றபடி என்னை நெருங்கியது. அதிர்ந்து ஒரு அடி பின்னால் நகர்ந்துவிட்டேன்.

“முகத்தை மூடிக்கொண்டு என்னைத் தெரியலையா என்றால்….”  எனது குரல் அவ்வளவு எரிச்சலும் அந்நியமுமாக எனக்கே எதிரொலித்தது.

அவள் இலேசாக முகமூடியைத் தூக்கி முகத்தைக் காட்டினாள். உடனே திரையைக் கீழே இறக்கி மூடிக்கொண்டாள். உடலெல்லாம் சில்லென்று குளிரேறி விறைக்கப் பேச்சற்று நின்று கொண்டிருந்தேன். அவள் என் பால்ய சினேகிதி. கிட்டத்தட்டப் பத்தாண்டுகள் ஒன்றாகப் படித்தவர்கள். அவள் நல்ல பேச்சாற்றால் பெற்றவள். பள்ளியிலிருந்து பேச்சுப் போட்டிக்கு கோட்டம், மாவட்டம், மாகாணம் என்று எங்கு செல்வதென்றாலும் அவள்தான். பெண் உரிமை, சுதந்திரம் என்று மேடைகளில் பேசிப்பேசி அவள் வாங்கிக் குவித்த பரிசில்கள், சான்றிதழ்கள், விருதுகளெல்லாம் தடதடவென்று நினைவில் வந்தன. அவளுடன் பிடி கொடுத்துப் பேசக்கூட முடியவில்லை. என்னை மீறிக் கண்கள் கலங்கின. இப்போது இந்தக் குல்லாதான் அவள் உரிமை. அவளது கௌரவம். எனக்கு அந்த இடத்தில் நிற்கவே பிடிக்கவில்லை. அவள் என்னிடம் என்ன பேசினாள் என்பதும் நினைவில்லை.

“இதெல்லாம் யார் செய்கிறார்கள்?”

அன்று இரவுணவை வாப்பாவுடன் உண்பதற்காக மேசையில் போயிருந்தேன். ஊரில் நடந்து கொண்டிருக்கும் மர்மமான மாற்றங்களால் கடுமையான குழப்பத்திலும் சிந்தனையிலும் சோர்ந்துபோயிருந்த என்னை வாப்பா கவனித்ததாகக் கூடத் தெரியவில்லை.

மிகவும் அமைதியாக ரொட்டித் துண்டுகளைப் பிய்த்து தின்று கொண்டிருந்தார். இவரும் மாறிவிட்டாரா என்ன? அப்படியென்னதான் ஆழ்ந்த யோசனையோ? சிந்தனைவயப்பட்டுத்தான் இருக்கிறாரா? அல்லது தவிர்க்கிறாரா?  சினிமாவும் இசையும் இல்லாமல் இவரால் ஒரு நாள் கூடத் தூங்கி எழ முடியாதே! சினிமாவும் இசையும் தடுக்கப்பட்ட இந்த ஊரில் இவரால் சுவாசிக்க முடிகிறதா? வீட்டில் எந்நேரமும் இசைத்தபடி இருக்கும் ரேடியோவும் இசைதட்டும் இருந்த இடத்திலேயே இல்லை என்பதை அப்போதுதான் கவனித்தேன். சாப்பிடுவதற்கு மேசையில் உட்கார்ந்தால் எவ்வளவு பேசுகிற மனுஷன். வாப்பா வரட்டும் என்று நானும், மகள் வரட்டும் என்று வாப்பாவும் சாப்பாட்டு மேசையில் காத்திருந்த நாட்கள் தொட்டாச்சிணுங்கிப் பூவைக் காற்றில் ஊதிவிட்டாற்போல பறந்து மறைந்து விட்டதா?  ஒரு நாள் கதையை ஒரு இரவு போஷனத்திலேயே கதைத்து முடிக்கும் நீட்சியான உணவுப் பரிமாற்றத்தை எங்கள் வீட்டில் இனிக் காண முடியாதென்ற ஏமாற்றம் அவ்வளவு வருத்தியது. எல்லாரும் கேலியும் நக்கலுமாகச் சிரிக்க வாப்பா ஒருவர் மட்டும், என் கர்ணகடூரமான குரலை ”நீ பாடு மகள்” என்று அவ்வளவு தைரியமாகச் சொல்லிப் பாடவைத்து ரசிப்பார். அந்த வாப்பாவை இனிப் பார்க்க முடியாது என்ற எண்ணம் அவமானமாகவும் பரிதாபமாகவும் மாறித் தொண்டைக் குழியை இறுக்கியது. ரொட்டித் துண்டுகள் இறங்கவில்லை.

“இதோ எந்தன் தெய்வம் முன்னாலே

நான் ஒரே ஒரு புன்னகையில் கண்டேனே

பாசமுள்ள பார்வையிலே கடவுள் வாழ்கிறான் – அவன்

கருணையுள்ள நெஞ்சினிலே கோயில் கொள்கிறான்

எம்.எஸ்.வியின் இசையில்  டி.எம்.சௌந்தரராஜன் பாடிய இந்தப் பாட்டு ஐந்தாறு வயதிலேயே மனப்பாடம். இனி இதையெல்லாம் பாடச் சொல்லி கேட்பதற்கு இந்த வீட்டில் யாருமில்லை. எல்லா வயதுப் பிள்ளைகளும் குர்ஆனும் கையுமாக மதரசாவுக்குப் போகிறார்கள். பால் குடியை மாற்றினால் அடுத்தது மதரசாதான். கஸீதாக்கள் மட்டும் தான் பிள்ளைகளுக்கு மனப்பாடம். என் பிள்ளை ஹாபிழ், ஹாபிஸ் என்று சொல்வதில் எங்க ஊர் உம்மா வாப்பாக்களுக்கு இருக்கும் பெருமை வேறெதிலும் இல்லை.

என் இளம்பராயத்தில், குறும்புத்தனமாக துருதுருவென்று இருக்கும் பிள்ளைகளை பக்கீர் பாவாவிடமோ மௌலானாவிடமோ கூட்டிச் சென்று அச்சரக்கூடு கட்டிவிடுவார்கள்.

“இரு உனக்கும் ஒரு காப்பு போடுறேன்”

எச்சரித்ததோடு நில்லாமல் மம்மூக்காசிம் பாவாவிடம் என்னை அழைத்துப் போயிருக்கிறாள், உம்மா. இப்படி ஒரு முறையோ இரண்டு முறையோ அல்ல. கணக்கற்ற முறைகள். ஒவ்வொரு முறையும் அச்சரக்கூடு எங்காவது அவிழ்ந்து விழுந்துவிடும். அல்லது அச்சரக்கூடு போட்ட பிறகுதான் இவள் சேட்டை இன்னும் அதிகம் என்று யாராவது முறைப்பாடு செய்ய உம்மாவே கழற்றி வீசுவது நடக்கும். அரபு எழுத்துக்கள் பதித்த செப்புத் தகட்டை வெள்ளி அச்சரக்கூட்டுக்குள் சுருட்டிச் செருகி மூடிவிடுவார், பாவா. அந்த அச்சரக்கூட்டை கறுப்பு நாடாவில் கோர்த்து இடுப்பிலோ, கழுத்திலோ கட்டிவிடச் சொல்வார். இந்தக் காப்பு இருந்தால் ஷைத்தான்களின் வழிகேட்டிற்கு ஆளாகாமல் சொற்படி பணிவடக்கமாக நடப்பேன் என்று ஒவ்வொரு முறையும் திண்ணமாக உம்மா நம்புவதும், ஏமாறுவதுமே வழக்கம்.

ஒவ்வொரு முறையும் பாவாவிடம் போகையில் உற்சாகமாகப் போவேன்.  கன்னத்துக் குழி உள்ளே போய் வர அவர் வாயிலிருந்து உஷ் பிஷ் குஷ் என்று காற்றாய் வரும் பொருள் விளங்காத அரபுச் சொற்களில் எதை எதையோ ஓதுவார். சுருமா தீட்டிய கூர்மையான அவரது கண்களில் கருணை நிரம்பித் ததும்பும். தொளதொளக்கும் வெள்ளை ஜூப்பாவும் தலைப்பாகையும் அணிந்து மந்திரவாதியாகத் தெரியும் அவர் முன்னால், கண்களை மூடிச் சம்மணமிட்டுப் பவ்யமாக அமர்ந்திருக்கும் என் தலையில் மயிலிறகு விசிறியொன்றை வைத்து அவர் நிகழ்த்தும் மாயாஜாலம் விசித்திரமான உணர்வுகளைக் கிளர்த்தும். நீரில் மிதந்து எங்கோ வேற்றுக் கிரகத்திற்கு வந்துவிட்டாற்போல. ஊதுபத்தி வாசனையும், சாம்பிராணி புகையும் அவரது சிறிய அறையை நிறைத்துக் கொண்டிருக்கும் ஸ்தூலமான அந்தக் காட்சிக்காகவே அங்கு எத்தனை முறை வேணுமென்றாலும் போய் வரலாம். அவர் அறையின் சுவர்களில் அரபு எழுத்துக்களும் பிறையும், நட்சத்திரங்களும், எண்ணற்ற அடையாளம் காண முடியாத உருவங்களும் பொதித்துத் தொங்கும் பச்சைச் சீலைகளைக் கண்காட்சிக்குச் சென்ற சிறுமியைப் போல பார்த்துக் கொண்டிருந்திருந்துவிட்டு எதுவுமே நடவாததுபோல் உம்மாவின் பின்னால் வருவேன். பாவாவின் அறையிலிருந்து வெளியேறியதும் கனவுலகிலிருந்து தரையில் இறங்கினாற்போல உடல் சில்லென்று குளிர்ந்திருக்கும். அந்த உணர்வின் மர்மத்தைக் கண்டறிவதற்குப் போலவே நான் ஒவ்வொரு முறையும் சென்றாலும் விசித்திரமாக உறங்கி எழுந்தாற்போல வெளியேறி வருவேன்.

நோய் நொடி பீடித்தவர்களும், தீராத நாட்பட்ட பிரச்சினைகளுடன் அவதியுறும் மக்களும் பாவாவின் தரிசனத்திற்காக வாசலில் குமிந்து காத்திருப்பார்கள். இவர்களுக்கு அவரவரது பிரச்சினைகளின் தன்மைக்கு ஏற்ப அச்சரக்கூடு, காப்புத் தகடு, மந்திர நூல் என்று மாற்றி மாற்றித் தருவார், பாவா. சிலருக்கு, விரல் படாமல் கிணற்றிலிருந்து அள்ளிய குளிர்ந்த நீரைச் வெள்ளிச் செம்பில் வைத்துக் கொண்டு அரபு வசனங்களை ஓதி ஊதிய தண்ணீரைத் தந்து மூன்று மிடர்கள் குடித்த பிறகு முகம், கால்களைக் கழுவச் சொல்வார். ஓதி ஊதிய தண்ணீரை முகத்தில் பிசிறி அடித்து ஷைத்தானை விரட்டும் வீரதீரச் செயல்களையும் அவ்வப்போது பாவா நிகழ்த்துவார்.

இப்போது பாவாக்களிடம் யாரும் செல்வதில்லை. மூடர்களாக்கப்பட்டு பாவாக்கள் என்ற சமூகத்தையே இல்லாதொழித்துவிட்டார்கள்.

அச்சிரக்கூடு, காப்பு, நூல் கட்டுவதெல்லாம் ஷிர்க் என்று சொல்லிப் பிரச்சாரம் செய்தவர்கள், இறந்தவர்களை நினைந்து கபூரடிகளுக்குப் போவது, இறந்தவர்களின் ஆத்ம சாந்திக்காக கத்தம் ஓதுவது பள்ளிகளில் நார்சா கந்தூரி தருவது, பராஅத் ரொட்டி பங்கீடுவது என்று எல்லா ஆத்ம விசாரங்களுக்கும் முற்றுப்புள்ளிவைத்துவிட்டார்கள்.

“இதெல்லாம் யார் செய்கிறார்கள்?”

மீண்டும் மீண்டும் இந்தக் கேள்விதான் முன்னால் வந்து நிற்கிறது.

பள்ளிகளில் கந்தூரி ஓதித்  தரும் நார்சா சோற்றின் வாசனை மூக்குத் துவாரங்கள் வழியாக உடலின் நாடி நரம்புகள் எங்கும் பரவி நிரம்புகிறது. வீட்டில் என்னதான்  குடம் குடமாக நெய் சேர்த்துத் தாழித்து மஞ்சள் சோறு ஆக்கினாலும் நார்சா சோற்றின் சுவைக்கும் மணத்திற்கும் என்றைக்கும் ஈடானதில்லை.

ரபிய்யுல் அவ்வல், ரபிய்யுல் ஆகிர் மாதங்களில் வீட்டுக்கு வீடு திண்ணைகளில் பதினொரு நாள் மவ்லீத் ஓதுவார்கள். ஊதுபத்தி, சாம்பிராணி வாசனை தெருக்களை அள்ளும். “யா நபி சலாம் அலைக்கும்“ அரபு பக்தி பா மாலைகள் எல்லாத் திசைகளிலும் நிரம்பியிருக்கும். ஒவ்வொரு பள்ளியிலும் ஒலிபெருக்கியில் சீரான குரலில் கூட்டமாகச் சேர்ந்து சுபஹான மவ்லீத் ஒலிக்க ஊரே விழாக்கோலத்தில் இருக்கும். பெண்களும், ஆண்களும், பிள்ளைகளும் காகித சுருள்களிலும் வாழை இலை, தென்னோலைக் கிடுகுகளிலும் தரும் நார்சாச் சோற்றுக்காக படையெடுத்துப் போவார்கள்.

எங்களூரின் காட்டுப் பள்ளியில் நார்சாவுக்கு  வரிசையில் நிற்பவர்களுடன் சேர்ந்து நானும் நிற்கையில், யாரோ ஒருவர் வந்து சொல்கிறார்.

“இன்டைக்கு உங்க வாப்பாட நார்சாதான். ஒரு வாளிச்  சோறு ஊட்டுக்கு அனுப்பியிருக்கு”.

பள்ளிகளில் நார்சா ஆக்குவதற்கு ஊரில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் முடிந்த பங்களிப்புச் செய்வார்கள். செய்யாவிட்டாலும் குற்றமில்லை. எல்லாருக்கும் நார்சா கிடைக்கும். ஊர் முழுவதும் பணமாகவும் பொருளாகவும் வசூலித்த பணத்தில் தான் நார்சா ஆக்குவார்கள்.  குறிப்பாக வியாபாரிகள், தனவந்தவர்கள் பெரிய அளவில் நன்கொடை அளிப்பார்கள். விவசாயிகள் தானியங்கள் தருவார்கள். பண்ணையாளர்கள் இறைச்சி தருவார்கள். சந்தை வியாபாரிகள் கூட்டாக இணைந்தும் தனியாகவும் காய்கறிகள் தருவர்கள். நார்சா வாங்குவதற்குச் செல்கிறவர்களில் பெரும்பாலானவர்கள் பள்ளி உண்டியலில் பணத்தை சில்லறையாகவோ தாளாகவோ போடுவார்கள். உண்டியலில் சேரும் பணத்தை பள்ளியின் வளர்ச்சிக்கும் நிர்வாக வேலைகளுக்கும் எடுத்துக் கொள்வது நடக்கும்.  வாப்பா ஒவ்வொரு ஆண்டும் கந்தூரிகளுக்குப் பெரிய அளவில் நிதியளிப்பார். இதனால் பள்ளிவாசலிலிருந்து நேராக வீட்டுக்கு நார்சா சோறு வாளி நிரம்ப வந்துவிடும். வரிசையில் நின்று காகிதச் சுருளில் வாங்கிய  நார்சாவை ருசிக்கும் அனுபவம் தரும் குதூகலமும் அலாதியும் வீட்டில் தின்கிற நார்சாவில் கிடைக்காது! வடைப் பருப்பு, ஏலம், கருவா, பிளம்ஸ், வெங்காயம், பச்சை மிளகாய்  அனைத்தையும் நெய்யில் தாழித்து தேங்காய்ப்பால் கலந்த நீரில் அரிசியை அவிய விட்டுப் பதமாக இறக்கியெடுக்கும் மஞ்சள் நிற நார்சா சோற்றின் சுவைக்கு ஈடான சோறு எங்கேயும் இல்லை.

தண்ணீர் சேர்க்காமல் இறுகக் காய்ச்சிய எருமைப் பாலில் உறைந்த கட்டித் தயிரை நார்சாச் சோற்றோடு அளவாகச் சீனியும் சேர்த்துக் குழைத்துச் சாப்பிடுகின்ற சுவைக்கு ஈடான ஒரு உணவு தரணியில் இருக்கவே முடியாதென்று அடித்துச் சொல்லலாம். சோற்றை அள்ளித் தின்ட கையிலிருக்கும் மணத்திலேயே தனி இன்பம். உள்ளங்கையை மூக்கின் அருகே கொண்டு சென்று மூச்சை உள்ளே இழுக்கும்போது கண்கள் தானாக மயங்கி மூடிக் கொள்ளும்.

நார்சா சோறும் அதன் மணமும் சுவையும் அந்தக் காலத்தின் குதூகலமும் மீண்டும் எங்கள் ஊர்களின் காற்றை நிறைக்காதா? பள்ளிகளில் அந்த மௌலிதுகள் இனிக் கேட்காதா? திருவிழாப்போல எங்கள் தெருக்களில் நாங்கள் ஓடித்திரிவது இனி நடக்காதா?

வலது உள்ளங்கையை மூக்கின் அருகே கொண்டு சென்று மூச்சை இழுத்ததும் இரவுணவாகத் தின்ற கோதுமை ரொட்டியும் கும்புலா மீன் குழம்பு வாசமும் நாசியை நிறைத்தது.

வாசலில் இருந்த பிலிங்காய் மரத்தில் வாப்பாவின் பழைய சைக்கிள் சாத்தியிருந்தது. அந்த சைக்கிள் இன்னும் உபயோகப்படும் நிலையில் இருப்பது வியப்பாக இருந்தது. நான் காலால் எட்டி உதைத்து உடைந்த அதே சைக்கிள்.

0000000000000000000000000000000000000

நான் ஏழாம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்தபோது அது நிகழ்ந்தது. எங்கள் பள்ளியில் முதன் முதலாக ஒரு கல்விச் சுறு்றுலா. மூன்று நாட்கள் சுற்றுலாவில் சீகிரியா, தம்புள்ளை, கண்டி, நுவரெலியா என்று அப்போது வரலாற்றுப் பாடப்புத்தகங்களில் மட்டும் படித்தறிந்த நகரங்களுக்கு எங்களை அழைத்துச் செல்லப்போகும் பாடசாலையின் அந்த முடிவைக் கேட்டதிலிருந்து ஒரே ஆரவாரம்.  எல்லாப் பிள்ளைகளையும் போலத் துள்ளிக் குதித்துக் கொண்டு சுற்றுலா செல்ல விரும்பும் பிள்ளைகளின் பெயர்களை எழுதிக் கொண்டிருந்த ஹிஜாஸ் ஆசிரியரிடம் சொல்லி என் பெயரையும் குறித்துக் கொண்டேன்.

சுற்றுலா செல்வதற்குப் பணம் கேட்டபோது வழக்கம்போல உம்மா அனுமதியளித்தால் தான் தருவேன் என்று சொல்லிவிட்டார், வாப்பா. பெண் பிள்ளைகளின் விசயத்தில் முடிவெடுக்கும் உரிமை உம்மாவுக்கு என்று எழுதப்படாத ஒரு சட்டத்தை இயற்றியிருந்தார். இது உம்மாவைக் கௌரவப்படுத்துதற்கான சட்டமெல்லாம் இல்லை. தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்காக அவர் இயற்றிக் கொண்ட சட்டம். விபரீதமாக எது நடந்தாலும் உம்மாவின் தலையை உருட்டுவதற்கு வாய்ப்பான வில்லங்கமான இந்தச் சட்டம் புரியாமல் சபாநாயகர் கணக்காக உம்மா அறிவிக்கும் முடிவுகளை நான் கொஞ்சமும் விரும்பவில்லை. கடுமையாக எதிர்த்தேன். விபரீதம் நடந்தால் தானே பொறுப்பாளியாக வேண்டிவரும் என்ற அச்சத்தில் உம்மா பெரும்பாலும் எனக்கு எதிர்மறையான முடிவுகளை மட்டுமே வெளியிடுவார். அன்றும் கல்விச் சுற்றுலா போவதற்குத் தடை விதித்தார்.

மூன்றாவது நாளாகவும் வீட்டில் சண்டை. வாப்பா, அன்று ஒரு தொகைப் பணத்தை வைத்து எண்ணிக் கொண்டிருந்தார். நூறு, ஐநூறு, ஆயிரம் தாள்களாக வகைப் பிரித்துக் கட்டுகளாக்கி ஒவ்வொரு கட்டுக்கும் ரப்பர் பேண்டுகளை இழுத்துப் போட்டுக் கொண்டிருந்தார். கல்விச் சுற்றுலா செல்வதற்கான பணத்தைத் தரும்படி அங்கேயே நின்று அழுதபடியிருந்தேன்.

“உம்மா சொல்லட்டும் தருகிறேன்” இப்படியே திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தார்.

அன்று கடும் மழை நாள். வாப்பாவின் சைக்கிள் நனைந்து விடக்கூடாதென்று வீட்டு நடுத்திண்ணையில் மிடில் ஸ்டான்ட் போட்டு நிறுத்திவைத்திருந்தார்கள். கோபத்துடன் சைக்கிளை எட்டி உதைத்தேன். அது ஒரு பெரும் அனர்த்தம் அளவுக்கு வீட்டையே கலவரப்படுத்தியது. உதையை வாங்கிக்கொண்ட சைக்கிள் அது மட்டும் விழாமல் அழகான கவர்ச்சியான பளிங்குப் பாத்திரங்களும் விலையுயர்ந்த நினைவுச் சின்னங்களும் அடுக்கியிருந்த கண்ணாடி அலுமாரியில் விழுந்தது. அலுமாரியின் கண்ணாடி கலகலவென்று நொறுங்கிக் கொட்டுண்டது. மிகவும் நேர்த்தியாக புழுதி இல்லாமல் அடிக்கடி துடைத்துத் திரும்பத் திரும்ப அடுக்கி உம்மா பாதுகாத்து வந்த பெறுமதியான ஷெரமிக் சீனப் பீங்கான்களும் பொருள்களும் உடைந்து நொறுங்கின.

குசினிக்குள்ளிருந்து கையில் கிடைத்த ஒரு தடியை, தும்புக்கட்டையின் தடியாக இருக்கவேண்டும், எடுத்துக் கொண்டு உம்மா என்னை அடிக்க வந்தபோது கொஞ்சம்கூட அசராமல் வீம்பாக அங்கேயே நின்றிருந்தேன். உடைந்து நொறுங்கிக் கிடக்கும் இந்தக் கண்ணாடியைப்போல பாத்திரங்களைப் போல என்னையும் அடித்து நொறுங்கிப் போக வைக்கட்டும் என்பதாகச் சொல்லாமல் நின்றேன். சைக்கிளின் பெல் உடைந்து டிங் என்ற சத்தத்துடன் உருண்டு போய் திண்ணையின் மூலையில் கிடந்தது. வாப்பா விழுந்துகிடந்த சைக்கிளை நிமிர்த்தி திரும்பவும் ஸ்டான்டைப் போட்டு நிறுத்திவிட்டு என்னைப் பார்த்தார். கல்விச் சுற்றுலா போவதற்காக நான் கேட்ட மூவாயிரம் ரூபாய் பணத்தை விடவும் அதிக நஸ்ட்டம் ஏற்பட்டிருந்தது.

எனது நீண்ட அடர்ந்த தலைமுடியைப் பிடித்து உம்மா இழுத்தபோது தடுத்த வாப்பா, அன்று ராஜதந்திரமாக ஒரு காரியம் செய்தார். தனது கோபத்தை எல்லாம் அப்படியே உம்மா மீது திருப்பிவிட்டார். என்னை அடக்க ஒடுக்கமாக வளர்க்கவில்லை என்றார். என்னைத் திருத்தவே முடியாது என்பதற்கு ஐந்தில் வளையாதது ஐம்பதிலா வளையப் போகிறது என்ற சொலவடையைத் துணைக்கு அழைத்தார்.

“ஒரு பத்ரகாளியை வீட்டில் வைத்திருக்கிறோம்” ஆவேசமாக இப்படிக் கத்தினார்.

இந்த சந்தர்ப்பத்திற்கு முன்பும் நான் பிடிவாதம் பிடித்து அழும்போது கோபத்தில் கையில் கிடைத்ததை வீசியடித்தோ, எட்டி உதைத்தோ ஆங்காரம் காட்டும்போது ”பத்ரகாளி” என்று வாப்பா என்னைச் சொல்வது வழக்கம்.

வாப்பாவின் நண்பரும் எங்கள் குடும்பத்தோடு மிகவும் நெருக்கமாக இருந்தவருமான சின்னராசா மாமா ஒரு முறை வீட்டுக்கு வந்தபோது நான் கோபத்தில் இருந்தேன். நான் பிறந்தது முதல் என்னை தூக்கிக் கொஞ்சி அறிந்த அவர் அன்று நான் கோபத்தில் இருப்பதைக் கண்டுகொள்ளச் சிரமப்படவோ, நேரமெடுக்கவோ இல்லை. என் கன்னங்கள் சிவந்து முகம் களையிழந்து கிடப்பது ஏன் என்று என்னைப் பார்த்துக் கொண்டே வாப்பாவைக் கேட்டார்.

“பத்ரிகாளி, என்ன செய்தாலும் அடங்கமாட்டாமல் அடம்பிடிப்பதுதான் வேலை. தான் நினைக்கிற காரியமெல்லாம் நடக்கணும் அதுக்கு” என்றார் வாப்பா.

நண்பிகளோடு சேர்ந்து  உம்மம்மாவின் முந்திரித் தோப்பில் கூட்டாஞ்சோறு ஆக்குவதற்குப் பணம் கேட்டதில் தான் பிரச்சினை. கூட்டாஞ்சோறு ஆக்குவதற்குப் பணம் தேவையில்லை. ஒவ்வொருவரும் அரிசி, தேங்காய் என்று கிடைத்ததைக் கொண்டுவந்து கூடிச் சேர்ந்து ஆக்கித் தின்பதுதான் திட்டம். ஆனால், உம்மா வீட்டிலிருந்து எதையும் எடுக்கக்கூடாது என்று கறாராகச் சொல்லிவிட நூறு ரூபாய் காசுக்கு சண்டை பிடித்தேன். நான் அடங்காப்பிடாரியாகத் திரிகிறேன், தாய் தகப்பன் பேச்சைக் கேட்பதில்லை என்று அயலவர்கள் அடிக்கடி சொல்வதாலும் என் சொந்த சாச்சிமார் உம்மாவுக்கு ஊசிபோடுவதுபோல எதையாவது சொல்லிவிடுவதாலும் நான் என்ன செய்தாலும் கேட்டாலும் உம்மா மறுப்பதிலேயே கவனமாக இருந்தார்.

சின்னராசா மாமா நாற்காலியை விட்டு எழுந்து என் அருகில் வந்தார். கன்னங்களைத் தொட்டுச் சிரித்துக் கொண்டே சொன்னார்.

“காளி அம்மன் தான் என்ட குலதெய்வம்டா கண்ணு. நீ நல்லாக் கோபப்படு. காளி நியாயத்திற்காக சீற்றம் கொள்கிற கடவுள், பெண் கடவுள். அவள் அழகானவள். பாச உணர்வு நிரம்பியவள். சீற்றம் அவளின் ஒரு அவதாரம் மட்டுந்தான்”

சொன்னதோடு இருநூறு ரூபாய்க் காசையும் தந்தார். ”போடா செல்லம்…. கூட்டாஞ்சோறென்ன… படையலே வை” என்றார். காசை வாங்குவதற்குத் தயங்கி வாப்பாவைப் பார்த்தேன்.

“அங்கென்ன பார்வை! இது என்ட தெய்வத்திற்கு நான் தரும் காணிக்கை”

காசை வாங்கிக் கொண்டு வாப்பாவைப் பார்த்துக் கொடுப்புக்குள் சிரித்தேன்.

கந்தசாமி மாமாவின் வீட்டில்தான் முதல் முதலாக பத்ரகாளி அம்மனின் உருவப்படத்தைப் பார்த்தேன். சவூதி அரேபியாவில் பணிப்பெண்ணாக வேலை செய்துவிட்டு நாடு திரும்பியிருந்த கந்தசாமி மாமாவின் மனைவியைக் காணத்தான் அன்று அவர்கள் வீட்டுக்குச் சென்றிருந்தோம். முஸ்லிம் பெண்ணென்ற போலி அடையாளத்துடன் சவூதி சென்றுவந்த அவர் அங்கு எடுத்துக் கொண்ட ஒளிப்பட ஆல்பங்களைக் காட்டினார். இன்று எங்கள் ஊர்ப் பெண்கள் போர்த்திக் கொண்டு திரியும் உடையில் நான் முதன் முதலில் பார்த்த பெண் சித்ரா மாமி தான்.

அவர்கள் வீட்டுச் சுவரில் மாட்டியிருந்த ஒரு காலண்டரில் இலைத்தோடுகள் அணிந்து தெய்வீகத் தோற்றத்தில் இருந்த காளியை இமைக்காமல் பார்த்துக் கொண்டிருப்பதை அவர் கவனித்ததும் ”காளி தான் எங்கள் தெய்வம்.  மக்களைப் பாதுகாக்கும் சக்தி” என்றார் சித்ரா மாமி. தானொரு பத்ரகாளியின் தீவிர பக்தை என்பதில் பரவசப்பட்டார்.

பத்ரகாளி அம்மன் தேவஸ்தானங்களுக்குப் போனதில்லை. திருக்கும்பம் வைத்ததோ, தீ மிதித்தோ பழக்கமில்லை.  பத்ரகாளியின் பக்தை இல்லையென்றாலும், அவள் பெயரை உவமித்து வாப்பா ஏசுவது என்னை எரிச்சல்படுத்தவில்லை.  எனக்கு வைத்த பெயரையே மறந்துவிட்டாற்போல பின்னாற்களில் செல்லமாகவும் பத்ரகாளி என்றே கூப்பிட்டார், வாப்பா. கோபமூட்டுவதற்காக வேறு யார் என்னை அப்படிச் சொன்னபோதும்கூட நான் கோபப்படவில்லை. சுடர் விட்டு பரவும் ஜூவாலை, மண்டை ஓடு, கிரீடம், உடுக்கை, கபாலம், சூலம் என்று பத்துக் கைகளையும் விரித்து நிற்கும் காளியின் அவதார பட்டப்பெயரை அப்படியே ஏற்றுக் கொண்டேன்.

00000000000000000000000000000000000

எனது இரண்டாவது தங்கை அவளது ஒரே சின்ன மகனை பிரம்பால் அடித்து விரட்டிக் கொண்டிருந்தாள். அவன் திமிறிக் கொண்டு பேய்க்கூச்சலுடன் ஓடிவந்து என்னை அணைத்துப் பிடித்தான். பிரம்புடன் கையை ஓங்கிக் கொண்டு வந்த அவள் என்னைப் பார்த்ததும் சுதாகரித்து நின்றாள்.

“பிள்ளையை அடிப்பது மூளை காய்ந்தவர்களின் வேலை” அவள் என்ன எண்ணுவாள் எப்படி எதிர்வினை செய்வாள் என்பது பற்றி எதுவும் யோசிக்காமல் ஆத்திரமாக இப்படிச் சொன்னேன்.

“அவன் சொல்பேச்சு கேட்கிறானில்லை. என்ன சொன்னாலும் எதிர்த்துப் பேசுகிறான்” என்றாள்.

“சுயமாகச் சிந்திக்கத் தெரிந்த பிள்ளைகளால் சொல்வதை எல்லாம் அப்படியே கேட்டுக்கொள்ள முடியுமா? நீங்கள் பிள்ளைகளைச் சுயமாகச் சிந்திக்க விட்டால்தானே. எதிர்த்துப் பேசுவதில் என்ன தவறு? எதிர்த்தல் மனிதவாழ்வின் மிகப்பெரிய மாண்பு”

இப்படி நான் நிகழ்த்திய மதியுரையில் அவள் எந்த அக்கறையும் காண்பிக்கவில்லை. ஊரில் உள்ள எல்லாரையும்போல ஷாலிஹான பொம்மையாகக் குழந்தையை வளர்த்தெடுக்கவே அவளும் பாடுபடுகிறாள். அவள் தலைக்குள் புகுந்து எண்ணம் பொருள் எல்லாவற்றிலும் செல்வாக்குச் செலுத்தும் மதம் பிள்ளையைத் தண்டித்து வளர்க்கச் சொல்கிறது. அடித்து தொழுகைக்கு தயார்படுத்தச் சொல்கிறது.

என் பிடியிலிருந்தவனை இழுத்துக் கொண்டு சென்றவளின் கையிலிருந்த பிரம்பைப் பறித்தெடுத்தேன். இன்று அவனைக் காப்பாற்றி விட்டேன். நாளை? அதன் பிறகு?

நான் மீண்டும் சோர்வடைந்தேன்.

மண் தோண்டி, களிமண் பொம்மைகள் செய்து, பாக்குப் பாளையில் வண்டி இழுத்து, தென்னோலையில் ஊஞ்சலாடி, கிரவல் அரைத்துப் பணியாரம் சுட்டு, கூட்டாஞ்சோறாக்கி இந்த விளையாட்டுக்கள் எதுவுமே என் சகோதரிகளின் பிள்ளைகளுக்கு மட்டுமில்லை எங்கள் ஊர்ப் பிள்ளைகள் யாருக்குமே இப்போது தெரியாது.

சாச்சியின் வீட்டுக்குப் போனபோது, தனது பேத்திகளைக் கூப்பிட்டு எனக்கு கஸீதாக்கள் சொல்லிக் காண்பிக்கச் சொன்னாள். கலீமாக்களையும், பாத்திஹாக்களையும், ஹதீஸ்களையும் அவர்கள் அர்த்த சுத்தம் தெரியாமல் மனப்பாடம் பண்ணி ஒப்புவிப்பதை ரசிக்க முடியவில்லை. எந்த வீட்டுக்குப் போனாலும் இப்படித்தான். பால் மணம் மாறுவதற்குள் பர்தாவைப் போட்டு மூடி மதரசாவில் கொண்டுபோய் தள்ளிவிட்டால் தான் புண்ணியம். அத்தனைப் பெண் பிள்ளைகளையும் பாத்திமாக்களாகவும், ஹதீஜா, ஆயிஷாக்களாகவும் ஸாலிஹாக வளர்த்து மறுமை வாழ்வுக்கு தயாராகும் வியாதி ஊரைப் பீடித்திருந்தது.

நான் மீண்டும் மீண்டும் சோர்வடைந்தேன்.

சனி, ஞாயிறு இரண்டு நாட்கள் எப்படியோ கஸ்ட்டப்பட்டும் சங்கடப்பட்டும் ஊரில் தங்கிவிட்டுத் திங்கள் அதிகாலை கொழும்பு புறப்படுவதற்காகத் தயாராகிக் கொண்டிருந்தேன். தங்கை பர்சானா படுக்கையில் உருண்டு புரண்டு கொண்டிருந்தாள். பள்ளிக்குப் போகத் தயாராகாமல் படுத்துக் கிடந்த அவளை உம்மா இரண்டு மூன்று முறைகள் கூப்பிட்டும் அவள் காதில் வாங்கியதாகத் தெரியவில்லை.

“உம்மா கூப்பிடுவது கேட்கலை”

அவள் அருகாகச் சென்று மெதுவாகச் சொன்னேன்.

“நான் பள்ளிக்குப் போகலை… அந்த முகமூடியைப் போட்டுப் போக ஏலா” குப்புறப்படுத்துக் கொண்டே பதில் சொன்னாள்.

“முதலில் நீ எழும்பி ரெடியாகு”

என் குரலுக்கிருந்த வலிமை முழுவதையும் சேர்த்துக் கத்தினேன். அவள் பயந்து சுருட்டிக் கொண்டு எழும்பினாள். நான் ஏன் அப்படிக் கத்தினேன்? இரண்டு நாட்களாக எனக்குள்ளிருந்த ஆற்றாமை முழுவதும் ஒரு கொதிநீர் பீப்பாய் வெடித்தாற்போலச் சீறிப் பாய்ந்தது.

“நீ முகத்தை மூடத்தேவையில்ல. முகம் உன்ட அடையாளம். அதை நீ யாருக்கும் விட்டுத்தர வேணாம். ரெடியாகு. நானும் வருகிறேன். நீ படிக்கிறது பள்ளிக் கூடத்தில். முல்லாக்களின் மதரசாவில் இல்லை. பள்ளி அதிபரைக் கேட்கிறேன், நீ வா. என்ன நடவடிக்கை எடுக்கணுமோ எடுப்போம்.”

“பத்ரகாளி வந்துட்டாள்” எல்லாப் பற்களும் வெளித்தெரிய சிரித்துக் கொண்டு வாப்பா அறையிலிருந்து வெளிப்பட்டார். சட்டையின் பொத்தான்களைப் போட்டபடி இயல்பாக வந்த அவரைப் பார்த்த அந்த ஒரு நொடி ஒரு கோடிப் பறவைகள் என் இதயத்தின் கிளைகளிலிருந்து சிறகுயர்த்திப் பறந்தன. கோபமாகவும் செல்லமாகவும் என்னை இப்படிக் கூப்பிட்டதை வாப்பா மறந்துவிட்டார், அதொரு கனாக் காலம் என்றெண்ணி மருவிய மனப் புழுக்கமெல்லாம் அப்படியே காணாமல்போயின. எனக்குள் பிறந்த உற்சாகத்திற்கும் சக்திக்கும் அளவேயில்லை.

தலையை மூடாமல் தெருவில் இறங்கி தைரியமாக நடந்த என்னுடன் சிறகுபோலக் காற்றில் விரிந்தாடும் வெள்ளைப் பர்தாவில் முகத்தை மூடாமல் பள்ளி நோக்கி நடந்தாள் என் தங்கை.

சொற்கள் பற்றிய விளக்கம் :

ஹராம் – தடுக்கப்பட்டது

ஜூம்ஆ– வெள்ளிக்கிழமை தொழுகை

மிம்பர் – பள்ளிவாசலில் இருக்கும் மேடை

மதரசா – கல்விக்கூடம் (குர்ஆனைக் கற்பிக்கும் இடம்)

கஸீதா –  அரபுப் பாடல்

ஹாபிழ் – சரியான உச்சரிப்புகளுடன் முழுக் குர்ஆனையும் ஓதுகிறவர்

ஹாபிஸ் – முழுக் குர்ஆனையும் மனனம் செய்தவர்

ஷிர்க் – அல்லாஹ்வுக்கு நிகராக வேறொன்றை இணையாக்குதல்

கபுரடி – அடக்கஸ்தளம்

கத்தம் – இறந்தவர்களின் பெயரில் அன்னதானம்

நார்சா –  உணவு

கந்தூரி –உற்சவம் / திருவிழா

பராஅத் – இஸ்லாமியக் காலண்டர் மாதங்களின் ஒன்றான ஷஃபான் மாதம் பிறை 15 ம் இரவுக்கு பராஅத் இரவு என்று பெயர். இந்த இரவைச் சிறப்புமிக்க இரவு என்பதாகக் கருதி நோன்பிருப்பார்கள். ரொட்டி, பேரிச்சம்பழம், வாழைப்பழம் போன்றவற்றை ஒவ்வொரு அயலவர்கள், உறவினர்களுடன் பகிர்ந்துண்பார்கள்.

ரபிய்யுல் அவ்வல் –இஸ்லாமிய மாதங்களில் மூன்றாவது

ரபிய்யுல் ஆகிர் – இஸ்லாமிய மாதங்களில் நான்காவது

யா நபி ஸலாம் அலைக்கும் – நபியே சாந்தி உம் மீதமைக!

சுபஹான மவ்லீத் – நபியின் பிறப்பையும் சிறப்பையும் பாடும் கவிதைகள்

சாச்சி – சின்னம்மா

கலீமா – மொழிதல் என்று பொருள்.

பாத்திஹா –  அல்குர்ஆனில் உள்ள முதலாவது அத்தியாயம்

ஹதீஸ் – நபி முஹம்மத்தின் கூற்றுக்கள்

ஸாலிஹ் – கட்டுப்பாடான ஒழுக்கமுள்ள பெண்

பாத்திமா – முகம்மது நபியின் மகளின் பெயர்

ஹதீஜா/ஆயிஷா – முகம்மது நபியின் மனைவியர் பெயர்கள்

ஸர்மிளா செய்யித்-இலங்கை

ஸர்மிளா ஸெய்யித்

 

 

 

 

(Visited 523 times, 1 visits today)
 
ஸர்மிளா ஸெய்யத்

கர்மா-சிறுகதை-ஸர்மிளா ஸெய்யத்

  பறவைகளினுடையது போலவொரு திட்டமிடல் இல்லாத பயணம். இடைவெளியெற்ற பணிச்சுமைக் களைப்பைச் சிறுதளவேனும் இறக்கிவைத்து உடலையும் மனத்தையும் இலேசாக்க இப்படியொரு பயணம் தேவையாகவும் இருந்தது. அதிகாலை ஐந்து ஐம்பத்தைந்துக்கு கொழும்பு […]

 

2 thoughts on “பத்ரகாளி அருட்காப்பு-சிறுகதை-ஸர்மிளா ஸெய்யித்”

Comments are closed.