நேர்காணல் மொழிபெயர்ப்பு-ஸ்டீபன் ஹாக்கிங்-ரூபன் சிவராசா

ரூபன் சிவராசா

‘பிரபஞ்சத்தில் கடவுளுக்கு எந்த வேலையும் இல்லை’

ஸ்டீபன் ஹாக்கிங்

ஸ்டீபன் ஹாக்கிங்கிடம் இரண்டு செய்திகள் உள்ளன. முதலில் நல்ல செய்தியைச் சொல்வதெனில் அது ‘பிரபஞ்சம் நிரந்தரமானது’, இரண்டாவது செய்தி கடவுள் இல்லையென்பதாகும்

2006இல் நோர்வேஜியின் முன்னணி நாளிதழான Aftenposten ஸ்டீபன் ஹாக்கிங் (Stephen Hawking) உடன் நேர்காணல் ஒன்றினை மேற்கொண்டிருந்தது. அவருடைய “காலம்: ஒரு வரலாற்றுச் சுருக்கம் – “A brief history of time” புத்தகத்தை  எளிமைப்படுத்திப்  புதுப்பிக்கப்பட்ட பதிப்பான “A briefer history of time” வெளியீட்டினை மையப்படுத்திய நேர்காணல் இது. அவருடைய மறைவினை அடுத்து, 14.03.18 அந்த நீண்ட நேர்காணலை  Aftenposten மீள்பதிப்புச் செய்திருந்தது.

இந்த நேர்காணலை மேற்கொண்டிருந்தவர் நோர்வேஜிய ஊடகவியலாளர்: Per Kristian Bjørkeng

மூலப்பிரதி : https://www.aftenposten.no/kultur/i/ngO6bd/Avdode-Stephen-Hawking-til-Aftenposten-i-2006–Gud-har-ingen-rolle-i-universet

0000000000000000000000000000000

உலகின் மிகப்பெரிய அறிவியல் பிரபலம் என்று சொல்லப்படும் நபரின் பிரசன்னத்திற்காக காத்திருக்கிறோம். ‘கருந்துளை – “Black hole” உட்பொருள் சார்ந்து அதீத ஆர்வம் மிக்கவர்கள் போன்ற தோற்றப்பாட்டுடன் மாணவர்கள் அங்கு காணப்பட்டனர். லண்டனுக்கு வெளியில் அமைந்துள்ள அந்தஸ்துமிக்க கேம்பிறிட்ச் பல்கலைக்கழக கணிதவியல் வளாகத்தின் புதிய கட்டடத்தொகுதியில் திரண்டிருந்த மாணவர்கள் வரவேற்பு மையத்தின் உள்ளும் வெளியுமாக பரபரப்புடன் திரிந்தனர்.

இந்த நேர்காணலுக்கான ஒப்புதலைப் பெறுவதற்கு அரையாண்டு காலம் தேவைப்பட்டது. எழுத்தாளர்கள் தமது புதிய புத்தகங்களை வெளியிடும்போது நேர்காணலின் பொருட்டு  அவர்களைச் சந்திப்பிப்பதென்பது கடினமாயிருப்பதில்லை. ஆனால் இந்த எழுத்தாளர் மற்றவர்களைப் போன்றவரல்லர். அவரைப் ‘பேராசிரியர் ஹக்கிங்’ என விளிக்க வேண்டுமெனப் பல தடவைகள் நான் அறிவுறுத்தப்பட்டேன். வெறுமனே ‘மிஸ்டர்’ என்பது இங்கு போதுமானதாகவிருக்கவில்லை.

விசித்திரமான ஒரு ‘ரோபோ குரற்கருவி’ மூலமாக கதைப்பதென்பது சுலபமானதன்று. எல்லாக் கேள்விகளும் எழுத்துமூலம் முன்கூட்டியே அனுப்பவேண்டுமென்பது நிபந்தனையாக இருந்தது. மூன்று மாதங்களுக்கு முன்னரே எமது கேள்விகள் அனுப்பப்பட்டுவிட்டன.

என் மனம் அமைதி இழந்திருந்தது. ஒருவித பதற்றம் என்னுள் தொற்றியிருந்தது. இதற்கு முன் நான் நேர்காணல் செய்த வேறெந்தவொரு ஆளுமையும்; என் உள்ளங்கையை வேர்க்கச் செய்ததாக என் நினைவில் இல்லை. ஆயினும் அதில் சிக்கல் ஒன்றுமில்லை. எனக்கு அவர் கைலாகு தந்து வரவேற்கப்போவதில்லை என என்னை நானே ஆசுவாசப்படுத்திக்கொண்டேன்.

அனைத்திற்குமான கோட்பாட்டுத் தேடல்:

ஸ்ரிபன்  ஹக்கிங்கின் அபிலாசைகள் சிறியவை அல்ல. அவர் அனைத்திற்குமான கோட்பாட்டுத்தேற்றங்களைத் தேடுபவர்.

இன்றைய காலகட்டத்தில் இயற்பியல் (Physics ), இரண்டு இணைக்கமுடியாத உலகங்களாகப் பிளவுண்டுள்ளது. புவியீர்ப்பு (Gravity) மற்றும் சார்பியல் கோட்பாடுகள் (Theory of relativity) வானவெளியியல் அளவீடுகளுக்கும் எமது நாளாந்த வாழ்வுக்குமிடையிலான பிணைப்பினை விளக்குகின்றன. இவை பேரண்டப் பெருவெடிப்புக் கோட்பாட்டிலிருந்து (Big bang theory) இன்றைய சமகாலம்வரை விளக்கக்கூடியன.

ஆயினும் அவை ஒரு மர்மத்தை விட்டுச்செல்கின்றன: பெருவெடிப்பிற்கு (Big bang theory) முன்னரும் அதற்கு அடுத்து உடனடியாகவும் என்ன நிகழ்ந்திருக்கும்? ஏதேனுமொரு தெய்வீக சக்தி இருந்திருக்காதா? இருந்திருக்க வாய்ப்பிருக்கிறதா? நாமறிந்த இயற்கைவிதிகள் உடைந்து நிகழ்ந்தவற்றை விளக்கப்போவதில்லை. ஒருவேளை விசித்திரமான இந்த ‘குவாண்டம் இயற்பியல் – Quantum physics’ பெருவெடிப்புக் கோட்பாட்டினைச் சுற்றியுள்ள மர்மத்தை விளக்குவதற்கான ஒரு புரிதல் ஒளியினை ஏற்படுத்தக்கூடியது. ஆயினும் குவாண்டம் இயற்பியலின் உலகம், புவியீர்ப்புக் கோட்பாடுகளோடு ஒத்துப்போவதில்லை.

குவாண்டம் இயங்கியலில் இரண்டு துணிக்கைகள் வெவ்வேறு  இடங்களில் இருப்பினும் ஒரு இரட்டைஉயிரினுள் இணைந்திருக்கக்கூடியவை. குவாண்டம் இயற்பியலில் தொலைக்கடத்தல் (Teleportation) சாத்தியமானது. துணிக்கைகளுக்கான காலப் பயணமும் சாத்தியமாயிருக்கக்கூடும். ஆயினும் துணிக்கைகளை அச்சொட்டானதும் துல்லியமாகக் கணிக்கக்க்கூடியதுமான அளவீடுகள் சாத்தியமற்றது.

இவ்விரண்டு உலகங்களும் தொடர்பற்றுள்ளன. இதனை நாம் விளங்கிக் கொள்ளவில்லை.

ஸ்டீபன் ஹக்கிங் மற்றும் உலகின் ஏனைய முதன்மை இயற்பியல் கோட்பாட்டாளர்கள் இவ்விரு உலகங்களையும் தனித்ததொரு ‘குவாண்டம் புவியீர்ப்புக் கோட்பாட்டுக்குள்’ இணைக்க முயல்கின்றனர். அது சுலபமல்ல. ஆயினும் ஹக்கிங் அநேகமானவர்களைவிட மாறுபட்டவர். அவரது சக அறிவியலாளர்களுக்கு மாறாக கணிப்பீடுகளை அவர் கூடுதலாக அவரது தலைக்குள் மேற்கொள்கொள்ள வேண்டும்.

காலம் – ஒரு வரலாற்றுச் சுருக்கம்!:  அனைவருக்குமான புத்தகம்.


‘கோட்பாட்டு இயற்பியல் – “Theoretical physics” என்பது பெரும்பான்மை மக்களைத் தள்ளிநிற்க வைத்துள்ள ஒரு பேசுபொருள். புரிந்துகொள்வதற்கும் அது கடினமானது. இப்படியிருக்க “காலம் ஒரு வரலாற்றுச் சுருக்கம்” எனும் அவரது புத்தகம் பத்து மில்லியன் பிரதிகள் விற்பனையாகியிருக்கின்றது. இது ஆச்சரியத்தைத் தருகிறது.  அந்தப் புத்தகத்தில் பிரபஞ்சத்தோடு தொடர்புடைய அனைத்து அறிவியல் கூறுகளையும் ஹக்கிங் விளக்க முயல்கிறார். ‘காலம் – ஒரு வரலாற்றுச் சுருக்கம்’ உங்களுக்கும் எனக்குமான புத்தகம்.  ஆயினும் மிகக் குறைந்தளவிலானவர்களே அதனை முழுமையாக விளங்கிக் கொண்டுள்ளனர் என்பதை நான் சொல்லத் தயங்கவில்லை.

இன்னுமொரு வகையிலும் இதனை விளங்கிக் கொள்ளலாம். அதாவது உள்ளங்கைகள் வேர்த்தபடி பேராசிரியரின் பிரசன்னத்திற்காகக் காத்திருக்கும் இந்த ஊடகவியலாளன் மற்றைய அநேகமான வாசகர்களைவிட முட்டாள் என்றும் பொருள் கொள்ளலாம். எதிர்பார்த்தபடி மிகுந்த தாமதத்திற்குப்பின் ஹக்கிங்கினுடைய உதவியாளர் வந்து எம்மை அழைத்துச் செல்கின்றார்.

ஒரு மூலைப்பகுதியில் அமைந்துள்ள பளிச்சிடும் அழகான அலுவலகத்தின் உள்ளே பேராசிரியர் தனது சக்கரநாற்காலியில் அமர்ந்திருக்கின்றார். அவரது தலை பக்கவாட்டில் தொங்குகின்றது. தசைநார்கள் வலுலிழந்த அல்லது இல்லாத தோற்றம். நான் எங்கிருந்து வந்திருக்கிறேன் என்பதைத் நாவுதடக்கச் சொல்லி முடிக்கிறேன். அவரிடமிருந்து பதிலில்லை. சக்கரநாற்காலியில் பொருத்தியிருந்த கணிணித்திரையிலிருந்து ஒரு ‘பீப்’ ஒலி எழுகிறது.

நிழற்படங்களை எங்கு இருந்தபடி எடுப்பது அவருக்குச் சவுகரியம் என நாங்கள் வினவுகிறோம்?

அங்கு மிக நீண்ட அமைதி நிலவுகிறது.

ஒவ்வொரு வசனத்திற்கும் மூன்று நிமிடங்கள்வரை எடுக்கும் ஒரு மனிதருடன் உரையாடலை தொடர்ச்சியாக மேற்கொள்வதென்பது எத்தனை கடினமானதென்பதைப் பலரும் அறிவோம். மூன்று நிமிடங்களின் பின்னர் பதில் வந்தது:

உங்கள் வசதிக்கேற்ப செய்யலாம். நான் மேசைக்கு முன்னால் அல்லது பின்னால் இருப்பது எனக்கு வசதி.

குரல் துல்லியமாகவும் தெளிவாகவும் இருந்தது. ஆனால் பழைய சயின்ஸ் பிக்சன் படங்களில் வருகின்ற ரோபோக்களின் உலோகத்தனமான குரல் போன்றிருந்தது.

நேர்காணலுக்கான கேள்விகளை ஏன் நீண்டகாலத்திற்கு முன்னர் அனுப்பிவைக்கும் நிபந்தனை விதிக்கப்பட்டதென்பதை நான் இப்போது விளங்கிக் கொள்கிறேன். நாங்கள் அனுப்பிய பத்துக் கேள்விகளுக்குமுரிய பதில்களை முன்தயாரிப்பதற்கு அவர் பல மணி நேரங்களைச் செலவிட வேண்டியிருந்திருக்கும்.

கதைப்பதற்கு எடுக்கும் நேரத்தைப் போலவே எழுதுவதற்கும் அதேயளவு நேரத்தை அவர் எடுக்கின்றார். முழுமையான ஒரு புத்தகத்தை எழுதி முடிக்கும் இந்தப் பெருமுயற்சி கற்பனைக்கும் எட்டாத கடினமாக இருந்திருக்கும். அப்படியிருக்கும் போது “A Briefer History of Time” – இனை எழுதும் முடிவினை உண்மையில் ஏன் எடுத்தார்.? (இது 1988இல் வெளிவந்த காலம் – ஒரு வரலாற்றுச் சுருக்கம் புத்தகத்தின் புதிய, எளிய மீள் எழுதப்பட்ட சுருக்க வடிவம்.)


 “A Brief History” பரவலான கவனத்தை ஈர்த்திருந்தது உண்மை. இருப்பினும் பலரும் அதனை பூரணமாக விளங்குவது கடினமெனக் கருதினர். ஆகையினால் எளிமையாகப் புரிந்து கொள்ளவும் அதன் வாசிப்பு ஓட்டத்தை இலகுவாக்கவும் திருத்தியமைக்கப்பட்ட புதிய வடிவத்தினை எழுதும் முடிவினை எடுத்தேன். இந்த வாய்ப்பின் ஊடாக இயற்பியற்துறையின் இறுதிக்கால வளர்ச்சி சார்ந்த விடயங்களை மேலதிகமாக உள்ளடக்கினேன். அத்தோடு அந்தப் புத்தகத்திலிருந்து சில தொழில்நுட்ப விடயங்களையும் நீக்கினேன். இந்த வகை மாற்றங்கள் மூலம் அந்தப் புத்தகத்தின் ஒரு சுருக்க வடிவமும் இலகுவான அணுகுமுறையுடனும் ஒரு புத்தகத்தினைக் கொண்டுவரமுடிந்தது.

” A Brief History “புத்தகத்தைக் கடினமாக உணர்ந்தவர்கள் இதனை வாசிக்க முயற்சிப்பார்கள் என நம்புகிறேன். இதன் வாசிப்பு அனுபவம் அவர்களை சௌகரியமாக  ஆச்சரியப்படுத்துமெனவும் நம்புகிறேன்.”

என்றார் உலோகக்குரலோன்.

எனக்கு மட்டுமல்ல. ஏனைய வாசகர்ளுக்கும் எல்லாமும் புரியவில்லை என்பதை அறிந்ததில் மகிழ்ச்சி.

அறிவியலை வெகுஜனமயப்படுத்தலில் கரிசனை:

ஒவ்வொரு கேள்விக்கும் முன்தயாரிப்புச் செய்யப்பட்ட பதில்களைக் கன்னத்தை உயர்த்தி கண்களை இமைத்து கணினி மூலம் வெளிப்படுத்துகின்றார். ஒரு சிறிய அகச்சிவப்பு உணரி (sensor) சமிக்ஞைகளை உள்வாங்குகிறது. இப்படியாக அவர் கணினியைத் தனது தொடர்பாடற்கருவியாகக் கையாள்கின்றார். அவர் எந்தச் சொல்லை உச்சரிக்க முயற்சிக்கின்றார் என்பதை (உணரியின் சமிக்ஞைகள் மூலம்) கணினி பரிந்துரைத்தவண்ணமிருக்கிறது.

இந்த உரையாடல்தொழில்நுட்ப வழிமுறை மூலம் அவர் இணையத்தளங்களில் வாசிக்கின்றார். மின்னஞ்சல்கள், புத்தகங்கள், விரிவுரைகளை எழுதுகின்றார். தொலைக்காட்சி உரையாடல் அரங்குகளில் பங்கேற்கின்றார். அமெரிக்க அனிமேசன் தொலைக்காட்சித் தொடரான ‘The Simpsons episodes’இல் இவருடைய உருவம் ஒரு பாத்திரமாக உருவகப்படுத்தப்பட்டிருக்கின்றது. “The Simpsons episodes,”-யும் சந்தித்திருக்கின்றார். “Steven Spielberg” உடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட ஒளிப்படம் ஒன்று அலுவலகத்தில் இவரது பேரப்பிள்ளைகளின் ஒளிப்படத்திற்கு அருகில் வைக்கப்பட்டிருக்கின்றது.

தனது எந்தவொரு சமகால அறிவியல் சகாக்களை விடவும் அறிவியலை வெளிப்படையாக்குவதிலும் வெகுஜனமயப்படுத்துவதில் மிகுந்த வேணவா கொண்டவராக இருக்கின்றார் ஸ்டீபன் ஹக்கிங். அது மிகவும் அதிக காலமெடுக்கக்கூடிய செயல்.

இயற்பியலின் கோட்பாட்டு அம்சங்கள் நடைமுறைப் பயன்பாடற்றதென்ற கருத்து பொதுப்புத்தி மத்தியில் மேலோங்கியுள்ளது. இப்படியிருக்கும்போது ஏன் இந்த மனிதர் மட்டுப்படுத்தப்பட்ட தனது நேரத்தின் பெரும்பகுதியினை இயற்பியலின் கோட்பாட்டு அம்சங்களை சாதாரண மக்கள் மத்தியில் பரப்புவதில் முனைப்புக் காட்டுகின்றார்?

 மேம்பட்ட பரிமாணத்தில் எமது நிலைப்பாட்டினைப் புரிந்து கொள்ள விழைகின்றோம். நாம் ஏன் இங்கு இருக்கிறோம். எங்கிருந்து வந்திருக்கின்றோம். இவற்றின் மூலநிலை என்ன? இந்தக் கேள்விகளுக்கான சிறந்த விளக்கங்களை இயற்பியல் தருகின்றது. பாடசாலை மாணவர்கள் பெரும்பான்மையினர் இயற்பியலைக் கற்பதற்கான ஆர்வம் அற்றிருக்கின்றனர். கற்பித்தல் அணுகுமுறையில் நிலவும் குறைபாடுகளே இயற்பியல் மீதான மாணவர்களின் ஆர்வமின்மைக்கான காரணி. இயற்பியலின் முக்கிய கூறுகளை கணித நீக்கம் செய்யப்பட்ட இலகுவான சொல்லாடல்கள் மூலமாக விளக்கமுடியுமென நான் கருதுகிறேன். இதன்பொருட்டு நாம் ஏற்படுத்துகின்ற முன்னேற்றத்தினுடைய உத்வேகத்தை மக்கள் புரியவேண்டியதும் பகிரவேண்டியதும் முக்கியமானது

சலிப்பைத் தருகின்ற பாடங்கள்

இயற்பியல் எத்தகையை சலிப்பைத் தருகின்ற பாடமென்பதை ஹக்கிங் நன்கு உணர்ந்தவராக உள்ளார். ஏனெனில் இவற்றைக் கற்கும் போது அவர் அவற்றின் சலிப்புத்தன்மையை உள்ளார்ந்து அனுபவித்தவர்.

கேம்பிறிட்ஜ் பல்கலைக்கழகத்தில் கலாநிதி ஆய்வுக்கற்கையை ஆரம்பிப்பதற்கு முன்னர் இயற்பியல் கற்கைநெறிக்காக ஒக்ஸ்பேட் பல்கலைக்கழ்கத்தில் வெறும் அரையாண்டுக்கு மேல் அவர் செலவிடவில்லை. தனது 24வது வயதில் அந்தக் கல்வியை நிறைவு செய்தார்.

இருபது ஆண்டுகளாக அந்தஸ்துமிக்க பேராசிரியர் ஸ்தானத்தில் இருந்து வருகின்றார். ஹக்கிங் கொண்டிருக்கும் அறிவியல் தகமைநிலை ஐசாக் நியூட்டன் தனது காலத்தில் வகித்திருக்கக்கூடிய தகமை அந்தஸ்தினை ஒத்தது. தனது அறிவியல் எதனைச் சாதிக்கும் என்பதில் ஹக்கிங் முழுமையான நம்பிக்கை கொண்டவராக இருக்கின்றார்.

எமது காலத்திற்குள் அனைத்தும் பற்றியதொரு முடிவானதும் ஒருத்துவமான கோட்பாட்டு விளக்கத்தைக் கண்டடைய முடியுமென்று உங்களுடைய புதிய புத்தகத்தில் கூறுகின்றீர்கள். முன்னர் பல தடவைகள் அறுதியான பதிலைக் கண்டடைந்துவிட்டதாகச் சொன்ன முடிவுகள் பிழைத்திருக்கும் அனுபவச்சூழலிலும் அறுதியான முடிவு சாத்தியமென நீங்கள் எண்ணுவதற்குரிய காரணம் என்ன?

அனைத்துப் பரிமாணங்களையும் விளக்குகின்ற கோட்பாட்டு விதிகள் எவையென ஏலவே அறிந்திருக்கின்றோம். இருப்பினும் கருந்துளைக்குள் நிலவக்கூடிய கடுமையான சூழலமைவுகள் அல்லது இந்த மிக இளைய பிரபஞ்சம் தவிர்ந்தவற்றை அறிந்துள்ளோம். அடுத்த கட்டத்திற்கு நகர்வதாயின் குறுகிய தூரங்களுக்கு பொருத்தமான விதிகளைக் கண்டடைய வேண்டும். அத்தகைய விதிக்கு கிட்டவுள்ள கோட்பாடு ‘M-கோட்பாடு MTheory’ என அழைக்கப்படுகின்றது. (MTheory என்பது இயற்பியலில் சரக் கோட்பாட்டின் தொடர்ச்சியாகக் கொள்ளப்படக்கூடிய பிரபஞ்சம் பற்றிய அடையாளம் காணப்பட்ட பதினொரு பரிமாணங்கள் பற்றி விளக்கும் கோட்பாடாகும்) இதிலுள்ள சிக்கல் என்னவெனில் ஆ-கோட்பாடு தொடர்பான உரிய புரிதலை நாம் இன்னமும் எட்டவில்லை. இருப்பினும் அதற்கான புரிதலை நோக்கிப் பயணித்துக்கொண்டிருக்கிறோம்.

என்று கணினியிலிருந்து வெளிப்படும் அந்தக்குரல் சொல்கிறது.

பொதுமைப்பட்ட பெரிய கேள்வியை முன்வைத்து அவர் தொழிற்படுகின்றார் என்பதைக் கோடிட்டுக்காட்டும் வகையில் ‘கடவுள் கோட்பாடு’ மற்றும் ‘நிரந்த அண்டக் கோட்பாடு’ தொடர்பான மர்மத்திற்குரிய விடயங்களைப் பேசுகின்றார். அதனைப் பேசுவதற்குத் தனது புதிய புத்தகத்தில் அதிக சக்தியைத்; செலவிட்டிருக்கின்றார். கடவுள் சார்ந்த விடயத்தைப் பலரும் தனிப்பட்ட நம்பிக்கை என்ற வகையின் கீழ் அடக்கப் பழகிவிட்டனர். ஆனால் அறிவியல் அப்படிக் கருதவில்லை. கடவுட்கருத்தியலை ஹக்கிங் அறிவியலாக அணுகுகின்றார். அத்தோடு கடவுளின் வகிபாகம் தொடர்பாக தெளிவான கருதுகோளினையும் கொண்டுள்ளார்.

அறிவியலின் அடிப்படை எடுகோள் என்பது அறிவியல் நிர்ணயம். அதாவது அறிவியல் கோட்பாட்டுவிதிகள் குறிப்பிட்ட ஒரு காலத்தில் குறிப்பிட்ட அதன் சூழமைவின் அடிப்படையில் பிரபஞ்சத்தின் பரிணாமவளர்ச்சியைத் தீர்மானிக்கின்றன. இந்த விதிகள் கடவுளால் தீர்மானிக்கப்பட்டவையாக இருக்கலாம். கடவுளால் தீர்மானிக்கப்படாதவையாகவும் இருக்கலாம். ஆனால் இந்த விதிகளைத் தகர்ப்பதற்காக இனி அவரால் பிரவேசிக்க முடியாது. இல்லையேல் இவை விதிகளாக இருந்திருக்க முடியாது. பிரபஞ்சத்தின் ஆரம்பத்தோற்றத்தை தீர்மானிப்பதில் ‘கடவுளுக்கு’ ஒரு சுதந்திரம் விட்டுவைக்கப்பட்டுள்ளது. ஆயினும் அங்குகூட விதிகள் இருக்கின்றன. அதனால் அங்கும் கடவுளுக்கு எந்தவிதச் சுதந்திரமும் இருந்திருக்க வாய்ப்பில்லை.

பிரபஞ்சம் எக்காலமும் இருந்திருக்கிறது

ஹக்கிங் உட்பட்ட பல இயற்பியல் நிபுணர்கள் பெருவெடிப்பு கோட்பாடு என்பது அனைத்து இயற்கைவிதிகளினதும் சரிவு என்றே சமீபத்திய ஆண்டுகள்வரை கணித்துவந்துள்ளனர். பெருவெடிப்பிற்கு முந்தைய காலம்  முற்றிலும் கண்டறிய முடியாததாகக் கருதப்பட்ட புறச்சூழலில், கடவுட் கருத்தியலுக்குரிய ஒரு தெளிவான வகிபாகத்தை அது விட்டுவைத்திருந்தது.

கடவுள் அனைத்தையும் படைத்திருக்கக்கூடும் என்பதோடு விதிகளையும் வடிவமைத்திருக்ககக்கூடும். இயற்பியலாளர்கள் பலர் சமய நம்பிக்கை கொண்டிருப்பது ஆச்சரியத்திற்குரியது.  இலத்திரன்களின் நிலையான மின்னேற்றத்துடன் சற்று மாறுபட்டதாக இருந்திருப்பின் நட்சத்திரங்கள் எரியுறாது. உயிரினங்கள் இருந்திருக்காது என்பதைக் கணிப்பீடுகள் காட்டுகின்றன.

பெருவெடிப்புக் கோட்பாட்டின் ஆரம்பத்தில் கருதப்பட்டதுபோல் மெதுவாக அல்லாமல் பிரபஞ்சம் மிகவேகமாக விரிவடைந்துவருவதை தொலைதூர பால்வெளியினது பதிய அளவீடுகளில் காணமுடிகிறது. இதன் பொருள் பிரபஞ்சத்தின் இருப்பு எக்காலத்திலும் இருந்துள்ளது என்பதாகும் எனக் கருதுகிறார் ஹவ்க்கிங்
பெருவெடிப்பிற்கு முன்னர் என்ன இருந்தது என்ற கேள்வியானது வடதுருவத்திற்கு வடக்கில் என்ன இருக்கின்றது என்ற கேள்விக்கு ஒப்பானது எனக்கூறுகின்றார் ஹக்கிங்.

 இந்த அனைத்தும் ஒன்றோடொன்று தொடர்புபட்டது. பிரபஞ்சத்தின் காலவெளி பூமிப்பந்தின் மேற்பரப்பினையொத்த நிலையான அளவினைக் கொண்டது. பிரபஞ்சம் ஒருபோதும் வெளிக்காரணிகளின் தாக்கத்திற்கு உள்ளாகவில்லை. அது எப்பொழுதும் தனித்ததாக (சுதந்திரமாக) இருந்துவந்துள்ளது. இவை அனைத்தும் கடவுள் இருப்பதாக நம்புவதற்குரிய காரணிகளை முன்பைவிட குறைவடையச் செய்கின்றன.  குறைந்தபட்சம் பிரபஞ்சத்தில் அவருக்கு வேலையில்லை என்பதையேனும் நிருபிக்கின்றன. ‘படைத்தவர்’ அவர் (கடவுள்) இல்லை எனும்போது கடவுளை உருவகிப்பதற்கான தேவை இருக்கின்றதா?

நவீன வளர்ச்சியை தத்துவவியலாளர்கள் கவனம்கொள்ளவில்லை.

தூரநோக்கிலும் நுண்பார்வையுடனும் சிந்திக்கத் துணிவோருக்கு இதிலுள்ள நற்செய்தி என்னவெனில்இ மற்றுமொரு புதிய பெருவெடிப்புப் புள்ளி உருவாகி அனைத்தும் மறைந்தழியப் போவதில்லை. அதற்கு மாறாக, பிரபஞ்சத்தின் இருப்பு தொடரப்போகின்றது.

“பெரும்பான்மையான இயற்பியலாளர்களுக்கு மாறாக அல்லது அவர்கள் போலல்லாமல் இயற்பியல் சார்ந்து ஸ்டீபன் ஹாக்கிங் ஒரு தத்துவநிலைக்குச் செல்ல விரும்புகிறார்.”

 தத்துவவியலாளர்கள் இயற்பியல் மற்றும் உயிரியலின் நவீன வளர்ச்சியை போதுமானளவு கவனத்தில் கொள்ளவில்லை. ஆகையினால் அவர்களின் விவாதங்களின் விளைவுகள் பெரும்பாலும் காலாவதியாகவும் பொருத்தக்குறைவாகவும் ஆகியுள்ளன. அறிவியலை வெறுமனே தொழில்நுட்பத் தகவல் விபரிப்புகளாக மட்டும் பதிவுசெய்வதில் அர்த்தமில்லை. டார்வின் கோட்பாடு, மூலக்கூறு உயிரியல், நவீன அண்டவியல் ஆகியன எம்மைப் பற்றிய எமது பார்வையில் ஒரு அடிப்படை விளைவுமாற்றத்தைத் தோற்றுவித்துள்ளன. பிரபஞ்சத்தில் எமது இடம்இ வகிபாகம் தொடர்பான பார்வையிலும் அவை மாற்றத்தை விளைவித்துள்ளன. இந்த அடிப்படை மாற்றங்களைத் தத்துவங்கள் பிரதிபலிக்க வேண்டும். இல்லையேல் அவர்களின் அறிவியல் வெறும் சொல்விளையாட்டாக மட்டும் சுருங்கிவிடும்.

இயற்பியலாளர்கள் பலரும் சமய நம்பிக்கையாளர்களாக இருப்பதொன்றும் ஆச்சரியத்திற்குரிய விடயமல்ல. ‘(Heisenbergs ஐயப்பாட்டுக்கொள்கை’ – (Uncertainty principle –  அறுதியின்மைக்கொள்கை) குவாண்டம் இயக்கவியலின் முக்கியமான அடித்தளம். அங்கு சிலவேளைகளில் படைத்தோன் பற்றிய கேள்வி பொருந்தக்கூடும்.

 ‘Heisenberg ‘அறுதியின்மைக்கொள்கையானது முதற்பார்வையில் அறிவியல் முன்கணிப்பு பற்றிய முழுமையான சிந்தனையை குறைமதிப்புக்கு உள்ளாக்கக்கூடியது. ஒரு சிறிய இடப்பகுதியில் ஒரு துகளின் அமைவிடத்தையும் வேகத்தையும் துல்லியமாகக் கணித்து அளவிடுவது சாத்தியமற்றது. பிரபஞ்சத்தின் நிலையை – சூழமைவைத் துல்லியமாக அளவிட முடியாவிடத்து எங்னம் அறிவியலின் எதிர்காலத்தை முன்னறிவிக்க முடியும்? இந்த நிச்சயமற்ற தன்மை பிரபஞ்சவெளியில் கடவுளின் தலையீட்டினைப் பிரதிபலிக்கின்றதா? இத்தகைய ஒரு வாதத்தைத் தொடர்வது கடினமென நான் கருதுகிறேன். இந்த ஐயப்பாடு அல்லது அறுதியின்மை முழுமையாகத் தற்செயலானதும் சீரற்றதும் என தற்போது கண்டறியப்பட்டுள்ளது. இதனடிப்படையில் அறிவியல் முன்கணிப்புகளை நாம் மீளுருவாக்குகிறோம். இந்தப் புதிய வரவிலக்கணப்படி, பிரபஞ்சக் கோட்பாட்டின் வளர்ச்சி என்பது முன்தீர்மானிக்கப்பட்ட ஒன்று. வரையறுக்கப்பட்ட காலத்தில், பிரபஞ்சவெளியின் நிலை தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது.

நான் அதிஷ்டசாலி

நேர்காணல் நிறைவை நெருங்கிக் கொண்டிருக்கின்றது. அலுவலகத்தில் முக்கிய இடத்தில் மாட்டப்பட்டிருக்கும் Marilyn Monroeவின் உருவப்படத்தின் மீது ஹக்கிங் பார்வையைச் செலுத்துகின்றார். அவர் Marilyn Monroeவின் தீவிர ரசிகர். தனது புத்தகத்தில் புவியீர்ப்புவிசையை விபரிப்பிற்கு Marilyn Monroeவினை உதாரணமாகப் பயன்படுத்தியுள்ளார். ‘அவருடைய மிகக்கனதியான சக்கரநாற்கலியிலிருந்து அவரும், Marilyn Monroeவும் ஒரேயளவு உயரத்திலிருந்து கீழே விழுவார்களாயின் இருவரும் ஒரே வேகத்தில் விழுந்திருப்பார்கள்’.

நேர்காணலின் பின்னர் அவருடைய இரண்டு பெண் உதவியாளளர்களும் அவரும் எமக்கு இங்லீஷ் தேநீர் வழங்கினர். தனது பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் மற்றும் Steven Spielbergஉடன் எடுத்துக்கொண்ட ஒளிப்படங்களைப் பெருமையோடு காண்பிக்கின்றார். ‘Simpson’ அனிமேசன் தொலைக்காட்சிச் தொடரின் படைப்பாளர் Matt Groening ஹக்கிங்கிற்காக விஷேசமாக வடிவமைத்த ஹக்கிங்கின் உருவப்பொம்மையை வழங்கயிருக்கின்றார். அதனையும் எமக்கு காண்பிக்கின்றார்.

இந்த நோயினால் நான் பாதிக்கப்பட்டமை மிகவும் துர்ரதிஸ்ரமானது. இருந்தாலும் ஏனைய அனைத்து விடயங்களிலும் நான் அதிஸ்டசாலி. இயற்பியல் கோட்பாடு சார்ந்த ஆய்வுகளில் ஈடுபடுவதை எனக்கான ஒரு நல்லவாய்ப்பாகக் கருதுகிறேன்.  மாற்றுத்திறன் என்பது மிகப்பெரிய ஊனமாக பார்க்கப்படாத மிகச்சில துறைகளில் (தத்துவார்த்த இயற்பியல் துறை) இதுவும் ஒன்று. அதுமட்டுமல்லாமல் எனது புகழ்பெற்ற புத்தகங்களின் மூலமும் தங்கப் பறவையைச் சுட்டுவீழ்த்தியிருக்கிறேன்

என்றார் ஹக்கிங்.

இந்தக் கடுமையான தசையூட்டமற்ற பக்கமரப்பு நோய்  (தசையை இயக்கும் நரம்பணுக்கள் படிப்படியாக நலிவுற்று சிதைவடைதல்) உடலினதும் மனதினதும் சக்தி முழுவதையும் விழுங்கக்கூடியது. ஆயினும் அவர் விட்டுக்கொடுப்பற்ற ஓர்மம் கொண்டிருக்கிறார். இலக்கின் முக்கியத்துவம் பற்றிய அவரது விடாப்பிடியான நம்பிக்கை அவரைத் தூக்கி நிறுத்தி இயக்குகின்றது எனவும் கூறலாம்.

ஹக்கிங் தனது நூலில் கூறியுள்ளது போல் “குவாண்டம் ஈர்ப்புக் கோட்பாடு பற்றிய ஒருத்துவமான கோட்பாட்டினைக் கண்டடைய முடிந்தால் கடவுளின் நோக்கத்தை அறிதல் சாத்தியப்படக்கூடும்.  அதுவே மனித மூளையின் சிந்தனை ஆற்றலின் இறுதி வெற்றியாகவும் அமையும்”.

தமிழாக்கம்: ரூபன் சிவராசா – நோர்வே

ரூபன் சிவராசா

(Visited 119 times, 1 visits today)