வே.நி.சூர்யா கவிதைகள்-கவிதை

துடிக்கும் கத்தி

வே.நி.சூர்யா

இப்போது நீலப்படத்தில் லயித்திருக்கும்
அப்பா அடுத்து என்ன செய்வார்
தன்னை பார்த்துவிட்ட என்னை
உதைக்கலாம் அல்லது
அருவெறுப்பூட்டும் பெண்ணான
குற்றவுணர்ச்சியை கட்டியணைக்கலாம்
ஆனால்
எனக்கு தெரியாது
எப்போதும்
ஊகிக்கயியலாதவரான அப்பா
எப்போதும்
ஊகிக்கயியலாத காரியங்களை செய்கிறார்
வீட்டை சிறையாக்குவதில் வித்தகரான அப்பா
கெட்டவார்த்தைகளில்
கடவுள் உட்பட எல்லோரையும் திட்டுகிறார்
விளக்கு ஏற்றப்படும் நாட்களில்
மட்டும் குடிக்கும் அப்பா
ஒரு மரத்தை போல
ரோட்டில் விழுந்து கிடப்பதுண்டு
அப்போதெல்லாம்
நாய் குதறி செத்துவிடக்கூடாதென்ற
கருணையில் மட்டும்
அவரை வீட்டுக்கு இழுத்து வருவேன்
வீட்டில் கழியும் ஒவ்வொரு இரவிலும்
எனக்கும் அப்பாவுக்கும் இடையே
என் அம்மாவை அழவைக்கக்கூடிய
ஒரு கத்தி துடித்து கொண்டிருக்கும்

0000000000000000000

நீ நம்பினால் உனக்கு இறக்கைகள் உண்டு

“அது என்ன சூரியனா?”
“இல்லை இல்லை
உடைந்த முட்டையின் மஞ்சள் கரு”
“இது என்ன சந்திரனா”
“இல்லை இல்லை
உடையாத முட்டை”
“சரி சரி
அப்படியெனில் சூரியன் சந்திரனை
உடைத்துக்கொண்டு தான் வெளிவருகிறதா”
“ஆமாம் ஆமாம்”
“ஓகோ ,
அப்படியெனில் மறுபடியும் சந்திரனை ஓட்டவைப்பது யார்?”
“அதுவா நீ தான்”
“நானா”
“ஆமாம்
கண்ணை மூடு
இப்போது கண்ணைத் திற”
“இங்கிருந்து குதி”
“இது மலையுச்சியாயிற்றே,
குதித்தால் செத்து விடுவேன்”
“சாகமாட்டாய் ,
உனக்கு இறக்கைகள் உண்டு”
“சரி குதிக்கிறேன்”

00000000000000000000000

தீ

தேடியது கிட்டியபின்னும்
தேடல் தேடலாய்
தொடர
வழியேதும் உண்டா

வே.நி.சூர்யா-இந்தியா

வே.நி. சூர்யா

(Visited 242 times, 1 visits today)