வே.நி.சூர்யா கவிதைகள்

தொடுகை

உச்சிவானில் மண்புழுவென
ஊர்ந்துகொண்டிருக்கும் மேகத்துருவல்கள்
ஏகவெளிச் சிலேட்டில் வெயில் குச்சிகள்
கிறுக்கும் கோடுகள்
வெளியே கர்ஜிக்ககூடிய எந்த வாகனமுமில்லை
புதையல் துழாவும் புள்ளினங்களுமில்லை
ஆனால் இருவர் முகமற்று இருந்தனர் அங்கே
சரீரமே இதுதான் என்பதுபோல அவர்களில் ஒருவன் மஞ்சளாய் ஜொலித்தான்
இன்னொருவன் இதுவரை பெயரிடப்படாத வண்ணத்தில்
ஏதோ உடன்பாடு இருந்திருக்கவேண்டும் அவர்களிடையே
ஒருவனால் தான் தொட்ட அனைத்தையும் சந்தோஷமாக மாற்றயியலும்
பிறிதொருவனால் துயரமாக
உடலுள் ஒரு எலும்பின் மேல் இன்னொன்று நிற்பதைப்போல
அவர்களிருவரும் தொட்டுக்கொள்கிறார்கள் திடுமென
எண்ணங்கள் கூடுவிட்டு கூடுபாய
எனை தூக்கிச் சென்றது
பிரம்மாண்ட தட்டான்பூச்சியொன்று

0000000000000000000

ஆத்மவாதி

ஒளிரும் குழல்விளக்கை
இறுக அணைத்திருக்கிறது ராட்சசப் பல்லி
நினைவின் நாட்டுப்புற இசையில் ஆழ்ந்தவாறு
திடுமென ஒருவன் நிறுத்துகிறான்
உடைகளை ஒழுங்குபடுத்துவதை
இரவு வீங்குவதைப் போல
கட்டிடத்தைவிட உயரமாய் வளர்கிறது சீருடை அணிந்த அமைதி
நான் உணர்ந்தேன்
சுறா துரத்த என் ஆன்மா நீந்திக்கொண்டிருப்பதை

வே.நி.சூர்யா – இந்தியா

(Visited 292 times, 1 visits today)
 

2 thoughts on “வே.நி.சூர்யா கவிதைகள்”

Comments are closed.