கேள்விகள்-கவிதை-முத்துராசா குமார்

கேள்விகள்

ஓவியம் ரவி பேலேட்
ஓவியம் ரவி பேலேட்

மண்டியிட வைத்து
துணிகளைக் கிழித்து
உடம்பிலிருந்த
கயிறுகளை அறுத்து
மயிர்களை மழித்தனர்.
வேர்கள் முறிய
பற்களைப் பிடுங்கி
நகங்களைக்
கடித்துத் துப்பினர்

வேறுபாடுகளின்றி
நிர்கதி உச்சத்தில்
ஓடற்ற நத்தைகளாக
அவர்கள் முன் ஊரினோம்.
நிலமள்ளித் தூவி
மாரடித்து அழுதால்
வீட்டுப் பெண்களைப்
பிறாண்டினார்கள்

சுடுமண்ணில் சுருண்டு விழுந்து
வயிறிலிருந்த பட்டினிகளைப்
பெரிய உருண்டைகளாக்கி வீசியும்
அவர்கள் கண்டுகொள்ளவில்லை

பசைகள் வழியும்
மூத்த முருங்கை மரத்தில்
பேய்கள் அண்டாமலிருக்க
வெள்ளையும் நீலமும் கலந்த
ரப்பர் செருப்பினைக் கயிறில் கட்டி தொங்கவிட்டிருந்தாள் மூதாய்.
உழைத்தே வதங்கி
ஊக்கு மாட்டிய செருப்பு
தூக்கு சடலமாக காற்றில்
சுழன்றது

பறவைகள் எச்சம் படிந்து
உருவேறியிருந்த
இடதுகால் செருப்பு
மூதாயின் இடது காலாகவே
தொங்கியது.
பிடுங்கி வீசப்பட்ட இடதுகால்
தனது பூக்குழி பாதத்தால்
அவர்கள் மீது நிற்காமல்
குதியாட்டங்கள் போட்டது.

முத்துராசா குமார்- இந்தியா

 1,164 total views,  2 views today

(Visited 269 times, 1 visits today)
 

One thought on “கேள்விகள்-கவிதை-முத்துராசா குமார்”

Comments are closed.