சத்தக்கொல்லி-கவிதை-முத்துராசா குமார்

முத்துராசா குமார்

அரிசி ஆலைகளின் அரவைகளாய் கேட்கும்
இரவின் மின்விசிறி சத்தம்
மின்செத்தபின் விக்கலொலியாய் கேட்கும்
கடிகார நொடிமுள்ளின் சத்தம்
காதுகளுக்கருகே ரீங்காரமிடும்
குறுறு கொசுக்களின் குர்ர் சத்தம்

ரீங்காரங்கள் ரணமாவதால்
கொசுக்களின் சாவடி சத்தம்
திண்ணையில் அசதியாக அப்பாவிடும்
மதுவாசனை கலந்த குறட்டைச் சத்தம்
தாக வறட்சியால் குரல்வளை
ஏறியிறங்க அண்ணன் விழுங்கும்
எச்சில் சத்தம்

தண்ணீரும் தண்ணீரும் கீறிக்கொள்வதாய்
எதிர்வீட்டுக்காரனின் சிறுநீர் கழிக்கும் சத்தம்
ஓவென்று பீறிட்டழும் குழந்தையால்
பின்வீட்டு தாயின் கோப சத்தம்
பத்து ஊர்கள் தாண்டியுள்ள ஒலிபெருக்கிகளில்
கிழவிகளின் ஒப்பாரி சத்தம்

பக்கத்து தெருவில் நடந்து வரும்
சாமக்கோடாங்கியின் குடுகுடுப்பு சத்தம்
காற்றில் பிய்ந்து பிய்ந்து கேட்கும்
இரண்டாமாட்ட படத்தின் வசன சத்தம்
படம் முடித்து நடந்து வரும் சுள்ளான்களின்
வாய்விரியும் கொட்டாவி சத்தம்

மிதிவண்டிகளில் செல்லும்
இளவட்டங்களின் ஆபாச சிரிப்பு சத்தம்
முனி நடமாடும் சந்தில் பெருச்சாளிகள்
ஒடும் திமுதிமு சத்தம்
தெருத்திமிர் காட்டும் நாய்களின்
குரைச்சல் சத்தம்

முருங்கைமரத்தில் அடையும்
குஞ்சு கோழிகளின் கொக்கரிப்பு சத்தம்
சினை மாடுகளின் செருமலான
பெருமூச்சு சத்தம்
தொலைக்காட்சியில்
அரைகுறை ஆங்கிலப் பாடல்கள்
பார்த்துக் கொண்டே பீடி பற்றவைக்கும்
முதியவரின் தீப்பெட்டி உரசிடும் சத்தம்

இந்த சத்தங்களை விட அனுதினமும்
கடன்களையெண்ணி புழுங்கியழும் ஆத்தாவின்
அழுகைச் சத்தம் சற்று அடராய் இருந்தும்
கேட்காமலேயே போனது…

முத்துராசா குமார்-இந்தியா

முத்துராசா குமார்

 

(Visited 52 times, 1 visits today)