M.A,Mphil-கவிதை-முத்துராசா குமார்

முத்துராசா குமார்

பூக்கோ
அடர்னோ
கில்பர்ட் கீட்ஸ்
தெலுஸ்
இனவரைவியல்
மானுடவியல்
மாற்று
அறமான அரசியல்
விளிம்பு நிலை மக்கள்
சமத்துவம்
இதழியல்
கலை
இலக்கியம்
சினிமா
படைப்புகள்
பண்பாட்டு அரசியல்…’

‘நீங்க
யாரா வேணா
இருங்க பாசு,
சும்மாதான இருக்கீங்க
ரூம கிளீன் பண்ணவே மாட்டீங்களா?
அடுத்த மாசத்துல இருந்து
வேற ரூம் பார்த்துக்கங்க..’

‘ஏற்கனவே 5 பேர் இருக்குற எடத்துல
15 பேர் இருக்கோம்
ஓனருக்கு தெரிஞ்சா
பஞ்சாயத்தாயிடும் மாப்ள..’
‘பங்காளி உன்ன நம்பித்தான்டா
மெட்ராசுக்கு வந்துட்டு இருக்கேன்..’

‘பேச்சுலர் பசங்களுக்கு
ரூம் தர்றதில்லேயே..’
‘பேமிலிக இருக்குற
எடம்பா..’
‘ஆமா நீங்க என்ன ஆளுக..?’
‘அப்ப இருந்தே அந்த ஊருக்காரங்களுக்கு
வீடு விட்றதில்ல..’

‘அட்வான்ஸ், வாடகைய
கொறைக்கவே
முடியாது..’

‘சரக்கு, தம்மு எங்க
பரம்பரைக்கே
பழக்கமில்ல..’

‘சமைக்கலா கூடாது
சத்தம் வரக் கூடாது
ப்ரண்டஸ் நாட் அலவுடு…’

‘அதென்ன மூஞ்சில தழும்பு
காதுல கடுக்கன்,
நெறையா சுருட்ட முடி
உன்ன பார்த்தாலே கிரிமினல்
மாதிரி இருக்கு..’

‘ஆதார் கார்டு, ரேசன் கார்டு
ஜெராக்ஸ் கொடுத்துட்டு
கழுத்து வரைக்கும்
பட்டன் போட்ட பாஸ்போர்ட் சைஸ் போட்டோ ஒட்டி
இந்த பத்திரத்துல 19
கையெழுத்து போடு..’

‘ஹாஸ்பிடால் சீட்டு
காமன் கக்கூஸ்
கரண்ட், தண்ணீ எக்ஸ்ட்ரா சார்ஜ்.. ‘
‘இருக்குற எடம் தெரியாம
இருக்கனும்..’
‘ஒரு மாச வாடகை
புரோக்கர் கமிஷன்…’

என்றோ எதற்கோ வாங்கிய கைதட்டல்களும்
காத்துட்டுக்கு பிரயோசனமில்லாமல்
யாரோ சொன்ன வாழ்த்துகளும்
கொஞ்சம் படிச்சு தொலைஞ்ச
மெதப்பும்
மண்டையில் இருக்கும் பகுமான கிரீடத்தைத் துப்பி தூக்கியெறிய மறுக்கிறது

இல்லையென்றால்,
தரமணி ரயில் பாலத்தினடியில்
பேக்கை தலையணையாக்கி
பத்தோடு பதின்னொன்னாய்
அவர்களுடனேயே தங்கி
வாயோரம் எச்சில் வடிய நிம்மதி
தூக்கம் போட்டிருக்கலாம்

இம்மியளவு கூட இரவுகள் வேண்டாம்
வெறும் பகல்கள் மட்டுமே வேண்டுமென்று
இப்பருத்த நகரில் வீடற்று
அலைந்து கலைத்த எனது குரல் கதறுகையில்

மிக நீண்ட இரவுகள் மட்டுமே
வேண்டும் வேண்டுமென
டூயட்கள் பாடும்
இந்த டெடிக்கேட் காதல் பாடல்களை என்ன செய்ய?

முத்துராசா குமார்- இந்தியா

முத்துராசா குமார்

(Visited 73 times, 1 visits today)