நெய்தல் நிலத்தின் அறமான கோபக்காரன்-கட்டுரை-முத்துராசா குமார்

முத்துராசா குமார்‘கற்ற கல்வி அவரவர் சார்ந்த மண்ணுக்கும் மக்களுக்கும் ஏதோவொரு விதத்தில் தொடர்புடையதாகவும், பயனுள்ளதாகவும் இருக்க வேண்டும். அப்படியில்லை என்றால் அந்தக் கல்வி எதற்கும் லாயக்கற்றது. இதழியலையும் தொடர்பியல் திறன்களையும் வகுப்பே வெளியேதான் அதிகமாக கற்றுக்கொள்ள முடியும். வகுப்புக்கு வெளியேதான் உண்மையான வகுப்புகள் இருக்கின்றன’ என்று சென்னைப் பல்கலைக்கழகம், இதழியல் மற்றும் தொடர்பியல் துறைத் தலைவரும் எனது பேராசிரியருமான கோபாலன் ரவீந்திரன் அவர்கள் அடிக்கடி எங்களிடம் சொல்லிக் கொண்டே இருப்பார். துறையின் ‘முற்றம்’ என்ற தமிழ்மண் சார்ந்த நாட்டார் கலைக் குழுவின் மூலம் ‘கலை வழிக் கற்றல் கற்பித்தலில்’ அதீத நம்பிக்கை வைத்திருக்கும் பேராசிரியரின் மற்றுமொரு கற்பித்தல் முறைதான் ‘மக்களுக்கான இதழியல்’ பயணம்.

‘மக்களுக்கான இதழியல்’ பயணம் மூலம் மாணவர்களை சமூகத்தின் விளிம்பு நிலை மக்களிடம் அழைத்துச்சென்று கேமிராக்கள், பேனாக்கள், கலைகள் மூலம் களப்பணி செய்து, அந்த மக்களையும் அதே கேமிராக்கள், பேனாக்கள், கலைகளை கையில் எடுக்கச் சொல்லி அதன் மூலம் அவர்களது வாழ்வியல் கூறுகளை அவர்களை வைத்தே ஆவணப்படுத்தி விழிப்புணர்வை உண்டாக்குவதுதான் இந்த பயணத்தின் நோக்கம். இதில் இரு தரப்பினருக்கும் இடையே நிறையப் படிப்பினைகள் நிகழ்வதைக் கண்கூடாகப் பார்க்கலாம். வெகுசன ஊடகங்களில் இருந்து விலகி அறமான ஊடகம் எதுவென்ற தெளிவுகளுக்கும் இந்த செயல்பாடுகள் வழிவகுக்கும்.

கடந்த 2016ம் ஆண்டு ‘மக்களுக்கான இதழியல்’ பயணத்தில் இந்தியாவின் இரண்டாவது பெரிய நெய்தல் ஏரியான பழவேற்காடு பகுதி சுற்றுவட்டார மீனவக் கிராமங்களில் களப்பணி செய்த பிறகுதான் மதுரை மாவட்டம் சோழவந்தான்-தென்கரை கிராமத்தில் வசிக்கும் எனக்கும் நெய்தல் நிலப்பரப்பிற்கும் இடையேயான தொடர்புகள் ஒருவித உயிரோட்ட நெருக்கமாய் அதிகரிக்க ஆரம்பித்தது. பழவேற்காடு பகுதி பள்ளிக் குழந்தைகள், மக்களின் வாழ்வியல் முறைகள், உணவு, கல்வி, சடங்குகள், அரசியல், பொருளாதாரம், சாதிய, மத அதிகார அடக்குமுறைகள் போன்ற அம்சங்களை அம்மக்கள் படைத்த  கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள், புகைப்படங்கள், நாடகங்கள், பாடல்கள் மூலமாக ஆவணப்படுத்தி அப்பகுதியிலேயே வெளியிட்டு அம்மக்களிடம் கல்வி சார்ந்த ஒருவித நம்பிக்கையினையும், விழிப்புணர்வையும் விதைத்தோம். இப்பயணம் இன்றுவரை  வெவ்வேறு பகுதிகளுக்குத் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

இந்தப் பயணத்தின் நீட்சியாக ராமேஸ்வரம், தனுஷ்கோடிக்கு நானும் எனது நண்பர்களும் சென்றோம். தமிழக நெய்தல் நிலப்பரப்பின் ஒவ்வொரு பகுதிகளிலும் தீர்க்கப்படாத பிரச்சனைகள் காலம் காலமாக இருந்து வருகிறது. பல வருடங்களாக நீடிக்கும் ராமேஸ்வரம் இலங்கை இடையேயான கடல் எல்லைப் பிரச்சனைகள், இந்தியாவின் தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் துப்பாக்கிச் சூடுகள், சிறைப் பிடிப்புகள், தொழில் உபகரணங்களை சிதைத்தல் என பல சம்பவங்களை ஊடகங்களில் மட்டுமே பார்த்து வந்த எங்களுக்கு ராமேஸ்வரம் தனுஷ்கோடி பயணம் முற்றிலும் வேறுமாதிரியான பார்வையையும், புரிதலையும் அளித்தது. அங்கு இருக்கக் கூடிய பூர்வக்குடிகள், மீனவ மக்கள், மீனவ சங்கங்கள், பிற தொழில் செய்வோர்கள் என்று பலரிடம் கலந்துரையாடிய பின்தான் ஒருவிஷயம் நன்றாகத் தெரிந்தது. இந்த எல்லைப் பிரச்சனைக்கு தீர்வு கண்டால் தேசிய அளவிலும், தமிழக அளவிலும் இதை வைத்து எந்த அரசியல் கட்சியாலும் ஆதாய அரசியல் செய்ய முடியாது என்று.

இலங்கை கடற்படையாலும், மத்திய, மாநில அரசுகளாலும்  தொடர்ந்து பாதிப்புகளுக்குள்ளாகி வரும் ராமேஸ்வரம், தனுஷ்கோடி மீனவ மக்களிடம் எப்போதும் ஒருவித கோபம் இருந்து வருகிறது. போராட்டங்கள் மூலம் வெளிப்பட்டு போராட்டங்கள் முடிந்தவுடன் அக்கோபமும் வாழ்க்கைப் பாடுகளின் ஓட்டத்தில்  அடங்கிவிடுவது போல் தெரியும். ஆனால் அவர்களோடு உரையாடினால் தெரியும் வாங்கிய அடிகளுக்கு திருப்பி அடி கொடுக்கும் அறமான கோபம் எப்போதும் அவர்களுக்கு சந்ததிகள் கடந்தும் உள்ளேயே கிடக்கும்  என்று. அந்த அறமான கோபத்தை முன்வைத்து

‘திரும்ப திரும்ப அடிக்கையில்
திருப்பி அடிப்பது
வன்முறையிலும் அடங்காது
பாவத்திலும் அடங்காது..’

என்ற அறிமுக வாசகத்தோடு, புகைப்படங்கள் மூலம் கதை சொல்லும் பாடல் முயற்சி ஒன்றை தயார் செய்து வெளியிடலாம் என்று முடிவு செய்தோம். ஏனென்றால் போராட்டங்களோடு சேர்த்து கலை, இலக்கியத்தால் மட்டுமே சமூகத்தில் ஒரு அசாத்திய மாற்றங்களை நிகழ்த்த முடியும். கலை ஒன்று மட்டுமே மனிதர்களை ஒருங்கிணைக்கும் என்ற நம்பிக்கையில் கலை வழி மூலம் மக்களோடு தொடர்பில் இருக்க வேண்டுமென்று நண்பர்கள் நாங்கள் இணைந்து ‘சுயாதீனமாக’ (INDEPENDENT) ‘வாடகை சைக்கிள் ரைடு’ (VAADAGA CYCLE RIDE) என்ற குழுவை உருவாக்கினோம்.

இந்தக் குழுவில் இருக்கும் நாங்கள் கிராமம், நகரம் அதுவும் நகரத்தில் காலம் காலமாக ஒடுக்கப்பட்ட இடங்களில் இருந்து வந்து ஒன்று சேர்ந்தவர்கள். எழுத்து, பாடல், இசை, காமிரா, எடிட்டிங், நடிப்பு என்று எங்களுக்குள் தனித்தனியே இருந்த கலைகள் எங்களின் விளிம்புநிலை வசிப்பிடங்களில் இருந்தே கற்றுக்கொண்டவை, கற்றுக்கொண்டு இருப்பவைகள். ஒடுக்கபட்ட இடங்களிலிருந்து வெடிக்கும் கலைகளின் வீச்சே அசாத்திய வீரியமாக இருக்கும். அக்கலைகளால் ஒன்றிணைந்த நாங்கள் ‘டிஜிட்டல் மூஞ்சி’ (DIGITAL MOONJI) என்ற பாடலைக் கடந்த வருடம் சமூக வலைதளங்களில் வெளியிட்டோம். மெரினாவில் ‘தைப்புரட்சி’ நடந்து முடிந்தவுடன், நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு எதிராக பெரிய மக்கள் போராட்டம் தமிழகத்தில் நடந்த சமயத்தில் அந்தப் பாடலை வெளியிட்டோம்.

ஹைட்ரோ கார்பன், கூடங்குளம், நியூட்ரினோ போன்ற மண்ணுக்கும் மக்களும் எதிரான அரசின் திட்டங்கள், பண மதிப்பிழக்கம், தைப்புரட்சியில் தமிழக காவல் துறையின் வெறியாட்டம், விவசாயிகளின் மரணம், விவசாயிகளின் போரட்டங்களை அவமதித்தல், தமிழகத்தைக் கண்டுகொள்ளாத தமிழக அரசு, டிஜிட்டல் இந்தியாவின் கோர முகங்கள் போன்றவற்றை உள்ளடக்கி ‘ராப்’ வடிவில் வெளியிடப்பட்ட ‘டிஜிட்டல் மூஞ்சி’ பாடல் நெடுவாசல் போராட்ட களத்திலும், சமூக வலைதளங்களிலும் நல்ல வரவேற்பை பெற்று, போராட்டக் களத்திற்கு ஊக்க சக்தியாகவும் இருந்தது. எனவே ‘வாடகை சைக்கிள் ரைடு’ குழுவின் பெயரிலேயே வஞ்சிக்கப்படும் நெய்தல் குடிகளுக்கான  ‘செதில்பய’ (SETHIL PAYA) (செதில் – மீனின் தோல்; பய – பையன் )  பாடலை எங்களது VAADAGA CYCLE RIDE ன் யூ-டியூப் சேனலில் வெளியிட்டோம்.

கடலுக்குப் போன தனது அப்பா, இலங்கை கடற்படையால் சுட்டுக்கொல்லப்படுகிறார். அப்பாவை எதற்கு சுட்டுக் கொன்றார்கள், அதற்கு பின்னால் இருக்கக்கூடிய அரசியல் என்ன என்பதெல்லாம் ஏதுமறியாத சிறுவனின் சோகத்தையும், கோபத்தையும் ராமேஸ்வரம், தனுஷ்கோடி நிலப்பரப்புகளில் நண்பர்கள் உதவியோடு அம்மக்களிடம் உரையாடி, ஊடக செய்திகளையும் பகுப்பாய்வு செய்து படப்பிடிப்பு நடத்தினோம். தேர்வு செய்யப்பட்ட 76 புகைப்படங்கள் மூலமாக ஒரு கதையாக சொல்லியிருக்கிறோம். கருப்பு, வெள்ளை புகைப்படங்களில் சிவப்பு வண்ணத்தில் பாடல் வரிகள் தெரிய ஆறு நிமிடங்கள் பாடல் ஒளிபரப்பாகும்.

அந்த நேரத்தில்தான் (2017 டிசம்பர்) கன்னியாகுமரி மாவட்டத்தில் ‘ஓகி’ புயலாலும், அரசுகளின் அலட்சியங்களாலும் ஏராளமான மீனவர்கள் கொல்லப்பட்டனர். இந்த சமயத்தில் மீனவர்கள் பற்றிய பாடல் ஒன்று வெளிவருவது மிக அவசியமானது என்று கருதிய பத்திரிகையாளர் கவிதா முரளிதரன் அவர்கள் ‘செதில்பய’ பாடலைப் பார்த்துவிட்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சித்  தலைவர் தொல். திருமாவளவன் அவர்கள், இயக்குநர் சீனு ராமசாமி என்று அரசியல் கட்சி தலைவர்கள், ஊடகத்தார்கள், சினிமா என்று பல தளங்களுக்குப் பாடலைக் கொண்டு சென்று எல்லாமுமாய் உடனிருந்தார். இதுதவிர பாடல் வெளிவருவதற்கு முன்பே ஒளிப்பதிவாளர் வேல்ராஜ், இயக்குநர் மாரி செல்வராஜ், எழுத்தாளர் கார்த்திக் புகழேந்தி அவர்களும் பாடலைப் பார்த்துவிட்டு தங்களது கருத்துகளைப் பதிவு செய்தனர்.

பாடலைப் பார்த்துவிட்டு தனது முகநூல் பக்கத்தில் பாடலின் முதல்  பார்வை சுவரொட்டியை (FIRST LOOK POSTER) வெளியிட்ட இயக்குநர் ராம் அவர்கள் பாடலை சாதாரணமாக வெளியிட வேண்டாமென்று அறிவுறுத்தினார். ‘செதில்பய’ ‘டிஜிட்டல் மூஞ்சி’ மற்றும் விரைவில் வெளிவரவிருக்கும் எங்களது ‘உணவு அரசியல்’ பாடல் ‘ஆன்லைனுக்கு அடிமையாதல்’ பாடல் இறுதியாக சமூக விழிப்புணர்வு ‘கானா’ பாடல் என மொத்தமாக எல்லாப் பாடல்களையும் சேர்த்து மக்கள் முன் பாடி ‘வாடகை சைக்கிள் ரைடின் லைவ் கான்செர்ட்’ (VAADAGA CYCLE RIDE’S LIVE CONCERT) என ஒரு பெரிய நிகழ்வாக நடத்தலாமென்று ஊக்கப்படுத்தி பொருளாதார ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் பக்கபலமாக இருந்தார் இயக்குநர்.

இவர்களின் ஊக்கப்படுத்துதல் மற்றும் நண்பர்களின் துணையோடு கடந்த டிசம்பர் (2017) மாதம் 16ம் தேதி சனிக்கிழமை மாலை 5 மணிக்கு மீனவ மக்கள் அதிகமாக வசிக்கக்கூடிய சென்னை பட்டினம்பாக்கம் முள்ளிக்குப்பம் – சீனிவாசபுரம் மீனவர் நல சமுதாயக் கூடத்தில் ‘வாடகை சைக்கிள் ரைடின்’ ‘செதில் பய’ பாடல் வெளியீட்டு விழா மற்றும் ‘லைவ் கான்செர்ட்’ விழா  எதிர்பார்த்ததை விட சிறப்பாக நடந்தது. ஆதியிசையான பறையாட்டத்தோடு தொடங்கிய நிகழ்வில் ராமேஸ்வரம், தனுஷ்கோடி மீனவர்கள் மற்றும் கன்னியாகுமரியில் ‘ஒகி’ புயலில் மரணமடைந்த (கொல்லப்பட்ட) மீனவர்கள், அதனையொட்டி நடந்த மீனவ மக்களின் போராட்டங்கள் பற்றிய நூறுக்கும் மேற்பட்ட புகைப்படங்களைக் கண்காட்சியாகவும் காட்சிப்படுத்தியிருந்தோம். பட்டினம்பாக்கம் பகுதியில் புயலுக்கும், மழைக்கும் சிதிலமடைந்தப் பொருட்கள், மர சாமான்கள், குடித்து வீசிய மது பாட்டில்களை வைத்து மீனவ மக்களின் வாழ்வியலை வெளிப்படுத்தும் கலைப் பொருட்களாக வடிவமைத்து மக்களின் பார்வைக்கு வைத்திருந்தோம்.

சென்னைப் பல்கலைக்கழகம் இதழியல் மற்றும் தொடர்பியல் துறைத் தலைவர் பேராசிரியர் கோபாலன் ரவீந்திரன், சென்னைப் பல்கலைக்கழகம் அரசியல் அறிவியல் துறையின் தலைவர் பேராசிரியர் ராமு மணிவண்ணன், ஓவியர் டிராட்ஸ்கி மருது, எழுத்தாளர் ஜோ டி குரூஸ், கவிஞர் உமாதேவி, பூவுலகின் நண்பர்கள் சுந்தர்ராஜன், தென்னிந்திய மீனவர் நல சங்கத் தலைவர் தோழர் பாரதி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு ‘செதில் பய’ பாடல் வெளியீடு மற்றும் ‘வாடகை சைக்கிள் ரைடின் லைவ் கான்செர்ட்’  (VAADAGA CYCLE RIDE’S LIVE CONCERT) நிகழ்வைத் தொடங்கி வைத்து பேசினர். நிகழ்ச்சியில் மீனவ மக்கள், பொது மக்கள், மீனவ சங்கப் பிரதிநிதிகள், பல்கலைக்கழக மாணவ மாணவிகள், ஊடக நண்பர்கள் என்று திரளாய் கலந்து கொண்டனர். அனைவரும் நிகழ்வின் தாக்கத்தை சமூக வலைதளங்களிலும் பொது வெளியிலும் பகிர்ந்து கொண்டதால் ஊடகங்களைத் தாண்டி  மக்கள் மத்தியில் பாடல் அதிகமாக புழங்கத் தொடங்கியுள்ளது.

சமூகவலை தளங்களில் பாடல்  வெளியாகி இரண்டு மாதங்கள் நிறைவடையப் போகிறது. சென்னைப் பல்கலைக்கழகம் இதழியல் மற்றும் தொடர்பியல் துறை, புது தில்லி, சென்னை அடையாறு எம்.ஜி.ஆர் ஜானகி கலை அறிவியல் கல்லூரியில் ‘துடி’ இயக்கம் நடத்திய ஆப்பிரிக்க, தலித், பழங்குடியின மாணவர்களின் பட்டமளிப்பு நிகழ்வின்  கல்விப் பண்பாட்டுத் திருவிழா, சென்னை சிறுசேரி தனியார் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் அரசுப் பள்ளி மாணவர்களின் கலை விழா போன்ற நிகழ்வுகளில் ‘செதில்பய’ பாடல் இதுவரை திரையிடப்பட்டு பேசப்பட்டுள்ளது.

இதுதவிர எனது சொந்த ஊரான தென்கரை கிராமம் (சோழவந்தான் சட்டமன்றத் தொகுதி) மதுரை புறநகர் மாவட்டத்திலும், வாடிப்பட்டி ஒன்றியத்திலும் வரும். பக்கத்துக்கு ஒன்றியம் அலங்காநல்லூர். மதுரை புறநகர் மாவட்ட அரசியலில் அதிமுக்கியமான இந்த இரண்டு ஒன்றியங்களில் வரும் தலைமை ஊராட்சி மன்றக் கிராமங்களின் கீழ் சுமார் 400 கிராமங்கள் இருக்கின்றன. இந்தக் கிராமங்கள் அனைத்திலும் ஒளிபரப்பாகும் உள்ளூர் சேனல்களில் ‘செதில்பய’ பாடல் தற்சமயம் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. அடுத்தடுத்து பழவேற்காடு, ராமேஸ்வரம், தனுஷ்கோடி, கன்னியாகுமரி போன்ற நெய்தல் நிலங்களில் புகைப்படக் கண்காட்சியும், பாடல் திரையிடலும், கலந்துரையாடலும் நடத்தப்படவுள்ளது.

நெய்தல் குடிகளைக் காவு வாங்கி கொண்டிருப்பது இயற்கை அல்ல என்ற புரிதலையும், நெய்தல் நிலப் பிரச்சனைகள் அந்த நிலத்தைத் தவிர மற்ற நிலங்களிலும் பேசப்பட்டு கலந்துரையாடி வினையாற்றல் நடந்திட  வேண்டும் என்ற எண்ணத்தோடுதான் ‘செதில்பய’லின் அறமான கவண் கோபத்தை வெளியிட்டோம். அத்தோடு மட்டும் நின்று விடாமல் தமிழகத்தின் கடல் சார்ந்த எல்லா புவியியல் பரப்புகளிலும் ஒட்டுமொத்த மீனவ மக்களிடையே நிலவக் கூடிய சாதிய, மத, அரசியல் முரண்பாடுகளைக் கலைத்து சுயதெளிவு அடைந்தால்தான் நெய்தல் நிலங்களைக் காக்க முடியும் என்ற களநிலவரத் தெளிவும்  இப்பாடல் வெளியான பிறகு நடந்த உரையாடல்கள், பயணங்கள் வழியே தெளிவாய் தெரிகிறது.

ஆனால் ஆளும் அதிகாரங்கள் முரண்பாடுகளையும், அறியாமைகளையும் மீனவ மக்களிடையே வலுவாய் விதைத்துக் கொண்டேதான் இருக்கின்றன. இவற்றைக் கீறிப் பார்க்கும் நெய்தல் சார்ந்த இலக்கியப் படைப்புகள் வந்து கொண்டிருந்தாலும் போராட்டங்கள் நடத்தப்பட்டாலும், ஏற்கனவே உள்ளூர் சுரண்டல் அரசியலில் வதைபடும்  மீனவ மக்களிடையே ‘நாம் பலவாறாக முரண்பட்டு கிடக்கிறோம்’ என்ற துரிதமான சுய விமர்சனமும், அரசியல் விழிப்பும் வரவில்லையென்றால் ஐந்திணைகளில் ஒன்றான கடலும் கடல் சார்ந்த இடமும், கடல் பழங்குடிகளின் எல்லா வளங்களும் ‘சாகர்மாலா’ போன்ற கார்ப்பரேட்டுகளின் கட்டுப்பாடுகளுக்குள் போகும் நாள் வெகுதொலைவில் இல்லை.

செதில்பய பாடல்:

கட்டி வச்ச வீட்டக்  காட்ட
அப்பன் வரல
வந்திடிக்கும் அலைகள் கூட
ஒன்னும் செய்யல
கால் கடுக்கும் கலங்கரைக்கும்
சேதி தெரியல
உள்ளங்கையி கடல் தண்ணியும்
ஒன்னும் பேசல

இந்தியப் படத்தில்
நாங்கள் இல்லையே
நாங்கள் இல்லாமல்
இந்தியா இல்லையே

கோடி தடம் பதிஞ்சிருக்கு
எங்க கரையில
ஒன்னுக் கூட ஓங்கிதானே
எதிர்த்து மிதிக்கல
காயம்பட்ட படகுடம்பு
கர ஒதுங்கயில
கருவாட்டு கவுச்சியெல்லாம்
பழிதீர்க்க சொல்லுதே

இந்தியப் படத்தில்
இல்லையா நாங்கள்
ஐவகை நிலத்தில்
நாங்கள் நெய்தல்

ஓடுக்குள்ள ஒளிஞ்சு வாழ
நாங்க ஒன்னும் நத்தை இல்ல
கடலோடி நாங்கக் கூட
உங்கப் போல மனுசப் புள்ள

எல்லா புறமும்
வாங்கிடும் அடிகள்
சொரணையில்லா
அரசியல் தலைகள்
அக்கரை ஆளு
ஆயுத எதிரி
இக்கரை ஆளு
நமக்கே துரோகி

மீனவன் ஓலம்
ஓயவில்லையே
அதிகார செவிகள்
திறக்கவில்லையே

துளைத்த தோட்டா பிடுங்கி எறி
தயங்கும் கணங்கள் உதவாதினி
உப்புக்காற்றின் ரோசமெடுத்து
பொய்யாய் இருக்கும்
எல்லைக் கொளுத்து

எத்தனை அலைகள்
எண்ணியதில்லை
சத்தமாய் எழுந்து
செய்திடு கொலைகள்
எத்தனை முள்கள்
கணக்கேயில்லை
கூராய் குத்திக் கேட்டிடு
பதில்கள்

எத்தனை மணல்கள்
எவனுக்குத் தெரியும்
புயலாய் அடித்தால்
உன் கேடயம் உடையும்

மீனவன் செதிலை
உரித்திடும் இந்தியா
உன் வரைப்படக் கோட்டில்
தமிழன் இல்லையா?

00000000000000000000000000

குழு: வாடகை சைக்கிள் ரைடு

முகநூல் பக்கம் / யூ டியூப் சேனல் : VAADAGA CYCLE RIDE

ஒளிப்பதிவு: நித்தின் குமார்

இசை: ஜோஸ்வா

ஒலிக்கலப்பு: வினோத்

குரல்: சங்கீத் – நிகவித்திரன் மற்றும் குழுவினர்

டத்தொகுப்பு & சுவரொட்டிகள் : சிறுத்தை சிவா மற்றும் ஜீவா முருகன்

சப் டைட்டில்ஸ்: கிருத்திகா சீனிவாசன்

பாடல் – எழுத்து – இயக்கம்: முத்துராசா குமார்

பாடலை காணொளியில் காண இங்கே அழுத்துங்கள்:

 

முத்துராசா குமார் -இந்தியா 

முத்துராசா குமார்

(Visited 322 times, 1 visits today)
 

One thought on “நெய்தல் நிலத்தின் அறமான கோபக்காரன்-கட்டுரை-முத்துராசா குமார்”

Comments are closed.