றாம் சந்தோஷ் கவிதைகள்

 

றாம் சந்தோஷ்

உடலிலிருந்து தப்பிப்போக என்ன செய்யவேண்டும்?
உடலிலிருந்து தப்பிப்போக என்ன செய்யவேண்டும்?
உடலைத் திருடிக்கொண்டு தொலைந்தோட வேண்டும்;
மேலும், கொஞ்சம் மறதியையும் பயிற்சி செய்யவேண்டும்.

கனவை இடைமறித்து அவன் கழுத்தை நெறித்துக் கொன்றாச்சு;
கனவோன் உடலதையும் வெட்டிக் கூறிட்டாச்சு;
உடலுடையோன் ஒரு கனவானவ னாதலால்
அவன் உடலில் வலியில்லை.
இருந்தும், என் கனவோ கலைந்தாச்சு;
கலைந்ததும் கண்களைத் திறக்கச் செய்துப் பார்க்கிறேன்.
உடலைக் காணவில்லை.
உயிர் மட்டும் மீள ஒரு கனவாய் போச்சு..

00000000000000000000000000

தொடர்ச்சியுறு கடைசி விருந்து

பிதாவே என்னை ரச்சிப்பீராக என்று
பிராத்தனைச் செய்யப்போனேன்;
இரண்டு கைகளிலும் ரத்தம் ஊற்றெடுக்க,
கால்களும் மீந்துபடாமல் தவித்திருக்க,
வாதையின் பாவனையை முகத்திலேந்தியபடி
பிதாவே மீட்பரின்றி சிலுவையில் தொங்கியபடி.
பிதாவை மீட்டுவந்து ஃப்ரிஜ், அலமாறி, ஏசி வசதியுள்ள
அறையில் அமர வைத்தேன்;
இட்லி, தோசை படைத்து
இன்புறத் தின்னவுஞ் சொன்னேன்.
நன்னாளாம் கிறுஸ்த்துமஸ் அன்று,
கேக் எடுத்து கொண்டாடச் சொன்னேன்;
யேசுவோ ஏனோ விருப்பமற்றவராய் ஒரு ஸ்விப் ஒயினே போதுமென்றார்.

0000000000000000000000000000

மயில் லார்ட்

மயில் ஒரு தேசிய விலங்கு போல,
மயில் லார்டும் ஒரு ‘தேசிய’ அறிவு ஜீவியாக அங்கீகரிப்பட்டவர்.
விரைவில் ஒரு மகப்பேறு மருத்துவமனையைத்
தொடங்கலாம் என்ற திட்டத்தில் இருக்கும் அவர்
எம்பிபிஎஸ் படித்தவர் இல்லையென்றாலும்
அவர்களுக்கும் எட்டாத கனிகளை (காய்களை,
பிஞ்சுகள், மலர்களை, இலை தளைகளை, வேர்களை,
வேரது நீருரிஞ்ச உதவும் இத்யாதிகளையுங்கூட)
வளைந்தபடிகூட பறித்துப் புடியங்கி யவர்.
ஆக, மயில் லார்ட் ஒரு மருத்துவர், அன்றி, பெரும் மகத்துவர்.
மேலும் அவர், பிரம்மச்சாரிகளின் தவங்கள் கலையாவண்ணம்
அவர்தம் மனையாள்களைக் கரு சுமக்க வரம் தருபவர்.
ஆதலால் நீங்கள் யாரும் இனி, மஞ்சள் சுவரொட்டிகளைப் பார்த்து
பணத்தை விரையம் செய்யவேண்டாம்,
குறியதன் விரைப்பு குறித்த விசனமும் வேண்டியதில்லை,
அது சிந்துமொன்றின் வீரியம் குறித்தும் அங்ஙனமே.
இனி உங்களுடைய ஒரு துளி கண்ணீர் போதும்
அல்லதோர் வியர்வை துளியாச்சும்
மயில் லார்ட் ஒரு குழந்தை அருள.

(செய்தி: “மயில்கள் உடலுறவு வைத்துக்கொள்வதில்லை. ஆண் மயில் விடும் கண்ணீரைக் குடித்துத்தான் பெண் மயில்கள் முட்டையிடுகின்றன.” – நீதிபதி சந்திரா சர்மா)

றாம் சந்தோஷ் – இந்தியா

றாம் சந்தோஷ்

(Visited 236 times, 1 visits today)
 
றாம் சந்தோஷ்

றாம் சந்தோஷ் கவிதைகள்

பூனை பற்றி ஒரு கவிதை எழுதவேண்டும் எனினும் அது குறித்து பலர் ஏற்கனவே எழுதிவிட்டனரென்பது எனக்கோர் வாய்ப்புக்கேடு; இருந்தும், சும்மா அழைத்தவந்த பூனையைத் சும்மா திருப்பி அனுப்புவதற்கில்லை அதற்கேதேனும் தின்னக்கொடுத்தாக […]