அம்மாவின் தோழன்-சிறுகதை-தாட்சாயணி

தாட்சாயணி
ஓவியம்: சமித்திரா ஸ்ரீரங்கநாதன்

அம்மா  இத்தனை  நாள்களாய்  மனதில்  பூட்டிய  இந்த  இரகசியத்தை ஏன்  மற்றவர்களிடம்  பகிர்ந்து  கொள்ளவில்லையென்பது  இப்போதும்  ஒரு புதிராகவே  இருந்தது  எனக்கு.  அப்பா, அவரைப்  பற்றிச்  சொல்லத் தேவையில்லை.  எப்போதும்  மனதில்  தோன்றும்  குழப்பங்களை  அவரிடம் கொட்டி  ஆறுதல்  பெறுவதென்பது  ஒருவருக்கும்  இயலாத  காரியம்.  ஆனால் அம்மா  தனது  இறுதிக் காலத்தில்  கூட   உள்ளுக்குள்  இவ்வளவு இரகசியங்களை  வைத்திருந்தாள்  என  அப்பா  அறிய  நேர்ந்திருந்தால்  எப்படி அதை  உணர்ந்திருக்கக் கூடும்?

அம்மாவை  ‘மஹரகம’வில்  சேர்த்திருந்தோம்.  நோய்  முற்றிப் போய் விட்டது.  அம்மாவுக்கு  நினைவு  கொஞ்சம்,  கொஞ்சமாய்  சிதறிக் கொண்டு வந்தது.  அப்பா  பிசினஸ்,  பிசினஸ்  என்று  அலைந்து  கொண்டிருந்தார். மருத்துவமனையில்   நாங்கள்  தங்கியிருக்கும்  போது  ஏதும்  வியாபார சம்பந்தமாய் கொழும்புக்கு  வர  நேர்ந்தால்  நண்பர்களைக்  கூட்டிக்  கொண்டு  அம்மாவைப் பார்க்க  வருவார்.  அவர்களும்  ஒப்புக்கு  வந்து  நாலைந்து  நிமிடங்கள் சோகம் பொதிந்த முகத்தோடு  நின்று  விட்டுப்  புறப்படுவார்கள்.  அவர்களை  வாசலில் விட்டு,  விட்டுத்  திரும்பி  வரும்  அப்பா  கொஞ்சம்  கட்டாகப்  பணக் கற்றையை எடுத்து  நீட்டுவார்.   நான்  மறுபுறம்  முகத்தைத்  திருப்பிக்  கொண்டு  பணம் எல்லாம்  செலுத்தி  விட்டதாகச்  சொல்லுவேன்.  ‘உனக்கு எங்காலை…?’  என அவரது  அடுத்த  கேள்வி  என் முதுகைத்  துளைப்பதை  அவரைப் பார்க்காமலேயே  என்னால்  உணர  முடியும்.   “என்ரை  சலறி  கிடந்தது “  என அலட்சியமாகச்  சொல்லியவாறே  அம்மாவின்  விரல்களை  வருடத்  தொடங்குவேன். அநேகமாக  அதற்குப் பின்  ஒன்றிரண்டு  நிமிடங்கள்  மௌனமாக  நின்று விட்டு அங்கிருந்து  அகன்று  விடுவார்  அப்பா.

அம்மாவுக்குத்  தன்னுடைய   இறுதிக் காலத்தை  நெருங்குகிறோம் என்பது  தெரிந்திருக்க  வேண்டும்.  அண்ணனையும்,  குழந்தைகளையும்  பார்க்க வேண்டுமென்கின்ற  அவளது  தீராத  தாபம்  சென்ற  வருடப்பிறப்போடு  தீர்ந்து விட்டது.  ஒரு  மாதத்திற்கு  அண்ணா  குடும்பத்தோடு  வந்து  போனது  அவளது இந்த  ஆயுளுக்குப்  போதும்  என்று  பல முறை  சொல்லிக் கொண்டிருந்தாள். அதற்கும்  மேலாக  அம்மா  மற்றவர்  நலன்களை  அதிகம்  பார்ப்பவள்.  இங்கு வந்து  போவது  அண்ணனுக்கு  மிகச்  சிரமத்தை  ஏற்படுத்தி  விடக் கூடாதென்ற கரிசனையும்  அவளிடம்  மிகுந்திருந்தது.  வந்து  போகும்  போது  அவர்கள் ஏற்படுத்திக்  கொடுத்த  ‘வைபர்’  வசதி  நினைத்த  மாத்திரத்தில்  பேரப் பிள்ளைகளோடு   அவளைக்  கொஞ்சிப் பேச  வைக்கிறது.  அதற்கு மேல்  அவள் அண்ணனிடம்  எதிர்பார்க்க  என்ன இருக்கிறது?

மிஞ்சிப் போனால்  அம்மாவுக்கு  இருக்க வேண்டிய  கவலை  என் கல்யாணத்தைப்  பற்றியதாக  இருக்க  வேண்டும்.  அதைப் பற்றியும்  அம்மா கவலைப்படுவதாகத்  தெரியவில்லை. கல்யாணமே  வேண்டாம்  என்று  கடந்த இரண்டு  வருடங்களாக  முரண்டு  பிடித்த  நான்  எனக்கு  ஏற்றவன்  என்று ஒருவனை  அடையாளம்  காட்டிய பிறகு  அந்தக்  கவலையும்  அம்மாவிடமிருந்து விடை  பெற்றுப்  போய் விட்டது.  இருந்தும்  அம்மா  சோர்வாக  இருக்கிறாள் என்பது  எனக்குப்  புரிகிறது.  இது  நோயின்  சோர்வாக  இருக்கலாம்.  ஆனால் அம்மா  என்  கையைப்  பற்றுவதிலிருந்து  வேறேதோ  சொல்ல  விளைவது தெரிகிறது.

அம்மா  வழக்கமாக  அண்ணனுடனேயே  தன்னுடைய  உணர்வுகளைக்  கொட்டும்  வழக்கத்தைக்  கொண்டிருந்தாள்.  அண்ணனும், அம்மாவும்  கதைத்துக்  கொண்டிருக்கின்ற  எனது  சிறு பிள்ளைப் பருவங்களில் நான்  அதிகம்  தனித்திருப்பதாக  உணர்ந்திருக்கிறேன்.   அண்ணன்  இயக்கத்திற்குப்  போய்  விடலாம்  எனும்  அச்சத்தின்  காரணமாக  அம்மாவுக்கு அண்ணனுடன்  வந்த  நெருக்கமாயிருக்கலாம்  அது.  அப்பாவின்  அதிகப்படியான  கண்டிப்பு  குடும்ப அமைப்பிலிருந்து  அவனைத்  தூரக்  கொண்டு  போய்  விடக்கூடாது  எனும் எச்சரிக்கையுணர்வு  காரணமாக  அம்மா  அவனைத்  தன்  கைப்பிடிக்குள்  வைத்து இறுக்கியிருக்கலாம்  என  இப்போது  உணர்கிறேன்.  ஏனென்றால்  அவன் லண்டனுக்குப்  போய்  அவனுக்கான  பெண்ணைத்  தேர்ந்தெடுத்து  அனுப்பிய பிறகு  அவனுடைய  சுக  துக்கங்களை  விசாரித்ததற்கு  மேலாக  அவனை  அதிகம் உரிமை  கொண்டாடவில்லை  அம்மா.  மாறாக  அவளிடம்  என்  மீதான  கரிசனை  அதிகம்,  அதிகமாய்  வளர்ந்தது  என்பது  தான்  உண்மை.

நள்ளிரவு  கடந்து  சில  நிமிடங்களேயான  ஒரு  விடிகாலைப்பொழுது,  நட்சத்திரமொன்று  ஜன்னலுக்கு  வெளியே  கண்  சிமிட்டிக் கொண்டிருந்த வேளையில்  அம்மா  என்னைக்  கூப்பிட்டாள்.  உறக்கத்திலிருந்து  பிரிந்து வெளியே  வர  என்  உணர்வுகள்  மிகுந்த  சிரமப்பட்டன.  ‘யூரின்’  போவதற்காக அல்லது  உடல்  வலிக்கு  ஏதும்  மாத்திரை  தேவைப்பட்டு   அம்மா  என்னை எழுப்பியிருக்கக் கூடும்  என்றே  நினைத்தேன்.  ஆனால்,  அம்மா  அப்படி  ஏதும் சொல்லவில்லை.  உறக்கம்  வரவில்லை  எனச்  சொன்னாள்.  உறக்கம் வராவிட்டால்  கந்தர்சஷ்டி  கவசமோ  அல்லது  வேறு  ஏதேனும்  ஒரு பாட்டையோ  போட்டு  விடட்டுமா?  என்றேன்.

‘வேண்டாம்  நீ  என்னோடை கொஞ்ச  நேரம்  கதைத்துக்  கொண்டிரு”  என்றாள்.  கதைத்துக் கொண்டிருப்பதா…?  இந்தச்  சாமத்தில்  எழும்பியிருந்து  என்னத்தைக்  கதைத்துக்  கொண்டிருப்பது?  எனத்  தோன்றினாலும்  அம்மாவின்  மனத்தைப் புண்படுத்த  விரும்பாமல்  நோய்  அம்மாவுக்குத்  தனிமை  உணர்வைக்  கொடுத்து விட்டது  என்பதை  வேதனையோடு  உணர்ந்தேன்.  அம்மாவின்  கட்டிலில் அமர்ந்து  அவள்   தோள்களை  மெல்ல  வருடினேன்.   அம்மாவின்  கண்கள் கலங்கின.  அப்படியே  கொஞ்ச  நேரம்  என்  கைகளை  பற்றிக்  கொண்டேயிருந்த  நொடிகள்  அவை.  அதற்குப்  பிறகு  புரிந்தது.  அம்மாவுக்குச் சமாதானமாக  நான்  எதையும்  பேசத்  தேவையில்லை,  அம்மாவே  இனிப் பேசுவாள்  என்று.

“ஊருக்குப்  போகோணும்  போல கிடக்கு…”  என்றாள்  அம்மா.

நான் அவள் விரல்களை மெல்லமாய் அழுத்திக்  கொண்டிருந்தேன்.  எனக்கு அம்மாவின்  ஊர்  அவ்வளவு  பரிச்சயமில்லை.  பிறந்ததிலிருந்தே  நகருக்குள் தான்  எனது  வாழ்வு.  அம்மாவின்  ஊர்  நாற்புறமும்  கடலால் சூழப்பட்டிருந்ததாம்.  நகருக்கு  வருவதனால்  படகில்  தான்  வரவேண்டுமாம் என்று  சிறு வயதில்  அண்ணன்  சொல்லியிருக்கிறான்.

அம்மாவுக்கென்றொரு சிறு பராயம் இருந்திருக்கும். அம்மாவுக்கென்றொரு ஊர் இருந்திருக்கும். அம்மா சிறுமியாய் ஏகபோகம் கொண்டாடிய சில இடங்கள் பிரத்தியேகமாய் அவளுக்கு வாய்த்திருக்கும். இதெல்லாவற்றையும் அம்மா  ‘ஊருக்குப் போகோணும் போலை கிடக்கு’  என்ற வார்த்தைகளினூடாக என்னை உணர வைத்தாள். அங்கே யார் இருக்கிறார்கள் இப்போது? அம்மாவை நகரத்தில் கட்டிக் கொடுத்த கையோடு அம்மம்மாவும், தாத்தாவும்  வீடு, வாசல் காணிகளை விற்று இப்பால் குடி பெயர்ந்த பிறகு அம்மா யாருக்காக அங்கே போக வேண்டி இருந்திருக்கும்?

“அங்க ஆரம்மா இருக்கிற? ஒரு சொந்தமும் அங்க இப்ப இல்லையென்று தானே அப்பா சொல்லுறவர்”

“ஒரு சொந்தமும் இல்லாட்டிலும் எல்லாம் அங்க தான் இருக்கு…”

அம்மாவின் குரல் தழுதழுத்தது.

அம்மா இப்படி இலேசில் கதைக்கிறவளில்லை.

இந்தச் சின்னக் குடும்பத்தைத் தவிர வேறெந்தச் சிந்தனையும் அவளுக்கு இருந்ததில்லை.

சில வேளைகளில்  நான் கூடச் சொல்லியிருக்கிறேன்.

“இந்த வீட்டு நினைப்பை விட்டிட்டு வெளி உலகத்துக்கும் ஒருக்கா வந்து பாருங்கோ அம்மா”

அம்மா எதற்கும் மசிவதில்லை.

அப்பாவை கொழும்பிற்கோ, திருகோணமலைக்கோ கூட்டிப் போகுமாறு அண்ணனும், நானும் கேட்கும் வேளைகளிலும் அம்மா அதில் ஆர்வம் காட்டுவதில்லை. அப்படியான அம்மாவிற்கு இப்போது ஊருக்குப் போக ஆசை வந்திருக்கிறது.

“சரி அம்மா, ஹொஸ்பிடலிலை இருந்து வீட்டை போன பிறகு நாங்கள் ஊருக்குப் போவம்.”

“அங்க தான் எல்லாம் இருக்கு. …, எல்லாம்…”

அம்மா சிறு குழந்தை போல் தேம்பினாள்.

“உனக்குத் தெரியுமோ ஹம்சா, உன்ரை பேரிலை ஒரு ராகம் இருக்குதெண்டு…”

“ஹம்சத்வனி ராகம் தானே ,  தெரியும்”

“அப்பிடி ஒரு ராகத்திலை நான் ஏன் உனக்குப் பேர் வைக்க வேணும்…”

“நல்ல பேர் எண்டு வைச்சதாய் அப்பா சொல்லுறவர். ஏன் எண்டு நீங்கள் தான் சொல்லவேணும்…”

“நான் அப்ப சங்கீதத்திலை எவ்வளவு பைத்தியமாய் இருந்தனான் தெரியுமோ…?”

“உண்மையாவோ அம்மா…” நான் அதிர்ந்து தான் போனேன்.

தொலைக்காட்சியில் எத்தனையோ ‘சூப்பர் சிங்கர்’ நிகழ்ச்சிகள் கடந்து போக அடுக்களையை விட்டு வெளியே வராத அம்மாவை ‘கலை ரசனை எதுவுமில்லாத அம்மா’ என்று அண்ணனும், நானும் நக்கலடித்திருக்கிறோம்.

நான் சடுதியாக அண்ணன் பெயரை யோசித்து அதிர்ந்தேன்.

அவனது பெயர் சண்முகப் பிரியன்.

இத்தனை நாளாய் குலதெய்வம் முருகன் என்பதால் அந்தப் பெயரை வைத்ததாகத் தானே நம் எல்லோருமே எண்ணியிருந்தோம்.

“அப்ப ஏன் அம்மா இவ்வளவு நாளும் உதை நீங்கள் சொல்லேல்லை”

“என்னெண்டு சொல்லுறது? எல்லா ஆசையும் வேரோடை பிடுங்குப்பட்ட    பிறகு…?”

நான் எதுவும் பேசாமலே மௌனமாக இருந்தேன். அம்மா மழை போலக்   கொட்டத் தொடங்கினாள்.

“சின்னனிலையிருந்து எனக்கு சங்கீதமெண்டால் அவ்வளவு விருப்பம்.பிரேயரில நெடுகிலும் நான் தான் தேவாரம் படிக்கிறது, ஊரிலை எங்கட குடும்பம் தான் வசதியான குடும்பம். என்னை பிரைவேட்டா    சங்கீதம் படிக்க அனுப்பினவை

மனோகரி டீச்சர் தான் எங்கட ஊரிலை பெரிய சங்கீத டீச்சர். இந்தியாவிலையெல்லம் போய் படிச்சிட்டு வந்தவ. அவவிட்டைப் படிச்சுத்தான் போர்த் கிரேட் மட்டும் பாஸ் பண்ணின்னான். எங்களோட சண்முகதாசன் எண்டவரும் சங்கீதம் படிக்க வந்தார். அவரிண்டை குரல் நல்ல கணீர் எண்ட குரல். எனக்கு கொஞ்சம், கொஞ்சமா அவரிலை விருப்பம் வரத் தொடங்கீட்டுது. கோயில் திருவிழாவிலை பஞ்சபுராணம் படிக்கேக்க ஒண்டு விட்டொரு நாள் நானும் அவரும் தான் மாறி, மாறிப் படிப்பம். இது ஆர்ரையோ கண்ணைக் குத்திப் போட்டுது. வீட்டிலை ஆரோ போட்டுக் குடுத்திட்டாங்கள். கலியாணப் பேச்சுத் தொடங்கீற்றுது. அது வரைக்கும் தனிப்பட அவரோட எதுவும் கதைக்காத நான் கோயிலடியிலை அவரைக் கண்டு சொன்னன்.

“எனக்கு கலியாணம் பேசீனம்” எண்டு.

“நல்ல விஷயம் தானே, வாழ்த்துக்கள்…” எண்டார்.

எனக்கு என்ரை தலைக்கு மேல வானம் இடிஞ்சு விழுந்தது போலயிருந்தது. இதை நான் எதிர்பாக்கேல்லை.

அவரும், நானும் சங்கீதம் படிக்கிற முறையில தெரியும். அவருக்கு என்னிலையும், எனக்கு அவரிலையும் இருந்த விருப்பம்.  ஊரிலை எங்கட ஐயாவுக்கிருந்த மரியாதையாலை அவர் அதை மறைச்சிருக்கலாம். ஆனா ஒண்டு மட்டும் சொன்னார்.  கலியாணத்துக்குப் பிறகும் சங்கீதத்தை விட வேண்டாமெண்டு.  அவர் அப்பிடிச் சொன்னதால தான்  அவரிலை கோபத்தைக் காட்டுறதுக்கு   சங்கீதத்தை அதோடை கை விட்டன். எண்டாலும் மனசுக்கடிலையிருந்த   ஒரு சின்ன ஆசை தான் உங்கள் ரெண்டு பேரிண்டை பேரிலையும் வந்து நிக்குது.”

தட்டுத் தடுமாறிச் சொல்லி முடித்த அம்மா இப்போது மூச்சு வாங்குகிறாள்.

நான் திகைத்துப் போய் அமர்ந்திருந்தேன்.

“அந்த அங்கிள் இப்ப எங்க?  என்ன செய்யிறார்.?”

“அங்க தான் அப்ப ஒரு பள்ளிக்கூடத்திலை மாஸ்டராய் இருந்தவர்.

அதுக்குப் பிறகு, நான் அவரைக் காணவுமில்லை. அவரைப் பற்றி அறிய விரும்பவுமில்லை…”

அம்மா களைப்போடு மூச்சு வாங்கினாள்.

“சரி, அம்மா கொஞ்சத்துக்குப் படுங்கோ, விடியப் போகுது…”

ஜன்னலுக்கு வெளியே வெளிச்சமும், இருளும் மாறி, மாறிக் கண்ணாமூச்சி ஆடின. அம்மாவின் விழிகள் மூடுவதற்குத் தயங்கின.

“அந்த அங்கிளைப் பாக்கோணும் போல கிடக்கோ…?” என்றேன் மெதுவாக.

“அவரும் என்ன செய்யிற, எங்கட ஐயாவுக்குப் பயந்திருக்கலாம். நான் தான் அவரிலை தேவையில்லாமல் கோபப்பட்டு ஊர்ப்பக்கம் போகாமல் இருந்திட்டனோ எண்டு கிடக்கு. எப்பவும் சின்னப் பிள்ளைகளாவே இருந்திருக்கலாம். அப்பிடியெண்டா எப்பவும் பிரெண்டசாவே இருந்திருக்கலாம். உண்மையில அவன் ஒரு நல்ல நண்பன். நான் அவனையும் எங்கட  ஊரையும் இவ்வளவு நாளா மிஸ் பண்ணீற்றன்.”

“சரி அம்மா, நான் உங்களை ஊருக்கு கூட்டிக் கொண்டு போறன்.  நீங்கள் எனக்கு அங்க நிறையக் காட்டப் போறீங்கள், சரி தானே…”

நான் அம்மாவின் கையைப் பற்றிக் கொண்டு சொன்னேன். அம்மா ஆறுதலாய்க் கண்களை மூடினாள்.

நானும் கனவொன்று கண்ட மயக்கத்தில் கதிரையிலேயே கண்ணயர்ந்து விட்டேன். வெளிச்சம் முகத்தில் அடித்த பொழுதில் திடுக்கிட்டு எழுந்த   போது அம்மாவைப் பார்த்தேன். விழிகள் மூடியபடி நிர்ச்சலனத்தில்   பூத்திருந்தது முகம். அருகே சென்று அவள் கையைத் தொட்ட போது தான் அந்தக் கைகள்  பச்சையாய்க்  குளிர்ந்திருந்ததை உணர்ந்தேன். அதற்குப் பிறகு எந்தப் பிரயோசனமும் இருக்கவில்லை. தன் இரகசியம் அனைத்தையும் என்னிடம் கொட்டி விட்ட  திருப்தியில் அம்மா இந்த உலகத்தை விட்டுப் போய் விட்டாள்

அம்மாவின்  இறப்பிற்கு  நாங்கள்  அண்ணன்  வருவானென்று  காத்திருக்க வில்லை.  அம்மா  அவன்  வர வேண்டுமென்று எதிர்பார்க்கவுமில்லை.   அவனுக்கு  இந்த  வருடத்தில்  இன்னொரு  தரம்  வருவது சிரமம்  என்பதை  அவன்  போகும்  போதே  தெரியப்படுத்தி  விட்டுத்  தான் போயிருந்தான்.  அப்பா  அம்மாவின்  இறுதிச் சடங்குகளை அவனுக்கு ‘லைவா’க  வீடியோ எடுத்து அனுப்ப ஏற்பாடு செய்திருந்தார். நான்  அம்மாவையே பார்த்தபடி  தலைமாட்டில்  அமர்ந்திருந்தேன். யார், யாரோ வந்து போய்க் கொண்டிருந்தார்கள்.  அநேகமாக அப்பாவின் வியாபார நண்பர்கள். உடலை எடுக்கு முன் சில வேளை ஏதேனும் அஞ்சலி உரைக்கு  அவர்கள் தயாராகிக் கொண்டிருக்கலாம்,  ஆனால்  இப்போது  வருபவர்கள்  எல்லாம்  அப்பாவின் நண்பர்கள்.  அம்மாவுக்கென்று யார் இருக்கக் கூடும்…?  . இவ்வளவு காலம் போன பிறகு, ஊர் விட்டு ஊர் வந்த பிறகு அவளுக்கென்று  யாரும் வரப் போவதில்லையா…?

என்  நினைவுகள் அம்மாவின் சிறு  பிராயத்தை நோக்கிச்  சுழன்று கொண்டிருந்தன.  இப்படித்  தனித்து  விடப்பட்ட  நிலை அம்மாவுக்குத் தோன்றியிருக்கவே  கூடாது.  கிரியைகளுக்குச்  சற்று  முன்னதாக  அம்மா  உள் விறாந்தையில்  கிடத்தப்பட்டிருந்த  கடைசி  நிமிடங்களில்  அது  நிகழ்ந்தது. தூரத்திலிருந்து  அவர்  வந்திருக்க  வேண்டும்.  அவரை  அங்கிருந்த  யாரும் அடையாளம்  கண்டு  கொண்டிருக்கவில்லை, அப்பா  உள்பட.  அம்மாவைப் பார்த்துக்  கை  கூப்பிய படி  நின்றார்.  அவர்  கண்களுக்கடியில்  நீர்  திரள்வதை என்னால்  உணர  முடிந்தது.  அன்றைய  பத்திரிகையை  அவர்  பார்த்திருக்க வேண்டும்.  இல்லா விட்டால்  அதை யாரும் அவருக்குச்  சொல்லியிருக்க மாட்டார்கள்.  நான் எழுந்திருந்தேன்.  சம்பிரதாயபூர்வமாக  அவர் கேட்டார்.

“எப்ப பிள்ளை நடந்தது.?”

“நேற்று விடிய” அழுகையை உள்ளே அடக்கிக் கொண்டு பதில் சொன்னேன்.

“நீங்கள்…?”

“நான்  அம்மாண்டை  ஊர்க்காரன்…” அந்தப் பதில் ஒன்று எனக்குப் போதுமாய் இருந்தது.

“சண்முகதாசன்  அங்கிள்” என  இழுத்தேன்.

அவர் முகத்தில் ஒரு வெளிச்சம்.

“ஓம் நான் தான்…”  அதற்குப் பிறகு  அவர்  எதுவும்  சொல்லாமலே சபையில்  போய்  அமர்ந்தார்.  இனி  அப்பாவின்  நண்பர்களின்  விலாவாரியான அரட்டைகளிலிருந்து   அம்மாவுக்கு  என்ன  வருத்தம்  என்றும்  அம்மா எப்படி இறந்தாள்  என்றும்  அவர்  அறிந்து  கொள்ளக் கூடும்.

பரபரப்பாக  ஓடித்  திரியும் அப்பாவைப்  பார்க்கப்  பாவமாக  இருந்தது. தன்னை  மட்டுமே  நம்பி  வந்த  அம்மாவின்  மனசை  இத்தனை காலம் புரியாமலே  இருந்திருக்கிறார்.  இத்தனை  இரகசியங்களை  வைத்திருந்த அம்மா ஒரு நாள் கூட மனசு நெருங்கி  அப்பாவிடம் தன்  வேதனைகளைப்  பகிர்ந்து கொள்ளவில்லை என்றால் அது எத்தனை வியாபார வெற்றிகளைப் பெற்றாலும் அப்பாவுக்கானதோல்வி  தானே.

கிரியைகள் ஆரம்பித்த பின்னர் சுண்ணமிடிக்க ஆயத்தங்கள் நடந்தன. அப்பா என்னைக் கூப்பிட்டு தூர இருந்து வந்த அவரது நண்பர் ஒருவரை அறிமுகப்படுத்திக் கொண்டிருந்தார். வெறுமே அவர் கதைப்பதற்கெல்லாம் தலையை ஆட்டிக் கொண்டிருந்த என் காதில் ‘முத்து நல் தாழம்பூ மாலை தூக்கி…” எனும் சுண்ணப் பாடல் கணீரென்று வந்து விழுந்தது. நான் மட்டுமல்லாமல் அப்பா உள்பட எங்கள் எல்லோரது பார்வையும் அந்தக் குரல் வந்த திக்கில் திரும்பியது. தொடர்ந்து வந்த பத்து நிமிடங்களுக்கு அந்தக் குரலைத் தவிர வேறெந்த இலை அசையும் சப்தமும் இல்லாத நிசப்த நிலையை நான் உணர்ந்தேன்.

சண்முகதாசன் அங்கிளின் அந்தக் குரலுக்கு அம்மாவின் ஆத்மாவை அமைதியடைய வைக்கும் சக்தி இருப்பதாக அந்தத் தருணத்தில் எனக்குத் தோன்றியது.

தாட்சாயணி -இலங்கை

(Visited 342 times, 1 visits today)
 

6 thoughts on “அம்மாவின் தோழன்-சிறுகதை-தாட்சாயணி”

Comments are closed.