ஆற்றினைப் போத்தலினுள் அடைப்பவன்-கவிதை-தாட்சாயணி

ஆற்றினைப் போத்தலினுள் அடைப்பவன்

தாட்சாயிணி

ஆற்றினை அண்டிய வெளிகளில்
நிறைய நண்பர்கள் ஆற்றுக்கு!

நாரைகளும் பறவைகளும்
விலங்குகளும் மனிதர்களும் என…

நீர்ச்சரங்களோடு
கை குலுக்கிய ஆறு
சதங்கைகளைக் கட்டியிருக்கும்
மாரி காலங்களில்…
வழிய வழிய ஓடும்…
சிரிக்கும்…
காற்றை எட்டி வம்புக்கிழுக்கும்…

மண் நிறைய… மடி நிறைய…
சோலை வனங்களைப் பூத்திருக்கும்…!
பெருகி ஓடும் காலங்களில்
வனப்பினைத் திருடி
ரகசியமாய் அணிந்திருக்கும்…!

கலகலப்பைச் சுமந்த ஆறு
இப்போது
காசு காய்க்கத் தொடங்கியிருக்கிறது!

ஆற்றினைப் போத்தலில் அடைப்பவன்
அந்தக் கரையினை
வந்தடைந்த போது…
ஆற்றின் முகத்தில்
திகில் படரத் தொடங்கியிருந்தது…!

ஒன்றொன்றாய்
அது தன் அணிகலன்களை
இழக்கத் தொடங்கிற்று!

இப்போது ஒரு சிறு நூலாய்
அடங்கிப் போய்க் கிடக்கிறது ஆறு!

ஆற்றினைப் போத்தலில்
அடைப்பவன் மட்டும்
அருகே குடில் அமைத்துத்
தங்கியிருக்கிறான்…!

000000000000000000000000000000

ஆறு புகுந்த குடுவைகள்
வரிசையாய் ஒளிர்ந்து கொண்டிருந்தன!
வரிசையில் ஆறுகள் ஓடின…!
ஆறுகளின் பளபளப்பு
குடுவைகளுக்குள்
கொஞ்சம் அதிகமாகி விட்டதா..?

ஆற்றினைக் குடுவைகளுக்குள் அடைத்தவன்
எங்கே போய் விட்டான் …?
வரிசையாய்
ஆற்றினைத் துண்டு துண்டாய் நிறுத்தியதை
ரசித்துக் கொண்டிருப்பானா…?

வயலுக்குள் வீழ்ந்த ஆறு
திரும்பியிருக்கிறது குடுவைக்குள்…!

ஒரே மாதிரியான
குடுவைகளைச் செய்தவன்…
ஒரே மாதிரி நிறங்களைக் கொணர்ந்தவன்…
மீன்களைச் சேர்த்து அடைக்க மட்டும்
மறந்து விட்டான் ….!

00000000000000000000000000000000000

ஆதிக்குரல் ஒன்று

தாட்சாயிணி

ஒரு தாள லயத்தைச் சிந்தி வரும் மழை
முன்னெப்போதும் வந்திராதது…!
மழைக் குருவிகள் எங்கோ மறைந்து கொண்டன….!
இலைகளில் குழுமிய ஈர முத்துக்கள்
பேசிக் கொண்டேயிருந்தன…!

பருவகாலம் மாறிய ஒரு தருணத்தில்
ஈசல்கள் உற்பவித்தன!
சிதைந்து போன ஒரு புராதன நகரத்தின்
தெருவிலிருந்து ஒலிக்கிறது
யாழின் இசை கூட்டல்…

ஸ்வரங்கள் தேய்ந்திருக்கின்றன…!
சிதைவுகள் அப்புறப்படுத்தப்படுகின்றன!
எஞ்சியிருப்பது
தொல்பொருள் சின்னங்கள் மட்டுமே…!

கோட்டைக்குள்ளிருந்து எழுகிறது
பலநூறு ஆண்டுகளின் முன்பிருந்ததான
ஆதிக்குரலொன்று…!
ஆதியில் யார் இருந்த சரித்திரம்…?
யார் உழுத உழவு…?
யாரோ விதைத்ததை
இப்போது நாம்
அறுத்துக் கொண்டிருக்கிறோம்…!

தாட்சாயிணி-இலங்கை

தாட்சாயிணி

(Visited 106 times, 1 visits today)