உன்னோடு இற(ரு)ந்து பிறந்த நிமிடங்கள்-கவிதை-சமித்திரா ஸ்ரீரங்கநாதன்( அறிமுகம் )

சமித்திரா ஸ்ரீரங்கநாதன்

சொக்குப் பொடி போட்ட உன் பெயர்
உதடுகளைக் கடந்து வெடித்துக் கொண்டது
கைகளில் பிடி இழகியது.
உன்னை மறக்கும் ஒவ்வொரு முறையும்
தோற்றுப் போவதில்
கேடயம் ஏந்தினேன்.
மூளை நரம்புகளில்
மின் பாய்ச்சியிறைத்தாய்
உதட்டில் புன்னகை பிரகாசமானது – அது
கடைக்கண்ணால் நீ வைத்த கண்ணி வெடியென்பேன்.

அன்றாட வார்த்தைகள்
அர்த்தமற்றுப் போன – அந் நாளில்
ஆதரவாய் வருடினாய் நெற்றி முத்தத்துடன்
என்னோடு நீ கொள்ளும் சம்பாசனைகள் -இந்த
அண்டத்திற்கு ஒப்பானதென்பேன்
இருந்தும் அழுகிறேன். நாம்
கண்ணயரும் நேரம் வீணாகப் போய்விடும் – என

நான் கிறுக்கல்களை இரசிப்பவள் – மேலும் பல
கிரகங்களைத் தாண்டிச் சிந்தனை செய்பவள்
அன்றாடம் நாம் பகிரும் நேரத்தை
இவ் விதி என்னதான் செய்ய முடியும் – அது
கடந்துவிட்ட காலமென்பேன்.

உன்னோடுள்ள அனைத்துச் சந்தர்ப்பங்களிலும்
நீயென்னை அதிகாரப் பாவையாவே உருவகப்படுத்தியுள்ளாய்.
அதனாலோ என்னமோ ?
ஒவ்வொருமுறையும் உன்னைச்
சிறை வைத்து-நான் கைதியாகின்றேன்.
என் எண்ணத்தைச் சிறைபிடிக்கும் கைதி நீயேயென்பேன்.

0000000000000000000000000000

உலகம் பிரசவித்த நாளென்பேன் !!!
விண்வெளிகள் குதூகலித்ததென்பேன் !!!
உனது பிறப்புச் செய்தி எனக்காக விசேடமாகப்
பாதுகாக்கப் பட்ட புதையற் செய்தி !!!

யாரும் சொல்லியிருக்காத போது
உன்னில் ஒரு முன் ஜென்மத் தொடர்பொன்று கண்டேன் !!!
நீ! வாழ ஆசைப்படுபவன் – ஆகையால்
வாழ்த்துக்களை சுவீகரிப்பாய் – நீ
வரையறைக்குள் அடங்காதவனே – நீ வரையும் கற்பனைகளின் வண்ணமாக வியக்கிறேன்.
சாதாரண பிரமிப்புகள் அங்கங்கே பொருத்தி
வெள்ளந்தித்தனங்களை அப்பட்டமாகப் பூசுகிறாய்
உன்னில் ஏதோ விசேட உந்தல்
அனைத்தயும் அடைந்துவிட்ட உணர்வு
பைத்தியமாய் உளறுகிறேன்.
உன்னைப் போலொருவனை அடுத்த விநாடியில் சந்தித்திடக் கூடுமோ? -என மனம் பதைக்கிறேன்.
உயிரியற் பெளதீகங்களை விட உளவியலில் மோகம் கொண்டவள் – நான் நீயும் அப்படித்தான்.

அறிவார்ந்த தோழமை உனக்கு ஆக்கினை கொடுக்கும் ஒன்றாய் அமைந்திருக்கின்றது.
என்னில் எதைத் தேடுகிறாய்?
தொலைத்த பொருளையா – இல்லை
அடைய எண்ணும் நிஜத்தையா?
தேடலில் தொலைவதுதான் உன் நோக்கமென்றால்
முன்னறிவிப்புத் தேவையில்லை என்பேன்.

கைபேசியுடன் கொண்ட உறவு உன்னாலன்றோ ?
எதை எடுக்க ? எதை விலக்க ? என்று
உன்னுடன் விவாதிக்கும் ஒவ்வொரு உரையாடலையும் ஒட்டுக்கேட்கும் வெட்கம் கெட்ட உயிரில்லாக் கருவி

0000000000000000000000000000

முத்தம்
இரு பாற்பொருட்படும்
சர்ச்சைதான் – அது
இலக்கியப் பிழைகள்
இயல்பாய்க் கொண்டுவர
காதல், களவி தினசரிப்
பொருளில் பண்டப் பரிமாற்றம்
இதழ்களின் இடையில்
எதற்கு அழுவது
ஏன் தான் சிரிப்பது
பரிமாற்றத்தின் உச்சக் கட்டம் – இரு
உடல் வெப்பத்தின் சம நிலை
விந்தை தான்
புணர்தலில் முத்தம்
மூச்சு மூட்டும் கொடை.
கண்களில் தொடங்கி
காதோரச் சந்தியில்
இதழ் வழி செல்வது
இறுக்கிய கரங்களில்
புலன்களை மறைப்பது
புதுவழி சமைப்பது
இரத்தக் கொதிப்பின்
உச்சப் பிரளயம்
அமானுஸ்ய சாட்சியம் -இது
மிருக பலாத்காரம்
பெரும் பொருள் விளக்க
சிறிதொரு உதாரணம்.

சமித்திரா ஸ்ரீரங்கநாதன்-இலங்கை

சமித்திரா ஸ்ரீரங்கநாதன்

(Visited 183 times, 1 visits today)