கொலையுண்ட நகரம் -சிறுகதை-சு.கருணாநிதி ( அறிமுகம் )

சு.கருணாநிதிஊருக்குப் போய் வந்த நாளிலிருந்து மனம் எந் நேரமும்  இனம்புரியாத ஒருவித பயத்தால்  ஆட்கொள்ளப்பட்டு , இதயம் வேகமாக துடிக்கின்றது, நடப்பதும், பேசுவதும், இயங்குவதும்   சமநிலையற்று தளம்பல் நிலையிலிருக்கின்றது. பயமும் பதறலுமாக.கையும் மெய்யுமாகப் பிடிபட்ட திருடனைப்போல என்னியக்கம் என்னிடத்திலில்லாதது போல ஏதோவொரு மனப்பிரமை இறுக்கி பிடித்துக்கொண்டிருக்கின்றது. அந்தகார வெளியில் நான் தனித்துவிடப்பட்டிருப்பதான ஒரு தவிப்பு,ஏக்கம். றெயிலில் ஏறும்போதும் இறங்கும் போதும் கூட கால்கள் தடுமாறுகின்றன. மாடிப்படியில் கால் பதிக்க பயப்படுகிறேன். எவருடைய தோழையாவது  பற்றிப்பிடித்துக்கொண்டு ஏறலாமோவென மனம்  நினைக்கின்றது.

ஒருபடியிலிருந்து மறு படிமாறும் கணத்தில் உலக அழிவிற்கான அனைத்தும் விரைவாக் நடந்து முடிகின்றன. அதற்குள் நானாகவும், அது எனக்கானதாகவும் அமைவதாய் எண்ணி, மனம் திகில் கொள்கிறது. உலகில் நிகழுகின்ற எல்லா ஆக்கங்களுக்கும் ,அழிவுகளுக்கும் நானும் உடந்தையாகவிருப்பதாகவும் பொறுப்பாளனாய்   இருப்பதாகவுமுணர்கிறேன்.

சின்னச்சின்ன வேலைகளெல்லாம் பெரிதாகவே தெரிகின்றன. காண்பனவெல்லாம் வெறுமையாக இருப்பதாய் உணர்கிறேன். வேலைக்குப்போய் வீடு வந்து சேர்வது கூட ஒரு சாதனையாகப் படுகிறது. சாதாரணமாக தொலைபெசி மணியடித்தாலும் ரசீவரை  எடுக்க கை நடுங்குகிறது. இதையாரிடமாவது சொன்னால் ஊருக்குப்போன இடத்தில பேய் பிடித்திருக்கும் என்று இலுகுவாகச் சொல்லி  முடித்து விடுவார்கள். தெருவெல்லாம் மயானமாக விருந்த காலங்களில் நிலமெங்கும்  பேய்கள் நடமாடித்திரியலாம் என்ற ஐதீகமும் உண்டு.

மனிதனின் முதலெதிரி பயம். பயம் இயலாமையைத்தருகிறது, இயலாமை வெறுப்பைத்தருகிறது,வெறுப்பால் மனம் விரக்தித்தீயில் வீழ்ந்து வெந்து மடிகின்றது. வீழ்ந்து மடிந்த மனதை என்னால் மட்டுமே உயிர்ப்பிக்க முடியும் ஆனாலும் ‘முடியாது’ என்ற முடிவிற்கு மனம்  வந்து விடுகிறது. இயலாமைக்குள் மூழ்கியிருப்பதினால் எல்லாவற்றிலுமான நம்பிக்கைகள் , வாழ்தலின் மீதான பிடிமானங்கள்  யாவும் கைவிட்டுப்போகின்றன. நம்பிக்கைதானே வாழ்வு,அது இல்லையேல் மனிதன் வெறும் சடமே. தோழா ! உன் தொலைபேசி அழைப்பு என்னை ஓரளவேனும் தெம்பூட்டியிருக்கின்றது. உன்னோடு பேசிக்கொண்டிருக்கும் கணங்கள் மட்டுமே உற்சாகமாயிருந்திருக்கின்றேன். மறுகணம் மடிந்து போகிறேன். இடையே யதார்த்தத்தை நினைக்கையில் மனம் மீண்டும் தடுமாறுகிறது,பயப்படுகிறது. வாழ்வு இவ்வளவு பயங்கரமானதாகி விட்டது. இல்லை, நாம்தாம் பயங்கரமானதாக்கி விடோம்.

“ஊர் நிலமைகள் எப்படியிருக்கு?” என்று  கேட்டிருந்தாய்.

அக்கணமெனக்கு சொல்லத்தெரியாதிருந்தது. தாய்நிலம் கண்ட அதிர்ற்சியின் தாக்கம் வார்த்தைகளை தடுப்புக்காவலில் வைத்திருந்தது. ஊர் போய் இருந்த நிம்மதியையும் மகிழ்ச்சியையும் இழந்து வந்திருக்கின்றேன். போய் வந்த நாளிலிருந்து டென்சன் ஆகவே இருக்க மனமும் கால்களும் வெவ்வேறு பாதைகளில் பயணிக்கின்றன. இவையிரண்டையும் ஒருநிலைப்படுத்த  முடியாமல் தவிக்கிறேன். வாழ்தல் என்பது விசித்திரமான தொன்றாக இருக்கிறது.

கனவுக்கும் வாழ்விற்கும் இடைப்பட்ட யதார்த்தம் பிரமாண்டமாகி பயமுறுத்திக்கொண்டிருக்கிறது. யதார்த்தம் எல்லாவற்றையும் மாற்றிப்போடுகிறது  இருப்பிற்கும் விருப்பிற்கும் இடைவெளி எட்டாத்தூரமாகவே  நீண்டுசெல்கிறது. யதார்த்த சூழலுக்குள் இறங்கி அல்லது இசைவுபட்டு ஒத்தோடப்பயந்துகொண்டிரு ந்தால் வாழ்வு வசப்படாதென்பது தெரியும். யதார்த்தத்திற்குள்தானே வாழ்வு நிச்சயப்பட்டிருக்கு. அது எனக்கு வெளியே அந்னியப்பட்டு தூரத்தேயிருக்கும் விசித்திரமான  ஏதோவொன்றாய் புலப்படுகிறது. விசித்திரமானவையெல்லாம் மனிதனுக்கு பயம் தந்து கொண்டிருகின்றன. அதன் பண்பை,பயனை, ஆழ நீளங்களை உருவாக்கத்தன்மையை ஆய்தறிய முடியாதவரை  அவையெல்லாம் நமக்கு  விசித்திரமானவையே.

யதார்த்தத்தின் மாறுதல்கள் கனவுகளை வளர்த்துக்கொண்டிருக்கின்றன. மனங்கள் கனவுகளின் விளைநிலமாகவேயிருக்கின்றன. கனவில் தங்கியிருத்தல் மகிழ்ச்சியானதுதான், கனவுகள் எவ்வளவு இனிமையானவை?அழகானவை.கனவுகளுடன் இணைந்திருத்தல், புணர்ந்திருத்தல், கனவுகளின் கரம்பற்றி நடத்தல் என்பன  சிறுபிள்ளை தாயின் கரம்பிடித்து நடப்பதான ஆனந்த பிரவாகம், அதிசயத்தின் ஆட்சி.  இதைத்தான் எனக்கு கவிதையின் சாரதி பாரதி ’கனவு மெய்ப்படவேண்டுமென்று’ பாடிப்போந்தானோ!’ கனவு மட்டுமே வாழ்வாகிவிடாதல்லவா ?

கனவுகளால் சேர்த்து வைத்த பலம் புதிய கனவுகளாலே கரைந்துபோயின. கனவுகள் இன்றுவரை என்னை பலவீனப்படுத்திவிட்டன. சிலவேளை என்னிடம் அதிக எதிர்பார்ப்புகள் இருந்ததினால்த்தான் அதிகம் கனவுகள்  இருந்திருக்குமோ? என்கனவுகளை நானாகத்தொலைத்திருப்பேன். அல்லது  களவாடப்பட்டிருக்கலாம். கைவசமிருந்த நினைவுகளும் நிம்மதிதர மறுத்துமிருக்கலாம். அதனால்தான் எந்நேரமும் பயத்தினால் ஆட்கொள்ளப்பட்டிருக்கின்றேன். ஆழ்மனவுணர்வலைகள் பயத்திற்கும்  கனவிற்குமான காரணமாயிருக்குமோ ? வாழ்வுக்கும் கனவுக்குமிடைப்பட்ட தூரம் உயிரியக்கத்திற்கு  இசைவற்றதாயிருக்குமோ…?

கனவுக்கும் வாழ்விற்குமிடையே யதார்த்தத்தின்பிடியில்,அல்லது வழிநடத்தலில் காணாமல்ப் போனவை,கரைந்து,போனவை ஏராளம் !  ஏராளம் !! அவற்றினைக் கண்ணுற்றதனால்  நானும் கரைந்து போய்க்கொண்டிருக்கிறேன். அல்லது காணாமல் போய்க்கொண்டிருக்கிறேன்  என்ற உணர்வு . இந்த ஏக்கம் தான்  என்னை  பயப்படுத்திக்கொண்டிருக்கின்றது. அகவியல் தேவைகள் இன்னும் நிறைவடையாமலிருக்குமோ? அதுதான் கனவுச்சுமையாக அழுத்திக்கொண்டிருக்கிறதோ.  என்னிலிருந்து கேள்விகள். எனக்குள்ளே கேள்விகள். நானே கேள்வியாய். விடைகாணாக்கேள்வியாய்…

பழையகனவுகளுடன் எனக்குள்ளே புதிது புதிதாய் உற்பத்தியாகும் புதியகனவுகளுமாக பழுவேறி பாடாய்ப்படுத்துகின்றன. அந்தப்பாடுதான் இந்தப்பயம்.

மனிதவாழ்வில் உச்சரிக்கப்படகூடாத,வாசிக்கவேகூடாத வாசகம் பயம். இது எப்படியெனக்குள் புகுந்தது.  ஊரிலிருந்து  வரும்போது நான் கனவுகளுடன் வந்திருக்கவில்லை. ஆனால் ஊர்திரும்பும்போது அதிக கனவுகளைசுமந்து சென்றிருக்கின்றேன். மீளவும்   புதிதாக அதிக கனவுகளை கொள்வனவுசெய்துகொண்டு கைநிறைய மடிநிறைய தலைநிறைய  இரட்டிப்பாக கொண்டுவந்து சேர்த்திருக்கின்றேன். கனவுகளால் கைதுசெய்யப்பட்டு ,கனவுச்சிறைகளிலே வாழ்ந்து பழக்கப்பட்டுவிட்டேன். கனவுகள் என்னை கைவிட்டாலும் என்னாலவற்றை கைவிடமுடியாத அந்தரித்த நிலை. கனவுகள்………கனவுகள்……… ஆகா…  கனவுகள்….!

கனவுகாண என்னால் முடிகிறது.இலகுவாகவுமிருக்கிறது. தெரிந்ததாகவுமிருக்கிறது. கனவுகள் வலிமையானவை. வட்டிபோல் வளர்ந்துகொண்டிருக்கும் உயிர்ப்புள்ளவை அவை.  எண்ணாயிரத்து எழுநூறு கிலோமீட்டர் தூரத்திலிருந்து பறந்து போய் தலைநகர்,கரைநகர்,கலைநகர்,சிறைநகர், சிதைநகர், பெருநகர் கொழும்பையடைந்து ஓடியும் ,நடந்தும், ஊர்ந்தும் கடந்தும் சோதனைகள்,வேதனைகள் தாண்டி தாய்நிலம் கண்டேன். நான் பிறந்த வளர்ந்த காலச்சூழலாயிருந்தது நிலமை.  காலங்கள் பின்னோக்கி நகர்வதில்லை ,அது எனது தாய் நிலத்தில்  நடந்திருக்கின்றது. எப்படிச்சாத்தியமானது? எந்தையும் தாயும் இளமைக்காலத்திலிருந்த சமூக, வாழ்வியல்  சூழல் எப்படித் திரும்பி  வந்தது? அசாத்தியங்களையெல்லாம் சாத்தியமாக்குவது சாதனைதான். எமது வாழ்வு பின்னோக்கி நகந்திருப்பதுவும் சாதனையா ?

அங்கே   என்னவர்களின் வாழ்வினைக்கண்ணுற்றேன். வாழ்வதற்கான அவர்களின் முயற்சியினைக்கண்டேன். அவர்கள் அக்கினிக்குஞ்சுகள். அவர்களோடும் அந்த யதார்த்தசூழலோடும் என்னால் சினேகம் கொள்ளமுடியாதிருந்தது. அந்த யதார்த்தம் என்னை பயப்பிடுத்திக்கொண்டிருந்தது. மனவுணர்வின் தொடுகையில் நான் நான் எங்கோ தொலைவில் ஒரு வேற்றுக்கிரகத்திற்குள் பிரவேசித்தவனாக ,கனவுலகில் மிதப்பதுபோலுணர்ந்தேன்.

அவர்கள்  முகங்கள் சோபையற்று, இனம்புரியாத பயத்தினாலும் ,துக்கத்தினாலும் ஆட்கொள்ளப்பட்டு  சாவீட்டில் நிற்பவர்களது முகபாவங்களுடன் எல்லா மனிதர்களும்  காணப்பட்டனர்.  வாலிபங்கள் வனப்பற்று வயதானவர்களின் தோற்றங்களில் …  ஒவ்வொருவரும்  தன்னிலையில்  எதையோ யோசித்தவண்ணமாக தம் தம் பாட்டில் போய்க்கொண்டிருக்கிறார்கள். சம்மதமில்லாமல்  நிர்ப்பந்தத்துக்காய் நடப்பது போலும் ,இயங்குவதுபோலும்,அவர்கள் பாவனைகள். அவர்களது மனங்களை  இப்பிடி  மாற்றி விட்டிருக்கிறது  யுத்தம்.

இரசனையற்றவர்களாக… துயரங்களைமட்டுமே அவர்கள்  சுமந்து திரிபவர்களாக நான் பார்த்தேன். மனதால்  அவர்களுடன் நெருங்க முடியாதவனாகவே இருந்திருக்கிறேன். ஒருவரையொருவர் பார்த்து பயப்படுபவர்களாகவே அவர்கள் எனக்குத்தெரிந்தார்கள். வெளியே புன்னகையுதிர்த்தாலும் அவர் மனங்களுக்குள் மொறுமொறுப்பும்  உட்கோபமும்,வெப்பியாரமும்,  ஊறி அவர்களை விலத்தி வைத்திருக்கிறது. அவர்கள் என்னை வெறுப்புணர்வோடு பார்க்கிறார்களென்பதை என்னால் புரியக்கூடியதாகவிருக்கையில் எனக்குள் குற்றவுணர்வு. அவர்களுக்கு  நான்   வேற்றினத்தவனாக,ஒரு அன்னியனாக மிகத்தூரமாகவே  இருந்திருக்கின்றன்றேன்.

ஒரு பெண்ணை கூட்டு வல்லுறவுக்குட்படுத்திய துபோல நிலம்  காயப்பட்டு சிதைந்து அலங்கோலமாகவே கிடந்தது. வீதிகள் குன்றும் குழியுமக,.. கட்டடங்கள் கடைகள் யாவும்  நொருங்கி…நிலம்கூட வரண்டு  செத்துக்கிடந்தது. யுத்தத்தின் சாட்சியாக. உலகநாடுகளின் அரசியல் விளையாட்டுகள் முடிந்தபின் கைவிடப்பட்டு  வெறிச்சோடிக்கிடக்கும் வெறும் விளையாட்டரங்கில்  நின்றிருந்தேன்.

இந்த நூற்றாண்டு எமக்கு கைத்தொலைபேசிகளையும்,மோட்டார் சைக்கிள்களையும் துப்பாக்கிகளையுமே தந்திருக்கிறது. நாம் அவற்றுடன்விளையாடிக்கொண்டிருக்கிறோம் . இந்த நவீன விஞ்ஞான உலகில் முதலாளியத்தின் சுரண்டல்களுக்கும்,வியாபாரத்துக்கும் அடிமைப்பட்டு சீரழியும் சீவியத்தையே வாழ்வெனெக்கொண்டிருக்கிறோம். இந்நூற்றாண்டின் முதல் தசாப்தம் எமது சுதந்திரத்தையும் ,உரிமையையும் பலவந்தமாக பறித்து வைத்திருக்கின்றது.

அங்கே ‘எப்படி வாழ்கிறார்கள்?’ நிம்மதியற்ற நிகழ்காலத்தோடும் நிட்சயமற்ற  எதிர்காலத்தோடும்   நம்பிக்கையை பற்றிக்கொண்டு  கனவுகளை நோக்கி ஓடிக்கொண்டிருக்கின்றார்கள். அணிவகுப்பும் அலங்காரமுமற்ற அவர்களது ஓட்டத்திலிருக்கும் ,ஓர்மமும் வேகமும் எனக்கு வியப்பாகவேயிருக்கின்றது.

நாம் செய்யவேண்டிய பெரிய பெரிய  கடமைகள்  இருந்திருக்கின்றன. அவற்றை  சரியாகச் செய்திருந்தால் உரிமைகள் கிடைத்திருக்குமோ? எமக்கு வாழ்வதற்க்கு வழங்கப்பட்ட காலம் காலாவாதியாகி விட்டதென எனது புரிதலில் உணர்கிறேன். வாழ்வின் தாற்பரியங்களை பிரக்ஞை பூர்வமாக பார்க்கத்தவறி விட்டோமோ ? எனக்குள் நானே விவாதித்துக்கொண்டிருந்தேன்.

வீதி திருப்பங்களிலும் ,சந்திகளிலும் அரசியல் கட்சிகளினதும்,அரசினதும் கொள்கையை,இன ஒற்றுமையை அறியப்படுத்தும்  பாதாகைகள்,எழுத்துருக்கள்.  விளம்பரப்பாதாகைகளும்   கண்களை நிறைத்துக் கொண்டேயிருந்தன. அவற்றில் எதுவும் அர்த்தம் பொதிந்தவையாகவோ எழுத்துப்பிளைகளற்றனவாகவோ காணப்படவில்லை. எழுத்துப்பிளைகளும் தொடர் யுத்தத்தின் ஒரு கூறே.

‘காட்சிகள் மாறும் காலங்கள் மாறும் உண்மையொருபோதும் மாறாது’ முதலாம் வகுப்பு பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுக்கும் செல் நெறி முறைகளாகவும் பரந்த சிந்தனையற்ற குழந்தைத்தனமான வாசகங்களாகவும்,அறிவுரைகளாகவுமே காணப்பட்டன. இவ்வளவுதான் ஆரசியலார் அறிவளவு.

உண்மை எப்போதும் மாறிக்கொண்டிருக்கிற து. உண்மை என்றும் எங்கும் ஒன்றல்ல. பொய்யே  உண்மை. பொய் மட்டுமே நிரந்தரமானது. பொய்யே  என்றும் எங்கும் மாறாத உண்மை. மாணவர்களுக்கான உண்மை அரசியல் வாதிகளுக்கான உண்மையல்ல. முன்னோர்களினது  உ ண்மை எமக்கானவுண்மையாகா. ஒவ்வொரு நாடுகளுக்கும் ,இனங்களுக்கும் உண்மைகள் வேறுவேறானவை. இங்குள்ள பொய் அங்கு மெய்யாகலாம். அங்குள்ள பொய் இங்கு மெய்யாகலாம். நேற்றைய பொய்  இன்றைக்கு மெய்யாகவும் இன்றைய மெய் நாளைக்கு பொய்யாகவு மாறலாம் என்பது இயக்கவியல் தத்துவம். இயங்கு இயல் நிலையறியாத அரசியலாரும்  அறிவியலாளரும்  நிறைந்திருக்கும் நாடு.

வடபால்  தீண்டத்தகாத தீவுகளாய் , அரசாலும்  நிர்வாகத்தாலும் கவனிப்பாரற்று ஒதுங்கியிருக்கும் அமைதியான என்தீவுக்கு பயணமானேன். தீ  தின்றுபோனது போக  இருந்த மீதியையும்  ஆளுக்கு ஆள் தின்று தீர்த்துவிட்டிருந்தனர். இருபத்தைந்து  வருடங்கள் கனவிற்குள் மறைந்திருந்து  நகரத்திலிடர்ப்பட்டு நரகத்தின் துயர்ப்பட்டு அஞ்ஞாதவாசம்  வனவாசமாய்  உடல் கரைத்து உயிர் கரைத்து வாழ்வதாய் பாசாங்கு காட்டி  நடித்துவிட்டு, தாயகம் திரும்பியிருந்தேன்.

சிறுநகரிலிருந்து நான் பிறந்து வளர்ந்த வீட்டை என் கிராமத்தை தரிசிக்கப்பயணித்திருந்தேன். நகர்பிரசையாக மாறிவிட்டிருந்த என் அம்மா எனக்கு வழிகாட்டியாகவும்,வழித்துணையாகவும் கூடவந்திருந்தா. என்னூரின் நுழைவாயிலில்  ஒரு இராணுவவீரன் என்னை ஆயுதங்களினால் ஆராத்தியெடுத்து  என் தாய் நிலத்திற்கு அறிமுகம் செய்துவைத்தான்.  நகரம்,பெண்ணானவள்  பியூட்டிபாலர்போய் சீவி வழிச்சு அழகாக்கி, ஆலங்கரித்த  முகத்தழகாய்  பளபளப்பாக யுத்த அழிவுகளை மறைத்திருந்தது.

இங்கேயென் கிராமத்தைக்காண்கையில் உலகமாறுதல்களை அறியாத அப்பாவியாக கவனிப்பாரற்று, அழிவின் சாட்சியாக இன்றைக்கு மட்டுமல்ல, என்றைக்கும் சொல்லிக்கொண்டேயிருக்கும்.  கிராமமே  ஒருநாட்டின் உயிர்நாடியென சொல்வது  வெறும் பேச்சோடு மட்டுந்தான்.

பார்க்க பயமூட்டிய ,பரவசமூட்டிய ஆழ நீலக்  கடல் வற்றி மெலிந்திருந்தது.  கையாலாகாதவர்கள் கடலையும் கடனடைக்க விற்றுவிட்டார்களோ? பூமியின் மேனியெங்கும் ஆறிப்போன காயங்கள். நிலம் காண்டவனமாய் கன்றாவியாகவேயிருந்தது. வீதிகள் காணாமல் போய் ஒற்றையடிப்பாதைகளாகியிருந்தன. பச்சையத்தோடு பசியதழையோச்சி நின்ற பற்றைகள், மரங்கள், செடிகொடி, முட்கிளுவை, கிளுவையெல்லாம்  குற்றுயிராகவே கிடந்தன . மனிதர்கள் நடமாட்டமின்மையால் மண்ணும் மரங்களும்  கவலையுற்றனவோ.  கால்நடைகள்  மட்டுமே மகிழ்வாக துள்ளிக்குதித்து விளையாடிக்கொண்டுருந்தன. அல்லும் பகலுமாய் பண்ணிசைத்துப் பாடிப்பறந்து திரிந்த பறவை பட்சிகளையும் காணோம் , எங்கே போயின ? நான் கால்நடைகளாய்  மாறி நடந்தேன். மரமாகி நின்றேன். பறவை பட்சிகளாய் பறந்து திரிந்தேன். வானமும் பூமியும் எனதாகியிருந்தது .

வானையும் பூமியையும் சேர்த்தணைத்து முத்தமிட்டேன். மனம் என்னிலி ருந்து  விலகி துள்ளிக்குதித்தோடியது.  ஆக்கணம் அனந்தபிரவாகத்தில் மூழ்கித்திளைத்திருந்தேன்.   துக்கமிருப்பினும் இயற்கையோடிணைகையில்   எல்லாம் இன்பமயமாய்… !

வெய்யில் எரிந்துகொண்டிருக்க, காற்று  வெம்மைதணிய கருணையுடன் வீசிக்கொண்டிருந்தது . காற்றின்விசையில் மேலெழும் புழுதி ,பூமிதாகத்தால் கொட்டாவி விடுவதான  ஒரு ஆழகியல் அர்த்தத்தை தந்துகொண்டிருந்தது. வீடு சிதைந்து ஆடையாளமற்றிருந்தது. எம் முந்தைய தலைமுறையினர்க்கு ,பெற்றோராயிருந்து  வளர்த்தெடுத்த ஆப்பாவிகளான பனைதென்னைகளும் கழுத்து வெட்டுண்டு  கொலையுண்டிருந்த. கிணறு தூர்ந்து துலாவும் ஆடுகாலும் இல்லாமலிருந்தது.  மாமரம் பாதி எரிந்தநிலையில் … பிள்ளைகளை வெளிநாடுகளுக்கனுப்பிவிட்டு துக்கித்து நிற்கும் பெற்றோராய்  வேப்பமரம். தேங்காயுரிக்குமிடத்தில் அலவாங்கும் கத்தியும் களவுபோகாமல் துருப்பிடித்துக்கிடந்தன.

“எடமகன் வீட்டப்பாத்தது காணும் வா…  ஏன் கவலப்படுகிற?  எல்லாருக்கும்தானே  நடந்தது…?  நாம்மட்டுமா இழந்தது?”

சு.கருணாநிதி-பிரான்ஸ் 

சு.கருணாநிதி

(Visited 91 times, 1 visits today)