மலம்-சிறுகதை-சுதர்மமகாராஜன்

சுதர்மமகாராஜன்மூன்றாம் காம்பறா வடிவம்மாவின் அலறல் முழு லயத்தையும் உசுப்பி விட்டது. இருள் பனியில் மறைந்து அகலும் அதிகாலை ஐந்து மணிக்கு வடிவு போட்ட கூப்பாடு காம்பறாக்களில் சுருண்டிருந்த அனைவரையும் எழவைத்தது.

“நாசமத்து போனவைங்க, இன்னைக்கு நடு வாசல்ல பேண்டு வச்சிருக்கானுக”

கால்களில் மிதிபட்ட மலத்தை லயிசன் கல்லில் தேய்த்துவிட்டுக் கொண்டே கத்தினாள். அவள் நெஞ்சு கோபத்தில் பதறியது. வார்த்தைகள் வழுக்கி, மூக்கின் வழியே மூச்சாய் முட்டி மோதியது.

அதிகாலை எழுந்து அடுப்பை பற்றவைத்து விட்டு வெளிக்கு செல்வதற்கு கதவைத் திறந்து வெளியே வந்தவளுக்கு அரையிருட்டில் முன்வாசலில் குவிந்திருந்த மலம் கண்ணுக்கு தெரியவில்லை. சரியாக அதன் மேலேயே காலை வைத்து விட்டாள். அதன் தொடுதலும் நாற்றமும் அருவருப்பின் உச்சி வரை கொண்டு சென்றது.

கோபம் கொப்பளிக்க, சுற்றுமுற்றும் பார்த்தபடியே கால்களை அகற்றியபடி நின்று கொண்டாள். லயத்தின் எல்லா வீடுகளும், அமைதியாக உறங்கியதன் வழி, இன்னும் கோபத்தை உசுப்பேத்தியது.

“டேய் வேச மவனுகளே எவன்டா ஏ வீட்டு வாசல்ல பேண்டது”

வார்த்தைகள் குழற, அடிமனதிலிருந்து இயலாமையின் வழி அழுகையாய் கண்களில் எட்டிப்பார்த்தது.

அழுகையை மறைத்து, தன் கோபத்தை வெளிக்காட்டுவதாய் ஆவேசமாகி, தான் வெளியில் வந்த காரியத்தையும் மறந்து, கத்தத் தொடங்கினாள். ஒவ்வொரு வீட்டிலிருந்தும் தலைகள் வெளிக் கிளம்பத் தொடங்கின. பக்கத்து வீட்டு மாரியாய் கிழவி, வெளியில் வந்தபடியே வடிவுவை கவலையாகப் பார்த்தாள்.

“அடியே வடிவு, இன்னக்கி யாரடி, இத செஞ்சது..”

கேள்வியோடு கிழவியின் குழைவு அவளை இன்னும் ஆவேசமாக்கியது.

“அத தெரிஞ்சா, இப்படி கத்திகிட்டா இருப்பே,பேண்டவே சூத்த அறுத்துற மாட்டே”

கிழவிக்கு என்ன பதில் கூறுவதென்றே தெரியாமல் முழித்தாள்.

தொங்க காம்பறா புஷ்பம் மெதுவாக எட்டிப் பார்த்தாள். புஷ்பத்தின் தலையை கண்டவுடன் வடிவின் கோபம் இருமடங்காகியது.

“எனக்கு தெரியும்டி.. இத யாரு செய்றதுன்னு…கைல மாட்டுன அன்னக்கு இருக்குடி கூத்து”

சீலையை தூக்கி இடுப்பில் செறுகி தொடை தெரிய புஷ்பத்தின் வீட்டுப் பக்கமாக திரும்பி,

“பர வேசைக எட்டி பாக்குறாளுக,இங்க அவுத்து போட்டா ஆடுறோ…”

பொதுவாக வடிவுக்கு புஷ்பத்தை கண்டால் ஆகாது. தனது அசௌகரியங்களில் எப்போதும் புஷ்பம் சந்தோஷமடைவதாகவே உணர்வாள்.

“அடியே வடிவு…… விடுடி…அத அள்ளி போட்டுட்டு வேலய பாருடி..”

கிழவி சாந்தப் படுத்தினாள்.

“நீ சொல்லுவ…… கெழவி, நாத்தம் எப்படி கொடல புடுஙடகுது பாரு”

முகத்தை சுளித்து, காரி துப்பினாள்.

“எவனோ பேண்டத, நா அள்ளனுமா……ஓ வீட்டு வாசல்ல பேண்டா தெரியும்”

அவள் குரல் தடுமாறியது. அழுகை கோபத்தை மிஞ்ச எத்தனித்தது. அதை மறைக்க, சற்று நகர்ந்த வேளையில், தன் வீட்டு நாய், அந்த மலத்தை முகருவதைக் கண்டாள்.

சுவரில் சாத்தியிருந்த விளக்குமாறை எடுத்து நடு முதுகில் போட்டாள்.

“சனியனே அந்த கருமத்த திங்க போறியா……”

அடி தாங்காத நாய், “வவ், வவ்” என்று அலறியபடியே, தேயிலை புதருக்குள் ஓடி மறைந்தது. அதன் வேதனையின் அலறல், விட்டு விட்டு முனங்கலாக வடிந்தது.

மலைக்கு செல்லும் பெண்கள் ஒவ்வொருவராய் வீடுகளிலிருந்து வெளிவர தொடங்கினார்கள். கூட்டம் சிறிது சிறிதாக வடிவைச் சுற்றி கூடியது. மலத்தின் மணம், மெதுவாய் காற்றில் பரவ, குழுமிய கூட்டம் மூக்கை சுளித்தது. பலருக்கு வடிவம்மாவின் நிலை கண்டு அனுதாபமாக இருந்தாலும், அவள் வீட்டு வாசலில் மட்டும் மலங்கழித்து வைப்பது யாராக இருக்கும்? கேள்வி மலையாக நின்றது.

“வடிவமக்கா, மலைக்கு சொணங்கிரிச்சி, அத விட்டு போட்டுட்டு வாக்கா..”

அம்மாளுவின் கரிசனையான குரல், வடிவுவை ஓரளவுக:கு சாந்தப்படுத்தியது. அந்த தோட்டத்திலேயே அம்மாளு ஒருத்தி தான் அவளது நம்பிக்கைக்குரியவள். ஒருவகையில் சொந்தமும்கூட, அவளை கண்டவுடன் வடிவுக்கு துக்கம் தொண்டை வரை எட்டி வார்த்தைகளை புரட்டிப் போட்டது.

“பாருடி.. அம்மாளு, இத செஞ்சவே குடும்பம் நாசமா போகனும்..”

“நீ.. விடக்கா.. அவனுகளுக்கு நல்ல சாவு வராது..”

அம்மாளுவின் அந்த வசை வடிவை தெம்பாக்கியது. கடந்த ஒரு வாரத்திற்குள் இது மூன்றாவது முறை.

முதல் நாள் விடியற்காலையில், தன் வீட்டு வாசலில் மலக் குவியலைக் கண்டவளுக்கு அது ஆச்சரியத்தைக் கொடுத்தது. இப்படி ஒருநாளும் நடந்ததில்லை. முதலில் நாய் பீ என்று நினைத்தவளுக்கு, அதன் அளவும் மணமும் அது ஒரு மனிதனுடையதென ஊகிக்கையில் கோபம் எட்டிப் பார்த்தது. தன் வீட்டில் யாராவது, அவசரத்தில் செய்துவிட்டார்களோவென நினைத்தாள். பிள்ளைகளை கேட்டுப் பார்த்தாள். அவர்கள் இல்லையென சத்தியம் செய்தார்கள். பக்கத்து வீட்டிலுள்ளவர்கள் மீது அவள் சந்தேகம் திரும்பியது.  நாள் முழுதும் அந்த மலக்குவியல் அவளை சதா வருத்திக்கொண்டே இருந்தது. யார் செய்திருக்கக்கூடும். தெரியாமல் அவசரத்தில் யாரும் செய்திருந்தால் தன்னோடு கதைப்பார்கள் என நம்பினாள். சில நேரம் வெட்கத்தில் சொல்லாமல் விடலாமென அம்மாளு கூறியபோது, அதுவும் சரியென பேசாது இருந்தாள்.

“காலையிலே பீயில முழிச்சா அதிஷ்டம்டி”

என கொழுந்துக் காட்டில் சுகுணா கூறியபோது எல்லாரும் சிரித்து விட்டார்கள். அந்த சம்பவம் சிரிப்பில் கரைந்து மறைந்து போனது.

மீண்டும், மூன்று நாட்களின் பின், அதிகாலையில் இன்னுமொரு மலக்குவியல், அவள் வீட்டு வாசலில் குவிந்து கிடந்தது. அப்போது தான் வடிவுக்கு புரிந்தது, இது தற்செயல் இல்லை, யாரோ வேண்டுமென்று செய்வதாக. கோபம் உச்சம் தொட, லயமே அதிர கத்தினாள். சுற்று வட்டாரமே வாயில் கைவைத்தபடி வேடிக்கைப் பார்த்தது. சீலையை இடுப்பில் செருகி, முந்தானை விலகி, விடைத்த மார்பு தெரிவதைகூட உணராதவளாக, ஆசுவாசமின்றி, பேண்டவன் சூத்தை அறுத்து எரிவதாக சவால் விட்டபடி கத்தித் திரிந்தாள்.

ஏதோ நினைவு வந்தவளாக, வீட்டுக்குள் ஓடியவள், அடுப்பிலிருந்து சுடுசாம்பலை அள்ளிக்கொண்டு வந்தாள். அதை அப்படியே மலக்குவியல் மீது கொட்டினாள்.

“பேண்டவன் சூத்து கொப்புளம் வந்து அவியட்டும்”

என சாம்பலை தூசு பறக்க கொட்டி, பெருமூச்சு விட்டாள். மனம் சற்று ஆறுதலடைந்தது. தப்பு செய்தவனுக்கு, ஏதோ தண்டனை கொடுத்து விட்டதாக சாந்தமாகியது. இருந்தும் கவலை விடாது கண்ணீராய் துளிர்ந்தது.

அப்போதும் அம்மாளுதான்

“சரி விடக்கா, பேண்;டவனுங்க நல்லா இருக்க மாட்டானுக”

என ஆறுதல் படுத்தினாள்.

“ஏ அக்கா, எவனாவது குடிச்சிட்டு இந்த வேலய செய்றானுகளோ”

அம்மாளு சந்தோகம் கொண்டபோது,

“ஏண்டி.. குடிகாரனுகளுக்கு ஏ வீட்டு வாசல் தா கக்கூசா..?”

என்று வாதாடியபோதும், மனம் ஏனோ, அப்படியும் இருக்கலாமென சொல்லியது. லயத்துல சதா குடிகாரன் என்றால் புல்லு குமார் தான். அவன் காலையிலிருந்து மாலை வரை கள்ளு, சாராயமென குடித்துக் கொண்டிருப்பவன். ஆனால் இதுவரை யாருக்கும் தொந்தரவாக அவன் இருந்ததில்லை.

“அடியே அம்மாளு, நீ சொல்லுறத போல இது புல்லு குமாரோட வேலயா இருக்குமோ”

தன் சந்தேகத்தை கூறியபோது, அம்மாளுவும் ஆமோதித்தபடியே

“மூனாம் காம்பறா லெச்சுமி கெழவி வேலயா இருக்குமோ” வென இன்னுமொரு திசையை கைகாட்டியபோது, வடிவு குழம்பிப் போனாள்.

லெச்சுமி கெழவி, நோய்வாய்ப்பட்டு வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடப்பவள். வெளி காட்டுக்கு போறதே கஷ்டம். அவள் தன் வீட்டு வாசல் வரை வந்து செல்வது பற்றி நம்ப முடியாமல் இருந்தது.

“ஏண்டி.. நம்ப புஷ்பத்தோட வேலயா இருக்குமோ”

தொங்ப காம்பறா புஷ்பம் தன்னோடு இருக்கும் பகைக்காக இப்படி செய்யக்கூடுமென புறுபுறுத்தாள்.

“சும்மா இருக்கா.. அவ சண்டக்காரிதா, ஆனா இந்த மாதிரி வேல செய்ய மாட்டா”

அம்மாளு புஷ்பத்திற்காக வக்காளத்து வாங்கும்போது,

“என்னாடி.. என்னோட இருந்துக்கிட்டே, அவனோட குண்டி கழுவுற..”  வடிவு அதட்டினாள்.

“போக்கா நா அவளுக்கு கழுவ போவல, அவளுக்கு இவ்வளவு துணிச்சல் இல்ல”

என்னதான் அம்மாளு காரணம் கூறினாலும், புஷ்பம் அரவமின்றி தன் வீட்டு வாசலில் குவியல் குவியலாக மலங் கழித்துவிட்டு, தனக்கு சீலையை தூக்கி அவள் பின் புறத்தை காட்டி ஓடுவதாக அடிக்கடி கனவு கண்டாள்.

மூன்றாவது முறையாக தன் வாசலுக்கு வந்த மலம், தன் கால்கள் வழியே வீட்டுக்குள் புகுந்து, அதன் மணம் வீடெல்லாம் பரவி, தன் வீடு ஊரார்களின் கக்கூசாக மாறிவிடுமோ என அஞ்சினாள். கொழுந்துக் காடுகளிலும், பீலிக்கரையிலும், கடைக் கண்ணியிலும் தன் வீட்டு வாசலில் குவியும் மலத்தையும், பேலும் மர்ம மனிதனையும் சுவாரசியமாய் பேசி, தன் வீட்டை அனுதாபமாக பார்த்தும், உள்ளுக்குள் சிரித்தும் திரியும் சுற்றத்தின் மீது வடிவுக்கு அளவிலா சினம் சிகரமாய் முன் நின்றது.

இரவுகளில் நித்திரையின்றி அரவம் கேட்கும் போதெல்லாம் யாரோ ஒருவர் ஆடைத்தூக்கி தன் வீட்டு வாசலில் மலங்கழிக்க வருவதாகவே பதற்றமடைந்தாள். கதவு இடுக்கின் வழியே வாசலை பார்த்தபடி தூங்காது கதவோரம் குந்தியிருந்தாள்.

“ஏக்கா.. பேசாம யாருக்கும் தெரியாம, நம்ம பூசாரி மாமாகிட்ட ஒரு குறி பாப்பமா..”

அம்மாளும் கூறும் போது, செய்வதறியாது சிறு குழந்தையை போல் தலையாட்டினாள். பின் ஏதோ நினைத்தவளாய்,

“பேள்றதுக்கெல்லாமா போய் சாமி பாப்பாங்க…?” என்று சொன்னாலும், எப்படியபவது ஒரு வழியில் இதை செய்பவனை கண்டுபிடித்தே ஆகனும் என்ற கங்கணம் அவளுக்குள் மேலெழுந்தது. பூசாரி மாமாகிட்ட போனா, சோலி குழுக்கி பார்ப்பார். அவரது குறி தப்பியதில்லை. இருந்தும் இதற்கெல்லாமா குறி பார்ப்பது, மீண்டும் மனம் பின்வாங்கியது.

கொழந்துக் காடு முழுவதும் வடிவின் வாசல் மலக்குவியலின் மணம் பரவி, முகம் சுளித்து, கை கொட்டி சிரிப்பதாக குறுகினாள். அதன் நினைவு கொடுத்த அருவருப்பு, அவளுக்கு தேத்தண்ணியோ, ரொட்டியோ குமட்டி வாய்பட மறுத்தது.

கால் வைக்கும் இடமெல்லாம் ஏதோ ஒரு மலக்குவியலில் வைத்து விடுவோமோவென பதறி, கால்களை அலை கழித்தது.

“அக்கா அதையே யோசிச்சிட்டு இருக்காம.. ஒழுங்கா கொழுந்த பறியக்கா” அம்மாளுவின் வார்த்தைகள் இடையிடையே இழுத்து பிடித்து நிதானமாக்கிய போது,

“பேசாம.. தலைவருகிட்ட போய் சொல்லக்கா..” பூபதி குரல் கொடுக்க, அதையே அம்மாளுவும் ஆமோதித்தாள்.

“ஆமாக்கா நம்ம தலைவருகிட்ட பிராது கொடக்கா”

தலைவரின் ஞாபகம் வடிவுக்கு ஏனோ ஒருவித நம்பிக்கையை கொடுத்தது. தலைவர்கிட்ட சொன்னாதான் இந்த பிரச்சனைக்கு ஒரு முடிவு வரும், இப்படி தரம் கெட்ட வேல செய்றவனுக்கும் பயம் வரும், மனம் தெம்பாகியது.

லயத்தின் மறுகோடியில் ராமலிங்கம் தலைவரின் வீடு. சங்கத்துல செல்வாக்கான ஆளு. ஆளும் கட்சியில இருக்குறதால அதிகாரமுள்ள மனுஷன். பெரிய எடத்துலயும் தொடர்பிருக்கு. கொழுந்து மலையிலிருந்து நேராக நம்பிக்கையோடு தலைவரின் வீட்டு வாசலில் நின்றாள். தலைவர் மனுஷி கற்பகத்தோடு ரெண்டு மூனு பொம்பளைகள் பேசிக்கொண்டிருக்க, வடிவை கண்டவுடன் அவர்களின் பார்வை ஆர்வத்துடன் நிலை குத்தியது.

“கற்பகமக்கா ராமலிங்கண்ணே இருக்காரா” கற்பகம் பதில் சொல்லுமுன்னே, ராமலிங்கம் தலைவர் குரல் கேட்டு வெளியே வந்தார்.

“என்ன வடிவு இந்த பக்கம்………”

தலைவரை கண்டவுடன் கண்களில் கண்ணீர் நிறைந்து, மூக்கு புடைக்க விம்மினாள்.

“தலைவரே…… வீட்டு வாசல்ல எவனோ பேண்டு நாரடிக்கிறாய்ங்க…”

நெஞ்சு புடைத்து தேம்பலாய் வெளிப்பட்டது. புஸ்சு புஸ்சு வென மூச்சு வாங்கியது. தலைவர் சுற்றியிருந்தவர்களை பார்த்து சிரித்தார்.

“ஓ…… வீட்டு வாசல்லயா…?”

தலைவரின் ஏளனம் அவளுக்கு பிடிபடவில்லை.

“தலைவரே… வீட்டு வாசல்ல பேண்டு வைக்கிறாங்க…”

கற்பகம் நமுட்டுச் சிரிப்புடன் வீட்டுக்குள் நுழைந்தாள்.

“இப்ப அதுக்கு… நா வந்து அள்ளி போட சொல்றியா?” என்று சிரித்தார்.  சுற்றியிருந்த பொம்பலைகளும் சேர்ந்துக் கொண்டார்கள்.

“நீங்க தான் தலைவரே, இத கண்டுபிடிக்கனும்”

வெள்ளந்தியான வடிவு கேட்ட உதவி தலைவரை சங்கடமாக்கியது.

“ஆமா… ஓ வீட்டு வாசல்ல பேல்றவன கண்டுபுடிக்கிறது தான் ஏ பொலப்பா…”

நக்கலாகவும், எரிச்சலாகவும் தலைவரின் அலட்சியம், வடிவினுடைய நம்பிக்கையை தளர்த்தது.

“என்ன தலைவரே இப்படி சொல்றிங்க?”

குரல் உடைந்து வார்த்தைகள் மிரண்டன. தலைவரின் முறைப்பும் ஏளனமும் அவளை பலவீனமாக்கி, தலை சுற்றி மயக்கம் வருவதாய் உணர்ந்தாள்.

“எவனாச்சு அவசரத்துல பேண்டு வச்சிருப்பாய்ங்க… அத போய் ஏங்கிட்ட கொண்டு    வந்துகிட்டு… அள்ளி வீசிட்டு, போய் வேலய பாரு…”

அந்த நிராகரிப்பும், சுற்றத்தின் கெக்கல் சிரிப்பும், வாசலில் மலம் கொடுத்த அவமானத்தை விட இருமடங்காய் அவளைத் தாக்கியது. வீடு திரும்ப மனமில்லாமல், மாடசாமி கோவில் படிகட்டில் அமர்ந்தபடியே வானத்தை பார்த்து பெருமூச்சு விட்டாள்.

“அப்பா மாடசாமி… என்ன சோதனடா இது…”

தன்னையறியாமலே மாடசாமியோடு பேசியபடி கண்ணுக்கெட்டிய தூரம் வரை வானத்iதை பார்த்தாள். நீல வானம் மெதுமெதுவாக இருட்டை கபளீகரம் செய்து கொண்டிருந்தது. விடியல்களில் மலக்குவியல்கள் தனக்காக காத்திருக்குமேயென்ற அச்சம் துளிர்த்து, வளர்ந்து கொடியாக அவளை பிண்ணிப் பிணைய, அதன் இருக்கம், அவள் நடையை தளர்த்தியது.

பிள்ளைகள் தன்னை மறந்து தூக்கத்தில் துவண்டிருக்க, வடிவோ நித்திரை தொலைத்து முகட்டை பார்த்தபடி விழித்திருந்தாள். மனம் லயத்து சுற்றத்தை கணித்தபடி வேவு பார்த்தது.

நள்ளிரவு தாண்டிய நிசப்தம் அவளை அரவத்தின் அசைதலுக்காக குந்த வைவத்திருந்தது. லயத்தின் மறுமுனையில், ஒரு நாயின் குரைப்பு உசுப்ப, கதவோரமாய் நின்றவாறு, இடுக்கின் வழியே, வாசலை வைத்த கண் வாங்காது பார்த்துக் கொண்டிருந்தாள். இருட்டின் திரையில் ஏதும் சலனங்கள் தெரிகின்றனவா வென உன்னிப்பாக காத்திருந்தாள்.

திடீரென கதவு தாழ்பாள் விலகும் ஓசை, வடிவை உசார் படுத்தியது. பக்கத்து வீட்டு கதவு திறபடும் சத்தமது. நெஞ்சு துடிப்பு அதிகரிக்க வெளிவரப்போகும் நபருக்காக பதற்றமானாள்.

கதவு திறந்து மாரியாய் கிழவி வெளிவருவதை கண்டாள்.

“அடியேய்.. கிழவி நீதானா…”

பல்லை கடித்தபடி அமைதியாக மூச்சடக்கி பார்த்திருந்தாள்.

வெளியில் வந்த கிழவி, லைசன் கற்களை கடந்து, கால்கழகற்றி முன்குறமாய் குனிந்து சீலை தூக்கி மூத்திரம் பெய்தாள். தர தா வென அந்த மூத்திர சப்தம் வடிவின் முகத்தில் தெறிக்க கண்களை அகற்றிக் கொண்டாள். குனிந்தபடியே மீண்டும் கிழவி, வீட்டுக்குள் நுழைவதை ஏமாற்றத்தோடு பார்த்துக் கொண்டிருந்தாள்.

சற்று நேரம் நிதானித்து நின்றவள், ஏதோ நினைவு வந்தவளாக, மெதுவாய் கதவை திறந்து வெளியே வந்தாள்.

எட்டிய தூரம் வரை இருட்டு, சுற்றத்தை போர்த்தியிருந்தது. ஊரே உறக்கத்தில் ஊரிக் கிடக்க, அவள் நிம்மதியின்றி மலங்கழிக்கும் பிட்டங்களை தேடிக் கொண்டிருந்தாள்.

குப்பென்று முகத்தில் அடித்த மூத்திர மணத்தை கடந்து, மெதுமெதுவாய் இருட்டின் கைகளை பற்றிய படி நகர்ந்தாள். மலங்கழிப்பதற்காக தன் வீட்டு வாசல் நோக்கி வரும் மனிதர்களை எதிர்ப்பார்த்து இருட்டை கடைந்தாள்.

அவர்களுள் புஷ்பம் முதல் ஆளாகவும், தலைவரின் பெஞ்சாதி கற்பகம் இறுதியானவளாகவும் நின்றார்கள். மலங்கழிக்க காத்திருக்கும் மனிதர்களால் தான் சூழப்பட்டிருப்பதாக எண்ணி, மலமணம் வீசும் பக்கமெல்லாம், இரையாக துடிக்கும் மானாக மருண்டாள். பின் இருட்டுக்குள் கரைந்து மும்முரமாய் தேடத் தொடங்கினாள்.

பனி உருகி, குளிர் மறைந்தும் அசதியாய் தூங்கிக் கொண்டிருந்த வடிவுக்கு அந்த குரல்களின் சலசலப்பு தூக்கத்தை கலைத்தது. ஒழுங்காய் தூங்காத கண்களின் எரிச்சலை கசக்கியபடி எழுந்தவளுக்கு, வெளியில் ஆட்களின் அரவமும், அதனூடே கேட்ட கூப்பாடும், வேகமாய் தாழ்பாலை விலக்கி கதவை திறந்தாள்.

வெளியில் வரும்போதே லயத்தின் கோடிப்பக்கமாய் ஓடும் சுகுணாவின் புருஷன் சண்முகத்தை கண்டாள். அவனது வேகத்தை கண்டு லயத்து நாய்கள் மிரண்டன. அத்தோடு தன்னை கடந்து ஓட முற்பட்ட சுகுணாவை இழுத்து நிறுத்தினாள்.

“எங்கடி ஓடுறீங்க……”

“தலைவர் வீட்டுல ஏதோ பிரச்சனையாம் அக்கா” கூறியவாறே ஓடினாள்.

தலைவரின் வீடு நோக்கி ஓடும் கூட்டத்தை பார்த்தவாறு நின்றாள். கால்கள் ஆவலாய் குறுகுறுத்தது. அதற்கிடையே அம்மாளு கொழுந்துக் கூடையுடன் வந்து சேர்ந்தாள்.

மண் அள்ளி வீசி ஊரை திட்டும் தலைவரின் பெஞ்சாதி கற்பகத்தையும், தொடை தெரிய சாரத்தை மடித்துக் கட்டி, வெற்றுடம்போடு சவால் விடும் ராமலிங்க தலைவரையும், கூடவே வேடிக்கை பார்க்கும் சனங்களையும் அனுதாபமாய் பார்த்தபடி வடிவு அன்று வெளிகாட்டுக்கு போகாமலேயே சக பொம்பளைகளோடு மலையேறினாள்.

“டேய் வேச மவனுகளே… யாருடா ஏ வீட்டு வாசல்ல பேண்ட நாதாரி…”

தலைவரின் ஆவேசக் குரல் மலையெல்லாம் எதிரொலித்தது.

சுதர்மமகாராஜன்-இலங்கை

சுதர்மமகாராஜன்

(Visited 606 times, 1 visits today)
 

2 thoughts on “மலம்-சிறுகதை-சுதர்மமகாராஜன்”

Comments are closed.