டொமினிக் ஜீவாவின் அகமும் புறமும்-ஆசிரியர் குறிப்பு

ஆசிரியர் குறிப்புவருடத்தின் ஆரம்பத்திலேயே ஒரு நினைவுக்குறிப்பு எழுதிய ஈரம் காய முதல் மீண்டும் ஒரு நினைவுக்குறிப்பு எழுதவேண்டியது கால நியதி போலும். காலத்தின் போக்கில் இன்னுமொரு அனுபவத்திரள்வை நாங்கள் தொலைத்து நிற்கின்றோம். எவன் ஒருவன் தானும் வளர்ந்து தன்னுடன் சேர்ந்தவர்களையும் உச்சாணிக்கொம்பில் வைத்து அழகு பார்கின்றானோ அவனே வரலாற்றில் நீங்காத இடம் பெறுகின்றான். அவனே ஒரு படையணியை வழி நடாத்தும் தகமையையும் பெறுகின்றான். இது இலக்கியர்களுக்கும் பொருந்தும். எல்லோரும் தான் எழுதுகின்றார்கள். புகழையும் அடைகின்றார்கள். ஆனால் அவர்கள் ஒரு படையை நடாத்தும் தகமையை பெறுகின்றார்களா என்ற கேள்வி இங்கு எழுவது இயல்பானதே.

ஒரு அச்சு சஞ்சிகையை நாற்பது வருடங்களாக தொடர்ச்சியாக உலாவ விட்ட எழுத்துத்தளபதி இன்று எம்முடன் இல்லை. எனது பதின்ம வயதில் எனது மூத்த சகோதரர் வடகோவை வரதராஜன் மூலம் டொமினிக் ஜீவா வழி நடாத்திய மல்லிகை சஞ்சிகை அறிமுகமாயிற்று. அதில் வந்திருந்த கதைகள் அநேகமானவை மக்களின் பாடுகளை சொல்லி நின்றன. இந்தக் கதைகளின் தேர்வுகளின் ஊடாக டொமினிக் ஜீவாவின் அகத்தை ஆராய முற்பட்டேன். அதில் ஓரளவு வெற்றி பெற்றேன் பின்னர் வயது ஏறஏற அவர் தொடர்பான பார்வைகளும் ஏறி இறங்கித்தான் வந்திருக்கின்றன என்பதை என்னால் மறுக்க முடியவில்லை. மல்லிகையின் மொழிநடை கடினமான தமிழாக இருந்து அப்பொழுது என்னை பயமுறுத்தியது என்பதையும் சொல்லத்தான் வேண்டும். அது ஒருவகையில் ஜீவா சார்ந்திருந்த கொம்முயூனிஸ்ட் கட்சியின் தாக்கமாக இருக்கலாம் என்றே எண்ணுகின்றேன். பின்னொருகால் அதுவே என்னை தரமான எழுத்துநடைக்குச்  சொந்தக்காரனாக்கியது என்பதனையும் மறுப்பதிற்கில்லை.

மல்லிகையில்  எழுதாத எழுத்தாளர்களே இல்லை எனலாம். மல்லிகை பலரை மணக்கச் செய்திருக்கின்றது. ஒருகாலத்தில் இழிந்தவராக கருதப்பட்ட ஜீவாவின் மல்லிகை பலரையும் உள்வாங்கிக் ஒரே தளத்தில் பயணிக்கவைத்தது ஒரு சாதனைதான். ஈழத்து எழுத்துப் பரப்புக்கு மல்லிகை புது ரத்தத்தைப் பாய்ச்சியது என்றே சொல்வேன். இருந்த பொழுதிலும் டொமினிக் ஜீவா என்ற ஒரு மனிதன் தன்னளவில் அப்படியே இருந்தார். இறுதிவரைக்கும் தான் சார்ந்த சஞ்சிகைக்கும், தனது எழுத்துக்கும், தான் கொண்ட இலக்குக்கும் விசுவாசமாகவே இருந்தார் என்பதில் சந்தேகமே இல்லை. தாயகத்தில் இடம்பெற்ற மனித அவலங்கள் அவரை அசைத்துப் பார்த்ததில்லை. அவரது சிந்தனைகள் யாவுமே எழுத்தையும் மல்லிகையையும் சுற்றியே வட்டமடித்தன. கருப்பு, வெள்ளை, புனிதப்படுத்தல்கள் மற்றும் துரோகி போன்ற அளவீடுகள் இவரையும் விட்டு வைக்கவில்லை.

முற்போக்கு எழுத்தாளர்கள் குழுமத்தில் இருந்த ஒரு எழுத்தாளர், இலக்கிய செயற்பாட்டாளர் எப்படி தனது சனங்களின் நிலை கண்டு கவலைகொள்ளாது இருக்க முடியும் என்ற கேள்வி இங்கு எழுவது இயல்பானதே. ‘சிறுபிள்ளை வேளாண்மை வீடு வந்து சேராது ‘ என்று அவர் அதற்கு ஒரு பதிலைவைத்து விட்டு கடந்து சென்று விட்டார். இதன்முலம் அவர் தமிழர் தேசியம் தொடர்பாக தன்னளவில் ஒரு முற்கற்பிததை வைத்திருந்துள்ளார் என்றே எண்ணத்தோன்றுகின்றது. ஆனால் அவரை சுற்றியிருந்தவர்கள் தமிழ் தேசியம் தொடர்பாக அவர் மீது ஒரு பிம்பத்தை செதுக்கி வைத்திருக்கின்றார்கள். அதே போல அவரது நிறத்தையே அறியாதவர்கள் பலர் அவரது மரணத்தில் ஒரு அடையாளத்தை எடுக்க முயன்றதை சமூகவலைத்தளங்களில் அவதானிக்க முடிந்தது. இன்னும் சிலர் ஒரு படிமேல் சென்று, ‘டொமினிக் ஜீவா ஒரு நிறைவான வாழ்க்கையை வாழ்ந்து முடித்து சென்றிருக்கின்றார்’ என்றும் சொல்கின்றார்கள். இவ்வாறான முற்கற்பிதங்களை இந்த சமூகவலைத்தளங்கள் தானே கொடுக்கின்றன? இந்த சமூகம் ஜீவாவை நிறைவாக வாழ்வதற்குரிய அங்கீகாரத்தைக் கொடுத்ததா என்ற கேள்வியை மனச்சாட்சி உள்ள ஒவ்வருவரும் தமக்குள்ளே கேட்கவேண்டும். தனது இளமைப் பருவத்தில் தனக்கு இடம்பெற்ற சாதீய நிராகரிப்புகளை ஜீவாவே தனது வாய்மூலமாகவும் எழுத்து மூலமாகவும் பதிவு செய்துவிட்டு போயிருக்கின்றார். அப்படியிருக்க அவர் எப்படி ஒரு நிறைவான சந்தோசமான வாழ்க்கையை வாழ்ந்திருக்க முடியும்?

எம்மிடையே ஒரு பழக்கம் இருக்கின்றது. ஒருவர் வாழுகின்ற காலத்தில் அவரின் நேரம்சங்களை அதிகம் பேசாது  எதிரம்சங்களைத் தூக்கலாகப்  பேசுவது ஒரு பரம்பரைக்கடத்தியாகவே இருந்திருக்கின்றது. இதுதான் டொமினிக் ஜீவா என்ற இலக்கிய செயற்பாட்டாளருக்கும் நடந்தது. ஏன் இன்னும் பலருக்கும் நடக்கலாம்! அதே போல் இந்த ஜீவா என்ற மனிதரை கிழக்கிலங்கையில் பேசாமாலே விட்டு விட்டார்கள் என்ற வரலாற்றுத்துயரையும் இங்கு பதிவு செய்யத்தான் வேண்டியுள்ளது. ஆரம்பத்தில் இழிசனன் என்றும், இழிசன எழுத்து என்றும் நீக்கம் செய்தவர்கள் பின்னர் மல்லிகையில் எழுதினார்கள். இறுதிக்காலத்தில் மல்லிகையை உயர்ப்பிடித்து விதந்தேத்திக் கொண்டாடினார்கள், குதூகலித்தார்கள், வாழ்நாள் சாதனையாளர் விருதுகளைக் கொடுத்தார்கள் என்றால் அதிலும் ஒரு சுயநல அரசியல் இருந்தது என்பதுதான் உண்மையிலும் உண்மை ! நன்றி .

கோமகன்

01 மாசி 2021    

நடு லோகோ

(Visited 138 times, 1 visits today)