என்றும் எம் நினைவில் இருக்கும் ‘நீர்வை’-ஆசிரியர் குறிப்பு

நீர்வை பொன்னையன் வணக்கம் வாசகர்களே ,

துயர் மிகு நாட்களில் உங்களுடன் பேசுவதில் மனதளவில் சங்கடங்கள் எமக்கு  இருந்தாலும், ‘பேசாது விடல்’ என்பது அதனை விடக் கொடிது. பேரிடர்களுக்கு நாங்கள் புதியவர்கள் இல்லை என்றாலும் இப்பொழுது நாம் சந்திக்கின்ற இடர் ஒவ்வொருவரது மனோ திடத்தை கேள்விக்குறியாகும் வல்லபத்தினை பெற்றது என்பதனை மறுப்பதற்கில்லை. நாம் அனைவரும் விரும்பியோ விரும்பாமலோ ஒருவருக்கொருவர் ஆற்றுகைப்படுத்தியும் எந்தவொரு விடயத்தையும் கடுமையாக நோக்காது எமக்கான மனஆளுமையையும் ஆற்றுகைப்படுத்தலையும் கட்டியெழுப்ப வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம்.

ஈழத்தின் தலைசிறந்த ஒரு சமூகப்போராளியை இழந்து விட்டோம். ஆம்… நீர்வை பொன்னையன் சமூகம் எழுத்து என்று இருவேறுபட்ட தளங்களில் பயணித்த ஒரு இலக்கிய ஆளுமை. அவரை நினைவு கூருமுகமாக இந்த சித்திரை மாத இதழ் ‘நீர்வை பொன்னையன் நினைவு இதழாக’ வெளியாகின்றது. அவரது இழப்பால் துயருறும் அவரது குடும்பத்தவரது துயரில் பங்குகொள்வதுடன் அவருக்கு எமது அஞ்சலிகளைக் காணிக்கையாகின்றோம்.

நீர்வை பொன்னையன் 1930 களில் நீர்வேலியில் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தார். இடதுசாரிய சிந்தனைகளில் ஊறிய  தோழர் பொன்னையன் தனது ஆரம்பக்கல்வியை நீர்வேலி அத்தியார் இந்துக்கல்லூரியில் பயின்றார்.

பின்னர், தனது மேற்படிப்புக்காக இந்தியாவின் கொல்கொத்தா நகருக்குச் சென்றார். அங்கே தனியே படிப்புடன் நின்றுவிடாது, தோழர் பொன்னையனை கொல்கொத்தாவின் சுற்றுச்சூழலே அவரை இடதுசாரிய சிந்தனைகளில் புடம்போட்டு உரமூட்டியது எனலாம். இந்தியாவில் தனது உயர்படிப்பை முடித்திருந்தாலும் அவர் ஒரு விவசாயியாகவே தாயகத்தில் தன்னை  முன்நிலைப்படுத்தினார். அதனுடன் நின்றுவிடாது யாழ்ப்பாணத்தில் அன்று இருந்த  இடதுசாரிக்கட்சியின் முழுநேரப் போராளியாக மாறினார். இவர் இலங்கை திரைப்படக் கூட்டுத்தாபனத்தில் மொழிபெயர்பாளராகக் கடமை புரிந்தாலும் அவரைப் பெரிதும் ஈர்த்தது சமுகப்பணிகளே. அதிலேயே தனது வயதின் பெரும்பகுதியைக் கழித்தவர். எழுத்துப்பரப்பில் இவர் முதன்முதலாக 1957-ல் ஒரு சிறுகதை ஒன்றினுடாக நுழைந்தார். அவரது முதல் சிறுகதையை ஈழநாடு பிரசுரம் செய்தது.  பின்னர் அவர், கவிஞன் இ.நாகராஜன் நடத்தி வந்த ‘தமிழர்’ என்ற பத்திரிகையில் பல சிறுகதைகளை எழுதினார். இவரது முதல் சிறுகதைத் தொகுதி மேடும் பள்ளமும் 1961 இல் வெளிவந்தது. இவரது உதயம், மூவர் கதைகள், பாதை, வேட்கை, உலகத்து நாட்டார் கதைகள், முற்போக்கு இலக்கிய முன்னோடிகள், நாம் ஏன் எழுதுகின்றோம்? போன்ற நூல்கள் ஈழத்து முற்போக்கிலக்கியப் பரப்பில் வரவேற்பினை பெற்றிருந்தன.

நடு லோகோஈழத்தின் பெரும் விருதான ‘சாகித்ய ரத்னா ‘ விருதை இலங்கை அரசு 2017 ஆம் ஆண்டில் தோழருக்கு  வழங்கிக் கௌரவம் செய்தது. நீர்வை பொன்னையன் எங்களை விட்டு மறைந்தாலும் அவரது நூல்களான :

மேடும் பள்ளமும் (1961),உதயம் (1970),மூவர் கதைகள் (1971),பாதை (1997),வேட்கை (2000),உலகத்து நாட்டார் கதைகள் (2001),முற்போக்கு இலக்கிய முன்னோடிகள் (2002),நாம் ஏன் எழுதுகின்றோம்? (2004,)முற்போக்கு இலக்கிய முன்னோடிகள் (2004),ஜென்மம் (2005),நிமிர்வு (2009),காலவெள்ளம் (2010),நினைவலைகள்,நினைவுகள் அழிவதில்லை (2013),உறவு (2014),பாஞ்சான் (2016),வந்தனா (2017),சாயல் ( 2019), லெங்கத்துகம (சிங்களம்) – 2019, Devers & Demon’s (ஆங்கிலம்) – 2019 ஆகியவை எம்மனதில் என்றும் நிலைத்திருக்கும்.

கோமகன்

பிரதம ஆசிரியர்

நடு குழுமம்

(Visited 86 times, 1 visits today)