தேடியலையும் நள்ளிரவு-சிறுகதை-அகரமுதல்வன்

 

அகரமுதல்வன்ன்றோடு பதினாறாவது தடவையாகக்  காணாமல் போயிருக்கும் அவனைச்  சித்தி தேடுவதில்லை என்று விட்டுவிட்டாள். எங்கு போயிருப்பான் என்று தெரியாமல் வீதி நெடுக சைக்கிளில் சென்று பார்ப்பதும், தன்னால் போகக்கூடிய தூரத்தில் இருக்கும் சொந்தக்காரர் வீட்டுக்கு போய் விசாரிப்பதும் தான் சித்தியால் முடிந்த தேடுதல். ஆனால் இன்றைக்கு அதுவுமில்லை. மரணவீட்டின் விடிகாலையைப் போல சித்தி களைத்துப் போயிருந்தாள். காந்தன் தொலைந்து போகக்கூடியவன் அல்ல. அவனொரு தனிவழி. தான் எடுக்கும் முடிவுகளும் தான் நடக்கும் பாதைகளும் தான் இந்த பூமியில் சரியென நம்புகிறவன். அவன் காணாமல்போய் வீடு திரும்பும் ஒவ்வொரு முறையும் அவனது தலை வெட்டில், நடையில், கதைக்கும் முறையில் வித்தியாசங்கள் இருக்கும். அவனிலிருந்து வருகிற வியர்வை குளத்துமீனின் மணத்தை ஞாபகப்படுத்தும். பாவம் அவனுக்கு குளத்து மீன் பிடிப்பதேயில்லை.

சித்தி நாளைக்கு அவனைத் தேடவேண்டும் என எண்ணிக்கொண்டேயிருந்தாள். அவன் கிடைத்து விடவேண்டும் என படத்தட்டுக்கு விளக்கு ஏற்றினாள். விளக்கின் திரி துயரத்தின் குரல் போல நீண்டு எரிந்து சில அசைவுகளில் அணைந்துவிட்டது. சித்தியின் கண்களில் அணைந்து போன விளக்கின் திரியைப் போல கண்ணீர் புகைக்க தொடங்கியது. இரவு விழித்திருந்த போதிலும் துர்க்கனவின் பகடைகள் சித்தியில் உருண்டுகொண்டே இருந்தது. காந்தன் இல்லாமல் போய்விடுவானோ என்கிற கேள்வி இத்தனை தடவைகளுக்கு பிறகு இன்றைக்கு தோன்றிவிட்டது. அவளின் அழுகையால் இரவின் அடர்த்தியான தீனம் உருப்பெருத்துக் கொண்டேயிருந்தது. சொற்ப நிமிட இடைவெளிகளில் அவன் கூப்பிடும் சத்தம் கேட்பது போலான பிரமை சித்தியை சூழ்ந்துவிட்டது. பிரமைகளைப் பிரமைகள் என்று நம்பமறுக்கும் பலவீனம் துன்பங்களின் இயல்பு.

000000000000000000000000000000000000

காந்தன் இயக்கத்தில் சேருவதற்காக வீட்டில் இருந்து போன அன்றைக்கு சித்தி இப்படித் தான் இருந்தாள். இயக்கத்திற்கு போனால் செத்துப்போயிடுவான் என்று சித்தி பயந்து அழுதாள். ஆனால் முள்ளிவாய்க்காலில் கூட காந்தனை சாவு அண்டவில்லை. பத்து வருடங்களாக இயக்கத்தில் இருந்த போதிலும் சின்னக் காயம்படாத அவனை அதிஸ்டமற்ற ஒரு சண்டைக்காரன் என்று தான் கூப்பிடுவேன். மேகங்கள் அற்ற வானம் போல வெறுமையானது காயங்கள் அற்ற போர்க் களத்து வாழ்க்கை. காந்தனிடம் ஒரு போராளியின் அடையாளங்கள் எதுவும் இருக்காது. நிறைய சந்திப்புக்களில் என்னை அவன் கண்டிருந்த போதிலும் கைகுலுக்கல், வணக்கம் சொல்லுதல் என்பதோடு கடந்துபோய்விடுவான். அளவுக்கு மீறி பேசுகிற மனிதர்களை எல்லாம் அவமானம் செய்கிற உருவம் போலவே எனக்கு அவன் தெரிவான்.

இயக்கம் மன்னாரில் இருந்து பின்வாங்கத் தொடங்கிய  நேரத்தில் ஒருமுறை அவனை சந்தித்தேன்.

“ நாம் களங்களில் கால்களை பின்னுக்கு வைக்கும் யுக்தி சரியான பிழை” என்று சொன்னான்.

நான் சிரித்தேன்.

“ முன்னுக்கு போகமுடியாமல் இருந்தால் பின்னுக்கு வாறது தானே சரி என்றேன். “ முன்னுக்கு போறதை விட பின்னுக்கு வாறது பெரிய இழப்பைத் தருமென்றான்.”

எனக்கு அவன் சொல்வதில் பிழையில்லை என்று தெரியும். அமைதியாக இருந்தேன். கிளிநொச்சி விடுபட்டு இரண்டு நாட்களின் பின்னர் புதுக்குடியிருப்பில் வைத்து பார்த்தேன். “விழுந்து போனதை எல்லாம் தூக்கி நிறுத்தினதை எல்லாருமாய் சேர்ந்து விழுத்தியே போட்டம்” என்றான். காந்தன் இப்படித் தான் மிரளும் விதமாக கதைப்பான். எவருக்கும் பயப்பிடமாட்டான். அவனுக்கு தெரிந்தவர்கள் எல்லோரும் அவனை ‘மடார் காந்தன்’ என்று தான் சொல்லுவார்கள்.

0000000000000000000000000000000

அவனை ஏப்ரல் மாதக் கடைசியில் பார்க்கிற பொழுது இடுப்பில் ஒரு பிஸ்டல் கட்டிக்கொண்டு வலைஞர் மடத்தில நின்றான். அதற்கு பிறகு எல்லாம் தீர்ந்துபோய்விட்ட இரவைப் போல தகர்ந்துவிட்டது. சித்திக்கு காந்தன் என்ன ஆனான் என்று தெரியாமல் துடித்துப் போய்விட்டாள். வீரச்சாவு என்றால் இயக்கம் அறிவித்திருக்கும் என்று நம்பினாள். காயப்பட்டு மயக்கமாகி ஆர்மியின் கையில் சிக்கியிருக்க கூடாது என்று முகாமுக்குள் இருந்து கும்பிட்ட படியே இருப்பாள். தங்கள் கண்களில் படமுடியாததாய் இருக்கும் பிள்ளைகள் இறந்து போயிருக்கவேண்டும் என்று விரும்புகிற தாய்மைக்குள் எப்போதும் துயரம் கருவறையை சூறையாடிக்கொண்டே இருக்கும்.

சித்தி காந்தன் உயிரோடு இருப்பதாக நம்பினாள். இறந்திருக்கவேண்டும் என்று விரும்பினாள். இந்த முரண் மரணத்தின்  கடைசி விநாடியைப் போன்றது. காந்தன் வவுனியாவில் தடுப்பு முகாமில் அடைக்கப்பட்டிருப்பதாக இன்னொரு பெடியனின் தாய் சித்திக்கு வந்து தகவல் சொன்ன அன்றைக்கு சித்தி மயக்கம் போட்டு கீழே விழுந்தாள். மயக்கம் மனிதனின் ஏக்கங்களில் குடிகொண்டுள்ளது. ஏக்கம் தீரும் போதும் தொடரும் போதும் அது மனிதனை வீழ்த்திவிடுகிறது. அடுத்த இரண்டு நாட்களில் முகாம் இராணுவ அதிகாரியிடம் அனுமதி பெற்று சித்தி காந்தனை பார்க்க தடுப்பு முகாமுக்கு போனாள். முள்ளிவாய்க்காலில் இருந்து முகாமுக்கு பேருந்தில் ஏற்றிவரப்பட்ட போதிருந்த பயணத்தை போலல்ல இது. பார்க்கும் வெளியெல்லாம் சிந்திக்கொண்டிருக்கிறது விவரிக்க முடியாத மேகம். பேருந்தின் மூடியிருந்த சாளரத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு முகம் பார்க்கிறாள் சித்தி. தடுப்பு முகாமின் வாசற்கதவின் வெளியே நின்று கொண்டு தனது பிள்ளையின் பெயரை ஒரு துண்டில் எழுதிக்கொடுத்தாள் சித்தி. போரில் தொலைந்து போனதன் பின்னர் இறந்து போயிருக்கவேண்டும் என்று எண்ணிய தனது பிள்ளையை அவளின் கைகள் ஆதூரமாய் கதவின் கம்பிகளுக்குள்ளால் தடவியது. முகத்தையும் தலையையும் தடவி பிள்ளையை இயலுமான வரைக்கும் நெஞ்சோடு சேர்த்தாள். காந்தன் உயிரோடு இருந்தான். வந்திருந்த தனது தாயைப் பார்த்துச் சிரித்தான்.

சித்தி அவனைக் கண்ணீரால் கட்டி அணைத்த போதிலும் அவனின் கண்கள் வெடிக்காத கைக்குண்டைப் போல இறுகிக்கிடந்தன. சித்தி அழுவதை மட்டும் நிறுத்தாமல் கதைக்கத்தொடங்கினாள். சித்தி கேட்பதற்கு அவன் ஒரு வார்த்தையில் பதில் சொன்னான்.

“ என்ன தம்பி அடிக்கிறவையா? “

“இல்லை. இஞ்ச பிரச்சனையில்லை. “

“சாப்பாடு ? “

“பரவாயில்லை. “

எல்லாக் கேள்விகளுக்கும் இப்படித் தான் பதில்கள் இருந்தது. தான் கொண்டு போன பிஸ்கட்  பையை காந்தனிடம் நீட்டும் போது வாசலில் நின்ற சிப்பாய் ஒருவன் வாங்கி பரிசோதித்து காந்தனிடம் கொடுத்தான். இருபது நிமிடங்கள் முடிவடைந்ததும் இருவரும் விடைபெற்றார்கள். இந்த இருபது நிமிடங்களில் காந்தன் இரண்டு தடவைகள் தான் தன்னை அம்மா என்று கூப்பிட்டதாக கவலையுற்ற சித்தியின் முகத்தில் ஊதிப்புடைத்த இருள் துள்ளிக்குதித்தது. அவள் சுவாசம் தனித்தனியாக கழன்று கொட்டுண்டு போவதாய் அதன் பின்னான நாட்களைக் கழித்தாள். சித்தி காந்தனை அடைகாக்கும் உஷ்ணத்தோடு பல தடவைகள் தடுப்பு முகாமிற்கு சென்று பார்த்துவிட்டு வந்திருக்கிறாள்.

வாழ்வின் துயரங்களுக்கான மூலமாய் வாழ்வே மாறுவது கொடுமையானது. காந்தன் கேள்விக்கு ஒரு சொல்லில் தான் பதில் சொன்னான். அம்மா என்று அழைப்பதை சில சந்திப்புகளில் தவிர்த்தே இருக்கிறான். அலைவிழுங்கி செத்துப் போன குழந்தையின் நெஞ்சைப் போல காந்தனின் கதையும் பார்வையும் சித்தியின் கண்களிலேயே பயங்கரமாய் மிதந்திருக்கிறது. ஓர் அநாவசியமான மேகம்  அலைவதை வானம் பார்ப்பதைப் போல காந்தன் சித்தியைப் பார்த்திருக்கிறான்.

விடுதலை ஆகி வீட்டுக்கு வந்த சில நாட்களிலேயே காந்தனை சித்தி அடையாளம் கண்டுவிட்டாள். காந்தன் பைத்தியம். பைத்தியம் ஆக்கப்பட்டிருக்கிறான். தனது பிள்ளை பைத்தியமென உணர்ந்து கொண்ட தாய் தன்னை மீளாத அவலத்திடம் ஒப்படைக்கிறாள். பொழுதுகள் முழுக்க காற்றோடு கதைக்கப் பழகியிருந்தான். இடையிடையே நெருப்பை மூட்டி தலைமயிரைப் பொசுக்கி இருந்தான். இரவுகளில் எல்லாவற்றிடம் இருந்து விலகி மரங்களில் விடியலை மட்டுமே பார்த்துக்கொண்டிருப்பான். சித்தியின் பளுமிக்க கவலை அந்த இரவு முழுக்க அழுதுகொண்டேயிருக்கும். அவனை எப்படியாவது குணப்படுத்தவேண்டும் என்று மூச்சிரைக்கக் கடவுளை வேண்டிக் கொண்டிருப்பாள்.

‘தம்பி உள்ள வந்து படு’.

பதிலுக்கு ‘ம்……..’ என்று சத்தம் கூட வராது. இரவின் வானத்தின் கீழே அசையும் விபரீதத்தைப் போல கால்களை நீட்டியபடியிருக்கும் அவனை விதி சிதைத்துக் கொண்டிருக்கும். நிர்மூலமான நிலமெங்கும் அவனது நிழல் இரவில் அலைந்தது. அப்படித்தான் இன்றைக்கு காலையில்  வீட்டிலிருந்து வெளியில் போன காந்தன் மதிய சாப்பாட்டுக்கு கூட வரவில்லை. சித்தி அவனை தொடர்பு கொண்டாள். போன் அணைத்துவைக்கப்பட்டிருந்தது. அவனைத் தேடுவது என்றால் எங்கு தேடுவது ? அவன் எங்கு செல்வான் ? எங்கு காணாமல் போகிறான் என்று சித்திக்கு தெரியவே தெரியாது. காணாமல் போன பதினைந்து தடவைகளும் சித்தி தேடினாளே தவிர அவளால் கண்டுபிடிக்கமுடியவில்லை. அவனே தான் வீட்டுக்கு வந்தான்.

இந்தத தடவை சித்தியின் மனத்தில் சலனம் அடைக்கோழியைப் போல படுத்துக்கிடந்தது. அவனுக்கு ஏதோ நடக்கப்போவதைப் போல எண்ணம் ஓயாமல் ஊளையிட்டது. நள்ளிரவை தன் கண்ணீரால் சுமந்தபடியே வானில் அலையும் மேகத்தோடு சைக்கிளை உழக்கத் தொடங்கினாள் சித்தி. போரில் தொலைந்து மீண்ட ஒரு பிள்ளையை காலம் ஏன் காணாமல் செய்கிறது என இந்த நள்ளிரவில் சித்தி யாரிடம் சொல்லி அழுவது.

சொல்லி அழுவதற்கு கூட துணையற்ற வாழ்க்கை எப்போதும் மரணத்தை கெஞ்சும். சித்தியின் கண்களில் இருந்து கழன்று காற்றில்விழும் கண்ணீருக்குள் வெளிச்சம் இருந்ததைப் போல நள்ளிரவின் நட்சத்திரங்கள் மின்னின. வீதியின் இரு  மருங்குகளில் இராணுவ காவலரண்கள். அவர்கள் யாரைக் காக்கிறார்கள்? அந்த நள்ளிரவிலும் சிங்கத்தின் வாளில் இருந்து ரத்தம் வழிய வழிய கொடி பறந்து கொண்டேயிருந்தது.

அவள் காந்தனை வீதிகளில் உள்ள கடைகளில், சந்தையில், பேருந்து நிலையங்களில் எல்லாம் தேடுகிறாள். தூங்குவதற்கு இடமற்ற தெரு நாய் ஓய்ந்த நகர்புறத்தின் இடங்களை போய் பார்ப்பதைப் போல தனது பிள்ளையை சித்தி தேடினாள். நள்ளிரவு சித்தியின் கண்களிலிருந்து நகர்ந்து ஒடுங்கியது. தேடித் திரியும் சித்தியின் பாதங்களுக்குள் வலிக்க வலிக்க அடுத்த நாள் விடியல் வந்தது. காந்தன் இல்லை. இடையிடையே  அவனின் இலக்கத்துக்கு தொடர்பு கொண்டாள்.  அது அந்த நிலத்தின் வாழ்க்கையைப் போலவே அணைக்கப்பட்டிருந்தது. தன் கண்ணீர் காய்ந்து போன தெருக்களில் எதிர்கொள்ளும் தெரிந்தவர்களை பார்த்து சிரித்தபடியே சித்தி வீடு நோக்கி திரும்பி வந்துகொண்டிருந்தாள்.

ஊரில் உள்ளவர்களுக்கு எல்லாம் காந்தன் காணாமல் போகும் செய்தி இயல்பானது. சித்தியிடம் யாரும் அது சம்பந்தமாக யாரும் கதைப்பது கூட கிடையாது. காந்தன் விசரன் என்று ஊருக்குள் கதைப்பதற்கு நிறையப் பேர் இருந்தார்கள். மிகுந்த துயரத்தின் பெருவிருட்சம் போல வீட்டின் முற்றத்தில் சித்தி இருந்தாள். கிழக்கின் உதிரமெங்கும் பாய்ந்து தூரத்து மரங்களின் இலைகளுக்குள்ளால் சூரியன் அவளை தொட்டது. வானத்தின் அநாவசியமான தவறைப் போல சித்தி ஒளிவிழாத இடம் நகர்ந்து இருந்தாள். காந்தனுக்கு ஏதோ நடந்துவிடுவதைப் போலான சொல்லமுடியாத சாவின் கனத்த கரங்கள் சித்தியை தூக்கி சுழற்றியது. அய்யோ என்று கதறியழுத சித்தியின் அழுகைக்குள் துடைத்தழிக்க முடியாத துயரங்கள் நிரம்பின. மீண்டும் காந்தனை தொடர்பு கொண்டாள். அக்கணம் அவனின் தொடர்பு கிடைத்தது.

எங்கையடா தம்பி என்னை விட்டிட்டு போனனீ ? வாடா…  எங்க நிக்கிறாய் காந்தன் ? என்று அழுதபடியே பயத்தோடு கேட்டாள்.

அம்மா, நான் வந்துகொண்டிருக்கிறேன். பரந்தனில நிக்கிறன் வந்திடுவேன்.

வேகமாய் வாங்கோ. எனக்கு பயமாய் இருக்கு. பிள்ளையப் பார்க்கவேணும் போல இருக்கு.

சித்தி இதை சொல்லிக் கொண்டிருக்கும் போதே காந்தன் தொடர்பை துண்டித்துவிட்டான். போனில் அவளை அம்மா என்று அழைத்த சந்தோசம்  பயங்கரத்தின் வெளியில் தடுமாறிச் செத்துக் கொண்டிருந்தது. காந்தன் வந்துவிடுவான் என கற்சிலையப் போல நகரமால் பார்த்துக்கொண்டேயிருந்தாள்.

000000000000000000000000000000000

கடந்த காலங்களின் நெஞ்சிலும் முதுகிலும் கண்களிலும் முத்தங்களும் சிரிப்புகளும் வெற்றிகளும் படிந்து போயிருந்த காந்தன் அலைந்து திரிந்த பிசுபிசுப்போடு திறந்திருந்த வீட்டின் படலைக்குள் போனான். வடிந்திருந்த சித்தியின் கண்ணீரை மிக லாவகமாக கடந்து வீட்டுக்குள் போனான். தன கண்முன்னே கிடந்த குரோட்டன் செடியைப் போல துக்கம் கிளைவிட்டு வளர்ந்ததை சித்தி உணரவில்லை.

அம்மா பசிக்குது. சாப்பாட்டைத் தாங்கோ.

பெருங்களைப்போடு நசிவடைந்த குரலில் காந்தன் கேட்ட போது

சித்தியின் கைகளைத் தேடி விடிகாலை பிரவேசித்தது.  வேதனை தளும்பும் உருவமொன்று அடுப்படிக்குள் எழும்பிப் போனது அதன் நிழல் சித்தியைப் போலவிருந்தது.

“ஏன் தம்பி எங்கை தான் நீ இப்படி போய்ட்டு போய்ட்டு வாறாய்? எனக்கு சொல்லலாம் தானே?  அம்மாவை ஏன் கொன்று கொண்டே இருக்கிறாய்”

சித்தி அடுப்படிக்குள் இருந்து இப்படி அழுதபடி சித்தி கெஞ்சியது மடார் காந்தனின் காதுகளில் எதிரொலித்து அவனைக் ஒரு விசர் நாயைப் போலக் கவ்வியது.

அம்மாவின் அழுகைக்குள் அவளின் கேள்விகளுக்குள் மூடுண்டு போயிருந்த காந்தனால் அன்றைக்கு மட்டும் கொஞ்சம் கூடுதலாக கதைக்க முடிந்தது. “அம்மா நீங்கள் அழுது கேட்டாலும் நான் சொல்லமாட்டேன். இப்பிடி இனிமேல் கேக்கிறதை நிப்பாட்டுங்கோ. முதலில என்னைக் காணவில்லை என்றால் அழாதேங்கோ. நான் சாகமாட்டேன்” என்று காந்தன் சொன்னது  தாகம் தணியாத வார்த்தைகளாக இருந்தது.

காந்தன் காணாமல் போகும் நாட்களில் எல்லாம் குளத்தை அண்டிய காட்டுக்குள் ஒரு கல்லறையின் முன் அழுகிற தாயைப் போல ஓரிடத்தின் முன்னால் இருந்து அழுது அந்தத்  தரை மீது முத்தமிட்டு நித்திரையாகிவிடுகிறான். அங்கு கல்லறை கட்டப்படவில்லை. அந்த இடத்தின் கீழே யாரோ விதைக்கப்பட்டிருக்கிறார்கள். அது அவனுக்கு மட்டும் தெரிந்த மூச்சாகவும் விதைப்பாகவுமே இருக்க முடியும். அந்தத் தரையை காந்தள் மலர்கொண்டு குளத்து தாமரை மலர் கொண்டு அலங்கரிக்கும் கண்ணீர் சிந்தும் அவன் இதுவரைக்கும் பெயர் சொல்லி அழவேயில்லை. காந்தன் மடாராகவே காணாமல் போய் வீடு திரும்பிக்கொண்டேயிருக்கிறான்.

அகரமுதல்வன் -இந்தியா

அகரமுதல்வன்

(Visited 248 times, 1 visits today)