சீரகச்சம்பா மட்டன் பிரியாணியும் செவனப் கலரும் – சிறுகதை-அய்.தமிழ்மணி ( அறிமுகம் )

அய்.தமிழ்மணி ”விடிஞ்சும் விடியாம எங்க கெளம்பிட்டீங்க.”

”ஒங்கப்பெய்ம் அனுப்புன ஹெலிகாப்டர்ல அப்படியே ஒரு ரவுண்டு ஊரச் சுத்திட்டு வரலாம்ன்னு இருக்கேன்., பாக்க வேண்டிய வேலயப் பாப்பாளா. கேள்வி கேட்க வந்துட்டா..” என்றபடி கண்ணாடியில் முடி இல்லாத தன் தலையை சீவிக் கொண்டிருந்தார் முத்துகாமு..

“ஆமா. நகர்வலம் கெளம்பிட்டாரு மகாராசா., இருக்குற ஓட்டக்கடையில் ஒக்கார துப்புல்ல., வாய்மட்டும் வாய்க்காப்பட்டி வரைக்கும் நீண்டுறுமே.” சமையலறை சாமான்களை கணவனாக நினைத்துக்குக் கொண்டு உருட்டினாள் தங்கம்மாள்.

“பாத்துடி ஒங்கப்பெய்ம் வாங்கிக் கொடுத்த ஒன்னு ரெண்டையும் ஓட்டையாக்கிடாத., புதுசா வாங்குறதுக்குன்னு தனியா அழுக முடியாது. நான் வர்றேன்.”

“அதான. எங்கடா கெழக்கால உதிக்கிறது மேக்கால உதிச்சுடப் போகுதோன்னு பாத்தேன். புதுசா ரெண்டு சாமான வாங்கித் தர வக்கில்ல. ஆத்தாடி ஊருக்குள்ள மட்டும் பெத்தபெருமாளுன்னு பேரு. காலையில வெள்ளனமா எந்திருச்சா மட்டும் பத்தாது பொண்டாட்டிக்கு ஊட மாட ஒத்தாசையா இருக்கணும்., வாக்கப்பட்டு வந்ததுல இருந்து நாந்தேன் ஓடாத் தேயுறேன். நீங்க மட்டும் நல்லா மாப்ள கணக்கா அலையுங்க. இதுல தெனமும் எவனாவது ஓசில பிரியாணி வாங்கிக் கொடுத்துறாய்ங்கே ஒங்களுக்கு., அவய்ங்களச் சொல்லணும்.”

“காலையிலே கெளம்புறப்ப மூடக் கெடுகாதடி. நல்ல மூடுல இருக்கேன். இன்னக்கி பிரியாணிக்கி எவெஞ் சிக்குறான்னு தெரியல” தூரமாயிருந்த பித்தளைக்குடத்தை ஆம்பளைத் திமிறில் எட்டி ஒரு உதை உதைத்துவிட்டு சட்டைப்பட்டனை மாட்டியவாறு  கிளம்பினார் முத்துகாமு. ஓரமாய் போய் விழுந்த அந்தக்குடம் தங்கம்மாளுடன் சத்தம் எழுப்புவதில் போட்டி போட்டது.

காலைக்கூவலைக் கூவிவிட்டு தன் சிறகுகளையும் உடலையும் உலுப்பிக்கொள்ளும் சேவலிலிருந்து உதிர்ந்துவிழும் வண்ண இறகுகளைப் போல அதிகாலை மேகங்கள் கரைய கதிரவன் தன் தலைகாட்டிக் கொண்டிருந்தான்.

வீதியிலிறங்கிய முத்துகாமு தன் மூச்சை இழுத்து வாங்கி விட்டு தெருவை அப்படியே நோட்டம்விட்டார். நகராட்சியிலிருந்து நல்லதண்ணீர் திறந்துவிட்டிருந்தார்கள். எல்லா வீடுகளுக்குள்ளும் மோட்டர் சத்தமாய் ஓடிக் கொண்டிருந்தது. சிலர் ரப்பர் ஓஸ் மூலம் வாசலையும் வீட்டுச் சுவர்களையும் கழுவிக் கொண்டிருந்தார்கள். வறுமைக்கு வாக்கப்பட்ட பெண்கள் குடம் தண்ணீர் ஐந்து ரூபாய்க்குப் பிடித்துச் செல்ல சில மோட்டார்வீடுகளின் வாசலில் வரிசையில் நின்று கொண்டிருந்தார்கள்.

இரண்டு மூன்று தெருநாய்கள் தெருவுக்குள் அங்குமிங்கும் ஓடிக் கொண்டிருந்தன. அதிலொன்று முத்துகாமுவைப் பார்த்துக் குலைத்தது.

“அடச்சீ ஆள்த்தெரியாம. போ அங்கிட்டு.” என பயத்தினை உள்ளுக்குள் வைத்துக் கொண்டு தைரியமாய் விரட்டிவிட்டுப் பெருமையாய் நடக்க ஆரம்பித்தார்.

”என்னண்ணே காலையிலேயே வேட்டைக்கு கெளம்பிட்டீக போல.” என்ற சுந்தரேசனிடம். ”போப்பா ஏய்” என வெக்கமாய் வார்த்தைகளைத் தந்துவிட்டுக் கடந்தார். சுந்தரேசனின் வார்த்தைகள் இவருக்குள் புதுசக்கியைக் கொடுத்திருந்தது. சட்டைக்காலரை உயர்த்திக் கொண்டார். அவரது நடை எகத்தாளமாய் நடந்துகொண்டிருந்தது.

முத்துகாமுவிற்கு பொழுது போகவில்லையென்றால் சுந்தரேசனுக்கு அழைப்புக் கொடுத்துவிடுவார். சுந்தரேசன் பேருக்குத் தகுந்தார் போல ஆளும் அழகாய் இருப்பான். தன்னைவிட அழகாய் இருக்கிறான் சுந்தரேசன் என்ற முத்துகாமுவின் வயிற்றெரிச்சலின் வாயிலாக சுந்தரேசனுக்கு சுண்ணாம்புவாயன் எனப் பட்டப்பெயர் வைத்தழைப்பது முத்துக்காமுவின் வழக்கம். கூடைபின்னித் தொழில் செய்கிற அவனும் இவரது கடைக்கே வந்து இவருக்கு தேநீர் அதற்கான சைட்டிஷ் எல்லாம் வாங்கிக் கொடுத்து பேசிவிட்டுச் செல்வான். சுந்தரேசனைப் போல முத்துகாமுவிற்கு பலபேர் இருந்தார்கள். ஆனாலும் இவனே அவருக்கான ஆத்மார்த்த வார்த்தைப் பின்னலாளன்.

இது மட்டுமில்லாமல் முத்துகாமுவிற்கு தமிழகம் முழுவதும் நண்பர்கள் இருந்தார்கள். அவர்கள் இவரது ஊருக்கு வந்துவிட்டால் இவரே அவர்கள் இவருக்கு அழைப்புக் கொடுக்காவிட்டாலும் போய் சந்தித்து தனது இருப்பினை நிலைநிறுத்திவிட்டு வருவார். குறிப்பாக பிரியாணி சாப்பிட்டுவிட்டு. அவர்களுக்கே பிரியாணி சாப்பிடுகிற எண்ணம் இல்லாவிட்டாலும் அந்த எண்ணத்தை வரவைப்பதில் முத்துகாமு கெட்டிக்காரர். அதுவும் பிரியாணி சாப்பிட்டவுடன் செவனப் கலர் ஒன்றை மூச்சுமுட்டாமல் குடித்துவிட்டு பெரிதும் சிறிதுமாய் மாறிமாறி வருகிற சிலபல ஏப்பங்களை காற்றுக்கு பரிசளித்துவிட்டு வாங்கித்தந்தவர்களிடம் சொல்லிவிட்டு அப்படியே கிளம்பிவிடுவார். பல நேரங்களில் சொல்லாமல் கிளம்பிவிடுவதும் உண்டு. வந்தவர்களிடம் பிரியாணி சாப்பிடுவதற்காக அவர் மெனகெடும் நேரங்கள் பிரியாணி சாப்பிட்டதும் அவர்விடும் ஏப்பத்தினைப் போல் காற்றில் கலந்துவிடும். வந்தவர்களும் இதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளமாட்டார்கள். முத்துகாமுவிற்கு மச்சம் அப்படி. அந்த மச்சத்தின் மீது அச்சமில்லாமல் அவரை அணுகும் ஒரேநபர் சுந்தரேசன் மட்டுமே.

உணவின் மீது குறிப்பாக பிரியாணி மீது பெரும் மயக்கம் கொண்ட முத்துகாமுவிற்கு அவரது தாய்தந்தையர் வைத்த பெயர் இது. செல்லாமாய் காமு என்றழைக்கப்பட்டார். ஆனால் அவரை ‘காமாலை காமப்பர்’ என்று எல்லோரும் ரகசியமாய்ப் பேசிக் கொள்வார்கள். இப்பெயர் காலப்போக்கில் அவரது வாய் வியாக்கினக்களுக்கும் வயசுக்கும் ஏற்ப கிண்டியதும் விற்றுத் தீர்ந்து போகிற இருட்டுக்கடை அலவாவைப் போல அவருக்கு கிடைத்தாகும். இவர் தவிர்த்து மற்றவர்கள் நல்ல உடை அணிந்தாலோ நாலு காசு பார்த்துவிட்டாலோ நல்ல பெயர் வாங்கிவிட்டாலோ இவரால் சகித்துக்கொள்ள முடியாது. இவர்களையெல்லாம் நல்லவிதமாய்ப் பேசுவது போல் பேசி ஒருத்தர் ஒருத்தரிடம் அவர்களது பெயரை நாறடித்துவிடுவார். அவர்களுக்குள்ளும் இருக்கிற தற்பெருமையால் முத்துக்காமுவின் புறணி வார்த்தைகளை ஏற்றுக்கொள்வார்கள். ஆனால் அவர்கள் தனித்தனியே சந்தித்துப் பேசிக் கொள்கிற போது அவரின் காமாலை வார்த்தைகளைப் பகிர்ந்துகொள்வார்கள். இப்படித்தான் முத்துகாமு காமாலைகாமப்பர் ஆனார்.

ஆனாலும் அவர்களிடம் அவரவருக்கேற்றார் போல் லாவகமாய்ப் பேசி கைக்குள் வைத்துக் கொள்வார். காரணமிருக்கிறது அதற்கு.

அது என்ன காரணமென்றால்.

முத்துகாமு சின்ன வயதில் சைவப்பிரியர். அவரது குடும்பப் பின்னணி அப்படி. அசைவம் பக்கம் அப்படி இப்படி தலை வைத்துக்கூடப் படுக்கமாட்டார். தூர ஓடிவிடுவார். ஆனாலும் அவருக்குள் என்றாவது ஒருநாளாவது அசைவத்தை சுவைத்துவிட வேண்டும் என்ற தீராத ஆசை இருந்து வந்தது. இருந்தாலும் அதற்கான சூழல் வாய்க்காததால் ச்சீ ச்சீ அந்தப்பழம் புளிக்கும் என்ற கதைப்படி வாழ்ந்தும் பேசியும் வந்தார்.

ஒருநாள் திண்டுக்கல் வரை தன் சொந்தவேலையாய் தனியாய்ப் போனவர்  தன் சொந்தக்காசில் திருட்டுத்தனமாய் ஒரு மட்டன்பிரியாணியை வெளுத்து வாங்கினார். அந்தச் சுவை அவரது நாவையும் மனதையும் மாறி மாறி ஊற வைத்தது. பில் வந்ததும் ஆத்தாடி என்று வாயைப் பிளந்து பில்லைக்கட்டிவிட்டு ஊர்வந்து சேர்ந்தவருக்கு பில் தொகையும் பிரியாணியும் மாறி மாறி மனப் போராட்டத்தினைக் கொடுத்தது.  அந்த வாரத்தின் ஒருநாள் அவரது ஊரில் புதிதாகத் திறக்கப்பட்ட தலப்பாக்கட்டி பிரியாணிக் கடைக்கு நண்பர் ஒருவர் அழைத்துச் சென்று ஓசியில் இவருக்கு மட்டன்பிரியாணி ஒன்றை வாங்கிக் கொடுக்க அந்த நண்பர் அவருக்கு கடவுளாகவும் அந்த ஹோட்டல் கோவிலாகவும் தெரிந்தது. இங்கேயும் பிரியாணி அவரை என்னவோ செய்து ஒரு காதலியைப் போல ஈர்த்தது. பிரியாணியைத் தின்று அள்ளி எடுத்த விரல்களைச் சூப்பிக்கொண்டே எடுத்தார் ஒரு முடிவை முத்துகாமு.

“க்காளி இனிமே தெனமும் பிரியாணி சாப்பிடாம தூங்கமாட்டேம். அதுவும் எவனையாவது மண்டையக்கட்டி ஓசியில் தின்னுபுடணும்ப்பா தலப்பாக்கட்டி ஈஸ்வரா..”.

அன்றிலிருந்து தினமும் எவரையாவது பேசி நாள் தவறாது இன்று வரை ஓசியில் பிரியாணி சாப்பிட்டு வருகிறார். அவரின் பிரியாணி பிரதாபங்களை இமைகொட்டாமல் கேட்பது சுந்தரேசனின் வாடிக்கை. ”என்னண்ணே காலையிலேயே வேட்டைக்கு கெளம்பிட்டீக போல..” என்ற சுந்தரேசனின் வார்த்தைகளை இப்போழுது இங்கே நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்.

எகத்தாளமாய் நடை நடந்துகொண்டிருந்த முத்துகாமுவிற்கு அந்தக்காட்சி கண்ணில் பட அவசராமாய் அந்த இடத்தினை நெருங்கினார். அங்கே சுவரொன்றில் வண்ணமடித்து எழுத்துகளை எழுதிக் கொண்டிருந்தார்கள்.. பிரி.. என்று.,

“என்னப்பா பிரி. ன்னு எழுதிக்கிட்டிருக்கீக.. பிரியாணிக்கட வெளம்பரமோ?” என்றார் ஆவலாய்.

“இல்லண்ணேய்., பிரியாமணி ஜட்டி விளம்பரம்.” என்றார் வரைந்து கொண்டிருந்தவர்.

”அப்படியா… ? பிரியாணி விளம்பரமில்லையா..?” எனக்கேட்ட முத்துகாமுவை., அவனவம் ரேசன் அரிசிக்கே பாடு தெரியாம முழிச்சுக்கிட்டிருக்கய்ங்கே காலங்காத்தாட இந்தாளு பிரியாணி நெனப்புல இருக்கானேன்னு சைசாய்ப் பார்த்துவிட்டு அவர் வரையத் தொடங்கினார்.

ஆங்காங்கே கடைகளைத் திறந்து கொண்டிருந்தார்கள். தெருவில் சென்று கொண்டிருந்த ஒருவர் செல்போனில் “பிரியாணி அரிசியா வாங்கிட்டு வர்றேன்..ம்” என்ற குரலுக்கு முத்துகாமு அவர் பின்னாடியே நடக்க  அவர் திரும்பி இவரை ஒரு பார்வை பார்க்க விலகி ஓரமாய் நடக்க ஆரம்பித்து தனது கடையை அடைந்தார்.

கடையத் திறந்தவர் கன்னிமூலையில் வரிசையாய் மாட்டப்பட்டிருந்த சாமிபடங்களை பார்த்து மானசீகமாய் பிரியாணி வரம் கேட்டுக் கொண்டார். அப்படியே அவரது நாற்காலியில் உட்கார்ந்தவருக்கு வடக்குத்தெரு பொன்னையனிலிருந்து தெற்குத்தெரு காமட்சி வரை காட்சியாய் வந்து போனார்கள்.

“இன்னக்கி ஓம்பப்பு நம்மகிட்ட வேகாதப்பா. வேற ஆளப் பாத்துக்க..” என்றபடி பொன்னையனும்..

“ஒனக்குத் தெனமும் இதே சோலிதானா. என்னய்யா பொழப்புது..” என காமாட்சியும்.,

“அண்ணே இன்னொரு நாளைக்கிப் பாப்பம்ண்ணே.,” சந்திரனும்.,

“சிக்குனா செல வச்சு மங்களம் பாடிருவீங்களே.” ன்னு கருப்பையாவும்.,

“ஏன்ணே ஒரு நாளக்கி சொந்தக்காசுல வாங்கித் தின்னாத்தேன் என்னவாம்.,” என இஸ்மாயிலும் முத்துகாமுவிற்குள் தோன்றி மறைந்தார்கள்.

வழக்கம்போல் பக்கத்து டீகடைப்பையன் வந்து அவரது டேபிளில் டீயை வைத்துவிட்டுப் போனான்.

“என்ன முத்தம்மா. இன்னக்கி பாலுவுக்கு எந்தப்பக்கம் வேல..” கடையைப் பெருக்க வந்த முத்தம்மாளிடம் கேட்டார் முத்துகாமு.

“என்னத்தச் சொல்ல. காய்கறி மூடையத்தூக்கிக்கிட்டு இந்தக் கடையத் தாண்டித்தேம் போறாரு பைக்குல. ஒரெட்டு எறக்கிவிட்டுப் போங்கன்னா. நீ அப்படியே போயிட்டு வந்துடுன்னு சொல்றாப்ளண்ணே. முன்ன மாதிரி எறக்கிவிட்டுப் போகமாட்டேங்குறாரு.” என்றபடி பெருக்கி முடித்தவள் வாசல் தெளிக்க தண்ணீரெடுக்கப் போனாள்.

“இனி இந்தப் பக்கந் தலவெச்சுப்படுப்பானா அவெம். ம்.. அவெம் பொண்ட்டாட்டிக்கு நாம குடுக்குற சம்பளத்தவிட. அவெம் நமக்கு பிரியாணி வாங்கிச் செலவழிச்ச காசு அதிகம்ல.” என்று மனசுக்குள் நினத்துக் கொண்டவர் ஆள்பிடிக்கும் படலத்தை சிந்திக்கத் துவங்கினார்.

மணி காலை எட்டாகிவிட்டது. இன்றைய பிரியாணிக்கு ஒருமுகமும் திருமுகமாய்ப் படவில்லை அவருக்கு. இருந்தாலும் மனம் தளராத முத்துகாமு கடைக்கு வந்த வாடிக்கையாளர்களுக்கு சாமான்களை எடுத்துக் கொடுத்துவிட்டு வீட்டுக்குக் கிளம்பினார். இனி அவரது கடைக்கு அடுத்த டூட்டி பத்து மணிக்குத்தான்.

“அண்ணே இன்னக்கி பாய்வீட்டுக் கல்யாணம்ணே. மட்டன் பிரியாணியாம். டேஸ்ட்டு கெளப்பிவிட்டுருவாக. பிரியாணின்னுதும் ஒங்க நெனப்புதேன். ரெடியா இருங்க. பத்து பத்தரைக்கு வந்து ஒங்கள பிக்கப் பண்ணிக்கிறேன்..” என்ற டேவிட்டின் செல்போன் குரலுக்கு. “சரியப்பா..” என்று ஆவலாய்ச் சொன்னவர்..

”சீரகச்சம்பாவா. இல்ல பாசுமதியா..” எனக்கேட்டார்.

”அவக பொதுவா பாசுமதில தான்ணே போடுவாக. கல்யாண பிரியாணி எதுவா இருந்தா என்னண்ணே..”

“அதுக்கில்லப்பா. சீரகச்சம்பானா ரெண்டுவாயி சேத்தெறங்கும் நமக்கு. மொகமும் பொலிவு கொடுகும்ல்ல அதேன்..”

“வாண்ணே. எதப்போட்டாலும் நம்ம கருத்து பிரியாணிதேன்..”

”சரியப்பா. சரியப்பா.. ரெடியா இருக்கேம் கூப்பிடு” என்றவாறு முத்துகாமு செல்போனை தனது சட்டைப் பாக்கெட்டில் போட்டுக் கொண்டு குதுகலமாய் நடக்க ஆரம்பித்தார்.

”கடவுள் இருக்காண்டா. முத்துக்காமு ..” என மனசுக்குள் சொல்லிக் கொண்டு. ஆண்டவன் படச்சான் எங்கிட்டக் கொடுத்தான் அனுபவி ராசான்னு அனுப்பி வைத்தான் என்ற சிவாஜி பாடலை மெல்லிய விசிலில் பாடிக்கொண்டு வீடடைந்தார்.

”என்ன ஓசிப் பிரியாணிக்கு ஆள் கெடச்சாச்சு போல. பாட்டும் விசிலும் பலமா இருக்கு..” தங்கம்மாள் எரிச்சலாய் கேட்டாள். முத்துகாமு இப்படி ஓசியில் பிரியாணி தின்பது அவளுக்கு அவமானமாய் இருந்தது.

“ ஒனக்கேண்டி வயிதெரிச்ச. ஒனக்கு வேல மிச்சந்தான. ஒனக்கு என்னைக்காவது பிரியாணி வாங்கித் தரமாட்டேன்னு சொல்லியிருக்கேனா..”

“ஓங்காசுல வாங்கித் தந்தா நா யேன் வேணாண்டப் போறேன். ஊர்ப்பய காசுல திங்க ந்நாவொன்னும் மானங்கெட்டுப் போயிக் கெடக்கல..”

“அடிப்போடி அந்த பவுசும் சொகுசுந் தெரியாதொனக்கு.” என்றவாறு சட்டையைக் கழற்றி சுவற்றுக்கொக்கியில் மாட்டினார்.

”அரசலச் சாமான்கள வாங்கிப்போட்டா ந்நாங்கூடதேன் பிரியாணி செய்வேன். நிம்மதியா குடும்பத்தோட சாப்பிடலாம்ல வாரத்துகொருன்நா. தெனமும் இப்படி ஓசில தின்னா ஓடம்பென்னதுக்காகுறது.. ஊரென்ன பேசும்.” என்ற தங்கம்மாளினின் வார்த்தைகளுக்கு காது கொடுக்காமால் விசிலை ஓங்கி வாசித்தார்.

“ஒருநாளைக்கொருன்னா. பிரியாணி கெடைக்காம பித்துப் பிடிச்சு நாயா அலையத்தேம் போறீங்க. ஆமா..” என்றவள்..

“இப்பென்னா சாப்பாடெடுத்து வைக்கவா.” என்றாள்.

”இல்லடி இன்னக்கி டேவிட்டுக்குத் தெரிஞ்ச யாரோ பாய்வீட்டுக் கலயாணமாம். பாசுமதி பிரியாணியாம். கூப்பிட்டு போறேண்டிருக்கியான். வெறும் வயித்துல இருந்தாத்தேன் ஒருகட்டு கட்ட முடியும்..”

“தரித்திரம்.” என்று மனசுக்குள் நினைத்தவள்.

“அப்ப காலையில் ஒங்களுக்காக்குனத நைட்டுக்கு நீங்கதே திங்கனும். பெறகு நொட்ட சொல்லப்பிடாது ஆமா..” என்றாள்.

“பாய்வீட்டுல கட்டுற கட்டுக்கு நைட்டெதுக்குச் சாப்பாடு. க்ஹா..” என்றபடி நாற்காலியில் அமர்ந்து டிவி பார்க்க ஆரம்பித்தார்.

மணி பத்தானது.. டேவிட்டை எதிர்பார்த்தார்.

மணி பத்தரையானது டேவிட் இன்னும் வரவில்லை.

மணி பதினொன்று டேவிட் போனெடுக்கவில்லை. வாசலுக்கு வந்து எட்டிப் பார்க்கவும் வராண்டாவில் நடக்கவும். தெருமுனைக்கு வந்து எட்டிப்பார்க்கவும் வீட்டுக்கு வரவுமாய் இருந்தார்.

செல்போன் மணியடிக்க மின்னலாய் எடுத்து டேவிட்டு என்றார். இந்தப்பாடலை உங்கள் காலர் ட்யூனாக என்ற குரலுக்கு கட் செய்தார். கடுப்பானார். கல்யாணம் நடக்கும் மண்டபத்திற்கு தானே போய்விடலாமா என யோசித்தார். ஆள் யாரையும் தெரியாதே என நினைத்தவர் திரும்ப டேவிட்டுக்கு அழைத்தார்.

“அண்ணே சொல்லுங்கண்ணே.” என்ற டேவிட்டின் குரலுக்கு இவருக்கு உயிரே வந்தது போலிருந்தது.

“என்னப்பா இப்படி பண்ற. மணி பன்ணெண்டாச்சப்பா.. லேட்டாப் போனா பீஸ் கெடைக்காதப்பா. வெறுங்குஸ்காவ மட்டுமா தின்னுட்டு வர்றது.” என்றார் பாசமான கொதிநிலையில்.

“அய்யோ அண்ணே. அந்தக் கல்யாணம் நாளைக்காம்ன்ணே. இன்னக்கிச் சனிகெழமன்றது தெரியமச் சொல்லிப்புட்டேன்..” என்றான் டேவிட் சாதாரணமாக.. முத்துகாமுவிற்கு சிவுக்கென்றிருந்தது.

“என்னப்பா. இப்படிச் சொல்ற ஆசையா இருந்தட்டனப்பா..” என்றார் வாட்டமாய்.

“சரி அப்படியே கடப்பக்கமா வந்துட்டுப் போ. ந்நா இப்ப கடைக்கு வந்துருவேம்..”

“இல்லண்ணே வேல கெடக்குண்ணே. நாளைக்கிப் பாப்போம்..” என்ற டேவிட்.

“வச்சுடுறேண்ணே.” என்று செல்போன் பேச்சைத் துண்டித்துக்கொண்டான்.

“பிரியாணிக்கிச் சிக்க வச்சிடலாம்ன்னு கடக்கி வரச்சொன்னா. சுதாரிச்சுட்டானே பக்கிபயபுள்ள..ம்..” என திண்டாட்ட மனநிலையிலிருந்த முத்துகாமுவின் செல்போன் திரும்ப ஒலித்தது..

“இந்த நேரத்துல எவெங்கூப்புடுறான்னு தெரியலையே.” என்று நினைத்துக்கொண்டு போனை எடுத்தார். பெயர் வரவில்லை அவருக்குத் தெரியாத எண்ணாயிருந்ததால் இருந்த கடுப்போடு..

“ஹலோ.” என்றார் ஜெர்மன்செப்பேர்டு வகையறா நாயின் குரலில்.

“அண்ணே மணக்கம்ணே. முத்துகாமு அண்ணன்களா..?”

“ஆமா. நீங்க யாரு..?”

“என்னணே தொண்ட கட்டிருக்கா… ?” என்ற பரிவான குரல் அவரை நிதானப்படுத்தியது.

“அதெல்லாம் ஒன்னுல்ல. நீங்க யாருன்னு சொல்லுங்க..”

”அண்ணே வடமதுரெய்லேர்ந்து வண்ணக்கொடி பேசுறேய்ண்ணே.”

“வண்ணக்கொடியா. ம்ம்.” என இழுத்தார் முத்துகாமு.

“அடப்போங்கண்ணே ரெண்டுவாரத்துக்கு முன்னாடி அமாவாச அண்ணங்கூட பிரியாணி சாப்பிட்டுக்கிட்டே பேசுனோம்லண்ணே.” பிரியாணி என்ற வார்த்தைக்கு முத்துகாமுவின் கண்கள் லட்சம் வாட்ஸ் பல்பாய் மிளிர்ந்தது.

“ஆமா. ஆமா.. ஆமா.. ஆமா.. சொல்லுங்க.” என்றார் வேகமாய்.

“எத்தன ஆமான்ணே.” என்று வண்ணக்கொடி சிரிக்க இவரும் பால்வடிய சிரித்தார். தங்கம்மாள் போறபோக்கில் அவரது தோளில் துண்டை எடுத்துப் போட்டுவிட்டு வாயைத் துடைக்கச் சொல்லி சைகை காட்டிவிட்டுச் சென்றாள்.

“சொல்லுங்க என்ன விசயம்.” என்றார் வண்ணக்கொடியிடம்.

“இல்லண்ணே. ஒங்கூர்ல நம்ம பார்ட்டி ஒருத்தர பாக்க வேண்டியிருக்கு. அப்படியே ஒங்க கடை மாதிரி எங்கூர்ல ஒரு கட போடலாம்ன்னு ஒரு யோசன. அதே ஒங்களையும் பாத்துடலாம்ன்னு கூப்புட்டேன். அண்ணே லோக்கல்ல இருக்கீங்களா..” என்றான் வண்ணக்கொடி.

“அதனாலென்ன ஊர்லதேன் இருக்கேம் வாங்க. ஒங்களுக்கில்லாததா.?” என்ற முத்துகாமுவின் மனசும் வயிறும் மீண்டும் பிரியாணியைச் செரிப்பதற்கு வேகமெடுத்தன.

“எப்ப வருவீங்க……….?”

“மணி இப்ப பன்னெண்டேகால்ண்ணே. வண்டிய எடுத்தா ஒரு அழுத்து. ரெண்டு ரெண்டேகாலுக்கெல்லாம் வந்திருவேன்ணே”

“நல்ல டயந்தேன் வாங்க சாப்பிட்டுக்கிட்டே பேசுவோம்.” பிட்டைப் போட்டார்.

“அதுனாலென்னண்ணே. அன்னக்கிமாரி பிரியாணியே சாப்பிட்டுக்கிட்டு பேசுவோம்ண்ணே..” என்ற வண்ணக்கொடியின் குரல் முத்துகாமுவின் சகல நாடிநரம்புகளுக்கும் பிரியாணி வாசனையை வார்த்தது.

“வாங்க ரெடியா இருக்கேன்.” பேசிமுடித்து போனை பாக்கெட்டில் போட்டுக்கொண்டவர்.. என் விழியின் வழியே நீயா வந்து போனது.. பிரியாணியாய். பிரி..யா…ணியா..ய்.. என பாடலை முணுமுணுத்துக் கொண்டே தங்கம்மாளிடம்.,

“சரிடி கடக்கிப் போறேம்” என்று கிளம்பினார்.

”ஒருவா தின்னுட்டுப் போ மனுசா. மணியாச்சுல.” என்றாள் தங்கம்மாள்.

“அடப் போடி. போடி. நாங்கெளம்புறேன். ஒஞ்சாப்பாட்ட  நாய் திங்கும்மா..” ராகம் பாடி கிளம்பினார்.

மத்தியான வெயில் முத்துகாமுவின் தலையில் தாண்டவமாட கைக்குட்டையை தலையில் கவிழத்தபடி அவரது கடைக்கு வந்து சேர்ந்தார். அப்படியே நாற்காலியில் ஆசுவாசமாய் அமர்ந்து மின்விசிறியச் சுழலவிட்டார். வண்ணக்கொடி வந்துசேரும் நேரத்திற்குள் பசி தாங்க ஒருமடக்கு ஒரேமடக்கு தண்ணீரை விழுங்கிக்கொண்டு காலாட்டத் தொடங்கினார்.

“என்னண்ணே வேட்டைய பலமா முடிச்சுட்டீங்க போல. மொகம் பளீச்சுன்னு இருக்கே..” என்றவாறு சுந்தரேசன் அவருக்கு நேரெதிரே நாற்காலியில் அமர்ந்தான். தனது கைலி முனையால் வியர்த்த முகத்தினை துடைத்துக் கொண்டே.

“நீ வேற போடாங்கிட்டு. காலையிலேர்ந்து கெரகம் தவிக்கவிட்டுருச்சு.” என்று நடந்த கதைகளை சொல்லிமுடித்தவர்.

“நாளைக்கு பிரியாணி உறுதியாயிப்போச்சு.” என்றார். வாய்பிளந்து கண்கொட்டாமல் கதை கேட்ட சுந்தரேசன்.

“அப்ப இன்னக்கிண்ணே.” என்றான் குழந்தையைப் போல.

“அதேஞ் சொன்னன்லடா. வண்ணக்கொடின்னு ஒருத்தன் வந்துக்கிட்டிருக்கான்னு..”

“ஆமண்ணே. அந்த எதிர்பாப்புலதேன் பளிச்சுன்னு இருக்கீகளோ……?”

“அது மேட்டரில்லடா எல்லாம் சீரகச் சம்பா மட்டன் பிரியாணியோட மகிமடா மகிம.”

“அப்படி என்னதேன்ன சீரகச்சம்பால இருக்கு. பாசுமதி பிரியாணிய விடவுமா…………..?”

“ஆமா. பெறகு..” எனத் தொடர்ந்தார்.

“சீரகச்சம் பாவரிசி தின்னச் சுவையாகும்

பேரகத்து வாதமெல்லாம் பேருங்காண் – வாருலகில்

உண்டவுடனே பசியும் உண்டாகும் பொய்யலவே

வண்டருறை பூங்குழலே ! வாழ்த்து. ன்னு இலக்கியத்துல சொல்றாய்ங்கே நம்மாளுக”

“எப்புடீண்ணே இதெல்லாந் தெரியுதொங்களுக்கு.” என்று ஆச்சரியமானான்.

“பெறகு இப்படி நாலுபிட்டு கையில இல்லன்னா எப்படி ? சும்மாவா நம்ம பேச்சுல சாயுறாய்ங்கே. எல்லாம் பிரியாணிக்காகவே கத்துக்கிட்டதுடா. இந்தியாக்குள்ள மட்டும் ஏழெட்டு வகையான பிரியாணி இருக்குடா. ஒவ்வொண்ணுக்கும் ஒரு கத வச்சிருக்கேன். சொன்னா கேக்குற ஒவ்வொருத்தனும் எனக்கு வரிச கட்டி பிரியாணி வாங்கித் தருவாய்ங்கடா..” என பெருமிதமானார்.

“ஓங் கைங்கர்யந்தேன் தெரியுமில்லண்ணே. அந்தப் பாட்டுக்கு என்ன அர்த்தம்ண்ணே”

“எல்லே இனிப்பான இந்தச் சீரகச்சம்பாவுல சமச்சுச் தின்னமுன்னா. தின்னு முடிக்குறதுக்குள்ள திரும்பப் பசிக்கும். பல நோய்கள குணமாக்கும்ன்னு அர்த்தம். அப்படியே எடுத்துக்கிட்டம்ன்னு வச்சுக்க வாயிப்புண்ணு வயித்துப்புண்ணு கொடலுப்புண்ணு எல்லாம் ஆறிப்போகும்டா. வாத நோய குணமாக்கும். இரத்தத்தச் சுத்தமாக்கும் கண்ணு நரம்புகளச் சத்தாக்கி பார்வயத் தெளிவாக்கும்ன்னு சொல்லுவாக..”

“பெறகேண்ணே எல்லாத்தையும் கொறப்பார்வையாவே பாக்குற.” என்றான் சுந்தரேசன் படக்கென்று.

“எல்லே என்ன சொல்ல வர்ற.” என்று கண்டிப்பாய் முத்துகாமு கேட்க.

“சும்மா வெளயாட்டுக்குண்ணே.” என்று முடித்தான். இவர்கள் பேச்சு ஓடியதில் மணி ஒன்னேமுகாலாயிருந்தது. கடிகாரத்தைப் பார்த்த முத்துகாமு..

“அதுக்குள்ள ஒன்னேமுக்காலாச்சாடா.” என அதிர்ந்தார்.

“வடமதுரக்காருக்கு போனப் போடுண்ணே” என்ற சுந்தரேசனின் வார்த்தைகளுக்கு வண்ணக்கொடியானுக்கு போனடித்தார்.

“மணக்கம்ண்ணே.,”

“எங்கருக்கீக வண்ணம்.”

“திண்டுக்கல்ண்ணே. கெளம்ப கொஞ்சம் தாமசமாயிடுச்சு..” என்றதும் முத்துகாமுவிற்கு தூக்கிவரிப்போட்டது. வருவார்களா என்ற சந்தேகம் கிளம்ப..

“வந்துக்கிட்டிருக்கீகளா வண்ணம்” என்றார்.

“இல்லண்ணே திண்டுக்கல்லு தலப்பாக்கட்டில சாப்பிட்டுக்கிட்டிருக்கோம்ண்ணே.,” வண்ணக்கொடியானின் வார்த்தைகள் அவருக்கு மயக்கத்தை ஏற்படுத்திவிடும் போலிருந்தது.

“என்ன வண்ணம் நீங்க வருவீங்கன்னு சாப்பிடாமக் கீப்பிடாமக் காத்துகெடக்கேம் இப்படிப் பண்ணிட்டீங்களே……..?” என்றார் கொதிப்பாக.

“எண்ணே., கோவிக்காதீக. ஆளுக்கு ரெண்டு ரொட்டியப் பிச்சுப் போட்டுட்டுப் போலாம்ன்னு கூட வந்த அண்ணஞ் சொன்னாரு.  போனதடவ ஒங்க கூட பிரியாணி சாப்பிட்டப்ப சீரகச்சம்பால எப்படி மட்டன் பிரியாணி செய்யுறதுன்னு ஒரு வெளக்கங் கொடுத்தீங்களே மறக்க முடியுமாண்ணே. அந்த ஞாபகம் தெனக்கி வரும்ண்ணே.  அதேந் திண்டுக்கல்லு தலப்பாக்கட்டுக்குள்ள புகுந்துட்டோம்ண்ணே..” என்றான். முத்துகாமு தன் ரத்தம் சுண்டிப்போய்விட்டதாய் உணர்ந்தார். முகம் சின்னதாய்ப் போய் தனது உதட்டை நரியைப்போல் நீட்டிக் குறுக்கிக்கொண்டு ஒரு முயலைப் போல்..

“சரி. இன்னக்கி வருவீகளா……..?” என்றார். சுந்தரேசன் முத்துகாமுவின் குரல் முக மாற்றங்களைக் கண்டு.. “இதுவும் போச்சாண்ணே..” என்றான். அவனை முறைத்தார்.

“என்னண்ணே இப்படிக் கேட்டுட்டீக. உறுதியா வந்துருவோம்ண்ணே. ஒங்களுக்கும் பிரியாணி ஒரு பார்சல் சொல்லியச்சுண்ணே..” என்றான் வண்ணக்கொடி. முத்துகாமுவின் முகம் மீண்டும் ஒளிர்ந்தது. வண்ணக்கொடி தொடர்ந்தான்.

“அப்படியே ஒங்களுக்குப் பிடிக்குமேன்னு அரலிட்டர் செவனப் பாட்டிலும் சொல்லிருக்குண்ணே. கார ஒரே அழுத்து கூடப் போன ஒன்னேகாமணி நேரத்துல அங்க இருப்போம்ண்ணே. எங்கேயும் போயுறாதீக கடயிலேயே இருங்க..”

“ சரி சரி வேமா அழுத்திவாங்க.” என செல்போனை அணைத்தவாறு சுந்தரேசனை ஏற இறங்க எகத்தாளப் பார்வை பார்த்தார்.

“என்னண்ணே……?”

“நமக்குச் சிக்காமப் போகுமாடா. பார்சலோட வந்துக்கிட்டிருக்காய்ங்கே..” என்றார்.

“எப்படின்ணே.” என்றான் ஆச்சரியமாய்.

“நம்ம சொன்ன கதயில மயங்கிக்கெடக்குற பயல்கள்ல இவனும் ஒருத்தண்டா.”

“எப்படியோண்ணே., எவ்வளவு பெரிய ஆளையும் பேசிய கைக்குள்ள வச்சுக்கிறதுல ஒன்னய மிஞ்ச நம்ம ஜில்லாவுலேயே ஆளில்லண்ணே” என்றான் சுந்தரேசன்.

“சும்மாவா பெறகு கூடப்போனா மூனு மணிக்குள்ள வந்திருவாய்ங்கே. பிரியாணிய ஒரு கட்டு கட்டிட்டு செவனப்கலர கடகடன்னு உள்ள விட்டம்ன்னா அப்படியிருக்கும். அப்படியே ஒரு தூக்கத்தப் போட்டம்ன்னு வச்சுக்க., ச்சும்மா பிச்சுவிட்டுரும்.”

“நீ சொல்லுறதுல எனக்கே ஆச வருதுண்ணே. ஏன்ணே சீரகசம்பால பிரியாணி எப்படி செய்யுறாக..”

”அப்படி வா வழிக்கு” என்றவர் வண்ணக்கொடி வரும்வரை நேரத்தைப்போக்க சுந்தரேசனைப் பயன்படுத்திக்கொள்ள நினைத்து தனது சமையல் குறிப்பு வகுப்பை எடுக்க அரம்பித்தார்.

“மட்டன் அரக்கிலோ இஞ்சியும், பூண்டும் நாலு தேக்கரண்டிய அரச்சுக்கணும் பெரிய வெங்காயம் நால உரிச்சுக்கணும் தக்காளி பச்சை மிளகாய் நாலு நால நறுக்கிக்கணும் நல்லா வெளஞ்ச தேங்கா  ஒரு முடிய முக்காப்பக்குவத்துக்கு அரச்சு பாலெடுத்துகிறணும் தயிரு அரக்கரண்டி பெரியகரண்டில எடுத்துக்கிறணும் மொளகாப்பொடி ஒரு தேக்கரண்டியும் மஞ்சத்தூளு அரத் தேக்கரண்டியும் சேத்து எடுத்துக்கிறணும், அப்படியே எலுமிச்சம் பழமொன்னு புதினா கொத்தமல்லித்தழை ஒவ்வொருகட்டு, நெய்யும் எண்ணெயும்  அதது அரகப்பு உப்பு  தேவையான அளவுக்கு தாளிக்க பட்ட கிராம்பு ஏலக்கா மூணு மூணு  அப்படியே பிரிஞ்சி எல சிலபல துண்டுக சோம்பு ஒரு சின்னக்கரண்டி எடுக்கிறணும்..” முத்துகாமு சொல்லச் சொல்ல சுந்தரேசன்.. ம்.. ம்… என பூம்பூம்மாடு போலத் தலையாட்டிக் கொண்டிருந்தான்.

”மட்டனை சுத்தமாக் கழுவி சின்னதும் பெருசுமில்லாத துண்டுகளா நறுக்கியெடுத்து அதுகூட தயிரு மஞ்சத்தூளு இஞ்சி பூண்டு விழுதுன்னு தேவையான உப்பையுஞ் சேத்து நல்லா வேகவச்சு வச்சுக்கிரணும். அப்படியே குக்கர அடுப்பில வைச்சு சூடானதும் நெய், எண்ணெய் ரெண்டையும் சேத்தூத்தி காய்ஞ்சதும் பட்ட கிராம்பு ஏலக்கா சோம்பு பிரிஞ்சி எலயப்போட்டுத் தாளிக்கணும். பெறகு  பச்சமொளகா வெங்காயத்தை போட்டு நல்லா வதக்கனும். அது பொன்னிறம்மா வரவும் இஞ்சி, பூண்டு விழுதைப் போட்டு வதக்கனும். அந்தப் பச்ச வாசன போனவொடனே மொளகாத்தூளு மஞ்சத்தூளப் போட்டு அஞ்சு நிமிசம் வதக்குனோம்ன்னா எண்ணெய் பிரியும் அந்த நேரத்துல  நறுக்கின தக்காளியைப் போட்டு வதக்கணும். அது வதங்கி கூழாயிரும். கூழானதும் தயிறச் சேக்கணும். அடுத்ததுல வேகவச்ச மட்டனப் போட்டுத் தேங்காய் பாலையும் மட்டன் வேகவச்ச தண்ணியயும் சேத்து எட்டுக்கிளாசு அளந்தூத்தனும் உப்பு, புதினா, கொத்தமல்லித்தழையயும் சேத்துக்கணும், ஒரு கொதி வந்ததும் சீரகசாம்பாவ பொன்னுப்போல  போட்டு அதோட எலுமிச்சஞ் சாறையும் சேத்து நல்லா கிளறி குக்கரை மூடி விசில் போட்டு அடுப்ப பத்து நிமிசம் எளஞ்சூட்டுல வச்சு எறக்கி., எறக்குன பத்து நிமிசங்கழிச்சு குக்கரத் தொறந்து நல்லா கிண்டி தட்டுல வச்சு ஆவி பறக்க ஒரு பிடி பிடிச்சோம்ன்னு வச்சுக்க அந்த வசனைக்க சம்ச்சது பத்தாமப் போகும்டாய்..” என்றார் முத்துகாமு ஒரு தேர்ந்த சமையல் கலைஞனைப் போல.

”நீ சொல்றப்பையே வாயி ஊறுதிண்ணே. அதுவும் பசி நேரத்துல..” என்றான் உமிழ்நீர் வடிய. அவனின் மயக்கத்தில் முத்துகாமு தன் மனைவியை மயக்கிய பெருநிலையை அடைந்திருந்தார்.

”சரிண்ணே நேரம் நெருங்கப்போகுது அவகளும் வந்துருவாக. நான் வேற எடஞ்சலா எதுக்கு. எனக்கும் பசிக்குது கெளம்புறேன்.” என்று கிள்ம்பினான் அவன். முத்துகாமு வண்ணக்கொடிக்கு போனடித்தார்.

”அண்ணே மணக்கம்ண்ணே.” என்றான் வழக்கம் போல வண்ணக்கொடி

“எங்கருக்கீக…………?”

“திண்டுக்கல்லு தான்ணே”

“என்ன சொல்றீக……….? இன்னுமா கெளம்பல..” பதறினார் முத்துகாமு.

“ஒன்னுமில்லண்ணே அன்னக்கி ஒங்களுக்கு பிரியாணி வாங்கிக் கொடுத்தார்ல அம்மாச. அவரு இங்கதேம் இருக்காராம். அவரும் வர்றேன்னாப்ளா. அவருக்காகக் காத்துக்கெடக்கோம்ண்ணே. இப்ப வந்துருவாரு. ஒடனே கெளம்பிருவோம்ண்ணே.”

“இல்ல.” என குரலை இழுத்த காமப்பருக்கு..

“அண்ணே சத்தியமா வந்திருவோம்ண்ணே. ஒங்களப்பாக்காம ஊர் திரும்ப மாட்டம்ண்ணே.”  என்ற வண்ணக்கொடியானின் வார்த்தைகள் நம்பிக்கையூட்டின.

“சரி வாங்க., காத்திருக்கேன்.” என போன வைத்தார் காமப்பர்.

தான் ஓசியில் பிரியாணி திங்க ஆரம்பித்த கடந்த ஆண்டுகளில் எப்பொழுதுமில்லாத சோதனை இன்று முத்துகாமுவிற்கு. ஓசிக்காக மற்றவர்களை முயற்சிக்கும் இவரின் நெனப்புகளை வண்ணக்கொடியனின் வார்த்தைகள் முடக்கிப் போட்டிருந்தன. குட்டி போட்ட பூனையைப் போல முத்துகாமுவின் மனது அலைபாய்ந்தது. வண்ணக்கொடியை நம்பவும் முடியவில்லை நம்பாமல் இருக்கவும் முடியவில்லை.

“நம்மள விட வித்தக்காரனா இருப்பாம்போல. வயித்துல இருக்குற புள்ள தானா வழுக்கிக்கிட்டு பொறக்குற மாதிரி பேசுறானே..ம்” என்று நினைத்துக் கொண்டிருந்தவர். நினைப்பதெல்லாம நடந்துவிட்டால் தெய்வமேதுமில்லை என்ற பாடலை முனுமுனுக்க ஆரம்பித்தார். அந்தப்பாடல் வரிகளின் பதம் மூளையில் தட்டியதும்.

“நம்பிக்க எழந்துறாதடா முத்துகாமு.” என்று மனசுக்குள் நினைத்தவர். நான் அடிச்சா தாங்கமாட்ட நாலு மாசம் தூங்கமாட்ட என்ற பாடலை தனக்குத் தானே உற்சாகமாய் மெல்லியகுரலில் பாட ஆரம்பித்தார். அப்படியே பசி மயக்கத்தில் கடை நாற்காலியிலேயே தன்னையறியாது கண்ணசந்தார். திடீரென விழிப்பு வந்ததும் அரக்கப்பரக்க நேரம் பார்த்தார். மணி மாலை ஏழைத் தொட்டிருந்தது. சாலை விளக்குக்கள் எரிந்துகொண்டிருந்தன. அவசரமாய் தன் கடைவிளக்குகளை ஒளிரவிட்டார். பக்கத்து டீகடைப்பையன் இவருக்கான மாலை நேர தேநீரை அவரது டேபிளில் வைத்துவிட்டுச் சென்றிருந்தான். அந்த தேநீர் கிளாசில் முத்துகாமுவின் பிரியாணி ஆசையைப்போல ஈக்கள் மொய்த்துக் கொண்டிருந்தன. செல்போனை எடுத்துப்பார்த்தார். பத்து அழைப்புக்கள் இருந்தன. அதைப்பார்த்ததும் ., வண்ணக்கொடி இங்கே வந்துவிட்டு தனக்கு போனடித்துத் தான் எடுக்காததால் திருப்பிச் சென்றிருப்பானோ என்ற பதைபதைப்பில் அழைப்புப் பட்டியலைப் பார்த்தார். பத்தில் ஏழு அழைப்புக்கள் தங்கம்மாளுடையது. மீதி மூன்றும் அடிக்கடி வரும் நிறுவங்களின் அழைப்புக்களாய் இருந்தன.

வண்ணக்கொடியான் வருகை மீது அவருக்குச் சந்தேகம் வலுக்க அவனுக்கு போனடித்தார். அவன் எடுத்ததும்..

“என்னண்ணே இப்படிப் பண்ணிட்டீங்க.” என்றான். அவனின் இந்த வார்த்தைகளுக்கு ஒன்றும் புரியாமல் விழித்த முத்துகாமுவிற்கு தன் மேலேயே சந்தேகம் வந்தது. அது அவரை மூச்சு முட்ட வைத்தது. அதில் சிக்கித் திக்கியபடி..

“என்ன சொல்றீங்க வண்ணம்………?” என்றார்.

“ஏன்ணே எத்தன போனடிக்கிறது ஒங்க நம்பர் நாட் ரீச்சபிள்ன்னு வருது சுட்சாப்புன்னு வருது எங்கண்ணே போயிட்டீங்க.”

“இல்லியேப்பா கடயிலேயேதானப்பா இருக்கேம்.”

“அதேம். நீங்க காத்துக் கெடப்பீகளேன்னுதேன் அத்தன அடி அடிச்சேன்.”

“ஊருக்கு வந்துட்டீகளா… ?” என்னானதோ ஏதானதோ என்ற மனத்தாளத்துடன் கேட்டார்.

“அதேன்ணே கேக்குறீங்க. கெளம்பி செம்பட்டி தாண்டி வர. கார் டயர் பஞ்சர்ண்ணே. ஸ்டெப்னியும் இல்ல. நடுக்காட்டுல மாட்டிக்கிட்டோம். பெறகு அந்தா இந்தானு இப்பத்தேன் வேல முடிச்சு கெளம்பிருக்கோம்ண்ணே.” என்றான்.

“எட்டு மணிக்குள்ள வந்துருவீகளா. எனக்கும் பல சோலி கெடக்கு. ஒங்களுக்காக நாள் முழுக்கப் போச்சு..” என முத்துகாமு கொஞ்சம் சுயமரியாதையைக் காக்கும் பாணியில் கெத்து காட்டினார்.

“அண்ணே உறுதியா வந்துருவோம்ண்ணே. ஒங்களுக்கு வாங்கிவச்ச பிரியாணி வேற இருக்கு.” என்ற வண்ணக்கொடியானின் வார்த்தைகளுக்கு அப்பாடா என மனதுக்குள் மூச்சுவிட்டவர் தன் கெத்தைக் குறைக்காமல்..

“அதின்னாரம் ஆறிப்போயில கெடக்கும். ச்சூடா சாப்பிட்டாத்தாங்க நல்லாருக்கும்.. இன்னொரு நாளைக்குப் பாத்திக்கிரலாம்” என்றார்.

“அதெல்லாமில்லண்ணே ஹாட்பாக்ஸ்ல வச்சு வாங்கிட்டு வந்திருக்கேன். சூடு கொறையக் கூடாதுன்னு. எட்டு மணி நேரந்தாங்கும். பாருங்க இல்லன்னா அங்கேயே தலப்பாக்கட்டிக்குப் போயிருவோம்.” இந்த வார்த்தைகள் முத்துகாமுவின் கன்னி வைக்கும் வார்த்தைகளுக்குள் வண்ணக்கொடியான் சிக்கிக் கொண்டதாய் உற்சாகம் கொண்டவர் அதைக்காட்டிக் கொள்ளாமல்..

“சரி இப்பையாவது சொன்ன நேரத்துக்கு வந்து சேருங்க. இல்லன்னா கெளம்பிருவேன்..” என்றார்.

“சரிங்கண்ணே.” என்ற வண்ணக்கொடியானின் பதிலுக்கு போனை அணைத்து திரும்ப பாக்கெட்டில் போட்டுக் கொண்டாவர்..

“பறந்தாலும் விடமாட்டேன். பிறர் கையில் தரமாட்டேன். அன்று நான் உன்னிடம் கைதியானேன். இன்று நான் உன்னையே கைது செய்வேன். எதற்காக வருகின்றான் எனக்காக வருகின்றான். பிரியாணி பார்சலோடு வருகி..ன்றா..ன்…” என்ற பாடலை முனுமுனுத்தார்.

மீண்டும் செல்போன் துடிக்க முத்துகாமு எடுத்து..

“ஹலோ…வ்.” என்று நீட்டி முழங்கி உற்சாகமாய் கூவினார்.

“தங்கம்மா பேசுறேங்க., என்னா. வ்வோவ்ன்னு நீளுது..”

“நீன்னு தெரிஞ்சுதாண்டி நீளுது. சொல்லு..”

“காலைலேர்ந்து சாப்பிடல., மதியம் வீட்டுக்கும் வரல்ல. தின்னாச்சா இல்லியா. இல்ல காலைல ஒங்களுக்குஞ் சேத்தாக்குன்ன சோறு மீதங்கெடக்கு. தண்ணி ஊத்தி வச்சிரவா..”

“அதேம் அப்பவே சொன்னன்லே ஒஞ்சோத்த நாய் திங்குமான்னு.” என்றவரின் குரலுக்கு தங்கம்மாள் போனைத் துண்டித்துவிட்டாள். அடப்போடி என்றவாறு முத்துகாமு போனை பாக்கெட்டில் வைத்துக் கொண்டு..

”கல்யாண பிரியாணி அப்பப்போ சாப்பிட்டாச்சு. சங்கரன்கோயில் பிரியாணியையும் அந்தப்பக்கமா போய் வர சாக்குல அடிச்சுவிட்டாச்சு. வாணியம்பாடியையும் பிடிபிடின்னு பிடிச்சு விட்டாச்சு. திண்டுக்கல்லும் தலப்பாக்கட்டியும் தடுக்கி விழுந்தா கெடக்கிறதுதேன். இந்த ஐதராபாத் பிரியாணியையும் பட்கல் பிரியாணியையும் அததுக்கான ஊர்கள்ல சாப்பிடணும். அப்படியே பிரியாணி உருவான பாரசீகத்துலேயும் போயி ஒரு அடி அடிச்சுவிட்டு வந்துரணும். இதுக்கெல்லாம் ஓசிக்கு யாரு சிக்குவான்னு தெரியல. பாப்போம் நம்ம ஸ்கெட்ச் மிஸ்ஸாகாதுல..” எனப் பெருமிதக் கனவில் மிதக்க ஆரம்பித்தார்.

கடை வாசலில் வந்து நின்றுகொண்டு வண்ணக்கொடியானை எதிர்பார்த்தார். நேரம் ஓடியது. செல்போனைப் பார்த்தார் மணி எட்டு பத்து ஆகியிருந்ததது. அவரின் கண்கள் வேகமெடுத்தன. சாலையில் வடக்கிலிருந்து வருகிற கார்களையெல்லாம் உற்று உற்று பார்த்துக் கொண்டிருந்தார். ஒரு காரிலும் அவர்களைக் காணவில்லை. அவரின் சீரகச்சாம்பா மட்டன் பிரியாணியும் செவனப் கலரும் என்கிற கனவுக் கோட்டையின் மீது வண்ணக்கொடி விளையாடுவதாய் உணர்ந்தார். அவனுக்கு போனடித்தார். சுவிட்சாப் என்று ஆன்லைன்குரல் சொல்ல அடப்பாவி எனத்தூக்கி வாரிப்போட்டது.

“அண்ணே கொஞ்ச நேரத்துல செல்லு ஆப்பாயிரும்ண்ணே. அம்மாசண்ணே கூட இருக்கார்ல. அவரோட ஒங்ககடைக்கு வந்துர்றோம்..” என்ற வண்ணக்கொடியான் ஏற்கனவே சொன்னது நினைவுக்கு வர..

“கலங்காதடா காமு. நீ நெனச்சது நடக்கும். ஓசில கெடைக்கிறதுன்னா சும்மாவா. அப்படியிப்படி ஆட்டங்காட்டும் கடைசில கனிஞ்சுதான ஆகணும்” எனத் தன்னைத் தேற்றிக் கொண்டு மீண்டும் சாலையில் பயணிக்கிற கார்களை உற்று நோக்கலானார். இல்லை அவர்கள் தெரிந்தபாடில்லை. வண்ணக்கொடியானுக்கும் அம்மாவாசைக்கும் செல்போனில் மாறி மாறி முயற்சிக்க இருவரது போனும் சுவிட்சாப். மணி இரவு ஒன்பதரையைத் தாண்டியது. முத்துகாமுவின் ஓசிப்பிரியாணிக் கோட்டை சரிந்து கொண்டிருந்தது. அவரது வயிறும் பசியால் கிள்ளியது. அவரது பாக்கெட்டிலிருந்த ஐநூறு ரூபாய்த் தாள்கள் ஐந்தும் வா கடைக்குப் போகலாம். முக்கு திரும்பியதும் தலப்பாக்கட்டி தான் என இழுத்தது.

“இவெய்ங்க வந்தாலும் வராட்டியும் பத்தர வரக் கட இருக்கும்ல. அதுக்குள்ள எவனுஞ் சிக்காமப் போவானா. “ என்ற அவரது ஓசி வைராக்கியம் அவரின் ஐநூறு ரூபாய்த் தாள்களைக் கட்டிப் போட்டதும். வண்ணக்கொடி இனி வரப்போவதில்லை என்று அவருக்குள் வந்திருந்த எண்ணமும் அவருக்கு வேறொரு நினைப்பை ஓட்டியது…

“வழக்கமா யாரோடவாவது தலப்பாக்கட்டிக்கு. சாப்பிடப் போறம்ல்ல. அதுமாதிரி இன்னகிம் போவோம். சாப்பிடுவோம், கடைசில அடடா காச மறந்தவாக்குல வச்சுச்சுட்டு வந்துட்டேனேம்போம். என்ன செஞ்சுறப் போறாங்கே., இன்னொருநாள் எவெங்கூடயாவது சாப்பிடப் போறப்ப அவனப் பில்லக்குடுக்க வச்சு கடனக் கழிச்சுவிட்டு போறது..” என்கிற நினைப்பு அவரை அவருக்குள் ஒரு சாணக்கியராய் அவரைச் சித்தரிக்க..

“யார்ட்டே. நம்மட்டேயேவா..” என்று மடமடவென்று கடையை அடைத்துப் பூட்டிவிட்டு. ஒரு போர்வீரனைப் போல நடக்க ஆரம்பித்தார் பிரியாணி திங்க.

முத்துகாமு ஹோட்டலுக்குள் நுழையும்பொழுதே..

“என்னண்ணே. தனியாளா வர்றீங்க.” என்றார் ஆச்சரியம் பொங்க இவருக்கு பழக்கமான வழக்கமான சர்வர்.  இவரும் செயற்கையாய் சிரித்துக் கொண்டே..

“இன்னக்கிக் கோட்டாவ முடிக்கணும்ல.” என்றவர்.

“வழக்கம்போல மட்டன்பிரியாணியும். லைட் கூலிங்கா செவனப் கலரும் கொண்டாங்க..” சொல்லிக் கொண்டே கைகழுவும் பகுதிக்குச் செல்ல தன் அவசர நடையைக் கட்டினார்.

“சார் இன்னக்கி மட்டன்பிரியாணி சீக்கிரமாவே முடிஞ்சிருச்சு. சிக்கன் வெஜ் இருக்கு.. அதுவும் நல்லருக்கும் சார்.” என்றார் சர்வர். இதென்னடா சோதனை என்றபடி முத்துகாமுவின் மனசு கடல் உள்வாங்கியதைப் போல் உள்வாங்கி துக்கம் தொண்டையை அடைத்தது.

“இன்னக்கி யார் மொகத்துல முழிச்சோம். இந்தச் சுத்து சுத்துதே..” என யோசித்தவர். காலையில் கண்ணாடில் தன்முகத்தில் தானே விழித்ததை நினைத்துத் தட்டுத் தடுமாறி ஹோட்டலைவிட்டு வெளியே வந்தார்.

திரும்ப வண்ணக்கொடியனுக்கும் அமாவசைக்கும் செல்போனில் முயற்சித்தார். அவர்கள் போன் சுவிட்சாப்பிலேயே இருந்தது. திரும்ப தனது கடைக்குவந்தார். வாசலில் நின்றவாறு வடக்கிலிருந்து வரும் கார்களை நோட்டமிட்டார். கார்கள் குறைந்து ஆட்டோக்களும் டூவீலர்களும் மட்டுமே அங்கொன்றும் இங்கொன்றுமாக வந்து போய்க் கொண்டிருந்தன.

“இஸ்மாயிலா.”

“என்னண்ணே இந்நேரங் கூப்பிடுறீக. எதும் அவசரமா..”

“இல்ல இன்னக்கி ரம்ஜானு பக்ரீத்துன்னு ஏதாவது வந்திருக்காப்பா. ?”

“என்னண்ணே.” என்று இஸ்மாயில் இழுக்க

“ஒன்னுமில்ல சும்மாதேங் கேட்டேம்.” தடுமாறிய குரலோடு போனைத் துண்டித்தார் முத்துகாமு

மணி இரவு பதினொன்றாகியிருந்தது. தோல்வியை ஏற்க மனமில்லாமல் தன் வீடு நோக்கி நடக்க ஆரம்பித்தார்.

அவரிடமிருந்த சாவியால் வீடைத் திறந்தார். விளக்கைத் தூண்டிவிட்டு தன் சட்டையைக் கழற்றி கொக்கியில் மட்டினார். தூங்கிக் கொண்டிருந்த தங்கம்மாள் லேசாக விழித்துப் பார்த்துவிட்டு மீண்டும் கண்ணசந்தாள். துண்டெடுத்துத் தோளில் போட்டவர் ஹாலில் இருக்கும் வாஷ்பேசின் குழாயத் திறந்துவிட்டு விழுந்த தண்ணீரில் முகம் கழுவ ஆரம்பித்தார்.

பசியும் ஓசியில் கிடைக்காமல் போன பிரியாணித் தோல்வியும் அவரை வதைத்தது. வாஷ்பேசின் கண்ணாடியில் முகம் பார்த்தார். இன்றைய பிரியாணி வேட்டை நடக்காமல் போனதில் அவரது முகம் கறுத்திருந்தது.

“வாழ்க்கனா அப்படித்தேன். விடுறா காமு நாளைக்குப் பாய்வீட்டுக் கல்யாணத்துல சீரகச் சம்பாவுக்குஞ் சேத்து பாசுமதிய ஒரு கட்டுகட்டுவோம்.. ஆனா நீ மட்டுந் தளந்திராத. அடிமைக கொத்துக் கொத்தா இருக்காய்ங்கே., இனித் திட்டத்தச் சரியாப் போடணும்.” என கண்ணாடியில் தெரிந்த முத்துகாமுவிடம் சமாதனம் சொல்லிக் கொண்டார். இருந்தாலும் இன்றைய சம்பவங்கள் அவருக்குள் கனைந்து கொண்டிருந்தது. பசி வேறு வயிற்றைக் கிள்ள தங்கம்மாள் சொன்ன தனக்கான சோத்தை பசியாற்றிக் கொள்ள நினைத்தவர்..

“தங்கம்மா.” என வாயெடுத்தார். வார்த்தை வரவில்லை.  கண்ணாடியில் தெரிந்த முத்துகாமுவின் பிம்பம் திடீரென பேசியது..

“அட மானங்கெட்டவனே., பிரியாணி கெடைக்கலன்னதும் சோத்துக்கு வந்துட்டியா., அவெ ஒனக்கு சோறு வேணும்மான்னு கேட்ட ஒவ்வொரு தடவையும் நீ என்ன சொன்ன., ஒஞ்சோத்த நாயி திங்குமான்னு கேட்டியா., புலி பசித்தலும் புல்லைத் திங்காது. மானம் முக்கியமடா மானம் முக்கியம்., நீ நாயுக்குங் கீழயா இல்ல புலியா.?” என்றது.

அவரது ஒவ்வொரு அணுக்களையும் பசி திங்க ஆரம்பித்தது. கண்ணாடியின் பிம்பம் சொல்வதும் உண்மைதான் எப்படிக் கேடப்து அவளிடம் என யோசித்தவரின் கை கால்கள் பசியால் நடுக்கம் கொடுத்தன. கண்கள் இருட்டியது. பசி மானத்தைப் பற்றி கவலை கொள்ளவில்லை அவரது கண்களை இருட்டச் செய்தது. இனி மானம் பார்த்தால் முடியாது என்ற முடிவுக்கு வந்தவர்..

“தங்கம்மா.” எனத் திரும்ப வாயெடுத்தார். அவர் சத்தம் அவருக்கே கேட்கவில்லை. மீண்டும் கண்ணாடியில் தெரிந்த முத்துகாமுவின் பிம்பம் பேசியது..

“அட சொரண கெட்டவனே இவ்வளவு தூரஞ் சொல்றேங் கேக்கலியாவொனக்கு. புலி பசித்தலும் புல்லைத் திங்காது.. மானம் முக்கியமடா மானம் முக்கியம். நீ நாயுக்குங் கீழயா இல்ல புலியா.?” என்றது.

இப்படி முத்துகாமுவிற்கும் கண்ணாடிப்பிம்பத்திற்கும் பெரும் போரே நடக்க.. இறுதியில் முத்துகாமு பசியின் கோபத்தால் தன் சக்தியை எல்லாம் ஒன்று திரட்டி கண்ணாடியில் தன் கைவிரல்களை இறுக்கி ஓங்கி ஒரு குத்து குத்தினார்,

க்ளிங் சிக் என சரசரவென அந்தக் கண்ணாடி முற்றிலுமாக உடைந்து பத்தேழு துண்டுகளாகக் கீழே விழுந்தது. இப்படியாக மானப் பேச்சு பேசிய கண்ணாடிபிம்பத்தைக் கொன்றொழித்த முத்துக்காமு அதே வேகத்தில்..

“தங்கம்மா. “ என்றார் சத்தமாக..  அதிர்ந்தெழுந்த தங்கம்மாள் இவர் சத்தமென்றதும் சாதாரணமானாள். முகத்தில் விழுந்த தலைமுடியை ஒதுக்கிக் கொண்டே.

“யேம் இப்படி ராத்திரியில நாயாக் கத்துறீங்க.” என்றாள்.

“அந்தச் சோத்த எடுத்து வையி. பசி உயிர்போகுது..” எனத் துடித்தார் முத்துக்காமு. அவர் முகத்தை ஏற இறங்கப் பார்த்தவள் சாவகாசமாக

“சோத்த நாயிக்குப் போட்டுட்டேன். தண்ணியக் குடிச்சுட்டுப் படுங்க அங்கிட்டு..” என சொல்லிவிட்டு ஒதுங்கியிருந்த தலையணையை இழுத்துவைத்து ஒருபுறமாகத் திரும்பிப் படுத்துக்கொண்டாள். அவளின் பதிலுக்கு என்ன செய்வதென்று அறியாமல் உக்கிப் போனவர் மெதுவாகத் தலை குனிந்தார். தரையில் கிடந்த உடைந்த கண்ணாடிச் சிதறல்களில் அவரது பார்வை நிலைகுத்தி நின்றது. சிதறல்களில் தெரிந்த முத்துகாமுவின் பிம்பங்கள் அவரைப் பார்த்து ஏளனமாய் கொக்கரித்துச் சிரித்தன.. அவரின் தோளில் யாரோ கைவைத்தது போலிருந்தது. உடம்பு சில்லிடத் திரும்பிப் பார்த்தார். வண்ணக்கொடியும் டேவிட்டும் சுந்தரேசனும் அமாவசையும் இன்னும் பலரும் என மாறி மாறி அவரது தோளில் கைவைத்து புன்னகைத்தவாறு மின்னி மறைந்தார்கள். ஆனால் முத்துகாமுவிற்கோ.. “அடச்சீ ஆள்த்தெரியாம. போ அங்கிட்டு.” என அவர் காலையில் அவர் விரட்டிய நாயின் நெனப்பு வந்து தொலைத்தது.

 அய்.தமிழ்மணி-இந்தியா

 அய்.தமிழ்மணி

0000000000000000000000000000000000

எழுத்தாளர் பற்றிய சிறுகுறிப்பு :

 அய்.தமிழ்மணிஅய். தமிழ்மணி, கவிஞர், குறும்பட இயக்குனர், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினரும் தேனி மாவட்டச் செயலாளர் என்று பல்வேறு பட்ட தளங்களில் இயங்குகின்றார்.

நடு குழுமம்

(Visited 123 times, 1 visits today)
 

”மனதின் மகத்துவத்தை அறிந்தவன்”-தோழர் கருப்பு கருணா நினைவுக்குறிப்புகள்-கட்டுரை-அய். தமிழ்மணி

”ஏம்பா தமிழ்மணி இங்க வா.” யாருடா அது குரல் புதுசா இருக்கே., அதுவும் ரொம்ப நாட்கள் பழகிய உரிமையோடு அழைக்கும் குரலாகவும் இருக்கே என குரல் வந்த திசையில் திரும்பிப் […]