மலையகம் – நேற்று இன்று நாளை – சில குறிப்புகள்-கட்டுரை-வ.க.செ.மீராபாரதி

 

வ.க.செ.மீராபாரதிஇன்றைய மலையக நிலை தொடர்பான பன்முக ஆய்வுகள் தேவை. ஏனெனில் மலையக மக்களின் வாழ்வை, கலாசார, பண்பாட்டு அம்சங்களை, பொருளாதாரத்தை சிதைக்கும் வேலைகள் வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் நடைபெற்று வருகின்றன. ஒருபுறம் மலையக மக்களுக்கு நன்மை விளைவிப்பதாகப் படம் காட்டிக் கொண்டு சில செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. மறுபுறம் பல தோட்டங்களில் தொழிலாளர்களுக்கு ஒவ்வொரு நாளும் வேலை கிடைப்பதில்லை. இரண்டு மூன்று நான்கு நாட்கள் என வேலைகளை வழங்குவதால் வேறு தொழில்களுக்கும்  போக முடியாத நிலை. அவ்வாறு ஒரு நாளுக்கு வெளியாரிடம் போனாலும் குறைந்த ஊதியத்தைக் கொடுத்து சுரண்டுகின்றார்கள். இவ்வாறு வேலைகள் தோட்டங்களில் குறைவதால் பலர் நகரங்களை நோக்கி செல்கின்றனர். நகரங்களில் அடிமட்ட ஊதியத்திற்கு வேலை செய்கின்றார்கள். இதனால் இவர்களின் வாழ்வும் குடும்பங்களும் பல பிரச்சனைகளை எதிர்நோக்குகின்றன.

மலையக மக்கள் மூன்று மாகாணங்களில் சிதறி வாழ்கின்றார்கள். குறிப்பாக மத்திய மாகாணத்தை தவிர்த்து மற்ற மாகாணங்களில் உள்ளவர்கள் சிங்கள மயமாவது சாதாரணமாக நடைபெறுகின்றது. இதற்கு காரணம் பாடசாலைகள் இல்லாமை. இத் தோட்டங்களைச் சுற்றி சிங்க குடியேற்றங்கள் அல்லது சிங்கள நகரங்கள் இருக்கின்றமை. ஆகவே பெற்றோரும் மாணவர்களும் தவிர்க்க முடியாமல் சிங்கள மொழியில் கற்க வேண்டிய நிர்ப்பந்தம். இவர்களை ஒரே மாகாணத்திற்குள் கொண்டுவர முடியுமா என்பது பெரும் கேள்வி. இதன் மூலம் இவர்களின் மொழி பண்பாட்டு அம்சங்களைப் பாதுகாக்க முடியுமா என்பது விடை தெரியாத கேள்விகள்.

இன்று மலையகத்தில் பல முன்னேற்றங்கள் நடைபெற்றுவருகின்றன என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. பலர் குறிப்பிடுவதுபோன்று சக்திமிகு அல்லது பெரும்பான்மையான மத்தியதர வர்க்கம் ஒன்று மேலேழுந்து வருகின்றது. இதற்கு தேர்தல் உரிமைகள் கிடைத்தமையும் குறைந்த சித்திகளுடன் உருவாக்கப்படும் ஆசிரியர் வர்க்கமும் பல்வேறு தொழில் வாய்ப்புகளும் அதற்கான வசதிகளும் சில காரணங்களாகும். இருப்பினும் இவர்களின் அடிப்படைப் பிரச்சனைகளை தீர்க்கப்பட்டுள்ளனவா என்றால் அது கேள்விக்குறியே?

முதலாவது இவர்களின் குடியிருப்புகள். இப்பொழுது உருவாக்கப்பட்டுவரும் தனிக் குடியிருப்புத் திட்டங்கள் ஆமை வேகத்தில் மிகச் சில இடங்களில் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றன. இந்த வேகத்தில் சென்றால் குறைந்தது நூறு வருடங்களுக்கு மேல் பிடிக்கும் என்கின்றார்கள். அப்பொழுதுதான் பெரும்பான்மையான மலையக மக்கள் தனி வீடுகளில் வாழ்வார்கள். அனைவரும் இல்லை என்பதைக் கவனிக்க. அதுவரை இவர்கள் இந்த லயங்களிலையே வாழ வேண்டும். இதில் வாழ்வது என்பது நூறு ஆண்டுகளுக்கு முன்பிருந்த வாழ்நிலையில் வாழ்வதாகவே அர்த்தப்படும். ஏனெனில் இவர்கள் வாழும் லயம் என்பது நூறு வருடங்கள் பழமையானவை. அடிப்படை வசதியற்றவை. குழந்தைகள் கற்க முடியாத சூழலைக் கொண்டவை. இவ்வாறான அடிப்படை வசதிகள் மாற்றியமைக்கப்பட வேண்டும். ஆகவே அரசியல் தலைவர்கள் இந்த திட்டங்களை வேகமாக செயற்படுத்த முன்வர வேண்டும். அரசை நிர்ப்பந்திக்க வேண்டும். அதற்காகத்தான மலையக மக்கள் வாக்களிக்கின்றார்கள். ஆனால் யாருக்கு இவர்கள் மீது அக்கறை?

மலையக மக்களின் அடிப்படைச் சம்பளம் ஆயிரம் ரூபாயாக உடனடியாக அதிகரிக்கப்பட வேண்டும். இதில் எந்தவிதமான விட்டுக் கொடுப்புகளும் செய்யக் கூடாது. ஏனெனில் இன்று இவர்களுக்கு வழங்கப்படும் சம்பளமானது நாட் கூலியே. உண்மையில் இவை அரச உத்தியோகங்களாக அங்கீகரிக்கப்பட்டு தொழிற் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும். ஏனெனில் அந்தளவுக்கு வருமானத்தை ஈட்டும் உற்பத்தியாகவே தேயிலை இன்றும் உள்ளது. ஆனால் இந்த மக்களை அட்டையைப் போல ஊறிஞ்சி குடித்துவிட்டு ஏறிந்து விடுவதையே அரசும் அரசியல்வாதிகளும் செய்கின்றார்கள். அவர்களது வாழ்கை எப்படிப் போனால் என்ன தமக்கு அதிகாரங்களும் பதவிகளும் இருக்க வேண்டும் என்றே செயற்படுகின்றார்கள். ஆகவே இவர்களது தொழிலும் அதற்கான ஊதியமும் நியாயமானதாக பாதுகாப்பானதாக உறுதி செய்யப்படும் பொழுது யாரும் இவர்களை ஏமாற்ற முடியாது. ஆனால் அரசியல்வாதிகள் அரசுகளுடன் சமரசங்களை உருவாக்கிவிட்டு மக்களை கைவிட்டு விடுகின்றார்கள். தேர்தல் காலங்களில் எந்த முகங்களை வைத்துக் கொண்டு எப்படித்தான் மக்களிடம் வாக்கு கேட்க வருகின்றார்களோ தெரியாது?

இந்த இரண்டு அடிப்படைப் பிரச்சனைகளும் தீர்க்கப்பட்டாலே மலையக மாணவர்களின் கல்வி தொடர்பாக அக்கறை செலுத்தலாம். வீட்டில் வறுமையும் ஏழ்மையும் நிலவும் பொழுது கல்வி கற்பது என்பது மிகவும் கடினமாக காரியம். பல மாணவர்கள் பல மைல்கள் நடந்து சென்று கற்க வேண்டிய சூழலிலையே இன்றும் வாழ்கின்றார்கள். நகர்புறங்களில் அளவுக்கு அதிகமான ஆசிரியர்கள் இருக்கின்றார்கள். ஆனால் மலையகத்தின் உள்ளார்ந்து இருக்கும் தோட்டங்களில் ஆசிரியர் பற்றாக்குறை கடுமையாக நிலவுகின்றது. புதிதாக நியமனம் கிடைக்கின்ற ஆசிரியர்களும் தமக்கு இருக்கின்ற செல்வாக்குகளைப் பயன்படுத்தி இவ்வாறான பாடசாலைகளிலிருந்து மாற்றம் பெற்று சென்றுவிடுகின்றனர். ஆகவே மாணவர்கள் தம் கல்வியை கற்பதற்கு ஆசிரியர்கள் இன்றி கஸ்டப்படுகின்றனர். இதன்விளைவாக கல்வியைத் தொடராமல் வேலைக்குச் செல்லும் நிலமைகளே அதிகம் காணப்படுகின்றன. இதன் தொடர்ச்சியாக இளம் வயது திருமணங்கள் நடைபெற்று இளம் பெற்றோராகிவிடுகின்றனர். ஆகவே பிரச்சனைகள் தொடர்ந்த வண்ணமுள்ளன.

பெரும் குறை என்னவெனில் மலையகத் தோட்டங்களிலிருந்து கல்விகற்று நகர்ப்புறங்களுக்கு குடியேறும் சிலர் புதிய தலைமுறையினர் தோட்டங்கள் இப்பொழுது முன்னேறிவிட்டன. தோட்டங்களில் வசதிகள் பல உள்ளன. கல்வி கற்பது கஸ்டமில்லை என்கின்றனர். இவ்வாறு கடைசியாக நடந்த மலையக இலக்கியச் சந்திப்பில் கேட்டபோது ஆச்சரியமடைந்தேன். இவர்களே எவ்வாறு அப்படிக் கூறலாம் என யோசித்தேன். இவர்களது கண்களை மறைப்பது என்ன? இப்படியானவர்கள் மலையகத் தலைவர்களாக உருவாகும் பொழுது இந்த மக்களின் எதிர்காலம் எப்படி இருக்கும்? இவர்களின் பிரச்சனைகள் தீருமா?

இறக்குமதி செய்யப்பட்ட இலக்கிய சந்திப்பு?

இலங்கையில் நிற்கும் காலங்களில் மலையகத்தில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளைத் தவறவிட விரும்புவதில்லை. அந்தவகையில் மலையக இலக்கிய சந்திப்புக்குச் சென்றிருந்தேன். இரண்டு நாட்கள் பல்வேறு தலைப்புகளிலான கலந்துரையாடல்கள். பயனுள்ள நிகழ்வு. ஆனால் பல கேள்விகள் எழுந்தன.

இது மலையக இலக்கிய சந்திப்பா? அல்லது இலங்கை இலக்கிய சந்திப்பா? அல்லது புலம் பெயர்ந்த நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட இலக்கி சந்திப்பா? எனப் பல கேள்விகள் எழுந்தன. இதற்குக் காரணம் மலையக மக்கள் விரல் விட்டு எண்ணக் கூடியளவிலையே பங்குபற்றியிருந்தனர். இதற்கு மாறாக வடக்கு கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் அதிகமாகவும் புலம் பெயர்ந்த தமிழர்களும் காணப்பட்டனர். 2009ம் ஆண்டுக்குப் பின்பு குறுகிய காலங்களில் இலங்கையில் வடக்கிலும் கிழக்கிலும் மலையகத்திலும் புலம் பெயர்ந்த இலக்கிய சந்திப்பை அவசர அவசரமாக இறக்குமதி செய்ய வேண்டிய அவசியம் என்ன என்பது கேள்வியே.

மேலும் மலையகத்தில் நடைபெற்ற இலக்கிய சந்திப்பில் அங்குள்ள பல அமைப்புகளை தனிப்பட அழைக்காது அவர்களையும் இணைத்து பொதுவான செயற்பாடாக முன்னெடுக்காது சில தனிப்பட்ட நபர்கள் மட்டும் அதை ஒழுங்கு செய்தது ஏன்? மலையக இலக்கிய சந்திப்புக் குழுவில் மலையத்தைத் தவிர்ந்த மற்றவர்கள் இருந்தது ஏன்? இலங்கையின் இலக்கிய சந்திப்பு எனின் இந்தக் குழு அர்த்தமுள்ளதாக இருந்திருக்கும். ஆனால் மலையக இலக்கிய சந்திப்பு எனக் கூறிவிட்டு வடக்கு கிழக்கு நபர்களையும் செயற்பாட்டுக்குழுவில் இணைத்தமைக்கான காரணம் என்ன? வழமையாக புலம் பெயர்ந்த நாடுகளில் நடைபெறும் இலக்கிய சந்திப்புகளில் ஒரு நாடு பொறுப்பெடுத்தால் அந்த நாட்டில் உள்ளவர்களே செயற்பாட்டுக்குழுவில் இருப்பார்கள். ஆனால் இங்கு மலையக இலக்கிய சந்திப்பு எனக் கூறிவிட்டு மலையகத்தை சேராதவர்களும் செயற்பாட்டுக்குழுவில் இருந்துள்ளார்கள். இப்படிப் பல கேள்விகள் உள்ளன. இதனைத் தனியாக ஒரு பதிவாக எழுதுவதே நல்லது. ஆனால் பயனுள்ளதா என்ற கேள்வி இருப்பதால் இத்துடன் நிறுத்துகின்றேன்.

புலம் பெயர் இலக்கிய சந்திப்பை புலம் பெயர் இலக்கிய சந்திப்பாக மட்டுமே செய்வது நல்லது. அதாவது இலங்கையில் புலம் பெயர் இலக்கிய சந்திப்பு எனச் செய்யலாம். இது அர்த்தமற்றதுதான் இருந்தாலும் அவர்களும் தங்களது அரசியலை செய்ய வேறு வழி என்ன? மற்றும்படி கலை இலக்கிய நிகழ்வுகள் சொந்த மண்ணில் இருந்து உருவாவதற்கு பங்களிப்பதே ஆரோக்கியமானது. அதுவே அவர்களை சரியான வழியில் செல்ல வழிவகுக்கும்.

இதே நேரம் மலையகத்தில் நடைபெற்ற மலையக சர்வதேச திரைப்பட நிகழ்வு அதன் பெயரின் உண்மையான அர்த்தத்தைக் கொண்டிருந்தது எனலாம். ஏனெனில் செயற்பாட்டுக் குழுவில் இருந்தவர்கள் அனைவரும் மலையகத்தைச் சேர்ந்தவர்கள். இந்த நிகழ்வை சிறப்புற செயற்படுத்தியவர்கள் மலையக நண்பர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள், சட்டத்தரணிகள், தொழில் முகவர்கள், முதலாளிகள் மற்றும் மாணவர்கள் எனலாம். இதுவே மலையக மக்களின் கூட்டு முயற்சி  என்பதற்கான அர்த்தமாக இருந்தது. சொந்த மண்ணிலிருந்து உயிர்த்த உயிரோட்டமான நிகழ்வு இது என்றால் மிகையல்ல. மலையகத்திலிருந்து சிறந்த திரைப்படங்கள் உருவாவதற்கான விதைகள் விதைக்கப்படுகின்றன என்பதைப் புரிந்து கொண்டேன்.

இவ்வாறுதான் ஒவ்வொரு பிரதேசங்களிலிருந்தும் நிகழ்வுகள் உருவாக வேண்டும். இதற்கு மாறாக அந்திய நிகழ்வொன்றை இறக்குமதி செய்வது அந்நியமாகவே இருக்கும். தூரதிர்ஸ்டவசமாக எல்லாப் பிரதேசங்களைப் போலவும் இங்கும் அரசியல் புகுந்து விளையாடுவதால் மலையத்தின் முக்கியமான இலக்கிய கர்த்தாக்களை இந்த நிகழ்வில் காணமுடியவில்லை. அரசியல் செயற்பாட்டாளர்களையும் அரசியல் வாதிகளையும் காணமுடியவில்லை. இது துர்ப்பாக்கியமே. உண்மையில் புலம் பெயர்ந்தவர்கள் மலையக வளர்ச்சியில் அக்கறை உள்ளவர்கள் இவ்வாறு சொந்த மண்ணிலிருந்து அவர்களாலையே உருவாக்கப்படுகின்ற நிகழ்வுகளுக்கே தமது ஆதரவையும் பங்களிப்பையும் வழங்குவது ஆரோக்கியமானதாகும். அப்பொழுதுதான் இங்கிருந்து சிறந்த இலக்கியங்களையும் படைப்புகளையும் ஏற்றுமதி செய்யலாம். இதற்குமாறாக இவர்களிடம் பிரிவினைகளை உருவாக்கி தமது அரசியலை முன்னெடுப்பது என்பது மலையக மக்களின் விழ்ச்சிக்கே வழிவகுக்கும் என்பதை அனைவரும் புரிந்து கொள்வது அவசியமானது.

வ.க.செ.மீராபாரதி-கனடா 

வ.க.செ.மீராபாரதி

(Visited 2,280 times, 1 visits today)