தொ லை த ல்-சிறுகதை-விஜயதாஸ்-அறிமுகம்

விஜயதாஸ்
ஓவியம் : தங்கேஸ் விக்கி

காட்சி

இடம் – கடற்கரை

EXT, DAY

(மத்திய அண்மைக்காட்சி) சிறுவன் ஒருவனது முகத்தில் உக்கிரம் தெரிகிறது. முறைத்துப் பார்த்தபடி இருக்கிறான். பின்னணியில் மரண ஓலத்தில் கத்தும் சத்தமொன்று கேட்கின்றது. சட்டகத்தினுள்; அவனது முகத்தருகில் கூரிய கத்தி ஒன்று உள்நுழைகிறது.

“வெட்டாத என்ன வெட்டாத” என்ற கதறல்கள் கேட்கின்றன. கத்தியை ஓங்குகிறான். திரை சட்டென கறுப்பாகிறது.

“வெட்டாத” என்ற சத்தமும் அழுகுரலும் ஒலித்துக்கொண்டிருக்க

கருந்திரையில்

தொ லை த ல்

என சிவப்பு எழுத்துக்கள் தோன்றுகிறது.

00000000000000000000000000000000000000

பொதுவாக பரீட்சைக்குப் படிக்கும் போது அல்லது அதிசிறப்பாக கூறவேண்டுமானால் பரீட்சை மண்டபங்களில்தான் கடதாசியில் என் விரல்களிடையே பேனைக்கு ஒன்றாக நடனமாடுவதற்கு சந்தர்ப்பங்கள் கிடைக்கும். கதை எழுத வேண்டுமென நாற்காலியைப் போட்டு அமர்வதற்குக் கூட நேரங்கள் அமைவதில்லை. அப்படி அமைந்தாலும் ஊதாரி நான். உண்மையில் சோம்பேறியும் கூட. இத்திரைக்கதையின் முதலாவது காட்சியை பேனை குத்தி எழுதியது கூட ஒரு பரீட்சை மண்டபத்தில்.

காட்சி

இடம் – வீடு

INT, EXT, DAY

சைக்கிளில் வந்த ஒருவன் அதனை நிறுத்தி கைபிடியில் கொழுவியிருந்த கூடையை கையில் எடுத்துக்கொண்டு படிக்கட்டில் தனது செருப்புகளை கழற்றி வைத்து விட்டு வீட்டிற்குள் நுழைகிறான். (கமரா அவனது கால்களை பின் தொடர்கிறது)

“அப்பாடா…. இவ்வளவு நேரமும் ஓட்டமும் நடையுமா திரிஞ்சாச்சி, இப்பதான் நிம்மதியா மூச்சுட ஏலுமாக் கிடக்கு. என்னப்பத்தி இவன் கொஞ்சம் கூட யோசிக்கிறதில்ல. அம்மா…. மேலெல்லாம் நோகுது.”

கமரா வீட்டினுள் வேறு வேறு திசைகளை நோக்குகிறது

“எங்க பாக்கீங்க…. இஞ்ச பாருங்க”

அவனது கால்களோடு பயணித்த கமரா அப்படியே பின்னோக்கி வருகிறது. அங்குமிங்கும் கமராக்கண்கள் பார்க்கின்றன.

“நான்தான்.. ஐயோ நான்தான்”

(கமராவின் பார்வைக் கோணம் மேலே செல்கிறது)

“இஞ்ச கீழ”

(வாசலில் அவன் கழற்றி விட்டுச் சென்ற செருப்புக்களில் கமரா கவனம் செலுத்துகிறது)

அதில் ஆரன் என்கிற ஒரு செருப்பு, பெருமூச்சு விட்டபடியே “இவ்வளவு நாளும் வாய திறக்காம இருந்துட்டன். ஏன் இப்ப கதைக்கனென்டு பாக்கீங்களா? என்னால தாங்கமுடியல்ல. என்ன கொடுமப்படுத்துறான். என்னால வாழ ஏலாமக்கிடக்கு. குழு மாடு மாதிரி இருக்கான். அப்பா…. இவன் எத்தன கிலோ என்டும் தெரியல்ல. நிம்மதியா இருக்க வழியே இல்லயா? சொல்லுங்களன். இந்த வாழ்க்க எனக்கு வெறுத்துப் போயிட்டு”

ஏரன் என்கின்ற மற்றைய செருப்பு – அண்ணா கவலப்படாம இரு. எல்லாத்துக்கும் ஒரு வழி கிடைக்கும்.

ஆரன் –  அந்த நம்பிக்கையிலதான் இன்னும் உயிரக் கையில புடிச்சி வச்சிருக்கன். நாம படுற கஸ்டம் இவங்களுக்கும் தெரியத்தானே வேணும்.

00000000000000000000000000000000000000

எப்பொழுதும் மனம் தேவையில்லை என்று சொல்வதை தேடிச்செல்லும். எங்களது வீட்டில் அப்பாவின் சேமிப்பில் வாங்கிய புத்தகங்கள், பழைய பத்திரிகைகள் என்பன அலுமாரியிலும் இறாக்கைகளிலும் தூங்கிக்கொண்டிருக்கும். சிறு வயதிலிருந்தே அதனைப் பார்த்ததும் தொட்டுப்பார்க்கவேண்டுமென்ற ஆசை மனதிற்;குள் துளிர்க்கும். ஓவ்வொரு புத்தகத்தையும் வாஞ்சையுடன் புரட்டிப்பார்ப்பேன். சில புத்தகத் தாள்கள் பப்படம் போல நொறுங்கித் தூளாகும். பல புத்தகங்கள் என் கை பட்டுத்தான் கன்னி கழிந்திருக்கும். வீட்டின் ஒவ்வொரு மூலைகளும் எனது வாசிப்பிற்கான இருப்பிடங்கள். “இது உனக்கு தேவல்லாத வேல, முதல்ல படி, இதல்லாம் உனக்கு சோறு போடாது” என நச்சரித்துவிட்டு கடந்த கால ஏஃஎல் பரீட்சை வினாத்தாள்கள் அடங்கிய புத்தகங்கள் மூன்றை கையில் திணித்திருந்தார் அப்பா. இருந்தாலும் பாடசாலையில் மேசைக்குக் கீழே புத்தகங்களை வைத்து வாசிக்குமளவிற்கு சென்றிருந்தது என் வாசிப்புப் பித்து. அத்தோடு மட்டும் நின்று விடாமல் வீட்டிலிருந்த புத்தகங்களைக் கொண்டு வந்து நண்பர்களோடு வகுப்பறையில் வாசிகசாலை அமைத்து ஒரு நாள் வாடகை ஒரு ரூபாய்க்கு புத்தகங்களை இரவல் வழங்கும் சமூகப்பணியையும் செய்துகொண்டிருந்தேன். நல்ல புத்தகங்களை என் நண்பர்கள் வாசிக்க வேண்டும் என்பதற்காக அந்தப்பணத்திற்கு புதிய புத்தகங்களை வாங்கி என் வகுப்பு வாசிகசாலையில் இணைக்கும் பணியும் நடந்துகொண்டிருந்தது.

வகுப்பறையில் பாடம் நடந்து கொண்டிருந்த சமயம் மேசைக்குக் கீழே புத்தமொன்றினை வாசித்துக்கொண்டிருந்ததை என் வகுப்பாசிரியர் கண்டுவிட்டார். புத்தகத்தினை பறித்து வெளியே தூக்கி எறிந்ததோடு மட்டுமல்லாமல் என் சிறு வாசிகசாலையிலுள்ள புத்தகங்களையும் வீசி என்னையும் வகுப்பறையை விட்டு வெளியே துரத்திவிட்டார். வெளியே விழுந்த புத்தகங்களை ஒவ்வொன்றாக பொறுக்கி எடுத்தேன். நண்பர்கள் என்னை பரிதாபமாக பார்த்துக்கொண்டிருந்தார்கள். இரட்டை ஜடை கட்டிய சக மாணவி ஒருத்தி ஏளனமாகச் சிரித்தாள். நான் ஒவ்வொரு புத்தகமாக பொறுக்கி எடுத்துக்கொண்டிருந்தேன். என் கண்களிலிருந்து சுரந்த நீர் அத்தனை புத்தகங்களையும் நனைப்பதற்கு போதுமானதாக இருந்தது. இந்த வி~யம் அப்பாவின் காதுகளுக்குச் செல்ல, எனது காதினால் இரத்தம் வருமளவிற்கு ஏசினார். வீட்டிலுள்ள புத்தகங்கள் அனைத்தையும் மூட்டை கட்டி எங்கள் ஊர் பொது நூலகத்திற்கு கொடுத்தும்விட்டார். எனது வாசிப்பும் மெல்ல மெல்ல குறைந்து வேறு எங்கோ திசைகளில் பறந்து கொண்டிருந்தது. இவ்வேளையில்; ஏஎல் பரீட்சைக்கு படித்துக்கொண்டிருந்தபோது நான் அதனைக் கண்டேன்.

காட்சி

இடம் – முந்திரிகை மரங்கள் நிறைந்த தோட்டம்

EXT, DAY

நிலத்தில் முந்திரிகை இலைச் சருகுகள். அவன் கத்தி ஒன்றினை கையில் எடுத்துக்கொண்டு சருகுகளை மிதித்தபடி சர சர வென்ற சத்தமெழ சென்றுகொண்டிருக்கிறான். முந்திரியஞ்சருகுகளுக்குள் இருந்த பெரிய முள் ஒன்று அவனது வலது கால் செருப்பில் குத்துகிறது.

ஆரன்: “ஆ……” என வலியோடு கத்துகிறது.

ஏரன்: “என்ன அண்ணா”

அவன் செருப்பில் தைத்திருந்த முள்ளினை புடுங்க

ஆரன்: “அப்பா” என பலத்த சத்தத்தோடு கத்துகிறது. அவன் செருப்பிலிருந்த முள்ளினை தூக்கியெறிந்து விட்டு மீண்டும் நடக்கத்தொடங்குகிறான்.

ஏரன்: “நோகுதா”

ஆரன்: “அறிவு கெட்டவன் மூதேவி”

அவன் கீழே பார்க்கிறான்.

“நான் சொன்னது கேட்டிட்டோ”

அவன் வலது காலைத்தூக்கி ஆரனை பார்த்து விட்டு நடக்கிறான்.

ஏரன்: “நல்ல காலம் அவனுக்கு கேக்கல்ல”

ஆரன்:“டேய் நான் இல்லாட்டி காடு, பத்த, வெயில் வழிய உன்னால நடக்கேலுமாடா? எவளவு நோகும் தெரியுமா? நான் துடிக்கிற துடிப்பாவது உனக்கு தெரியுமாடா? படுபாவி…. ஏரா, எப்பிடியோ முதல்ல இவன்டருந்து தப்பிக்கோணுன்டா…….

ஏரன்: “சொல்லுற சரிதான். நீ எவளவு ஏசியும் ஒன்டும் கேக்காத மாதிரி போறான் பாரு.”

000000000000000000000000000

தொங்கிய தூக்கணாங்குருவிக்கூடுகள், நீல நிற அட்டை, சிறை என கறுப்பு நிற எழுத்துக்களால் பதியப்பட்ட அந்தச் சிறிய புத்தகத்தகத்தை பழைய இறாக்கையிலிருந்து எடுத்துப்பார்க்கிறேன். அது அப்பா மூட்டை கட்டிக் கொடுத்ததில் தப்பிய ஒன்று. நின்ற நிலையில் அப்புத்தகத்தை நுனிப்புல் மேய்ந்த போது அண்ணளவாக 426 சொற்களால் ஆக்கப்பட்டிருந்த அக்கதையை வாசிக்கக் கிடைத்தது. எஜமானது கட்டுப்பாட்டிலிருக்கும் இரு சோடிச் செருப்புகள் அவனிடமிருந்து தப்பித்துச் செல்லும் கதையின் சுருக்கத்தைக் கொண்ட அவ் உருவகக் கதையின் பெயர் “விடுதலை” எழுதியவர் பெயர் ஞாபகமில்லை. அக்கதையின் அகத் தூண்டுதலில் எனக்கு விளங்கிக்கொள்ளக்கூடியவாறு எழுதிய திரைக்கதை பிரதி இது.

0000000000000000000000000000000

காட்சி

இடம் – தெரு

EXT, DAY

அவன் கூடையில் காய்கறிகளுடன் செல்கிறான். பெண்னொருத்தி அவன் எதிரே வந்துகொண்டிருக்கிறாள். அழகான அவளது பொன்னிறக் கால்கள் வெயிலில் தகதகக்கின்றன. அதனைவிட அவள் அணிந்திருந்த அழகான செருப்புகள் மின்னிக்கொண்டிருக்கிறன. (பின்னணியில் காதல் இசை பெருக்கெடுக்கிறது)

ஆரன்: “டேய் அங்க பாரன். என்ன அழகு டா அது”

ஏரன்: ஆச்சரியத்துடன் “ஓம்டா”

ஆரன்: “டேய்…. அண்ணிய பிடிச்சிருக்காடா”

ஏரன்: “எதச் சொல்லுறா? வலதா? இடதா?”

ஆரன்:  “இடது கால்ல இருக்கிறவடா”

ஏரன்: “ஆ… சுப்பர்டா”

அந்தப் பெண் அவனைக் கடந்து நடந்து சென்று கொண்டிருக்கிறாள்.

ஆரன் –  “டேய் கொஞ்சம் பின்னால போடா. பிளீஸ்டா, கொஞ்சம் றிவேசிலயாவது போடா. அவள் என்ன விட்டுட்டு போறாள்டா. டேய் நான் இதுவரைக்கும் உன்னட்ட ஒன்டுமே கேக்கல்ல எனக்காக கொஞ்சம் பின்னால போடா”

அவன் நடந்துகொண்டே இருக்கிறான். அவளும் நடந்துகொண்டே இருக்கிறாள். அவன் வீதியிலிருந்த சாணத்தை தற்செயலாக மிதித்து விடுகிறான்.

ஆரன் –  “உவ்வே…. இன்;டப்பா என்ன நாத்தம், மூதேவி கண்ண என்ன கமக்கட்டுக்குள்ளையா வச்சிருக்கான்”

அவன் செருப்பினை புற்களில் துடைக்கிறான்.;.

“டேய் தண்ணீல என்னக் கழுவன்டா. நாத்தம் பொறுக்கேலாம இருக்கு”

ஏரன் சிரிக்கிறது.

“உன்ர முகத்த சாணில புதச்சிருந்தா தெரிஞ்சிருக்கும்”

0000000000000000000000000000000

“என்ன இப்பிடியே கதிரய சூடேத்தி தேய்மான ஏற்பாடு பண்ணிற நோக்கமா?”

அடிக்கடி மனம் என்னை நோக்கி இக்கேள்வியை கேட்கும். இவையெல்லாம்; அதிகமாக நான் அமைதியாக நிசப்தமாக இருக்கும் சூழ்நிலைகளில், அலுவலக நேரங்களில் என்னை தொந்தரவு செய்யும். அப்போது முகாமைத்துவ உதவியாளராக வேலை கிடைத்திருந்தது. முதலாவது வினைத்திறன் தடைதாண்டல் பரீட்சைக்கு படித்துக்கொண்டிருந்த போது மனம் அடிக்கடி இக் கேள்வியை என் மனம் கேட்டது. இப்பரீட்சையில் சித்தியடைந்தால்தான் எனது பதவி உறுதிப்படுத்தப்படுவதோடு மட்டுமல்லாமல் வேதன ஏற்றங்களும் வழங்கப்படும். வார இறுதி விடுமுறையில் பரீட்சை எழுதுவதற்கு திருகோணமலையிலிருந்து பஸ் பிடித்து வந்தவன் மறுதினமே எழுதிய திரைக்கதையுடன், கையில் கமராவோடு நண்பனையும் அழைத்துச் சென்றுகொண்டிருந்தேன். மண்டபத்தில் நானில்லாமல் பரீட்சை நடைபெற்றுக்கொண்டிருந்தது.

காட்சி

இடம் – அவனது வீட்டு முற்றம்

நேரம் – EXT, NIGHT

தென்னைமர ஓலைகளிடையே முழுச் சந்திரன் ஒளி வீசிக்கொண்டிருக்கிறான். அவ்வொளியின் வெளிச்சத்தில் இரு செருப்புகளும் வீட்டு முற்றத்தில் இருக்கின்றன.

ஆரன்: “இப்பவும் அவள் கண்ணுக்குள்ளதான்டா இருக்காள்”

ஏரன்: “ஆரு”

ஆரன்: “அவ தான்டா நாம பாத்தமே”

ஏரன்: “ம்…… ஓ.. அவங்களா?”

ஆரன்: “ஓண்டா, நமக்கெல்லாம் இந்தக் காதல் செட்டாகுமாடா”

ஏரன்: “ஏன் நீ இப்பிடிக் கேக்குறா”

ஆரன்: “இல்லடா, எப்பவும் நாம ஒருத்தனுக்கு கீழதான்டா இருக்கிறம். நமக்கெண்டொரு சுகந்திரமுமில்ல. அப்பிடிப்பட்ட நாம இந்த காதலுக்கு ஆசப்படலாமா?”

ஏரன்: “ஏன்டா உனக்கென்ன குற, அண்ணியும் கறுப்பா களயாத்தானே இருக்கா”

ஆரன்: “தம்பி கறுப்பா இருந்தாலும் காஸ்ட் பாப்பாங்களேடா?”

ஏரன்: “முதல்ல இந்த கீழான எண்ணத்தெல்லாம் விட்டுத்தள்ளு. நாமெல்லாம் ஆண்ட பரம்பரடா”

ஆரன்: “என்ன புதுக்கத சொல்லுறா? நாம எங்க ஆண்ட”

ஏரன்: “அன்;னேரம் பெரிய சாம்ராஜ்ஜியத்தையே ஆண்டதே நம்மட இனம்தான்”

ஆரன்: “எப்ப……?”

ஏரன்: “இராம பிரான் வனவாசம் போக, அவரோட தம்பி பரதன் அண்ணன்ட செருப்பு ரண்டையும் கொண்டு வந்து சிம்மாசனத்தில ஏத்தி அயோத்தி சாம்ராச்சியத்த ஆண்ட கத தெரியாதா உனக்கு?”

ஆரன்: “நம்மட ஆக்கள் ஆண்ட விசயமே எனக்கு மறந்துட்டுடா. நாம ஆண்ட விசயம் ஆருக்கு தெரியப்போது. எப்பயோ நடந்தத்த இப்பயும் சொல்லிட்டு இருக்கம். நாம இல்லாத இடம் எது? நமக்குள்ள எத்தன சாதி, நீ பெரிசி, நான் பெரிசி. என்னதான் பீத்திட்டு திரிஞ்சாலும் நம்மள அந்த மூலைக்குள்ளான் போடுறானுகள். நமக்கெண்டு ஆனமா ஒரு இடங்கூட இல்ல”

ஏரன்: “நாமளும் ஆசப்படலாம். முதல்ல அந்த தாழ்வு மனப்பான்மய விடு. விளங்கிட்டா?”

ஆரன்: “நீ சொல்லுறது சரிதான்டா. ஏன் நான் உனக்கு பொய்யச் சொல்ல. எனக்கு பாத்த உடனே அவள புடிச்சிட்டு”

ஏரன்: “அண்ணா…. அண்ணா….”

ஆரன்: “என்னடா?”

ஏரன்: “எனக்கும் அவள புடிச்சிருக்கு”

ஆரன்: “என்;ன?”

ஏரன்: “ஆ…… இல்ல அண்ணிட தங்கச்சிய”

00000000000000000000000000000

அழகான பொன்னிறக் கால்களையுடைய பெண் அணிந்து வரும் காலணியின்; வர்ணம் றோஸ் அல்லது வெள்ளை என தீர்மானித்து எழுதப்பட்டது. வகுப்புத் தோழியிடம் கூறியுமாகிவிட்டது. அவள் அழகான பாதணிகளை அணிந்து வந்தாள் கறுப்பு நிறத்தில். தனது வெள்ளை சப்பாத்துக்கள் பிய்ந்து விட்டதாக கூறினாள். இனி என்ன செய்வது சமரசப்படுத்திக் கொண்டு காட்சியை முடித்தாயிற்று. பின்னர் சில வசனங்கள் அடுத்த காட்சியில் திருத்தம் செய்யப்பட்டது.

00000000000000000000000000000

காட்சி

இடம் – கோயில்

EXT, DAY

கோயில் கோபுரத்தில் இருக்கும் மணி பெரும் சத்தத்துடன் ஒலிக்கிறது. அவன் கோயில் வாசலில் செருப்புகளை கழற்றி கால்களை கழுவி விட்டு உள்ளே செல்கிறான்.

ஆரன்: “கடவுளே! இவன் எங்கள கொதிக்கிற வெயிலில காய வச்சிட்டு போயிட்டானே மேலெல்லாம் பத்துது”

ஏரன்: “எரியிதப்பா…. உனக்கு முன்னாலயே இவ்வளவு கொடும நடக்குதே இதல்லாம் பாத்துட்டு சும்மா இருக்கயே ஆண்டவா?”

அப்போது அவள் வருகிறாள். அவளது செருப்புகள் கடல்நீரில் சூரிய ஒளி தெறிப்பது போல மினுங்கிக்கொண்டு இருக்கின்றன.

ஆரன்: “அவனுக்கு தேவயில்லாம ஏசிட்டன். இண்டைக்குத்தான்டா இவன் உருப்படியான ஒரு வேல பாத்திருக்கான்”

ஏரன்: “என்ட ஆளும் வந்திருக்காள் அண்ணா”

ஆரன்: “ஓண்டோவ்”

ஆரன், ஏரனுக்கு சற்றுத்தள்ளி அவளது செருப்புக்களை வைத்து விட்டு செல்கிறாள்.

“சே. கொஞ்சம் பக்கத்தில வச்சிட்டு போயிருக்கலாமே. ஆண்டவா என்ன அவளுக்கு பக்கத்தில கொண்டுபோய் சேக்கமாட்டியா?”

(ஓருவன் வருகிறான். கோயில் வாசலில் செருப்புக்கள் இருப்பதை கண்டுவிட்டு காலினால் தட்டிவிடுகிறான். ஆரன் அப் பெண் வைத்துவிட்டுச் சென்ற இடது கால் செருப்பின் அருகே விழுகிறது. ஏரன் செருப்பு தொலைவில் விழுகிறது.

ஆரன்: “ஆண்டவா கண்ணத் திறந்திட்டியே.”

ஏரன்: “உனக்கு மட்டும் திறந்துட்டார்.”

ஆரன்: “கத்தாம இரு முதலாவதா அக்காவ நான் செட்பண்ணிறன். தங்கச்சி தானா உனக்கு வந்து சேரும். (கொஞ்சம் இருமியபடி) இங்ச கொஞ்சம் பாருங்க”

இடது பெண் செருப்பு – “கொஞ்சம் தள்ளிப்போறேங்களா? சரியா நாறுது. (சோகமான இசை)

எத்தன நாள் குளிச்சி”

(ஏரன் சிரிக்கிறது)

ஆரன்: “ஆ… இல்ல அவன் கண்ட எதயோ மிதிச்சிட்டான். அதான் என்டு நினைக்கிறன். நான் எப்பவும் சுத்தம்தான். அவன் ஆள் சரியில்ல.”

ஏரன்: “முத்தல் கத கதய்க்காம கெதியா விருப்பத்த சொல்லு”

ஆரன்: “நல்லா நோன்டியாகிட்டன்டா”

ஏரன்: “இத விட்டா நமக்கு நல்ல சந்தர்ப்பம் வராது, நம்மட வாழ்க்க கெதியாச்சொல்லு”

ஆரன்: (இருமியபடி) “நான் உங்கள்ட ஒன்டு சொல்லொனும்”

இடது பெண் செருப்பு – “என்ன”

ஏரன்: “குயிக்கா சொல்லு”

ஆரன்: அது ஏனோ தெரியல்ல. இவ்வளவு நாளா எனக்கு அப்பிடி ஒன்டுமே இல்ல. உங்கள முதல்ல அப்பவே உங்கள்ல எனக்கு”

(ஆரன் கூறிக்கொண்டிருக்கும் போதே கோயிலிலிருந்து வெளியே வந்தவன் செருப்புகள் இரண்டையும் காலில் மாட்டிக்; கொண்டு செல்கிறான்)

ஏரன்: “கடவுளே…….!”

ஆரன்: “ஏய் கொஞ்ச நேரம் விட்டுட்டுப்போடா. கொஞ்சம் கதச்சிட்டு வாரன்.

ஏரன்: “என்ன நீ பண்ணுன வேல. திக்கி திணறிட்டு இருக்கா”

ஆரன்: “நான் என்னடா செய்யிற இவன் விட்டானாடா. அவன மாதிரி நம்மளயும் ஒன்டிக்கட்டையா இருக்கவைக்காம விடமாட்டான் போல. இனி எப்ப அவளக் காணுவன். முடிவெடுத்துட்டன்டா இவன்டருந்து முதலாவதா நாம தப்பிக்கோணும்”

அவன் நடந்து கொண்டே இருக்கிறான்.

0000000000000000000000000000000

இப்படத்திற்கு அவர்கள்தான் கதாநாயகன் என எண்ணியிருந்தேன். கோயிலுக்கு வெளியே கழற்றிவிட்டு உள்ளே சென்ற போது யாரோ ஒருவன் அவர்களை மாற்றி அணிந்து கொண்டு சென்றுவிட்டான். இரு சோடி செருப்புகள் அனாதரவாக இருந்தன. யாரோ ஒருவனுக்காக ஓடாய் உழைத்து ஒட்டிய தேகத்துடன் இருந்தன. அந்த யாரோ ஒருவன் உச்ச கட்ட உழைப்பை சுரண்டிவிட்டு கழற்றிவிட்டானோ தெரியாது. அல்லது அவனிடமிருந்து தப்பிக்க நினைத்தனவோ தெரியாது. எவ்வாறாக இருப்பினும் நான் எதிர்பார்த்தபடி அவன் இருந்தான். அவனேதான் அவர்களேதான் என் கதாநாயகர்கள். உடனே காலில் அணிந்துவிட்டேன். எங்கு சென்றாலும் அவர்களை கையோடு அழைத்துச் சென்றேன். இல்லை காலோடு அழைத்துச் சென்றேன். வீதி வீதியாக ஒரு மாதத்திற்கு மேலாக ஈவிரக்கமில்லாமல் அவற்றோடு அலைந்து திரிந்தேன். இன்னும் தேய்ப்பதற்காக.

0000000000000000000000000000000000

காட்சி

இடம் – கடற்கரை

EXT, DAY

அவன் நண்பர்களுடன் கடற்கரையில் கட்டப்;பந்து விளையாடிக்கொண்டிருக்கிறான்.

மூன்று வெற்றுப்பேணிகளை ஒன்றன் மேல் ஒன்று அடுக்கி அதன் மேல் ஒன்பது பானை ஓட்டுச் சில்லுகள் மேலே மேலே அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன. அதனை வீழ்த்தவேண்டும். அப்பேணிகளிலிருந்து இருபக்கமும் சுமார் இருபது அடி தூரத்தில் ஐந்து, ஐந்து பேர் கொண்ட இரு குழுக்கள் பந்தை எறிந்துகொண்டிருக்கிறார்கள்.

இவன் எறிந்த பந்து அப்பேணிகளின் மீது பட்டு சில்லுகள் மேலே பறக்கின்றன. விழுந்த அப்பேணிகளை மற்றய குழுவினர் ஒன்றன் மேல் ஒன்று அடுக்கி சில்லுகளை அதன் மேல் வைக்க முயல்கின்றனர். அவன் அடுக்கி வைப்பதற்கு இடம் கொடுக்காமல் பந்தை அவர்கள் மீது எறிகிறான். அது அவர்கள் மீது பட்டு தெறித்து அவனது குழுவைச் சேர்ந்த வேறு ஒருவனின் கைகளில் செல்ல அவனும் எதிர் குழுவினர் மீது எறிகிறான். பந்து கடலினுள் செல்கிறது. அவன் பந்தை எடுக்க கடலிற்குள் ஓடும் போது கால்களிலிருந்த ஆரன் கடலிற்குள் விழுகிறது. ஏரன் கரையில் விழுகிறது.

ஆரன்: “தம்பி வாடா… வாடா…”

ஏரன்: “என்னையும் கூட்டிட்டு போ அண்ணா”

(அடித்த கடலலை ஏரனின் அருகில் சென்று சென்று பின்னோக்கிச் செல்கிறது.)

“கொஞ்சம் கடவுளே… இன்னும் கொஞ்சம்”

இடையிடையே ஆரன் ஏரனை அழைத்தபடியே இருக்கிறது. அவன் செருப்பை காணாமல் அங்குமிங்கும் தேடி அலைகிறான். கரையில் இருக்கும் ஏரனை காணுகிறான். அதனை எடுக்க ஓடி வருகையில் அருகில் வந்த கடலலை ஏரனை இழுத்துச் செல்கிறது.

ஏரன்: “ஹே… ஹே…” எனக் கத்தியபடி கடலலையில் மிதந்து செல்கிறது.

ஆரன்: “வா….. வேகமா வா.. இந்தக் கடல தாண்டிச் செல்லுவம்”

ஏரன்: “நம்ம இந்த நாட்டுல இருக்கவே கூடாது. எங்கயாவது கண்காணாத தேசத்துக்கு போயிரோனும்”

அவன் செருப்பை எடுக்க கடலுக்குள் ஓடுகிறான். அவனது நண்பர்கள் அவனைப் பிடிக்க ஓடி வருகின்றனர்.

ஆரன்: “டேய் வில்லன் ஓடி வாரன்டா”

ஏரன்: “உன்னால எங்கள புடிக்கேலாது ஹே…..”

செருப்புக்கள் சிரிக்கின்றன.

கடலுக்குள்ளிருந்து நண்பர்கள் அவனை பிடித்து இழுத்து வருகின்றனர். செருப்புகள் ஆர்ப்பாட்டத்துடன் கத்தியபடி கடலில் தப்பித்துச் செல்கின்றன.

கடலலையில் அடிபட்டு, புரண்டு சென்ற செருப்புகளில் ஏரன் பாறை ஒன்றினுள் அகப்படுகிறது.

ஆரன்: “வாடா………. ஏரா வாடா……..”

ஏரன்: “என்ன காப்பாத்து அண்ணா”

ஆரன்: “பயப்படாத வாரன்” சொல்லி முடிக்கும் முன்னே இராட்சச அலை அடித்து ஏரனை வேறொரு திசையில் கொண்டு செல்கிறது.

000000000000000000000000000000000

சாராவின் ஓட்டம், அலியின் ஓட்டம், மூச்சிழைப்பு சத்தங்கள், பாதணிகளை மாற்றி மாற்றி பாடசாலைக்குச் செல்லும் வேகம், அளவுகள் பொருந்தாவிட்டாலும் அவள் அணிந்து கொண்டு செல்லும் அழகு, மூன்றாவது பரிசிற்காக அவன் ஓடும் மரதன் என்பவை பாதணிகளை வைத்து ஒரு அழகிய கவிதையை புனைந்த தன்மை. சில்ரன் ஒவ் ஹெவன் அதிகமான உலக சினிமா காதலர்கள் முதலில் பார்த்த திரைப்படம். நானும் பார்த்த முதல் திரைப்படமும் கூட. மஜீத் மஜீதி இயக்கிய இந்த ஈரானிய திரைப்படத்தில் ஏற்பட்ட லயிப்பு. பேர்சியன் மொழி புரியாவிட்டாலும் மனத் தட்டில் பதிந்த அந்த அழியாச் சித்திரம். அதற்கு முன் பரதன் மேல் மரியாதை உண்டாக்கிய இராமாயணம். நானும் தலையில் தூக்கி வைக்குமளவிற்கு அவன் மீது ஏற்பட்ட ஏதோ ஓர் உணர்வு இக் கதை பின்னலை சாத்தியமாக்கியது. வெளியே எட்டிப்பார்க்கிறேன். கொதிக்கும் வெயிலில் ஊமையாய் இருக்கிறார்கள். விரைவாக ஓடுகிறேன்.

000000000000000000000000000000

காட்சி

இடம் – வேறு ஒரு கடற்கரை

EXT, DAY

பல தூரம் பயணித்த ஆரன் அலைகளில் அடிபட்டு அடிபட்டு கரையை வந்தடைகின்றது.

ஆரன்: “தம்பிக்கு என்ன நடந்ததோ தெரியல்ல, அவன் எந்த நடுக்கடலுல தத்தளிச்சிக்கொண்டிருக்கானோ, உயிரோடயாவது இருக்கானோ கடவுளே”

செருப்பினை ஒரு கை திடீரென தூக்குகிறது.

திரை கறுப்பாகிறது. பின்னணியில் வசனங்கள் செல்கின்றன.

ஆரன்: “டேய் என்ன விடுடா. ஆர்டா நீ, என்ன எங்கடா கொண்டு போற?”

பத்துவயது மதிக்கத்தக்க அச்சிறுவனது வலக்கரத்திலிருந்து கத்தி மேலெழுகிறது. அவன் ஆரனை இரண்டாக வெட்டுகிறான்.

ஆரன்: “வெட்டாதடா.. புலிவாயிலருந்து தப்பி முதல வாயிலபட்டுட்டனே. அம்மா நோகுதே”

இரு பாதிகளிலும் வட்டமாக இரு சில்லுகளை வெட்டியவன், சிறிய இறப்பர் போத்தலுக்கு அடியில் இரு துளைகளிட்டு அச்சில்லுல்களை அத்துளைகளின் வலமும் இடமுமாக ஒரு கம்பில் பொருத்துகிறான். இறப்பர் போத்தலின் வாயில் பெரிய தடியினைப் பொருத்தி சிறிய வண்டி ஒன்றை தயார் செய்து வீதியில் ஓட்டி விளையாடுகிறான். போத்தலின் அடியில் இறப்பர் சில்லுகள் நிலத்தைத் தேய்த்து புளுதியை கிளப்புகின்றன.

ஆரன்: “அங்க இருக்கக்குள்ள ஒரு உரிமயுமில்லாம அடிம வாழ்க்க வாழ்ந்தாலும் சகோதரத்தோட சந்தோசமா வாழ்ந்தன். இனி அவன எங்க  பாக்கப்போறன். (பெருமூச்சோடு) “பாத்தீங்களா ஆண்ட பரம்பரயிர நிலமய”

(தூரத்து காட்சி) சிறுவன் வண்டிலை ஓட்டியபடி செல்கிறான். வண்டில் இரைச்சல் சத்தத்தோடு திரை மங்குகிறது.

000000000000000000000000000

கிடைக்கும் விடுமுறைகளிலெல்லாம் வந்து இரவு பகலாக நண்பனுடனிருந்து காட்சிகளை துண்டித்து படத்தொகுப்பு முடித்தாயிற்று. பின்னணிக் குரல், இசை சிறப்பு சப்தங்களை உள்ளிடும் வேலைகள் மட்டும் எஞ்சி இருந்தன. நானும் நண்பனும் எங்களது குரல்களை பிண்ணனியாகக் கொடுத்து இணைத்து திரையில் பார்த்தபோது மனதிற்கு திருப்தியைத்தந்தது. ஆனால் எங்களது அக்குரல்கள் இரு செருப்புக்களுக்கும் பொருத்தமானதாக இருக்கவில்லை. பல குரல்களை பரீட்சித்துப் பார்த்தும் அண்ணன், தம்பி செருப்புகளுக்கு உயிரோட்டத்தினை கொடுக்கமுடியவில்லை. பொருத்தமான குரல்களை தேடி அலுத்தும்விட்டது. உங்களது குரல்களும் பொருத்தமாய் இருக்குமானால் சொல்லுங்கள். இணைத்துப் பார்க்கிறேன்.

விஜயதாஸ் -இலங்கை

000000000000000000000000000

எழுத்தாளர் பற்றிய சிறுகுறிப்பு :

விஜயதாஸ்கிழக்கிலங்கையின் களுவாஞ்சிக்குடி கிராமத்தைப்பிறப்பிடமாகக் கொண்ட விஜயதாஸ் சினிமாத்துறையிலும் எழுத்துத்துறையிலும் ஆர்வம் கொண்ட இளம்வயதினர் ஆவார். இதுவரையில் நான்கு குறும்படங்களை இயக்கிய விஜயதாஸ் அண்மைக்காலமாக எழுத்து துறையிலும் ஆர்வம் காட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

நடு குழுமம்

(Visited 262 times, 1 visits today)
 

2 thoughts on “தொ லை த ல்-சிறுகதை-விஜயதாஸ்-அறிமுகம்”

Comments are closed.