போர் இன்னும் முடியவில்லை- இலக்கியன் முர்ஷித் கவிதை

போர்
இன்னும் முடியவில்லை
பெருந்தேசியம்
எம்மொழிச் சமூகத்தின் மீது
ஆட்சியின் பெயரால்
அடிமையின் நிறங்களை
பூசிப்புதுப்பித்துக் கொண்டிருக்கிறது.

போர்
இன்னும் முடியவில்லை
புதிய பரிணாமத்தில்
ஆழ வேரூன்றி
எம்மொழிச் சமூகத்தின்
மனித மனங்களை சுக்குநூறாக்கும்
வித்தைகளை கச்சிதமாய்
நிகழ்த்திக் கொண்டிருக்கிறது.

போர்
இன்னும் முடியவில்லை
என்மொழிச் சமூகத்தின்
தலைகளை துண்டாக்கி
நாதியற்ற முண்டங்களாக
வரலாற்றின் பக்கங்களில்
அலைந்து திரிந்து மடிந்து மண்னோடு
மண்ணாக்கும் சதி இன்றும் தொடர்கிறது

போர் இன்னும் முடியவில்லை
துப்பாக்கியில்லை ரவைகளில்லை
பீரங்கிகளில்லை போர்கப்பல்களில்லை
போர் விமானங்களில்லை
இரத்தமுமில்லை சதையுமில்லை
கண்ணீருமில்லை ஒப்பாரியுமில்லை
ஆனாலும்
போர் இன்னும் முடியவில்லை

02
உன்
மனக்கூட்டில்
சிக்கி தவிக்கும்
பறவை நான்
என்
மனக்கூடோ
விரிந்து பரந்து கிடக்கும்
பிரபஞ்சமாகிறது
அன்பு
என்னுள் பறக்க
கற்றுக் கொள்கிறது
அதன்பறத்தல்
என்னை எனக்குள்
திறந்து விடுகிறது

03
புல்லாங்குழல் இசையில்
லகித்தாடும்
சூபியின்
போர்வை போல
விரிந்துகொண்டிருக்கிறது
எனக்குள் ஒரு
யாத்திரை

4
???..
எனது அறையை முழுங்கிய
இராப்பொழுதை
குடித்துத்தீர்த்துவிடுகிறது
கட்டவிழ்ந்த கனவு
அறைக்கதவுகளை
தட்டிக்கொண்டிருக்கிறது
விடியலின் மூச்சுக்காற்று
திறந்து பார்க்கிறேன்
தற்கொலை செய்துகொண்டிருக்கிறது
நிலாவுப் பூச்சி.

முர்ஷித்

முர்ஷித்

 

(Visited 137 times, 1 visits today)