வெற்றியாளனின் கருணை-கவிதை-உ.கிருஷ்ணமூர்த்தி

வெற்றியாளனின் கருணை

உ.கிருஷ்ணமூர்த்தி
ஓவியம் : சமித்திரா ஸ்ரீரங்கநாதன்

நினைவின் நதியில்
தழும்பாக
அமிழ்ந்து கிடக்கிறது
துரோகங்கள்

பானையைக் காலியாக்கிவிட்டு
அகப்பையைக் காட்டியே
பந்தியை நிறைவுசெய்த
தபசுப் பிள்ளையைப் போல்
அதிகாரம் செலுத்த
எனக்கு வாய்க்கவில்லை

வறியார்க்கு ஈயாத
செல்வம் போல்
உயர்ந்து நிற்கும்
அரியணை நோக்கி
தேனூறும் சொற்களைச்
சாற்றுகிறார்கள்
உன் துதிபாடிகள்

குட்டி ஈன்ற
விலங்கைப் போல்
அண்டவொண்ணாது
குடிகளுக்கு ஆணையிட்டு
சமரசம் பேச தூது அனுப்புகிறாய்

கூரிய வேலினை
நெஞ்சில் இறக்குவதனினும்
வலி மிக்கது
வெற்றியாளனின் கருணை

உ.கிருஷ்ணமூர்த்தி-இந்தியா

உ.கிருஷ்ணமூர்த்தி

(Visited 205 times, 1 visits today)
 

4 thoughts on “வெற்றியாளனின் கருணை-கவிதை-உ.கிருஷ்ணமூர்த்தி”

Comments are closed.