புத்தரின் தியானக் குறிப்பேடு-கவிதை-வசந்ததீபன்

புத்தரின் தியானக் குறிப்பேடு

வசந்த தீபன்
ஓவியம் : சமித்திரா ஸ்ரீரங்கநாதன்

நதிக் கரையில் புத்தர்
அக்கரையைப் பார்த்தபடி
கசப்பும் வலி நிரம்பிய தொன்மையும்
இரு கண்களில் பீறிட.

வறண்டு நீரற்று
சாவின் விளிம்பில் உழலும்
முதிய மரத்தைப் போல
அந் நதி விசனமாய்.

யாரும் கடக்கலாம் எளிதாக
ஆனால் அவரோ
தீராத யோசனையோடு
கவலையும் வேதனையும்
கொப்பளிக்கும் முகத்துடன்.

கடந்து போனவர்கள்
திரும்பி வருகிறார்கள்
வந்தவர்கள்
திரும்பி போகிறார்கள்.

பயணம் தொடருகிறது…

காற்று வீசுகிறது மழை பெய்கிறது
சூரியன் வெளியேறி நிலா வருகிறது
இரவு கரைந்து பகல் வருகிறது
இருளும் ஒளியும் மாறி மாறி.

நீர் வரக்கூடிய அறிகுறிகள் இல்லை
கொதிக்கும் மணலாய்
வாழ்வுள் பெருகுவதைத் தவிர
வாழ்வதின் சூழல் குளிர்வதாயில்லை.

நிலைகுத்திய பார்வையோடு
அக்கரையை நோக்கி
எங்கோ வெறித்துக் கொண்டிருக்கிறார்
புத்தரும் சூனியத்தின் மீது.

மனிதர்கள்
காலத்தைத் தாண்டி
இச்சை போனபடியே
போய்க் கொண்டிருக்கிறார்கள்.

000000000000000000000000000

பிடி சாபம்

வீட்டுக்குள் நின்று கொண்டு
அதை
வெடி வைத்து தகர்ப்பது போல
ஒரு பெண்ணை சிதைப்பது.

அவளின் உடல்
கண்ணாடிப் பேழையாலானது
வல்லாங்கில்
சில்லுச் சில்லாய்த் நொறுங்குகையில்
தெறித்துப் பாயும்
காலங்களின் உயிர்த்தலங்களுக்கு.

வம்சத்தின் வேர் இற்றுப்போக
வாழ்வின் ஆன்மாவில்
அபலையின் ரத்தக்கறைப்
படியும் அழியாது.

கடவுளின் பிம்பம் உருகி ஆவியாகும்
நாகரீகம் கரைந்து மறையும்
பண்பாடு , கலாச்சாரம் யாவும்
காற்றில் வரைந்த ஓவியங்களாகும்.

அணுகுண்டால் நகரங்களை
கதிர் வீச்சால் உயிர்ஜீவிகளை
நிர்மூலம் செய்வது போல
தீராத வேதனைகளைத் தருவிக்கும்.

கள்ளமில்லாக் கனவுகள் மீது
குரூரத்தின் திராவாகத்தைப் பெய்வது
சாதுவான நிலத்தைப் பிளந்து
சர்ப்பத்தின் விஷக்கொடுக்கை தீண்டுவது
கனிமரத்தைப் பூவும் பிஞ்சோடு
வேரோடு மண்ணோடு
பெயர்த்து வீசுவது
மனிதனை நீண்டு வாழவைப்பதில்லை..

மலரைக் கல்லால்
நசுக்குகிற
கொடூரமிது.

வசந்ததீபன்-இந்தியா

வசந்ததீபன்

(Visited 52 times, 1 visits today)