யாத்திராகமம்-கவிதை-வசந்ததீபன்

யாத்திராகமம்

வசந்ததீபன்

நிழல் வேண்டி
காற்று உச்சாடனம் செய்கையில்..
கள்ளிகள்
முகம் விரித்துச் சிரிக்கின்றன.

முட்செடிகள் சுரணையற்று
கூட்டாட்டம் நிகழ்த்துகின்றன.

தமக்குத் தாமே எச்சரித்தபடி
கழுதைப் புலிகள்
கண்ணீர் வழியத்
திரிகின்றன.

பொறி வண்டுகள்
கனவுகளைச் சவைத்துக் கொண்டு
படைபடையாய்
ஊறுகின்றன.

எலும்புத் துகள்களாய்
மிருகமும் மனிதமும்
இறைந்து கிடக்கின்றன.

புழுதிக் சுழல்கள்
சுழன்று சுழன்று
குழி பறித்து
விளையாடுகின்றன.

நரிகள் ஊளையிட்டபடி
உயிரைத் தேடுகின்றன.

தாவரங்களின்
பசுமை ஒளிவீச்சு
அணைந்த காலம்
மணல் வெளிகளாய்
பரந்திருக்கிறது.

ஈரமற்ற மேகங்கள்
வெற்று மின்னலை வீசி
ஒன்றுக்கொன்று
சபித்துக் கொள்கின்றன.

கழுகுகள்
பசி கிறக்கத்தில்
றக்கைகளை விசிறி
வெக்கையைத்
தூற்றுகின்றன.

தினம் கடந்து செல்லும்
ஒட்டகங்கள்
அன்றாடச் சுமையால்
இந்தக் காட்சிகளை
எப்போதும்
கவனித்ததேயில்லை.

0000000000000000000000000000

கனவுகளின் ஆல்பம்

வசந்ததீபன்

முதுமகள்
முடிக்கற்றையைத்
தட்டி முடிகிறாள்..
முதிர் புராதன சிரிப்பை
உதிர்க்கிறாள்..
விழிகளின் உக்கிரம்
கங்கென சுடர்கிறது..
நதிப் பெருக்கென
கால்வீசிப் போகிறாள்..

ஊடகங்கள் திகைத்து
திக்குமுக்காட
ஏழு டேரட் கார்டுகளுக்குள்
அரூபம்
புனைவாய்
பீறிட்டடிக்க
பிம்பங்கள் படபடக்க
கடகப் பெட்டிக்குள்
ஒளித்து வைக்கப்பட்ட
சோளக் கதிர் குலைகளில்
மஞ்சள் பூக்கள்
பூக்கின்றன.

குருதி நாற்றத்தை துடைத்தபடி
மேற்கு மலைக்காற்று
தித்திப்பை தூவுகிறது.

சாயைகள் கூத்தாடும்
சொல்வனத்தில்
மிருக மனித தாவர
மீஉயிர்களின் சாறு
வெற்று மனங்களில்
அதிர்வுகளாய் குமிழ் விடுகின்றன.

வங்கொலைகளின்
வாசனையை
நுகர்ந்தபடி
சதைத் துணுக்குகளைத் தேடி
எறும்புகள் திரிகின்றன.

அலறித்துடித்து அலைவுறும்
பாணன்
வரைபடங்களை
அழித்தபடி..
சமுத்ரங்களை எரித்து
சாம்பலாக்கியபடி..
திசைகளைக்
களவாடிக் கணாமல்
திகைக்கிறான்.

தாசிகளின் தாபம்
கிளைகிளையாகப் பிரிந்து
பூமியின் ஊடே
வேதனை துளிர்க்க
விரைகின்றன.

சயனித்து
உயிர்பூ பறிக்கும்
நிசப்த வேட்கை..
சவுக்கடிகளின் துவட்டலில்
வலிகளாய்.

தானியக் குதிரையில்
உருமாறிப் பயணிக்கிறது
அண்ரண்டாப் பட்சி…
கற்பனைகளின்..
இருள் ஒளி கலந்த..
பிரதேசத்தின்…
இனம்புரியாத
நீள்வெளிகளின்
ஆழங்களை நோக்கி.

காற்றில்
பூக்களின் ரம்மியங்கள்
நிரம்பித்
ததும்புகிறது

வசந்ததீபன் -இந்தியா

வசந்ததீபன்

(Visited 77 times, 1 visits today)