கார்த்திகைப் பெண்கள்- மொழிபெயர்புச் சிறுகதை-சிவகாமி விஜேந்திரா-தமிழில் ஸ்ரீரஞ்சனி

ஸ்ரீரஞ்சனிசிறிய ஏரி ஒன்றுக்குப் பக்கத்தில்தான் எங்களுடைய கூடாரத்தை நாங்கள் அமைத்திருந்தோம். பைன் மரமொன்றின் நீண்டு வளர்ந்திருந்த கிளைகளின் கீழ் அது நிமிர்ந்து நின்றிருந்தது. கடற்கரையில்லாத அந்த ஏரிக்கரையில் இருந்த தட்டையான, அழுத்தமான பாறையில் முட்டிமோதிக்கொண்டிருந்த அலைகள் மெல்ல மெல்ல அதை நனைத்துக்  கொண்டிருந்தன. வடக்கு ஒன்ராறியோ முழுவதும் இருக்கின்ற பாறைகள் எல்லாம் உறுதியான, மாற்றத்துக்கு உட்படமுடியாத இதைப் போன்ற பாறைகளாகத்தான் இருக்கின்றன போலிருக்கிறது. வீதிகளை உருவாக்கும்போது இவற்றில் சிலவற்றை டைனமைட் வைத்துத்தான் அகற்றுகிறார்கள். ஆனால், மரங்கள் எப்படியோ  அவற்றுக்குள்ளால் தங்களின் வேர்களை ஊடுருவி, வளமான மண்ணைக் கண்டுபிடித்து, வைராக்கியத்துடன் உயர்ந்து நிற்கின்றன.

கால்களைத் தண்ணீருக்குள் வைத்திருந்தபடி, ஏரியின் எதிர்க் கரையில் விட்டுவிட்டெரியும் campfiresஐப் பார்த்தபடி, அந்தப் பாறையில் ஜனனியும் ஜனுஜாவும் படுத்திருக்கிறார்கள். பொழுது சாய்ந்துகொண்டிருந்தது. ‘ஆடம்பர’ இரவு உணவான ramen நூடில்சைச் சமைப்பதற்காக தீச்சுவாலைகளால் ஏற்கனவே கறுத்துப்போயிருந்த பழையதொரு பானையில் தண்ணீரை நான் கொதிக்கவைக்கிறேன்.

யாழ்ப்பாணத்திலுள்ள கிராமம் ஒன்றில், அவரின் பிள்ளைப்பராயத்தில் அம்மா சாதாரணமாக மூட்டிய நெருப்பை, இங்கே பதப்படுத்தப்பட்ட உலர்ந்த பாஸ்ராவைச்சமைப்பதற்காக மூட்டுவதற்குப் போராடுவது எனக்கு எப்போதும் பிடித்தமானவொரு விடயம். ஒருவகையில் இதுவொரு முரண்நகைதான். கூடார வாழ்க்கைக்குப் பொருத்தமான, இலகுவான, மலிவான உணவு இதுதான். ஆட்டிறைச்சிக் கறி இல்லாதது எங்களுக்கு ஒரு பொருட்டாகவே இருக்கவில்லை. ஜனுஜா அவளது பல்கலைக்கழக நண்பர்களுடன் சேர்ந்து பெரும்பாலான இரவுகளில் சாப்பிடுற உணவும் இதுவாகத்தான் இருக்கும் என்றுதான் நான் நினைக்கிறேன்.

கூடாரமொன்றில் தங்கும் அனுபவம் ஜனுஜாவுக்கு இதுவரை கிடைத்திருக்கவில்லை. ஜனனி அவளின் வருங்காலக் கணவருடன் வன்கூவருக்கு போகப்போகிறாள். கலாநிதிப் பட்ட ஆய்வுக்காக நான் இலங்கைக்குச் செல்லப்போகிறேன். காலவோட்டத்துடனான எங்களின் பாதைகளில் பயணிக்க முன்னர் சகோதரிகளாக இணைந்து கடைசியாகச் செய்கிறது இதுவாகத்தான் இருக்கப்போகிறது. அம்மா அப்பாவை இங்கு கூட்டிவரவில்லை என்பதில் அவர்களுக்குக் கொஞ்சம் ஏமாற்றம்தான். ஆனால் நாங்கள் மூவரும் தனியாக இருப்பதற்கு இப்படியொரு நேரம், அதுவும் முக்கியமாக எனக்குத் தேவையாகயிருந்தது.

சற்று நேரத்தின்முன், கனமான பைகளை எங்களின் முதுகுகளில் காவியபடி நாங்கள் மூன்று பேரும் நீண்ட தூரம் மணிக்கணக்காக நடந்தோம். வழியிலிருந்த செங்குத்தாக குன்றுகளின் மேல் ஏறியபோதும், ஆழமற்ற நீர்நிலைகளைத் தாண்டிப் பாய்ந்தபோதும் விழுந்து போய்விடுவோமோ என எங்களுக்குப் பயமாகவிருந்தது. எங்களின் காலடிகள் எழுப்பிய பெரிய சத்தம்தான் கேட்டுக்கொண்டிருந்தது. தலைக்கு மேலிருந்த இலைகளின் மெல்லிய சலசலப்பு, கண்ணுக்குத் தெரியாத பறவைகளின் குரல்கள் போன்ற மென்மையான ஒலிகளைக் கேட்பதற்காக நாங்கள் நின்று நிதானித்து நடந்தோம்.

கடைசியில், வீதிகளிலிருந்தும், மின் இணைப்புக்களிலிருந்தும் தொலைவிலிருக்கும், செல்போன் சிக்னலோ, குழாய் நீரோ கிஞ்சித்தும் கிடையாத, இந்த மரக் காட்டுக்குள் நாங்கள் வந்துசேர்ந்தோம். ஏரி நீரைப் பயன்படுத்துவதற்காக அதைச் சுத்திகரிக்கும் மாத்திரைகளையும், அந்த மாத்திரைகள் வேலைசெய்யாவிட்டால் வரக்கூடிய வயிற்றுக் கோளாறுகளைச் சமாளிப்பதற்கான மருந்துகளையும் நாங்கள் கொண்டுவந்திருக்கிறோம்.

போன இலையுதிர்காலத்தின்போது பைன் மரங்களிலிருந்து உதிர்ந்திருந்த ஊசி இலைகளால் மூடப்பட்டிருந்த தரை பாதங்களுக்கு மிகவும் மென்மையாக இருந்தது. ஏரியில் ஆர்ப்பரித்த அலைகளின் ஒலி மனதை ஆசுவாசப்படுத்தியது. இதனை ஒரு அசல் புதர்க்காடு என்று சொல்லமுடியாது. நடப்பவர்களுக்கு வழிகாட்டுவதற்கென அடையாளப்படுத்தியிருந்த வழியில்தான் நாங்கள் நடந்தோம். நன்றாகத் துப்பரவாக்கப்பட்ட இடமாகத்தான் இது இருக்கிறது. இந்த இடத்தைப் பராமரிக்கிறவர்கள் படகில் வந்து விறகு தருவார்கள், அதனால் மரங்களை வெட்டவேண்டிய தேவை எங்களுக்கு இருக்கவில்லை, இருப்பினும் மரங்களின் பின் ஒதுக்குப்புறமாக அமைந்திருந்த இந்த இடம், போதுமானளவு தொலைவிலும் தனிமைப்படுத்தப்பட்டும் இருப்பதால் காட்டுக்குள் இருப்பதைப் போலத்தான் இருக்கிறது, அதனால் சுதந்திரமாக இருப்பதாகவே நான் உணர்கிறேன்.

“கனடாவை இப்பிடித்தான் நான் இவ்வளவு நாளும் கற்பனைசெய்து பாத்தனான்”, நெருப்பருகே என்னுடன் இணைந்துகொண்ட ஜனுஜா சொல்கிறாள்.

“என்ன ? ஓ! ஒதுக்குப்புறமாக இருக்கிற ஏரிக்கருகிலை தீமூட்டி குளிர்காய்கிறதைச் சொல்கிறியோ?”

இரண்டு பேருமாகச் சேர்ந்து கொதிநீர் இருந்த அந்தப் பானையை நிலத்தில் இறக்கி, அதற்குள் நூடில்சைப் போடுகிறோம்.

“அற்புதமா இருக்கு, கனடாவிலை நகரங்கள் இருக்குதுதான், ஆனா உண்மையிலை கனடா எண்டதும் எனக்கு உடனை நினைவுக்கு வாறது இந்த நில அமைப்புதான்.”

“நீண்டகால வரலாறுகளைக் கொண்ட நாடுகளில கனடாவில இல்லாத மில்லியன் கணக்கான மனித சரித்திரங்கள் இருக்குது. பண்டைய காலத்துக் கட்டிடங்கள், ஓவியங்கள், போரைப் பற்றின கதையள் … ஆனா எங்கடை ஆதிக்குடிகளின்ரை கதை வெறும் வாய்மொழி வரலாறாத்தானே இருக்கிறதாலை ஆயிரம் வருஷங்களுக்கு முதல் என்ன நடந்தது எண்டதைச் சுட்டிக்காட்டுறது வலு கஷ்டம். அதாலை பதிலுக்கு எங்கடை அடையாளத்தை நாங்க இயற்கையிலிருந்துதான் பெற்றுக்கொள்ளுறம் … அப்பிடித்தான் நான் நினைச்சுக்கொண்டிருந்தனான்,” நான் சொல்கிறேன்

“அதுதான் உன்ரை தியறியா இருந்ததெண்டால் இப்ப உன்ரை தியறி என்ன ?”

“ம், எனக்குத் தெரியேல்லை. இலங்கையைப் பற்றி யோசிக்கேக்கை அது பிழைக்குது எண்டது இப்பத்தான் எனக்கு விளங்குது. அந்தக் காலத்து நகரங்கள் எத்தினையோ இருக்கேக்கை  அந்தத் தென்னை மரங்களும் மோதுற அலையளும்தான் முதலிலை எனக்கு நினைவுக்கு வருது.”

“அதெல்லாம் காலனித்துவமும், சுற்றுலாத் துறையும் உன்னிலை திணிச்சிருக்க பிம்பங்கள். அதெல்லாத்தையும் விட்டிட்டு ஒரு செக்கனுக்கு யோசித்துப்பார், உண்மையிலை உனக்கு எந்தப் பிம்பம் தெரியுது.?”  நான் சொன்னதில் எந்த அர்த்தமுமில்லை என்பதை வெகு இயல்பாக ஜனுஜா சொன்னாள்

வெறுங்காலுடனும், பின்னலுடனும் நின்ற, கோடை வெய்யிலால் கொஞ்சம் கறுத்திருந்த அவளை நான் பார்க்கிறேன், பின்னர் கண்களை மூடிக்கொள்கிறேன்.  “ம்… ஆட்கள். தென்னை மரத்துக்குக் கீழை, அலைகளைப் பாத்தபடி.”

“பாத்தியோ !” அவள் முறுவலிக்கிறாள்.

“ஜயந்தி, நீங்க ரண்டு பேரும் கதைச்சதெல்லாம் எனக்கும் கேட்டுது,” ஏரிக் கரையிலிருந்தபடி ஜனனி கூறுகிறாள். “இயற்கையிலிருந்து எங்கடை அடையாளத்தை எடுக்கிறமெண்டு நீ சொல்லுறாய், அப்பிடியெண்டால் முடிவில உன்னை நீ கனேடியனாகப் பாக்கிறியோ?”

“சொல்லத் தெரியேல்லை. எந்த இடத்தையும் நான் சார்ந்தவளில்லை எண்ட உணர்விலை இருந்து விடுபடுறதுக்கு நான் முயற்சிக்கிறேன்.” நான் சொல்கிறேன்.

அவளுக்குச் சந்தோஷமாக இருந்தது. “அப்ப நீ இலங்கைக்கும் சொந்தமானவள் எண்டு நினைக்கிறியோ?”

“அது தமிழருக்குச் சென்சிற்றிவான ஒரு விஷயமல்லோ ?” நான் சொல்கிறேன்.

“நாங்க எல்லாரும் குடும்பமாய்ப் போகேக்கே விசிற்றராய்த்தானே போயிருந்தம், ஆனா இப்ப நீ அங்கை இருக்கப்போறாய். எனக்கும் வரோணும்போலை கிடக்கு.”

நாங்கள் இலங்கையை விட்டு வெளியேறியபோது ஜனுஜாவுக்கு ஒரு வயது, எனக்கு ஐந்து வயது, ஆனால், ஜனனிக்கு ஒன்பது வயது. ஞாபகங்களையும் அடையாளங்களையும் நினைவு வைத்திருக்கக்கூடிய வயது அவளுக்கு. தமிழ் மற்றும் கனேடிய அடையாளங்களில் ஒன்றிலிருந்து இன்னொன்றுக்குச் சுலபமாக மாறிவிட அவளால் முடிகிறது. ஆனால் எனக்கோ இரண்டுக்கும் நடுவில் சிக்கிப் போயிருப்பதுபோல இருக்கிறது. அவள் பரதநாட்டியம் ஆடுகிறாள் கூடைப்பந்து விளையாடுகிறாள்; நன்றாக அப்பம் சுடுகிறாள், முறையாகச் சீலை கட்டுகிறாள், பிறகு canoeing, rock-climbing என்றெல்லாம் பொழுதைப் போக்குகிறாள். இது எதையும் நான் செய்கிறதில்லை, எதைச் செய்தாலும் அது பொய்யாகத்தானிருக்கு. போன மாதம் அவளுக்கும் சீனக்-கனேடியர் ஒருவருக்கும் இந்துமுறைப்படியிலான திருமணம் நடந்தது. கனேடியப் பன்முகத்தன்மையின் முழுமையானதொரு வெளிப்பாடாகவும், புலம்பெயர்ந்தவர்களின் ஒன்றிணைப்பாகவும் அது இருந்தது.

“நீயும் வந்தா நல்லம். உன்ரை மனிசனையும் கூட்டிக்கொண்டு வாவன்,” நான் சொல்கிறேன். “அவைக்கு உன்னைப் பிடிக்கும். எனக்குத்தான் தமிழிலை கதைக்கத் தெரியாது.”

“எனக்கும் வர ஆசையாக இருக்கு,” என்கிறாள் ஜனுஜா. “பள்ளிக்கூடம் இல்லையெண்டால் எவ்வளவு நல்லாயிருந்திருக்கும். ஆனா ஜயந்தி, நாங்க எவ்வளவு தமிழ் கதைக்கிறமெண்டு ஆர் கவலைப்படப்போயினம்? நாங்க தமிழர், அந்த நாட்டைச் சேர்ந்தனாங்கள், அதைப் போலத்தான்  நாங்க கனேடியர், இந்த நாட்டைச் சேர்ந்தனாங்கள்.”

ஜனனி சிரிக்கிறாள்.  “உன்னைப்போலை குழம்பிக்கொண்டிருக்காம தன்ரை அடையாளத்தை எப்பிடி ஜனுஜாவால் இப்பிடி லேசா அங்கீகரிக்கமுடியுது?”

“ஏனெண்டால் மற்றவை என்ன நினைக்கினம் எண்டதைப் பற்றி எனக்கு அக்கறையில்லை”, என்ற ஜனுஜா, “அவையின்ரை வரைமுறையளுக்கை இல்லையெண்டதாலை நான் ஒரு கனேடியனா இல்லை எண்டோ, அல்லது ஒரு தமிழராக நடக்கேல்லை எண்டோ எனக்குச் சொல்றவை இனவெறி பிடிச்ச ஆட்களின்ரையும், காலனித்துவ அடக்குமுறையின்ரையும் பாதிப்பைத்தான் காட்டுகினம். அவை என்னத்தையும் சொல்லிப்போட்டுப் போகட்டும் எண்டு நினை,” என்கிறாள்.

“சொல்லுறது சுகம், குட்டி,” இப்படியான விடயங்களை அவள் கதைக்கும்போது எனக்கு வழமையில் வருகின்ற சோர்வைத் தவிர்க்கும் முயற்சியுடன் நான் சொல்கிறேன்.

நான்கு, ஐந்து வருடங்களுக்கு முன்பு, பல்கலைக்கழகத்தில் படித்தபோது இப்படித்தான் நானும் நினைத்தேன். ஆனால், ‘அமைப்புரீதியான’ விடயமென்று எங்களுக்குச் சொல்லித்தரப்படும் விடயங்களுக்கு எதிராக எதிர்க்கவேண்டுமென்ற நினைப்புடன் எப்போதும் தொடர்ந்து போராடுவதும், சந்தேகம் வந்தாலும் தன்னம்பிக்கையான ஆள்போல காட்டிக்கொள்கிறதும் இலேசான விடயமில்லை.

ஜனனி தனது அடையாளத்தை இலகுவாக, இயல்பாக எடுத்துக்கொள்கிறாள். ஆனால், ஏதோ ஒரு கனமான, கவசத்தைப் போட்டிருக்கிற மாதிரி ஜனுஜா இருக்கிறாள் என்பது போலத்தான் எனக்குத் தெரிகிறது.

நூடில்ஸ் தயாராகிவிட்டது. நாங்கள் மெளனமாகச் சாப்பிடுகிறோம்.

“இருந்தாலும், எல்லாத்தையும் போட்டடிக்கப்போறன் எண்டு எனக்கு உண்மையிலேயே பயமா இருக்கு,” முடிவில் நான் சொல்கிறேன். “நான் ஒரு வெளி ஆள், அதுவும் போர் அனுபவம் இல்லாத ஒரு ஆள், இலங்கைக்குப் போய் நிண்டுகொண்டு, அவையின்ரை கதைகளைப் பகிர்றதுக்கு உதவிசெய்யப் போறன் எண்டு என்னெண்டு சொல்லுறது? போதாததுக்கு, உலகத்தின்ரை மற்றப்பக்கத்திலை இருக்கிற ஒரு பல்கலைக்கழத்திலை படிக்கிற படிப்புக்காண்டி அந்தக் கதைகளை நான் பகிரப்போறன்! அவையளை நான் பிழையா விளங்கினா என்ன செய்யிறது. அல்லாட்டி அவைக்கு என்னை விளங்காமப்போனா என்ன செய்யிறது. நான் ஏதேனும் பிழையாச் சொல்லிட்டா என்ன நடக்கும்?”

“ஜயந்தி, நீ வெளி ஆளில்லை,” ஜனனி மென்மையாகச் சொல்கிறாள். “உன்னைச் சந்திக்கிறது அவைக்கு நல்ல விருப்பமா இருக்கும். அவையின்ரை பிரச்சினையளிலை கரிசனைகாட்டி அவையின்ரை கதையளை உலகத்தின்ரை மற்றப்பக்கத்திலை இருக்கிற ஆட்களும் அறிகிறமாரி நிறையப் பேர் எழுதுறதுதான் அவைக்குத் தேவை. போர் எல்லாரையும் பாதிச்சிருக்கு … உலகம் முழுக்கப் புலம்பெயர்ந்த ஆட்கள் இருக்கினம்.”

“சரியான முறையிலை தேத்தண்ணியைக் குடுக்கிறதுக்கோ, வேறு எதையும் ஒழுங்காகச் செய்யிறதுக்கோ எனக்குத் தெரியாது எண்டது எவ்வளவு வெட்கக்கேடு எண்டு எங்கடை மாமா, மாமியவை சொல்லுறதுதான் எந்த நேரமும் என்ரை மனசிலை ஓடிக்கொண்டிருக்கு.”

நாங்கள் மெளனமாக உட்கார்ந்திருக்கிறோம், எங்களின் கிண்ணங்களை எங்களின் முள்ளுக்கரண்டிகள் முட்டும்சத்தம் மட்டும் கேட்டுக்கொண்டிருக்கிறது.

“நாங்க இலங்கைக்குப் போனநேரத்திலை அங்கையிருந்த மாமா, மாமிமார் எல்லாம் எவ்வளவு நல்லா நடந்துகொண்டினம் எண்டது உனக்கு நினைவிருக்கோ ?” ஜனுஜா கேட்கிறாள்.

“இங்கையிருக்கிற தமிழரைப்போல சின்னச் சின்ன விஷயங்களை அவை தூக்கிப்பிடிக்கிறேல்லை. தொன்மையான கலாசாரங்களையும், நீண்டகால வரலாறுகளைக் கொண்ட நாடுகளிலை இருக்கிற ஆட்களைப் பற்றி என்னட்டை ஒரு தியறி இருக்கு, ஜயந்தி. அவையின்ரை கலாசாரத்தையும் மொழியையும் திட்டமிட்டு அழிக்கிற வலுவான சக்திகளைப் பற்றித்தான் அவை அதிகமாக் கரிசனைப்படுகினம். அதற்காண்டித்தான் அவை உண்மையில போராடினம், அதாலைதான் அங்கை ஒரு  போர் நடந்தது. ஆனா தனிப்பட்ட ஆள் மட்டத்தில அது பெரிய விஷயமா அவைக்குப் படுறேல்லை. தேத்தண்ணியை எப்படிக் குடுக்கிறது எண்டோ சரியான தமிழ் உச்சரிப்பு எது எண்டோ சின்னச் சின்ன விஷயங்களைப் பற்றி அவை அலட்டிக்கொள்றேல்லை. நீ முயற்சிக்கிறாய் எண்டதைப் பார்க்கிறதே அவைக்கு மகிழ்ச்சியாயிருக்கும். உண்மையிலை நீ அவையின்ரை கதைகளை அறிய விரும்புறாய், அதெல்லாம் உன்ரை கதையும்தானே, எங்கடை கதைகள். சமரசத்தைப்  பற்றி யோசிக்கேக்கே அதுவும் முக்கியம்.”

“அதுவும் முக்கியம்தான்,” ஜனனி தனக்குத்தானே திரும்பிச்சொல்லிக் கொள்கிறாள். அவளுக்குப் பின்னால் அந்த ஏரி தொடர்ந்தும் அமைதியாகச் சுரம் இசைத்துக் கொண்டிருக்கிறது. அங்கிருக்கும் ஆர்ப்பரிக்கும் அலைகளை நான் மீளவும் நினைத்துப் பார்க்கிறேன். இலங்கையிலுள்ள தண்ணீர் இங்கிருக்கும் இந்த தண்ணீரை விட எவ்வளவோ வித்தியாசமானது, ஆனால் இரண்டுமே தண்ணீர்தான்.

சூரியன் மறைய ஆரம்பிக்கிறது. நாங்கள் நெருப்பை அணைத்துவிட்டு, வடக்கு வானத்தின் அனைத்து நட்சத்திரக்கூட்டங்களுக்கும் பெயரிட்டவாறு மல்லாந்தபடி படுத்துக்கொள்கிறோம். அவற்றில் சிலவற்றை நான் அங்கு பார்க்கமுடியாது என்றாலும் சிலவற்றைப் பார்க்கமுடியும்.

“சகோதரிகள்” எனப்படும் நட்சத்திரக்கூட்டமான கார்த்திகைப் பெண்கள், இன்றிரவு குறிப்பிடத்தக்களவு பிரகாசமாக ஒளிர்கின்றன.

கனடா தமிழ் மிரர் நடத்திய சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு பெற்ற சிறுகதை -2012

மூலம் : சிவகாமி விஜேந்திரா

சிவகாமி விஜேந்திரா

தமிழில் – ஸ்ரீரஞ்சனி

ஸ்ரீரஞ்சனி

0000000000000000000000000000000

எழுத்தாளர் பற்றிய சிறு குறிப்பு :

சிவகாமி விஜேந்திராயாழ்ப்பாணத்தில் பிறந்த சிவகாமி அவரது ஐந்தாவது வயதில் கனடாவுக்குப் புலம்பெயர்ந்திருந்தார். கனடாவிலும் பிற நாடுகளிலும் வெளிவரும் செய்தித்தாள்கள் மற்றும் சஞ்சிகைகளில் அவரது கதைகள் மற்றும் கட்டுரைகள் பிரசுரிக்கப்பட்டிருக்கின்றன. ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்த இந்தக் கதை 2012 இல் தமிழ் மிரர் நடத்திய சிறுகதை போட்டியில் முதல் பரிசைப் பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீரஞ்சனி-கனடா

 

(Visited 156 times, 1 visits today)