கடைசித்தரிப்பிடம்-THE LAST HALT-விமர்சனம்-சீனா தானா

 

சீனா தானாஈழசினிமா ஒன்று திரையிடப்படுவதாக இருந்தால் அதற்கு பார்வையாளர்களென ஏற்கனவே குறும்படங்கள் செய்வோரும், அஞ்சாறு இலக்கியவாதிகளும், இந்த ‘ஈழ’சினிமா என்று சொல்வதனால் கொஞ்சம் தேசப்பற்றாளர்களும், ஒண்டிரண்டு ஆர்வலர்களுமென ஏற்கனவே தெரிந்த முகங்கள் அம்பதறுபதுபேர் மட்டுமே வந்திருப்பார்கள். வருவோரும் இது எப்பிடி எடுத்திருக்கிறாங்கள், என்ன பிழை விடப்பட்டிருக்கு, எது நல்லாயிருக்கு எதைப்பாராட்டலாம் எதைக்கழுவி ஊத்தலாம் என்ற விமர்சனப்பார்வையிலேயே இருப்பார்கள். நகைச்சுவை காட்சிகளில்கூட வெள்ளைக்காரர்கள் போல மூக்கினால் மட்டும் சிரிப்பார்கள். படம் முடியும்வரை அனேகமாக மௌனமாகவே அரங்கம் இருக்கும்.

எற்றெர்னல் ஐகோன் தயாரித்து கொற்பிரின்ற் வெளியிட்டிருந்த, சுயீத் இயக்கி லண்டனில் படமாக்கப்படிருக்கும் ‘கடைசித்தரிப்பிடம்’ திரைப்படம் ஈழத்தமிழர் திரைப்பட சங்கத்தினரால் பாரிசில் கடந்த 13/11/2016 மாலை 04:00மணியளவில் திரையிடப்பட்டது. 03:00மணிக்கே ரசிகர்கள் வரிசைகட்டத்தொடங்கிவிட்டார்கள். சுமார் 200 இருக்கைகள் கொண்ட திரையரங்கில் இருக்கைகள் நிரம்பி பலர் தரையில் இருந்தும் நின்றும் பார்வையிட்டார்கள்.

நேரடியாக திரையிடாமல் அகவணக்கம், அறிமுகம், பாராட்டுகள் என வைபவரீதியாக ஆரம்பித்தார்கள் ஈழத்தமிழர் திரைப்பட சங்கத்தினர். திரையிடல், நிகழ்வுகளால் தாமதமாக, “நாலுமணியாச்சுடா…” , “படத்தப்போர்ர்ர்றா…” என்று ரசிகர்கள் கூக்குரலிட்டும் விசிலடிக்கவும் தொடங்கிவிட்டனர்.

தொடர்ந்து படம் திரையிடப்பட்டது. பாஸ்கி திரையில் தோன்றியதும் அவர்பெயரை கூவி அழைத்தும் விசிலடித்தும் கிங்கொங் எனும் கதாபாத்திரம் வருமிடத்து ஆரவாரித்தும், காட்சிகளுக்கேற்ப கைதட்டியும் அரங்கதிர சிரித்தும், அழுத்தமான மௌனமுமாக ஒரு ரசனையான அனுபவமாக இருந்தது.

படம் முடிவடைந்த பின்னர் படக்குழுவை சேர்ந்த இயக்குனர் சுயீத், நடிகர் பாஸ்கி , இசையமைப்பாளர் திசாந்தன் ஆகியோர் மேடையேறி பட அனுபவங்களை பகிர்ந்துகொண்டனர். பார்வையாளர்கள் பலரும் விமர்சனங்களும், வாழ்த்துகளும், பாராட்டுகளும் தெரிவித்தனர். இனி நாங்கள் கடைசித்தரிப்பிடத்திற்குள் நுழைவோம்.

0000000000000000000000000000000

சீனா தானாஇலங்கையிலிருந்து லண்டனுக்கு வரும் ஒரு இளம்பெண் அவளது கடைசித்தரிப்பிடம் நோக்கிய குறுகியகாலப்பயண இடைவெளியில் எதிர்கொள்ளும் சம்பவங்களின் தொகுப்பே ‘கடைசித்தரிப்பிடம்’ திரைப்படம். பெண்கள், தாம்சார்ந்த சமூகத்தில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் சிலவற்றை காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.

பிரதான பாத்திரமான ‘நிலானி’யாக நடித்திருக்கும் பிரியசா தனது மிகச்சிறந்த நடிப்பாற்றலை வெளிப்படுத்தியிருக்கிறார். அவருக்கேற்படும் ஒவ்வோர் உணர்வுநிலைகளையும் பார்வையாளர்களுக்கே கடத்திவிடுமளவுக்கு மிகையற்று நடிப்பு இயல்பாக அமைந்திருக்கிறது.

அன்ரனாக நடித்திருக்கும் பாஸ்க்கி(மன்மதன்) தானொரு தேர்ந்த நடிகனென்பதை நிரூபித்திருக்கிறார். நகைச்சுவை கலந்த அலட்சியமான, அவருக்கான தனித்துவமான வார்த்தைவெளிப்பாடுகள் இந்தப்படத்திலும் உண்டு. ஒரு வர்த்தகசினிமா நாயகனாக பெருவளர்ச்சியடைந்திருக்கின்றார். அவர் திரையில் தோன்றும் போது ஆரவாரிக்கும் திரையரங்கு அவரது வளர்ச்சியை மட்டுமன்றி, ஈழசினிமா வளர்ச்சியையும் பறைசாற்றுகிறது.

“படிக்கிற காலத்திலதான் சத்தோசமா இருந்தனான், உமக்கு அதுவுமில்லை…” என்பதும், வீட்டைவிட்டு வெளியேற்றுவதும், நிலானியில் பரிதாபப்படுவதும் பின்னர் அவள்மீது கோபப்படுவதுமென அக்கா பாத்திரத்திரமும் சிறப்பாக படைக்கப்படிருக்கிறது. அக்காவாக நடித்திருக்கும் ரேணுகா ஏற்ற உணர்ச்சிவெளிப்பாட்டு மாற்றங்களுடன் நடிப்பினை வழங்கியிருந்தார்.

கிங்கொங் வரதனாக வரும் ரூபன் நிலானியை காதலிப்பதாகச்சொல்லி  துரத்தித்துரத்தி இடைஞ்சல் கொடுக்கிறார். அவரது பாத்திரத்தை இன்னும் கனதியாக்கியிருக்கலாம்.

திரையில் தோன்றும் நடிகர்கள் எல்லோரையுமே நினைவில் வைத்திருக்கக்கூடியளவில் அனைவரது நடிப்பும் மெச்சக்கூடியவகையில் அமைத்திருக்கிறார் இயக்குனர்.

தெரிந்த பாடல் எதையும் சட்டென நினைவுக்கு கொண்டுவராத தனித்துவமான பின்னணி இசை கோர்த்திருக்கிறார் இசையமைப்பாளர் திசாந்தன். இவரே ஒலிப்பதிவையும் மேற்கொண்டிருக்கிறார்.

சமையலறை, குளிரூட்டி, நகரவீதியென அந்தந்த இடங்களின் இயல்பான நேரடிச்சத்தங்களை இரைச்சலின்றி துல்லியமாக பதியப்பட்டிருக்கிறது. நிகழ்விட ஒலிகளுடன் அதிக கருவிகளை பாவிக்காமல் அளவோடும் அவசியமான இடங்களில் மௌனித்தும் உறுத்தாத மெல்லிய பின்னணி இசையமைப்பை செய்திருக்கிறார்.

சீனா தானாலன்டன் தேசத்துக்கு வந்தபுதிதில் நாயகி நடந்து அலையும்போது, அந்த இடத்தின் குளிரை திரையரங்கத்திற்கே கூதலடிக்க வைத்துவிடுகிறது சிவா சாந்தகுமாரின் ஒளிப்பதிவு. இயற்கை மீறாத ஒளிச்சேர்க்கைகளுடன் சூழலை உணர்விக்கும் ஒளிப்பதிவு பாராட்டுக்குரியது. ஆனால் படத்தொகுப்பில் கூடுதல் கவனமெடுத்திருக்க வேண்டும். காட்சி மாற்றங்களும் கண்களை உறுத்துகின்றன.

‘வின்ரர் வந்தா சம்மர் வருந்தானே’ என்று வசனம் வந்தாலும் மேலும் குறிப்பிடக் கூடிய வசனங்களில்லை. எனினும்,  நாயகிக்கு வழியேதும் இல்லையெனும்போது அவர் பின்னால் மூடிக்கொண்டிருக்கும் கதவு(சட்டர்). அன்ரனின் திட்டம் தெரியும்போது எச்சரிக்கும் கைகழுவும் படமென குறியீடுகளையும் பயன்படுத்த தவறவில்லை. ஒவ்வொரு காதாபாத்திரமும் அந்தந்த சூழலுக்கேற்றவகையில் இயல்பான ஒப்பனையும் உடையலங்காரமுமென மிக நேர்த்தியாக கவனிக்கப்பட்டுள்ளது. பேச்சுமொழியில் வசனவெளிப்பாடுகள் அமையவேண்டும் என முயற்சித்து வெற்றிகண்ட இயக்குனர், கதாநாயகி பேசும் புலம்பெயர் இரண்டாந்தலைமுறையினரின் தமிழை தவிர்த்திருக்கவேண்டும்.

சீனா தானாசொல்லிசைப்பாடல்கள், குறும்படம் என அறிமுகமான சுயீத்  இயக்கியிருக்கிறார். பெண்களின் பலவீனங்களை அல்லது இயலாமையை பயன்படுத்த முயற்சிக்கும் ஆணாதிக்க சிந்தனை உலகினை உறுத்தாத காட்சிகளூடு உண்மைக்கு நெருக்கமாக பதிவுசெய்திருக்கிறார் (பெண்ணியம் அல்ல). சுயீத்தின் முதலாவது திரைப்படம் இதுவாக இருந்தாலும் தேர்ந்த இயக்குனராக பார்வையாளர்களை கடைசித்தரிப்பிடம் வரையும் கூட்டிச்செல்கிறார்.

0000000000000000000000000000000

முடிவு :

‘எம்மவர் எமது சினிமாவை ஆதரிப்பதில்லை’ என்ற கூற்றை பொய்யாக்கியது ரசிகர்கூட்டம். பிரம்மாண்டமோ தொழில்நுட்பமோ எம்மவர் எதிர்பார்ப்பதில்லை. காத்திரமான படைப்புகளை கவனிக்கத்தவறுவதுமில்லை.

சீனா தானா-பிரான்ஸ்

(Visited 50 times, 1 visits today)