தமிழகக் காவடிகளும் ஈழத்துத் தாளங்களும்-கட்டுரை-சாத்திரி

01 முதலில் தமிழகக் காவடிகள் ….

இதுவரை காலமும் ஈழம் சம்பத்தப்பட்ட என்னுடைய அனைத்துக் கட்டுரைகளிலும்  இந்திய தலையீடு அல்லது அவர்களின் நிலைப்பாடு பற்றி எழுதும்போதெல்லாம், இந்திய அரசியல் கட்சிகளின் தலைமைகளைப் பாரபட்சமின்றி காட்டமாகவே விமர்சித்துள்ளேன்.ஆனால் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைமை பற்றி எழுத நினைக்கும்போதெல்லாம் என்னையறியாமலேயே எனக்குள் ஒரு மென்போக்கு வந்துவிடும்.காரணம் திருமாவால் ஈழத் தமிழருக்கு நன்மைகள் கிடைத்துவிடும் என்றோ இல்லை அவர்களது அரசியலில் எதவாது மாற்றம் நிகழ்ந்துவிடும் என்கிற காரணங்கள் எதுவும் கிடையாது.அப்படி எதுவும் நடக்கப்போவதுமில்லை.ஆனால் தமிழக அரசியலை நன்கு அறிந்தவன்  என்கிற முறையில் தமிழகத்து அரசியலுக்கு திருமாவின் பங்கு முக்கியம் என்கிற ஒரேயொரு காரணமே அந்த மென்போக்கு.

அவ்வப்போது எங்காவது ஒரு மேடையில் “பிரபாகரன் திரும்ப வருவான் ……5 ம்கட்ட ஈழப்போர் வெடிக்கும் ……….தமிழீழம் மலரும்…….அது மலர்ந்ததும் அதைப் பிடுங்கி நாங்கள் மாலையாபோட்டுக்கலாம்” என்று மற்றவர் காதில் பூ வைக்கும் அவரது  வெறும் வெட்டிப்பேச்சுக்களை கேட்கும்போதேல்லாம் எரிச்சலாகவே இருக்கும்.அண்மைக்காலமாக அதனை குறைதுக்கொண்டுள்ளது மகிழ்ச்சியான விடயம்.

ஆனால் சமீபத்தில் லைக்கா நிறுவனத்தின் அனுசரணையில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடுகள் வழங்கும் நிகழ்வுக்கு நடிகர் ரஜனி இலங்கை செல்லவுள்ளார் என்கிற செய்தியறிந்ததுமே தமிழகத்தின் அரசியலில் சோளக்கொல்லை பொம்மையாகிவிட்ட வை.கோ வோடு சேர்ந்து திருமாவும்,கூட்டத்தோடு கோவிந்தா என்பதுபோல தமிழக வாழ்வுரிமைக் கட்சி  வேல்முருகனும் நடிகர் ரஜனி இலங்கை செல்லக் கூடாது என எதிர்த்து அறிக்கைகள் விட்டார்கள்.

எப்போதுமே தன் படங்களில் மட்டும் உசுப்பேற்றும் வீர வசனங்களை பேசிவிட்டு தனக்கு பிரச்சனை என்று வரும்போது ஆமை தலையை இழுப்பது போல இழுத்துக்கொள்ளும் ரஜனியோ இந்த விடயத்திலும் தலையை உள்ளே இழுத்துக்கொண்டு இலங்கைப் பயணம் ரத்து என அறிக்கை விட்டார்.அதனை வரவேற்று திருமா விட்ட அடுத்த அறிக்கையில் “ஐநா மனித உரிமைகள் மன்றத்தில் இலங்கை இனவெறி அரசை நாற்பதுக்கும் மேற்பட்ட நாடுகள் கண்டித்துள்ளன. ரஜினிகாந்த இலங்கை வருவது, தமிழர் விரோத நடவடிக்கைகளை மூடிமறைக்கும் இலங்கை இனவெறியர்களின் முயற்சிக்குத் துணை போவதாக அமைந்து விடும்.எனவே ரஜனியின் அறிவிப்பு மகிழ்ச்சியளிக்கிறது”.என்றொரு “அடடே”..  காரணத்தை சொல்லியிருந்தார்.இவர் ஐ. நா. சபையால் வெளிவிடப்படும் செய்திகளை படிப்பதேயில்லை என்பது மட்டும் புரிந்தது .

இறுதி யுத்தம் நடந்து முடிந்து இத்தனை ஆண்டுகள் கழித்து ரஜனி இலங்கை செல்லும்போது திடீரென ஈழத் தமிழர்மேல் இத்தனை அக்கறை வந்த திருமாவுக்கு யுத்தம் முடிந்த ரணமும் வலியும் ஆறமுதலே இலங்கை சென்று யுத்தத்தை நடத்தி முடித்த மகிந்தாவோடு கை குலுக்கி விருந்துண்டபோது எங்கே போனதென்று அவரே சொல்லவேண்டும். கேட்டால் மகிந்தா பரிசாக கொடுத்த தேயிலை டப்பாவை கொண்டுவராமல் ரோசத்தோடு அங்கேயே எறிந்துவிட்டு வந்தாராம்.

ஆனால் இலங்கையில் நடந்து முடிந்த முப்பதாண்டு உள் நாட்டு யுத்தம் அங்கு வாழும் தமிழர்களுக்கு மட்டுமல்ல சிங்களத்தலைமைகளுக்கும் ஒரு பாடத்தை கற்றுக்கொடுத்துள்ளது.”தமிழக தலைவர்களின் ஈழம் பற்றிய வெடிப் பேச்சுக்கள் எல்லாமே வெறும் புஸ்வாணம் என்பது மட்டுமல்ல அவர்கள் “கோமாளிகள்” என்பதே…அதனை பகிரங்கமாகவே சிங்கள தலைமைகள் சொல்லியுமிருகிறார்கள். ஈழத் தமிழனுக்காக தமிழகத்தில் உணர்ச்சிவசப்பட்ட அப்பாவித் தமிழன் தீக்குளிப்பன்.அவனது மரண வீட்டில் நின்றுகொண்டு அரசியல்வாதி அறிக்கை விடுவான் அவ்வளவுதான் அவர்களால் முடியும்.

அதற்கும் ஒரு படி மேலே போனால் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றுவார்கள்.கடந்த காலத்தில் ராஜபக்சேவை போற்குற்றவாளி என அறிவித்து தூக்கில் போடவேண்டுமென ஜெயா அம்மையாரும் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியிருந்தார் .அதனைக் கூட ஈழத் தமிழர்கள் நகைச்சுவையாகத் தான் பார்த்தார்கள். சிங்கள பத்திரிகையொன்று அவரைப்பற்றி மோசமான கேலிச்சித்திரத்தை வரைதிருந்தது அதற்கு கூட காத்திரமான எதிப்பை காட்ட முடியாது  இரும்பு பெண்மணி என அறியப்பட்டவர் ஈயமாய் வளைந்து நின்றார் .

இப்போதெல்லாம் ஈழத்தமிழ் அரசியல் வாதிகளுக்கும் தமிழக அரசியல் வாதிகளுக்குமான உறவு என்பதும்  யாராவது பதவிக்கு வந்தால் வாழ்த்து சொல்வது.இறந்துபோனால் இரங்கல் தெரிவிப்பது.என்கிற சம்பிரதாயங்களோடு நின்றுவிடுகிறது.அப்படியே இருப்பதும் தான் நல்லது ..

000000000000000000000000

02 அடுத்து ஈழத்துத் தாளங்கள் …..

ரஜனியின்  இலங்கை வரவு தமிழக நிலைமை ஒருபக்கத்தால் போய்க்கொண்டிருக்கும்போது அவர் வரவில்லையென அறிக்கை வெளியானதுமே அவசர அவசரமாக யாழ்ப்பாணத்தில் திருமாவையும் வேல்முருகனையும் கண்டித்து சுவரொட்டிகள் முளைத்திருந்ததோடு நல்லூர் முருகன் கோவில் முன்னால் ஆர்ப்பாட்டம் என்றும் அறிவித்திருந்தர்கள். ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகளில் வேல்முருகனின் படத்துக்கு பதிலாக மே பதினெட்டு இயக்க தலைவர் திருமுருகன் காந்தியின் படம் போடப்பட்டிருந்தது.இருவரின் பெயரிலும் முருகன் வருவதால்  நல்லூர் முருகனின் பெயரில் பாரத்தை போட்டு கிடைத்த படத்தை போட்டிருக்கலாம்.ஈழத் தமிழரை பொறுத்தவரை இருவருமே ஒன்றுதான் என நினைத்த எங்கப்பன் முருகனின் திருவிளையாடலாகவும் இருக்கலாம்.

அதே நேரம் கண்டன சுவரொட்டிகளில் வை.கோவின் பெயரையோ படத்தையோ காணவில்லை.கண்டனம் தெரிவிப்பவர்கள் கூட இப்போ அவரை கணக்கிலெடுக்காமல் விட்டுவிட்டார்களே என்கிற கவலை எனக்கு .மறுநாள் நல்லூர் கோவிலுக்கு முன்னால் நூறுக்கும் குறைவானவர்கள் கலந்து கொண்ட மாபெரும் பேரணியில் அவர்களின் கைகளில் இருந்த பதாதைகளில் எழுதப்பட்டிருந்த வசனங்கள் தான் பார்த்த அனைவரின் புருவங்களையும் உயரவைத்தது.ஏனெனில் யாருக்குமே விளங்கவில்லை.முள்ளிவாய்க்காலில் நடந்து முடிந்த தமிழர்களின் கொலையை விட மிக மோசமான தமிழ்க்கொலை..

சிலர் பதாதைகளை தலைகீழாகவே பிடிதிருந்தர்கள்.எழுதியிருப்பதே என்னவென்று தெரியாத நிலையில் அதை எப்படிப் பிடித்தால் என்னவென்று அவர்கள் நினைத்திருக்கலாம்.அதைவிட முக்கியமான விடயம் என்னவெனில் இந்த கண்டன ஆர்பாட்டத்துக்கு ஏற்பாடு செய்தவர்கள் ஈழத்து கலைஞர்கள் என்றே அறிவிப்புக்களில் இருந்தது.அதில் கலந்துகொண்டவர்களில் ஒருவரது மூஞ்சையை கூட நான் குறும்படங்களிலோ.கலை நிகழ்வு பதிவுகளிலோயோ பார்த்ததேயில்லை.

சரி அவர்கள் குளியலறையில் பாடியிருக்கலாம்,கலியாணவீடுகளில் ஆடியிருக்கலாம்,கோப்பிறேசனில் கும்மியடிதிருக்கலாம்.அவர்களும் கலைஞர்கள் தானே?.. விட்டு விடுவோம்.ஆனால் ஊடகவியலாளர்களின்  ஆர்பாட்டம் சம்பந்தமான கேள்விகளுக்கு யாரும் சரியான பதிலை சொல்லமுடியாமல் தடுமாறியதும் .வீடு தருவதாக சொன்னார்கள் அதனால் வந்தோம் என்று சிலரும்.சம்பந்தா சம்பந்தமில்லாமல் சிலர் உளறியதும் தான் நடந்தது.மொத்தத்தில் இது ரஜனிக்காக அன்பால் சேர்ந்த கூட்டமல்ல பொய் சொல்லி அழைத்துவரப்பட்ட அப்பாவிகளின் கூட்டம் என்பது தெரிந்து போனது.

கொடிய யுத்தத்தால் உறவுகளையும் உடமைகளையும் இழந்துபோய் நிக்கும் அந்த மக்களுக்கு உதவ விரும்பும் பெரு முதலாளிகளே……. நீங்கள் ஒரு ரூபாய் தானம் கொடுக்கும் போதே பத்து ரூபாயை அதன்மூலம் எப்படி சம்பாதிக்கலாம் என திட்டம்  போட்டு விடுவீர்கள்.அதனால் தான் நீங்கள் பெருமுதலாளி ஆனீர்கள் .எனவே அந்த உதவிகளை அப்பாவிகளை போட்டு அலைக்களிக்கமலேயே கொடுத்துவிடுங்கள்.உங்களுக்கு புண்ணியமாகப் போகும்.

இல்லையேல் யுத்தம் முடிவுக்கு வந்த நாள் தொடக்கம் தங்கள் சுய தம்பட்டங்கள் இல்லாமலேயே பல புலம்பெயர் உறவுகளும் பதிக்கப் பட்டவர்களுக்கு முடிந்தவரை உதவிக்கொண்டுதனிருக்கிறார்.விட்டு விடுங்கள் அவர்களே பார்த்துக்கொள்வார்கள்.அதே நேரம் தமிழக அரசியல் தலைவர்களே…….. இனிமேலும் உங்கள் பருப்பை ஈழத் தமிழரின் கண்ணீரில் அவிக்க முயற்சி செய்யாதீர்கள். அது இனி வேகாது …….

சாத்திரி -பிரான்ஸ்

 

(Visited 100 times, 1 visits today)