சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் ஒரு நோக்கு-கட்டுரை-பூர்ணிமா கருணாகரன்

 

பூர்ணிமா கருணாகரன்இன்று ஆசிய நாடுகள் எதிர் கொள்ளும் பாரிய பிரச்சினைகளில் ஒன்றாக சிறுவர் துஷ்பிரயோகம் இடம்பெறுகிறது. இது மேற்குலக நாடுகளை விட ஆசிய நாடுகளிலேயே அதிகம் எனலாம். சிறுவர் வன்புணர்வு அநேகமாக வீடுகளில் சர்வ சாதாரணமாக அரங்கேறிக் கொண்டிருக்கிறது. வேலியே பயிரை மேய்ந்த கதையாக தம் உறவுகளாலேயே சிறுவர்கள் வன்புணர்வுக்குப்  பலியாகி கொண்டிருப்பது மிகவும் வேதனையான விடயம். தமது மாமன். மைத்துனன், அண்ணன், தந்தை என்று அவர்கள் அறியாமலும், அறிந்தும் சிறுவர்கள்  இந்தப் பாலியல் துஷ்பிரயோகங்களுக்குப் பலியாகி கொண்டிருக்கிறார்கள்.

இதில் மிகவும் கொடுமையான விடயம், ஆண் பிள்ளைகள் தன்னினச் சேர்க்கையாளர்களால் மிகவும் ஆபத்தான நிலைக்கு தள்ளப்படுவது தான். தாம் கல்வி கற்கும் பாடசாலைகளிலும், தாம் வாழும் சூழலிலும் தினம் பாலியல் தொல்லைகளுக்குஆளாகின்றனர். பெண் பிள்ளைகளும் இவ்வாறே பாதிப்புக்களை எதிர் நோக்குகின்றனர். மிரட்டல்கள், பயமுறுத்தல், சின்ன அன்பளிப்புக்கள் மூலம் அவர்களை தம்வசப்படுத்திப் பின்னர் இவர்கள் பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப் படுகிறார்கள். சில சிறுவர்கள் தமது தந்தை, தாய், சகோதரன், சகோதரி மற்றும் உறவுகளாலேயே பணத்திற்காக பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படுவது சமகாலத்தில் தென்கிழக்காசிய நாடுகளில் அதிகரித்து வருவது சமூகவியலாளர்களால் சுட்டிக்காட்டப்படுகின்றது. தம்மை அறியாமலே தமது எதிர்காலத்தை இழந்து கொண்டிருக்கும் இந்த பிஞ்சுகளின் எதிர்காலம் பலத்த கேள்விக் குறிகாலை உருவாக்குகின்றது.

இக் காமக் கொடூரர்களிடம் அகப்படும் சில சிறுவர்கள் பாலியல் வன்புணர்வின் போது மிகவும் கொடூரமாகக்  கொல்லப்படுவதன் மூலமே, எம்மைச்  சுற்றி உள்ளவர்கள்  இப்படியான நிகழ்வுகளை அறிந்து கொள்வதோடு அதனை எதிர்க்கவும், தண்டிக்கவும் முற்படுகின்றனர். இத்தவறுகள் ஏன் தடுக்கப்படுவதில்லை? காரணம் இது தான். ஒவ்வொரு பெற்றோரும் தம்மைச் சுற்றியுள்ள உறவுகளை நம்புவதும், அவர்களின் பராமரிப்புகளில் தம் பிள்ளைகளை நம்பி விட்டுச் செல்வதுமே முக்கிய காரணியாகின்றது. சிறுவர்களது பதின்ம  வயதுகளிலேயே அவர்களது  உடலில் பருவ மாற்றங்கள் ஏற்படத் தொடங்கி விடுகிறது. அவர்களின் மனநிலையும் மாற்றம் காண்கிறது. இந்த சந்தர்ப்பத்தில் அவர்களுக்கான கண்காணிப்பு பெற்றோரின் கையிலேயே தங்கி உள்ளது. பருவ வயதாகும் போது உங்கள் பிள்ளைகளுக்கான முதல் பாதுகாப்பு நீங்களாக மட்டுமே இருக்க முடியும்.

பெற்றோர்களே! சிறுவர்களை  சிறைக் கைதிகள் போலவும், கல்வி கற்கும் இயந்திரங்களாகவும் மட்டும் பார்க்காமல் அவர்களோடு அன்பாகவும், நட்பாகவும் உறவாடுங்கள். அவர்களுக்குப்  பாலியல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி கொடுங்கள். பெற்றோர்கள் முதலில் பாலியல்  என்பது பேசாப்பொருள் என்றோ இல்லை  அருவருக்கத்தக்க செயல்ப்பாடோ அல்ல என்பதை உணர வேண்டும். பாலியல் பற்றிய அரைவேக்காட்டுத்தனமான புரிதல்கள் தான்  இப்படியான வன்புணர்வுகள் உருவாக காரணமாகிறது. காமக் கொடூரர்களும் புரிதல் இல்லாத பாலியலினாலேயே உருவாக்கப் படுகிறார்கள். விழிப்புணர்வு அற்ற பாலியலினாலேயே இன்றுவரை இப்படியான நிகழ்வுகள் நடந்தேறிக் கொண்டிருக்கிறது.

நமது சமூக கண்ணோட்டம் பாலியலைத் தவறாக பார்ப்பதாலேயே இவ்வாறான தவறுகள் மூடி மறைக்கப் படுகின்றன. இது அவலமாகவும், பாதிக்கப்பட்ட பிள்ளைகள் பின்பு இழிச்சொல்லுக்கு ஆளாவதும் கூட இவ்வாறான சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம்  இடம் பெறக் காரணமாகின்றது. ஆகவே இவ்வாறான பாலியல் வன்முறைகளை முற்று முழுதாக நிறுத்த முடியா  விட்டாலும், தவறுகள் நிகழாத வண்ணம் தடுக்கலாம். உங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் உங்கள் கைகளில். நாளைய எதிர்காலமும் உங்கள் கைகளில். சிறுவர் வன்கொடுமை தடுப்போம். சிறுவர்களை பாதுகாப்போம்.

பூர்ணிமா கருணாகரன்-இலங்கை

 

பூர்ணிமா கருணாகரன்

(Visited 1,207 times, 1 visits today)