கலண்டர் 87-சிறுகதை-எஸ்.ராகவன்

எஸ்.ராகவன்எங்கட பக்கத்து வீட்டுக் குணமண்ணருக்கு கலண்டர் எண்டாக்காணும். ஆள் சாத்துவாயூத்திக்கொண்டு திரியும். ஒவ்வொரு வரியமும் டிசம்பர் பதினைஞ்சாந் திகதிக்குப் பிறகு அடுத்த வரியக்கலண்டருகளை ஆலாய் பறந்து சேர்த்துக்கொண்டு வந்து வீட்டுச்சுவர் முழுக்கத் தொங்க விட்டுப்போட்டு ஆள் லெவலாய்யிருந்து சிரிச்சுக் கொண்டிருக்கும். முன்பின் தெரியாதாக்கள் வீட்டுக்குள்ள உள்ளட்டால் சலூனுக்குள்ள நிக்கிறமாதிரித்தானிருக்கும்.

இப்பிடித்தான் எண்பத்தேழாமாண்டு தொடக்கத்தில குணமண்ணர்  திரைகடலோடித் திரவியம் தேடின கணக்காய் எங்கையெல்லாமோ போய் எக்கச்சக்கமான கலண்டருகளை  அள்ளிக்கொண்டு வந்து வீட்டு சிவர் முழுக்க வழக்கம்போல தொங்கவிட்டிருந்தார். அப்ப  நான் சின்னப்பொடியன். எனக்கும் கொஞ்சம் கலண்டர் பனி இருந்தது. அண்டைக்கு நான் குணமண்ணர் வீட்டை போனாப்போல அங்கை கொழுவியிருந்த கலண்டருகளைக்கண்டு எனக்கும் இருந்த கலண்டர் பனி முத்தி போச்சுது.

அங்கை இருந்த கலண்டருகளுக்கை “பாட்டா 87” எண்டொரு கலண்டர் ஐஞ்சாறு ஆம்பிளையளும் பொம்பிளையளும் ரீ சேர்ட் ஜீன்ஸ் அடிச்சு விதம்விதமான சப்பாத்துகளும் போட்டுக்கொண்டு ஒரு ஹெலிகொப்ரருக்கு முன்னாலை போஸ் குடுத்துக் கொண்டு நிக்கிற படம் போட்டிருந்தது. அந்த பாட்டா கலண்டர் தான் எனக்கு இருக்கிற கலண்டர் பனியை இன்னும் ஏத்திச்சுது.

“குணமண்ணை! இந்த கலண்டரை எனக்குத்தாங்கோவன்” எண்டு நைசாய் கேட்டன்.

“தாறதொண்டும் பிரச்சனையில்லையடாப்பா. ஆனா கண்டியோ அதிலை என்ரை பேரை எழுதிப் போட்டன். ரெண்டு நாளைக்குள்ளை இதே கலண்டரை ஒராள் எனக்கு தாறன் எண்டிருக்கிறார். வந்தோண்ணை  அது உனக்குத்தான். குறைவிளங்காதை”.  எண்டார்.

எல்லாக் கலண்டருகளிலையும் அவர் தன்ரை பேரை எழுதியிருக்கிறதை அப்பத்தான் பாத்தன் . குணமண்ணர் சொல்லுறதிலையும் ஒரு நியாயமிருக்கத்தான் செய்யுது. சரி அந்தக் கலண்டர் அவருக்க்க் கிடைச்சப்போல தரட்டும் எண்டு விட்டுட்டன்.

அதுக்குபிறகு  ஒருமாசங்கழிச்சு குணமண்ணை வீட்டை ஏதோவொரு அலுவலாய் போனாப்போல,

“குணமண்ணை அந்தக்கலண்டர்…….. “

எண்டு கேட்டன்.

“ஓமடாப்பா! அது இன்னும் கைக்கு கிடைக்கேல. கிடைச்சவுடனை நானே உன்ரை வீட்டை கொண்டந்து தாறன். ஒன்றுக்கும் யோசிக்காதை” எண்டார். பின்னால அவற்றை வீட்டை போக எனக்கு சான்ஸ் கிடைக்கேலை.

அந்த மூட்டந்தான்  ஒப்பிறேசன் லிபரேசன் தொடங்கீச்சுது. இயக்கம் ஆமியை ஒரெப்பனும்  முன்னுக்கு வர விடாதெண்டு நம்பிகையோடை சனங்கள் இருந்திச்சினம். அனால் வழக்கம்போலை எல்லாம் தலைகீழாய்போச்சுது. ஆமிக்காறர் என்னடாவெண்டால் சேர்ச்சுகள் பள்ளிக்கூடங்கள் எண்டு பொது இடங்களிலை போய் தங்கடை பாதுகாப்பை உறுதி செய்யும்படியும் அடுத்த அறிவித்தல் வரும்வரைக்கும் யாழ்ப்பாணம் முழுக்க ஹேர்பியூ போட்டிருக்கெண்டும்  ஹெலியிலை இருந்து கத்தை கத்தையாய் நோட்டீசுகளை போட்டாங்கள். இயக்கம் என்னடாவெண்டால் தந்திரோபாயமாய் பின்வாங்க, ஆமிக்காறர் சட்டித்தொப்பியளைப் போட்டுகொண்டு உருக்குள்ளை வந்தாங்கள்.

கோயிலுகளிலை தங்கடை பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொண்டிருந்த சனங்களில இளந்தாரிப்பொடியளை வடிச்செடுத்து ஒழுங்கை வழிய சாய்ச்சுக்கொண்டு போய் பருத்தித்துறை ஹாட்லி கொலிச்சிலை அடைச்சு வைச்சு போட்டு அதிலையும் முக்காவாசிப் பேரை பூஸாவுக்கு கப்பலாலை அனுப்பினாப்போலை  ஊருக்குள்ளை இருந்த சன்னங்களெல்லாம் நைஸாய் கிளம்பி வரணிபக்கம் போட்டினம். எங்கடை குணமண்ணரும் ஆமிக்காறரிட்டை பிடிபடாமல் எங்கையோ குடும்பத்தோடை மாறீட்டார். இப்ப ஊருக்குள்ள நானும் அம்மாவும் இன்னும் ரெண்டு மூண்டு கிழடு கட்டையளும் தான் மிச்சமாய் இருந்தம்.

அந்தமூட்டம் எங்கடை அப்பர்  மருதானையிலை பொலிஸாய் இருந்தவர். என்ரை அண்ணையாக்கள் ஏதோஒரு வழியாலை உச்சிக்கொண்டு அப்பரிட்டைப் போட்டாங்கள். என்ரை அம்மா மனுசி கொஞ்சம் சிங்களம்  த்தறோவாய் கதைக்கும். அந்த துணிவிலைதான் என்னை வைச்சுக்கொண்டு ஒரிடமும் அல்லாடாமல் இருந்தவா.

அப்ப ஆமிக்காறர் ஒவ்வரு வளவுக்குள்ளையும் வரேக்கை வேலியளை பிச்சுக்கொண்டுதான் வருவங்கள். எங்கடை பக்கமெல்லாம் அலம்பல் வேலியள்தான். அவங்கள் சப்பாத்துக்காலாலை ஓங்கி ஒரு மிதி மிதிச்சோண்ண வரிச்சு தெறிச்சு வேலியெல்லாம் தூள்தூளாய்ப் பறக்கும். எங்கடை அம்மா அந்தமூட்டம் முள்ளுக்கிளுவையளை சுத்திவர வேலியடைச்சு வைச்சிருந்தவா. பக்கத்து வீட்டுக்காறன் அடைச்சிருந்த அலம்பல் வேலியை பிரிச்சுக்கொண்டு எங்கடை வீட்டுக்கை வந்த ஆமிக்காறன், நானும் அம்மாவும் முத்தத்திலை நிண்டத்தைக் கண்டு போட்டு,

“கொட்டி ஆவத”? “இன்னுவத”? எண்டு கேட்டான். உடனை இந்த மனுசி ,

“நெ , நாலாமி ஹெதர” எண்டு சொல்லிச்சுது.

“ஓவ்ஹ் நாலாமி ஹேதர. ஹொந்தாய்”. எண்டு சொல்லிப் போட்டு பேந்தும் ஏதோவெல்லாம் கேட்டான். இந்த மனுசியும் மளமளவெண்டு மறுமொழி சொல்லிச்சுது. அவங்களும் வீட்டுக்குள்ள போய் செக் பண்ணிப் போட்டு அடுத்த வீட்டுக்கு அம்மாவின்ரை முள்ளுக்கிழுவை வேலியை பிரிச்சு கொண்டு போறதுக்கு ஓங்கி உதைஞ்சு பாத்தினம். வேலி அசைஞ்சால் தானே. பேந்து அம்மாதான் அவங்களை கூபிட்டு வேலியிலை இருந்த கடப்புக்குள்ளாலை போகச்சொல்லி விட்டவா.

 அப்ப ஆமிக்காறன் வீடுகளை செக் பண்ண வரேக்கை வீடுகளிலை ஆக்கள் இருந்திச்சினம் எண்டால் பிரச்சனை இல்லை. நோர்மலாய் பாத்துப் போட்டுப் போடுவங்கள். ஆனா வீட்டிலை ஒருத்தரும் இல்லையெண்டால் கதைகந்தல்தான். வீட்டுக்கதவுகளை உடைச்செறிஞ்சு அலுமாரியளையும் உடைச்சு எல்லாத்தையும் எடுத்துக் கொண்டு வீட்டைத் தலைகீழாக்கிப் போட்டுத்தான் போவங்கள்.

குணமண்ணர் வீட்டையும் இதுதான் நடந்தது. அவையள் வீட்டைப் பூட்டிப்போட்டு எங்கையோ மாறீட்டினம். ஆமிக்காறர் செக் பண்ண வரேக்கை வீடு பூட்டிக்கிடந்ததாலை எல்லாத்தையும் உடைச்செறிஞ்சு தலைகீழாக்கிப் போட்டாங்கள்.

அந்தநேரம் பாத்துத்தான் உவர் ரசீவ்காந்தி எங்கடை சனங்களுக்கு கப்பலிலை சாமானுகள் அனுப்பினார். அந்தாள் அனுப்பின கப்பலை இங்காலை வரவிடாமல் சே ஆர்  மறிச்சு வைச்சுக்கொண்டு கெப்பர் காட்ட, ஓ ……. அப்பிடியோ எண்டுபோட்டு ரசீவ் காந்தி மேலை எயாராலை இந்தியன் பிளேனுகளை அனுப்பி சாப்பாட்டுப் பார்சலுகளை போட்டு ஒரு கேம்-ஐ கேட்டார். இந்த கேம்- ஐப் பாத்த ஊரை விட்டுட்டு போன சனங்களெல்லாம்,

 ” இனிச்சண்டை இல்லையாமாம். சமாதானமாம். இந்தியன் ஆமி வரப்போகுதாம்”. எண்டு பரபரத்துக்கொண்டு திரும்பி வந்திச்சுதுகள்.  அதுக்குள்ளை குணமண்ணரும் சேர்மதி.

குணமண்ணர் வீட்டை வந்து பாத்தால் எல்லாம் தலைகீழாய் கிடக்கு. அதோடை அவர் சுவரிலை  தொங்கப்போட்டிருந்த கலண்டருகளைக் காணேலை. அதாலை ஆள் செரியாய் மனசொடிஞ்சு போட்டுது. அதோடை அவற்றை தாய்க்காறி மிளகாய் தூள், கோப்பித்தூள், தேயிலை, சீனி ,அரிசிமா, கோதம்பை மா எண்டு எல்லாம் தனித்தனியாய் கண்ணாடிப் போத்திலுக்கை போட்டு வைச்சுப் போட்டுத்தான் வெளிக்கிட்டவா. வந்து பாத்தால் மருந்துக்கும் ஒரு போத்திலையும் காணேலை.

இப்ப என்னடாவெண்டால் கதை மாறித்திரும்பி, ஆமிக்காறன் வீட்டை உடைச்சு செக் பண்ணிப்போட்டுப் போனாப்பிறகு நானும் அம்மாவும் குணமண்ணர் வீட்டை போய் சிவரிலை  தொங்கின கலண்டருகளையும் அங்கை கிடந்த போத்திலுகளையெல்லாம் தூக்கிக் கொண்டு வந்திட்டம் எண்டு குணமண்ணற்ரை தாய்க்காறி ஊர்முழுக்க தமுக்கடிச்சா. ஆமிக்காறர் ஒருக்காலமும் கலண்டருகளை எடுத்துக்கொண்டு போக மாட்டாங்கள். அதோடை அரசாங்கம் ஆமிக்காறருக்கு எக்கச்சக்கமாய்  சாப்பாட்டு சாமானுகள் குடுக்கிறதாலை அவங்கள் என்னத்துக்கு சாப்பாடுச் சாமனுகளைக் களவெடுக்கப் போறாங்கள் எண்டு ஒரு எக்ஸ்ரா விளப்பத்தையும் சேத்துத் தமுக்கடிச்சா. அவா சொல்லுறதிலையும் ஒரு நியாயமிருக்கெண்டு ஊருக்குள்ளை எல்லாரும் ஒரு பேமஸ்ஸான கள்ளரைப் பாக்கிற மாதிரி  எங்களைப் பாத்திச்சினம்.

ஒருநாள் குணமண்ணரின்ர தாய்க்காறி எங்கடை வீட்டை வந்து ,

“சாமானுக்களை எடுத்தாலும் பறவாய் இல்லை அந்தப் போத்திலுகளை ஒருக்கால் திருப்பித்தாங்கோ” எண்டு அம்மாவிட்டைக் கேட்டா.

“பிள்ளை நீயே வீட்டுக்குள்ளை  போய் பாத்து உன்ரை போத்திலுகள் கிடந்தால் எடுத்துக்கொண்டு போ “. எண்டு அம்மா சொன்னா. மனுசியும் வீட்டுக்கை உள்ளட்டு வலுகிளீனாய் தேடிப்போட்டு,

“களவெடுத்தவன் ஆராவது சாமானுகளை வெளியாலை வைப்பானே?” எண்டு நியாயம் பறைய வெளிக்கிட அம்மா மனுசிக்கு அண்டங் கிண்டமெல்லாம் பத்திப்போட்டுது,

“போடி வேசை வெளியாலை ” எண்டு கலைச்சு விட்டா. அந்த மனிசியும் லேசுப்பட்ட ஆளில்லை.

“நல்லாய் இருந்து நாசமாய் போங்கோ “. எண்டு வீட்டு கேற்றுக்கு கிட்டவாய் போய் நிண்டு கொண்டு அங்கை கிடந்த மண்ணை அள்ளித்திட்டிப் போட்டுதான் நடையைக் கட்டீச்சுது.

இதெல்லாம் நடந்து கொஞ்ச நாளைக்குப் பின்னாலை ஊரிப்பட்ட  இந்தியன் ஆமி வந்து இறங்க,  இலங்கையாமி ஊருக்குள்ளாலை வெளிக்கிட்டுப் போனான். இலங்கையாமி வெளிக்கிட்டுப் போகுதாம் எண்டோண்ண ஊர்ச்சனம் முழுக்க அவங்கள் அடிச்சிருந்த சென்றி பொயிண்டுகள், காம்புகளுக்குள்ளை எல்லாம் உள்ளட்டு பனங்குத்தியளை எல்லாம் பிரட்டி எடுக்கிறதிலையும், அங்கை கிடந்த மண் மூட்டையளை எல்லாம் பிரிச்சு கொட்டிப்போட்டு சாக்குகளை எடுக்கிறதிலையும் மும்மரமாய் நிண்டீச்சினம். கொஞ்ச சனம் மெயின் காம்ப் இருந்த பள்ளிக்கூடத்துக்குள்ளை ஓடிச்சுதுகள். அப்பிடி ஓடினாக்களிலை குணமண்ணரும் தாய்க்காறியும்  மெயின் ஆக்கள். நானும் ஏன் விடுவான் எண்டு அங்கை புதினம் பாக்க ஒடினன். அங்கை உள்ளை போய் பாத்தால் குணமண்ணற்ற கலண்டருகளும், முக்கியமாய் பாட்டா 87 கலண்டரும் அங்கை சிவரிலை  தொங்கி கொண்டு கிடந்துது. அதைக் கண்டிட்டு குணமண்ணர்  ஓடிப்போய்   மளமளவெண்டு அதுகளை கழட்டிச் சுத்தத் தொடங்கினார். அந்த அவதியிலை ஆள் என்னைக் கவனிக்கேலை.

இதுக்குள்ளை தாய்க்காறி குசினிக்குள்ளை ஓடிப்போய் பாத்தால் அவா ஆலாய் பறந்து தேடிக்கொண்டிருந்த போத்திலுகள் எல்லாம் கொஞ்ச சாமானுகளோடை அடுக்கிக் கிடக்கு. உடனை அதுகளை பாஞ்சு பாஞ்சு பொறுக்கத்தொடங்கினா. போதாக்குறைக்கு குணமண்ணரையும் கூப்பிட்டு,

“தம்பி இங்கை ஒருக்கால் ஓடியந்து இந்தப் போத்திலுகளை ஒருக்கால் தூக்கு மோனை”. எண்டு அவா சத்தம் போட்டதை அங்கை நீண்ட  சனங்கள் எல்லாம் பாத்துக்கொண்டு நிண்டுதுகள். இந்த மாற்றார் எல்லாம் நான் வீட்டை போறதுக்கு முன்னமே அம்மாவின்ரை காதுக்கு போட்டுது. நான் திரும்பி வீட்டுக்கு போகேக்கை பொழுது பட்டுப் போச்சுது,

“வாடா ஒரு இடத்துக்குப் போயிட்டு வருவம்”. எண்டு என்ரை கையை பிடிச்சு இழுத்துக்கொண்டு போனா. எங்கடை ஒழுங்கையாலை நடந்து அங்கை இருந்த முடக்காலை  திரும்ப குணமண்ணை வீட்டுக்கு முன்னாலை கிடந்த ஒழுங்கையுக்கை குணமண்ணற்ற தாய்க்காறியும் இன்னும் கொஞ்சப் பெண்டுகளும் இருந்து கொண்டு குசுகுசுவெண்டு ஊர்துளவாரம் பறைஞ்சு கொண்டிருந்தினம்.

நாங்கள் அவையளுக்கு கிட்டப் போன நேரம் பாத்து அசுகையறிஞ்சு அவையள் பறையிறதை நிப்பாட்டிப் போட்டினம். அப்பத்தான் அந்த மெயின் வில்லங்கம் நடந்திச்சுது. அம்மா, வந்த வரத்திலை குணமண்ணரின்ரை தாய்க்கறியிண்டை தலைமயிரைக் கொத்தாய் பிடிச்சு இழுத்து கொண்டு அவாவின்ரை தலையை முழங்காலுக்குள்ளைவைச்சு அமத்திக்கொண்டு,

“என்னடி வேசை நாங்கள் என்ன கள்ளரோ”? எண்டு கேட்டுக்கேட்டு அவாவின்ரை முதுகிலை மொங்கு மொங்கெண்டு மொங்கத் தொடங்க, கூட இருந்து வெறும்வாய் மெண்டு கொண்டிருந்த பெண்டுகளெல்லாம் இலங்கையாமியை கண்ட மாதிரி வேர்த்து விறுவிறுத்து போய் எழும்பி ஓடிச்சினம்.

“ஐயோ தெரியாமல் நடந்து போச்சுது அக்கா. அடிக்காதையக்கா”. எண்டு தாய்க்காறி அம்மாவுட்டை மண்டாடத்தொடங்கினாலும் அம்மா மனுசி விடுற பாட்டை காணேல. அம்மா மனுசி கொட்டிலுக்கு போனாக்கள் மாதிரி பல்லை நெருமிக் கொன்டு பயங்கர அப்பல் அப்பிச்சுது. எனெக்கெண்டால் ஐஞ்சும் கெட்டு அறிவுங்கெட்டு கைகால் எல்லாம் நடுங்க தொடங்கீட்டுது. எல்லாப்பெண்டுகளும் விலத்தி நிண்டு கொண்டு பூராயம் பாக்கினமே ஒழிய ரெண்டு பேரையும் விலக்கு பிடிக்க வரேல. நான் நைசாய் கிட்டப் போய்,

“அம்மோய் விடணை! பாவம் விடணை! இசக்குப் பிசகாய் போடுமணை! விடணை”. எண்டு சொன்னன்.

 “போடா அங்காலை…….. என்ன இவள் பாவமோ ? இண்டைக்கு இவளைக் கொல்லாமல் விடமாட்டன்”. எண்டு அம்மா மனுசி வெறி பிடிச்ச மாதிரி கத்திப் போட்டு குணமண்ணற்ற தாய்க்காறியைப் போட்டு கும்மத்தொடங்கிச்சுது.

எனெக்கெண்டால் என்ன செய்யிறதெண்டு தெரியேலை. கை காலெல்லாம் பதறுது. இதுக்குள்ளை  குணமண்ணர் ஓடிப்போய் கனகு மாமாவை கூட்டியந்து விட்டார். (கனகு மாமா அம்மாவின்ரை மூத்த தமையன்) கனகு மாமா வந்த வளத்திலை,” விடடி அவளை “. எண்டு அம்மாவை உறுக்கினதும் இல்லாமல் கன்னத்தைப் பொத்தியும் ஒரு அப்பு அப்பினார். அதோடை அம்மாமனுசி கும்முறதை நிப்பாட்டிப் போட்டு திரும்பிப்பாக்காமல் நடையைக் கட்டினா. கூட வந்த குத்தத்துக்கு அவாக்கு பின்னாலை நான் ஓட வேண்டியதாய் போச்சுது. குணமண்ணற்ற தாய்க்காறி தப்பினது தம்பிரான் புண்ணியம் எண்டு குலைஞ்சு கிடந்த கொண்டையை வதவதவெண்டு முடிஞ்சு கொண்டு வீட்டுக்குள்ள ஓடீற்றா.

கொஞ்ச நேரத்தாலை கனகுமாமா எங்கடை வீட்டுக்கு வந்தார்.

“அந்த வேசை எனக்கு கள்ளப் பட்டம் கட்டி ஊருக்குள்ளை கிலுசை கெடுத்தினவள். நீ அவளுக்கு சப்போர்ட் பண்ண வந்திட்டாய் என்ன”? எண்டு கனகு மாமாவை அம்மாமனுசி பிடிச்சு ஒரு உலுப்பு உலுப்ப,

போடி பேச்சி……நீ உப்புடி அடிச்சு, எக்கணம் அவள் செத்துப் போட்டால் ஆர் மறுமொழி சொல்லுறது”? எண்டு மாமா திருப்பிக் கேட்டார்.

“உவள் சாகவேணும் எண்டுதான் அந்தக்கும்மு கும்மின்னான்”. எண்டு அண்டைக்கு கனகுமாமாவுக்கு  சொன்ன அதே அம்மாமனுசிதான் ஆயிரத்து தொள்ளாயிரத்துத் தொண்ணுறிலை குணமண்ணற்ர தாய்க்காறி  புக்காரா அடிச்சு மண்டை சிதறி செத்துக்கிடக்க,

“என்ரை ராசாத்தி என்னை விட்டுட்டுப் போக எப்பிடியடி மனம் வந்துது” எண்டு முதல் ஆளாய்க் குழறிக்கொண்டு ஓடினவா.

எஸ்.ராகவன்-இலங்கை         

இராகவன்          

(Visited 50 times, 1 visits today)