சென்றொழிந்த காலம் திரும்பிவரமாட்டாது- பத்தி- கிருத்திகன் நடராஜா

கிருத்திகன் நடராஜாஅது “சந்திரன் சேர்”எனும் மிகச்சிறந்த ஆளுமையான மனிதரின் வழிப்படுத்தலில் வைரவபுளியங்குளத்தில் இயங்கி வந்தது.

இந்த வைரவபுளியங்குளம் என்பது வவுனியாவின் பெரும்பாலான இடங்களிற்குப் பொதுவான இடம் என்றே சொல்ல வேண்டும். அதுவும் கல்விச் செயற்பாடுகளிற்கு வைரவபுளியங்குளத்திற்கு என்று தனி பிரபலம் உண்டு. அனைத்து முன்னணி டியூசன்களும் இந்த இடத்தில் தான்.

இன்றும் ஸ்கொலர்சிப் முதல் உயர்தரம் வரை வைரவபுளியங்குளத்தில் டியூசன்கள் நிரம்பி வழியும்.

பாடசாலை முடிந்தவுடன் வீட்டிற்கு வந்த பின்னர் செல்லும் இடந்தான் வீனஸ் டியூசன்.

தரம் ஏழு இறுதிப்பகுதியில் தான் (2004) இந்த டியூசனுக்கு சென்றேன். உயர்தரம் முடிக்கும் மட்டும் அதே டியூசனில் தான் கல்விகற்றேன். என்னைப் போல் நிறையப் பேர் அதிலிருந்து வெளியேறியவர்களே.

தரம் ஒன்பது வரை இங்கிலீஸ் சிவா சேர், மதி சேர், மைதிலி டீச்சர், ரோசி டீச்சர், இரட்ணவேல் சேர், தமிழ் டீச்சர் கதீசன் சேர் என்று ஒரு பட்டியல் ஆசிரியர்கள் இருந்தார்கள். (பலரது பெயர் மறந்தே போய்விட்டது.)

தரம் எட்டில் குழு A,B என்று இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு, பின்னர் சாதாரணதரம் வரும் வரை குழு Bயில் படிக்க சந்தர்ப்பம் கிடைத்தது. (இந்த குழுவில் தான் காதலும் ஆரம்பமானது)

மதி சேர் விஞ்ஞான பாடம் எடுப்பவர். எக்ஸாம் மார்க்சிற்கு எங்களைப் பின்னி எடுப்பார். இதிலே சுவாரசியம், குறைவான மார்க்ஸ் எடுப்பவன் அதிகளவு அடி வாங்கினாலும், ஹையஸ்ட் மார்க்ஸ் எடுத்தவனுக்கு விழும் அடி கொடியதே

இந்த வீனஸ் டியூசனுக்கு அருகில் இருப்பது யங்ஸ்டார் விளையாட்டு மைதானம். சிறுவர் மைதானம் எனப் பெயர் பெற்றிருந்தாலும் யங்ஸ்டார் கழகத்தின் நேரடியான கட்டுப்பாட்டின் கீழ், அவர்களின் பராமரிப்பில் இருந்ததாலும் யங்ஸ்டார் மைதானம் என்று அழைப்பதில் அவ்வளவு பிழையாக எனக்குப் புலப்படுவதில்லை.

இந்த கிரவுண்டில் டியூசன் முடிந்ததும் விளையாடச் செல்வதும், பிறகு சந்திரன் சேரின் ஊதா நிற காரினைக் கண்டதும் சிதறி ஓடுவதும் வழமை. இவற்றையெல்லாம் பார்த்து வைத்து, ஒவ்வொரு மாதமும் நடக்கும் பரீட்சையில் புள்ளிகளைப் பார்த்து அதற்குரிய சன்மானங்கள் சந்திரன் சேரினால் வழங்கப்படும். (அதுவும் வீட்டு ஆக்கள் ஏதும் சொன்னால் ஸ்பெசல் கவனிப்பாக அன்றைய நாள் மாறிப் போகும்.

வீனஸில் கொடிகட்டிப் பறந்த சந்திரன் சேர் ஒவ்வொரு இடத்திலும் வீனஸின் கிளைகளை உருவாக்கினார். மன்னார் வீதியில் சயன்ஸ் ஹோலும், பண்டாரிகுளத்தில் இன்னுமொரு கல்லூரியையும் உருவாக்கினார். (மிச்ச இடங்களை மறந்தேவிட்டேன்.)

தரம் ஒன்பதிலிருந்து இன்னுமொரு ஆசிரியர் குழு எம்மை ஆட்கொண்டது. கனகசுந்தரம் சேர், கருணா சேர், சமட் சேர், ஜெகன் சேர், ரஞ்சித் சேர், திலகரட்ணம் சேர், தாஸ் சேர், கதிர் சேர்,சூரி சேர் என்று இதுவும் ஒரு பெரியபட்டாளமே. இருந்தும் இந்தப் பட்டாளத்திற்கு நாங்கள் பயந்தான்.

முதன்முதலாக யங்ஸ்டார் கிரிக்கெட் சுற்றுப் போட்டியொன்றில் விளையாடிவிட்டு வந்தபோது,காலை வகுப்பினை கட் அடித்ததற்காக, பின்னேர வகுப்பில் கருணா சேர் கிரவுண்டிற்கு சென்ற அனைவருக்கும் தகுந்த சன்மானம் வழங்கியதும் இதே வீனசில் தான்

எக்ஸாம் வைக்கும் நாட்களில் ஒன்பது பத்து பதினொன்று என் மூன்று தர மாணவர்களையும் கலந்து தான் விடுவார்கள். பரீட்சைக் காலங்களில் அக்கா அண்ணாமாரின் துணையுடன் விடைகள் பரிமாறிக் கொண்டதெல்லாம் பயந்து பயந்து செய்ய வேண்டிய இக்கட்டான தருணங்களே

ஒன்பதாம் ஆண்டில்(2006) ஜனவரி மாதத்தில் ஒரு திங்கட் கிழமை (சரியாக இந்த திகதி ஞாபகம் வரவில்லை) கனகசுந்தரம் சேர் அழுது கொண்டு வந்து, “சந்திரன சுட்டுப் போட்டாங்கள், எல்லாரும் வீட்ட போங்கோ” எண்டு கதறியழுத காட்சி இப்பொழுதும் எனக்கு ஞாபகம் இருக்கிறது. அதன் பின்னர் சந்திரன் சேருக்கான இறுதி மரியாதை நடந்து முடிந்தது. இதுவரை அந்த இறுதி மரியாதை போல் வேறு யாருக்கும் வவுனியாவில் வழங்கப்படவில்லை என்பேன். 2006 உயர்தர அண்ணாக்கள் தான் அதில் மும்முரமாக நிண்டு செய்தார்கள்

அந்த இழப்பிற்குப் பின்னர் நிர்வாக ரீதியில் வீனஸ் கல்லூரி ஆட்டங் காணத் தொடங்கியது. சயன்ஸ் ஹோலினை அதுவரை நிர்வாகத்தில் வைத்திருந்த தீபன் அண்ணா பின்னர் வீனஸ் கல்லூரியினைப் பொறுப்பெடுத்தார். பிறகு காலத்தால், ராம்குமார் அண்ணா, மதன் அண்ணா, தீசன் அண்ணா, குட்டி அண்ணா, என்று பலர் வீனஸ் கல்லூரிக்குப் பொறுப்பாக சோபனா அக்காவின் தலைமையீன் கீழ் மாறிக் கொண்டேயிருந்தனர்.

உயர்தரம் வந்ததும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பிரிவிற்குச் செல்லத் தொடங்கினர். கணிதப் பிரிவிற்குச் சென்றதால் அன்ரன் சேர், இந்திரலிங்கம் சேர், பகீரதன் சேர் என்று கணிதப் பிரிவிற்கு பொறுப்பானவர்களின் வகுப்புக்களுக்கு செல்ல ஆரம்பித்தேன். இறுதி வரை அன்ரன் சேர், இந்திரலிங்கம் சேரின் வகுப்புக்களோடு இரண்டாந்தரத்திலும் இவர்களுடனேயே வீனஸ் கல்லூரியின் கற்றல் செயற்பாடுகள் முடிவடைந்தது.

டியூசன் முடிந்ததும் வெளியில் நிற்கும் போது அப்போது கடமையிலீடுபட்டிருந்த காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் எம்மை எச்சரித்து விட்டு செல்வார் இதிலே நிற்க வேண்டாம். ஆனால் நாங்களோ அவர் சென்ற பின்னர் மீண்டும் ஒன்றுகூடுவோம் இல்லாவிடில் அவரது பெயரினை கத்தி விட்டு தலைதெறிக்க ஓடிவிடுவோம்.

2010இலே உயர்தரத்தில் கணித, உயிரியல்,வர்த்தக, கலைப் பிரிவு மாணவர்கள் சேர்ந்து செய்த ஆசியர் தின விழாவும், அதில் செய்த அட்டூழியங்களும் எப்பபொழுதும் நினைத்து சிரிக்க வைக்கும்.

உயர்தரம் எடுத்த பின்னர் கனகசுந்தரம் சேரின் வேண்டுகோளிற்கு ஏற்ப வீனஸ், சயன்ஸ்ஹோல், பண்டாரிகுள வீனஸ் மூன்று டியூசன்களிலும் கணிதம் படிப்பித்ததோடு கற்பித்தல் செயற்பாடும் வீனசோடு முடிந்துவிட்டது.

இந்த வீனஸ் கல்லூரி நிறைய மாணவர்களின் நினைவுகளில் எப்போதும் வாழ்ந்து கொண்டே இருக்கும்.

காதல் அரும்பும் வயதுகளில் இருந்த பலரை ஆட்கொண்டதும் இதே வீனஸ் கல்லூரி தான். ஒவ்வொருவருக்குமான கதைகள் நிச்சயம் இந்த இடத்தில் இருப்பதற்கான வாய்ப்புக்களே அதிகம்.

பல நண்பர்களின் காதல் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டமையும் ஒரு சிலரின் காதல் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டதும் இதே கல்லூரியில் தான்.

“சென்றொழிந்த காலம் திரும்பிவரமாட்டாது” என்ற வாசகந்தான் எனக்கு அடிக்கடி நினைவுக்கு வந்து செல்லும்

ஏதோவொரு நினைவுகளோடு இந்தக் கல்லூரியின் ஞாபகங்கள், இந்த டியூசனினைக் கடக்கும் போது ஒவ்வொரு முறையும் வந்து போய்க் கொண்டேயிருக்கும்.

கிருத்திகன் நடராஜா -இலங்கை

கிருத்திகன் நடராஜா

(Visited 62 times, 1 visits today)