நீயும் நானும்-கவிதை-அவ்வை

 

அவ்வை

எரிந்துகொண்டிருக்கும் எனது தேசத்தில்
என் வாழ்வும் கனவும் தொலைந்து போயின
மரணமும் அவலமும் வாழ்வை நிரப்பின.
மிஞ்சி இருந்த உறவுகளும் திக்கெட்டும் சிதறின
எனது நிலத்தில் வாழ்வை இழந்தேன்.

வாழ வழிதேட
வாவென்றழைத்து
வழிகாட்டி
வாழ்வுதந்து என்னை மலரவைத்தது
உன் தேசம்
நன்றியுடையேன்; ஆயினும்
உன் கனவை மறந்து
உன் வாழ்வை மறைத்து
குடியேறும் மக்களைச் சீராட்டி
மாற்றாந்தாயாக நிற்பதேன்?

பலநூறு ஆண்டுகளாய்
மண்ணின் புதல்வர்களாய்
இயற்கையோடிணைந்திருந்த உங்கள் வாழ்வை
பிடுங்கி எறிந்து
நிலத்தைப் பிடித்து, கொள்ளையடித்து
ஊரெல்லாம் அலைய வைத்து
ஓட ஓட விரட்டி
குழந்தைகளைப் பிடித்துக் கூட்டிலடைத்து
மொழி சிதைத்து
கலை அழித்து
வாழ்வை உருக்குலைத்து நின்ற
ஆதிக்க வெறியர்களின் அதிகாரத்தின் மேல் காறி உமிழ்கிறேன்.

ஆயினும்
உனது மக்களை துரத்திக் கலைத்தபின்
பிடித்த நிலத்தில்
இன்று
என் வீடும், வளமும், வாழ்வும்.

எப்படி முடியும்?
எனது நிலத்தில்
வாழ்வைத் தொலைத்தவள் நான்
உனது வலியும், இழப்பும், ஆற்றாமையும், கோபமும்
எனக்குப் புரிகிறது.
வாழ்வை இழந்து,
கனவைத் தொலைத்து
ஏங்கும் கண்களுடன் நீ என்னைப் பார்ப்பது புரிகிறது

வெட்கித் தலை குனிந்து
மனித நாகரிகத்தின்மேல் காறி உமிழ்கிறேன்

உனது வலியை உணர்பவள் நான்
உனது இருப்பை மதிப்பவள் நான்
உனது வாழ்வை நேசிப்பவள் நான்
ஆதலால்
உனது கைகள் எனது இதயத்திலிருக்கட்டும்
எனது கைகளை உன் இதயத்தில் வைக்கிறேன்
இருவரும் இணைந்து பேசலாம்
தொலைந்த வாழ்வை மீட்டெடுக்கலாம்

*** 2018 ஜூனில், கனடாவில் நடந்த 48வது இலக்கியச் சந்திப்பின் போது கனேடிய பூர்வீகக் குடிகளினை நன்றியுடன் நினைவுகூருதல் நிகழ்வில் வாசிக்கப்பட்ட கவிதை.

அவ்வை- கனடா

அவ்வை

(Visited 116 times, 1 visits today)
 
அவ்வை

நேர்காணல்–அவ்வை-கோமகன்

“ஆயுதங்களுடன் பெண்கள் இருந்தபோது பெண்களை ஏற்றுக்கொண்ட சமூகம், பின்னர் ஆயுதம் மௌனித்த பின் தனது சுய ரூபத்தைக் காட்டியிருக்கிறது” அவ்வை  அவ்வையை வாசகர்கள் எவ்வாறு தெரிந்து கொள்ளமுடியும் ? வாசகர்கள் […]