செல்வி-திருச்செல்வி-மொழிபெயர்புச் சிறுகதை-திக்குவல்லை கமால்

திக்குவல கமால்
ஓவியம் : எஸ்.நளீம்

வர்கள் நக்கல்ஸ் மலைத்தொடரின் அழகை அனுபவித்துவிட்டு மீண்டும் வந்து கொண்டிருந்தனர். இருபக்கமாகவும் சீரற்ற குறுகிய பாதை வழியே கீழிறங்கும் வேனுக்குள் எல்லாம் எட்டுப்பேர் சமரஸேக்கர குடும்பத்தவர்களின் வருடாந்த உல்லாசப் பயணத்தில் இம்முறை இன்னும் மூவர் இணைந்திருந்தனர். நாளிக்காவுடன் ஒன்றாக வேலைசெய்யும் ஒரு வாலிபனும் இரண்டு யுவதிகளுமே அவர்கள். வேலையினால் களைப்புக்குள்ளாகியிருக்கும் நாளிக்கா வருடாந்தம் மேற்கொள்ளும் உல்லாசப் பிரயாணத்தின்போது ஒவ்வொரு பொழுதும் அந்தக் களைப்புக்கு ஈடாக உச்ச மகிழ்ச்சியை அனுபவிப்பதறகு காண்கின்ற சந்திக்கின்ற அனைத்தையுமே வியப்புக்குரியதாக மாற்றிக் கொள்ள முயற்சிப்பாள்.

மிட்லண்ட் தோட்டத்திற்கூடாகச் செல்லும் ஒரு திருப்பத்தில் வடைசுடும் இடமொன்றைக் கண்ட நாளிக்கா, ‘வடை-வடை-வடை நிறுத்துங்கோ நிறுத்துங்கோ’ என்று சத்தமிட்டாள். வாகனத்தின் முன் ஆசனத்தில் அமர்ந்திருந்த சமரஸேக்கர திடீதெரன்று பிரேக் பிடித்ததால் ஏற்பட்ட குலுக்கததினால் கண்விழித்து சுற்றும் முற்றும் பார்த்தார். இதுவென்றால் தலைசுற்றும் ஆச்சரியம். நிறுத்தப்பட்ட வேனின் வலப்பக்கம் பாதையருகே அமைக்கப்பட்டுள்ள தற்காலிக கொட்டிலுக்குள் பெரிய தாச்சியொன்றில் வடை சுட்டுக்கொண்டிருப்பது ‘செல்வி’ முப்பத்தைந்து வருடங்களுக்கு முன்பு சிறிதுகாலம் தன்னோடு ஒரே வகுப்பில் படித்த செல்வி.

வாகனத்தின் கதவைத் திறந்து கொண்டு வெளியிலிறங்கிய சமரஸேக்கர கண்களைத் துடைத்துக்கொண்டு நன்றாகப் பார்த்தார். ஆம், இது அந்தச் செல்வியேதான். தான் காண்பது கனவல்ல என்பதை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக, கொட்டிலின் ஒரு பச்சமாக மலையுட் இணைந்த பீலியிலிருந்து கொட்டும் குளிர்நீரினால் இரு கண்களையும் நனைத்துக் கொண்டார் அவர். புதிய கொடுக்கல் வாங்கல்காரர்களை வரவேற்பதற்காகச் சிரித்தபடி நிற்கும் இளம் வடை வியாபாரப் பெண்ணை இன்னும் நன்றாகப் பார்த்தார். சந்தேகமில்லை. இது அந்தச் செல்வியேதான்.

திக்குவல கமால்
ஓவியம் : எஸ்.நளீம்

இது வாலிப மனதில் கருக்கொண்ட காதலினால் உருவாக்கப்பட்ட பிரமை அல்லவா என்று ஐம்பதை நெருங்கி நிற்கும் சமரஸேக்கர எண்ணினார். உல்லாசப் பயணம் வழங்கிய மிகை மகிழ்ச்சியால் இளம் பெண்ணாகி நிற்கும் நாளிக்கா, ‘வட வட வட’ என்றவாறு அவரை உண்மையான உலகுக்குள் தள்ளிக்கொண்டு வெளியே பாய்ந்தாள். அத்தள்ளுகையினால் மனைவியும் இருமகள்மாரும் மகனும் இன்னும் மூவரும் தன்னோடிருப்பது சமரஸேக்கரவுக்கு தெரியவந்தது. உணர முடிந்தது.

வடைசுடும் யுவதியைக் கண்டதால் தனக்குள் ஏற்பட்ட மாற்றத்தை மறைப்பதற்கு தனது குழுவில் ஒவ்வொருவரதும் முகங்களைப் பார்க்க அவரது கண்மடல்கள் வேகமாகத் துடித்தன. முகத்தில் விகாரமான சிரிப்பு. அந்தப் பார்வை குழுவில் ஒவ்வொருவரதும் முகத்திற்கு முகம் பாய்ந்து சென்று மீண்டும் தராசு முள்போல் செல்வியின் பக்கமே வந்து நின்றது. மனைவியோ பிள்ளைகளோ தனது மாற்றத்தைக் கண்டுகொண்டால் பெரும் வெட்கக்கேட்டுக்கு ஆளாவதை விளங்கிக்கொண்ட அவர் சூழல் அழகைச் சுவைக்கும் பாங்கில் சற்று அப்பால் நடந்து சென்றார். அவ்வாறு சென்று மதகுக் கட்டுமரத்தின்மீது அமர்ந்துகொண்டார்.

இப்பொழுது அவருக்குத் தனது கோஷ்டியினர் கேட்பவற்றுக்கு பதில் சொல்லிக்கொண்டு, அவர்கள் கேட்பதைக் கொடுத்துக் கொண்டு, அடுப்பின் நெருப்பை ஒழுங்குபடுத்திக் கொண்டு வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் ‘செல்வி’யின் உருவம் தூரக் காட்சியாகத் தெரிந்தது. சிவப்பு சல்வார் கமிசை அணிந்து பூப்போட்ட துணியால் தைத்த காற்சட்டையோடு அலங்கரித்து நிற்கும் இந்தச் ‘செல்வி’யின் உருவத்தைச் சிறிது பெரிதாக்கிக் கண்களுக்குள் எடுத்தபடி நிற்கும் அவருக்கு முன்னால், முப்பத்தைந்து வருடங்களுக்கு முற்பட்ட காலம் பாயந்து வந்து விழுந்தத எங்கள் உயர்தர உதவி வகுப்பிற்கு, கோடைக்கு மத்தியில் திடீரென்று விழும் மழைத்தூறல் போல் வர ஆரம்பித்தாள். அவள் இரு உதடுகளாலும் சிரிக்கவில்லை. இரு கண்களாலுமே சிரித்தாள். அமைதியான நீர்ப்பரப்பின் மீது சிறு கல் எறியும்போது அலைகள் பரவிச் சொல்வதுபோல், கண்மடல்களிடையே ஈரமான கண் உருண்டைகள் பளபளக்கத் தொடங்கும். காலையில் குளித்துவிட்டு நீளமான கூந்தலை விரித்துப் போட்டபடி, மெல்லிய மலர் நறுமணம் பரப்பிக் கொண்டு அவள் வகுப்புக்குள் வருவாள். இளம் வாலிப வட்டத்தினராகிய நாங்கள் அனைவரும் அவளை மனதால் காதலித்தோம்.

‘நீங்க இங்கே வந்தது?’

‘அப்பா. டிரான்ஸ்ஸ்ர்’

‘உங்கட அப்பா?’

‘போஸ்ட் மாஸ்டர்’

‘முன்பு இருந்தது…?’

‘தலவாக்கலை’

‘ஊர் அதுதானா?’

‘இல்ல அதுவும் டிரான்ஸ்ஸர்’

‘அதற்கு முன்பு?’

‘கொழும்பு’

‘ஊர் கொழும்பா?’

‘இல்லை… அதுவும் ட்ரான்ஸ்ஸர்’

‘அப்படியென்றால் ஊர்?’

‘ஐ டோன்ட் நோ’

‘யூ டோன்ட் நோ?’

‘நோ’

அவள் எங்களோடிருந்த இரண்டு மாதத்தில் வேறு எந்தக் கதையும் தொடர முடியாமல் போனபோதும், மற்ற எல்லோரையும்விட நான் அவளுக்கு அன்பு காட்டினேன். காற்று வந்த வேகத்தோடு தங்க வேண்டுமென்று தெரியாததால் வெளியேறிச் சென்றது போலத்தான். அவள் வைத்தியக் கல்லூரிக்குத் தெரிவாகிச் செல்லும்போது நான் எழுதுவினைஞர் பரீட்சைக்கு விண்ணப்பித்தேன்.

‘அங்கிள், இந்தப் பக்கமாகவந்து பெரிய யோசினயோட இருக்கிறீங்க… வடை சாப்பிடுவோமே… அந்தமாதிரி வடை, பொரித்த மிளகாயுமிருக்கு’

‘வடையைப் போலத்தான் அதைச் சுடுகிறவளும்’

‘நேற்றிரவு கிடைத்திருந்தால் ம், எப்படி இருந்திருக்கும்?’

‘யாரு?’

‘வடை, நான் சொன்னது பைட்டுக்கு இந்த வடை கிடைத்திருந்தால்’

‘அது அல்லாமல்’

உல்லாசப் பயணத்தினால் நாளிக்காவின் காரியாலய நண்பர்களின் சபைக் கூச்சம் மட்டுமன்றி, பயணம் ஆரம்பிக்கு முன் அவர்களுக்குள்ளிருந்த மூத்தோர் பற்றிய நன்மதிப்பும் இல்லாமல் போயிருக்குமென்று சமரஸேக்கர நினைத்தார். அவர் அமர்ந்திருந்த இடத்தால் எழுந்து அந்த இளைஞர் தனக்கு நீட்டிய வடையைக் கையிலெடுத்தார். நாளிக்கா அங்குமிங்கும் பாயந்து இந்த உலகத்தில் இல்லாமல் படம் பிடித்துக்கொண்டிருந்தாள். வடை வியாபாரப் பெண்ணுடன் தமிழிலும் சிங்களத்திலுமாக கதைப்பது கேட்டது.

‘நீங்க தோட்ட வேலைக்குப் போவதில்லையா?’

‘இல்லை’

‘ஏன் அப்படி? சம்பளம் குறைவா?’

‘நான் தோட்ட வேலைக்கு விருப்பமில்லை’

‘பிஸ்னஸுக்கு விருப்பம்’

‘தோட்ட வேலைக்கு விருப்பமில்லை’

‘இந்த பிஸ்னஸ் நல்லதா?’

‘சும்மா இருப்பதால் செய்றன்’

வடைசுடும் செல்வியினருகே சிறுபிள்ளையொன்றும் நிற்பதை நாளிக்கா கேட்ட கேள்வி காதில் விழுந்தபோதே சமரஸேக்கர கண்ணுற்றான்.

‘இது யாருடய பிள்ளை?’

‘என்ற’

‘உண்மையா? எத்தனை வயது?’

‘ஒன்றரை’

‘உங்களுக்கு எத்தனை வயது?’

‘பதினெட்டு’

உலகில் எங்காவது ஓரிடத்தில் ஒரே உருவம், ஒரே குரல், ஒரே சிரிப்புக் கொண்ட இருவர் இருப்பதாக நாங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். ஆனால், உருவத்தால், குரலால், சிரிப்பால் ஒரேவிதமாக இருந்தாலும் இருவருடைய பெயரும் ஒன்றாக இருக்க முடியாது. இருந்தாலும் அன்று புத்தூக்க வகுப்பில் சந்தித்தவளுக்கும் வடைசுடும் இவளுக்கும் ஒரே பெயரென்பதைத் தெரிந்து கொண்டபோது சமரஸேக்கர எவ்வளவு ஆச்சரியமடைந்தாரென்பதை வாசகர்களாகிய உங்களுக்கு எண்ணிப்பார்க்க இடமளிக்கிறேன்.

‘அப்பா எங்கட ட்ரிப் படங்கள் அழகா இருக்கு. நான் திருச்செல்வியோட எடுத்த படம் அந்த மாதிரி இருக்கு.’

நக்கல்ஸ் சுற்றுலா முடிந்து ஒரு வாரத்தில் ஒருநாள் நாளிக்கா வேலை முடிந்து வரும்போது கையில் புகைப்படக் கட்டோடு வந்தாள்.

‘யார் திருச்செல்வி?’ சமரஸேக்கர வியப்புடன் கேட்டார்.

‘ஏன் அன்று ட்ரிப் போய் வரும்போது வடைசுட்ட கேர்ள்’

‘என்ன அவளது பெயர்?’

‘திருச்செல்வி, நான் அவளது எட்ரஸையும் கேட்டெடுத்தேன். போட்டோ அனுப்ப’

மகளிடமிருந்து கிடைத்த புகைப்படம் இட்ட கவருடன் சிலையாக நின்ற அப்பாவை சந்தேகத்தோடு பார்த்தாள் மகள்.

‘அப்பாவுக்குச் சுகமில்லயா?’

அவர் விழிப்புற்று அங்குமிங்கும் பார்த்தார். நெற்றியைச் சொறிந்தார். ‘இல்லை ஒன்றுமில்லை’

‘இல்லாமலென்ன… பிரஷர் பார்த்துக் கொண்டால் நல்லதென்று நினைக்கிறன்’

‘செல்வி, திருச்செல்வி, செல்வி, திருச்செல்வி’

இது பெரிய அற்புதம். அந்தச் செல்வியும் இந்தத் திருச்செல்வியும் ஒரேமாதிரி. ஒரே உருவம், ஒரே குரல், ஒரே சிரிப்பு என்பதை வீட்டில் எவருக்கும சொல்லாமல் மனதுக்குள் அடக்கிக்கொள்ள சமரஸேக்கர எவ்வளவு முயற்சியெடுத்தார் என்பதை எண்ணிப் பார்ப்பதும், தனது மனதை வெளிக்காட்டாமல் புகைப்படங்கள் ஒவ்வொன்றாகப் பார்க்கும்போது அவரது சுயரூபம் எவ்வாறாக மாறியதென் கற்பனை செய்துகொள்வது வாசகர்களுக்கே பொறுப்பு.

மாதாந்தம் பிரஷர் பிரஷர் பார்த்துக் கொள்ளும் நிலையத்தில் பதிவான பின்னர் ‘இன்று எனது உடல்நிலை சரியில்லை’ என்று எந்த விடயத்திலிருந்தும் தப்பிக்கொள்ளும் அவகாசம் சமரஸேக்கரவுக்கு கிட்டியிருந்தது. நாளிக்கா திருமணத்தின் பின்னர் செல்லும் உல்லாசப் பிராயணத்திற்கு நக்கல்ஸ் பிரதேசத்தைத் தெரிவு செய்தபோது சமரஸேக்கர உடனடியாக அந்த அனுமதிப் பத்திரத்தை முன்வைத்து, ‘இந்த நாட்களில் உடல்நிலை திருப்தியாக இல்லை’ என்று, இந்தப் பயணத்திற்கென்றால் மனைவி பிள்ளைகளுக்குத் தான் பாடசாலைப் பருவத்தில் ஒரு காதலனாக இருந்தவிதம் தெரியவரக்கூடிய வாய்ப்பிருப்பதாக நினைத்தே அப்படிக் கூறினான். காதலையும் இருமலையும் மறைக்க முடியாதென்பது அவருக்குத் தெரியும். தான் வயதுககுச் சென்றாலும் காதல் வயதுக்குச் செல்வதில்லையென்பதை அவன் மிகத் தெளிவாக அறிந்திருந்தான்.

‘வரும்போது எங்களுக்கும் திருச்செல்வியிடம் வடை சாப்பிட முடியும். நாங்க சென்ற வருஷம் அனுப்பிய ஃபோடோ கிடைத்ததான்னும் கேட்க முடியும். ஆ… உங்களுக்கும் என்னோடு ஃபோட்டோவிலிருந்த கேளை…. அழகானவள் என்று சொனன்Pங்களே அவளையும் பார்க்க முடியும்’ நாளிக்கா தனது கணவனிடம் கூறினாள்.

உடம்புக்கு சரியில்லையென்று சொன்ன கணவரைத் தனியே விட்டுவிட்டு வீட்டுக்கு வெளியே இரண்டு நாளைக் கடத்துவது நல்லதல்ல என்று நினைத்த சமரஸேக்கரவின் மனைவி அவருக்கு உதவியாகத் தங்கிவிட்டபோதும், உல்லாசப் பயணம்  சென்றவர்கள் திரும்பி வரும்வரையில் பொறுமையின்றிக் காத்திருந்தாள்.

‘ஆ அம்மாவுக்கு நாங்க நல்லதொரு செய்தியைக் கொண்டு வந்தோம்’ நாளிக்கா அப்படிச் சொன்ன வண்ணம்தான் வாகனத்திலிருந்து இறங்கினாள். ‘எங்கட வீட்டு வேலைக்கு உதவியாக திருச்செல்வி வாரா. அப்பாவுக்கு சுகமில்லாததால் யாராவது நிற்பது நல்லதல்லவா. ஆனால், அவளை வேறு வீடுகளில் போல வேலைக்காரியாக நடத்த வேண்டாம்.’

‘யார் திருச்செல்வி என்கிறது?’

‘ஏன் அம்மாவுக்கு ஞாபகமில்லையா நாங்க போனமுறை ட்ரிப்பில் கண்டோமே. நாங்க வடை சாப்பிட்டோமே…. அந்த ஃபோடோவிலயும் என்னோட இருக்கிறா’

‘நீங்களெல்லாம் இந்தமுறையும் அங்கு நிறுத்தி வடை சாப்பிட்டீங்களா?’

‘இப்போ அங்கே வடையில்லை. சைனீஸ, ஃபிரைட் ரைஸ்hன் இருக்கு. அந்த இடத்தில் பெரிய கெஸ்ட் ஹவுஸொன்று கட்டியிருக்கு.’

‘இனி…’

‘நாங்க எப்படியோ திருச்செல்வியின் வீட்டை தேடிப் பிடித்தோம். நாங்க அனுப்பின படங்கள் கண்ணாடி பிரேம்களில் இட்டு வீட்டுச் சுவரில் தொங்கவிட்டிருக்கா. அவ தோட்டத்தில் வேல செய்ய விருப்பமில்லை. நோனாமாருக்கு சேவன்ட் ஒருத்தி தேவையென்றா நான் வாரனென்று அவதான் சொன்னா’

‘அப்படீன்னா அவாவின் பிள்ளை? பிள்ளையொன்று இருந்ததல்லவா?’

‘பிள்ளையை திருச்செல்வியின் அம்மா பார்த்துக்கொள்வா’

‘அப்படியென்றா இந்தப் பயணத்திலே கூட்டிக்கொண்டு வந்திருக்கலாமே’

‘அது சரியில்லையே அம்மா. அப்பாவிடம் கேட்க வேண்டுமல்லவா? இல்லாவிட்டால் நாங்க கூட்டிட்டு வந்திருக்கலாம்தான்’

சாய்மனைக் கதிரையில் வசதியாகச் சாய்ந்தபடி இந்த உரையாடலுக்கு காதுகொடுத்துக் கொண்டிருந்த சமரஸேக்கர என்ன நினைத்தாரோ, அவரது முகத்தோற்றம் எவ்வாறாகியது என்பதை யோசிப்பதும் ற்பனை செய்வதும் வாசகரின் பொறுப்பே. எவ்வாறாயினும் தாயினதும் மகளினதும் கலந்துரையாடல் முடிந்து நெடுநேரத்தின் பின்பு கதிரையிலிருந்து எழுந்து நின்ற அவர் கூறிய சில வசனங்களை உங்களுக்கு நான் சொல்கிறேன்.

‘எனக்கு எந்த நோயுமில்லை. எங்கட வேலைய எங்களால் செய்து கொள்ளமுடியும். இவ்வளவு காலமாக இந்த வீட்டில் சேவன்ட்ஸ் இருக்கவில்லை. இன்னும் எங்களுகு;கு சேவன்ட்ஸ் தேவையில்லை.’

நாளிக்கா அப்பாவோடு திருச்செல்வி பற்றி ஒரு வாரத்தின் பின்பே கதைக்க அமர்ந்தாள். அங்கே நாளிக்கா சொன்னதும் சமரஸேக்கர சொல்லாமல் விழுங்கிக் கொண்ட விடயங்களும் இவை.

‘அப்பா, இரண்டு காரணங்களை முன்னிட்டுத்தான் நான் திருச்செல்வியை அழைத்துவர நினைத்தேன். ஒன்று இன்னும் சில நாட்களில் நாங்கள் இருவரும் வீடொன்று வாடகைக்கு எடுத்துக்கொண்டு போகவிருப்பது அப்பாவுக்குத் தெரியும்தானே? அப்போ வீட்டு வேலையையும் அப்பாவின் வேலையையும் அம்மாவால் தனியே செய்துகொள்ள முடியாதல்லவா? அடுததது திருச்செல்வி போன்ற ஒருவருக்கு உதவி செய்ய நான் விரும்புறன்’

‘செல்வி வடை விற்பதைக் காணவும் வீடொன்றில் வேல செய்வதைக் காணவும் நான் விரும்பல்ல. காலையில் குளித்து கொண்டையில் பூச்சூடிக் கொண்டு மெல்லிய நறுமணம் கமழவந்து எங்களோடு ஒன்றாக அமர்ந்து கொள்வதைத்தான் நான் விரும்புறன்.’

2011

சிங்களத்தில்: ஜயத்திலக்க கம்மல்லவீர

தமிழில் : திக்குவல்லை கமால்

000000000000000000000

ஜயத்திலக்க கம்மல்லவீர பற்றிய சிறுகுறிப்பு :

திக்குவல்லை கமால்

J.kamallavera

இவர் எண்பதுகளில் இலக்கியப் பிரவேசம் செய்தவர். நாவல்- சிறுகதை -சிறுவர்/ இளைஞர் இலக்கியங்கள் என்று பல படைப்புக்களைத் தந்தவர்.

இவரது எட்டு நூல்கள் அரச இலக்கிய விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளன. வித்தியாசமானதொரு மொழிநடையே இவரது சிறப்பியல்பாகும்.

‘விபவி’ என்ற மாற்றுக் கலாசார மையத்தின்  முக்கிய செயற்பாட்டாளராக இயங்கியவர்.

‘ பொய் சொல்ல வேண்டாம்’- இவரது மொழிபெயர்ப்புக் கதைகள் சிலவற்றைக் கொண்ட தொகுப்பாகும்.

திக்குவல்லை கமால்

திக்குவல்லை கமால்
ஓவியம் : பிருந்தாஜினி பிரபாகரன்
(Visited 61 times, 1 visits today)
 
திக்குவல்லை கமால்

நந்தினியின் இறுதி தசாப்தம்-நந்தினி சேவியர் நினைவுக்குறிப்புகள்-திக்குவல்லை கமால்

1967 -2021 வரையிலான இலக்கியக் காலத்திற்குரியவர் நந்தினி சேவியர்.இதில் கடைசிப் பத்தாண்டுகளும் கவனிப்புக் குரியது.அதை நந்தினியின் வெற்றித் தசாப்தம் என்று சொன்னாலும் தவறில்லை. அவரது நான்கு நூல்களே இன்று எமக்கு […]