எழுதித் தீரா பக்கங்கள்-நூல் விமர்சனம்-ப தெய்வீகன்

எழுதித் தீரா பக்கங்கள்விமானப்பயணத்தின்போது புத்தகப்படிப்பு என்பது திட்டமிடுவதற்கு சுலபமான விடயம். ஆனால், செயற்படுத்துவது மிகக்கடினம். பறக்கத்தொடங்கி சிறிது நேரத்திலேயே தூக்க பகவான் இமைகளோடு வந்து நின்று டூயட் பாடுவார். அதையும் மீறி உறுதியுடன் எங்கள் வாசிப்பு பயணத்தை தொடங்குவோம் என்றால், முன்னாலிருக்கும் குட்டி டி.விக்களில் சில நல்ல திரைப்படங்கள் இருந்து தொலைத்துவிடும். புத்தகத்தை மடித்துவைத்துவிட்டு அதை பார்க்க தொடங்கினால், படம் முடியும் தருவாயில் முதலில் வந்த தூக்கம் மீண்டும் வந்து ‘ஹலோ’ சொல்லும். இப்படியாக விமானப்பயணத்துக்கும் எனது வாசிப்பு அனுபவத்துக்கும் இடையிலான உறவு அவ்வளவு சொல்லிக்கொள்ளக்கூடியதாக இருந்ததில்லை.

ஆனால், இந்த தடைகளையெல்லாம் மீறி சில புத்தகங்கள் தங்கள் மீதான ஈர்ப்பினை ஏற்படுத்தி தம்மோடு அழைத்துச்செல்வதுண்டு. அந்த ஏகாந்தப்பயணத்தை வாசிக்க ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே உணர்ந்துவிடலாம். கடைசிப்பக்கம் வரைக்கும் விரல் பிடித்து அழைத்துச்சென்று மனமெல்லாம் ஒரு பரவசநிலையைத்தரும்;. “அட, நான் எழுத நினைத்த விஷயங்களையெல்லாம் எழுதியிருக்கிறாரே ” என்ற ஒரு இன்ப அதிர்ச்சியையும் சிலவேளைகளில் ஏற்படுத்தும்.

அப்படியொரு அனுபவத்தை அளித்த புத்தகம்தான் “காலம்” செல்வம் அவர்களின் “எழுதித் தீரா பக்கங்கள்”

புலம்பெயர்ந்த ஒவ்வொருவரது வாழ்வின் பின்னாலும் பல நூறு கதைகள் இருக்கும். புதிய சூழலுக்குள் தம்மை பழக்கப்படுத்திக்கொள்ளும்வரை ஒவ்வொருவரும் போட்ட எதிர்நீச்சல்களும் அவற்றின்போது சந்தித்த அனுபவங்களும் பின்னொரு காலத்தில் நினைத்துப்பார்க்கும்போது சுவாரஸ்யமாக இருக்கும். எம்மை நினைத்து நாமே சிரிப்பதற்கு என்றைக்குமே வெட்கப்படாத சம்பவங்களாக இருக்கும். எப்போதாவது நினைத்துப் பார்க்கும்போதும் எம்மைப்போல ஒருவர் புதிதாக தடுமாறுகின்றபோதும் அந்த நினைவுகள் ஆழ்மனதிலிருந்து எழுந்து வந்து மனசாட்சியை வருடிவிட்டுப்போகும். அப்போதெல்லாம், நாங்கள் எவ்வளவு வெள்ளேந்திகளாக இருந்திருக்கிறோம் என்று எண்ணத்தோன்றும்.

இந்த அனுபவங்ளை ஞாபக சட்டகத்தில் சரியாக நிறுத்தி வைத்திருப்பவர்கள் பாக்கியசாலிகள். அதுவும் அவர்கள் படைப்பாளிகளாக இருந்துவிட்டால் இரட்டை இன்பம். அந்த இரட்டை இன்பத்தின் ஏகபோக உரிமையாளரான செல்வம் அவர்கள், தான் கடந்த நாட்களை வாசகனுடன் உரையாடுவதற்கு தெரிவுசெய்துகொண்ட விதானம்தான் “எழுதி தீரா பக்கங்கள்”

சொந்த நாடுமின்றி, இருக்க வீடுமின்றி கண்ணீரும் கம்பலமையுமாய் மாற்றான் நாட்டின் தெருக்களிலெல்லாம் அகதிகளாய், அநாதைகளாய்….என்று மூக்கை சீறிச்சீறி ஒப்பாரி வைத்த ஒருகோடி புலம்பெயர் கதைகளை கேட்டு காதெல்லாம் கருகிக்கிடந்த வாசகர்களுக்கு – வரிக்கு வரி அங்கதச்சுவையுடன் தனது அனுபவங்களை பகிர்ந்திருக்கும் விதம்தான் செல்வத்தின் எழுத்திலிருக்கும் மிகப்பெரும் பலம். அவரது அந்த அசுரபலம்தான் நூல் முழுவதும் வியாபித்துக்கிடக்கிறது. அவரது எத்தனையோ கனத்த அனுபவங்களையும் லேசாக உணர்ந்துகொள்வதற்கு இந்த மொழிநடை பெரிதும் உதவுகிறது.

இந்த நாவல் மிகவும் வித்தியாசமான நனவிடை தோய்தல். ஏனெனில், முன்னர் குறிப்பிட்டதுபோல தாய்நிலத்தின் வாழ்வை இழந்து புலம்பெயர்வு வாழ்வுக்குள் வந்துவிட்ட எத்தனையோ பேரது எழுத்துக்களை, போரினால் அறுக்கப்பட்ட வாழ்வின் ஏக்கங்களாகவும் உறவுகளின் பிரிவுகளாகவும், ஆக்கிரமிப்பு சக்திகளினால் ஏற்படுத்தப்பட்ட ஆறாத வடுக்களாகவும் இன்னும் பல காயங்களாகவும் கதறல்களாகவும் படித்திருக்கிறோம். பெரும்பாலும் அவை வாசகனை அவலச்சுவையோடுதான் உள்வாங்கியிருக்கின்றன.

மறுபுறத்தில், தாயகத்தின் ஈடுபாடு அறவே இல்லாது தனியே புலம்பெயர்வாழ்வு சம்பந்தமாக எழுதப்பட்ட நாவல்களும்; மனதை பாதித்த ஒருசில சம்பவங்களின் வடிகால் இலக்கியமாக அமைந்திருக்கின்றன. அந்த எழுத்துக்கள் எல்லாம் அநேகமாக புலம்பெயர்ந்த பின்னர் தரிசித்த கலாச்சார அதிர்வுகளினால் வெளித்தெறித்த புனைவுகளாக எழுதப்பட்டிருக்கின்றன. ஒருசில நூல்கள் நிச்சயமாக விதிவிலக்கு.

ஆனால், செல்வம் அவர்களின் நூல் இவை எல்லாவற்றிலுமிருந்தும் முற்றாக வேறுபட்டு ஆங்காங்கே சிதறிக்கிடக்கும் புள்ளிகளை இணைத்து வரையப்பட்ட சித்திராமாக காணப்படுகிறது.
எண்பத்து மூன்றாம் ஆண்டு கலவரத்துக்கு முன்பாகவே ஊரைவிட்டு புறப்பட்டு பாரிசுக்கு வருகின்ற கதைசொல்லி, ஊரில் ஏற்பட்ட அனைத்து சம்பவங்களும் தனது வாழ்விலும் தான் சார்ந்த புலம்பெயர் வாழ்விலும் ஏற்படுத்திய பிரதிபலிப்புக்களை சமாந்தரமாக பதிவு செய்கிறார்.

கதை முழுவதிலும் வந்துகுவிகின்ற பெரும் எண்ணிக்கையிலான பாத்திரங்கள் ஒவ்வொன்றும் வெவ்வேறு குணாதிசயங்களுடன் எவ்வாறு இந்த புலம்பெயர்வாழ்வை எதிர்கொள்கின்றன என்பதை அழகாக விளக்குகிறார்.

புலம்பெயர்வாழ்வில் ஒருவருக்கு ஒருவர் உதவியாக இருந்தால்தான் எதையும் செய்யமுடியும் என்றிருந்த அந்தக்காலப்பகுதியின் யதார்த்தநிலைமையை பல்வேறு கதாபாத்திரங்களின் ஊடாக தொட்டுக்காட்டுகிறார். அந்த கதாபாத்திரங்களுக்கு இடையில் காணப்பட்ட உறவுநிலையை அழகியல் உணர்வோடும் சம்பவங்களின் வாயிலாகவும் உரையாடுகிறார். சாதிநிலை, தாழ்வுமனப்பாங்கு, கீழ்நிலை சிந்தனை போன்ற துருப்பிடித்த துயரமான குணாதிசயம் மிக்க மனிதர்களையும் கதைமுழுவதிலும் ஆங்காங்கே உலாவவிட்டிருக்கிறார்.

தாயகத்திலுள்ள மக்கள் இன்றும்கூட உணரமறுக்கின்ற புலம்பெயர்வாழ்வில் உள்ள மரணவேதனைகளையும் ஒவ்வொரு இடுக்கு இடுக்காக கூட்டிச்சென்று காண்பிக்கிறார்.

ஒரு டயரிக்குறிப்பு போன்ற மேலோட்டமான பார்வையை சிலவேளைகளில் ஏற்படுத்தினாலும் இன்னொரு கோணத்தில் பார்த்தால் ஒரு படைப்பாளியின் ஆவணமாக இதனை பார்க்கவேண்டியநிலை தவிர்க்கமுடியாததாக படுகிறது.

ஒவ்வொரு பாகமாக விரிந்து செல்கின்ற நாவல் முழுவதும் அழகாக ரசிக்கக்கூடிய மிகமுக்கியமான ஒருவிடயம் செல்வம் பயன்படுத்தியிருக்கின்ற உரைநடை. தனது அனுபவத்தை பலர் விமர்சிக்கப்போகிறார்களே இது ஒரு புலம்பெயர் இலக்கியத்துக்கு நீதி செய்யும் பதிவாக அமையுமா என்றெல்லாம் எண்ணி, அகராதியில் தேடும் சொற்களையெடுத்து – தனது பாண்டித்தியத்தை நிரூபணம் செய்யவிளைந்து – வாசகனின் உயிரை வாங்காமல், மிகச்சாதாரணமான உரைநடையுடன் கதைமுழுவதும் வாசிப்பவனுடன் அந்நியோன்யமாக அருகில் நிற்கிறார். இந்த நாவல் மிகவும் மனதுக்கு நெருக்கமான உணர்வை ஏற்படுத்துவதாக பலர் கூறவதற்கு இது ஒரு காரணம். ஓவ்வொரு வரியிலும் மண்மணம் வீசுகிறது.

மேலே குறிபிட்டதுபோல அங்கதச்சுவை சொட்டும் இடங்களிலெல்லம் தனது வழக்கமான நக்கல்களால் போட்டு தாக்கியிருக்கிறார். முக்கியமாக பாரிஸ் போன புதிதில் அந்நாட்டு பெண்களை வளையம் போடுவதற்கு முயற்சித்தவர்களது அனுபவங்கள், மொழிபுரியாமல் திணறிய சம்பவங்கள், காவல்துறையிடம் அகப்பட்டு விழிபிதுங்கி பின்னர் விடுதலையான சாதனைகள் என்று வரிசையாக நீண்டு செல்லும் பக்கங்களில் தனது அச்சொட்டான ஞாபகங்களை அச்சாணியாக வைத்து சுற்றிவர பகிடிகளை அடுக்கிச்சென்றிருக்கிறார்.

இதில் முக்கியமாக ரசிக்கக்கூடியதும் அதேவேளை மிகுந்த அப்பாவித்தனமான பகுதியாகவும் எழுதப்பட்டிருக்கும் 83 கலவரங்கள் நடந்த நாட்களின்போது பாரிஸின் நினைவுகள் நகைச்சுவையுடன் கவலையும் தருபவை.

83 கலவரம் நடந்த காலப்பகுதியில் தங்களது உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதை தொலைபேசி எடுத்து பேசி, அவர்கள் சொன்னதை வேறுமாதிரியெல்லாம் தங்களுக்குள் கற்பனை செய்து பாரிஸில் சிங்கள இளைஞர்களை பிடித்து அடித்த சம்பவங்களையும் – சிங்கள இளைஞர்கள் திருப்பித்தாக்கியதால் தமிழர்கள் வெளியில் திரியவே பயம் நிறைந்த காலமாக இருந்ததையும் சொல்லிவிட்டு – கலவரம் இடம்பெற்றுக்கொண்டிருந்தபோது சிறிலங்கா தூதரகத்துக்கு முன்பாக கூடி அந்தக்காலத்து ஆர்ப்பாட்ட நினைவுகளை அழகாக பகிர்ந்திருக்கிறார்.

அதில் ஒரு சம்பவம் இப்படி வருகிறது.

“சிறிலங்கா தூதரகத்துக்கு முன்பாக நின்றாலும் கோஷமிடவில்லை. கைகளில் தூக்கிப்பிடிக்க சுலோகங்கள் எழுதிய மட்டைகள் இல்லை.

“நான் நின்ற பக்கத்தில் இருந்த குழுவிற்கு தலைமை தாங்கியவர் ஞானவேல்ராஜா. அவருக்கு பாரிஸ் தமிழர்களுக்கு தலைமை தாங்கும் விருப்பமும் திட்டமும் ஏற்கனவே இருந்தது. அவர்தான் கூட்டத்தின் முன்னணியில் நின்று கதைத்துக்கொண்டிருந்தார்.

“தான் இரவு கலைஞர் கருணாநிதியுடன் கதைத்ததாகவும் கலைஞர் அழுது தானும் அழுது பெரிய சோகமாய் போச்சு என்றும் கூறினார்.

“கலைஞர் என்ன சொல்லுறார் என்று எல்லோரும் ஆவலாய் கேட்டபோது, பொறுத்திருந்து பாருங்கோ. நாளைக்க தமிழ்நாடே குலுங்கப்போகுது. இண்டைக்கு முரசொலியில் என்ன தலைப்பு தெரியுமோ? ‘வீறுகொண்டு எழு தமிழா. அவர்கள் நாதியற்றுப் போகவில்லையென இந்த நானிலத்துக்கு காட்ட நாளை கூடுவோம் அண்ணாசாலையில்’ இதை கலைஞர் எனக்கு சொன்னவர் எனப்பெருமைப்பட்டார்.

“தமிழ்நாடு குலுங்கட்டும். நல்லது. இதாலை இந்திராகாந்தி படையனுப்பி இலங்கையில் எஞ்சியிருக்கிற தமிழரை காப்பாற்றுவாரோ? இதுபற்றி ஏதாவது கேட்டனீங்களோ என்று ஒருவர் கேட்டார்.

“இந்திராவை விடு. இப்ப எங்கட அமுதலிங்கம் எங்க ஓடி ஒளிந்துவிட்டார் என்று அவர் திருப்பிக்கேட்டபோது அந்த குழுவுக்குள் முறுகல்நிலை வந்தது. நான் மெல்லமாய் காந்தன் ஆட்கள் நின்ற பக்கமாய் போய் நின்றேன்” – என்று சம்பவம் விரிந்துகொண்டு செல்கிறது.

இந்த பாகத்தை படிக்கும்போது வரலாறு எவ்வளவு மோசமானது என்பது புரிந்தது. ஏனெனில், இதே சம்பவங்கள் 2009 ஆம் ஆண்டு போர் முடிந்தபோது தப்பாமல் மீண்டும் அரங்கேறியதும் அந்த காலப்பகுதியில் புலம்பெயர்ந்த மக்கள் தளம் எவ்வளவு முன்னேற்றகரமான கட்டத்துக்கு வளர்ச்சியடைந்திருந்தபோதும் எதுவுமே செய்யமுடியாத வட்டத்துக்குள்தான் சிறைப்பட்டுநின்றார்கள் என்ற யதார்த்தமும் புரிந்தது.

இந்த நாவலை வாசித்து செல்லுகின்றபோது ஒரு தொடர்ச்சியில்லாத உணர்வு எந்த வாசகனுக்கு ஏற்பட வாய்ப்புண்டு. ஒவ்வொரு பாகங்களும் தனித்தனியே நல்ல அனுபவத்தை கொடுத்தாலும் ஒன்றோடொன்று தொடர்புபடுத்துவதில் சிறு சிக்கலை உணராலம். அதன் காரணம், இந்த நாவலிலுள்ள ஒவ்வொரு பகுதிகளும் கனடாவில் இருந்து வெளிவரும் “தாய்வீடு” இதழுக்கு செல்வம் அவர்கள் எழுதியிருந்தமையும் அவை அனைத்தினதும் தொகுப்பாக இந்த நாவல் வெளிவந்திருப்பதும்தான்.

இந்த நாவல் குறித்த உரையாடல் நீண்டு செல்லவேண்டிய ஒன்று. எழுதி முடிக்க முடியாத நினைவுகளை கிளறும் அடர்த்தி கொண்டது. அந்த வகையில், புலம்பெயர்ந்தவர்கள் மாத்திரமல்லாது இந்த வாழ்வின் பாரத்தை அறிந்துகொள்வதற்கு தாயக வாசகர்களும் நிச்சயம் படிக்கவேண்டிய நாவல்.

ப தெய்வீகன்

 

 

 

 

 

ப தெய்வீகன்

(Visited 116 times, 1 visits today)