‘CONDOM’-சிறுகதை-ப தெய்வீகன்

 

ப தெய்வீகன்இதமான வெய்யில் பாலசிங்கத்தாரின் மொத்த உடம்புக்கும் ஒத்தடம் கொடுத்துக்கொண்டிருந்தது. ஆனாலும் தலையில் ஒரு குல்லா, முழுக்கை ஜம்பர், கழுத்தில் ஒரு மப்ளர், காலுக்கு சப்பாத்து, இவ்வளவற்றையும் இழுத்து போட்டவாறுதான் தனது வழமையான நடைபயணத்துக்கு தயாரானார். ஊர் வெய்யிலுக்கு பழக்கப்பட்ட உடம்பு அவ்வப்போது வெடித்து வெடித்து அடங்கிய மெல்பேர்ன் குளிருக்கும் மழைக்கும் ஒத்துக்கொள்ளவில்லை. கழற்றி கழற்றி போட்டுக்கொண்டிராமல், மூன்றடுக்கு உடுப்பை மூச்சு முட்டுற அளவுக்கு இறுக்கமாக போட்டிருப்பதே அவருக்கு எப்போது சௌகரியம்.

“வீட்டுக்குள்ளேயே அடைபட்டுக்கிடக்காமல் கொஞ்சம் வெளியில நடந்து போய் வாருங்கோப்பா. மறக்காமல், மொபைலை  கொண்டு போங்கோ. இடம் வலம் தெரியாமல் எங்கையாவது துலைஞ்சு போனியள் எண்டா கோல் பண்ணுங்கோ”

“சாப்பாடு மேசையில வச்சிருக்குது”

இவையெல்லாம் ஒவ்வொரு காலையும் பாலசிங்கத்தாரின் மகள் தவறாமல் சொல்லிவிட்டுப்போகும் சுப்ரபாதம்.

0000000000000000000000000

பாலசிங்கத்தார் எப்போதும் தனது பெயருக்குரிய ‘தனித்துவத்தை’ கோர்த்துக்  கதைப்பதில் பெருமை கொள்பவர். தானும் ‘அப்படியான’ ஒரு அறிவாளி என்று மற்றவர்கள் மதிக்கவேண்டும் என்று விரும்புபவர். இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்த பின்னரான ஒரு காலப்பகுதியிலேயே யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கு இடம்பெயர்ந்து அங்கேயே படித்து அரச கணக்காய்வளராக பணிபுரிந்துவிட்டு இளைப்பாறியவர். தான்தான் பிரேமதாசவுக்கு tax செய்ததாக சொல்லி பெருமைப்படுபவர். அதுபற்றியெல்லாம் யாரும் இன்றுவரை விசாரித்து ஊர்ஜிதம் செய்துகொண்டது கிடையாது. இல்லையென்று சொல்வதற்கு பிரேமதாசாவே இப்போது இல்லாததுகூட இன்னொரு வசதி. போன கிழமைகூட நடைப்பயிற்சிக்கு போகும்போது எதிரில் வந்த வெள்ளைக்கார கிழவன் ஒருவருடன் வீம்புக்கு வாயைக்கொடுத்து தனது பிரேமதாசா புராணத்தை அவிழ்த்துவிட்டிருக்கிறார். இவருடைய ஆங்கில உச்சரிப்பினால் tax என்பதை வேறு மாதிரி விளங்கிய வெள்ளைக்கார கிழவன் பாலசிங்கத்தாரை ஏற இறங்க பார்த்து சிரித்துவிட்டு போய்விட்டார். கற்றவருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என்று சிறுவயதில் படித்தது போல தான் போற இடமெல்லாம் தனக்கு மற்றவர்கள் மதிப்பு தரவேணும் என்றும் தங்களது குடும்பத்துக்கு ஒரு திமிர்மிக்க திறமை உண்டு என்றும் மூச்சுக்கு மூச்சு நம்புபவர் பாலசிங்கத்தார்.

இப்போது tourist விஸாவில் மெல்பேர்னில் உள்ள மகள் ஜனனி வீட்டுக்கு வந்திருக்கிறார்.

0000000000000000000000000000000000

வீட்டிலிருந்து வெளியே வந்தால், சிறிய ஒழுங்கை ஒன்று, அதில் ஓரமாக அரைக்கிலோ மீற்றர் நடந்தால் போக்குவரத்து அதிகம் இல்லாத நாற்சந்தி, அதிலிருந்து இடப்பக்கமாக திரும்பி கொஞ்சத்தூரம் நடந்துபோனால் பாடசாலை ஒன்று. அதைச்சுற்றி நடந்து போக, ஒரு நீண்ட தெரு. கூட்டி கழித்துப்பார்த்தால், ஒரு மூன்று கிலோ மீற்றர் அப்படியே நடந்துவர மீண்டும் வீட்டுக்கு வந்துவிடலாம்.

இந்த சுற்றுவட்டத்தை தனது தேகசுகத்துக்கு ஏற்ற வேகத்துடன் நடந்து வீடு வந்து சேருவது பாலசிங்கத்தாருக்கு ஒவ்வொரு நாளும் ஒரு சாதனை. வீடு வந்தவுடன் தனது ஆயுளில் ஒரு பாதி கூடிவிட்டதைப்போன்ற திருப்தியுடன் மகளை தொலைபேசியில் அழைத்து தனது நடைபுராணத்தை சொல்வார்.

பிறகு அவருடன் கொழும்பில் வேலை செய்துவிட்டு அவரைப்போவவே இப்போது மெல்பேர்னில் வசிக்கும் பேர்னாட்டையும் அழைத்துப்பேசுவார். அவரையும் நடக்கப்போகுமாறு ஆலோசனை கூறுவார். தினமும் நடப்பதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் பற்றி வகுப்பெடுப்பார். போன் வைப்பதற்கு முதல் “These idiots Sampanthan and Maavai are never going to change” என்று தனது இலங்கை ஆய்வை ‘திருச்சிற்றம்பலம்’ சொல்லி முடிப்பார்.

இப்படி ஒரு சீரான வட்டத்தில் இயங்கும் பாலசிங்கத்தாரின் அன்றாட அட்டவணையில் ஒருநாளாவது முன்னுக்கு பின் ஏதாவது குழறுபடி நடந்துவிட்டால், பயங்கரமாக குழும்பிப்போவார்.

ஒரு மாசத்துக்கு முன்பு இப்படித்தான், வழமைபோல நடக்கப்போகும்போது வீதி திருத்தும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள், இவரை இன்னொரு ஒழுங்கை வழியாக நடந்துபோகும்படி கேட்டிருக்கிறார்கள். வீதியை தாங்கள் கிண்டி கிளறி வேலை செய்வதால், அந்தப்பகுதியால் போவது இரண்டு மணி நேரத்து தடை செய்யப்பட்டிருப்பதாக கூறியுள்ளார்கள். பாலசிங்கத்தாருக்கு வந்துதே டென்ஷன். உடனடியாக மகளுக்கு போன் பண்ணி, “இப்படி செய்வது கவுன்ஸில் சட்டத்துக்கு எதிரானது. இவர்கள் இப்படி வீதியை தோண்டப்போகிறார்கள் என்றால், அயலட்டையில் இருக்கிற சனத்துக்கு முற்கூட்டியே அறிவித்திருக்கவேணும். “They have to follow the rules” என்று பொங்கினார். பாலசிங்கத்தாரின் மகளுக்கோ வேலையில் பயங்கர பிஸி. “விடுங்கோ அப்பா, நீங்கள் வீட்டை  வந்திட்டியள்தானே” என்று கெஞ்சினாள். ஆனால், பாலிசிங்கத்தார் அடங்கவில்லை. “பிள்ளை தெரியும்தானே, நான் கொழும்பில பிரேமதாசாவுக்கு tax செய்த ஆள். இந்த கவுன்ஸில் ஆட்கள் எல்லாம் எனக்கு படிப்பிக்க ஏலாது” என்று ஒரு புரட்சித்திமிரோடு போனை வைத்தார். மொத்தத்தில் ஆள் கொஞ்சம் கொதியர் என்றும் சொல்லலாம். மற்றும்படி சூது வாது தெரியாத நல்ல மனுசன்.

அன்றும் வழக்கம்போல செல்ல நடைபோட்டுக்கொண்டு வழக்கமான ரூட்டில் வெளிக்கிட்டார். மெல்ல மெல்லப்  போய்க்கொண்டிருந்தவர், பாடசாலை உள்ள திருப்பத்துக்கு அருகே உள்ள மரத்துக்கு கீழே மூன்று நான்கு பெண் பிள்ளைகள் ஏதோ பரபரப்பாக நின்றுகொண்டிருப்பதை கண்டார்.

என்ன பெயர் என்று தெரியாது. ஆனால், உயர்ந்து விரிந்த பரந்த மரம். பாடசாலை வளவினுள் விசாலமாக நிழல் பரப்பிக்கிடப்பதால், அதனைத்  தறிக்காமல் விட்டிருக்கிறார்கள். அந்த மரத்துக்கு கீழே பெயர் தெரியாத பல தாவரங்கள் அடர்த்தியாக வளர்ந்து அழகான பற்றையாக கிடந்தது. வழக்கமாக அந்த பகுதியால் நடந்து செல்லும்போது எதையும் அவதானிக்காத பாலசிங்கத்தார், அன்று அந்த பற்றைகளுக்குள் கலவரப்பட்டுக்கொண்டு நின்ற பாடசாலை மாணவிகளை கண்டு கொஞ்சம் குழம்பிப்போனார். நடையின் வேகத்தை கொஞ்சம் கூட்டினார். முடக்கை அண்டிய மரத்தடிக்கு அருகாக போய்நின்று நெற்றியை சுருக்கிக்கொண்டு பார்த்தார். மூன்று நான்கு மாணவிகள் பாடசாலை சீருடையுடன் அந்த மரத்துக்கு பின்னால் பதுங்கிக்கொண்டு நின்றார்கள். பாலசிங்கத்தாருக்கு உடனடியாக ஒன்றும் தெரியவில்லை. கண்ணாடியை ஒற்றை விரலால் மூக்கிலிருந்து கொஞ்சம் உயர்த்திக்கண்ணுக்கு நேராக வைத்துக்கொண்டு கழுத்தை கொஞ்சம் முன்னுக்கு தள்ளி உற்றுநோக்கினார்.

அந்த மாணவிகள் பற்றைகளுக்குள் ஒழிந்துநின்று சிகரெட் பிடித்துக்கொண்டிருந்தார்கள். இரண்டு இரண்டு சிகரெட்தான். அவற்றை அதில் நின்ற நான்கு பெட்டைகளும் மாறி மாறி இழுத்தனர். ஏகாந்த பெருமிதத்தோடு வானை நோக்கி புகையை தள்ளினார்கள். வெளியில் விட்ட புகைவளையம் போலவே பாலசிங்கத்தாரின் கண்களும் விரிந்தன. ஏங்கிப்போனார். அந்த மூலையில் இன்னொரு மரம் போல நின்று மாணவிகள் அனைவரையும் துருதுருவென்று பார்த்தார். தன்னை கண்டவுடன் அத்தனை போரும் சிகரெட்டை கீழே போட்டுவிட்டு பார்த்து பார்த்து ஓடவேண்டுமே என்பதுதான் பாலசிங்கத்தாரது பார்வையின் எதிர்பார்ப்பாக இருந்தது. கூடவே கொஞ்சம் விடுப்பும். ஆனால், நான்கு மாணவிகளும் அவரை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. சொல்லப்போனால், திரும்பி பார்க்கவே இல்லை. ஒருத்தி இழுத்துவிட்டு கொடுத்த சிகரெட் மற்றவளின் கைகளுக்கு மாறியபோது சற்று அணைந்துவிட்டது. உடனே அவள் மேற்சட்டைக்குள் தனது பிராவின் ஒற்றைப்பக்கமாக கையை விட்டு அங்கு ஒழித்துவைத்திருந்த லைற்றரை எடுத்து அழகாக பற்றவைத்து மீண்டும் இழுத்து ஊதினாள். அவர்கள் சிகரெட் பிடிக்கும் பாணியை பார்த்தால் புதுப்பழக்கம் மாதிரியும் தெரியவில்லை. ஆனால், பாடசாலை ஆசிரியரோ, அதிபரோ எவருக்கோ பயந்துதான் ஒளித்திருந்து இந்த காரியத்தை செய்கிறார்கள் என்பது மட்டும் பாலசிங்கத்தாருக்கு புரிந்தது.

அவர்கள் சிகரெட் பிடித்துக்கொண்டிருந்ததைவிட தன்னை ஒரு பொருட்டாக அவர்கள் மதிக்கவில்லை என்பதுதான் பாலசிங்கத்தாருக்கு முகத்தில் அறைந்தது போலாகிவிட்டது. பயங்கர கோபத்துடன் தொடர்ந்து நடந்தார். தனது கோபத்தை எல்லாம் நடையின் வேகத்தில்தான் காட்டினார். வழக்கத்துக்கு மாறாக உணர்ச்சி வசப்பட்டு நடந்ததால் கால்களும் கொஞ்சம் வலிககத்தொடங்கிவிட்டன. பாலசிங்கத்தார் விடவில்லை. விரைவாகவே வீடு வந்து சேர்ந்தார். மேசையிலிருந்த செம்பில் தண்ணியை பிடித்து ‘மொடக் மொடக்’ என்று குடித்தார். பின்னர், செற்றியில் அமர்ந்திருந்து யோசித்தார்.

000000000000000000000000000

எல்லோரும் ஒரு கோணத்தால் ஒரு விஷயத்தை பற்றி யோசித்தால், தான் மிகவும் நுட்பமாக வேறு திசையில் சிந்திக்கும் ஆற்றலுடையவராக தன்னை நம்புபவர் பாலசிங்கத்தார். அதோபோலவே, சற்று முன்னர் நடந்த சம்பவமும் அவரை வேறு முனைகளின் வழியாக சிந்திக்க தோன்றியது.

அதில் சிகரெட் பிடித்துக்கொண்டு நின்ற பள்ளி மாணவிகளுக்கு நிச்சயமாக பதினெட்டு வயது இருக்காது. மிஞ்சி மிஞ்சி போனால், ஒரு பதினைந்து பதினாறு இருக்கும். பாடசாலைக்கு வந்து சீருடையுடன் பாடசாலை வளவினுள் ஒழித்துக்கொண்டு இவர்களால் சிகரெட் பிடிக்க முடியுதென்றால், இவர்களுக்கு எவ்வளவு துணிச்சல், எவ்வளவு திமிர் என்று ஏதேதோ எல்லாம் யோசித்தார். தண்ணி, சிகரெட் எந்த பழக்கமும் இல்லாத பாலசிங்கத்தார் மெல்பேர்னில் ஒரு பார்ட்டிக்கு போனபோது “பாலா, இந்த நாட்டில டேபிள் மனேசுக்கு இதெல்லாம் கொஞ்சமாக எடுக்கவேணும்” – என்று பேர்னாட் சொன்னபோதும் வலுக்கட்டாயமாக தனது விரதத்தை கடைப்பிடித்தவர் பாலசிங்கத்தார். ஏன், தலைக்கு dye கூட அடிக்கமாட்டார். “இடையிடையில தள்ளிக்கொண்டு நிற்கின்ற கறுப்பு மயிர்களை பார்க்க கேவலாமா கிடக்கப்பா, முழுதா ஒருக்கா டை அடியுங்கோவன்” என்று மகள் ஜனனி சொன்னாலும், “I dye only once” என்றொரு மொக்கை பகிடியை சொல்லி அவளை சமாளித்துப்போடுவார்.

“சிகரெட், அதுவும் பொம்பிளை பிள்ளையள், போதாக்குறைக்கு பள்ளிக்கூடத்தில” – என்று மூன்று விஷயங்களும் சூரியனை சுற்றும் கிரகங்கள் மாதிரி பாலசிங்கத்தாரின் மண்டைக்குள் சுற்றிக்கொண்டிருந்தது.

அப்போதுதான், உப கிரகம் போல இன்னொரு விஷயமும் அவரது மண்டைக்குள் பொறி தட்டியது. தன்னுடைய பேரனுக்கும் பதினேழு வயதாகிறது. அவனுக்கும் இப்பிடியான பழக்கம் ஏதாவது இருக்குமோ என்ற கள்ள எண்ணம் ஒன்று மூளைக்குள் உசைன் போல்ட் மாதிரி ஓடி மறைந்தது. “ஒரு நாளும் பிள்ளையளை  சந்தேகப்பட்டு சந்தேகப்பட்டு வளக்கக்கூடாது. பிறகு அதுகள், எங்கள விட்டு நிரந்தரமாக ஒதுங்கிப்போகுங்கள்” – என்று தானே பலரிடம் சொன்ன அறிவுரைகள் எல்லாம் மனதுக்குள் வந்து வந்து போனது. ஆனால், சற்று முன்னர் தான் கண்ட காட்சியும் தனது பேரன் மீது இருக்கும் அளவுகடந்த பாசமும் அவரை ஒரு திருட்டுத்தனமாக சிந்திக்கும் மர்ம மிருகமாக மாற்றியது. பொதுவெளியில் வெளிப்படையாக சிந்திக்கும் கல்விமானாக தன்னை எப்போதும் நிலைநிறுத்திக்கொள்ளும் பாலசிங்கத்தாரின் வெள்ளை மனதின் மீது சுயநல தூறல்கள் மெல்ல மெல்ல விழத்தொடங்கின.

முழுமையான ஒரு கள்ள மௌனத்தோடு எழுந்தார். நேரே பேரனின் அறைக்கு போனார். பாதி திறந்து கிடந்த கதவை மெதுவாக தள்ளிக்கொண்டு உள்ளே போனவர், மேலோட்டமாக அறையை நோட்டமிட்டார். பள்ளிக்கூடம் போய்விட்ட அவனது அறை வெறிச்சோடிக்கிடந்தது. பின்லேடனை சுட்டுக்கொன்ற இடம்போல அறை  கிடந்தது. நாலாபக்கமும் உடுப்புகள் எறிந்து கிடந்தன. முலையில் கிடந்த கம்பியூட்டருக்கு மேல் எப்பவோ குடித்த தேனீர் கோப்பை. அதன் அருகிலேயே உருண்டு திரண்ட இரண்டு ஜட்டி. தலைமாட்டில் ஒரு டொய்லட் பேப்பர் சுருள். ஏன் என்று அவருக்கு விளங்கவில்லை. கட்டிலுக்கு கீழே சாப்பிட்டுவிட்டு தள்ளிவிடப்பட்டிருந்த மூன்று நான்கு தட்டுகள், அவற்றில் பீட்சா துண்டுகள், கரண்டிகள் என்று எல்லாமே கிட்டத்தட்ட அங்கு ஒரு வாரத்துக்கு முன்பு வந்த தஸ்தாவேஜூக்களாக காணப்பட்டன.

சகட்டுமேனிக்கு பிசிறி அடித்த எல்லா வகை சென்ற் வாசங்களும் துவைக்காத உடுப்பு நாற்றமும் பாலசிங்கத்தாருக்கு அங்கு போன காரணத்தையே மறக்கடித்துவிடுவதுபோல தலையை சுற்றியது. ஆனாலும் அவர் அசரவில்லை. சுதாரித்துக்கொண்டு அறையின் கரையிலிருந்த கண்ணாடி கதவை மெதுவாக தள்ளினார். வெளியில் கிடந்ததுபோலத்தான் உள்ளேயும் கிடந்தது. உடுப்புக்களை விலத்திப்பார்த்தார். தூக்கிப்பார்த்தார். சிலதை உதறிப்பார்த்தார்.

பேரன் சிகரெட் குடிப்பவனா என்பதை கண்டுபிடிப்பதற்குத்தான் இவ்வளவு அழிச்சாட்டியமும். ஏதோ தேச விடுதலைக்காக போராடுவதைப்போல அவருக்கு உள்ளுக்குள் ஒரு பெருமையும் அதேவேளை கொஞ்சப்பயமும் ஒருங்கே ஓடிக்கொண்டிருந்தது.

அந்த அலுமாரி மேல் தட்டில் ஐந்தாறு சீ.டிக்கள் நிறைந்து கிடந்த ஒரு பெட்டி ஒன்றிருந்தது. அதை கொஞ்சம் தள்ளிப்பார்த்தார். பச்சை நிறத்திலொரு சிறிய பெட்டி. கையில் எடுத்துப்பார்த்த பாலசிங்கத்தாருக்கு ‘பக்’ என்று இருந்தது. வேறொன்றுமில்லை, ஏற்கனவே உடைக்கப்பட்ட condom பெட்டி ஒன்று. பாலசிங்கத்தாருக்கு பின்னால் யாரோ வந்து பிடரியில் அடித்ததுபோல இருந்தது. திடீரென்று திரும்பி பார்த்தார். யாருமில்லை. Condom பெட்டியை கண்டதால் ஏற்பட்ட அதிர்ச்சிதான் அது என்று புரிந்துகொண்டார். அந்த அறைக்குள் தான் நின்றுகொண்டிருப்பதையே உணராமல் கிளறிக்கொண்டிருந்தவருக்கு அந்த சிறிய பெட்டியை கண்டதும் உடம்பு சூடேற தொடங்கிவிட்டது. ஏற்கனவே நடந்து வந்த களைப்பு, இளைப்பாறியிருந்த உடம்பில், ஒருமாதிரி ஊசியால் குத்துவது போலக்கிடந்தது. Condom பெட்டியையும் எடுத்துக்கொண்டு அறைக்கு வெளியே வந்தார். மறுபடியும் செற்றியில் அமர்ந்தார். எதையோ தேடிப்போக பேரன் இப்படி ஒரு அதிர்ச்சியை கொடுத்துவிட்டானே என்று அவரால் நம்பவே முடியவில்லை. Condom பெட்டியை வெளியே வாசித்துப்பார்த்தார். உள்ளே எத்தனை குறையுது என்றும் எண்ணிப்பார்த்தார்.

பாலசிங்கத்தாரின் பேரனுக்கு பதினேழு வயது. பேயர் ஜதுஷன். ஒரே ஒரு பிள்ளை என்று பயங்கர செல்லத்துடன் வளர்த்தாள் பாலசிங்கத்தாரின் மகள் ஜனனி. லண்டனில் பிறந்தவன். மெல்பேர்னுக்கு குடும்பமாக குடிபெயர்ந்த பிறகு பிரைவேட் பாடசாலையில் அவனை சேர்த்து பணத்தை அள்ளி இறைத்துப்  படிப்பிக்கிறார்கள். தமிழ் சுத்தமாக வாயில் வராது. தாயும் தகப்பனும் தமிழில் கேட்கும் கேள்விகளுக்கு ஆங்கிலத்தில் பதில் சொல்வான். இவர்களும் அதை விளங்கிக்கொண்டு தமிழில் பதிலளிப்பார்கள். வெளிநாடுகளில் உள்ள அடுத்த தலைமுறையினர் அநேகரைப்போன்ற ஒருவன்.

பாலசிங்கத்தாருக்கு தனது ஒரே பேரன் என்று அவனில் நல்ல பாசம். ஆனால், அவனோ இவரை ஏதோ வீட்டுக்குள் வாடகைக்கு இருப்பவரை போலத்தான் பார்ப்பான். பெரிதாக ஒட்டுவதில்லை. இவர் கதைக்கும் அரைவாசி ஆங்கிலம் அவனுக்கு விளங்குவதுமில்லை. கதைக்க ஆரம்பிக்கும் போதெல்லாம், பாலசிங்கத்தாரும் பிரேமதாசா, tax என்று தன்னுடைய சுய தம்பட்டத்தை விடமாட்டார். ஆகவே, காலப்போக்கில், “ஹலோ” என்ற சொல்லுக்குள்தான் இருவரும் தங்கள் அனைத்து உணர்வுகளையும் அடக்கி வைத்துக்கொண்டனர்.

அவனது அறையிலிருந்து Condom பெட்டியை எடுத்தது பாலசிங்கத்தாருக்கு சற்றுமுன் பள்ளி மாணவிகள் செய்த காரியத்தையே மறக்கடித்திருந்தது. அல்லது, அது எவ்வளவோ பரவாயில்லை என்று மனதின் மூலையில் அதை ஓரமாக தட்டிவிட்டிருந்தது.

மெல்பேர்னுக்கு வந்ததுக்கு பாலசிங்கத்தார் இப்படி ஒருநாளும் அங்கலாய்த்திருக்கமாட்டார். சிவனே என்று தன் பாட்டுக்கு வீடு, நடை, சாப்பாடு, மாத்திரை, பேர்னாட், தூக்கம் என்றிருந்தவரை தூக்கி வாரிப்போட்டுவிட்டது. எல்லாம் இவர் பார்த்த வேலையால்தான் இந்த நிலமை. இப்போது இதை மகளிடம் சொல்வதா? மகளோடு பேசக்கூடிய விஷயமா?

உலகின் மிக மதிப்புள்ளதாக அவர் கருதும் தனது மூளையால் பல விஷயங்களை யோசித்தவிட்டு ஒரு முடிவுக்கு வந்தார். முதலில் குளிப்பது என்று தீர்மானித்தார். கையில் கிடந்த கொண்டம் பெட்டியை மேசையில் வைத்துவிட்டு, விறு விறு என்று போய் குளித்தார். தலையில் ஷவரை திறந்துவிட்டுவிட்டு இதே நினைப்பாக வழமைக்கு மாறாக கன நேரம் குளித்தார். வெளியில் வந்து உடம்பை துவட்டிக்கொண்டிருந்தபோது, வீட்டுக்குள் யாரோ வந்துவிட்ட சத்தம் கேட்டது.

பாலசிங்கத்தாருக்கு “திக்” என்றிருந்தது.

“யாரது”

“அது நான்தான் அப்பா” என்றாள் பாலசிங்கத்தாரின் மகள்.

பாலசிங்கத்தார் இன்னும் குழம்பிப்போனார். “வழக்கமாக நான்கு மணிக்கு வேலையால வாறவள், இண்டைக்கு ஏன் இவ்வளவு நேரத்தோடு வந்தவள்” என்று யோசித்தார்.

“ஐயையோ மேசையில் condom பெட்டி கிடக்கிறதே” குளித்த கையோடு குண்டியில் யாரோ பிரம்பால் அடித்ததுபோல இருந்தது. வயிற்றுக்குள் ஏதோ செய்யத்தொடங்கியது. குளித்த உடம்பு சாதுவாக வியர்க்க தொடங்கியது.

எதையும் காட்டிக்கொள்ளாமல், வெளியில் போய் condom பெட்டியை எடுத்து ஒழிக்கும் திட்டத்துடன் அவசர அவசரமாகத் தலையை துவட்டினார். சேர்ட்டையும் அணிந்துகொண்டு வெளியில் வந்தார்.

மகளை பார்க்கும் முன்னரே மேசையை பார்த்தார்.

condom பெட்டியை காணவில்லை.

அதற்குப்  பிறகுதான் குசினிப்பக்கமாக திரும்பி திருட்டு பார்வை ஒன்று பார்த்தார். வேலையால் வந்த உடுப்பை மாற்றாமல், குசினிக்குள் தேனீர் போட்டுக்கொண்டு நின்றாள் ஜனனி. பாலசிங்கத்தாரை நிமிர்ந்தும் பார்க்காமல், தேனீரை கலக்கியபடி நின்றாள்.

பாலசிங்கத்தாருக்கு எப்படி கதையை தொடங்குவது, எந்த கதையை தொடக்குவது. ஓன்றும் புரியவில்லை.

“இந்தாங்கோப்பா தேத்தண்ணி” என்று மேசையில் தேத்தண்ணியை வைத்தவிட்டு –

“எனக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லை. அதுதான நேரத்தோட வந்தனான். படுக்கப்போறன். யாரும் கோல் பண்ணினா நித்திரை எண்டு சொல்லுங்கோ” என்று சொல்லிக்கொண்டு தனது அறையை நோக்கிப்போனாள்.

பாலசிங்கத்தாரின் நிலமை இப்போது ஆப்பிழுத்த குரங்கு போலாகவிட்டது.

condom பெட்டி மேசைக்கு கீழே எங்காவது விழுந்திருக்குமோ என்று குனிந்து நிமிர்ந்து பார்த்தார். கதிரையை தள்ளி பார்த்தார். அப்போது திடீரென்று அறையிலிருந்து வெளியில் வந்த ஜனனி, “இந்த போனை சார்ஜில போட்டுவிடுறன். யாரும் அடிச்சா எடுக்காதேங்கோ அப்பா” என்றுவிட்டு, குசினிக்குள் இருந்த பிளக் பொயிண்ட்டில் மொபைல் போனை சார்ஜில் மாட்டிவிட்டு மீண்டும் அறைக்குள் போய்விட்டாள்.

இப்போது இன்னும் கள்ளத்தில் மாட்டிக்கொண்டார் பாலசிங்கத்தார். இவர் குனிந்து பதுங்கி condom பெட்டியை தேடிக்கொண்டு நின்றதை ஜனனி பார்த்தும் பார்க்காதது போல போய்விட்டாளா?

மகளுக்கு முன்னால் ஒரு குற்றவாளிபோல உணர்ந்தார். இதயத்துடிப்பு எகிறியது. பிரஷர் குளிசை ஒன்றை எடுத்து போடுவமோ என்றும் யோசித்தார். வீட்டுக்குள் நிற்கவே பாலசிங்கத்தாருக்கு கால் நடுங்கியது. ஏதோ செய்யப்போய் கடைசியில் மகள் தன்னை வேறு மாதிரி நினைத்துவிட்டாளோ, இல்லாவிட்டால் வேறெப்படி நினைப்பாள் என்றெல்லாம் நினைத்து கொஞ்ச நேரத்துக்குள் பயங்கரமாக குழம்பி, தேனீரையும் குடிக்க மறந்து மீண்டும் தனது வழக்கமான பாதையில் நடப்பது என்ற முடிவோடு வீட்டைவிட்டு வெளியே இறங்கினார்.

00000000000000000000000000

மருமகன் வீடு வரும் நாலரை மணிவரை குறைந்தது மூன்று தடவையாவது தனது வழக்காமன ரூட்டில் நடந்திருப்பார். இயலாமல், ஆங்காங்கே கடையோர கற்குந்துகளில் இருந்தார். எழுந்தார். செய்யாத குற்றத்துக்கு இத்தனை வயதில் இப்படியொரு தண்டனையை அனுபவிக்கும் தன்னிலை கண்டு நொந்துகொண்டார். மனதைவிட கால் பயங்கரமாக நோகத்தொடங்கிவிட்டது.

ஏதாவது ஒரு முடிவு காண்பது என்ற தீர்மானத்துடன், நேரே வீட்டுக்கு போனார். வெளியே மருமகனின் காரை கண்டதும் ஓரளவுக்கு நிம்மதியாக இருந்தது. இருந்தாலும் எப்படி விஷயத்தை கையாளுவது என்றுதான் தெரியவில்லை.

கதவை திறந்துகொண்டு உள்ளே போனபோது, மருமகன் வாகீசன் நடு ஹோலில் நின்று வேலை உடுப்பை மாற்றமலேயே ஏதோ பிஸியாக இருப்பதை கவனித்தார். ஜனனி அப்போதுதான் அறைக்குள்ளிருந்து வெளியே வந்தாள்.

மேற்கொண்டு விஷயத்தை இழுக்காமல் தனக்கு நிம்மதி வேணும் என்று மனசுக்குள் முடிவெடுத்தார் பாலசிங்கத்தார்.

“வாகீசன். உங்களோட கொஞ்சம் கதைக்க வேணும்” என்றார்.

ஜனனிக்கு முன்பாக இதுவரை அவர் ஒருபோதும் இப்படி பேசியிராத அந்தப்பாணி ஏதோ யோசனையிலிருந்த வாகீசனுக்கு புதிராக இருந்தது. சுதாகரித்துக்கொண்டு –

“ஓம். வாங்கோ மாமா. இருங்கோவன்”

ஜனனி அறைக்குள் போய்விட்டாள்.

விஷயத்தை ஒரு மாதிரி மருமகனிடம் இறக்கிவைத்தார்.

“நான் சொன்னதாக சொல்லவேண்டாம். வீட்டுக்குள்ள ஏன் வீண் பிரச்சினையை. ஆளிண்ட போக்குவரத்தை கொஞ்சம் பார்த்து வையுங்கோ” என்று பாலசிங்கத்தார் தனது புராணத்தை முடித்தார். பிரசவ வலி நின்றது போல பெருமூச்சொன்றை இழுத்துவிட்டார்.

நேரம் குறித்து வந்ததுபோல, முன் கதவை திறந்துகொண்டு பாலசிங்கத்தாரின் பேரன் வந்தான். பாடசாலை சீருடையுடன், அவனிலும் பாரமான ஒரு புத்தகப்பையை தூக்கிக்கொண்டு வந்தவன், வாசலில் சப்பாத்தை கழற்றினான்.

திரும்பிப்பார்த்த பாலசிங்கத்தாருக்கு போன தலையிடி திரும்பி வந்துவிட்டது.

“இவன் ஏனப்பா இப்ப வந்தவன். கொஞ்சம் பிந்தி வந்திருக்கக்கூடாதா” – என்று நினைத்துக்கொண்டு திரும்ப, முன்னுக்கு இருந்த வாகீசன் விறுக்கென்று எழும்பி மில்லி செக்கனில் வாசலடியில் போய், மகனுக்கு விட்டார் ஒரு அறை. பங்கருக்குள் ஷெல் விழுந்த மாதிரி, எதிர்பாராத அடியால் மலைத்துப்போன பெடியன், எந்த மொழியிலும் இல்லாத ஒரு புது மொழியில் குழறினான். குழைக்கு கிட்ட ஆட்டை இழுத்து வருவதுபோல வாசலிலிருந்து மகனை செவியில் பிடித்து இழுத்துக்கொண்டு வந்தார் வாகீசன்.

“சொல்லடா, எங்காலையடா உனக்கு கொண்டம். யாரடா உந்த நாய்ப்  பழக்கம் பழக்கினது” என்று மகனை இழுத்து வந்து, பாலசிங்கத்தார் இருந்த செற்றிக்கு முன்னால் கொண்டு வந்து போட்டார் வாகீசன்.

பாலசிங்கத்தாருக்கோ அவனுக்கு விழுந்த அடி, தனக்கு விழுந்தது போல கிடந்தது. மருமகன் இவ்வளவு மொக்குத்தனமாக தனக்கு முன்பாகவே மகனை போட்டு அடிப்பார் என்று அவர் எதிர்பார்க்கவில்லை. தான் நினைத்ததைவிட நிலமை மோசமாகிவிட்டதை உணர்ந்து அதில் தான் என்ன பாத்திரத்தை வகிப்பது என்று தெரியாமல் முழித்தார்.

மகன் குழறிய சத்தத்தைக்கேட்டு அறையை விட்டு ஓடிவந்த ஜனனி – “அடியாதேங்கோப்பா…… அடியாதேங்கோ” என்று ஓடிப்போய் மகனுக்கும் புருசனுக்கும் இடையில் பாய்ந்தாள்.

“What happened to him mum. He is just hitting for no reason” என்று கன்னத்தை பொத்திக்கொண்டு அழுதான்.

“பள்ளிக்கூடம் போறார், ரியூசன் போறார் என்று போற இடமெல்லாம் தனிய அனுப்பினா, துரைக்கு கொண்டம் கேக்குதாம்” – என்று பல்லை நெருமிக்கொண்டு ஜனனிக்கு மேலால் பாய்ந்து அடுத்த அடி அடிக்கப்போக, ஜனனியும் மகனும் சம நேரத்தில் ஆளையாள் முழுசிப்பார்த்துக்கொண்டே, வாகீசனின் அடியிலிருந்து தப்புவதற்கு செற்றியின் அடுத்த ஓரத்தில் போய் விழுந்தார்கள்.

“இண்டைக்கு முழு உண்மையையும் சொல்லாட்டி உன்னை கொல்லாமல் விடாமாட்டன்” – என்று உச்சஸ்தாயியில் கத்தினான் வாகீசன்.

“ஜனனி. நீ தள்ளு. அவனை நான் விசாரிக்கவேணும்” என்றான் வாகீசன்.

“No ………mum. Don’t leave me. He will hit me again” – என்று ஜனனியின் சட்டையை இழுத்துக்கொண்டு குழறினான் மகன்.

“நீங்கள் முதல் போய் உடுப்பை மாத்தி குளிச்சிட்டு வாங்கோ. நான் அவனிட்ட விசாரிக்கிறன்” – என்றாள் ஜனனி.

“இல்லை. இவனை விசாரிச்சுப்போட்டுத்தான் இண்டைக்கு இதில இருந்து நான் வெளிக்கிடுவன். நீ இஞ்சால வா” – என்று நாண்டு கொண்டு நின்றான் வாகீசன்.

இந்த ஒட்டு மொத்த கலவரத்துக்கும் காரணமான பாலசிங்கத்தார் இவ்வளவும் நடக்கும்போது என்ன செய்வது என்று தெரியாமல், வொலி போல் மேட்ச் பார்க்கிற மாதிரி, வாகீசனையும் ஜனனியையும் மாறி மாறி பார்த்துக்கொண்டு அதிர்ந்து போய் இருந்த இடத்தை விட்டு எழும்பாமல் பயத்தில உறைந்துபோய் கிடந்தார்.

கோபத்தை தணிப்பதற்கு குசினிக்குள் போய் செம்பில் தண்ணீரைப்பிடித்து மட மடவென்று குடித்தான் வாகீசன்.

கன்னத்தை பிடித்துக்கொண்டு அழுதுகொண்டிருந்த மகனை தன் பக்கத்தில் இருத்திய ஜனனி தலையை தடவிவிட்டாள் –

“சரி. அழாத. அப்பா அடிக்கமாட்டார். என்னட்ட சொல்லு. எங்காலையடா கொண்டம் பக்கற் உனக்கு. பெடியள் ஆராவது தந்தவங்களே” – என்று அப்பாவியாக கதையை மாற்றுவதுபோல ஒரு கேள்வியைப்போட்டாள் ஜனனி.

 “உண்மைய சொன்னா அடிக்கமாட்டன். இல்லாட்டி இப்ப உன்னை கொல்லாமல் விட மாட்டன். உண்மை சொல்லிப்போடு” – என்று கொஞ்சம் தணிந்த குரில் சொல்லிக்கொண்டு முன்னாலிருந்த செற்றியில் வந்து அமர்ந்தான் வாகீசன். வேலைக்களைப்போடு இந்தப்பிரச்சினை வாகீசனுக்குச் சினமாக கிடந்தது.

ஜனனிக்கும் உடம்பு சரியில்லை என்று வீட்டுக்கு வந்த களையில் இந்த பிரச்சினை இன்னமும் தலையிடியாக இருந்தது.

“சொல்லப்பன். ஆரையாவது பெட்டையை லவ் பண்ணுறியே. அம்மாட்டை சொல்லு குஞ்சு. உண்மைய சொல்லு” – என்றாள் ஜனனி.

“I don’t have any girls friends mum. I’m a Gay”

“……………………………..”

கன்னத்தை பொத்தி அறைந்தது போல கிடந்தது வாகீசனுக்கு. ஜனனி பின்பக்கமாக செற்றியில் தொப் என்று சாய்ந்த சத்தம் மாத்திரம்தான் அந்த அமைதியை லேசாக கலைத்தது. பாலசிங்கத்தாருக்கு அவன் சொன்னதே விளங்கவில்லை. வாகீசனை பார்த்தார். வாகீசன் முன்னாலிருந்த ஓவ் பண்ணிக்கிடந்த டீ.வியை வெறித்து பார்த்தான்.

எல்லோரும் அதிர்ச்சியில் கிடந்த அந்த கணத்தை பயன்படுத்தி கண்ணை துடைத்துக்கொண்டு எழுந்து அறைக்குள் சென்றுவிட்டான் ஜதுஷன்.

அதுவரை சினந்துகொண்டிருந்த வாகீசன், ஒரு கண நேரம் குழப்பமாகி பின்னர் தெளிவடைந்தவனாக எழுந்து ஜனனிக்கு அருகில் போனான். ஜனனியின் கண்கள் குளமாக நிரம்பி கண்ணீர் கன்னத்தால் வழிந்தது. தகப்பனுக்கு முன்பாக ஒப்பாரி வைத்து பெரிய சீன் எல்லாம் போட்டுவிடக்கூடாது என்பதற்காக இயன்றவரை அமைதியாக அழுதாள். இயலவில்லை. விக்கினாள். பின்னர் வீறிட்டாள். தனது தோழில் சாய்த்துக்கொண்டான் வாகீசன்.

பேரன் என்ன சொன்னவன்?

கலவரம் எப்படி சடுதியாக அடங்கியது?

ஜனனி ஏன் அழுகிறாள்? – என்று எதுவுமே புரியாத பாலசிங்கத்தார் –

“தம்பி என்ன சொன்னவன்” – என்று வாகீசனை பார்த்து மெதுவான குரலில் கேட்டார்.

“அவன் தான் Gayயாம்” – என்றான் வாகீசன்.

கேட்ட மாத்திரத்தில் செற்றியின் பின் பக்கமாக சாய்ந்தார் பாலசிங்கத்தார். எல்லாம் தெரிந்த பாலசிங்கத்தாருக்கு அதை புரிந்துகொள்வதும்கூட விதிவிலக்கான விஷயமாக இருக்கவில்லை. என்றாலும் அந்த உறவுமுறை இவ்வளவு சீக்கிரம் தங்கள் குடும்பத்துக்குள் வந்து கும்மாளம் போடப்போகிறது என்று அவர் எதிர்பார்க்கவில்லை.

அப்படியெண்டால்கூட இவன் ஏன் condom பாவிக்கிறான் என்று தனக்கே உரிய துப்பறியும் மூளையினால் தீவிரமாக யோசித்துப்பார்த்தார்.

ஜனனி அழுதுகொண்டேயிருந்தாள். ஆளுக்காள் என்ன கதைப்பது என்று தெரியாமல், மௌனம்தான் அந்த நேரத்தை நிரப்பிக்கொண்டிருந்தது.

கொஞ்ச நேரம் யோசித்துவிட்டு செற்றியை விட்டு எழுந்த பாலசிங்கத்தார் –

“இருந்தாலும் அவன் ஆம்பிளைதானே. விட்டுத்தொலையுங்கோ” – என்றுவிட்டு தன்னுடைய அறையைநோக்கி நடந்தார்.

ப தெய்வீகன் – அவுஸ்திரேலியா

 

ப தெய்வீகன்

(Visited 152 times, 1 visits today)