கொட்டைப்பாக்குக் குருவிகள்-பத்தி-த.அகிலன்

 

 

த.அகிலன்நிரூபாவின் “சுணைக்குது” புத்தகத்தைப் படித்துக்கொண்டிருந்தேன். எனக்கு சின்னையா அண்ணையும், பெற்றியும், ஒரு குரங்கும் நினைவுக்கு வந்தார்கள். நிரூபாவின் புத்தகத்திலிருந்த சொற்களிலிருந்து மனம் தாவிக்கொண்டேயிருந்தது சின்னையாண்ணை கொண்டுவரும் குரங்கைப் போல.

சின்னையாண்ணை ஒரு இந்திய வம்சாவழித் தமிழர், சின்னையாண்ணை ஒரு குரங்கை வளர்த்தார். அந்தக் குரங்கில்லாமல் அவர் வெளியே எங்கேயும் போனதில்லை. அது ஒரு செங்குரங்கு. சினிமாவில் வருகிற எல்லாக் குரங்குகளையும் போல அதற்கும் ‘ராமு’ என்பதுதான் பெயராயிருந்தது. ‘பெற்றி’ கவிதாக்கா வளர்த்த கிளி. இந்தப் பெயரைத்தவிர வேறு பெயரில் யாரும் கிளிவளர்த்ததாய் எனக்கு நினைவில்லை. நிரூபாவின் “சுணைக்குது” சிறுகதைத் தொகுதியில் வருகிற தோட்டக்காட்டுச் சிறுவன் எனக்கு இவர்களை ஞாபகப்படுத்தினான்.

சின்னையாண்ணையின் வீடு  பாரதிபுரத்தில் இருக்கிறது. எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் ஒரு பத்தரைக்கும் பதினொரு மணிக்குமிடையில் கறுத்த பலூனை அமத்தினாச் சத்தமெழுப்பும் ஹோணடித்தபடி சின்னையாண்ணையின்ர மீன்பெட்டி கட்டின சைக்கிள் எங்கட ஒழுங்கைக்குள் திரும்பி ஆசைப்பெரியம்மா வீட்டடியில் நிக்கும். அந்த ஒழுங்கைக்குள் சின்னையாண்ணை பேரம் பேசமாட்டார். பெரியம்மாக்களும், மாமியும் மீன் விலைகேட்டதேயில்லை. ஒண்டிரண்டுதரம் கேட்டாலும் “நீங்க குடுங்கக்கா” என்று சின்னையாண்ணை சிரிப்பார். சின்னையாண்ணையின் சைக்கிள் ஹான்டிலில் இருக்கும் ராமுவும் ‘ஹீ ..க்’ என்று சிரிப்பதாக நினைப்பேன்.

சின்னையாண்ணை பின்னேரத்திலும் ஆசைப்பெரியம்மா வீட்டுக்கு வருவார். அரிசிமா இடிச்சுக்குடுக்கவோ, அல்லது வீடு கழுவவோ, மெழுகவோ சரசக்காவை முன்னுக்கும் ராமுவைத் தோளிலும் கொண்டு அவர் வருவார். அப்படியான ஒரு நாளில்தான் கவிதாக்கா கனாநாளாக அவரிடம் கேட்டுக்கொண்டிருந்த கிளியையும் அவர் கொண்டுவந்தார்.

அது வடிவான கிளி, கரண்ட் கம்பியில் செய்யப்பட்ட கூட்டில் அது முழுசிக்கொண்டு நிண்டது. அப்போது கிளியின் சுதந்திரம் பற்றியெல்லாம் சிந்தனைகளில்லை. அந்தக் கிளி ஆசைப்பெரியம்மா வீட்டில் இருக்கென்பதும் அது கவிதாக்காவின் கிளியென்பதும் பெருமையாயிருந்தது. அண்டையிலிருந்து கவிதாக்கா அந்தக் கிளியோடயே இருந்தா. பசுபதி மாமா வீட்டயிருந்து கரும்பு இலையளைக் கொண்டுவந்து அதுக்கு நாக்குவளிக்கிறதும் பச்சைமிளகாயை அதுக்கு குடுக்கிறதும்தான் அவவுக்கு முழுநேர வேலையாயிருந்தது. எந்த நேரமும் அவாக்கு எடுபிடி வேலைபாக்க நான் தயாராயிருக்கிறதால எனக்கும் இடைக்கிடை கிளிக்குப் பச்சை மிளகாய் சாப்பிடக்கொடுக்கும் பாக்கியம் வாய்க்கப்பெறும். பள்ளிக்கூடத்தால வந்தோண்ணை குசினிக்குள்ள பூந்து ஒரு பச்சைமிளகாயெடுத்துக்கொண்டு ஆசைப்பெரியம்மா வீட்டிற்கு  ஓடி பெற்றிக்கு குடுத்தாப்பிறகுதான் நான் முகமே கழுவுவன்.

ஆ….சொல்ல மறந்திட்டன். கவிதாக்கா அதுக்கு ‘பெற்றி’ எண்டு பேர்வைச்சா. ஆனாலும் ‘பெற்றம்மா’ எண்டு கூப்பிடுவா. ராஜண்ணா “பெற்றியும் குற்றியும் ஒருநாள் பார் ரோசியை விட்டு பெற்றியைப் பிடிச்சுத் தின்னவிடுறன்” – எண்டு கவிதாக்காவோட சண்டை பிடிக்கேக்க சொல்லுவார்.

கவிதாக்கா பெற்றியைக் கதைக்க வைக்க படாத பாடுபட்டா. எக்கச்சக்காமாக கரும்பு இலைகளைப் பெற்றி கடித்துக் குதறினாலும் அது கதைக்கயில்லை ராஜன் அண்ணா நக்கல் சிரிப்போட கடந்து போவார். பாண்டியனா கொக்கா கொக்கா எண்டு பாட்டுப்படிப்பார். “ராஜன் சனியன்” எண்டு கவிதாக்கா பேசுவா. ஒரு அதிர்ச்சியான நாளில் பெற்றி ‘ராஜன் சனியன்’ எண்டு பேசிச்சுது. கவிதாக்காக்கு முதல் முதலாக அது தன்ரை பேரைச் சொல்லயில்லை எண்டு கவலையெண்டாலும் ராஜண்ணாவைச் சனியன் எண்டு சொல்லுறதால சந்தோசத்தோட விட்டிட்டா. அதுக்குப்பிறகு யார் வந்தாலும் ‘ராஜன் சனியன்’ எண்டு கவிதாக்கா சொன்னால் பெற்றியும் ‘ராஜன் சனியன்’ எண்டு திருப்பச் சொல்லும். கொஞ்சநாளில் ஆசைப் பெரியம்மா ‘கவிதா’ எண்டு கூப்பிட்டால் கவிதா எண்டு திரும்பக் கூப்பிடும். ‘ரவி’ எண்ட தம்பியின்ர பேரையும் சொல்லும். ஆனால் என்ர பேரைத்தான் அது கடைசி வரைக்கும் சொன்னதில்லை.

நான் ஒரு கிளிவளர்த்து அதுக்கு என்ர பெயரைச்சொல்லிப் பழக்கோணும் எண்டு நான் நினைச்சன். அதுக்கு அம்மா ஓமெண்டு சொல்லுறாவோ தெரியாது. ஆனாலும் சின்னையாண்ணையைக் கேட்டுப்பார்ப்பம் எண்டு முடிவெடுத்தன். ஒரு நாள் சின்னையாண்ணை என்னைப் பள்ளிக்கூடத்தால் வீட்ட ஏத்திக்கொண்டு வந்தவர் வழிவழியாக் கதைச்சுக்கொண்டு வந்தவர் அப்பதான் அவர் எனக்கே தெரியாத ஒரு விசயத்தை சொன்னார்.

வைரவ கோயிலடிக்கு கிட்டவாயிருந்த வீட்டக் காட்டி, “இங்கதான் தம்பி உங்கவீடு முன்னாடியிருந்திச்சு” – எண்டு சொன்னார். நான் நம்பாமல் “உங்களுக்கு எப்படித் தெரியும்” – எண்டு கேட்டன். “இல்ல தம்பி நாங்கள் யாழ்ப்பாணத்தால ஓடி வரயுக்குள்ளார உங்க அப்பாரு மாமால்லாம்தான் எங்களுக்கு உதவியெல்லாம் செஞ்சாங்க. உங்க மாமா, அப்புறம் உங்கபெரீம்மா எல்லாருமாத்தான் எங்களுக்கு இருக்கிறதுக்கு காணியெல்லாம் காட்டிவுட்டாங்க” – என்றார்.

“நீங்கல்லாம் பிறக்குறதுக்கு முன்னாடியே எனக்கு அவங்களைத் தெரியும்” – என்றும் கூறினார்.

எனக்கொரு டவுட் அவர் கண்டியிலயோ நுவரெலியாவிலயோ இருந்துதானே ஒடி வந்திருக்கவேணும். எப்படி யாழ்ப்பாணத்தில இருந்து வந்தார்.

அவர் சொன்னார் “தம்பி நாங்க தோட்டத்திலயிருந்து ஒடி வரக்குள்ள தமிழங்கட இடமெண்டு யாழ்ப்பாணத்துக்குத்தான் முதல்ல போனம். எங்களுக்கு கிளிநொச்சியெல்லாம் தெரியாது. ஆனா அங்கயுள்ளவங்க எங்களை அங்கயிருக்க விடல. அங்கயிருந்து துரத்திவுட்டாங்க. அப்புறம்தான் நாங்க கிளிநொச்சிக்கு வந்தம்” – எண்டார்.

எனக்கு ஆச்சரியமாய்த்தானிருந்தது. ஆனால் அந்த வயதில் அது பெரிய விசயமாகப்படவில்லை. எனக்கொரு கிளி அடுத்தமுறை பிடிச்சுக்கொண்டு வந்து தருவதாய் அவர் சொன்னார். நான் என்னுடைய பெற்றிக்காகக் காத்திருக்கலானேன்.

00000000000000000000000000

நாங்கள் மாடுமேய்க்கப் போகும்போது கனகாம்பிகைக் குள வயல்களிலும் வாய்க்கால்கரைச் சிறுகாடுகளிலுமிருந்து கொட்டைப்பாக்குக் குருவிகள் கத்தும். “டுட்டு டுட்டு, டுட்டு டுட்டு” கிட்டத்தட்ட இப்படிதான் இருக்கும் அந்தக் கத்தலின் சந்தம். நாங்கள் அதைத் ‘தோட்டக்காட்டா வாடாபாப்பம்’ எண்டு மொழிபெயர்ப்போம். ‘தோட்டக்காட்டான்’ என்பது இந்தியவம்சாவழித் தமிழர்களை இழிவாகச் சொல்லப்பயன்படுத்தப்படும் ஒரு சொல்லென்பதை நாங்கள் அப்போது அறிந்திருக்கவில்லை. எப்படியோ கொட்டடைப்பாக்கன் குருவிகளிற்கான எதிர்ப்பாட்டு இப்படியிருக்கவேண்டுமென்று வாய்வழியாக நாங்கள் கற்றிருந்தோம். மாடுகளைக் கலைத்தபடியும் கொட்டைப்பாக்குக் குருவிகளுக்கு எதிர்பாட்டு பாடியபடியும் நாங்கள் கனாம்பிகைக்குளத்து வயல்கரைகளில் சூரைப்பழம் தேடித்திரிவோம். கவிதாக்கா பெற்றியைக் கூட்டோடு சைக்கிளில் கொண்டு வருவா  சில நேரங்களில் அதன் சிறகுகளை வெட்டிப் போட்டு தோளிலும் கொண்டு வருவா. நாங்கள் போகிறவழியெல்லாம் சின்னப்பெடியங்களின் விழிகளை ஆச்சரியத்தால் விழி விரியவைத்தபடி கவிதாக்கா ஒரு இளவரசியைப்போல வருவா.

ஆனால் ஒரு நாள் பின்னேரம் சின்னையாண்ணையும் சரசக்காவும் மாவிடிச்சு முடிஞ்சு வீட்டபோறநேரம் திடீரென்று பெற்றி கொட்டைப்பாக்கு குருவிகளின் எதிர்ப்பாட்டைப் பாடியது.

“தோட்டக்காட்டா……..”

சின்னையாண்ணையும் சரசக்காவும் திடுக்கிட்டுத்தான் போச்சினம். அது சின்னையாண்ணையைக் குறிவைச்சுச் சொன்னமாதிரியே இருந்தது. முத்தத்தில் நிண்ட அத்தனைபேரும் அமைதியாயிருந்திச்சினம் சின்னையாண்ணையின் குரங்குதான் திமிறித் திமிறிக் கத்திச்சுது. ஓன்றும் சொல்லவியலாமல் ‘வரேங்கா’ என்று தனக்குள் அமுங்கும் குரலில் சொல்லியபடி சின்னையாண்ணையின் சைக்கிள் முத்தத்தில் இருந்து விலகியது.

அதற்குப்பிறகுதான் வேறுபாடுகள் எனக்கு விளங்கின. நாங்கள் சின்னையாண்ணையின் வீட்டபோனால் ஏன் அவையள் கடையில சோடா எடுத்துத்தான் தாறவையெண்டதும். சரசக்காவின் பிள்ளையள் சில வேளை வந்தால் ஏன் அம்மம்மா அவையளோட எங்களை போளையடிக்க விடயில்லை எண்டதும் எனக்கு விளங்குமாப்போல் இருந்தது. சின்னையா அண்ணையும் சரசக்காவும் முகம் கறுத்து வெளியேறிய அந்நாளில் எனக்கு பெற்றியைப் பிடிக்காமல் போனது.

அதற்குப்பிறகுதான் அதிகாலைகளில் முருகண்டியில் இருந்து 155ம் கட்டை வரைக்குமான சந்திகளில் வயல்களுக்கு புல்லுப்புடுங்கப் போவதற்காக காத்துநிற்கிற மலையகத் தமிழரின் துயரம் தெரியுமாப்போல இருந்தது. அவர்கள் ஏன் இரணைமடுவின் தண்ணிபாயும் சாத்தியங்களற்ற விவசாயம் செய்யமுடியாத நிலங்களிலும், பெரு விவசாயிகளின் நிலங்களை  அண்டியும் வறண்ட மேடுகளிலும் குடியமர்த்தப்பட்டார்கள் என்கிற சூக்குமமும் விளங்குமாப்போல் இருந்தது.  அவர்களது கிராமங்களில் பெயர்கள் ஏன் காந்திநகர், விவேகானந்தநகர், பாரதிபுரம் இப்படி இந்தியத் தலைவர்களின் பெயர்களில் தனித்து அடையாளப்படுத்தப்படுகிறதென்பது விளங்குமாப்போலத்தான் இருந்தது. ஆனாலும் முழுசாவிளங்கக் கனகாலம் எடுத்தது.

அதற்குப்பிறகும் கொட்டைப்பாக்குக் குருவிகள் கத்தின. நான் எதிர்ப்பாட்டும் பாடினேன். “தோட்டக்காரா. வாடா பாப்பம்” என்பதாய் அது மாறிப்போயிருந்தது. ஏதோ என்னால் முடிந்தது அதற்குப்பிறகு நான் பெற்றிக்கு மிளகாய் கொடுப்பதில்லை. என்னுடைய கிளிவளர்க்கும் ஆசையும் அத்தோடு போனது.  பிறகும் சின்னையாண்ணையில் சைக்கில் பத்தரைக்கும் பதினொருமணிக்கிடையில் ஹோணடித்தபடி எங்களது ஒழுங்கைக்குள் திரும்பத்தான் செய்தது. ஹோண் சத்தம் துயரம் தருவாய்த் தெரிந்தது. செங்குரங்கின் கண்களில் படிந்திருந்ததன் பெயர் காலத்துயராயிருக்கலாம். விலகல்களின் ஒளி நிறைந்திருந்த செங்குரங்கின் கண்கள் தாழ்ந்தேயிருந்தன. எந்தச் சேட்டைகளுமற்றதாய் அது சின்னையாண்ணையின் சைக்கிள் ஹான்டிலில் குந்திக்கொண்டிருந்தது.

நாங்கள் இடம்பெயர்ந்து போனபோது சின்னையாண்ணைதான் தனிய ரக்ரறில் போய் வீட்டுச் சீற்றெல்லாம் கழற்றிக்கொண்டுவந்து ஸ்கந்தபுரத்தில் தந்தார். அந்தச் செல்லடிக்குள் மாமாவைப் போக யாரும் விடவில்லை. ஆனால் சின்னையாண்ணைக்கு காசுகொடுத்துப் போகச்சொல்ல செல்லடி யாருக்கும் ஒரு பிரச்சினையாயிருக்கவில்லை. அது சின்னையாண்ணைக்கு பிரச்சினையாயிருந்ததா? இருந்திருக்குமா? அவர் அதையும் தாண்டி இப்படி உயிரைப்பணயணம் வச்சு மாமாவீட்டுப் பொருட்களைக் காப்பாற்றும் அளவுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறாரா? என்ற கேள்விகள் எதுவும் அப்போதெனக்கு எழவேயில்லை. கேள்விகளைக் காலம்கடந்து எழுப்புவதென்பது எவ்வளவு அநீதியானது என்றெனக்கு மனசுக்குள் குறுகுறுப்பு இப்போதிருக்கிறது. காலம் கடந்தும் மௌனமாயிருப்பதென்பது சமகாலத்திற்கு நாமிழைக்கும் துரோகம் என்றும் படுகிறது.

என்னுடைய கிராமத்தின் பெயர் தொண்டைமான் நகர். அமரர் சௌமிய மூர்த்தி தொண்டைமானின் பெயர்தான் வைக்கப்பட்டிருக்கிறது. அவர் உயிரோடிருக்கும்போதே அந்தப்பெயர் அதற்கு வைக்கப்பட்டிருக்கிறது. மாமாதான் அந்தக் கிராமாத்தின் நிரந்தர கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவராயிருந்தார். மாமா இல்லாவிட்டால் ஆசைப்பெரியம்மா கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவராயிருந்தார். எல்லாம் மாமாவின் புத்திசாலித்தனம்தான். ஒரேயடியாய் இவரே தலைவராயிருக்கிறாரே என்பது யார் கண்ணையாவது உறுத்திவிடும் என்பதால்  தன்னுடைய தங்கையையும் இடைக்கிடை தலைவராக நிறுத்துவார். யார் தலைவராக இருந்தாலும் உத்தரவுகள் மாமாவிடமிருந்தே போகும். அப்படியொரு ‘ராஜதந்திரம்’.

நாங்கள் கினிநொச்சியிலிருந்து இடம்பெயர்ந்து கனகராயன் குளத்தில் இருந்தபோது ஜீவன் அக்கடமியில் சரஸ்வதி பூசைக்கு நாடகம் போட்டோம். யாழ்ப்பாணத்திலிருந்து இடம்பெயர்ந்து வந்திருந்த ரகுவாத்தியார் என்னுடைய கிராமத்தின் பெயரைக் கேட்டதும் என்னைக் கேட்டார் “நீ தொண்டமான்ர ஆளா…” சுத்தி நிண்ட மற்ற வாத்திமார் சிரிச்சினம். யாழ்ப்பாணத்தில இருந்து இடம்பெயர்ந்து வந்திருந்த என்ரவகுப்புப் பெடியள் கொஞ்சப்பேரும் சிரிச்சாங்கள். அதனுடைய உள்ளர்த்தம் 7ம் வகுப்புக்காரனான எனக்கு அப்போது தெரியவில்லை. உறுத்தவுமில்லை. அதை நான் உணரவுமில்லை. அப்போதெல்லாம் நான் சின்னையாண்ணையை நினைக்கவுமில்லை.  ஆனால் சில ஆண்டுகள் கழித்து மாமா இயக்கத்தோட கதைச்சு கிராமத்தின் பெயரைக் காத்தான் நகர் எண்டு மாத்த வெளிக்கிட்டது ஏனென்பது புரிந்தபோது அன்றைக்கு ரகு வாத்தி என்னைத் தொண்டைமானின் ஆளா எனக்கேட்டதும் ஏனென்பது விளங்கியது. ஆனாலும் அரசாங்கப் பதிவேடுகளில் அது இப்போதும் தொண்டைமான்நகர் என்றேதான் இருக்கிறது.

மாமா பிறகொருநாள் சொன்னார் –

“நான் மட்டும் அந்த வடக்கத்தையான்ர பேரை இந்தக்கிராமத்துக்கு வச்சிருக்காட்டி எங்கட காணியளுக்கெல்லாம் பெமிற்  கிடைச்சிருக்குமா? எல்லாம் ராஜதந்திரமடா? ஹா ஹா ஹா…”

நான் இந்தியாவில் இருந்த நாட்களில் இலங்கைத் தமிழன் என்பதால் முக்கால் வாசியும் என்னுடைய கவிதைகளால் கால்வாசியும் அன்பாயிருந்த ஒரு நண்பர் என்னிடம் சொன்னார் “அகிலன் எனக்குத் தெரிஞ்ச இலங்கைக் காரவுங்க இருக்காங்க அவங்க வீட்டுக்கு ஒரு நாள் நான் உங்களைக் அழைச்சிட்டுப்போறேன், அவங்க வீட்டுக்கு ஒருநாள் சாப்பிடப்போலாம் என்று சொன்னார். சொன்னபடி அழைத்துக்கொண்டும் போனார் எனக்கோ குண்டியிலடிச்ச புழுகம். உடுப்பி ஹோட்டல் சாம்பாறிலிருந்து விடுதலை என்றபடி அவரோடு போனேன். உறைப்புக் கரிப்பாக ஒரு தேங்காய்ப்பால் விட்டுச்சமைத்த ஒரு சாப்பாட்டை கற்பனை பண்ணியபடி போனவனுக்கு “நாங்களும் சிலோன்தான் தம்பி. நுவரெலியா நம்மட இடம்” எனச்சொல்லியபடி சோற்றின் மீது அவர்கள் ஊற்றிய சாம்பார் வயிற்றினுள்ளே போகச்சிரமப்பட்டது. அவர்கள் சிலோன்காறர்களா? என்கிற உறுத்தல் கேள்வியையும் சேர்த்தே விழுங்கினேன். “இன்னமும் எங்க சொந்தக்காரங்க எல்லாம் அங்க இருக்காங்க” – என்றவர் சொன்னார். நான் “என்னுடைய இடம் கிளிநொச்சி” – என்று அவரிடம் சொன்னேன். அவர் கிளிநொச்சியைத் தனக்குத் தெரியாதென்றார்.

ஆனால் அந்த வீட்டிலிருந்து வந்த பிறகும் அவர்களை இலங்கையர்களாக அங்கீகரிக்காத என்னுடைய மனம் எப்படி எனக்குள் குடியிருக்கிறது என்பது ஆச்சரியமாயிருந்தது. எல்லாவற்றையும் தாண்டி இலங்கையில் இந்தியனாகவும் இந்தியாவில் இலங்கையனாகவும் அறியப்படும் இந்த மனிதர்களின் அடையாள இழப்பென்பது எவ்வளவு துயரமானதெனத் தோன்றிது.

சிறீமாவோ பண்டாரநாயக்காவின் காலத்தில் இந்திரா காந்தியும் சிறீமாவும் சேர்ந்து இந்திய வம்சாவழியினரை – ஆண்டுக்கணக்காக இலங்கையின் தேயிலைத் தோட்டங்களில் உழைத்து இலங்கையின் பொருளாதாரத்தை உயர்த்திய மக்களை – வேண்டாப் பொருளாகப் பங்குபோட்டுக்கொண்டனர். “நீ இரண்டு லட்சம் பேரை எடுத்துக்க. நான் ஒரு மூணு லட்சம் பேரை வச்சுக்கிறேன்” – என்று இரண்டு அரசாங்கங்களும் டீல் பேசிக்கொண்டன.

ஒரு நண்பர் சொன்னார் “கச்சதீவென்பது இந்திரா காந்தி இலங்கைக்கு கொடுத்த ஒரு வகையான லஞ்சம். ஆங்கிலேயர்களால் மலையகத் தோட்டங்களில் வேலைக்கு அழைத்துவரப்பட்டவர்களின் வம்சாவழியினரை திருப்பி இந்தியாவிற்கு அனுப்பவேண்டாம் என்ற வேண்டுகொளை இலங்கை அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக வழங்கப்பட்ட பூங்கொத்துத்தான் கச்சதீவு” – என்பது அவரது கருத்து. அது உண்மையாயிருக்கலாம் என்றுதான் பட்டது. இரண்டு நாடுகளும் சேர்ந்து ஒரு பெரும் மக்கள் கூட்டத்தின் அடையாளங்களோடு விளையாடின என்பது எவ்வளவு கொடுமையானது.

விடுதலைப்புலிகளுடனான ஆயுதப்போர் முடிவுக்கு பின்னர் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கிளிநொச்சியின் ஒரு பாடசாலைக் கட்டிடத் தொகுதியைத் திறந்து வைத்தார். அந்தப் பாடசாலையின் பெயர் சிவபாத கலையகம். அது அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலையாகவேதான் இன்னமும் இருக்கிறதா? அல்லது மகாவித்தியாலயமாகத் தரமுயர்த்தப்பட்டுவிட்டதா என்று தெரியவில்லை. ஆனால் ஏன் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் இந்த பாடசாலையை திறந்து வைக்கவேண்டும். ஏனெனில் அந்தப்பாடசாலையில் இந்திய வம்சாவழித்தமிழர்களின் பிள்ளைகளே அதிகமாகப் படிக்கிறார்கள். அந்தப்பாடசாலையின் பெயர் தொடர்பாக, அதன் முன்னைநாள் அதிபர் ஒருவர் எனக்கொரு விளக்கம் சொன்னார். சிவபாத கலையகம் என்பதில் உள்ள சி.வ.பா.த என்பது  சிங்கள வன்செயலால் பாதிக்கப்பட்ட தமிழர்கள்என்பதன் சுருக்கம்  என்பதே அந்த விளக்கம் அட அருமையாயிருக்கிறதே என்றெனக்குத் தோன்றியது.

ஆனால்  இதைக் கண்டுபிடித்துச் சொன்ன மறுகிழமையே அவர் குடும்பத்தோடு தன் காணியையும் கல்வீட்டையும் இயக்கத்துக்கு எழுதிக்கொடுத்துவிட்டு பாசெடுத்துக் கொழும்புக்குப் போய்ச்சேர்ந்தார். எனக்கென்ன கவலையெண்டால் என்னோடு படித்த அவரிண்ட அழகான மகளையும் அதுக்குப்பிறகு நாங்கள் பாக்க முடியேல்ல என்பதுதான்.

அந்த அதிபர் பள்ளிக்கூடத்துக்கு ஒரு விரிவாக்கம் வச்சிருந்தது மாதிரி கொட்டைப்பாக்கு குருவிகளின் பாட்டுக்கான ஒரு விளக்கத்தையும் நான்  பிறகொருநாள் சந்திக்க நேர்ந்தது. அது நிலாந்தனின் ‘வன்னி மான்மியம்’ புத்தகத்தில் இடம்பெற்றிருந்தது. அதில் கொட்டைப்பாக்குக் குருவிகள் ஆமிக்காரனுக்குச் சவால் விட்டுக்கொண்டிருந்தன “தோட்டக்காட்டா வாடா பாப்பம்” – எண்டு கத்தினால் இயக்கம் பொரிச்சு சாப்பிட்டு விடும் என்கிற பயமோ என்னவோ கொட்டைப்பாக்குக் குருவிகள் ‘ஆமிக்காரா வாடா பாப்பம்’ எண்டு கத்திக்கொண்டிருந்தன வன்னிமான்மியத்தில். வன்னியிலிருந்த கொட்டைப்பாக்கன் குருவிகள்கூட ஆமிக்காரனுக்குச் சவால்விட்ட காலம் அது.

பாரதி புரத்திலிருந்தும், காந்தி நகரிலிருந்தும், விவேகானந்த நகரிலிருந்தும் இன்னும் அதைப்போன்ற இந்தியச் சாயலுள்ள பெயர்களைக் கொண்ட கிராமங்களிலிருந்து துயிலுமில்லங்களையடைந்த வித்துடல் காவும் ஊர்திகளின் எண்ணிக்கை சொல்லி மாளாது. சின்னையா அண்ணையின் மகன் உட்பட. ஆனால் எந்தச் சாவுகளும் மனிதர்களின் மன ஆழங்களை எட்டவில்லை. அண்மையில் கிளிநொச்சியில் இருக்கிற ஒரு நண்பனுடன் ஸ்கைப்பில் உரையாடிக்கொண்டிருந்தேன். அப்போது புதிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரைப்பற்றிப் கதைத்துக்கொண்டோம். அப்போது அவன் சொன்னான்

“அவர் ஒரே அங்கால பாரதிபுரப்பக்கம்தான்” எண்டு

நான் சொன்னன் “ஓ அப்படியாடா மனுசன் அப்ப நல்ல வேலையள் செய்யுது போல என்ன”

அவன் சொன்னான் “நான் அப்படித்தான்ரா நினைச்சு அவரிட்ட ஒருக்கா கேட்டன் அவர் சொன்னார் “அவனுகள்தான்ரா படிக்காதவனுகள் எது சொன்னாலும் மண்டையை மண்டைய ஆட்டுவானுகள்” – எண்டார் மச்சான் எப்புடி?

எனக்கு அவருக்கிருக்கும் ஏக்கர் கணக்கான வயல்கள் நினைவுக்கு வந்தன. சின்னையாண்ணையின் குரங்கு கட்டை அறுத்துக்கொண்டு பாய்ந்தது.

கனடாவில் நான் வேலைபார்க்கும் தொழிற்சாலையில் ஒரு நாலு பேர் தான் தமிழர்கள் வேலை பார்க்கிறார்கள் எல்லாரும் சின்ன வயதிலேயே கனடாவுக்குள் வந்துவிட்டவர்கள்.  மிச்சம் அதிகம் பேர் இந்தியர்கள் பிறகு கொஞ்சம் பிலிப்பைன்ஸ் காரர்கள், சீனர்கள் இப்படி பலர். நான் தமிழர்களோடு அதிகமும் கதைப்பதில்லை அதற்கு இரண்டு காரணங்கள் முதலாவது தமிழர்கள் என்னைப் பார்த்து சிரிக்க மாட்டார்கள் (அதற்கொரு வேளை என் முகராசி காரணமாயிருக்கலாம்) நானே வைபோசா அவர்களது முகத்துக்கு முன்னால் போய் சிரித்தாலும் Hi Bro என்பதோடு கடந்து போய்விடுவார்கள்.

இரண்டாவது தமிழர்களோடு கதைக்கிற அளவுக்கு எனக்கு ஆங்கிலம் தெரியாது. பிலிப்பினோக் காரனுக்கும், சீனாக்காரனுக்கும்,கொரியாக்காரனுக்கும், வியட்னாமிக்கும், இத்தாலியனுக்கும், ஏன் கனடியனான என் மேற்பார்வையாளனுக்கும் கூட விளங்கிவிடுகிற என்னுடைய ஆங்கில உச்சரிப்பு தமிழர்களுக்கு மட்டும் விளங்காது. ஆர்வத்தில் நானேதாவது சொல்லப்போக அவர்கள் தங்களுடைய மூக்கை நெற்றி வரைக்கும் ஏற்றி வைத்துக்கொண்டு இப்படியொரு சொல் ஆங்கிலத்திலேயே இல்லை என்பதைப் போலப் பார்ப்பார்கள். இத்தனைக்கும் அவர்களுக்கு சீனாக்காரனுடைய, ஐரோப்பியர்களுடைய ஆங்கில உச்சரிப்பு டக்கெண்டு விளங்கிவிடுகிறது. அதனால் நானும் Hi Bro வோடு நிறுத்திக்கொண்டு விடுவேன்.

ஒரு ஞாயிற்குக் கிழமை மேலதிக வேலை இருந்தது. அன்றைக்கு ஒரு தமிழ் Bro தன்னுடைய கரண்டியை விட்டு விட்டு வந்ததால் எனக்கருகில் வந்து ஒரு மேலதிக கரண்டி கிடைக்குமா எண்டு கேட்டார். கொடுத்தேன் அப்படியே சம்பிரதாயமாகப் பேசிக்கொண்டிருந்து நான் வேலை செய்கிற பகுதியின் ஊழியர்களைப் பற்றி பேச்சுத் திரும்பியது. என்னைத் தவிர மிச்சம் மூன்று பேர் அதில் ஒருவன் பிலிப்பைன் காரன். இன்னும் இருவர் இந்தியர்கள். இந்தியர்களைப் பற்றிப் பேச்சு வந்ததும் என்னுடைய கனடியத்தமிழ் Bro தன்னுடைய தடக்கி விழுந்தெழும்பும் தமிழில் தடக்காமல் சொன்னார் –

”எக்கத்தயானை நம்பினாலும் வடக்கத்தையான நம்பக்கூடாது”

எனக்குத் திடீரன்று ஒரு சந்தேகம் வந்தது. இப்போதும் வன்னியில் கொட்டைப்பாக்குக் குருவிகள் இருக்கின்றனவா?

த.அகிலன் -கனடா 

 

(Visited 107 times, 1 visits today)
 

செவிவழிக்கதைகள் பாதியும் விழிவழிச் சாட்சியம் மீதியுமாய் மனதில் எஞ்சியவை-இயக்க காலத்து சினிமா- பத்தி -த.அகிலன்

தமிழ்ச்சினிமா பார்த்தல்   போர்க்காலத்தில் உயிர்காக்கும் பதுங்குகுழிகளில் பயன்பாடு நீங்கள் அனைவரும் அறிந்ததே. சுப்பசொனிக் மேல சுத்தினாலோ அல்லது இராணுவமுகாமிலிருந்து எறிகணை குத்தினாலோ அதற்குள் போய் ஒழிந்துகொள்ளலாம் என்பது அப்பயன்பாடுகளில் […]