லோகார்னோவின் பிச்சைக்காரி-மொழிபெயர்ப்புச்சிறுகதை-தேவிகா கங்காதரன்

தேவிகா கங்காதரன்இத்தாலியின் மேற்பகுதியில் அல்ப்ஸின்  அடிவாரத்தில் கோமான் ஒருவனுக்குச் சொந்தமான மாளிகையொன்று அழிவுகளுக்குள்ளாகிக்  கிடப்பதை செயின்ட் கோட்கார்டில்  இருந்து வரும்போது தற்போது காணலாம்.

அந்த வயதான, நோயாளிப்  பிச்சைக்காரக் கிழவி வாசலில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்த நிலையில் மாளிகையின் எஜமானி அவளைக் கண்டு இரக்கமுற்று,உயர்ந்த விசாலமான அதன் அறைகளிலொன்றில் வைக்கோலைப் பரப்பி அதன் மேல்  படுக்க வைத்திருந்தாள்.

கோமான் தனது  வேட்டைத்துப்பாக்கியை வைக்கும்  அந்த அறைக்குள் சென்றவன் தற்செயலாக அந்தக் கிழவியைக் கண்டான்.கண்டதும்  படுத்திருந்த மூலையிலிருந்து   எழுந்து அந்த அறையிலிருந்த வெப்பமூட்டியின் பின்னால் செல்லுமாறு கடுமையான தொனியில் கட்டளையிட்டான்.

அப்படி அவள் எழுந்து செல்லும்போது, வழுவழுப்பான அந்தத் தரையில் ஊன்றுகோல் வழுக்கிவிட   முதுகெலும்பில் பயங்கரமாக  அடிபட விழுந்தாள்..

விழுந்தவள் மிகவும் பிரயத்தனப்பட்டு  தாளாத வலியுடன் அவளுக்கு இடப்பட்ட  கட்டளைப் பிரகாரம் அறையின் குறுக்கே நடந்து வெப்பமூட்டியின் பின்னே சென்றவள்  முக்கல் முனகல்களுடன் சரிந்து விழுந்து  இறந்து போனாள்.

சில  வருடங்களின் பின்னர்  போரினாலும் அறுவடை பிழைத்துப் போனதாலும்

கோமான் தன் செல்வத்தின் பெரும் பகுதியை இழந்து போனான்.தனது தோட்டந்

துரவுகளை விற்க அவன் முடிவு செய்தான்.அவ்வேளை புளோரென்ஸிலிருந்து

அங்கு வந்த ஒரு பிரபு அந்த மாளிகையையும் அது அமைந்திருந்த அழகிய சூழலையும் கண்டு அதனைத் தானே வாங்க விரும்பினான்.

இதைக்கேட்டு மகிழ்ந்த பிரபு பேரத்தை இலாபகரமாக முடிக்க எண்ணி , நன்கு நேர்த்தியான தளபாடங்களுடன் அலங்கரிக்கப் பட்டிருந்தமேற்குறிப்பிட்ட

அந்த அறையை  விருந்தாளிக்காக ஆயத்தம் செய்யுமாறு தன்  மனைவிக்கு கூறினான்.

அங்கு தங்கிய பிரபு அந்த நள்ளிரவில்  பீதியுடனும் ,வெளிறிய முகத்துடனும்

அவர்களின் அறைக்குள் நுழைந்து தான் தங்கிய அறையில்  ஏதோ பேய்

நடமாட்டம் இருப்பதாகவும், அறையின் மூலையில் கண்ணுக்குத் தெரியாத யாரோ வைக்கோலின் மேல்  படுத்திருந்து மெதுவாக எழுந்து தள்ளாடித் தள்ளாடி  அறையின் குறுக்கே நடந்து வெப்பமூட்டியின் பின்னால்  முக்கல் முனகல்களுடன் சரிந்து  விழுவதை போல் ஓசைகள் கேட்பதாகச் சொன்னபோது அவர்களுக்கு எத்தகைய பயங்கரம் ஏற்பட்டிருக்குமென்று நீங்களே கற்பனை பண்ணிப் பாருங்கள் .

திகிலுற்ற  கோமான்  ஒருவாறு சமாளித்துக் கொண்டு   வலிந்து வரவழைத்த புன்னகையுடன் பிரபுவைப் பார்த்து  இதோ நான் உடனே உங்களுக்குத் துணையாக அந்த அறையில் இரவைக் கழிக்க வருகிறேன் என்றான்.

பிரபுவோ அதை பணிவுடன் மறுதலித்துத் தன்னை அவர்களின்   அறையில்  சாய்வு நாற்காலியில் உறங்க அனுமதிக்கும்படி வேண்டிக் கொண்டு   பொழுது புலர்ந்ததும் விடை பெற்றுக்  கொண்டு  அங்கிருந்து போய் விட்டான்.

இந்த அமானுஷ்ய சம்பவம் அந்த மாளிகையை வாங்க விருப்பம் கொண்ட ஏனையோரை விரட்டியடித்தது  கோமானைச் சங்கடத்துக்குளாக்கியது.

அவனது பணியாட்களும் நள்ளிரவில் நடந்த சம்பவங்களை  ஏனையோருக்கு கசிய விடவே,  தானே அடுத்தநாள் இரவு அந்த அறையில் தங்கி  மர்மத்தைக் கண்டு பிடித்துத் தீர்வு காண அவன் முடிவு செய்தான்.

அந்தி சாயும் நேரமானதும் தனது படுக்கையை அந்த அறையில் போடச் செய்தவன் நள்ளிரவுவரை உறங்காது விழித்திருக்க உறுதி செய்து கொண்டான்.

நள்ளிரவு நெருங்கியதும் அந்தப் பயங்கர அனுபவம் நிகழ்ந்தது. வைக்கோலின் மேல் படுத்திருந்த யாரோ  அதன்  சரசரக்கும்  ஓசையுடன் எழும்புவதும் ,அறையின் குறுக்கே நடந்து பொய் முக்கல் முனகல்களுடன் வெப்பமூட்டியின் பின்னால் சரிந்து  இருப்பது போலவும் உணர்ந்து நடுங்கிப் போனான்.

மறுநாட்காலை  அவன் மாடிப்படிகளில் இறங்கி வந்தபோது  மனைவி அவனது  சோதனை முயற்சி எவ்வாறு இருந்ததெனக் கேட்டாள். அவனது பீதியடைந்த கண்களும் குழம்பிய பார்வையும் அந்த அறையை உடனேயே அடைத்து வைக்குமாறு உத்தரவிட்டதையும் பார்த்ததும்  அவளுக்கு அந்த அறையில் பேய் நடமாட்டம் இருப்பது உண்மைதான் என்று விளங்கி விட்ட்து. இருந்தாலும் வதந்திகள் மேலும் பரவ முதல் இந்த மயிர்க் கூச்செறியும் சோதனையை  தாங்களிருவரும்  ஒன்றாக மீண்டுமொருமுறை செய்து பார்ப்போமெனத் தயவுடன் கணவனைக் கேட்டுக் கொண்டாள்.

நம்பிக்கையான ஒரு பணியாளுடன் அடுத்தநாள் இரவை அவர்கள் அந்த அறையில் கழித்தார்கள் அன்றும் அதே அமானுஷ்ய ஒலிகள்.ஆனால் மாளிகையை எப்படியாவது நல்ல விலைக்கு விற்றுவிட  வேண்டுமேயென்று

அவள் பணியாளுக்குப் பயத்தைக்  காட்டிக் கொள்ளாமல் அதெல்லாம் இங்கு பேயுமில்லை ஒன்றுமில்லை, எல்லாம் சாதாரண சத்தம்தான் என்று மூடி மறைத்து விட்டாள்.

மூன்றாம் நாள் மாலை இந்த விஷயத்தை ஒரு முடிவுக்கு கொண்டு வர விரும்பி பட படக்கும் நெஞ்சோடு அந்த அறைக்குச் செல்ல இருவரும்  மாடிப்படி ஏறிய போது  கட்டியிருந்த சங்கிலியிலிருந்து அவிழ்த்து விடப்பட்ட  நாய் ,அறை  வாசலில் நிற்பதைக் கண்டனர்.எதோ ஒன்று அந்த அறையில்  இருப்பது இதன் மூலம் அவர்களுக்கு உறுதியாயிற்று..நாயையும் அறைக்குள் அழைத்துச் சென்றனர் தம்பதியர்.  பதினொரு மணியிருக்கும். இரு மெழுகுவர்த்திகள் மேசையில் ஒளிபரப்பிக்  கொண்டிருந்தன.  படுக்கைக்கான உடைகளை மனைவி இன்னும் மாற்றவில்லை.பிரபு அறையிலிருந்த அலுமாரியிலிருந்து குத்து வாளையும் ,துப்பாக்கியையும் அருகில் வைத்தபடி அவரவர் கட்டிலில் அமர்ந்து  பேசிப் பொழுதைக் கழித்துக் கொண்டிருந்தனர்.நாய் தலையைத் தாடையில் சரித்தவாறு காலை நீட்டி அறையின் நடுவே உறங்கிக்   கொண்டிருந்தது.

நள்ளிரவு நெருங்கியபோது அந்தப் பயங்கரமான சத்தம் கேட்க ஆரம்பித்தது.

மனிதக் கண்ணுக்குப் புலப்படாத யாரோ அந்த அறையிலிருந்து ஊன்றுகோலை ஊன்றி எழும்பினார்கள். வைக்கோலின் சர சரப்புச்  சத்தம் கேட்டது.யாரோ நடந்த முதலடியின் சத்தத்தில் நாய் விழித்துக் கொண்டு தன் காதுகளை உயர்த்தியது.யாரோ தன்னை நோக்கி வருவதைக் காணுமாற்  போல் குரைத்துக் கொண்டு  தரையை ஒட்டியபடியே பின்பக்கமாக வெப்பமூட்டியை நோக்கி நகர்ந்தது.இதைக் கண்டதுதான் தாமதம் பிரபுவின் மனைவி மயிர் குத்திட்டு நிற்க அறையிலிருந்து வெளியே ஓடிய வேளையில்  பிரபு பாய்ந்து தன குத்துவாளைக் கையில் எடுத்த படி யார் அங்கே நிற்பது என்று கத்தினான்.பதிலில்லை. அவன் மனைவியோ பைத்தியம் பிடித்தவள் போல் தேவையான  சிலபொருட்களை விரைந்து எடுத்துக் கொண்டு குதிரை வண்டியைக் கொண்டுவரச் செய்து அவ்விடத்தை நீங்கி நகரை நோக்கி செல்லப் புறப்பட்டு விடடாள்.அவ்வாறு வாயிலை விட்டு வெளியேறும் போது மாளிகையை  நெருப்பின் நாக்குகள் நாற்புறமும் சூழ்ந்திருப்பதைக் கண்டாள்.

கிலியால்  பீடிக்கப் பட்டு ,தன்னிலை மறந்த பிரபுவே அங்கிருந்த மெழுகுவர்த்திகளில் ஒன்றை எடுத்து மாளிகையின் மரத்தாலான சட்டங்களுக்குத் தீ வைத்து விட்டிருந்தான்.

இந்தப் பரிதாபத்துக்குரிய பிரபுவைக் காப்பாற்ற அவன் மனைவி ஆட்களை  அனுப்பி வைத்தாள்.பிரபுவோ அதற்கு முன்னரே உயிரை விட்டிருந்தான் . எந்த மூலையில் போய்  இருக்குமாறு அந்தப் பிச்சைக்காரிக்கு அவன் கடடளையிட்டானோ  அந்த மூலையிருந்தே அங்கு மிஞ்சியிருந்த அவனது வெண்ணிற எலும்புகளை அவள் அனுப்பிய ஆட்கள் சேகரித்து வந்து அவளிடம் கொடுத்தார்கள்.

ஹைன்றிச் (f)பொன்  கிளைஸ்ட் (18 October 1777 – 21 November 1811).

தமிழில் : தேவிகா கங்காதரன் -ஜெர்மனி.

தேவிகா கங்காதரன்

0000000000000000000000000000000                                                

ஆசிரியர் பற்றிய சிறு குறிப்பு :        

தேவிகா கங்காதரன்Heinrich von Kleist

(18 October 1777 – 21 November 1811)

இவர் ஒரு ஜேர்மனிய எழுத்தாளர் .கதை,கவிதை நாடகங்கள் எழுதுவதில்  புகழ்பெற்றவர் . அவர் பெயரில் வழங்கப்படும் இலக்கியத்துக்கான  பரிசு மிகவும் மதிக்கப் படுவது.அவரது படைப்புக்களை அடிப்படையாகக் கொண்டு திரைப்படங்களும் வெளிவந்துள்ளன.இவர் வான்ஸீ  வாவியருகில் தனது  காதலியான

ஹென்றீற்ரா  வோகல்  என்பவரை சுட்டுக் கொன்று விட்டுத் தன்னையும் சுட்டுத் தற்கொலை செய்து கொண்டார். .இறக்கும்போது இவரது வயது முப்பத்து நான்கு என அறியப்படுகிறது.

(Visited 79 times, 1 visits today)