மாற்றுத்திறனாளிகளின் இருப்பு ஒரு நோக்கு-கட்டுரை-சிவகௌதம்

சிவகௌதம்வலு என்பது உலகிலுள்ள அனைத்துக்கும் ஏதோவொரு விதத்தில் இருக்கிறது என்பது எவ்வளவு தூரம் உண்மையோ அதேபோல வலுவின்மை அதாவது பலவீனம் ஒன்றும் அவை எல்லாவற்றுக்கும்  இருக்கிறது என்பதும் மறுக்க முடியாத உண்மையே. இந்த ‘உலகிலுள்ள அனைத்தும்’ என்பதனுள் காண்டா மிருகம் தொடக்கம் கட்டெறும்பு வரையான உயிரிகளும் பராக் ஒபாமா முதல் எழுமாற்றான ஒரு பாமர மனிதன் வரையான மனிதர்களும் அடக்கம். உதாரணத்துக்கு காண்டா மிருகத்தை எடுத்துக் கொண்டால் பலமான உடலமைப்பு என்பது அதன் வலு. அதே சமயம் விரைவாக இடம் பெயர் முடியாமை என்பது அதன் வலுவின்மை. இதே மாதிரியான கதை தான் கட்டெறும்பு தொடக்கம் பராக் ஒபாமா வரையானவர்களுக்கும்..

நிலைமை இப்படியிருக்க, ‘மாற்று வலுவுள்ளவர்கள்’ என்ற சொற்பதத்தை பயன்படுத்தி குறிப்பிட்ட ஒரு குழுவினரை அழைப்பதென்பது எவ்வளவு ஒரு மடத்தனமான விடயம். என்னைப் பொறுத்த வரையில் ‘மாற்று வலுவுள்ளவர்கள்’ என்று அவர்களை குறிப்பிடுவதென்பதே இன்றைய நாட்களில் அவர்கள் எதிர் நோக்குகின்ற மிகப் பெரிய பிரச்சினையாக இருக்கிறது. இவ்வாறு குறிப்பிடுவதென்பது அவர்களை இயல்பாகவே மற்றவர்களிடமிருந்து தனிமைப் படுத்தி விடுகிறது அல்லது தாங்கள் மற்றவர்களிலிருந்து வேறுபட்டவர்கள் என்ற ஒரு எண்ணத்தை இயல்பாகவே அவர்களுக்குள் ஏற்படுத்தி விடுகிறது.

‘மதகுருமார்களுக்கு மட்டும்’, ‘கர்ப்பிணி தாய்மார்களுக்கு மட்டும்’, ‘வயது வந்தவர்களுக்கு மட்டும்’ போன்ற வாசகங்களுக்கு மத்தியில் ‘வலது குறைந்தவர்களுக்கு மட்டும்’ என்ற ஒரு வாக்கியத்தை நம் அரச சேவை பேரூந்துகளில் குறிப்பிட்ட சில ஆசனங்களுக்கு மேல்  நீங்கள் அவதானிக்கலாம். அது என்ன வலது குறைந்தவர்கள்….? அதற்கு அர்த்தம் என்ன…? இந்த ‘வலது குறைந்தவர்கள்’ என்ற சொற்பதத்துடன் ஒப்பிடும் போது ‘மாற்று வலுவுள்ளவர்கள்’ என்பது எவ்வளவோ பரவாயில்லை. இவ்வாறு குறிப்பிட்டதற்கு பின்பும் அந்த குறித்த ஆசனங்களில் அவர்களால் எவ்வாறு இயல்பாக போய் உட்கார முடியும்? பேரூந்துகளில் அமர்ந்து பயணம் செய்வதற்கு சாதாரணமாக அவர்களுக்கே முன்னுரிமை இருக்கிறது. எனவே  இவ்வாறான வாக்கியங்கள் அங்கு அவசியமே இல்லாதவை என்பதோடு அத்தகைய வாக்கியங்கள் நிரந்தரமாக எல்லா இடங்களிலும் தவிர்க்கப்பட வேண்டியவையும் கூட. ‘மதகுருமார்களுக்கு மட்டும்’ என்று குறிப்பிட்டிருக்கும் ஆசனங்களில் தேடிப் போய் சில காவிகள் அமர்ந்து ஓசி பயணம் போவதை நான் இங்கு குறிப்பிடவில்லை. (அது பற்றி தனியான கட்டுரை ஒன்றில் பின்னர் பார்க்கலாம்)

1992ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை அறிவித்ததைத் தொடர்ந்து ஒவ்வொரு வருடத்தின் மார்கழி மாதம் மூன்றாம் திகதியை சர்வதேச மாற்று வலுவுள்ளோர் தினமாக உலக நாடுகள் எல்லாம் வெகுவிமரிசையாகக் கொண்டாடி வருகின்றன. அவர்களுக்கென்று தனியாக ஒரு நாளை ஒதுக்கி, அந்த நாளில் அவர்களைக் கௌரவித்து, மகிழ்வித்து……. இப்படியாக மாற்று வலுவுள்ளோர் தினத்தைக் கொண்டாடுவதற்கு நல்ல பக்கம் ஒன்று இருப்பதைப் போல அந்நாளில் அவர்கள் காட்சிப் பொருளாக மாற்றப்படுதல் என்ற பாரிய எதிர் மறையான பக்கம் ஒன்றும் இருக்கவே செய்கிறது. அதாவது தம்மை விளம்பரப்படுத்திக் கொள்வதற்காக மாற்று வலுவுள்ளோர் தினத்திலன்று நடைபெறுகின்ற நிகழ்வுகளையெல்லாம் புகைப்படம் மற்றும் வீடியோக்களாக பதிவு செய்து அவற்றை பத்திரிகைகள், தொலைக் காட்சிகளில் வெளியிட்டு அவர்களை காட்சிப் பொருட்களாக மாற்றி விடுகிறார்கள். மேலும் வசனத்துக்கு ஒரு தரம் ‘மாற்ற வலுவுள்ளவர்கள்’ என்று குறிப்பிட்டு அவர்களை மற்றவர்களிடமிருந்து தனிமைப் படுத்தியும் விடுகிறார்கள்.    இறுதியில் மாற்று வலுவுள்ளோர் தினம் என்ற ஒன்று கொண்டாடப் படுவதற்கான உண்மை நோக்கமே இல்லாமல் போய்விடுகிறது.

ஓவியம் வரைதல், பாட்டு பாடுதல், கணிதம் செய்தல், எழுதுதல் போன்ற விசேட திறமைகள் சில மாற்றுத் திறனாளிகளிடம் காணப்படுதல் என்பது இயல்பே. இப்படியான திறமைசாலிகளை நாங்-கள் எதிர்கொள்ளும் போது அவர்களின் திறமைகளை மேலும் ஊக்குவிக்க வேண்டும். ஆனால் சாதாரணமாக நாங்கள் என்ன செய்கிறோம்? அவர்களை ஊக்குவிக்கின்றோம் என்ற பெயரில், அவர்களின் திறமைகளுடன் சேர்த்து அவர்களின் குறைகளையும் அல்லவா கூவி விற்று விடுகிறோம். இவை “ஏன் தான் எங்களுக்கு இப்படியான திறமைகள் கிடைக்கப்பெற்றதோ தெரியவில்லை” போன்ற எண்ணங்களையே அவர்களின் மனதில் ஏற்படுத்துகின்றது என்பதோடு அவர்களின் அந்த விசேட திறமைகளும் மளுங்கடிக்கப்பட்டு விடுகிறது.

சாதாரணமான எத்தனையோ பல அன்றாடக் கடமைகளை அவர்களால் இயல்பாகவே செய்யக் கூடியதாய் இருக்கும். இது எல்லோருக்குமே தெரிந்திருக்கின்ற விடயம். ஆனால் “இவர்களால் இதைச் செய்ய இயலுமா?”, “இதைச் சரிவரச் செய்து முடிப்பார்களா?”, “என்னதான் இருந்தாலும் இவர்கள் ஊனமுற்றவர்கள் ஆயிற்றே” இவ்வாறான அபத்தமான எண்ணங்களால் அவர்களுக்கான பொறுப்புகள் சரியான விதத்தில் வழங்கப்படுவதில்லை. அவ்வாறு அபூர்வமாக வழங்கப்பட்டாலும் கூட அவர்களுக்கு உதவியாளர் என்ற பெயரில் ஒருவரையும் கூடவே நியமித்து அவர்களின் செயற்பாடுகளின் மீது தமக்கிருக்கின்ற நம்பிக்கையீனத்தை வெளிப்படையாகவே தெரிவித்துவிடுகிறார்கள். இதனால் அவர்களின் பல்வேறு திறமைகள் வெளியுலகத்துக்கு தெரியாமலேயே போய் விடுகின்றன.

“ஐயோ பாவம்…” என்ற பரிதாபமான கண்ணோட்டத்துடனேயே அவர்கள் எப்போதும்  அல்லது பெரும்பாலும் அணுகப்படுதல் என்பது அவர்கள் எதிர்நோக்குகின்ற மற்றொரு பிரச்சினை ஆகும். மேலும் அவர்களுக்கு நாம் எதைச் செய்தாலும் அதில் சில சதவீதமாவது தர்ம நோக்கம் கலந்தே காணப்படும். இதை தவிர்க்கவும் முடியாது. ஆனால் இப்படியான பரிதாபமான அணுகு முறைகளால் அவர்களுக்கு உள ரீதியான தாக்கங்கள் ஏற்படுவதோடு மற்றவர்களிடமிருந்து பிரிந்து தனியே இருக்க வேண்டும் என்ற எண்ணமும் மேலோங்க ஆரம்பிக்கும்.

பாடசாலைகள், கூட்டங்கள் மற்றும் பொது நிகழ்வுகளில் மாற்று வலுவுள்ளவர்களுக்கு தனியாகவோ அல்லது பிரத்தியோகமாகவோ தான் பெரும்பாலும் இடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கும். இந்த இட ஒதுக்கீடுகளால் நமக்கும், அவர்களுக்கும் பல சௌகரியங்கள் இருந்தாலும் கூட அவர்கள் அதாவது மாற்றுவலுவுள்ளவர்கள் மனதளவில் சில அசௌகரியங்களை எதிர்கொள்கிறார்கள் என்பதை மறுக்க முடியாது.

இவற்றையெல்லாம் தவிர்த்து நாம் அவர்களை எம்மில் ஒருவராக ஏற்றுக் கொண்டாலும் பல நடைமுறையான செயற்பாடுகளில் அவர்களால் எம்மோடு இணைந்து செயற்பட முடியாமல் இருக்கும். அவற்றை எம்மால் கூட தவிர்க்கவோ அல்லது சரிப்படுத்தவோ முடியாது. இது அவர்களுக்கு மன ரீதியான தாக்கங்களை ஏற்படுத்தலாம். அதாவது “எப்படி தான் நாங்கள் திறமையானவர்களாக இருந்தாலும் இயல்பான சமூக வாழ்வில் முற்றாக எம்மை இணைத்துக் கொள்ள முடியவில்லையே” போன்ற விரக்தியான எண்ணங்கள் அவர்களுக்குள் ஏற்பட்டு வாழ்க்கை மீது ஒருவிதமான விரக்தியான போக்கு தோன்றக் கூடும்.

என்ன தான் நாம் இன்றைய நாட்களில் நாகரிகம், தொழில் நுட்பத்தின் உச்சிக்கு போய்க் கொண்டிருந்தாலும் கூட மாற்றுவலுவுள்ளவர்கள் என்று எம்மால் குறிப்பிடப் படுகின்ற, எம் மத்தியில், எம்மோடு வாழ்கின்ற ஒரு குழுவினர் நான் மேலே கூறியவாறான பல பிரச்சினைகளை இன்னமும் எதிர்நோக்கிக் கொண்டு தான் இருக்கின்றனர். அவற்றில் பல, வலுவுள்ளவர்கள் என்று கூறிக் கொள்கின்றவர்களால் தான் ஏற்படுகின்றன என்பது நிதர்சனமான உண்மை. அவற்றை நாம் முழுமையாக மாற்ற வேண்டும். காலால் எழுதுதல், வாயினால் படம் வரைதல், நுட்பமுறை ஆக்கங்கள் அமைத்தல் போன்ற செய்கைகள் சாதாரண மனிதர்களுக்கு ஈடானதாக அமைந்திருப்பதை அவதானிக்க முடிகிறன்றது.

கற்பிணிப் பெண்களுக்கு, மதகுருமார்களுக்கு, அங்கவீனர்களுக்கு என்று குற்ப்பிட்டுத்தானா அவர்களுக்கு வழகப்பட வேண்டும். இவர்களைக் கண்டு இயல்பாகவே எழுந்து இடம் வழங்க வேண்டும் என்ற மன உணர்வு இல்லாதவர்களும் வலதுகுறைந்தவர்கள் என்றே பார்க்கப்பட வேண்டியவர்களாகின்றார்கள்.

இவர்களை சமூக அந்தஸ்த்தில் ஒரு தகுதி உள்ளவர்களாக மாற்ற வேண்டும் என்ற அவாவில் செயற்படுகிறவர்களை குறைத்து மதிப்பிடுதல் என்பது இங்கு நோக்கமல்ல. இவர்களை அறியாமலே இவர்களுக்கான மேம்பாட்டு முயற்சிகள் இவர்களை சென்றடைய வேண்டும் என்பதே கருத்தில் கொள்ளப்பட வேண்டும்.

இதற்கு அடிமட்டத்திலிருந்து அதிஉயர்பீடம் வரை அனைவரும் முனைப்புடன் பங்கு கொண்டால் இவர்கள் சமூக அந்தஸில் ஒரு சம மனிதன் என்ற நிலையில் உள்ளோம் என்ற உணர்வைப் பெறுவார்கள்.

 சிவகௌதம் – இலங்கை 

சிவகௌதம்

(Visited 38 times, 1 visits today)