தனியார் மருத்துவக்கல்லூரியும் யாழ்.பல்கலைக்கழக மருத்துவ மாணவர்களின் போராட்டமும்கட்டுரை-ஜெனோ

ஜெனோ இலங்கையில் நிறுவப்பட்டுள்ள தனியார் மருத்துவக்கல்லூரிக்கெதிராக அரச பல்கலைக்கழக மாணவர்களினனால் நாடளாவிய ரீதியில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றது. அதன் தொடர்ச்சியாக யாழ்.பல்கலைக்கழக மாணவர்களாலும் எதிர்ப்பு போராட்டமும் நடை பேரணி ஒன்றும் நடை பெற்றது.

அப்பேரணிக்காக மாணவர்களால் தயாரிக்கப்பட்ட அறிக்கையில் இருந்த இத் தகவல்கள் தனியார் மருத்துவக்கல்லூரி தொடர்பான அடிப்படை பிரச்சனையை தெளிவுபடுத்துவதற்காக இங்கே தரப்படுகிறது.

0000000000000000000000000000000000

SAITM என்றழைக்கப்படும் தனியார் பல்கலைக்கழகம் 2008 இல் தகவல் தொழில்நுட்பம், முகாமைத்துவம், பொறியியல் மொழி தொடர்பான கற்கை நெறிகள் மற்றும் சுகாதார கற்கை நெறிகளுக்காக ஆரம்பிக்கப்பட்டது. 2008 இல் ஆரம்பிக்கப்படும் போது South Asian Institute of Technology and Management என்ற பெயருடன் அங்கிகாரம் பெறப்பட்டு 2011 இல் இதன் பெயர் Medicine ஆக மாற்றப்படுகிறது

தொடர்ந்து SAITM இன் பெயர் மாற்றத்துக்கான BOI அங்கிகாரமானது மருத்துவ கற்கைக்கான அனுமதியை அப்போதைய Ministry Of Health and Nutrition இடம் இருந்து பெற்றுக்கொள்ள வேண்டும்  என்ற நிபந்தனையின்  அடிப்படையில் மட்டுமே வழங்கப்பட்டது

மேலும் மாலம்பே மருத்துவ கற்கை நெறி ரஷ்யாவில் அமைந்துள்ள பிறிதொரு பல்கலைகழகத்துடன் இணைக்கப்பட்டிருந்தது. ஆயினும் ரஷ்யாவின் வின் தூதரகம் அந்த தொடர்பானது தங்களுக்கூடாக இடம்பெறவில்லை எனவும் தங்கள் கல்வி மற்றும் விஞ்ஞானத்திற்கான தேசிய சேவைகன் அலகில் பதிவுசெய்யப்படவில்லை எனவும் கூறி மறுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் மருத்துவ கற்கை மற்றும் மருத்துவ சேவைகளை ஒழுங்குபடுத்தும் ஒரே ஒரு அமைப்பாக இலங்கை மருத்துவ சம்மேளணம் இலங்கை மருத்துவ சட்டத்திற்கு அமைவாக விளங்கிவருகின்றது.

2009 மே முதல் இவ்வமைப்பானது SAITM வழங்குகின்ற மருத்துவ கற்கை நெறிக்கான SLMC இன் சட்டபூர்வமான அனுமதி இல்லை என SAITM முகாமைத்துவத்திற்கும் மற்றும் பொதுமக்களிற்கும் பல்வேறு சந்தர்ப்பங்களில் எழுத்து முலமாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

2009 செப்டம்பரில் உள்வாங்கப்பட்ட 40 மாணவர்கன் தொடக்கம் இன்று வரை 909 மாணவர்கள் 13 அணிகளில் (BATCH) மருத்துவ கறிகைக்கான தமது பணத்தை SAITM இல் முதலிட்டு இருக்கின்றனர்.

இது தவிர இலங்கையின் உயர்கல்வி நிறுவனங்களின் சட்டத்தின் அடிப்படையில் (section 70c) எந்தவொரு உயர்கல்வி கற்கை நெறிக்கும் வர்த்தமானி அறிவித்தலை தொடர்ந்தே பட்டம் வழங்கும் அந்தஸ்து வழங்கப்படும். ஆக்குறித்த கற்கை நெறிக்கான தொழில்சார் அமையத்தின் (மருத்துவத்தை பொறுத்தவரையில் SLMC ஆகும்) Compliance Certification பெறப்பட வேண்டும்.

ஆனால் அப்போதைய உயர்கல்வி அமைச்சர் தொழிசார் அமையத்தின் Compliance Certification அங்கிகாரம் இல்லாமலே 2013 ஆகஸ்டில் இரண்டு வருடங்கள் பிற்திகதியிடப்பட்டு SAITM இன் மருத்துவ கற்கை தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் ஒண்று வெளியிடப்பட்டது. அதன்படி அவ்வர்த்தமானி அறிவிப்பில் இந்நிறுவனத்திற்கான பட்டம் வழங்கும் அந்தஸ்து வழங்கப்படவில்லை மாறாக ஒரு நிறுவனம் பட்டம் வழங்கும் அங்தஸ்தை பெற்றுக்கொள்ள தடையாக இருக்கின்ற குறைபாடுகளை நிவர்த்தி செய்கின்ற வழிமுறைகள் அடங்கியதாகவே அவ்வர்த்தமானி காணப்பட்டது.

2012 பெப்ரவரியில் சுகாதார அமைச்சரால் நியமிக்கப்பட்ட 5 பேரை கொண்ட குழு பல்வேறு பரிந்துரைகளை முன்வைத்தது. ஆவற்றுள்  முக்கியமானது ஒருவருடத்திற்கு மாணவர் உள்வாங்குகை ஒருமுறை மாத்திரம்  இடம்பெற வேண்டும் என்பதே ஆகும்.

இதை தொடர்ந்து 4 பேரை கொண்ட குழுவும் (2013 ஜனவரியில்) 6 பேரை கொண்ட குழுவும் மேற்பார்வை செய்து பல்வேறு முடிவுகளை முன்மொழிந்தது.

2013 ஏப்ரலில் NFTH ஆரம்பித்ததை தொடர்ந்து SAITM முகாமைத்துவமானது SLMC இனை மேற்பார்வை செய்து தங்களின் தராதரங்களை பரிசீலிக்குமாறு அழைத்தனர்.

ஜூலை 2015இல் 10 அங்கத்தவர்களை கொண்ட SLMC இன் குழு ஒன்று SAITM மருத்துவபீடத்தையும் NFTH வைத்தியசாலையையும் பார்வையிட்டு அது தொடர்பான அறிக்கையை 2015 ஆகஸ்டில் சுகாதார அமைச்சரிடம் கையளித்தது. ஆந்த அறிக்கையில் SAITM மருத்துவ பீடமும், NFTH வைத்தியசாலையும் SLMC ஆல் அங்கிகரிக்கப்பட கூடிய தராதாத்தில் இல்லை என சுட்டிக்காட்டப்பட்டது.

2015 நவம்பரில் SLMC பொது மக்களிற்கு இதுகுறித்து SAITM மருத்துவ பீடத்தினால் வழங்ப்படும் MBBS பட்டமானது Sri Lankan Medical Ordinance சட்டத்திற்கு அமைய SLMC இல் பதியப்படுவதற்கு அங்கரிக்கப்படகூடியதல்ல என அறிவித்திருந்தது. ஆயினும் 2016 மே-யில் இந்நிறுவனத்தின் முதலாவது அணிக்கான இறுதிபரீட்சை நடாத்தப்பட்டது.

இதை தொடர்ந்து பட்டப்படிப்பை முடித்த மாணவர்கள்  Court of Appeal இல் ஒரு வழக்கையும் உச்ச நீதிமன்றத்தில் பிறிதொரு வழக்கையும் தாக்கல் செய்திருந்தனர். அவற்றில் ஒன்று SLMC தங்களது பட்டத்தினை அங்கிகரித்து பதிவு செய்யும்படியும்.  மருத்துவ சேவைக்கான கூட்டறிக்கையில் (Medical Service Minutes) மாற்றங்களை ஏற்படுத்தவும் கோரியிருந்தது.

இலங்கையின் சுகாதாரத்துறையில் உள்ள பதவி வெற்றிடங்களிற்கு மருத்துவர்களை பல்வேறு படிநிலைகளில் நியமிப்பதற்கான ஒழுங்குமுறைகளை உள்ளடக்கியதே Medical Service Minutes ஆகும்.

தற்போதுள்ளது நியமனங்களின்படி இலங்கையின் அரசபீடங்களில் கல்வி கற்கும் மாணவர்களிற்கு பொதுவாக நடத்தப்படும் பொது இறுதி பரீட்சையின் பெறுபேற்றின் அடிப்படையிலும் தெரிவுகளுக்கேற்றவகையிலும் நியமனங்களும் அதைதொடர்ந்து வெற்றிடங்களிற்கு ERPM எனப்படுகின்ற பரீட்கையின் அடிப்படையிலும் வெளிநாட்டில் கல்விகற்ற இலங்கை மருத்துவர்களின் Merit order அடிப்படையிலும் பதவி வெற்றிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன.

இவ்வெழுங்கமைப்புகளில் மாற்றத்தை வேண்டி SAITM மாணவர்களால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தற்போது நடைபெறும் இவ்வழக்குகளின் முடிவுகள் நாட்டின் எதிர்கால உயர்கல்வி கற்கை நெறிகளில் உயரிய தகைமைகளை கேள்விக்குட்படுத்தாத வகையிலும் நோயாளிகட்குரிய இலவச மருத்துவசேவையில் களங்கம் ஏற்டுத்தாத வகையிலும் அமைய வேண்டும் என்பதே எமது போராட்டத்தின் உடனடி கோரிக்கையாகும். இத்துடன் பின்வரும் கோரிக்கைகளை வேண்டி பகிஸ்கரிப்புபோராட்டத்தையும். மக்கள் மத்தியிலான விழிப்புணர்வு போராட்டத்தையும் முன்னெடுத்து வருகின்றோம்.

இலவசக்கல்வியின் மூலம் பயன் பெறும் அரச பல்கலைக்கழக மாணவர்கள் ஆகிய நாங்களும் இலங்கையின் குடிமக்களும் SAITM எமது நாட்டின் இலவச கல்விக்கும் இலவச சுகாதார சேவைக்கும் பாரிய அச்சுறுத்தலாக அமையும் என உணர்கிறோம்.

000000000000000000000000000000

ஜெனோ இப்போது இப்பிரச்சினை பற்றிய அடிப்படை உங்கள் மனதில் தோன்றியிருக்கும். அப்பேரணியில் கலந்துகொண்ட என்னால் அவதானிக்கப்பட்ட விடயங்களை உள்ளடக்கிய அன்றையநாளின் எனது முகநூல் பதிவு இது.

யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட மாணவர்களின் மாபெரும் நடை பேரணி.

நேற்று காலை எட்டு மணிக்கு யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட மாணவர்களின் மாபெரும் நடை பயணம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. தனியார் மருத்துவக்கல்லூரி தொடங்கப்பட்டதற்கு எதிராக இலங்கை முழுவதும் நடைபெற்றுவரும் போராட்டங்கள் கவனயீர்ப்புகளின் தொடர்ச்சியாக யாழ்ப்பாணத்திலும் நடைபெற்று வந்த கவனயீர்ப்பின் ஓர் அங்கமாகவே இப் பேரணியும் நடைபெற்றது.

எட்டுமணிக்கு ஆரம்பமாகும் என சொல்லப்பட்ட போதும் ஒன்பதரை மணிக்கே நடை பேரணி ஆரம்பிக்கப்பட்டது. வெகு குறைவான வெளியாட்களே இதில் பங்குபற்றியிருந்தனர். மருத்துவ பீடம் தவிர்த்து ஏனைய பீட மாணவர்களின் பங்களிப்பும் மிகச் சொற்பமே. சில பீடங்களின் மாணவ தலைவர்கள் பங்கு பற்றியிருந்தனர்.

பொதுவாகவே யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் அனைத்துபீட மாணவர்களால் ஏற்பாடு செய்யப்படுகின்ற போராட்டங்களிலும் வகுப்பு பகிஷ்கரிப்புகளிலும் கூட மருத்துவ பீட மாணவர்களின் பங்களிப்பு குறைவு என்கிற குற்றச்சாட்டு ஒன்று உள்ளது. அது உண்மையும் கூட.

இதுதான் மற்ற பீட மாணவர்களின் ஆதரவின்மைக்கான பிரதான காரணம். மற்றும் இது தொடர்பான விழிப்புணர்வெதுவும் மக்களுக்கு வழங்கப்படவில்லை. நடை பேரணியில் வழங்கப்பட்ட துண்டு பிரசுரத்திலும் கூட  சாதாரண மக்களுக்கு புரியும்படியான விளக்கமில்லை.

மருத்துவ பீடத்தில் இருந்து ஆரம்பிக்கப்படும் பேரணி கச்சேரியில் சென்று முடியும் என்றுதான் சொல்லப்பட்டது. ஆனால் வைத்தியசாலை வீதியில் இருந்து பேரணி முதலமைச்சரின் இல்லத்தில் சென்றுதான் முடிவடைந்தது. இது தொடர்பாக எதுவிதமான முன்னறிவிப்புக்களும் வழங்கப்படவுமில்லை.

மேற்சொன்ன குறைபாடுகளுடன்தான் இப்பேரணி நிறைவுபெற்றது. இவ்வாறான பேரணிகள் மற்றும் போராட்டங்கள் கவனம் பெறவும் வெற்றிபெறவும் அவை மக்கள் மயப்பட வேண்டும். போராட்டம் வெற்றிபெறாவிடினும் அப்பிரச்சனை தொடர்பான விழிப்புணர்வும் தெளிவும் மக்களுக்கிருக்க வேண்டும். அவ்வாறானதொரு நிலையை ஏற்படுத்துவதென்பது இலகுவான விடயமில்லை. அதற்கு முதலில் மக்களிடத்தில் நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். கவர்ச்சியின் மூலமான ஆதரவு எந்நேரத்திலும் இல்லாமல் போய்விடும் அபாயமொன்றுள்ளது. எனவே மக்களிடம் பிரச்சனையின் தீவிரத்தை எடுத்துக்கூறி அவர்களைத்  தம்பக்கம் ஈர்க்க வேண்டும். இது பல்கலைக்கழக மாணவர்களுக்கு கொஞ்சம் இலகு. காரணம் தமிழ் சமூகத்தை பொறுத்தவரை பல்கலைக்கழக மாணவர்களின் கருத்துக்கு ஒரு அங்கீகாரமிருக்கிறது. எனவே மாணவர்கள் வீதிக்கிறங்கி மக்களை சந்திக்க வேண்டும். அவர்களுடன் உரையாட வேண்டும்.

மூன்று வாரங்களுக்கு மேலாக யாழ். மருத்துவ பீட முன்றலில் அமைக்கப்படடிருந்த கவனயீர்ப்பிடத்தில் மாணவர்கள் அமர்ந்திருந்தனர். அந்த நேரத்தில் அருகிலுள்ள குடியிருப்புகளிலுள்ள மக்களையாவது சந்தித்திருந்தால் அன்றைய பேரணிக்கு மக்கள் அமோக ஆதரவளித்திருப்பார்கள்.

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஆதரவுகூட இப்பேரணிக்கு கிடைக்கவில்லை. மேலே சொன்னது போல யாழ். பல்கலைக்கழகத்தில் நடைபெறும் ஏனைய போராட்டங்கள் வகுப்பு பகிஸ்கரிப்புகளிலெல்லாம் மருத்துவபீட மாணவர்களின் பங்களிப்பு மிக குறைவு. மற்றும் அவர்களுக்குள்ளே தங்கள் கல்வி பற்றிய ஒரு மேன்னைத்தனம் குடிகொண்டிருக்கும். இதுதான் இந்த பிரிவினைக்கான காரணம். அனைத்து பீடங்களிலும் வகுப்பு பகிஸ்கரிப்பு நடைபெறும் வேளையில் மருத்துவ பீட விரிவுரைகளில் மாத்திரம் மாணவர்கள் கலந்துகொள்வர். இதன் தொடர்சியே மருத்துவபீடத்தின் மீது ஏனைய மாணவர்களுக்க நேரடியாக வெளிக்காட்ட முடியாதவொரு கோபத்தையும் வெறுப்பையும் ஏற்படுத்திவிட்டிருக்கிறது. அத்துடன் தற்போதைய துணை வேந்தர் மருத்துவபீட விரிவுளையாளராக இருப்பதும் அப்பீடம் தொடர்பாக அவர் அதிக கரிசனை காட்டுகிறார் என்கிற தோற்றப்பாடுமுள்ளது. அவரின் மாணவர்களுக்கெதிரான நிலைப்பாடும் அரசியல் கட்சியொன்றின் நிகழ்ச்சிநிரலின் கீழ் இயங்குவதும் அவர் மூலமான மருத்துவ பீடம் மீதான ஏனைய மாணவர்களின் வெறுப்புக்கான காரணமாயிருக்கிறது.

இது போலவே அன்றைய மருத்துவபீட பேரணியின் போதும் மற்ற பீடங்களிலெல்லாம் விரிவுரைகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது. இதை தமக்கு கிடைத்த பழிவாங்குமொரு சந்தர்ப்பமாகவே ஏனைய பீட மாணவர்கள் பார்த்தார்கள். ஒருசிலர் கலந்து கொண்டனர். இங்கும் ஏனைய பீட மாணவர்களுக்கும் இப் பிரச்சினையின் தீவிரத்தன்மை தெரிந்திருக்கவில்லை. அது விளங்கப்படுத்தப்படவுமில்லை. முன்னர் குறிப்பிட்ட தங்கள் கல்வி பற்றிய மேன்மைத்தனமாகவே இதை பார்க்க முடிகிறது. பல்கலைக்கழக போராட்டங்கள் எல்லாம் சாதாரணமாக்கப்பட்ட இக்கால கட்டத்தில் தனியொரு பீடத்தின் போராட்டத்தின் வீரியம் மிகக்குறைவானதாகவே இருக்கும். இது அனைத்து பீட வகுப்பு பகிஷ்கரிப்பாக இருக்கும் போது அதற்கு கிடைக்கும் முக்கியமும் விளம்பரமும் ஒப்பீட்டளவில் அதிகமாகவே இருக்கும்.

பேரணியில் தமிழ் சிங்கள மற்றும் ஆங்கில மொழிகளில் பதாகைகளை மாணவர்கள் ஏந்தியிருந்தார்கள். அத்துடன் எதிர்ப்பு கோஷங்தளையும் எழுப்பினர். அதிலும் சிங்கள மாணவர்கள் முன்னரே ஆயத்தப்படுத்தியது போன்று ஒருமித்த சந்தத்துடன் ஓசையெழுப்பினர். அதற்காக நிபுணத்துவம்வாய்ந்தவர்களை ஒழுங்குபடுத்தியிருந்தனர்.

தனியார் மருத்துவக்கல்லூரிகள் தொடர்பாக அவற்றால் வழங்கப்பட்ட நியாயப்பாடுகளிலிருந்து இலங்கையில் எழக்கூடிய முக்கிய பிரச்சனைகள் பற்றி சிந்திக்கும்போது முதன்மையாக எழக்கூடியவை இலங்கையை பொறுத்தவரை வைத்தியர்களுக்கான நிரம்பலானது நிலவும் கேள்வியை விடவும் குறைவாகவே உள்ளது. அதிலும் அவ்வெற்றிடங்கள் அதிகம் பின்தங்கிய பிரதேசங்களிலே காணப்படுகிறது. இதிலிருந்து எழும் மிக முக்கிய கேள்வி இலவசக்கல்வி பெற்ற வைத்தியர்களே இப்பகுதிகளில் பணிபுரிய தயங்குகின்ற போது இலட்சங்களில் முதலிட்டு தனியார் துறையில் கல்விகற்று வரும் வைத்தியர்கள் மட்டும் எவ்வாறு இங்கு பணிபுரிய முன்வருவார்கள்? அதுமட்டுமன்றி நீண்ட காலத்தில் மிகைநிரம்பல் ஏற்பட்டு அதன்மூலம் வேலையின்மை மற்றும் கீழுழைப்பு நிலை ஏற்படும். எத்துறை வைத்தியர்களுக்கு முன்னுரிமை வழங்குவது போன்ற பிரச்சினைகளும் உருவாகும்.

மருத்துவக்கல்வியில் போதனாவைத்திசாலைகளின் பங்கு மிக முக்கியம் அந்த வகையில் தனியார் கல்லூரிகள் தமக்கென போதனா வைத்தியசாலைகளை அமைத்துக்கொள்ள வேண்டும். இதிலும் மிகப்பெரும் சிக்கலொன்றிருக்கிறது. தனியார் வைத்தியசாலைகளை நாடும் நோயாளர்களின் எண்ணிக்ககை குறைவு. மற்றும் குறிப்பிட்ட சில நோய்கள் தொடர்பாக மாத்திரம் நோயாளர் வரவு இருக்கும். இது செயல்வழி கற்கைக்கு தடையாக அமையலாம். அத்துடன் கல்வியின் தரம் அங்கீகாரம் என்பவற்றையும் தீர்மானிப்பதாகவிருக்கிறது. தனியார் மருத்துவக் கல்லூரி தொடர்பாக விசேட சட்டங்கள் எதுவும் இன்னும் அறிமுகப்படுத்தப்படாமையும் இவற்றை கட்டுபடுத்த முடியாமல் போகலாம்.

ஏற்கனவே வெளிநாட்டு மாணவர்களுக்கென அரச பல்கலைகழகங்களில் வழங்கப்படுகின்ற கட்டணங்களுடனான அனுமதியை அதிகரித்தல் இதற்கு சிறந்த மாற்றுவழியாக அமையும். இதற்காக மருத்துவபீடங்ளை விரிவுபடுத்தலாம். அரசின் நேரடியான கண்காணிப்பும் இருக்கும். இது இப்பிரச்சனைக்கான குறுங்கால தீர்வாக அமையலாம். மேற்சொன்ன விடயங்கள் மூலமாக இலங்கையில் வைத்தியர்களுக்கான தேவை உணரப்படுகின்றது ஆயினும் தற்போது வழங்கப்பட்டுள்ள அனுதியின்படி அமைக்கப்படும் தனியார் மருத்துவக் கல்லூரிகள் சிறந்த சுகாதார குறிகாட்டியை கொண்ட இலங்கையின் சுகாதாரத்துறைக்கு அச்சுறுத்தலாக அமைகின்ற சாத்தியமே அதிகம்.

ஜெனோஜன் -இலங்கை

ஜெனோஜன்

(Visited 87 times, 1 visits today)