மின்பொறிக்குள் சம்பூர்-விமர்சனம்-ஜெனோஜன்

ஜெனோஜன் போரும் பின்னணியுமான ஈழத்தமிழர் வாழ்வில் கலைகளும் வரலாறும் மிகக் குறைவாகவே கடத்தப்பட்டிருக்கிறது. அதிலும் திரைப்படங்களின் வளர்ச்சி மிக மந்தமாகவே காணப்படுகிறது. அதற்கு பல பின்னணி காரணங்கள் சொல்லப்படுகிற போதிலும், இத்துறை சார்ந்து இயங்குபவர்களுக்கான சுதந்திரமும், வளக் கிடைப்பனவுகளும், ஏன் அவர்களுக்கான அங்கீகாரமோ ஊக்குவிப்புக்களோ கூட கிடைப்பதில்லை. அதிலும் ஆவணப்படம் சார்ந்த முயற்சிகள் மிகச் சொற்பம். அதிலுள்ள சிக்கல்கள் மற்றும், பொறுப்பு கூறவேண்டிய கடப்பாடு, முறையான கல்வியின்மை போன்ற காரணிகளும் முக்கியம் பெறுகிறது.

அவ்வாறான சிக்கல்களுக்கும், அச்சுறுத்தலுக்கும் மத்தியிலும் அதிதீவிர அரசியல் அடங்கிய மக்களின் மிக முக்கிய பிரச்சினைகளை ஆவணப்படங்கள் மூலம் தேசிய ரீதியிலும், சர்வதேச அளவிலும் கவனம் பெறுவதற்கான உந்துதலை வழங்கி வருகிறவர்களில் ஆவணப்பட இயக்குனர் ஜெரா முக்கியமானவர். அவரது இயக்கத்தில் சம்பூர் மக்களின் சமகால பிரச்சினையான சம்பூர் அனல்மின் நிலைய பிரச்சினை பற்றி பேசும் ஆவணப்படம்தான் ‘மின் பொறிக்குள் சம்பூர்’. சுன்னாகம் பகுதி நீரில் கழிவு ஒயில் கலப்பை மையப்படுத்தி ‘தகிக்கும் தண்ணீர்’,  யாழ்ப்பாண வைத்தியசாலையில் இந்திய ராணுவம் மேற்கொண்ட படுகொலையின் ஆதாரமான ‘Tears of Gandhi’ போன்ற ஆவணப்படங்களும் இவரது இயக்கத்தில் வெளிவந்துள்ளது. இன்னும் சில ஆவணப்படங்களையும் இயக்கிக் கொண்டிருக்கிறார்

சம்பூர் கிழக்கு மாகானம் திருகோணமலையின் மூதூர் பிரதேச சபைக்குட்பட்ட கிராமமாகும். சம்பூர் மக்கள் மீள்குடியேற்றத்துக்காக போராடிக்கொண்டிருக்கும் போதுதான் சம்பூரில் அமைக்கப்படவிருந்த உத்தேச நிலக்கரி அனல்மின் நிலைய பிரச்சினை தீவிரமடைந்து கொண்டிருந்தது. ஆனால் இது தொடர்பாக தேசிய அளவில் கவனத்தைப் பெற வேண்டிய கட்டாயமும் இருந்தது. அப்போது ஜெரா அவர்கள் இப்பிரச்சினை பற்றி ஒரு ஆவணப்படம் செய்ய முன்வந்தார். ஆனால் பூச்சிய பாதீட்டில் போராடி வந்த பசுமை திருகோணமலை ( அனல் மின் நிலையத்திற்கெதிரான மக்கள் இயக்கம்) அமைப்பில் அதற்கான தயாரிப்பு செலவை ஏற்க முடியாத காரணத்தினால் அவரே புலம்பெயர் நண்பர்கள் மூலம் தயாரிப்புச் செலவையும் பெற்றுக்கொண்டு சம்பூருக்கு வந்து சேர்ந்தார்கள். மிகக் குறைந்த செலவில் குறுகிய நாட்களில் ஆயத்தப்படுத்தப்பட்ட ஆவணப்படப் படப்பிடிப்புகள் தொடங்கப்பட்டது.

இயக்குனர் ஜெரா மற்றும் படிப்பிடிப்பிற்காக சன்சிகன், மதுரன் மூவரும் யாழ்ப்பாணத்திலிருந்து இரவுப் பேருந்தில்  திருகோணமலை வந்து சேர்ந்தனர் அந்த விடியற்காலையிலே மூதூர் பஸ் பிடித்து மூதூர் வந்து அங்கிருந்து சம்பூர் செல்லவும் மூன்று நாட்கள் படப்பிடிப்பிற்குமாக சசி அவர்கள் ஓட்டோ ஒன்றை ஒழுங்கு செய்திருந்தார். ஓட்டோ சாரதி நௌஷாத் மிகவும் உறுதுணையாகவிருந்தார். ஒரு வாரத்திற்கு முன்பாகவே ஜெரா அவர்கள் வந்து இடங்களை பார்வையிட்டு திரைக்கதையை திருத்தியமைத்தார். அதனால் படப்பிடிப்பு உடனே ஆரம்பிக்கப்பட்டது. இதில் முக்கிய விடயமொன்றை குறிப்பிட வேண்டும் ஆரம்பத்தில் திரைக்கதை பற்றி வேறு திட்டம் வைத்திருந்த ஜெரா அண்ணா சம்பூர் வந்து இடத்தெரிவின் பின் படத்தை ஒரு கதை சொல்லியின் மூலமாக நகர்த்திச் செல்ல திட்டமிட்டிருந்தார். அத்துடன் அந்த பாத்திரம் அனல்மின் நிலைய போராட்டம் பற்றியும், அம்மக்களின் வாழ்க்கை முறை பற்றியும் அறிந்தவராக இருப்பது கட்டாயம் என்பதால் அதற்கு என்னை தேர்வு செய்தார். என்னால் முடியாது உங்களுக்களுக்குதான் இதனால் சிரமம் என்றேன். பரவாயில்லை நீங்கள்தான் என்றார். சரி துன்பத்தை கேட்டு வாங்குகிறார் என்று ஒத்துக்கொண்டேன். முதலாவதாக சம்பூர் பாடசாலையில் படப்பிடிப்பை அதிபரின் அனுமதியுடன் தொடங்கினோம். 2006 சம்பூர் இடப்பெயர்வுக்கு பின் கடற்படையினரின் வசமிருந்த பாடசாலை மிக அண்மையில்தான் விடுவிக்கப்பட்டிருந்தது. அங்கு எனது பகுதி காட்சிகளை நான்கைந்து முறை  படம்பிடித்தார்கள் அப்போதும் ஜெரா அண்ணாவிடம் இது வேண்டாம் நான் வருவதாக திட்டமிட்ட பகுதிகளை பின்னணி குரல்கள் மூலம் மேம்படுத்தலாம் என்றேன். ஆனாலும் அவர் சம்மதிக்கவில்லை. முதல் டேக் தானே இது போகப் போகச் சரியாகிவிடும் என்றார். ஆனால் அதற்கு பிறகு எடுத்தவை பத்து பதுனைந்து டேக் போனது வேற கதை.

தொடர்ந்து சம்பூர் காளி கோவில், வில்லுக்குளம் ஆகிய இடங்களை படம்பிடித்தோம். இவை சம்பூரின் மிக முக்கிய அடையாளங்கள். அதன் பின்னர் அனல் மின் நிலையத்திற்காக சுவீகரிக்கப்பட்ட காணிகளையும் அதை சுற்றி போடப்பட்டுக் கொண்டிருந்த வேலிகளையும் பார்வையிட்டு அதில் சில இடங்களிலும் அருகிலிருந்த வயல்களில் வேலை செய்த விவசாயிகளிடமும் படப்பிடப்பை மேற்கொண்டோம். குறுகிய நேரத்தில் மதிய உணவை முடித்து விட்டு மீண்டும் சந்தோசபுரம் எனும் பழங்குடி மக்களின் கிராமம் இருக்கிற பகுதியால் வந்த போது, அவ்வூரிலுள்ள பாண்டியன் என்பவரை சந்தித்தோம். அவர்தான் அனல்மின் நிலையத்திற்காக சுவீகரிக்கப்பட்ட காணி எல்லைக்குள் சந்தோசபுர மக்களின் ஐம்பதிற்கும் மேற்பட்ட வீடுகள் இருப்பதை சொன்னார். அதுவரையிலும் இது பற்றி யாருமே அறிந்திருக்கவில்லை. அங்கே அழைத்தும்சென்றார். வெளியிலிருந்து பார்த்தால் எதுவுமே தெரியாத அளவுக்கு வாகையும்,  இலந்தையும், நறுவிளியும், இதர பல மரங்களும் நெடிந்து எல்லாவற்றையும் மறைத்திருந்தது. உள்ளே சென்று பார்த்தவைதான் படத்திலிருக்கும் காட்சிகள். அச் சிறிய காடு மண்டியிருந்த மக்களின் வாழ்விடங்களை பார்த்து முடிப்பதிற்குள்ளே வெளிச்சம் குறைந்துவிட்டது. அதனால் அடுத்தநாள் மதிய வேளையில் அவ்விடத்தை படம்பிடிக்க தீர்மானித்தார் ஜெரா. மீண்டும்  தொடருவதற்காகச் சில காட்சிகளை எடுத்துவிட்டு ஒரு வீட்டை இரவில் படம்பிடிப்பதாக இருந்தது. அதனால் அங்கே சென்றோம். மீள்குடியேற்றப்பட்ட ஒரு குடும்பத்தின் உடைந்த வீடு அது. இக்குடும்பம் வீட்டிற்கு முன்னிருந்த மாவிற்கு கீழ் படங்கு ஒன்றை கட்டி தமது உடமைகளயெல்லாம் அதற்குள் வைத்து ஒரு ஓரமாக அரிக்கன் விளக்கு வெளிச்சத்தில் சமைத்துக் கொண்டிருந்தனர். அதை படம்பிடிக்க போதிய வெளிச்சமில்லாததால் தங்குவதற்கு ஒழுங்கு செய்யப்பட்ட வீட்டிற்கு செல்லும்போது மணி ஒன்பதை தாண்டியிருந்தது.

என்னைத்தவிர மற்ற மூவருக்கும் மிகுந்த சோர்வு. முதல்நாள் இரவும் தூக்கமில்லாத பயணம். இருப்பினும் அடுத்தநாள் பற்றிய திட்டமிடலுடன் பல கதைபேசினோம். மதுரன் மற்றும் சன்சிகன் அப்போதுதான் பிரச்சினையின் தீவிரத்தை உணரத் தொடங்கியிருந்தனர். மிகத் தீவிர விவாதங்களின் பின் தூங்கி காலையில் எல்லோரும் ஆறு மணிக்கே அவர்கள் தயாராக இருந்தனர். நாங்கள் வழமைபோல படப்பிடிப்பை தொடங்கினோம். இரண்டாவது நாளான அன்று அதிகமாக நேர்காணல்களை எடுத்தோம். காணி பறிபோன மக்கள், துறைசார் நிபுணர்கள், கிராம சங்க தலைவர்கள், விவசாயிகள், கடல் தொழிலாளர்கள் என நீண்டது அந்தப்பட்டியல். பின்னர் சூடைக்குடாவில் அமைந்திருக்கும் கெவுளியாவை(வெளிச்ச வீடு) படம்பிடிக்க திட்டமிட்டிருந்தோம். ஆனால் அங்கு செல்லக் கடற்படையின் அனுமதி இல்லாமையால் சம்பூரில் இருந்து மீன்பிடி இயந்திரப் படகில் கொஞ்சம் அருகாக சென்று எடுக்கலாம் என்று படகோட்டி சொன்னார். ஆனால் படகுக்கு வெளியில் கமெரா தெரிவதை அவர் தனக்கான அச்சுறுத்தலாக கருதினார். ‘வெளிய தெரியாம வோட்டுக்க வெச்சி எடுங்க’ என்று கமெரா கொஞ்சம் வெளித்தெரியும் போதெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தார். வெயில் கொடுமை தாங்க முடியவில்லை. நான் படகின் அணியப் பகுதிக்குள் சுருண்டு படுத்துவிட்டேன். மதிய உணவுக்காக இடையில் ஒரு தீவில் இறங்கினோம். பத்து பேர் மட்டுமே அமரக்கூடிய அத்தீவில் இரண்டு பூவரசு நிழல்களும் கடல் நீரில் பட்டுக்கொண்டிருந்ததால் தீவில் அதிகம் வெயில்பகுதியாகவே இருந்தது. அங்கிருந்த கற்களிலமர்ந்து மதிய உணவையும், சில திட்டமிடல்களையும் முடித்துவிட்டு கரை திரும்பினோம். மூன்றாம் நாள் சூரிய உதயத்தில் எடுக்கவேண்டிய காட்சிக்காக ஐந்தரைக்கெல்லாம் மூதூர் கிழக்கு பகுதியை மூதூர் நகரிலிருந்து பிரிக்கும் பாலத்தில் அக் காட்சிகளை எடுத்துவிட்டு கடற்கரையிலும், பின்னர் சில விடுபடல்களையும்  படம்பிடித்து விட்டு, மாலை திருகோணமலை நகரில் ஒழுங்குசெய்யப்பட்ட கலந்துரையாடலில் கலந்து கொள்ளவும் அதில் சில நேர்காணல்களை எடுப்பதற்காகவும் மதியம் மூன்று மணியளவில் நான் மோட்டார் சைக்கிளிலும் மற்ற மூவரும் முச்சக்கர வண்டியிலுமாக வந்து சேர்ந்தோம்.

சேர்ந்திருந்தது கதைப்பதென்னவோ நமக்கெல்லாம் மிகவும் பிடித்த விடயம் இல்லையா ? ஆளாளுக்கு அடித்து விளாசியதில் கலந்துரையாடல் தாமதமானது. மீதமிருந்த நேர்காணலும் எடுக்க முடியாமல் போனது. அந்நேர்காணல்களை பின்னொருநாளில் எடுக்க தீர்மானித்து விட்டு அன்றிரவு அவர்கள் மூவரும் யாழ்ப்பாணம் புறப்பட்டார்கள்.

சம நேரத்தில் சம்பூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் நிலக்கரி அனல்மின் நிலையத்திற்கெதிரான போராட்டங்கள் பரவலாக நடந்துகொண்டிருந்தது. அவ்வாறே பழங்குடி மக்களாலும் ஒரு ஆர்ப்பாட்டம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. அதனையும் படத்தில் இணைப்பதற்காக ஜெராண்ணாவும் படப்பிடிப்பாளர் சன்சிகனும் மறுபடியும் திருகோணமலை வந்திருந்தனர். அந்த ஆர்ப்பாட்டம் பாடசாலைக்கு முன்பாக இடம்பெற்றதால் காவல்துறை சத்தம் எழுப்புவதற்கே தடை விதித்தனர். அத்தோடு வந்திருந்த ஊடகவியலாளர்களுக்கும் சில தடைகள் இருந்ததால் அங்கு மிகுந்த சிரமங்களுக்கு மத்தியில்தான் படம் பிடிக்கப்பட்டது. அதோடு விடுபட்ட சில நேர்காணலையும் எடுத்துக்கொண்டனர்.

இது நடந்த சில தினங்களில் நான் யாழ்ப்பாணம் சென்றிருந்தபோது ஜெராண்ணா, மதுரன், மற்றும் சன்சிகன் வந்து சந்தித்தனர். என்னுடைய சில காட்சிகளில் கதைப்பது தெளிவில்லாமல் இருப்பதால் மீண்டும் அக்காட்சிகளை எடுக்கவேண்டும் எனக் கூறினர். முதல் மூன்றுநாள் படப்பிடிப்புக்கு செல்லும் போது நான் அதிக உடைகளை எடுத்துச் சென்றிருந்தேன். இங்கென்னா சினிமா சூட்டிங்கா நடக்குது. ஒரே உடுப்புதான் போடணும் என்று சொல்லிவிட்டார். அந்த ஒரு சேர்ட்டையே தோய்த்துத் தோய்த்து போட வேண்டியதாயிற்று. காலையில் அது பாதிதான் காய்ந்திருக்கும். இப்போது மீண்டும் அந்த ஷேர்ட்ஆ என்று நினைத்தேன். பிறகொருநாளில் அதையும் எடுத்தாயிற்று. பொருளியல் பேராசிரியர் அமிர்தலிங்கம் அவர்களின் நேர்காணலுக்காக ஜெரா அண்ணாவும் சன்சிகனும் கொழும்பு சென்றும் சில காரணங்களால் அது சாத்தியமாகவில்லை. பின்னர் பேராசிரியர் யாழ்ப்பாணம் வந்தபோது அந்த நேர்காணலை அவர்கள் படம்பிடித்தார்கள்.

மிக முக்கிய விடயம் முதல் மூன்றுநாள் படப்பிடிப்பிற்கு அங்குள்ள மக்களே தங்குமிடம் மற்றும் உணவுகளை வழங்கினார்கள். செலவும் மூன்று நாட்களுக்கே திட்டமிடப்பட்டு தயாரிப்பாளர் இளைய வன்னியன் அவர்களுக்கு தெரியப்படுத்தப்பட்டிருந்தது. ஆனால் அதற்கு பிறகும் மூன்று நான்கு நாட்கள் படப்பிடிப்புக்கு தேவைப்பட்டதால் இணைத் தயாரிப்பாளராக காண்டீபன் அவர்கள் உதவினார். அத்துடன் நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் தாக்கத்தையும் இதனுடன் இணைத்து வெளியிடவே இயக்குனர் ஜெரா அவர்கள் தீர்மானித்திருந்தார். காலம் மற்றும் செலவைக் கருத்தில் கொண்டு அவ்விணைப்பு இல்லாமலே படம் வெளியிடப்பட்டது. நிலமை இவ்வாறிருக்க பாகிஸ்தானில் இருந்து காசு வருகிறது, சீனாவிலிருந்து காசு வருகிறது என்பவர்களை என்ன சொல்வது.

இது ஒரு பெரிய படமா ? இதற்கெதற்கு இத்தனை ஆர்ப்பாட்டம் ? என நீங்கள் நினைக்கலாம். நிச்சயமாக மிகக்குறைந்த வளங்களுடனும், குறுகிய செலவுடனும் மிகப் பெரும் அரசியல் பிரச்சினையை கையிலெடுத்ததே இப்படைப்பின் வெற்றிதான். எல்லாவற்றையும் விட பெரிது அந்த பாமர மக்களின் அன்பு.

ஜெனோஜன்-இலங்கை

ஜெனோஜன்

(Visited 49 times, 1 visits today)