கந்தில் பாவையை முன் வைத்து சில வாசிப்புகள்-கட்டுரை-கிரிஷாந்

 

கிரிஷாந் வாசிப்பின் அர்த்தங்கள் நிலையில்லாதவை. புறச்சூழல் எப்பொழுதும் வாசிப்புகளின் மீது தாக்கங்களை செலுத்திக் கொண்டேயிருக்கும். அதனால் எந்தவொரு பிரதியின் மீதானதுமான வாசிப்பும் முழுமையானதோ , உண்மையானதோ அல்ல. அது அந்த நேரத்துக்குரிய முழுமை , அந்த நேரத்துக்குரிய உண்மை என்ற நிலைப்பாடுகளிலிருந்து தேவகாந்தன் எழுதிய ஒரு சமூகம் பற்றிய பல்வேறு நிலைப்பட்ட வாசிப்புகளின் தொகுப்பாகிய கந்தில்  பாவை என்ற பிரதியை பற்றிய எனது சில அவதானிப்புகளை முன் வைக்கிறேன்.

1  – ஒடுக்குமுறைகளினால் திரளும் மனக்காயங்களிலிருந்து பெண் மனங்கள் தம்மை விடுவித்துக் கொள்ளும்  வழியாக பெண் மனங்கள் தம்மை பேதலித்துக் கொள்கின்றன. ஈழத் தமிழ்ச் சமூகம் என்கின்ற சாதிய , ஆணாதிக்க சமூகத்தில் பெண்களுக்கு பொதுவான கூட்டு உளவியல் நிலை தோன்றுவது இயல்பான நிலை தான். காலகாலமாக கட்டமைக்கப் பட்ட பாலியல் விருப்புகள், பாலியல் தெரிவு , பாலியல் சுதந்திரம் , பாலியல் புரிதல் போன்ற இந்தச் சமூகத்தின் அடக்குமுறைக்குள்ளாகும் கருத்தியல்காளால் அதிகம் ஒடுக்குமுறைக்குள்ளாவது பெண்கள் தான். பெண்களுடைய காமம் பற்றிய சுதந்திரம் , கொண்டாட்டம் எந்தளவு தூரத்திற்கு நமது சமூகத்தால் புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது ?

தமிழ்ச் சமூகத்தில் பெண்  பற்றிய தாய்மை உருவகம் பெண்ணினுடைய காமத்தை ஒடுக்கும் வகையில் இயங்குகிறது . பெண் தனது காமத்தை வெளிப்படுத்துவது உரையாடுவது பரிமாறிக் கொள்ளவது போன்ற கருத்தியல்கள்     எவ்வாறு காலகாலமாக இருந்து வருகின்றன என்பன தொடர்பான ஒரு பரம்பரையின் ஆவணமாக இந்தப் பிரதியை வாசிக்கலாம்.

2  – வரலாற்று நிலைப்பட்ட காலங்களில் உள்ளும் வெளியாக விரியும் நிலங்களும் மனிதர்களும் வாழ்க்கை முறைகளும் வாசிப்பின் போதான ஒரு பொது நோக்கை கொண்டிருக்கின்றன. எல்லாக் காலங்களிலும் எல்லா இடங்களிலும் மனிதர் யார் என்பதை நோக்கிய இலக்கியத்தின் பொது நோக்கங்களாக கற்பிக்கப்பட்டிருக்கின்ற விடயங்களிலேயே இந்த பிரதியும் இயங்குவது போல் உள்ளது . உத்தி முறைகளை கையாள்வது , மொழியை பயன்படுத்துவது போன்றன கூட பழைய இலக்கிய முறைகளை கையாண்டிருப்பது என்ற வாசிப்பே இப்போதைய நிலை.

இந்த  வாசிப்புகளே இப்போதைக்கு போதுமானதென்று நினைக்கிறேன். பெண்ணுடைய காமத்தை  உரையாடுவதற்குரிய வாழ்க்கை அம்சங்களை கொண்டிருப்பதே அதனை பற்றி சமூகம் உரையாடாத தொடங்க முக்கியமான புள்ளி என்று நினைக்கிறேன். சமூகம் தன்னை பற்றி கொண்டிருக்கின்ற பெருமிதங்களில் (கற்பிதங்களில் ) கேள்வியை எழுப்பக் கூடிய வாசிப்புக்களை இந்தப் பிரதி கொண்டிருப்பது முக்கியமானது .

வேறு சில்லறை வேலைகளை அலம்புவதும் , அது அப்படி இது இப்படி என்று வியாக்கியானங்களை நீட்டி முழக்குவதும் இது இது தான் என்று தீர்ப்பிடுவதும் வாசிப்பின் இயல்பை பொறுத்தவரை போலியான ஒன்று என்றே நம்புகின்றேன். ஆகவே , பிரதியை வாசிக்காத யாருக்கும் விளம்பரமாகவோ அல்லது வாசிப்பதற்கு உதவுவதற்காகவோ மேற் சொன்ன குறிப்புக்களை எழுதவில்லை .

வாசிக்கத் தெரியாத ஒருவர் எதைப் படித்தும் பிரயோசனமில்லை. வாசிப்பை கற்றுக் கொள்வதும் புரிந்து கொள்வதும் தான் நமது காலத்திலுள்ள கனவுகளிலிருந்து நம்மை விடுதலை செய்யும். ஆகவே இந்த பிரதியை நீங்கள் வாசியுங்கள் , அதன் அனுபவத்தை வாழ்க்கையின் ஒரு புள்ளியிலாவது மாற்ற தயாராக இருந்தால் , உரையாட விரும்பினால் நாம் தொடர்ந்து உரையாடலாம் . இல்லையென்றால் போய் உங்கள் வேலையை பாருங்கள் , இலக்கியத்தில் நேரத்தை வீணாக்க வேண்டாம்.

கிரிஷாந்த்- இலங்கை

கிரிஷாந்

(Visited 42 times, 1 visits today)