அகதி-சிறுகதை-கோமகன்

எனது கதை :

கோமகன்பாரிஸ் பெருநகரின் வடகிழக்குப் புறத்தில், ஏறத்தாழ அறுபது மைல்கள் தொலைவில், பிரான்ஸின் சர்வதேச விமான நிலையத்தின் அருகே செவ்ரன் என்ற வ்போ (beau sevran) செவ்ரன் நகர் அமைந்து இருந்தது. இந்த நகரில் வசிப்பவர்களை ‘செவ்ரனைஸ்’ (Sevranais) என்று சொல்வது வழக்கம். போ செவ்ரனை சரியாகத் தமிழ்ப்படுத்தினால் அழகிய செவ்ரன் என்று வரும். அனால் இந்த நகரில் அநேகர் குடியேற்றவாசிகளாகவே இருந்ததினால் அழகிற்கும் சுத்த பத்தங்களுக்கும் இந்த நகர் எட்டியே நின்றது. இன்றும்கூட செவ்ரன் தொடருந்து நிலையத்தின் முன்னால் குடியேற்ற வாசிகளினால் விற்கப்படுகின்ற சோளம்பொத்திகழும்  இறைச்சியில் வாட்டி விற்கின்ற சான்விச்சுகழும் பிரபலம். அதில் இருந்து வெளியாகும் தீய்ந்த புகையினால் சுற்றுச்சூழல் பாதிப்படுவதாக அவர்களும் உணர்வதில்லை இந்த நகரின் நகரத்தந்தையும் உணர்வதில்லை. இப்படியாக இந்த நகரின்  கதையைச் சொல்லிக்கொண்டு போகையில் பூவுடன் சேர்ந்த நாரும் மணக்கும் என்பது போல, எங்களுக்கு எப்படி வன்னி தடுப்பு முகாம்கள் ஒருகால கட்டத்தில் இருந்ததோ அப்படியே வரலாற்றில் கறைபடிந்த நகரான ட்ரான்ஸி(Drancy) நகர் போ செவ்ரனுக்கு  பக்கத்தில் ஏறத்தாழ 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இரண்டாவது உலகமகாயுத்தத்தின் பொழுது இங்கிருந்த பாரிய திறந்தவெளிச்சிறைச்சாலையில் இருந்து( Camp de Drancy) பல  யூதர்கள் வகை தொகையின்றி நாஸிகளினால் போலந்தில் இருந்த ஒஷ்விட்ஸ்(Auschwitz) சித்திரவதை கூடத்திற்கு புகையிரத வண்டிகளில் நாடு கடத்தப்பட்டார்கள். இது தொடர்பாக ஒரு திரைப்படமும் வெளியாகியது. இனி நாங்கள் போ செவ்ரனுக்குள் நுழைவோம்,

இந்த நகரின் மத்தியில் நான்கு பனைகளை நான்கு திசையிலும் மேல் நோக்கி நிறுத்தி வைத்த மாதிரி ஒவ்வொரு ரவரிலும் எண்பது குடும்பங்களை உள்ளடக்கிய, இருபது மாடிகளையும் நான்கு மினிக்கிராமங்களையும் தன்னகத்தே கொண்ட அந்தத் தொடர்மாடிக் கட்டிடத் தொகுதி பரந்து விரிந்திருந்தது. அதன் நடுப்பகுதியிலே மனிதர்களும் ஏன் நாங்களும் இளைப்பாறுவதற்கு ஏற்றால் போல சடைத்து மேல் நோக்கி உயர்ந்த பைன் மரங்களை எல்லைகளாகவும் அவற்றின் மத்தியிலே மனிதக்குழந்தைகள் விளையாடுவதற்கு குருமணல் பரப்பிய ஒரு பூங்காவும் இருந்தது. இந்தப் பூங்காவும் அதனைச்சுற்றியுள்ள சூழலும் காலையில் எம்மாலும் மாலையில் குழந்தைகளினாலும் அமைதியைத்தொலைக்கும். இந்த நான்கு ரவர்களில் ஒன்றான ‘சி’ரவரின் ஐந்தாவது மாடியில் 54ஆவது இலக்கக் கதவில் இருக்கின்ற வீட்டின் அகன்று நீண்ட பல்கணியில், நான் எனது மனைவி மற்றும் எமக்குப்பிறந்த 10 மக்கள்களும், ஒரு வரவேற்பறை ,சாப்பாட்டறை, நான்கு பரந்த அறைகள் மற்றும் அமெரிக்க பாணியில் அமைந்த பரந்த குசினியுடன் கூடிய வீட்டில், வீட்டின் சொந்தக்காரருமான சத்தியபாலன்  மற்றும் நிலாமதி என்ற பெயர்களை வெள்ளைகளுக்காகச் சுருக்கிக்கொண்ட ‘சத்தியா’, ‘நிலா’ தம்பதிகளும் அவர்களது 03 பிள்ளைகளும் வசித்து வருகின்றோம்.

சத்தியா, நிலா தம்பதிகளுக்கு முன்னரே பலவருடங்களாக இந்தத் தொடர்மாடிக் குடியிருப்பு எமது கட்டுப்பாட்டிலேயே இருந்து வந்திருக்கின்றது. அப்பொழுது இரண்டு ஆபிரிக்கர்கள் இரண்டு அல்ஜீரியர்கள்  மற்றும் ஒரு மொரோக்கியர் என்று இந்த வீட்டின் தற்காலிக உரிமைப்பத்திரம் காலத்திற்குக்  காலம் இடம்மாறி இப்பொழுது இவர்களின் கட்டுப்பாட்டில் வந்து நிற்கின்றது.  புதிதாக இவர்கள் குடியிருக்க வந்ததால் எதிலும் நுணுக்கமான நிலாவின் மேற்பார்வையால் வீடு இரண்டு பட்டுக்கொண்டிருந்தது. வாடகை வீட்டிற்குக் குடிவந்தாலும்  தங்களது விலாசத்தை மற்றவர்களுக்குக் காட்டுவதற்காக தங்கள் சக்திக்கு மீறி வீட்டிற்குத்தேவையான பொருட்களை தேடித்தேடி வாங்கி அலங்கரித்துக்கொண்டு இருந்தார்கள். இந்த இடத்தில் சத்தியாவையும் பற்றிச்  சொல்லியாக வேண்டும். அவர் பெயருக்கேற்ப இரக்கம் நீதி என்று மிகவும் சாதுவான குணங்களை உடையவர். நிலா அதற்கு நேர் எதிர்மாறானவள். நிலா சத்தியாவை  விட முன்னதாகவே பிரான்ஸ் வந்ததும் இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். எல்லோரும் தங்களது மனைவியரைத் தாயகத்தில் தேடிப்பிடிக்க நிலாவோ அதற்கு நேர்மாறாக இருந்தாள். இதற்கு அவளது முறை மச்சானான சத்தியா அப்பொழுது தாயகத்தில் என்ஜினியராக வேலை செய்திருந்ததும் ஒரு முக்கிய காரணமாயிற்று. நல்ல வேலையில் சத்தியா இருந்தாலும் வெளிநாட்டு ஆசை அவரை ஆட்டுவித்தது. அவர்  நிலாவோடு சேர்ந்து வாழ்ந்து மூன்று பிள்ளைகளுக்குத் தந்தையானாலும் நிரந்தர வதிவிட உரிமை மட்டும் அவருக்கு எட்டியே நின்றது. ஏலவே சத்தியாவை நிலா முறைப்படி அழைப்பதற்கு சட்டத்தில் இடமிருந்தாலும் அவரை விரைவில் பார்க்கவேண்டும் என்ற உந்துதலில் குறுக்குவழியில் பிரான்சுக்கு அழைத்ததும் அவரது நிரந்தர வதிவிட உரிமை எட்ட நிற்பதற்கு முக்கிய காரணமாயிற்று.

இவர்கள் இங்கு குடிவந்து இரண்டாம் நாள் காலை வேளை ஒன்றில் சத்தியா மிஞ்சிப்போயிருந்த சோற்றை எமக்கு உணவாக தந்து கொண்டிருந்த பொழுதுதான் நிலாவுக்கும் சத்தியாவுக்குமான அந்தப் போர் முன்னெடுப்புகள் ஆரம்பமாயிற்று.

“இஞ்சை…. புறாக்களை வீட்டுக்கை அடுக்காதையுங்கோ. புறா இருக்கிறது வீட்டுக்கு கூடாது. அது தரித்திரம். என்ரை சொல்வழி கேட்டுப்பழகுங்கோ”.

“அதுகளாலை உமக்கு என்ன பிரச்சனை? ஒருபக்கத்திலை இருந்து போட்டு போகட்டுமே. இவைக்கு சாப்பாடு குடுக்கிறதாலை நாங்கள் ஒண்டும் குறைஞ்சு போறேலை. இவையள் எல்லாம் ரெண்டு பக்கத்தாலையும் செத்துப்போன எங்கடை சொந்தக்காறர் எண்டு யோசியுமென்”.

“இஞ்சை உந்த விழல் கதையள் கதைக்காதையுங்கோ. நான்தான் பல்கணியிலை புறாவின்ரை பீயள் அள்ளி கழுவிறது. உது நல்லதுக்கில்லை சொல்லி போட்டன்”.

இருவரும் முரண் பட்டுக்கதைத்தாலும் எமக்குப் பாதகமாக ஏதும் நிகழவில்லை. இதற்குப் பிள்ளைகளும் சத்தியாவின் நிலைப்பாட்டிற்கு ஆதரவாக இருந்ததும் ஒரு காரணமாக இருந்தது.

ஒருநாள் பல்கணியில் எனது சகதர்மினி குறுகுறுத்துக்கொண்டே அரக்கி அரக்கி நடைபயின்று கொண்டிருந்தாள். எனக்கு அவளது நடைமொழி புரிந்து விட்டது. இருவரும் இந்த தொடர்மாடிக்குடியிருப்புக்கு முன்னே உள்ள பூங்காவில் இரண்டு கிழமைகளுக்கு முன்பு ஒரு செக்கல் பொழுதில் முயங்கியிருந்தது நினைவுக்கு வந்தது. அவள் முட்டை போடுவதற்காக அந்தரப்பட்டு சரியான இடம் தேடி திரிந்து கொண்டிருந்தாள். நான் அவள் இருப்பதற்கு சுள்ளிகள் தேடிப்புறப்பட்டேன். நான் திரும்பியபொழுது  பல்கணி பிள்ளைகளின் சத்தத்தால் இரண்டு பட்டது. சத்தியா பிள்ளைகளை அதட்டி அடக்கினார்.

“பிள்ளையள்.. அது முட்டை போட்டு அடைகாத்து குஞ்சு பொரிக்கப் போகுது. அதை நீங்கள் சத்தம் போட்டு குழப்ப கூடாது. பேந்து அது வேறை இடத்துக்கு போயிடும்”.

இப்பொழுது சத்தியாவினதும் பிள்ளைகளதும் முக்கியமான பொழுது போக்கு எம்மைப் புதினம் பார்ப்பதே.  இப்பொழுதெல்லாம் என்னவளால் முன்புபோல இருக்கமுடியவில்லை. அவளது பொழுதுகள் அதிகம் நாங்கள் தயாரித்திருந்த கூட்டிலேயே கழிந்தது. ஒரு கருக்கல் பொழுதொன்றில் அவள் மங்கிய வெள்ளை நிறத்தில் நான்கு முட்டைகளைப் போட்டிருந்தாள். அவளிடமிருந்து குறுகுறுப்புச் சத்தம் அதிகம் கேட்டுக்கொண்டிருந்தது. சத்தியாவும் தனது பங்குக்கு அரிசியும் சோறும் போட்டுக்கொண்டிருந்தார். இதனால் பல்கணி சில நாட்களிலேயே அசிங்கமானது. கூட்டைச்சுற்றி பீ கும்பியாக வளரத்தொடங்கியது. நிலா பத்திரகாளியானாள். பிள்ளைகள் தகப்பன் பக்கம் நின்றதால் அவளால் அதிகம் தாக்குப்பிடிக்க முடியவில்லை. நாட்கள் செல்லச்செல்ல என்னவளின் உடல்சூட்டால் முட்டைகளில் மாற்றங்கள் படிப்படியாக வரத்தொடங்கின. சிலநாட்கள் கழிந்ததும் அதிகாலைப் பொழுதொன்றில் குஞ்சுகளின் கிலுமுலு சத்தத்துடன் அந்தநாள் விடிந்தது. பிள்ளைகள் மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதந்தனர். அவர்களை அவைகளுக்கு கிட்ட செல்வதற்கு சத்தியா அனுமதிக்கவில்லை. குஞ்சுகள் மஞ்சள் நிறத்தில் கண்கள் திறக்காதும் சிறகுகள் முளைக்காதும் கிடந்தன.

நவீனம் வந்த கதை :

மூன்று மாதங்களைக் கடந்த நிலையில் நாங்கள் இருந்த கட்டிடத்திற்கும் சத்தியா குடும்பத்தாருக்கும் புனருத்தாரணம் என்ற பெயரில் வினையொன்று மையங்கொண்டது. குளிர் காலங்களில் ஏற்படுகின்ற மின்சாரகட்டணத்தை குறைக்கவும் குளிர் பல்கணிக்கு ஊடாக வீடுகளில் நுழைவதால் வீடுகளின் உட்பகுதியை சூடாக்குவதற்கு ஏற்படுகின்ற செலவுகளைக் குறைக்கவும் பல்கணியை மூடி இரட்டைக்கண்ணாடிகள் கொண்ட ஜன்னல்கள் பொருத்துவதற்கும் வெளிக்கட்டிடத்தில் குளிரைத் தாங்கும் விதத்தில் நுரைப்பஞ்சுகளை வைத்து கட்டிடத்திற்கு வெண்சீமெந்தினால் பூசி அதன்மேல்  வண்ணம் பூசுவதற்கும் கட்டிட நிர்வாகம் முடிவெடுத்தது. அதன்படி எல்லோருக்கும் சுற்று நிருபம் அனுப்பபட்டது.  அதேவேளையில் வீட்டிற்குளே இன்னுமொரு வினை பிரஜாவுரிமை என்ற பெயரில் நிலாவிடம் வந்து சேர்ந்தது.  நிலாவிற்கான பிரஜாவுரிமை விண்ணப்பம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சு கடிதம் அனுப்பி இருந்தது. கடிதத்தைப் பார்த்தும் நிலா பத்திரகாளியானாள். பல்கணியில் வைத்து சத்தியா எங்களை ஆதரித்ததினாலேயே  தனது விண்ணப்பம் பிற்போடப்பட்டது என்பது அவள் தரப்பு வாதம் என்பதுடன் நில்லாது, ‘இந்த ராசியில்லாத வீட்டில் இருக்க முடியாது. கஸ்ரத்துடன் கஸ்ரமாக வேறு இடத்தில் வீடு வாங்குவோம்’ என்று சத்தியாவிற்கு உருவேற்றினாள்.

புனருத்தாரண வேலைகளுக்கு நாள் குறித்து தளபாடங்களும் ஆளணிகளும் வந்து இறங்கத்தொடங்கின. பணியாளர்கள் கட்டிடத்தைச்சுற்றி இரும்பினாலான சாரங்கள் கட்டினார்கள். அவர்கள் முதலில் கட்டிடத்தின் வெளிச்சுவரில் இருந்த ஊத்தைகளை காற்றுடன் கூடிய தண்ணீரால் கழுவினார்கள். தண்ணீர் அடித்த வேகத்தில் தண்ணீருடன் ஊத்தைகள் எல்லாம் வழிந்தோடிக் கட்டிடம் புதுப்பொலிவாக இருந்தது. பின்னர் வெளிச்சுவரில் நுரைப்பஞ்சை வைத்துக் ஒட்டிக் கொண்டு வந்தார்கள். நாங்களும் கட்டிடத்தில் ஒவ்வொரு இடமாக ஒதுங்கிக் கொண்டோம். குஞ்சுகளும் ஓரளவு வளர்ந்து சிறகுகள் முளைத்து விட்டன. அவைகள் மரகதப்பச்சை நிறத்திலும் சாம்பல் நிறத்திலும் வெள்ளை நிறத்திலும் என்று பலவர்ணங்களுடன் இருந்தன. நுரைப்பஞ்சு வைத்தகையுடன் அதன்மேல் வேகமாக வெண் சீமெந்தினால் பூசத்தொடங்கினார்கள். இதற்கிடையில் ஜன்னல்களுக்கு அளவு எடுப்பதற்காக இருவர் வந்து கட்டிடத்தைப் பிரட்டிப் போட்டார்கள். நாட்கள் செல்லச்செல்ல எங்களுக்கான இடம் குறுக்கிக்கொண்டே வந்தது.

வெண் சீமெந்தினால் பூசப்பட்ட வெளிச்சுவர் வெள்ளையும் பச்சையும் கலந்த வர்ணத்தின் ஊடாக வெண்பச்சை நிறமாக மாறத்தொடங்கியது. எங்கள் இருப்புக்கு சாவுமணியடித்த அந்த நாளும் வந்து சேர்ந்தது. பார ஊர்திகளில் இரட்டைக்கண்ணாடிகள் பொருத்திய ஜன்னல்கள் வந்து இறங்கத்தொடங்கின. ரவர்களின் நடுவே இருந்த பைன் மரங்கள் வேருடன் புடுங்கப்பட்டு அந்த இடத்தில் புதியபாணியில் அமைக்கப்பட்ட மின்சாரக்கம்பங்கள் முளைத்தன. சிறுவர் பூங்கா இடிக்கப்பட்டு அவற்றை சமத்தளமாக்கிக் கற்கள் பதிக்கப்பட்டன. இடைக்கிடை புற்தரைகழும் பதிக்கப்பட்டன. அந்த இடமே பழையவைகளைத் துலைத்து நவீனத்திற்கு மாறத்தொடங்கியது. ஜன்னல்களும் கட்டிடத்தின்  வெளிச்சுவரில் மேலிருந்து கீழாக அலங்கரித்துக்கொண்டு வரத்தொடங்கின. எமது பல்கணிக்கு ஜன்னல்கள் வந்த பொழுது நாங்கள் ஒவ்வொரு திசையில் எமது இலக்கற்ற பயணத்தை ஆரம்பித்தோம்.

அகதியான கதை :

ஒவ்வொருநாளும் நிலா கொடுத்த மூளைச்சலவை சத்தியாவையும் ஆட்டப்பார்த்தது. அவளின் வாதமானது, புறாக்கள் இருந்த வீட்டில் தாங்கள் குடிவந்ததினால்தான் இவ்வளவு தொல்லைகளும் சகுனப்பிழைகளும் வந்தன என்றும் இந்த வீடே இராசியில்லாத வீடு என்பதாக அமைந்தது. நிலாவின் சொல் தட்டியறியாத சத்தியா இறுதியில் நிலாவின் சொல்லுக்கு பணிய வேண்டியிருந்தது. அவர்கள் கையிருப்பில் இருந்த தொகையுடன் வங்கியில் வீட்டுக்கடன் எடுத்து பாரிஸ் பட்டணத்தில் இருந்து 143 கிலோ மீற்றர் தொலைவில் அமைந்திருந்த ஒர்லியன் (Orléan)  நகரில், 120 சதுர மீற்றர் பரப்பளவில் பரந்த வளவுடனும் 5 அறைகளுடனும் கூடிய தனி வீட்டிற்கு(Villa) குடி வந்து மாதங்கள் ஐந்தைத் தொலைத்து இருந்தனர்.

இந்த ஒர்லியன் நகரின் வரலாற்றை கொஞ்சம் திருப்பிப் பார்த்தோமானால் ஏறத்தாழ எமது சோகக்கதைகளை ஒத்ததாகவே இருக்கும். போரும் அதன் விளைச்சலும் இந்த நகரத்தை விட்டு வைக்கவில்லை. இந்த நகரில் புதிய கட்டிடங்களை காண்பது அரிது. 20கள் அல்லது 30 களின் கட்டிடக்கலையையே இங்கு காண முடியும். இரண்டாவது உலகப்போரில் இந்த நகரம் பலமுறை தாக்கப்பட்டது. பல கட்டிடங்களும் மக்களும் வகைதொகையின்றி ஜெர்மன் நாஸிகளால் வேட்டையாடப்பட்டதாக ஒரு கதையுண்டு. அத்துடன் வன்னிப்பெருநிலம் எப்படி சரத்  பொன்சேகாவின் தலைமையிலான படையணிகளால் மீட்கப்பட்டதோ அவ்வாறே இந்த ஒர்லியன் நகரை நாஸிகளின் பிடியில் இருந்து மீட்டெடுத்த பெருமை ஜெனரல் பத்தோன்(général Patton) தலைமையிலான படையணியையே சார்ந்ததாக வரலாற்றுக்குறிப்பேடுகள் சொல்கின்றன.

சத்தியா நிலா பிள்ளைகளுக்குப் புதிய இடம்,மனிதர்கள் என்று அவர்கள் அந்த நகரத்துடன் ஒட்டுவதற்கு சிரமப்பட்டுக்கொண்டிருந்தனர். பிள்ளைகளுக்கு ஓரளவு நண்பர்கள் சேரத்தொடங்கினார்கள். ஒர்லியன் நகர் கிராமத்து பாணியில் அமைந்து இரவு எட்டு மணியுடன் அடங்கியதுடன் அல்லாது அதிக அமைதியை கொடுத்தது சத்தியாவிற்கு அதிக மகிழ்ச்சியைக் கொடுக்கவில்லை.

ஒருநாள் அதிகாலைப்பொழுதொன்றில் வீட்டின் முன்பக்கத்தில் நின்றிருந்த பூக்கண்டுகளுக்குத் தண்ணீர் விடுவதற்கு வெளியே வந்த நிலாவின் வாய் தன்னையறியாது,

“இஞ்சரப்பா ……………… இங்கை ஒருக்கால் வாங்கோப்பா ” என்று ஆச்சரியத்தில் சத்தியாவை அழைத்தது. என்னவோ ஏதோவென்று வாயிலுக்கு ஓடிவந்த சத்தியாவின் கண்கள் வெளியே பிதுங்கின. அங்கே வீட்டு கேற்ரடியில் மரகதப்பச்சை நிறத்தில் இருந்த நான், எனது தலையை ஒருபக்கத்தில் சாய்த்தவாறே குறுகுறுத்துக்கொண்டேயிருந்தேன்.

கோமகன்-பிரான்ஸ் 

கோமகன்

(Visited 142 times, 1 visits today)