அரங்காற்றுகையில் இளஞர்களது வகிபாகம்-கட்டுரை-தியாகராஜா சிறிரஞ்சனி

இளைஞர்கள் என்போர் பதினைந்து வயது தொடக்கம் இருபத்தைந்து வயதிற்குட்பட்டோரென ஐக்கிய நாடுகள் சபை வரையறை செய்துள்ளது. ஒரு நாட்டின் வளர்ச்சிக்கும், அந் நாட்டின்  எழுச்சிக்கும் வித்திடக்கூடியவர்கள். புதிய சிந்தனைகளைப் பிறப்பிக்க வல்லவர்கள். மேம்பட்ட திறன்கள், புதுமைகளை உள்வாங்கும் தன்மை, அயராத முயற்சி, நவீன உத்திகளை கையாளுதல், ஒருங்கிணைவு, மாற்றத்திற்காக வித்திடுதல், துணிந்து செயலாற்றும் தன்மை, வீரியம், துடிப்பு போன்ற அத்தனை வளங்களும் அமையப்பெற்ற பிரிவினர் இளைஞர்களே. ஒரு நாட்டினுடைய எழுச்சியும் வீழ்ச்சியும் இவர்களிலேதான் தங்கியுள்ளது. இதனாலேதான் இன்றைய இளைஞர்கள் நாளைய தலைவர்கள் என்று அறிஞர்கள் குறிப்பிட்டிருக்கின்றனர். இற்றைக்கு நூறு ஆண்டுகளுக்கு முன்னர் இளைஞர்கள்தான் நாட்டின் எதிர்காலம் அவர்கள் கைகளிலேதான் நாட்டின் செழிப்பே அமைந்துள்ளது என இளைஞர்கள் சக்தியை விவேகானந்தர் உலகிற்கு உணர்த்திச் சென்றுள்ளார்.

அறிவு, ஆற்றல், அனுபவம், துணிவு போன்றவற்றின் அடிப்படையில் வளர்ந்துவரும் நாடுகளில் மட்டுமல்லாது அமெரிக்கா போன்ற வளர்ச்சியடைந்த நாடுகளிலும் கூட இளைஞர்களது செயற்பாடுகள் மிகுந்த முக்கியத்துவம் பெறுவதால் இவர்களே இன்றைய உலகின் மாற்று சக்திகளாகவும் கருதப்படுகின்றனர். ஆயினும் அண்மைக்காலங்களில் இளைஞர்களது செயற்பாடுகளும், நடத்தைக் கோலங்களும் அதி தீவிரமாக மாற்றமடைந்து செல்வதை எம்மால் அவதானிக்கக் கூடியதாய் உள்ளது. இவர்களுடைய மனங்கள் வன்மமடைந்த செயற்பாடுகளில் ஈடுபடுவனவாய் மாற்றமடைந்து செல்கின்றது. தீய வழிகளிலும், சமூக விழுமியங்களுக்கப்பாற்பட்ட செயற்பாடுகளிலும் செயலாற்றி சமூகச் சமநிலையைக் குழப்பும் வண்ணம் தொழிற்படுகின்றனர். என்கின்ற குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகுபவர்களாகவும் காணப்படுகின்றனர்.

இன்றைய இளைஞர்களின் வாழ்வியல் வட்டமானது நவநாகரிகம் என்ற போர்வையினால் போர்க்கப்பட்டிருப்பதை எம்மால் அவதானிக்க முடிகின்றது. இளைஞர்கள் மது போதைக்கு அடிமையாகுதல், பாலியல் வன்புணர்வுகளில் ஈடுபடுதல் இலத்திரனியல் ஊடகங்களில் நாட்டம் செலுத்துதல், அவற்றைத் தீய வழிகளில் பயன்படுத்துதல், பெரியவர்களைக் கனம் பண்ணாது செயற்படுதல் போன்றவற்றின் காரணமாக நாட்டினையும், பிரதேசங்களை அபிவிருத்திப் பாதையில் இட்டுச் செல்வதையும் விடுத்து மாறாக தங்களுடைய சிற்றின்பங்களைப் பெறவும், அனுபவிக்கவும் தெழிற்படுகின்றனர்.

இவ்வாறான சில இளைஞர்களுடைய செயற்பாடுகள் தங்கள் வாழ்வியலையும், வாழ்க்கைக் கோலத்தையும் சீரழிப்பது மட்டுமன்றி அவர்களைச் சுற்றியிருப்பவர்களையும், சமூகத்தையும் தாக்க வல்லனவாய் மாறிக்கொண்டிருக்கின்றன. எங்கு பார்க்கிலும் சிறு பிள்ளைகள் மீதினில் பாலியல் வன்புணர்வுகளை நிகழ்த்துபவர்களாக காணப்படுகின்றனர், குடிபோதையில் வாகனங்களைச் செலுத்தி வீதி ஒழுங்குகளைச் சீர்குலைப்பதோடு உயிரிழப்புகளுக்கும் காரணமாக அமைகின்றனர். தொழிநுட்ப சாதனங்களுடன் பின்னிப்பிணைந்து நவநாகரிகம் என்ற போர்வையில் தமது எதிர்காலத்தையும், இயற்கையையும் சீரழிக்கும் விடயங்களில் ஈடுபடுகின்றனர். போதைப்பொருட்கள் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுப்பொருள் அல்ல அதை அருந்துவதால் இளைஞர்களுக்கும் அவர்கள் வாழும் சமுதாயத்திற்கும், நாட்டிற்கும் ஏற்படுகின்ற தீங்குகள் எண்ணிலடங்காதவை ஆயினும் அவற்றை நாளாந்த உணவுபோல அருந்துகின்றனர். சமூக வலைத்தளங்களில் சமூக விழுமியத்தைப் பேணவேண்டியதை விடுத்து வீண் வேடிக்கையிலும், விபரீதங்களிலுமே ஈடுபடுகின்றனர். இவற்றினூடாக ஆபாசங்களைத் தங்கள் மனங்களில் படியவிட்டு வன்மமடையச் செய்கின்றனர்.

இளைஞர்களது இத்தகைய போக்குகள் அண்மைக்காலங்களில் ஏற்பட்டவையே குறிப்பிட்ட காலங்களின் முன்னர் வாழ்ந்த இளைஞர்கள் தேசமெங்கிலும் ஆளுமையும், ஆக்கபூர்வங்களும் மிக்கவர்களாக காணப்பட்டிருக்கின்றனர். ஆனால் இன்றைய சூழலில் இவ்வாறான தன்மைகளில் ஒருசிலரையே எம்மால் அடையாளப்படுத்த முடிகின்றது. குறிப்பிட்ட கால எல்லைக்கு முன்னர் வாழ்ந்த இளைஞர்ளே இன்று எமது தாய்,தந்தை சித்தி,சித்தப்பா பெரியம்மா,பெரியப்பா அத்தை,மாமா எனக்காணப்படுகின்றனர். இவர்களுடைய அனுபவங்களையும், வாழ்க்கைக் கூறுகளையும் கேட்கின்ற பொழுதினில் நாம் வியப்படைகின்றோம்.

அவர்கள் கல்வி கற்பதில் மிகுந்த ஆர்வம் மிக்கவர்களாகவும், திறமைகளை அதிகம் வெளிக்காட்டி சாதனை புரிபவர்களாகவும் காணப்பட்டிருக்கின்றனர். சிறு தவறுகளைப் புரிவதில் கூட மிகுந்த அச்ச உணர்வு கொண்டவர்களாகவும், தாய்,தந்தை,குரு போன்றோருக்கு கட்டுப்பட்டவர்களாகவும், கீழ்படிவு நிறைந்தோராகவும், பெரியோர்களுக்கு எழுந்து நின்று மரியாதை செலுத்துபவர்களாகவும், விளையாட்டுக்களில் ஆர்வம் மிக்கவர்களாகவும் காணப்பட்டிருக்கின்றனர். இதனால் கிராமங்கள் தோறும், நகரங்கள் தோறும், எந்தவொரு தவறுகளும் இழைக்கப்படவில்லை. அனைவரும் மகிழ்ச்சிகரமான வாழ்வினை வாழ்ந்ததோடு, குற்றங்கள் பதிவிடலானது மிகவும் அரிய நிலையிலேதான் காணப்பட்டிருக்கின்றது.

மனித வாழ்க்கைக் கோலங்கள் சந்ததி சந்ததமியாக ஊடுகடத்தப்படுபவை என்று நாம் அறிகின்றோம். அவ்வாறாகில் இளைஞர்கள் மத்தியில் இவ்வாறான செயற்பாடுகள் எதனால்? எவ்வாறு? ஏன்? தோன்றியிருக்கின்றது அவர்களுடைய வாழ்;க்கைப் பாதையிலே சமூகத்திற்கு வேண்டாத பண்பாடுகள் தோன்ற காரணங்கள் யாவை என்பதனை அறிய நாம் முயல வேண்டியிருக்கின்றது.

எமது நாட்டிலே அடுத்தடுத்து நிகழ்ந்த இயற்கை அனர்த்தங்களும், யுத்தங்களும் ஒரு வகையில் காரணமாக இருக்கின்றன. இவற்றினால் நேர்ந்த இழப்புக்களினாலும், திட்டமிடப்பட்ட சில அரசவியல் செயற்பாடுகளினாலும் மனங்கள் வன்மமடைந்து கொலை, துன்பம், சமூக ஒற்றுமை கலாசாரம், பண்பாடு போன்ற அடிப்படை அலகுகளில் வெறுப்பும, விரக்தியும் ஏற்பட காரணமாயிருந்திருக்கின்றன. அடுத்து உலக மயமாக்கலின் அதிதீவிர முன்னேற்றமானது அதிகம் ஈர்த்த வயது பிரிவினராக காணப்படுவோர் இளைஞர்களே. இவற்றின் விளைவால் ஏற்பட்ட இயந்திரமான வாழ்வை பிரித்தணுக முடியாது அவற்றினால் இளைஞர்கள் ஆட்கொள்ளப்பட்டு இருக்கின்றனர். நவநாகரீகத்தின் தோற்றத்தால் விளைந்த அதிதீவிர சமூக மாற்றம், சினிமா, தொலைக்காட்சி போன்றவற்றின் வளர்ச்சி ஆகிய விடயங்களினால் சமூகத்திடம்காணப்பட்ட கலை, கலாச்சார முன்னெடுப்புக்கள் பின்தங்கிச் சென்றிருக்கின்றது. சில சந்தர்ப்பங்களில் அவை இல்லாதும் போயிருக்கின்றன. இந்த ரீதியில் கலைகள் மீதான நாட்டம் குறைவடைந்து கலை முன்னெடுப்புக்கள் கைவிடப்பட்டதன் விளைவாகக்கூட இவர்களிடத்தில் இவ்வாறான போக்குகள் தோன்றியிருக்க கூடும்.

மேற்கண்டவாறான செயற்பாடுகளினால் இளைஞர்கள் தனியன்களாக்கப்பட்டு, தங்களது மகிழ்ச்சிகளை மாத்திரம் குறிக்கோளாகக் கொண்டு செயற்படுபவர்களாக உருவாகின்றனர். இந் நிலைகளை மாற்றி இவர்களை சமூகம், மக்கள், நாடு ஆகியவற்றின் மீது அக்கறையுடனும் ஈடுபாட்டுடனும் செயற்படவைத்தால் சமூகச் சீர்கேடுகள் குறைந்து வளர்ச்சிக்கான நேர்மறையான சூழல் உருவாகும். ஆகவே இளைஞர்கள் தங்களது தனித்திறன்களை தயக்கமின்றி வெளிப்படுத்தி வளர்ச்சிக்கான சூழலை உருவாக்கிடவும். அதனைத் தொடர்ந்து ஆக்கபூர்வமான வழிகளில் பாதுகாத்திடவும். வல்ல திறமை கொண்ட ஊடகமான கலைகளிலே இளைஞர்களை ஈடுபடுத்தி அவர்களை ஆக்கபூர்வம் நிறைந்தோராக மாற்றிட நாம் முயலலாம்.

கலைகள் மனித மனதிற்கு களிப்பூட்டுவன. மனதினை ஒருங்கணைக்க வல்லன. கேட்கும்தோறும் பார்க்கும்தோறும் பரவசமூட்டி படைப்போனையும் ரசிப்போனையும் திருப்பியுறச் செய்ய வல்லன. மனித ஆளுமையை சமநிலைப்படுத்தி சமூகம் விரும்பும் ஆரோக்கியமான மனிதர்களைப் படைக்க வல்லன. உலகின் உன்னத நாகரீக வளர்ச்சியில் கிரேக்க நாகரீகத்திலே தோன்னிய பிளேட்டோ, அரிஸ்ரோட்டில், சோக்கிரட்டீஸ் போன்றோர் கலைகளினூடாக ஒவ்வொரு மனிதர்களையும் ஆளுமையுடையவர்களாக கட்டமைக்க முடியும் என குறிப்பிட்டிருக்கின்றனர்.

இருபது வயதுவரை ஒருவனுக்கு கலை, இலக்கியம் என்பனவற்றின் ஊடாக விழுமியங்களை போதிக்கமுடியும் என பிளேட்டோ குறிப்பிட்டிருக்கின்றார்.

இளைஞர்கள் நல்லவற்றை அறிந்து கொளவதற்கு கலைகளை விசேடமாக குமரப்பருவத்திலே வளங்க வேண்டுமென முறுகிய உணர்வபற்றிப் பேசும் கோட்பாளாரான ரூசோ குறிப்பிடுகின்றார்.

இளைஞர்களுக்கான கல்வியை ஒரு கலையாக நோக்கி பிள்ளைகள் படும் இன்னல்களில் இருந்து அவர்களை விடுவித்து நடனம், பாடல், நாடகம், சித்திரம் போன்ற கலைகளுக்கூடாக மகிழ்ச்சிகரமான வாழ்வை வளங்கமுடியுமென “சான்றினகேதன்” எனும் நிறுவனத்தை உருவாக்கி காட்டி அறிவியலானரான ரவீந்திரநாத்தாகூர் நிருபித்திருக்கின்றார்.

ஆகவே மனிதத் திறன்களின் வெளிப்பாடுகளாகக் காணப்படுகின்ற இக்கலைகள் பன்முகப்பட்டுக் காணப்படுகின்றன. இசை, நடனம், நாடகம், ஓவியம், சிற்பம், மட்பாண்டம், நெசவு போன்றன கலைகளாகக் காணப்படுகின்ற போதிலும் நாம் நாடகம் என்கின்ற ஆற்றுகைக் கலையில் இளைஞர்களின் ஈடுபாடு பற்றியே இங்கு ஆராய முயல்கின்றோம்.

ஒரு காலகட்டத்தில் சமூகங்கள் தோறும் தத்தமது கோயில் திருவிழாக்கள், சனசமூகநிலைய விழாக்கள், விளையாட்டுப்போட்டிகள், தைப்பொங்கல், சிவராத்திரி, நவராத்திரி காலங்கள் மற்றும் கல்யாண வீடுகள், பூப்புனிதநீராட்டு வீடுகள் போன்ற நிகழ்வுகளிலே ஊர்நாடக முன்னெடுப்புக்கள் முன்னெடுக்கப்பட்டு வந்தன. இங்கே இளைஞர்கள், சிறுவர்கள், வயோதிபர் அனைவரும் அச்சம், கூச்சமின்றி தங்களது திறமைகளை வெளிக்காட்டி மகிழ்ச்சிகரமான வாழ்வைக் கட்டியெழுப்பினார்கள்.

அந்தவகையிலே தமிழர் பாரம்பரிய நாடகமான கூத்தரங்கானது சமூக இணைவு, ஒற்றுமை சார்ந்த பொழுதுபோக்கு, தலைமைத்துவம், ஆளுமைவிருத்தி போன்றவற்றை ஏற்படுத்தவல்லது. ஆடல், பாடல், உரையாடல் போன்ற கலைகளின் வெளிப்பாடாக இவ் அரங்கிலே இளைஞர்கள் ஈடுபடுகின்ற போது அவர்களது பொழுதுபோக்குகள் பயனள்ளதாக அமைவதோடு ஆற்றல் விருத்தியும் அமையப்பெறும். கூத்து பழகுகின்ற சூழலானது சுற்றிலும் சமூகத்தவர் குழுமியிருக்கும் வண்ணம் அமைந்திருக்கும் ஆகவே இங்கு சமூகத்தவர்களிடையே ஏற்படும் பிணக்குகள், பகை, மனக்கவப்புகள் நீங்கி ஒற்றுமையாகக் கலந்துபேசி மனநிம்மதியடையக்கூடிய நிலைகள் தோன்றும். இவ்வரங்கிலே இளைஞர்கள் பங்குகொள்வதனால் அவர்களுடைய புத்தாக்க சிந்தனைகள் வளர்ச்சியடைவதோடு படைப்பாக்கத் திறன்களும் விருத்தியடைவதற்கான வாய்ப்புக்கள் காணப்படுகின்றன.

சுவைபட வருவனவெல்லாவற்றையும் ஓரிடத்தில் தொகுத்துக் கூறுகின்ற நாடகக் கலையிலே இளைஞர்கள் ஈடுபடுவதனாலும் பல்வேறு கட்டுமானங்களை இவர்களிடத்தில் ஈடுபடுத்தமுடியும். தொழிநுட்ப யுகத்திற்குள் இயந்திர மயமாகிப்போயுள்ள மனித இனத்தை மீட்டெடுக்கும் வல்லமை மிக்க இக்கலை இளைஞர்களையும் அவ்வழி மீட்டெடுக்கும் என்பதில் ஐயமில்லை. இக்கலை சமூக ஒருங்கிணைப்பு, ஒற்றுமை என்பவற்றை ஈடுபடுத்தவல்லது. தனியாள் விருத்தியையும், தனியாள் ஆளுமைகளையும் கட்மைக்க வல்லதாக காணப்படுகிறது. மனித சமூகத்தின் பிரச்சினைகளைப் பேசுகின்ற கலையாகையால் இக்கலையினுள் இயங்குகின்ற இளைஞர்களையும் சமூக அக்கறையுடையவர்களாகவே வழிப்படுத்தும். மனித விழுமியங்களை மக்கள் மத்தியில் கொண்டு சேர்ப்பதைக் கொண்டதனாலும், சமூகத்தை நல்வழிப்படுத்துகின்ற ஊடகமாக தொழிற்படுவதனாலும் இக்கலையில் ஈடுபடுவோரும் இப்பண்புகளில் சிறந்து விளங்கக் கூடியவர்களாக காணப்படுவர்.

கணப்பொழுதினுள் கோபம், பயம், அழுகை, இரக்கம், சிரிப்பு, அருவருப்பு எனப் பல்வேறான உணர்வுகளை வெளிப்படுத்தக் கூடிய கலையாக நாடகக்கலை திகழ்வதால் எமது இளைஞர்களின் உள்ளங்களை பதப்படுத்தி அவர்களை வெளிப்படையான மனம் உடையவர்களாக உருவாக்கும் வல்லமை கொண்ட கலையாக இக்கலை காணப்படுகிறது. பல்வேறு கலைகளையும் ஒன்றினைத்து முன்னெடுக்கப்படுகின்ற கூட்டுக்கலை வடிவமே நாடகம், நடிப்பு, தயாரிப்பு, நெறியாள்கை, காட்சி விதானிப்பு, ஒப்பனை, வேடை உடையமைப்பு, மேடை முகாமைத்துவம், ஒளியமைப்பு, இசையமைப்பு, நடன அமைப்பு என பல்வேறுபட்ட கலைச் செயற்பாடுகளும் இங்கு இடம் பெறும் இவ்வாறான செயற்பாடுகளுள் இளைஞர்கள் ஈடுபடுகின்ற போது வெவ்வேறு திறமை கொண்டவர்களாக உருவாக்கப்படுவதோடு, ஒருங்கிணைப்பு, முகாமைத்தும், படைப்பாற்றல் போன்ற ஆளுமைப்பண்பு கொண்டவர்களாக உருவாக்கப்படுவர். நாடக பயிற்சி பட்டறைகளில் ஈடுபடுவதனால் உடல், உள விருத்திகள் ஏற்படுவதோடு உடலுக்கும் மனதுக்குமான புத்துணர்ச்சிகளையும் பெற்றுக்கொள்வர். இதன் மூலம் புதிய சிந்தனை போக்குடையவர்களாக இவர்கள் செயற்படவும் வாய்ப்புக்கள் தோன்றுகின்றன.

ஆகவே சமூக ஒருங்கிணைவு, ஒற்றுமை, தனியாள் விருத்தி, தலமைத்துவம், ஆளுமை, பிணக்குகள் தீர்க்கும் வல்லமை, பிரச்சினைகளையும் சவால்களையும் எதிர்கொள்ளும் மனவாற்றல், நல்லொழுக்கம், முகாமைத்துவம் போன்ற பண்புகளும் இரசனை விருத்தி, மனப்பாங்கு விருத்தி, ஆக்கபூர்வமான சிந்தனை விருத்தி, ஆக்கச் செயற்பாட்டு விருத்தி போன்ற வருத்திகளும் காணப்படுகின்ற நாடக கலையிலே இளைஞர்கள் ஈடுபடுகின்ற போது அல்லது ஈடுபடுத்தப்படுகின்ற போது அவர்கள் சிறந்த ஆளுமைப் பண்பும் ஆக்கபூர்வமும் நிறைந்தவர்களாக திகழ்வர் என்பதில் ஐயமில்லை.

சிறிரஞ்சனி

தியாகராஜா சிறிரஞ்சனி – கிழக்கிலங்கைப் பல்கலைக்கழகம்

இலங்கை

(Visited 106 times, 1 visits today)