உங்களுடன் நாங்கள்-ஆசிரியர் குறிப்பு

“புதிய இதழ்கள் புதிய படைப்பாளிகளை அறிமுகப்படுத்துகிறதா? புதிய சாளரங்களின் ஊடாக வித்தியாசமான இலக்கிய தரிசனங்களை வழங்குகிறதா? படைப்பாளிகள் தெரிவில் சமவிகித்தில் களங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறதா? போன்ற கேள்விகள் எல்லாம் இங்கு தொக்கி நிற்கின்றன.”

கவிஞர் கருணாகரன் 10 ஆடி 216

மேற்சொல்லிய நிலைத்தகவல் நடு வெளியான பொழுது கருணாகரனால் பொதுவெளியில் முன்வைக்கப்பட்டதாகும். அன்றில் இன்றுவரை 31 இதழ்களையும் 06 சிறப்பிதழ்களையும், ‘கதைப்போம்’ மூலம் 03 இலக்கிய செயற்பாடுகளையும், ‘கொரோனா காலத்து இலக்கிய பதிவுகள்’ மூலம் குறுகிய காலப்பகுதியில் தொடர்ச்சியாக 31 காணொளிப் பதிவுகளையும், பல ஓவியர்களையும், பல அறிமுக எழுத்தாளர்களையும், அறிமுக கவிஞர்களையும், நடுவின் மூலம் பொதுவெளிக்கு வெளிச்சம் போட்டிருக்கின்றோம். ஈழத்து எழுத்துக்களுக்கு புலம்பெயர்ந்த நாட்டில் தொடர்ச்சியாக இயங்குநிலையில் இருக்கும் இணைய சிற்றிதழ்களில் நடுவும் ஒன்று. விளையாட்டாக ஆரம்பித்த இந்த இணைய சிற்றிதழ் இன்று வாசகர் மனதில் நீங்காத இடம்பெற்றிருப்பதற்கு முக்கிய காரணம் நடுவின் எழுத்துப் பங்காளிகழும் அதனை வாசிக்கின்ற தேர்ந்த வாசகர்களும் தான். அவர்களுக்கு எமது நன்றிகள்.

ஒரு சிற்றிதழானது தனியே எழுதுபவர்களுக்கு வெளிச்சம் போட்டுக்காட்டுவதுடன் நின்றுவிடுவதில்லை. அது தன்னைச் சுற்றியிருக்கின்ற சமூகம் மீது எவ்வாறான பார்வையை அதன் செயலில் காட்டுகின்றதோ அப்பொழுதுதான் அது தான் கொண்ட இலக்கில் வெற்றியடைந்து முழுமையாகின்றது. அந்த வகையில் நாங்கள் வரும் ஆவணி மாதமளவில் இரண்டு எதிர்காலத் திட்டங்கள் தொடர்பான அறிவித்தலை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என எண்ணுகின்றோம். நடு தொடர்பான ஆக்கபூர்வமான ஆலோசனைகளையும் கருத்துகளையும் நாங்கள் என்றுமே வரவேற்கின்றோம். நன்றி.

நடு குழுமம்

நடு லோகோ

 

(Visited 99 times, 1 visits today)
 

One thought on “உங்களுடன் நாங்கள்-ஆசிரியர் குறிப்பு”

Comments are closed.