நேர்காணல்-ஓவியர் ஆசை இராசையா -இராதேயன்- ஆசை இராசையா நினைவுக்குறிப்பு

“தனித்துவமான படைப்பாற்றலே கலைஞனை அடையாளப்படுத்தும்”- ஆசை இராசையா

ஆசை ராசய்யா
ஓவியம் : பிருந்தாஜினி பிரபாகரன்

ஒரு நாட்டின் மிகப் பெரும் விலைமதிப்பற்ற ஆக்க இலக்கியப் படைப்பாளகளையும் அவர்தம் வியத்தகு படைப்புகளையும் பற்றி அந்த நாட்டின் தேசிய சமூகப் பொறுப்புணர்வுள்ள மக்கள் இயல்பாகவே தேடி அறிந்துகொண்டிருக்க வேண்டிய சூழலில் நம் நாட்டு மக்களிடையான நம்மவரின் ஆளுமை- ஆற்றல் திறன்கள் குறித்து சரியான பிரக்ஞை இல்லையென்ற நிலையே தொடர்கிறது. இது குறித்து தங்களின் எண்ணம் எவ்வாறாக உள்ளது? அதற்கான காரணிகள் எவை?

முக்கியமாக தமிழ் மக்களுடைய வாழ்க்கை முறையும் அவர்தம் சுயநலச் சிந்தனைப் போக்கும் கருத்திற் கொள்ளப்பட வேண்டியவை. வாழ்க்கையை அனுபவிக்க முடியாதபடி, அவர்களுடைய சந்ததிக்குச் சொத்துச் சேர்க்கும் முயற்சியிலேயே அவர்களுடைய காலம் முடிவடைந்துவிடுகிறது. பிள்ளைகள் தமது சொந்தக்காலில் நிற்கக்கூடிய பலத்தை – கல்வி அறிவை ஊட்டுவதே தமது தலையாய கடமையாகக் கொள்ளவேண்டியதே பெற்றோரின் கடமையாகிறது. சுயமாகச் சிந்தித்துச் சரியான முடிவை எடுக்கக்கூடிய வகையில் அவர்களுடைய பகுத்தறிவு ஆற்றல் விருத்தி செய்யப்படவேண்டியதே யதார்த்தம், நாம் வெறுமனே பொருளைத் தேடுவதும் சாப்பிடுவதுமே வாழ்க்கை என்ற முறைமை தகர்த்தெறியப்பட வேண்டியது. ஆடுமாடுகளும் பிறவிலங்குகளும் இதைத் தான் செய்கின்றன.

மனிதன் ஆறிறிவு படைத்தவன் என்று சொல்லிக் கொள்கின்றோம். பிறந்தால் நாம் வாழ்ந்த தடம் பதியப்படவேண்டியது முக்கியம். இறந்த பின்னும் நாம் நல்ல விதமாகக் பேசப்பட வேண்டும். இதைத்தான் ‘மரணமில்லாப் பெருவாழ்வு’ என்று சொல்லலாம். பெரும் மகான்கள் எல்லாம் இன்றும் பேசப்படுகின்றார்கள் என்றால் அவர்கள் தம் வாழ்க்கையை வகுத்துக்கொண்ட முறையே காரணமாகிறது. தாமும் தம் மக்களும் சொத்து சுகத்தோடு ஆனந்தமாக வாழ்ந்தால் போதும் என்ற மனப்பான்மையில் தர்ம சிந்தனையற்றவர்களாக வாழ்பவர்களிடம் கலையைப் பற்றிய பிரக்ஞை இல்லையே என்ற ஆதங்கப்படுவதில் அர்த்தமில்லை.

வாழ்க்கையை எப்படி அனுபவித்து வாழ்வது என்பதை சிங்கள மக்களிடமிருந்து நிறையக் கற்க வேண்டியுள்ளது. ஆண்டாண்டு தோறும் சிறுவர் முதல் பெரியோர் வரை சுற்றுலாச் செல்வதும் பல இடங்களைப் பார்ப்பதும், பல மக்களைச் சந்திப்பதும், விரும்பியதைச் சமைத்துச் சாப்பிடுவதும் என்று வாழ்கையை இரசிப்பதும் அந்த வகையில் வாழ்வதும் நாம் கற்றுக்கொள்ள வேண்டியவை. படைப்பாற்றல் உள்ள கலைஞர்கள் அங்கே நிறை உருவாகியுள்ளமை இப்படியான இரசிப்புத் தன்மையே காரணமாகலாம்.

அக்கலைஞர்கள் மனித நேயம் மிக்கவர்களாகவும் சகோதரத்துவ சுபாவம் உள்ளவர்களாகவும் காணப்படுகிறார்கள். என்னுடன் பழகம் அனேக சிஙகளக் கலைஞர்களிடம இந்தப் பண்பைக் பண்டு வியந்திருக்கின்றேன். எம்மவர்கள் தமது சொத்துக்களைக் கட்டிப் பிடித்துக்கொண்டு இதுதான் உலகம் என்று வாழ்வது கேவலமானது. எவ்வளவு காலந்தான் அவர்கள்; கிணற்றுத் தவளைகளாக வாழப்போகிறார்கள்!

ஒரு சாதாரண மனிதன் ஆக்கப்படைப்பாளியாக மாற்றம் கொள்வது என்பது இயற்கையாகவே அவனுள் முகிழ்க்கும் சிந்தனைபூர்வமானன ஒரு விழிப்புணர்வா? அல்லது தேடல், கற்றல் மற்றும் அறிதல் போன்ற செயற்பாடுகளின் அடிப்படையான பயிற்சிகளின் வெளிப்பாடா?

தேடல், கற்றல், அறிதல் போன்ற செயற்பாடுகள் அவனிடமுள்ள துறைசார்ந்த ஈடுபாடு அல்லாமல் சாத்தியமாகது. சிறு வயதிலிருந்தே அவனுடைய ஈடுபாடு குறிப்பிட்ட துறையில் இருக்குமாயின் அவனாகவே அதைக் கற்பதற்குரிய தேடலும் கற்றலும், அறிதலும் தாமாகவே நடைபெறும். ஆகவே அவனுடைய இயல் பூக்கமாக அதன் மேல் உள்ள ஈடுபாடு முக்கியமாகிறது.

ஒரு இயல்பான முழுமையான கலைஞன் இயல்பான முழுமையான மனிதனாக இருக்கவேண்டும் என்ற ஒரு கருத்துவரவலாக உள்ளதே இது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

மனிதப்பண்பு இருப்பவன் கலைஞனாக இருப்பதற்கு தகுதியுடையவனாகிறான். அதற்காகக் கலைஞர்கள் எல்லோரும் மனிதப் பண்புடையவர்கள் என்றும் சொல்வதற்கில்லை. புறநடைகள் கண்கூடு (இது ஆராயப்படவேண்டிய விடயம்)

மனிதனுக்கும் பிற உயிரினங்களுக்குமிடையில் உள்ள முக்கிய வேறுபாடு அவனுடைய ஆறாவது அறிவான பகுத்தறிவே. இது எல்லோருக்கும் தெரிந்த விடயந்தான் ஆயினும் அநேகமானோர் பகுத்தறிவைப் பற்றியே சிந்திப்பதில்லை. சமூகத்திலே ஏற்படுகின்ற சகல பிரச்சனைகளுக்கும் இந்தக் குறைபாடே காரணமாகிறது. சமூகத்திலே புரையோடிப் போயுள்ள மூட நம்பிக்கையும் அதை அடியொற்றிய பழக்கவழக்கங்களும் குறிப்பிடக்கூடியவை இதைப் பற்றிய புரிந்துணர்வை ஊட்டுவதற்கு கிரேக்க நாட்டின் பகுத்தறிவுத் தந்தை ‘சோக்கிரட்டீஸ்’ முதல் தமிழ் நாட்டின் தந்தை ஈ.வே.ரா. பெரியார் வரை பாடுபட்டார்கள் என்பது அநேகருக்கும் தெரிந்த விடயமே. அவர் சொன்னார், இவர் சொன்னார் என்று நம்பிவிடாதே, எவர் சொன்னாலும் அதன் உண்மையைக் பகுத்தறிய வேண்டும்.

கண்ணால் கண்டதும் பொய், காதால் கேட்டதும் பொய், தீர விசாரித்தறிவதே மெய் என்ற கூற்றும் இதை அடியொற்றியே ஏற்பட்டதெனலாம். தந்தை ஈ.வே.ரா. பொரியார் அவர்கள் படித்தது 3ஆம் ஆண்டு வரையாயினம் இன்று உலகத் தமிழருக்கெல்லாம் தந்தையான நிலையில் இவருடைய பெயரில் ஒரு பல்கலைக்கழகம் (பெரியார் பல்கலைக்கழகம்) இயங்குகின்ற அற்புதமும் இவருடைய பெயரில், பெரியார் மாவட்டம் என்ற பிரதேசமும் உள்ளதெனில் இவரின் மகத்துவத்தை நாம் உணரலாம். ‘வாழ்க்கைத் துணைநலம்’ என்னும் இவருடைய நூல் யாவரும் படிக்க வேண்டிய நூல். தன்னை உணர்தல் என்பது முக்கியமான படிநிலை.

இது மனிதனாவதற்குரிய முயற்சியாயினும் ஒருவன் கலைஞனாக இருப்பதற்கு மிக முக்கியமாகிறது. கலைஞன் தன்னுடைய பலம் என்ன? பலவீனம் என்ன? என்பதைப் புரிந்து வைத்திருக்க வேண்டும். அந்தப் புரிதல் சாத்தியமாயின் அவன் பிற கலைஞருடைய இருப்பு என்ன என்பதையும் புரிந்துகொள்ள முடியும். இந்தப் புரிந்துணர்வு கலைஞன் தனது படைப்புகளை ஆரோக்கியமாக வென்றெடுக்க உதவுகின்ற அதேவேளை அவன் தன்னடைய தனித்துவத்தையும் உறுதி செய்யக் கூடியதாக அமையும். எப்பெழுது அவனிடம் தனித்துவமான படைப்பாற்றல் ஏற்படுகிறதோ அப்பொழுதுதான் அவன் கலைஞன் என்ற தகுதியையும் அடைகின்றான். இவை எல்லாவற்றுக்கும் அடிப்படையாக அமைவது பகுத்தறிவுள்ள ஒரு மனிதன் என்ற நிலையே.

ஒரு மனிதனை கலைப் படைப்பாளியாக உணர்வேற்றுவது அகச்சூழலா? புறச்சூழலா? இந்தவகையில் உங்களுக்குள் உங்களின் கலைப்படைப்பாற்றலை உத்வேகம் கொள்ளவைத்த சூழல் எது? அது எவ்வாறு நிகழ்ந்தது?

எனது சிறுபராயக் கற்றல் காலங்களில் பார்த்ததை அப்படியே வரையும் வல்லமை வெளிப்பட்டு நின்றது நினைவிலே உண்டு இயல்பாகவே என்னுள் இருந்த இயல்பூக்கம் கலை ஈடுபாடு. அதில் nவிப்பட்டமை உணர்கிறேன். அதில் ஒரு ஆத்மதிருப்தியை உணர்ந்தேன். என் ஆத்மாவுக்குத் தீனி போடும் முயற்சியே என் நீண்ட இந்தக கலைப்பயணமாகலாம். G.C.E. (O.L பரீட்சையில் கேத்திர கணிதப் பொறிமுறை வரைதல் (Geometrical and Mechanical Drawing) என்னும் பாடத்தில் ‘D’ என்னும் அதிஉயர் சித்தி பெற்றேன்.

ஓவியத்துக்கு ‘C’ என்னும் திறமைச்சித்திதான் கிடைத்தது. இதன் நிமித்தம் நான் ‘கட்டடக்கலை’  (Architect) படிக்க வேண்டும் என்பது பெற்றோர் உட்பட எல்லோரது விருப்பமாகவும் இருந்தது. ஆயினும் ஓவியத்தில் (Drawing and Painiting) அதி உயர்நிலைக்கு வரவேண்டும் என்ற அவா என்னுள் மேலோங்கி நின்றதனால் பிடிவாதமாக ஓவியம் கற்பதற்கே முடிவெடுத்தேன்.

கொழும்பில் உள்ள (College of Art and Crafts) என்னும் நுண்கலைக் கல்லூரியில் (1966-19969) கற்றகாலம் எண்ணெய் வர்ண ஓவியம் (Oil Paintings) கற்றுத்தரப்படவில்லை. ஆயினும் கல்லூரிக்கு அண்மையில் கொழும்பு கலாபவனத்தில் (Colombo Art Gallarey)  பல ஓவிய விற்பன்னாகளின் ஓவியப் படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தமை எனக்கு வரப்பிரசாதமாக அமைந்தது எனலாம். J.D.A.Perera, David Paynter.  A.C.G.S. Amarasekara, Lanka tilake. Stanly  Abeyasinghe போன்ற மேதைகளின் எண்ணெய் வர்ண ஓவியங்கள் என்னை மிகவும் கவர்ந்தன.

ஏற்கனவே என்னுள் இருந்த எண்ணேய் வர்ண ஓவியத்தில் இருந்த ஈடுபாடு மேலும் என்னுள் ஒரு உத்வேகத்தைக் கொடுத்தது எனலாம் தொடர்ந்து என்னுடைய சுயமுயற்சியில் எண்ணெய் வர்ண முறையைப் பயின்று இன்று பலராலும் மதிக்கப்படக்கூடிய நிலையை அடைந்திருப்பது மனதுக்கு பெரும் திருப்தியாக உள்ளது. அது மட்டுமல்ல 1969ம் ஆண்டு Ceylon Cold Stores Ltd ஸ்தாபனத்தினரால் வெளியிடப்பட்ட நாட்காட்டியில் எனது எண்ணெய் வர்ண ஓவியம் ஒன்று முதன்முதலாக வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து இன்றுவரை என்னுடைய ஓவியப்படைப்புகள் பலதும் ஓவியத்தை நேசிப்பவர்களிடம் உயர்ந்த இடத்தைப் பிடித்திருப்பது பெருமைப்படக் கூடியதே. இத்துடன் Oil Paint, Water colour, oil Pastels  ஆகிய மூன்று வர்ண ஊடகங்களையும் எப்படிக் கையாள்கிறது என்பதில் தொடரும் எனது பயிற்சியால் ஒரு உயர்ந்த நிலையை அடைந்திருப்பது என் ஆத்மாவுக்கு கிழைத்திருக்கும் தீனியே. ஏனெனில் ஒவ்வொரு ஓவியனுக்கும் இந்த ஊடகக் கையாளுகை ஒரு பெரும் சவாலே. ஒரு ஓவியனின் கலை ஆளுமை விருத்திக்கு இந்த ஊடகக் கையாளுகை முக்கிய பங்கு வகிக்கிறது என்பது முக்கியமானது.

இத்துடன் கலைஞன் என்பவன் காலத்தின் கண்ணாடி என்று சொல்லலாம். வாழம் சூழலால் பாதிக்கப்படும் அவன்பார்வையில் படும் காட்சிகளை அது மகிழ்ச்சியோ, துக்ககரமானதோ பதிவு செய்ய முனைகிறான். இப்படி அவனுடைய புறச் சூழலால் பாதிக்கப்பட்டுப் படைக்கும் உயிர்த்துடிப்புள்ள படைப்புக்கள் காலத்தால் அழியாது நிலைத்து நிற்கக் கூடியதாக அமையலாம்.

ஒரு ஆக்க கர்த்தாவின் கலைப்படைப்புகள் அவர் சார்ந்த மண்ணையும் மக்களையம் பிரதிபலப்பதாக இருந்தால் போதுமா? ஒரு படைப்பாளியின் கலை வெளிப்பாட்டுச் சிந்தனைக்கான எல்லைகள் ஏதுமுண்டா?

கலைஞன் ஒரு சூழ்நிலைக் கைதி வாழும் சூழலிலிருந்து அனேகமாக அவனுக்குரிய கருப்பொருட்கள் கிடைக்கின்றன. அவனுடைய படைப்புகளில் அவனை அறியாமலே அவன் வாழும் மண்ணும் மக்களும் பதிபடுவது தவிர்க்க முடியாமல் போகிறது. ஆயினும் அதுதான் அவனுடைய கலை வெளிப்பாட்டு எல்லையாக இருக்க முடியாது. படைப்பாற்றல் என்பது இவற்றையெல்லாம் தாண்டிப் பயணிப்பதே கலைப்பயணத்தில் ஒரு எல்லையைத் தீர்மானிப்பதென்பது அர்த்தமற்றதே. அது ஒவ்வொரு கலைஞனின் ஆளுமையைப் பொறுத்த விடயமாகிறது.

உங்கள் படைப்புகள் – படைப்புலகம், என்பவற்றிற்கிடையேயான ‘வாழ்வியல் தளம் ஒரு முழுமையான கலைஞனாக உங்கள கலைத்தாக்த்தை எவ்வாறு எதிர்கொள்ளவைத்தது?

சடங்கு, சம்பிரதாயம் என்பவற்றுக்கு ஆட்பட்டு வாழும் கிராமிய மக்கள் மத்தியில் கலைஞர்களைப் பாராட்டவோ, ஊக்கப்படுத்தவோ வேண்டும் என்ற சிந்தனையேயற்ற பாமரர்களுடன் கலைஞர்களும் வாழவதென்பது சவாலான ஒரு விடயமே.

ஒரு மனிதப் பொறுமதியை அவனிடமுள்ள பணத்தையும், சொத்துப் பத்தையும் வைத்து மதிப்பவர்கள் மத்தியில் ஏழைக் கலைஞன் செலலாக்காசுக்குச் சமமானவனாகிறான். கலையுணர்வுள்ளவர்கள் அருகிப்போயுள்ள சமூகமாக இந்த மனிதவர்க்கம் மாறிவருவது நல்ல மாற்றமல்ல. ‘கலையுணர்வில்லாதவன் நல்ல மரத்துக்குச் சமமானவன்’ என்ற அறிஞர் பிளேற்றோவின கூற்று நினைவில் வருகிறது. பிள்ளைகளைச் சிறவுயதிலிருந்தே கலையுணர்வுள்ளவர்களாக வளர்க்க வேண்டியதன் முக்கியம இதனால் உணரப்படுகிறது. இதனாற்றான் நுண்கலைப்பாடங்களை பாடவிதானத்தில் முக்கியமானதாகச் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளது எனலாம். நுண்கலைகள் மனிதப்பண்பை மேம்படுத்த உதவுகின்றன. தற்சமயம் எம்மத்தியில் காணப்படும் கலாச்சாரச் சீரழிவுகளுக்கெல்லாம் மூலகாரணமாக மனிதநேயமற்ற உளப்பாங்கே உள்ளது.

இன்றும் புதிதாக அறிமுகமாகும் சிலர் என்னிடம் கேட்டுகும் முதற்கேள்வி – இந்த விளம்பரப்பலகையெல்லாம் வரைவீர்களா? என்பதுதான். கலையுணர்வோ அறிவோ அற்ற பாமரச் சூழலில் எம்மை நிலைநிறுத்திக் கலைப்பயணத்தை முன்னெடுத்துச் செல்வதென்பது மிகவும் சிரமமான காரியமே. பாராட்டுகளும் புகழும் கிடைக்கும்போது மகிழும் சூழ இருப்போருக்கு எம்மைத் தட்டிக்கொடுத்து உற்சாகப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் தோன்றுவதில்லை. ஆலயங்களிலும் மரணவீடுகளிலும் தேவாரம் பாடுபவர்களுக்கு இருக்கிற மாியாதைகூட எமக்கக் கிடைப்பதில்லை.

மனைவியும் இந்தச் சூழலில் வளர்ந்தவராயினும் என்னுடைய கலைப்பயணத்துக்கு என்றும் இடையூறாக இருந்ததில்லை. ஏறக்குறைய நாற்பது ஆண்டுகால எனது கலைப்பயணத்தில் சமூக மட்டத்தில் ஏற்பட்ட அங்கீகாரமும் உறுதிப்பாடும் சுமுகநிலையை ஏற்படுத்தியிருப்பது மன அமைதியைக் கொடுக்கிறது. இந்த நிலையை அடைவதற்க நான் பட்ட அவமானங்களும் ஏமாற்றங்களும் கணக்கிலடங்காதவை. இவற்றாலெல்லாம் என்னுடைய துறைசார்ந்த திறமை மழுங்கடிக்கப்படமுடியவில்லை. எனது அர்ப்பணிப்புடனான கலை ஈடுபாடே இதற்குக் காரணமாகலாம்.

‘கலைப்படைப்புக்கள் யதார்த்த உலகில் நின்றும் விடுபட்ட யதார்த்தமற்ற உலகை உருவாக்ககின்றன’ என்ற சிக்மனட்ப்ராய்ட் அவர்களின் கோட்பாடு குறித்த உங்கள் எண்ணப் பகிர்வினை கூறமுடியுமா?

‘சிக்மன்ட் ப்ராய்ட்’ ஒரு உளவியல் தத்துவஞானி. கல்வியுலகில் இவர் ஒரு முக்கியமான பேசுபொருளாக இருப்பதில் ஆச்சரியமில்லை. காரணம் இவர்கள் உண்மையைத் தேடிப் பயணிப்பவர்கள். யதார்த்தத்தை தேடுவதில் வெற்றியும் ஈட்டியவர்கள் எனலாம். ஓவியனின் படைப்புகளுக்கெல்லாம் தளமாகவும் பாடுபொருளாகவும் இருப்பவை இறைவனுடைய படைப்புகளே. கலைஞனுடைய கற்பனைகளெல்லாம் இறைவனுடைய படைப்பில் இருந்தே பிறக்கிறது எனலாம். மாலை நேரங்களிலும் காலை நேரங்களிலும் வானத்தில் தோன்றும் வர்ணஜாலங்களைப் பாருங்கள். எத்தனை விதமான வர்ணக்கலப்புகளும் வர்ணச் சிதறல்களும் மனதை வியக்க வைக்கின்றன.

இவற்றைக் கற்றுக் கொள்வதுதென்பது இயலக்கூடியதா? ‘இயற்கையோடு ஒட்டி வாழவேண்டும்’ என்பது இன்னொரு த்ததுவஞானி ‘ஓசோவின்’ கூற்றாகும். இயற்கை தான் எமக்குக் கிடைத்திருகின்ற பெரும் ஆசான். எமது கற்பனைகளெல்லாம் அதிலிருந்து தான் எமக்கு கிடைக்கிறது. அந்த வகையில் இயற்கையை வரைவதும் மனிதரை, பிற ஜீவராசிகளை வரைவதும் காலங்காலமாக நடைபெற்றுவரும் செயற்பாடேயாயினும் யதார்த்ததை அப்படியே வரைவது என்பது சாத்தியமற்றதே. யதார்த்தத்தை உள்வாங்கி அதன் சாரத்தை குணாம்சத்தை வரைவதே ஓவியனின் பயியாகிறது. இந்த வகையில் யதார்த்தத்தினின்று விடுபட்டு யதார்த்தமற்ற ஒரு நிலையை அடைகிறது என்ற கூற்று மிகையல்ல.

ஒவ்வொரு கலைஞருள்ளும் அவரது படைப்பாற்றல் ஆளுமை என்பது தனித்துவம் கொண்டதாகவே உள்ள நிலையில், அவரது படைப்புகள் குறித்த விமர்சனங்கள் என்பது தேவையா ஒன்றா? அத்தகைய விமர்சனங்களுக்கு பதில் கூற வேண்டிய அவசியம் கலைஞனுக்கு உண்டா?

விமர்சனங்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஆயினும் விமர்சனங்கள் வரவேற்கப்பட வேண்டியவை. இரசனைகள் ஆளுக்கு ஆள் வேறுபடக் கூடியவை. கலைஞன் நினைக்காத சில கருத்துகள் பார்வையாளர்கள் முன்வைப்பது கண்கூடு. அக் கருத்துகள் கலைஞன் தன் படைப்புகளை மேலும் தரமான தாக்க உதவுபவையாகவும் அமையலாம்.

கலைஞன் தன்னை முழுமையாக அறிந்திருக்க வேண்டியது மிக முக்கியம். அப்பொழுதுதான் தனது படைப்பில் முன்வைக்கப்படும் விமர்சனங்கள் சரியானதா? தவறானதா? மிகைப்படுத்தப்பட்டதா? என்று பகுத்தறிய முடியும்.

இலங்கையின் தமிழ் – சிங்கள ஓவியர்களிடையே காணப்படும் ஒருமைப்பாடு – முரண்பாடு ஆகிய அம்சங்களில் கலைத்துவ தனித்துவம் பற்றிய தங்கள் கருத்து எதுவாக உள்ளது?

சமூகம் சார்ந்த சிந்தனை வெளிப்பாடும் வாழ்க்கை முறையும் தமிழ், சிங்களக் கலைஞர்களின் விகிதாசாரத்தை வழிப்படுத்துகிறது. அந்தவகையில் தமிழ் சமூகத்தின் வளர்ச்சிநிலை அருகிக் காணப்படும். அதே நேரத்தில் சிங்கள ஓவியர்களின் வளர்ச்சி நிரை அதிகரித்துக் காணப்படுகிறது. இருக்கின்ற சொற்ப தமிழ் ஓவியர்கள் கூட துறைசார்ந்த ஈடுபாடு குறைந்த நிலையிலேயே இயங்கிக் கொண்டிருப்பதை உணரக்கூடியதாக உள்ளது.

நண்பர் சனாதனன் போன்ற நவீன சிந்தனைப் போக்குடன் செயற்படுபவர்கள் மிகக் குறைந்த அளவிலேயே காணப்படுகின்றனர். மிகுதியாக இருக்கின்ற சொற்பக் கலைஞர்களும் ஆலயங்களுக்கு வர்ணம் தீட்டுவதும் தெய்வ ஓவியங்களை வரைவதுமாகக் காலத்தை கடத்துகிறார்கள். அதையும் தவறான முறையில் வரைவது சகிக்க முடியாதுள்ளது. தெய்வ உருவங்கள் வரைவதற்கரிய பாணி வரன்முறையைக் கற்று அதன் வழி வரைவதே தரமான ஓவிய வளர்ச்சிக்கு வித்திடும் சிங்கள் கலைஞர்கள் அர்பணிப்போடு செயற்படுவதும் எப்பொழுதும் புதுமையைச் சிந்திப்பதும் அதனூடான செயன்முறையும் கவனத்தில் கொள்ளத்தக்கது.

திறமையானவர்கள் அரச உதவியுடன் வெளிநாடு சென்று புதுப்புது சிந்தனை விருத்தியைப் பெற்றவர்களாகப் பாிணமித்துக் கொண்டிருக்கிறார்கள். Srath Sanjeewa, thenuwara, Jagathweera singhe, Palapothupittiya, Pradeep Dhaluwatha போன்றோர் அந்த வகையில் குறிப்பிடக்கூடியவர்கள். இவர்களுடைய வழிகாட்டல்கள் இராமநாதன் நுண்கலைக் கல்லூரியின் ‘சித்திரமும் வடிவமைப்பும்’ துறை மாணவர்களுக்குக் கிடைத்திருப்பது பெரும் பாக்கியமே. அவர்களின் கற்பித்தல் யுக்திகள் வேறாக இருப்பதும் மாணவர்கள் பல விதமான செயன்முறைகளை அறிந்து கொள்வதற்கும் வாய்ப்பாகிவிடுகிறது. இந்த வாய்ப்புகள் அவர்கள் கலைஞர்களாவதற்கரிய தனித்துவத்தைத் தேடிக் கைக்கொள்வதற்கும் ஏதுவாகிறது.

‘நாமும் நலியாக் கலையுடையோம்’ என்று நமது பெருமைக்குரிய கவிஞர் ஒருவர் பாடியள்ள நிலையில், நமது கலைஞர்களையும் அவர் தம் கலைப்படைப்புகளையும் நமது மக்கள் அறிந்து கொள்ளா நிலையே யதார்த்தமாக உள்ளது? இதற்க காரணம்? இதனை எப்படிமாற்றுவது?

ஏற்கனவே நான் குறிப்பிட்ட நமது வாழ்க்கை முறையும் எமது கருத்து நிலையுமே காரணமாகிறது. எத்துறையில் வருமானம் கூடப் பெறலாமோ அத்துறை மக்களால் நாடப்படுகிறது. அந்த வகையில் வைத்தியர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் காலங்காலமாக விரும்பப்படுபவர்களாக உள்ளனர். ஏனைய துறைகளை விட கலைத்துறை எல்லோருக்கும் கைவரக்கூடியதல்ல. கலை ஆத்மாவோடு சம்மந்தப்பட்டது.

அந்த உணர்வுள்ளவர்களுக்க ஆத்மதிருப்தியைக் கொடுக்கக்கூடியது வெறுமனே பணவருவாயைத் தொடர்புபடுத்தி அதைக் கொச்சைப்படுத்துவதும் ஒதுக்க முனைவதும் தவறு. மனிதநேயம் உள்ள சமுதாயத்தை கட்டி எழுப்ப வேண்டிய தேவை இப்பொழுது முன்னைவிட அதிகமாக வேண்டப்படுகிறது. இப்பொழுது நாம் பார்க்க வேண்டியது இந்தக் கலையினூடாக எப்படி நமது பொருளாதாரத்தை மேம்படுத்துவது என்பதுதான். இது ஊர்கூடித் தேர் இழுக்க வேண்டிய காலம். இந்தக் கலைப்படைப்புகளைச் சந்தைப்படுத்துவதற்குரிய சூழலையம் வாய்ப்பையும் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டியது ஆட்சியல் உள்ளவர்களுடைய கடமையாகிறது.

அதே நேரத்தில் ஒவியன் தனது தனித்துவத்தை வளர்த்தெடுக்க வேண்டியது மிகமுக்கியம். சிங்கள ஒவியர் Pala Pothupittiya வின் ஓவியம் ஒன்று ரூபா 25 இலட்சத்துக்கு விலை போயுள்ளது. இங்கே நாம் கவனத்திற்கொள்ள வேண்டும். இப்பொழுது நவீன விஞ்ஞான யுக்தியுள்ள காலம். தரமான கலைப்படைப்புகளை இணையம் ஊடாக விற்பதற்குரிய வாய்ப்புகள் அதிகம் ஆகக்கூடியதாக கலைஞர்கள் தமது ஆற்றலை வளர்த்தெடுக்க வேண்டியது முக்கியம். வசதியுள்ளவர்கள் தமது வீடுகளில் ஓவியங்களை மாட்டும் வழக்கங்களை மேற்கொள்ள வேண்டும்.

வியாபார நிலையங்கள் தமது வியாபார விளம்பரத்துக்காக இலவசமாக வழங்கும் நாட்காட்டிகளை வீடுகளில் மாட்டும் வழமை நிறுத்தப்படவேண்டும். பெரிய தாபனங்கள் வங்கிகள் உள்நாட்டு ஓவியர்களுடைய படைப்புகளை வாங்கி காட்சிப்படுத்துவதனூடாக கலைஞர்களை ஊக்கப்படுத்த வேண்டும். கட்டடக் கலைஞர்கள் வாடிக்கையாளர்களுக்கு வீட்டை வடிவமைக்கும் போது வீட்டில் ஓவியங்களை மாட்டுவதற்குரிய இடங்களையும் தெரிவு செய்து சிபாரிசுகளை மேற்கொள்ள வேண்டும். நாட்டு மக்கள் ஒவ்வொருவரது செயற்பாடும் கலைஞர்களை வளப்படுத்துவதாக இருப்பின் இந்தக கலை வளர்வது சாத்தியமே.

‘உருவத்திரிபு இல்லாமலேயே வர்ணப்பிரயோகத்தின் மூலம் புதுமையைப் புகுத்த முடியும்’ என நம்புவதாக ஒரு கட்டுரையில் நீங்கள் கூறியதாக வெளிவந்துள்ளது இது குறித்து சற்று விளக்கமாக கூறுங்கள்.

தனித்துவமான பாணி (Induvidual style) என்பது ஒவ்வொரு கலைஞனிடமும் இருக்க வேண்டிய முக்கியமான பண்பு, இன்று பேசப்படும் சகல கலைஞர்களும் – உலகளாவிய ரீதியிலும் – தனது தனித்துவமான முறையினாலேயே பேசப்படுகின்றனர் என்பது யதார்த்தம். அந்த வகையில் ஒரு ஓவியன் உருவங்களைத் திரிபுபடுத்தி தனது தனித்துவத்தைக் காட்டியுள்ள நிலையில் அதைத் தொடர்ந்து பிற கலைஞர்களும் அதையும் ஒரு யுக்தியாகக் கையாளும் நிலை காணப்படுகிறது.

Cubism என்ற முறையில் Piccaso வின் அணுகு முறையும் surrealism என்ற முறையில் Salvadar Darli யின் முயற்ச்சியும் குறிப்பிட்டுச் சொல்லக்கூடியவை. Vincant Vancoughவின் முறை இவற்றை விட வேறுபட்டு நிற்பதை அவதானிக்கலாம். வேகமான வர்ணத் தீட்டல்கள் stokes மூலம் தனது தனித்துவத்தை வெளிகாட்டியுள்ள முயற்சி மனதை வருடிக்கொடுக்கும். வர்ணத்தை பிரயோகிக்கும் முறையில் வேகத்தையும் அவரது மனப்பதிவையும் உணரக்கூடியதாக உள்ளது. உருவங்களேயற்ற அரூப ஓவிய முறைமையும் (Abstract) ஓவியர்களால் கையளப்படுகிறது. இவற்றிலுள்ள வர்ணங்களும் அவற்றைக் கையாளும் முறைமையும் மனத்திற்கு ரம்மியமானது.

இப்படி ஒவ்வொரு ஓவியனும் தனது தனித்துவமான செயற்பாட்டினூடாக தனித்து நிற்பது பெறுமதியான விடயம். ஆகையால் ஒவ்வொரு ஓவியனையும் அவனுடைய தனித்துவத்தினூடாக மதிக்கவேண்டியது முக்கியம். என்னுடைய அணுகுமுறையும் யதார்த்தத்தை விட்டு வெகு துரம் செல்லாமல் Patching முறையைக் கையாண்டு செல்லும் யுத்தி எனக்கொள்ளலாம். நமது மண்ணில் மறைந்த ஓவியர் மார்க்குவின் திரிபுபடுத்தல் தனக்கேயுரிய பாணியில் கலைநயத்தோடு படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இவற்றை விட உருவ வெளிப்பாடேயற்ற அரூப ஓவியமாக (Abstract) வர்ணங்களைக் கையாளும் தனித்துவமும் மனதுக்க ரம்மியமானதே. இப்படி ஒவ்வொரு ஓவியனும் தனது தனித்துவமான செயற்பாட்டினுடாக நிலைத்து நிற்பது பெறுமதியான விடயம். ஆகையால் ஒவ்வொரு ஓவியனையும் அவனுடைய தனித்துவத்தினுடாக மதிக்க வேண்டியது முக்கியம்.

மேற்குலகின் கலைப் படைப்பாக்கத்தில் ஏற்பட்டு வரும் மாற்றங்களின் தாக்கங்கள் அல்லது பிரதிபலிப்புக்கள் நமது ஓவியர்கள் மத்தியில் எத்தகைய ஆக்கபூர்வமான மாற்றங்களை உருவாக்கியுள்ளது?

மேற்குலகின் ஓவியங்களின் படைப்புகளில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் நமது ஓவியர்கள் மத்தியிலும் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. அநேகமாக மேற்குலகு ஓவியர்களின் படைப்புக்களின் நுட்பங்களைக் கிரகித்தே என்னுடைய கலை ஆளுமையை விருத்தி செய்துள்ளேன் என்றால் அது மிகையல்ல. இயல்பாகவே உலகளாவிய ரீதியில் உள்ள கலைஞர்களின் பாணியைக் கிரகிப்பதும் அந்த வகையில் சிந்திப்பதும் படைப்பதும் காலங் காலமாகவே நடைபெற்றுவரும் நிகழ்வே.

இப்பொழுது கணினியுகம். – ‘இணையம்’ ஊடாக உலகத்தின் எந்த மூலையில் இரக்கும் கலைஞர்களும் தமது படைப்புகளைக் காட்சிப்படுத்த முடியும். இப்படிப் பலவிதமான பாணிகளையும் (Styles) பார்க்ககூடிய வாய்ப்பு கலைஙர்களுக்குக் கிடைப்பதும் அவற்றின் நுட்பங்களை உளவாங்கித் தமது படைப்புகளை நெறிப்படுத்தி புதிய வடிவத்தில் வெளிக்கொணர்வதும் இயல்பாகவே நடைபெறுவதே. ஆகவே நமது ஓவியர்கள் மத்தியில் மாற்றங்கள் ஏற்படாவிட்டாலே நாம் ஆச்சரியப்படவேண்டும்.

புரிய சமகால எமது தலைமுறைகள் மத்தியில் ஓவியத்துறை மீதான ஈடுபாடும், படைப்பாக்கத் திறனும் நம்பிக்கையூட்டும் வகையில் உள்ளதா?

கலையைப் பொறுத்தவரை அதைக் கற்பவன் முழு ஈடுபாட்டோடு கற்பது முக்கியம். தற்காலப் புதிய தலை முறையிடம் ஒரு சிலரைத் தவிர ஏனையோரிடம் ஈடுபாடு இல்லாததையே காணமுடிகிறது. பட்டப்படிப்பை மேற்கொள்பவர்களிடம் ஒரு Degree கிடைத்தால் போதும் என்ற எண்ணமே மேலோங்கியுள்ளது. பட்டப்படிப்பை முடித்து வெளியேறுபவர்களில் அனேகல் தாம் கற்ற துறையை விட்டு வேறு துறையிலேயே வேலைகளையத் தேடிக்கொள்கிறார்கள். எஞ்சியீருப்போரிலும் படைப்பாபற்றல் உள்ளவர்கள் மிகச்சிலரே. அந்தச் சிலர் நம்பிக்கை யூட்டுபவர்களாக உள்ளனர் என்பது மகிழ்ச்சிக்குக்குரியதே.

அனுபவமுதிர்ச்சியும், தனித்துவ ஆளுமைத் திறனும் கொண்ட கலைஞன் என்ற வகையில் உங்கள் சொந்த மண்ணில் ஒரு முழுநேரக் கலைஞனாக வாழ்வதற்கு நீங்கள் எதிர்கொள்ளும் சவால்கள் எத்தகையது? குறிப்பாக ஒரு முழுநேர ஓவியக்கலைஞன் எமது மண்ணில் நிறைவுடன் வாழ்தலைச் சாத்தியமாக்கத் தேவையான சூழலை ஒருவாக்குவது எப்படி?

ஒரு முழுநேரக் கலைஞனாக இந்த மண்ணில் வாழ்வதென்பது மிகச் சிரமமே. சவால்களை எதிர்கொண்டு சாதிப்பதற்கு கலைஞன் தனது கலைத்திறமையை வர்த்துக்கொள்வது முக்கியம். நான் அந்த முறையிலேயே செயற்பட்டுக்கொண்டிருக்கிறேன். துறைசார்ந்த திறமையை வளர்த்துக்கொள்வதனூடாக சுயநம்பிக்கை வளர்கிறது. அர்ப்பணிப்போடு அவன் கற்கம் அனுபவங்கள் அவனை ஒரு உன்னத நிலைக்க இட்டுசசெல்கிறது. அந்த உன்னத நிலையை அடைவதென்பது உடனடிச் சாத்தியமாகும் செயலல்ல. எப்பொழுது அவன் படைப்பாற்றல் உள்ளவனாகத் தன்னை நிலை நிறுத்திக்கொள்கிறானோ அப்பொழுது அவனடைய படைப்புகள் பெறுமதியான படைப்புகள் என்ற நிலையை அடைகிறது. தனது படைப்புக்களைப் பெநமதியாக விற்பதற்கு இந்நிலை உதவுகிறது.

1983ஆம் ஆண்டு ஏற்பட்ட இனக்கலவரத்தின் நிமித்தம் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வந்தடைந்தேன். திரும்பவும் வேலைக்குச் செல்லவில்லை. அப்பொழுது நிலவிய சூழல் ஓவியத்தில் வருமானம் ஈட்டும்படியாக இருக்கவில்லை. ஒரு வருடம் கமம் செய்யவேண்டிய நிர்ப்பந்தம். ஏற்கனவே ளுpழனெலடழளளைஇ ர்லிநசவநவெழைn போன்ற உடற்பாதிப்புக்கள் விவசாயத்தைத் தொடர்ந்து செய்யமுடியவில்லை. புகைப்படத்துறையில் இயல்பாகவே ஈடுபாடு இருந்தபடியால் இதிலும் சிறிது காலம் முயற்சித்துப் பார்த்தேன்.

ஆனால் இதுவும் என்னுடைய இயல்புக்கு ஏற்றதாக இருக்கவில்லை. இந்நிலையில் எனது கிராமத்தை விட்டு பட்டினத்தை நாடினேன். யாழ். இந்துக்கல்லூரி அதிபர்கள், தாபகர்களுடைய ஓவியங்களை வரையும் வாய்ப்புக் கிட்டியது. அதைத்தொடர்ந்து யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் வித்தியானந்தன், பேராசிரியர் மகேஸ்வரன் போன்றோரின் ஓவியங்கள் வரையும் வாய்ப்பம் கிட்டியது. படிப்படியாக என்னுடைய திறமையை இனங்கண்டவர்கள் என்னை நாடி வந்தார்கள். சஞ்சிகை ஓவியங்கள் வரையும் வாய்ப்பும் தேடிவந்தன. 1985ஆம் ஆண்டளவில் அச்சுவேலி புனித தெரேசா வித்தியாலத்திலும் 1998ஆம் ஆண்டு யாழ் பல்கலைக்கழக கலைவட்டத்தினாலும் என்னுடைய தனிநபர் ஓவியக்கண்காட்சி நடாத்தப்பட்டது. இப்படிப் படிப்படியாக என்னுடைய பெயர் இந்த மண்ணில் உறுதிப்படுத்தப்பட்டது. ஓய்வூதியமும் இல்லாத நிலையிலும் இந்த மண்ணில் உயிர்வாழக் கூடியதாக இருக்கிறது தென்றால் என்னுடைய கலைத்திறனுக்குக் கிடைத்த வெற்றியே எனலாம்.

ஒரு கலைஞனின் படைப்புகளை இன்னொருவர் விமர்சனம் செய்தல் அல்லது மதிப்பீடு செய்தல் என்பது ஆக்கபூர்வமான விடயமாக கருதகிறீர்களா? படைப்புக்குரிய கலைஞனின் உள்ளுணர்வின் ஆளுமையைப் புரிந்துகொள்ளாது தமது சுய எண்ணக் கருத்துக்ககை படைப்புகள் குறித்து பகிரங்கமாக்குவதை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா?

பக்கச்சார்பில்லாமல் நடுநிலைநின்று விமர்சிப்பவர்களுடைய விமர்சனங்கள் படைப்பாளிக்கு ந்னமை பயப்பதாக அமையும். படைப்பாளிக்கும் தோன்றாத சில் கருத்துக்களை அவர்கள் முன்வைக்கும் போது அவை படைப்பாளியை மேலும் தரமான செயற்பாட்டுக்குத் தூண்டுபவையாக அமைகிறது. ஆனால் இன்னொரு வகையான விமர்சகர்களும் நம் மத்தியில் உள்ளனர் என்பதையும் நாம் கவனத்திற் கொள்ளவேண்டும்.

இவர்கள் அந்தப் பழடைப்பாளியின் மேல் உள்ள காழ்ப்புணர்வின் நிமித்தம் எந்த வகையிலும் அவனை மட்டந்தட்ட வேண்டும் என்ற தீய நோக்கோடு செயற்படுவர்கள். படைப்பாளியைப் பற்றிய சரியான மதிப்பீட்டைத் தெரியாதவர்கள் மத்தியில் இவை தாக்கத்தை உண்டு பண்ணக்கூடும். ஆனாலும் பொய்மை நீண்ட காலம் நிலைத்திருக்காது கலைஞன் தனது துறைசார்ந்த திறமையை வளர்த்துக் கொள்வதன் நிமித்தம் அற்புதமான படைப்புகளைப் படைக்கும் பொழுது இவர்களுடைய விமர்சனங்கள் அர்த்தமில்லாமல் போய்விடுகிறது. என்னுடைய கலைப் பயணத்தில் ஏற்பட்ட அனுபவங்களில் இதுவும் ஒன்று.

ஒரு இனத்தின் – அல்லது தேசத்தினன் பாரம்பரிய தனித்துவ குணாம்சங்களைக் கொண்ட மரபு சார்ந்த கலைப்படைப்புக்களும், கலை வெளிப்பாடுகளும் அதன் தன் பண்பாட்டு விழுமியங்கள் சிதையாமல் பேணி பாதுகாக்கப்படவேண்டும் என்ற கருத்தோடு உங்களுக்கு உடன்பாடு உள்ளதா?

பாரம்பரிய தனித்துவ குணாம்சங்களைக் கொண்ட மரபுசார்ந்த கலைப் ‘படைப்புக்களும், கலைவெளிப்பாடுகளும் அதன் தன் பண்பாடு விழுமியங்கள் சிதையாமல் பேணிப்பாதுகாக்கப்படவேண்டும் என்ற கருத்துக்கு நான் மாறானவன்னல்ல.

கண்ணாடியில் வரையம் ஓவிய முறைமையொன்று எம் மத்தியில் இருந்தமை அனேகமாக எல்லோா்க்கும் நினைவிருக்குமென நம்புகின்றேன். நம் மத்தியில் வாழ்ந்து மறைந்த கங்காதரன் மாஸ்டர் இந்த ஓவிய முறையில் விற்பன்னராகவும் பல படைப்புகளைப் படைத்த பெருமைக்குரியவராகவம் இருந்ததை நாம் மறப்பதற்கில்லை. ஒரு காலத்தில் இந்தக் கண்ணாடியில் வரைந்த பிள்ளையார், இலக்குமி, சரசுவதி போன்ற ஓவியங்கள் அநேகமாக எல்லா வீடுகளிலும் காணப்பட்டதை அறிவேன். அவருடைய மறைவுக்குப் பின்னர் அவருடைய பிள்ளைகள் சிறிதுகாலம் அந்தப் பணியைத் தொடர்ந்திருக்கிறாhகள்.

இப்பொழுது நம்மத்தியில் நல்லூரில் வதியும் திருமதி நாகபூஷணி சோமசுந்தரக் குருக்கள் அவர்கள் இந்தப் படைப்பில் ஈடுபட்டுள்ளார் என்பதும் செய்நேர்த்தியுடனும் கலை அகுடமுன் மிளிரும் படைப்புகளாக இவருடைய படைப்புகள் அமைவதும் மனதுக்கு ஆறுதலான விடயமாகிறது. அருகிப்போயுள்ள இந்தக் கலையை மீண்டும் வளர்த்தெடுப்பதற்குரிய முயற்சியைப் பற்றி நாம் சிந்திக்க வேண்டியவர்களாக உள்ளோம். இந்தியாவில் ராஜபுத்திர ஓவியங்களும் தஞ்சாவூரில் மரவு சார்ந்த செப்பு வேலைகளும் பாரம்பரியமாகச் செய்துவருவதும் அவற்றை அழந்து போகவிடாமல் அதைப்பற்றிய வகுப்புகள் அமைத்துத் தேர்ச்சி கொடுப்பதும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.

கொழும்பு நுண்கலைக் கல்லூரியில் 1966ஆம் ஆண்டு தொடக்கம் என்னுடைய கற்றற் காலத்தில் ‘சிங்களப் பாரம்பரிய ஓவியம் (Sinhalees Tradittional Art) என்ற பாடமும் எமது கற்கைநெறியில் சேர்த்துக் கொள்ளப்பட்டிருந்தது. இந்த ஓவிய முறையில் மிகவும் அற்புதமாகச் செயற்பட்டிருந்த எனது ஆசான் ‘வணிதுங்க’ அவர்களின் வழிகாட்டல் எமக்கு கிடைத்திருந்தது பெரும் பாக்கியமே.

இவர் இலங்கை முத்திரை பணியக ஓவியர் குழுவிலும் அங்கம் வகித்தவர். இந்தப் பாணியில் வெளியிடப்பட்ட அநேக முத்திரைகள் இவரால் வடிவமைக்கப்பட்டவையே. இதே போன்று இங்கும் கண்ணாடி ஓவியக் கற்கையை ‘சித்திரமும் வடிவமைப்பும்’ துறை மாணவர்களுக்குப் பயிற்றுவித்தல் இக் கலை அழிந்து போகாமல் வளர்தற்கு உதவும் என நம்புகின்றேன். ஏற்கனவே எமது பாரம்பரிய முறைமையொன்று இருந்ததை சட்டநாதர் ஆலயம், பெருமாள கோயில் சுவர்களில் வரையப்பட்டிருந்த ஓவியங்கள் மூலம் அறியக்கிடைக்கிறது. இவற்றையும் வெள்ளையடித்து இல்லாதொழித்துவிட்டோம். இன்று எமக்கென்று ஒரு பாணி இல்லாத நிலையே தொடர்கிறது.

இவற்றைப் பேணிப் பாதுகாப்பதும் அவற்றை அழியவிடாமல் படைப்பதோடு மட்டும் நிற்றுவிடாமல் அவற்றிலிருந்து புதிய முறைகளை படைப்பதும் கலைஞர்களால் முன்னெடுக்கவேண்டியது கலையில் தேக்கமில்லாமல் வளர்வதற்கு உதவும். சிங்கள கலைஞர்களில் மஞசுசிறி ஜோர்ஜ் கீற்ஸ் போன்றவர்கள் தமது பாரம்பரிய முறையையொட்டிப படைத்தவர்களே.

0000000000000000000000000000000

ஆசை இராசையா பற்றிய சிறுகுறிப்பு : 

ஈழத்து இயற்பண்புவாத ஓவியச் செல்நெறிகளில் தனித்துவமிக்கவராக இணையற்ற கலைத்துவ ஆளுமையைக் கொண்ட கலைஞராக தன்னை அடையாளப்படுத்தி நிற்பவர் ஓவியர் ஆசை இராசையா. யாழ் மண்ணில் வளமிக்க ‘அச்சுவேலி’ யில் 16.08.1946 இல் பிறந்த இவர் தந்தை ஆசை அமைதியும், தர்ம சிந்தனையும் நேர்மை வழிப்போக்கும் கொண்டவர் – தாயார் செல்லம்மாவும் தந்தை வழிவாழும் பொறுப்புணர்வு மிக்க குடும்பப் பெண் – தையல் கலையில் தேர்ந்தவர். மகன் இராசையாவின் ஓவியத்திறன் இயல்பிலேயே இளவயதிலேயே வேரூன்றி வளரத் தொடங்கியது. விடாமுயற்சியும், இடையறா உழைப்பும் கொண்ட எவனும் பொருளாதார இலக்குடன் கூடிய போராட்ட வாழ்வை எதிர்கொண்டு வாழும் அச்சுவேலி கிராமத்து மக்களின் வாழ்வோடு கலைத்தாகம் கொண்ட இராசையா அவர்களின் நெருக்கமான ஒட்டுதல் சாத்தியமற்றுபோனதில் வியப்பில்லை. ‘கலை’ பொருளாதார எற்றத்திற்கு உதவாது என்பதே கிராமத்து சித்தாந்தம்.

பாடசாலை வாழ்வு முடிந்ததும் அவரது கலை வேகமாக கொழும்பு நுண்கலைக் கல்லூரியை நோக்கி தள்ளியது அது அவரது வாழ்க்கையின் திருப்பு முனையை ஏற்படுத்திய தேடல் காலமாகியது. அவருள்ளிருந்த ஓவியக் கலைஞன் புதிய பரிணாமத்தை நோக்கிய வளர்ச்சியில் தன்னை இனம் காட்டத் தொடங்கிய காலம் அதுதான்.

தேடல், ஆய்தல், கற்றல், அறிதல் என விரிந்து பரந்த கலைக்க ளத்தில் அவர் ‘ஆத்மா’ வின் கலை யார்வம் விஸ்வரூபம் கொள்ளத்தொடங்கியது. அந்த விஸ்வரூப வளர்ச்சி இன்றுவரை பிரமிக்கவைக்கும் வகையில் வளர்ந்து வருவது இவரை ஒரு மகா கலைஞனாக்கியுள்ளது. பல கண்காட்சிகளில் இவரது ஓவியங்கள் அவரது தனித்துவ கலை ஆளுமையை அடையாளப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.

பரிசுகள், விருதுகள், பாராட்டுக்கள், கௌரவங்கள் என அவருக்கு கிடைத்த தேசிய அங்கீகாரங்கள் பல. அமைத்தையும் மௌனமாக ஏற்றுக்கொண்டு அமைதியாக தன்னியல்வு மாறாத கலைஞனாக, தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளமை வியப்பிற்குரிய ஒன்று.

குடத்துள் விளக்காக அவர் தன்மை சுயவிளம்பரங்களைப் புறந்தள்ளி ஒடுக்கிககொள்பவராக இருந்தாலும் அவரது கலைப் படைப்புகளின் ‘பிரம்மாண்டம்’ அவரை குன்றின் மேல் விளக்காக சுடர்விடவைத்துள்ளமை அவரது கலை யாளுமைக்கு கிடைத்த வெற்றி. எனினும், எம்மிடம் உள்ள, எமக்கும் எமது மொழிக்கும் எமது மண்ணுக்கும் பெருமை சேர்க்கும் இத்தகைய கலைப் பேராளுமையை நாம் முழுமையாக அறியாதிருப்பது எவ்வளவு வேதனைக்குரியது.

நமது மண்ணில் புகழ்பெற்ற சிந்தனையாளரும் கேலிச்சித்திர (Cartoon)  கலைஞருமான சிரித்திரன் சுந்தர் அவர்கள் ஓவியர் இராசையா அவர்கள் பற்றி 1960களில் கூறுகையில் சர்வதேச தரத்திற்கு உயரக் கூடிய இவரது ஓவியத் திறமைகைள் மதிக்கபடவேண்டும். அவரது ஓவியங்கள் மக்களுக்கு அறிமுகம் செய்து வைக்கப்படவேண்டும். இவற்றின்மூலம். நாம் அவரை மேலும் கலை சாதனை புரியத்தூண்டவேண்டும். என்பதை இங்கு நினைவு கொள்ளல் பொருத்தமானது.

1975ஆம் ஆண்டிலிருந்து 1983 வரை இலங்கை முத்திரைப்பணியக ஓவியர் குழுவில் ஒருவராகக் கடமையாற்றிய பெருமைக்குரியவர். சேர். பொன். இராமநாதன், சேர். பொன். இருணாசலம், செர். ஜோன். கொத்தலாவ, சேர். வைத்தியலங்கம், துரைசாமி, சேர். டி.பி மலலசேகர, ஜோஜ். ஈ. டீ. சில்வா இலங்கையின் முதற்புகைவண்டி, தவலம் ஆகிய எட்டு முத்திரைகள் இவரால் வடிவமைக்கபட்டவையே.

கலாபூஷணம் விருது – 2010 ஆளுநர் விருது – 2009, கலைஞானச்சுடர் விருது – 2009, கொழும்பு தமிழ் சங்க விருது – 2012, ஓவியக் கலாகீர்த்தி; ஞானம் சஞ்சிகை 2012 தமிழியல் விருது – 2013, கலைஞான பூரணன், திருமறைக்கலாமன்றம் – 2014, அச்சூர்க்குரிசில் அச்சுவேலி கலைபண்பாட்டு மன்றம் 2014 ஆகிய விருதுகளுக்குச் சொந்தக்காரன். இலங்கை கலாச்சாரப் பேரவை உறுப்பினராக மூன்று ஆண்டுகள் கடமையாற்றியவர். தற்சமயம் இராமநாதன் நுண்கலைத்துறையின் ‘சித்திரமும் வடிவமைப்பும்’ துறையில் வருகை விரிவுரையாளராக கடமையாற்றும் இவருடனான நேர்காணல் .

இராதேயன்-இலங்கை

நன்றி : நானிலம் இணையம்

(Visited 274 times, 1 visits today)
 

கலைக்கூடம்- ஓவியம் – ஆசை இராசையா-ஆசை இராசையா நினைவுக்குறிப்பு

ஈழத்தின் முதன்மை ஓவியர்களில் ஒருவரான ஆசை இராசையா இன்று எம்மிடம் இல்லை ஆனால் அவர் விட்டு சென்ற படைப்புகள் காலத்தால் அழியாதவை. அவர் வாழ்ந்த காலத்தில் பெரிய அளவில் கவனக்குவிப்புகள் […]