அவளா இவள்?-சிறுகதை-தேவகி கருணாகரன்

தேவகி கருணாகரன்அன்று சனிக்கிழமை, வாசல் கதவு மணி அடித்தது. கணவர் முரளியும் வீட்டில் இல்லை. மீனா ஆவலோடு ஓடிப்போய் கதவதைத் திறந்தாள். அவளுடைய சினேகிதி ரேணுவைக் கண்டதும் சந்தோசத்துடன், வா,வா எனக் கையைப்பிடித்து உள்ளே அழைத்துக் கொண்டு வந்தாள்.

”உன்னைக் கன நாளாக் காணயில்லை. ஒருக்கா எப்படி இருக்கிறாய் எண்டு பாத்திட்டுப் போவம் எண்டு கிளம்பி வந்தனான்.” என்றபடி கதிரையில் அமர்ந்தவள் மீனாவின் அழகான மாநிற முகம் வாடியிருப்பதைக் கவனித்துவிட்டு,

“மீனா ஏன் சோர்ந்து போயிருக்கிறாய். உன்னுடைய பிரச்சனைதான் என்ன?”

”எல்லாத்தையும் சொல்லுறேன். முதல்லே இரண்டு பேருக்கும் டீ போட்டுக் கொண்டு வாறன்” என்றவள் உள்ளே போய் இரண்டு கப்பில் கிறீன் டீ போட்டுக் கொண்டு வந்து ரேணுவுக்குக் கொடுத்துவிட்டு தானும் டீயை குடித்தபடி,

”ரேணு எனக்கு மட்டும் ஏன் இப்படிப்பட்ட வாழ்க்கை. இங்கு சிட்னிக்குப் புலம் பெயர்ந்தபின் கஸ்டப்பட்டு ஆங்கிலம் படித்து விட்டு பிறகு லாப் அசிஸ்டன்டுக்குப் படித்து வேலையானேன். அம்மாவும், புரோக்கர்மார் பின்னாலே அலைந்து திரிந்து எனக்கு இந்தக் கல்யாணத்தைச் செய்து வைத்தா. நானும் நல்ல வாழ்க்கை அமைந்து விட்டது என மகிழ்ந்தேன். மூன்று வருசம் முரளியும் நானும் சந்தோசமாகத் தான் வாழ்ந்தோம். கடந்த இரண்டு வருசமா அவர் குடித்துப்போட்டு வீட்டை வந்து கத்துறதும் என்னை அடிக்கிறதும் வழக்கமாயிட்டுது, நான் இரவில் அழுது அழுது நித்திரை இல்லாமல், கிடந்துவிட்டு காலையிலே உடல் அலுப்போடு வேலைக்கு வோறேன். இப்ப என்னடா என்றால் நான் மலடியாம், என்னோடு வாழமுடியாதாம். விவாகரத்து கேட்கிறார். நான் என்ன செய்வேன் ரேணு!!” என மேசைமேல் தலையைக் கவிழ்த்துக் கொண்டு விம்மி விம்மி அழுதாள்.

ரேணு அவள் தலையைத் தடவியபடி,” அழாதே, என்ன செய்வது !விதி எங்கள் வாழ்க்கையைப் புரட்டி போடுது.  மீனா! முரளி ஒரு சீனப் பெண்ணோடு திரிகிறான் எண்டு சொன்னியே. அதைப் பற்றி …………?”

”ஓம் ஓம், அந்த சீனப்பெட்டையோட சனி ஞாயிறு தங்கிவிட்டு வாறார். சீனத்தி பிரெக்னன்டாம். என்னை விவாகரத்து செய்திட்டு அவளை கட்டப் போறாராம்.”

”அப்படியோ ? வேறு ஒருத்தியிட்டே போறவனோடு என்ன வாழ்க்கை! விவாகரத்தை குடுத்திட்டு. நீ நிம்மதியா இருக்கலாம்.”

”ஐயோ நான் டிவோசியா போவேன். இங்கே இருக்கிற எங்கள் சனம்  எப்படியெல்லாம் முதுகுக்குப் பின்னாலே கதைப்பார்கள்.”

”நீ என்ன அந்தச் சனங்களுக்காகவா வாழுறாய். முரளி உன்னோடு தாம்பத்திய வாழ்க்கை வாழுறானா? இல்லையே. அவனில்லாவிட்டால் என்ன? உனக்கு உத்தியோகம் இருக்கு. அவனை நம்பி நீ வாழத் தேவையில்லை. நானும் தான் உள் நாட்டுப் போர் மூட்டம் அப்பாவை இழந்திட்டு அம்மா தம்பிமாரோடு சிட்னிக்கு வந்து சேர்ந்தேன். நான் வேலை செய்து தம்பிமாரைப் படிப்பித்து விட்டேன். அம்மாவும் போய்ச் சேர்ந்தபின், தனித்து நின்ற எனக்கு தம்பிமார் கல்யாணம் செய்து வைப்பினம் என நினைத்தேன். ஆனால் அவர்கள் என்னைப் பற்றிக் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. ஒரு தம்பி குஜராத்தி பெண்ணையும், மற்றவன் ஒரு அவுஸ்திரேலிய வெள்ளை பொம்பிளையும் கல்யாணம் கட்டி உல்லாசமாக இருக்கினம். நான் தனிய சீவிக்கிறேன். தம்பிமார் என்னட்ட வந்து போறதுகூட இல்லை. ஆனால் பணக்கஷ்டம் வந்தால் மட்டும் ஓடிவருவினம். அக்கா! எனப் பாசமாக அழைத்ததும் மனம் இளகி காசைக் குடுத்திடுவேன். அவர்களுடைய ரிசேர்வ் பாங்க் நான் தான்.” என்று தன் மனதிலிருந்த ஆதங்கத்தைக் கொட்டினாள் ரேணு

”ஓம் நீயும் பாவம்தான். ஏன் ரேணு நீ வேலைக்குப் போறாய் வாறாய். உனக்குப் பிடித்தவர் அமைந்தால் கல்யாணம் கட்டுறது தானே?”

”நான் விரும்பி என்ன பிரயோசனம். என்னை ஒருவர் விரும்ப வேணுமே. என்னைப்பார்? போலியோ வந்து ஊன்று கோல் பிடித்துக்  கொண்டு காலை இழுத்து இழுத்து நடக்கும் என்னை ஆர் விரும்பி கட்டப்போறாங்கள். தாய் தகப்பன் இருந்திருந்தால், சீதனமும் இருந்தா புரோக்கரைக் கொண்டு பேசிக்கீசி எனக்குக் கல்யாணம் செய்து வைச்சிருப்பினம்.”

”ம்…ம்…ம். முரளியைப் போல ஒருவன் தான் வந்து வாய்ப்பான். எனக்கு சீதனமாகக் குடுத்த ரொக்கக் காசை விவாகரத்தின் போது திருப்பித்தரச் சொல்லி முரளியிட்ட கேள் எண்டு அம்மா சொல்லுறா. இதை லாயர்ட்டச் சொல்ல அவர் அது என்ன டவுரி. அப்படி தான் கேள்விப்படவில்லையாம். ஏதாவது எழுத்திலே இருக்கா என்று கேட்கிறார்.”

”அப்படியோ ?”

”அம்மா சொல்லுறா ஊரிலே யாழ்ப்பாணத்து தேசவழமையின்படி கலியாணம் ரிஜஸ்டர் பண்ணும் போது சீதனம் இவ்வளவு எனப் பத்திரத்திலே எழுதப்படுமாம். கலியாணமானவர்கள் பிரிந்தால் சீதனமாகக் குடுத்ததை கணவர் மனைவிக்குத் திருப்பி குடுத்திடவேணுமாம். இங்கே அந்த தேசவழமை செல்லாது என்று அம்மாவுக்குச் சொல்ல, அவ தன் தலையிலே அடித்து போச்சு! போச்சு! உண்ட அப்பா சேர்த்துவைத்த காசு துலைஞ்சுப் போச்சு என ஒப்பாரி வைக்கிறா.”

”உண்ட அம்மாவை நினைத்தா வருத்தமாயிருக்கு. நாங்களும் என்ன பாவம் செய்தோமோ? ஆறுதல் சொல்ல ஒருவருமில்லாமல் தவிக்கிறோம். ஆ மீனா நான் பேஸ்புக்கிலே இருக்கிறேன். நீ இருக்கிறீயா?

”இல்லை ஏன் ?

”நான் இருக்கிறேன். மேரி எண்ட புனை பெயரையும் உருவரைப்படிவத்தில் (profile) ஒரு குழந்தையின் படத்தையும் போட்டிருக்கிறேன். என் அடையாளத்தை மறைத்திருப்பதால் கூச்சப்படாமல் என் வேதனைகளை அதில் கொட்டித் தீர்ப்பேன். அதில் ஒரு ஆறுதல் கிடைக்கிறது. சில பேர் தங்கள் கவலைகளை சொல்லி எனக்கு ஆறுதலும் சொல்வார்கள். ஆனால், அனஸ்டேசியா என்ற ஒரு பெண் சொல்லும் அறிவுரைகள் எனக்கு பிரயோசனமாகவும் ஆறுதலாகவும் வாழ்க்கையில் ஒரு பிடிப்பையும் ஏற்படுத்துகிறது. நீயும் பேஸ்புக்கில் பதிந்துக்கொள்ளேன்.” என்றாள்.

”அனஸ்டேசியா ! அழகான பெயர். எந்த நாட்டை சேர்ந்தவள்?

”கூகுளில் போய் பார்த்தேன் அன்ஸ்டேசியா ருசியா நாட்டுப் பெயர்.   உருவரைப்படிவத்தில் (profile) ஒரு அழகான குழந்தையின் போட்டோ மட்டும் போட்டிருக்கிறா, சரி நான் வாறேன். முரளி எப்ப வருவார்?”

”வந்த நேரம் கண்டு கொள்ள வேண்டியது தான்” என சலிப்போடு சொன்னவள், வாசல்வரை சென்று சினேகிதியை வழியனுப்பி வைத்தாள் மீனா.

மீனாவும் பேஸ்புக்கில் ரீட்டா என்ற பெயரில் ஒரு பூங்கொத்தின் படத்தோடு பதிந்து கொண்டாள். குறிப்பின்றி தேர்ந்து மூன்று பெண்களுக்கும் கூடவே அனஸ்டேசியாவுக்கும் ஃப்ரெண்ட் அழைப்பு விடுத்தாள். தன் உண்மையான அடையாளத்தைப் போடாததால் எந்தவித கட்டுப்பாடும் இல்லாமல் தனது நிலைமையையும், தான் அனுபவிக்கும் மனவேதனையையும் அதில் எழுதினாள். ரேணுவிடம் கூடச் சொல்லாமல் தேக்கி வைத்திருந்த கவலைகளை அதில் கொட்டித்தீர்த்தாள்.    அனஸ்டேசியாவும் உடனேயே அழைப்பை ஏற்றுக் கொண்டு மீனா பேஸ்புக்கில் எழுதியதை எல்லாம் வாசித்து விட்டு, ஒருநாள் மீனாவுக்கு பேஸ்புக் மெசெஞ்சரில்,

”ரிட்டா உமது கணவர் உம்மிடம் விவாகரத்து கேட்கிறார், வேறு ஒரு பெண்ணை விரும்புகிறார் என்னும் தாழ்வு மனப்பான்மையும் பாதுகாப்பற்ற மன நிலையோடு இருக்கிறீர்கள். இந்த வருத்தம் உமது மனதில் நிறைந்திருக்கிறது. அதில் இருந்து நீர் வெளியே வர வேண்டும். உமக்கும் எனக்கும் தலைக்கு மேல் ஒரு கூரை இருக்கிறது. எங்களுக்கு கை கால் இயங்கிக் கொண்டிருப்பதால் வேலைக்குப் போய் சம்பாதித்து எமக்கு வேண்டியதை பெற்றுகொள்ளக் கூடியதாகவிருக்கிறது. வயிறார சாப்பிடுகிறோம். வித விதமா உடை அணிகிறோம். இது ஏதுவுமே இல்லாமல் பட்டினி கிடக்கும் ஏழைகளையும் நோய், நொடியோடு கிடந்து அழுந்தும் மனிதரையும் நினைத்துப் பார்த்தால் உமது வாழ்க்கையின் அருமை புரியும். உமது வாழ்க்கையில் உள்ள பொசிடிவ் விசயங்களை ஆறுதலாக இருந்து யோசித்து பாரும்.” என எழுதியிருந்தார்.

மீனாவும் அனஸ்டேசியா சொன்னதைப் பல தடவை தன் மனதில் ஓடவிட்டாள்.

”அனஸ்டேசியா, தனது அடுத்த மெசெஜில், ”கை கால்கள் இழந்த மாற்றுத்திறனாளிகளை நீர் நேரில் பார்த்திருப்பீர் தானே. கண் பார்வை இழந்தவர்கள், ஊமைகள். இவ்வளவு குறைகளோடு அவர்களும் வாழ்கிறார்கள் தானே. இப்படிப்பட்டவரை உம்முடைய அன்றாட வாழ்க்கையில் பார்த்திருப்பீர் தானே. கடவுள் உமக்கு அப்படிப்பட்ட குறைகள் வைக்கவில்லையே. ஆகையால் உம்மிடம் இருக்கிறவற்றின் மதிப்பை உணர்ந்து மகிழ்வோடு இருக்கப்பாரும். என் வாழ்க்கை இப்படியா போயிட்டுதே என அழுது வாழ்வை வீணாக்காமல் இருக்கிறதை கொண்டு மனநிறைவோடு வாழப் பழகிக்கொள்ளும்,” என எழுதியிருந்தாள்.

ஒரு வாரத்திற்குப் பின் அனஸ்டேசியா பேஸ்புக் மெசெஜில், ”ரீட்டா உம்மை பிடிக்காத கணவர், வீட்டுக்கே வராத கணவரோடு வாழ்ந்து என்ன பிரயோசனம். உங்களுக்கிடையே எந்தவித உறவுமில்லையே, பாலியல் உறவுமிராது என நினைக்கிறேன். அவன் கேட்கிற விவாகரத்தை குடுத்திடு.  நீர் இந்த 21 ஆம் நூற்றாண்டு பெண். உம்மாலே தனியே சந்தோசமாக வாழமுடியும். சந்தோசம் என்பது மனதைப் பொறுத்தது. உமது தோற்றத்தை விரும்புகிறவனும் உமது மனதைப் புரிந்தவனையும் ஒருநாள் நீர் சந்திக்கலாம். உமது எதிர்கால வாழ்க்கையில் நம்பிக்கை வையும்.

உமக்கு ஒரு பிள்ளை வேணுமென்றால் ஒரு குழந்தையைத் தத்தெடுத்துக் கொள்ளூம். உமது தனிமைக்கு மருந்தாக இருக்கும். ஒரு பிள்ளைக்கு வாழ்வு கொடுத்த மகிழ்ச்சியும் மன நிறைவும் கிடைக்கும்.” என எழுதியிருந்தாள்.

அனஸ்டேசியாவின் வார்த்தைகள் மீனாவுக்கு புத்துணர்ச்சியூட்டியது மீனா இப்போது புது தெம்போடு வேலைக்குப் போய் வந்தாள். முரளியின் விருப்பப்படி விவாகரத்துக்குச் சம்மதித்து ஆறு மாதத்தில் விவாகரத்தும் கிடைத்தது. ஒரு குழந்தையை, தான் பிறந்த மண்ணான யாழ்ப்பாணத்திலிருந்து தத்தெடுப்பதற்கு வேண்டியதைச் செய்வதில் ஆசையோடு மும்முரமாக ஈடுபட்டாள்.

ரேணுவிற்கும் அனஸ்டேசியா பேஸ்புக் மூலம் பல மெசெஜ்கள் எழுதியிருந்தாள். அதில் கடைசியாக,”ரேணு உமது தனிமை உம்மை எவ்வளவு வாட்டுகிறது என எனக்கு விளங்குகிறது. நீர் உமது தாய் சகோதரர் என வாழ்ந்த போது, தனிமை உம்மை வாட்டவில்லை. இப்போது அவர்கள் உம்மோடு இல்லை என்றதும் நீர் தவிக்கிறீர். நீர் உமது ஓய்வு நேரங்களில் அநாதைப் பிள்ளைகள் பராமரிக்கிற ஒரு அமைப்பிற்குப் போய் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் உதவி செய்யலாமே. அல்லது அப்படியான அமைப்பில் முழு நேர வேலையைத் தேடிக்கொள்ளும். உமக்குச் சம்பளமும் கிடைக்கும், அந்தப் பிள்ளைகளோடு சந்தோசமாகப் பொழுதும் போகும். அநாதை பிள்ளைகளுக்கு அன்பு காட்டுவதும், அவர்கள் முகத்தில் பிரகாசிக்கும் மகிழ்ச்சியும் அவர்கள் எங்கள் மேல் காட்டும் அன்புமே ஒரு தனி சுகம்,” என நம்பிக்கை ஊட்டும் முகமாக எழுதியிருந்தாள்.

ரேணுவும் அநாதை பிள்ளைகள் பராமரிக்கும் ஒரு அமைப்பில் மேட்ரன் வேலை தேடிக் கொண்டாள். இரவும் பகலும் குழந்தைகளோடு சந்தோசமாகப் பொழுதுகள் கழிந்தன.  தனிமை என்ற சொல்லையே ரேணு மறந்து போனாள்.

மீனாவும் ரேணுவும் அடிக்கடி சந்தித்துக் கொண்டனர். பேஸ்புக்  சினேகிதி அன்ஸ்டேசியாவோடும் பேஸ்புக் மெசேஜிங்கில் அவர்கள் தொடர்பு தொடர்ந்தது. இருவரும் தங்கள் வாழ்க்கையிலும் உள்ளத்திலும்   புத்துணர்வு கொடுத்த சினேகிதியை சந்திக்க விரும்பினர்.

“நீங்கள் இந்த உலகில் எங்கே வசிக்கிறீர்கள் ? எங்களால் முடியுமானால் அங்கு வந்து உங்களைச் சந்திக்க விருப்பப் படுகிறோம்,” என மெசேஜ் பண்ணினார்கள். அடுத்த நாளே, தான் அவுஸ்திரேலியாவில் நியுவ் சவுத்வேல்ஸ் மாநிலத்திலுள்ள கட்டும்பா என்னும் இடத்தில் வாழ்வதாகவும், தனது விலாசத்தையும் அலைபேசி இலக்கத்தையும் கொடுத்து பதில் எழுதியிருந்தாள் அனஸ்டேசியா. இருவரும், கட்டும்பா தாங்கள் வசிக்கும் சிட்னியில்லிருந்து நூறு கிலோ மீட்டர் தொலைவில் இருப்பதை இட்டு சந்தோசப்பட்டனர். அலைபேசியில் அனஸ்டேசியாவோடு தொடர்பு கொண்டு அடுத்து வருகிற சனிக்கிழமை மதியம் இரண்டு மணிக்கு அவளைச் சந்திக்க ஒழுங்கு செய்தனர்.

சனிக்கிழமை காலை பத்து மணிக்கு மீனா தன் காரில் ரேணுவையும் ஏற்றிக் கொண்டு கட்டும்பா நோக்கிச் செலுத்தினாள். காரின் பின் ஆசனத்தில் சிவப்பு ரோசாப்பூ கொத்தும் மீனா செய்த சொக்கலட் கேக்கும் இருந்தது.

சரியா இரண்டு மணிக்கு அனஸ்டேசியா வீட்டு வாசற்கதவு மணியை அடித்தனர்.  ஒரு வயது போன வெள்ளைக்காரப் பெண்மணி இனியமுகத்தோடு அவர்களை வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றார். அனஸ்டேசியாவின் தாயாராக இருக்க வேண்டும் என அனுமானித்தார்கள். பேஸ்புக்கில் மெசென்ஞராலே அவர்கள் வாழ்க்கைக்கு புது அர்த்தத்தையும் மன நிம்மதியையும் கொடுத்த அந்த அற்புதமான அருமையான பெண்மணியைப் பார்க்கப் போகிறோம் என்னும் ஆவலோடு உள்ளே சென்றனர். அந்த விசாலமான அறையின் ஒரு பக்கத்தில் இருந்த மேசை மேல் ஒரு கணணி. அதற்கு முன்னால், தெளிந்த மினுமினுக்கும் சிவந்த நிற தோலுடன், பிறை நெற்றியும் கருநீல கண்களும், கூர் நாசியும், தாராள சிவந்த இதழ்களும், அலையலையாக தோள்வரை தவழ்ந்த மென்சிவப்பு நிற முடியுடனும் ஒரு அழகிய தேவதை அமர்ந்திருந்தாள். அவள் வாயில் பிடித்திருந்த குச்சியினால் கணணியில் டைப் அடித்துக் கொண்டிருந்தாள். அவர்களைக் கண்டதும் குச்சியை ஒரு பக்கமா போட்டுவிட்டு, புன்னகைத்தபடி,

”வாருங்கள் வாருங்கள். வந்து இருங்கள். நீங்கள் என்னைப் பார்க்க வந்ததில் மிக்க மகிழ்ச்சி,” என ஆங்கிலத்தில் கூறினாள். சோபாவில் அமர்ந்த மீனாவும் ரேணுவும் அவள் எழுந்து வருவாள் என எதிர்பார்த்தனர், ஆனால் அவள் எழவேயில்லை. அவள் தன் வாயினால் இயக்கப்பிடியை (joystick) இயக்க அவள் அமர்ந்திருந்த சக்கரவண்டி அவர்களை நோக்கி நகர்ந்தது. அருகே வந்தவள், ”மேரி! ரீட்டா! ஆம் ஐ ரைட். நான் அனஸ்டேசியா. தாமதித்தற்கு சொறி,” என நேர்த்தியான வெள்ளை முத்து வரிசை பற்கள் தெரிய பரந்த புன்சிரிப்போடு கூறினாள்.

இவ பிரபலமான ’மை லைஃப்’ என்ற ஆங்கில டெலிடிராமவிலே ஆட்டமும் பாட்டுமாக நடித்த கவர்ச்சி நடிகை கரோலின் அல்லவா?” என மெதுவாக ரேணு மீனாவுக்கு சொன்னால்

”ஓம், ஒரு கார் விபத்……தில்… ! இந்த ஐந்து வருசமா அந்த டிராமாவில் அவ நடிப்பதில்லையே? பதிலளித்தாள் மீனா.

பிரமிப்பில், பேச்சிழந்திருந்த மீனாவையும் ரேணுவையும் பார்த்து ”இந்த ரோசாப்பூக்கள் எனக்கா?” என அனஸ்டேசியா கேட்க, மீனா எழுந்து பூக்களை அவள் மடியில் வைத்தாள். ரேணுவோ இன்னும் திகைப்பில் இருந்து விடுபடாமல் அமர்ந்திருந்தாள்.

தேவகி கருணாகரன்-அவுஸ்திரேலியா      

தேவகி கருணாகரன்

 

(Visited 242 times, 1 visits today)
 

5 thoughts on “அவளா இவள்?-சிறுகதை-தேவகி கருணாகரன்”

Comments are closed.