‘அடைவு காலத்திற்கு விடை கொடுத்தல்’-ஆசிரியர் குறிப்பு

வணக்கம் வாசகர்களே ,

ஆசிரியர் குறிப்புஇந்த ஆண்டு, மானிட வரலாற்றில் துயர் மிகுந்த வருடங்களில் தன்னைப் பதிவு செய்து எம்மிடமிருந்து விடைபெறப்போகின்றது. சினிமாக்களில் மட்டுமே பார்த்திருந்த நெஞ்சை உறையவைக்கும்  காட்சிகள் பலவற்றை இந்த வருடத்தில் நாம் கண்கூடாக பார்த்திருக்கின்றோம். கத்தியும், இரத்தமும், வீராவேசப் பேச்சுகளும் இன்றி இந்தப்பூமிப்பந்தில் ஒரு யுத்தம் நடந்தேறி இருக்கின்றது. மனிதர்களை மரணபயத்தில் ஆழ்த்தி உளவியல் ரீதியாக அவர்களைச் சிதைத்தது ஒரு உயிரியல் யுத்தத்தை நடத்தி முடித்திருக்கின்றன அதிகாரங்கள். வருங்காலத்தில் ஒரு யுத்தம் எப்படி நடக்கும் என்பதற்கான உரைகல்லாக இந்த ஆண்டினை நாம் மதிப்பீடு செய்யலாம். உலக ஒழுங்கின் மாற்றத்திற்கான பேச்சுவார்த்தைகளில் முடிவு எட்டும் வரையில் இந்த நிலை மாறப்போவதில்லை என்றே எண்ணத்தோன்றுகின்றது. ஆனாலும் பற்பல இன்னல்களும் துயரங்களும் மானிட வரலாற்றில் அமைந்தபொழுதும், மனுக்குலம் அதற்கேற்பத் தங்களைத் தகவமைத்துக் கொண்டே வளர்த்தெடுத்து வந்துள்ளது. அது தமக்கு ஏற்பட்ட இன்னல்களை எண்ணி இடிந்து போயிருக்கவில்லை. மேலும் வாழ்வு மீதான பிடித்தங்களை வலுவாக்கிப் பல அரிய சாதனைகளை நிகழ்த்தி இருக்கிறது. அந்த மனோபலமும் ஓர்மமுமே இன்று எமக்கு வேண்டியுள்ளது.

ஒருமனிதன் எதை செய்யலாம் எதை செய்யக்கூடாது என்பதைக் காலம் எமக்கு இந்த வருடத்தில் இடித்து சொல்லியுள்ளது. இந்த அடைவுகாலமும் கிருமித்தொற்றுகளும் நிரந்தரமானவை அல்ல. இழப்புகளில் இருந்து நாம் அனைவருமே மீண்டு புதிய கட்டுமானங்களின் ஊடாக நாம் எம்மைத் தகவமைத்துக் கொள்ள வேண்டும். அதற்குரிய மனஓர்மத்தை நாம் அனைவரும் வளர்த்துக் கொள்ள வேண்டும். துயர்களிலும் இழப்புகளிலும் இருந்தே எமக்கு ஈடு இணையற்ற இலக்கியப்படைப்புகள் எமக்கு கிடைத்திருக்கின்றன. இந்த அடைவுக்காலத்தில் அப்படியான இலக்கிய படைப்புகள் தோன்றியனவா என்பதை நாங்கள் மீள்பரிசீலனை செய்யவேண்டியவர்களாக இருக்கின்றோம். அத்துடன் இந்த வருடத்தில் நூலகம் பவுண்டேஷன் முன்னெடுத்த வாசிகசாலை திட்டத்திற்கு நடு வாசகர்களின் பங்களிப்பினை நாடி நின்றோம் ஆனால் நாம் எதிர்பார்த்தபடி அது ஆரோக்கியமாக அமையவில்லை என்பதை வருத்தத்துடன் பதிவு செய்கின்றோம் . உங்கள் ஆதரவு இருந்தாலே நாங்கள் இந்த திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுக்க முடியும்.

இந்த வருடத்தில் ஈழத்து இலக்கிய ஆளுமைகள் பலரை நாம் தொடர்ச்சியாக இழந்து வந்திருக்கின்றோம். அந்தவகையில் இறுதியாக கிழக்கிலங்கையின் இலக்கியத்தாரகை எழுத்தாளர் ‘ஹிதாயா றிஸ்வியை’ நாங்கள் இழந்திருக்கிறோம். ஹிதாயா “தடாகம்“ என்ற அமைப்பொன்றை ஆரம்பித்து, அந்தப் பெயரிலேயே சஞ்சிகை ஒன்றையும் வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து தடாகம் பல இலக்கியச் செயற்பாடுகளிலும் ஈடுபட்டிருந்தது. ஹிதாயா தமிழார்வம் அதிகமுள்ள ஒரு இலக்கிய செயற்பாட்டாளராகவும் எழுத்தாளருமாகவே தனது இறுதிக்காலம் வரை இருந்தார். தான் இயங்கிக் கொண்டே இலக்கியத்தில் தன்னைச்சுற்றி உள்ளவர்களையும் வளர்த்து விட வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருந்தவர். தான் வாழ்ந்த காலத்தில் இலக்கியச் செயற்பாடுகளில் ஆர்வத்தோடு செயற்பட்டுக் கொண்டிருந்தவர் ஹிதாயா. எழுத்தை நேசிக்கின்ற அத்தனைபேருக்கும் ஹிதாயாவின் இழப்பு ஒரு பெரும் துயரே. அவருக்கு எமது அஞ்சலிகளும், அவரது இழப்பின் துயரால் வாடும் அவரது குடும்பத்தின் துயரில் தோளோடு தோள் சேர்க்கின்றோம். அண்மையில் அவர் எழுதிய ஒரு கவிதை எமது துயரை மேலும் ஆழமாக்குகிறது.

மழை பொழியும் போது
உடம்பு நடுங்குகிறது
குளிர்
போர்வையை வாங்கும் போது
கொறோனா பரவி விடுகின்றது
வைரஸ்தொற்று
மரணத்திற்கு பயப்படாத மனம்
எரிப்பதை நினைத்து பயப்படுகிறது
தீ
யாஅள்ளாஹ்
எங்கள் ஜனாஸாக்களை
நல்லடக்கம் செய்ய அருள் புரிவாயாக ஆமீன்.

0000000000000000000000000000

எத்துணை துயரும் இழப்பும் வந்தாலும் அதனை களைவதற்க்கு ஏற்ற மன ஓர்மத்தை வளர்த்தெடுக்க வாசகர்கள் அனைவரையும் வேண்டுகின்றோம். பிறக்கப்போகும் வருடத்தில் மேலும் பல தரமான ஆக்கங்களுடனும் விவாதக்களங்களுடனும் புதிய திட்டங்களுடனும் உங்களை சந்திக்கின்றோம். வாழ்க்கை வாழ்வதற்கே இடிந்து போய் உட்காருவதற்காக அல்ல.

கோமகன் பிரதம ஆசிரியர்

நடு குழுமம்

நடு லோகோ

(Visited 112 times, 1 visits today)
 

2 thoughts on “‘அடைவு காலத்திற்கு விடை கொடுத்தல்’-ஆசிரியர் குறிப்பு”

Comments are closed.