உயிரி-கவிதை-யஷோதாரா

 

யஷோதரா

இன்னுமொருமுறை பரிசோதனை செய்
குடுவையின்வளைந்து குழிந்த உட்பரப்பிலோ..
அல்லது
மேடையில் பரும்பொருளாக்கியோ..
உன் இஷ்டம்
அமிலங்கள் சேர்த்து
தாக்கமொன்றை நிகழ்த்து
உரிமை இருக்கிறது..
எனக்குள் எதையேனும் செலுத்து..
இன்னொன்றோடு கலந்து
புதுப் பரிமாணம் புனை..
உனக்கில்லாததா என்னிடத்தில்
மாய மோதிரத்தின்
கவர்ச்சியை போல
உனதாக்கிக் கொள்
என்னை
நம் நிறமூர்த்தப் பிரிகைகளை
சோடிசேர்க்க
சின்னதாய் ஒரு சதி செய்
விதியை அறவே மற
உலகத்தின் தோற்றங்களுக்கு
அப்பால் நமக்கான
புதியவர்கள் தேவை
அவர்கள் மிருங்களின்
குழந்தைகள் அல்ல
கடவுளின் படைப்புகள்
நம்மை விட சிறந்த
விசித்திர மிருகங்கள்…

எதிர்காலம் முதுகெலும்பில்லாதது
தன் இசங்களுக்காய் வளையக் கூடியது
நம் குழந்தைக்கு நிச்சயம்
நீயோ நானோ முள்ளந்தண்டாவோம்..
அவர்கள் விழுந்தாலும்
எழுந்தாலும் மடிந்தாலும்
மிருகங்களின் குட்டியாய் இன்றி
விசித்திரர்களாய் இருக்கட்டும்

உலகின் எல்லாப் பாகங்களையும்
அவர்களுக்கு விளங்க வை
பின் எரிவதை அணைப்பதா
தீ மூட்டுவதா என்பதை
அவர்களே முடிவு செய்வார்கள்
நாம் இறந்து விடுவோம்
மாமிசங்களை மட்டும்
அவர்களுக்குத் தடை செய்
பின் காடுகளிலேவுவார்கள்
நாடு ஒரு பனிப்பாலையாகும்
அவர்கள் இல்லாத வரட்சி
ஒரு செழுமையை உண்டுபன்னும்
அவர்கள் தாவர உண்ணிகளாய்
திரும்பும் போது
உயிரின் அவசியத்தை ஓது
காடுகளை வளப்பார்கள்
நாடுகள் காக்கப்படும்
விந்தணுக்களின் விகாரப் புணர்தலே
குழந்தைகளுக்குள் மிருகத்தை
கருவாக்கி உயிர்க்க விடுகிறது

அவர்கள் நம் குழந்தைகள்
உனக்கும் எனக்குமான
மாய விந்தைகள்
நம் விந்தைகள் ஒரு போதும்
பிழைத்து விடுவதில்லை

யஷோதரா- இலங்கை 

(Visited 37 times, 1 visits today)