தனிமையின் கதவுகள்-கவிதை-அமைரா

அமைரா

தனிமையின் கதவுகள் விசாலமானவை
தாழ் உடைக்க தேவையின்றி
உள்நுழைந்தது ஒரு குதிரை

அந்த பேரிரைச்சலுக்குள்
எனக்கான போதை இருந்தது
ஒரு மந்திரம் ஓதப்பட்டது
இந்த சப்தம் மோனக்கனவுகளை
நிச்சலனப்படுத்தி களவாடியது

நான் கண்களை மூடிக்கொண்டு
புன்னகைத்தேன் ஓசைகள்
கேட்கவில்லை

இன்று என் தோள்பட்டைகள்
வலிக்கின்றன
சடுதியில் நிறுத்தப்பட்ட
குளம்பொலி எதிரொலிக்கிறது
காதுமடல் சிவந்துபோக

நிஜங்களில் புலப்பட்ட
ஓசையின் நிழல் ஏன் பயங்கரமாக
இருக்கிறது?
செவிப்பறைகள் பிய்ந்துபோய்விடுமோ…..?

நீங்கள் வந்தால் இங்கே
ஒரு போதிமரம் ‘இருக்கிறதா ?’
என தேடக்கூடும்

இல்லை இந்த அறை ஒரு போர்களம்
தனிமையின் கதவுகள் உடைந்து
தொங்குகின்றன
தடயங்கள் ஏதுமில்லை…….,,

இன்னும் ஏதும் மரித்துப்போகவில்லை
ஒரு மரணத்தின் வருகையில்
விழுங்கப்படும் தனிமையின் கதவுகள் விசாலமானவை….!

அமைரா – இலங்கை

 

(Visited 82 times, 1 visits today)